28 April 2024

                  விடுமுறைக்காக ஊருக்கு வந்திருக்கும் எனக்கு அந்த சென்னைப் பயணம் திடீரெனத்தான் முடிவானது. சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் யுனிவர்சல் ப்ரோமோட்டர்ஸ்  கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில், துபாயில் என்னோடு பணி புரிந்துவரும் மணிமாறனும் அதன் பங்குதாரர்களில் ஒருவனாக தன்னை இணைத்துக்கொள்ள நெடுநாளாகவே முயற்சி செய்து வந்தான். 

                 தற்சமயம் அவன் இந்தியாவிற்கு பயணிக்க முடியாதச் சூழலென்பதால், அவர்கள் இவனைத் தொடர்பு கொண்டதின் பேரில் என்னை ஒருமுறை அங்குச் சென்று அதன் நிர்வாக இயக்குனரான ராஜேஷ் வர்மாவை நேரில் சந்தித்து வரக் கோரியிருந்தான். அவனுக்கு இந்த முயற்சிக்குரிய அனைத்து தரவுகளையும் நானே பராமரித்து வருவதால் தனிப்பட்ட முறையில் சிக்கல்களேதும் எனக்கில்லை. என்னைப் பற்றிய அறிமுகத்தையும் அவர்களிடம் பகிர்ந்திருக்கிறான். 

                  நானும் மணிமாறனும் கடந்த பதினைந்து வருடங்களாக கிட்டத்தட்ட இணைந்தேதான் நாங்கள் செல்லும் ஒவ்வொரு நிறுவனத்திலிலும் பெஞ்சைத் தேய்த்தும் வருகிறோம்; அதனால் அவனுடைய அந்த நட்பு ரீதியான இந்த அழுத்தத்தை மறுக்க முடியவில்லை. கூடவே எதிர்காலத்தில் நானும் கூட அவர்களில் ஒருவனாக இணைந்துக்கொள்ள மனதளவில் திட்டங்கள் கொண்டிருந்தேன்.

                 விடுமுறையென்று  ஊருக்கு வருவது பெரும்பாலும் ஓரிரு வாரங்களே இருக்கும் அதனால் இதுபோன்ற பயணங்களை பொதுவாகத் தவிர்த்துவிடுவேன். எந்த அளவிற்கு என்றால் இவனை விட நெருக்கமான இன்னொரு நண்பனும் இருக்கிறான் அவன் பெயர் ஜெகன். சென்னையில் ட்ரேடிங் பிசினஸ் செய்து வருகிறான். 

                 பள்ளிக்கால பழக்கம். பிறகு பல வருடங்களாக தொடர்பற்றுப் போய் சமீபத்தில்தான் எப்படியோ முகநூல் புண்ணியத்தில் தொடர்பை புதுப்பித்துக்கொண்டோம். ஊருக்கு வரும்போது கண்டிப்பாக நாம் சந்தித்துக் கொள்ள வேண்டுமென அவனும் கோரிக்கை விடுத்திருந்தான். எனக்கும் அவனை காண வேண்டும் மனசுவிட்டு தேக்கி வைத்திருக்கும் அத்தனை கதைகளையும் பேச வேண்டும் என்ற எண்ணம்தான்.

                 ஆனால் நான் வந்த செய்தியையோ இப்போது சென்னைக்கு புறப்படவிருக்கும் தகவலையோ அவனிடம் இதுவரை பகிர்ந்திருக்கவில்லை. ஏனென்றால் என்னுடைய குறுகிய விடுமுறையின் இரண்டு நாட்களை அவனைச் சந்திக்கும் பொருட்டில் இழப்பதற்கு நான் தயாராக இல்லை. ஆனால் இப்போது செல்லவிருக்கும் இந்த வேலை விரைவாக முடியும் பட்சத்தில் அவனையும் ஒரு எட்டில் சந்தித்துவிட்டு வரலாம் என ரகசிய வியூகங்கள் கொண்டிருந்தேன். அதனால் எதையும் தெரிவிக்காமலே சென்னைப் புறப்பட்டேன். 

                    நானும் ஜெகனும் பள்ளிக்கால நண்பர்கள். நண்பர்கள் என்றால் ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அப்போது மிகவும் நெருக்கமாக பழகி வந்தோம்.  தபால் துறையில் வேலை செய்து வந்த எனது தந்தையின் பணி மாற்றத்தையொட்டி அவனுடைய ஊருக்கு நாங்கள் புலம் பெயர நேர்ந்தது.

                  என்னை அங்கிருந்த அரசுப்பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். அது ஒரு அழகான எட்டாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு காலம்! எங்களின் முதல் பரீட்சயம் அங்கிருந்தே தொடங்கியது. ஆனால் ஒரே ஊர் என்றாலும் எங்கள் இருவரின் வீடுகள் வெவ்வேறு தெருக்களில்தான் இருந்தன.

                   சிலரைப் பார்த்தவுடனே நெருங்கிப் பழகி விடுவோமல்லவா அது போலத்தான் எங்களின் நட்பும் எந்த வித தயக்கங்களும் யோசனைகளும் மேலிடாது துளிர்விட்டு வளர்ந்ததுக் கொண்டிருந்தது. அவனைத் தவிர செல்வம், ராதா கிருஷ்ணன், சின்னய்யன் என்று இன்னும் சில வகுப்பு நண்பர்களோடும் நெருங்கிப் பழகி வந்தேன் என்றாலும் என்னையும் ஜெகனையும் மட்டும்தான் இணைப் பிரியாத கூட்டாளிகள் என்று வகுப்பில் அடையாளப்படுத்தி வந்தார்கள். அதற்கேற்றாற் போல எந்நேரமும் ஒன்றாகவேச் சுற்றுவோம்.

                   எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் இருவருக்கும் பொதுவாதொரு அம்சமும் அந்த நெருக்கத்தை அதிகரித்து வைத்தது. ஓவியம்! இரண்டு பேருமே நன்றாக வரைவோம். அதனால் பெரும்பாலும் அவன் எங்கள் வீட்டிற்கோ அல்லது நான் அவன் வீட்டிற்கோ சென்று வரைவதில் நேரங்களைக் கழிப்பது அப்போது வழக்கம். விடுமுறை நாட்களென்றால் மட்டும் பக்கத்திற்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்றுவிடுவோம். சிலைகளையும், சிற்பங்களையும், சுவர் மற்றும் விதான ஓவியங்களை எங்களின் கைவண்ணத்தில் மீளுருவாக்கம் செய்வோம்.

                 எனக்கு ஒரே ஒரு தங்கை. பெயர் தீபிகா. அவனுக்கு ஒரு தங்கையும் அக்காவும். அவனுடைய அக்கா ரேவதி எங்களை விட இரண்டு வயது மூத்தவள், தங்கை சுவாதி மூன்று வயது வயது இளையவள். ரேவதியக்கா கணக்கில் கெட்டி என்பதால் அவ்வப்போது எங்களுக்கு பாடம் எடுத்து, டெஸ்ட் வைத்து அதை திருத்தி மதிப்பெண்கள் இட்டு எங்களை அவளுடைய மாணவர்கள் போல பாவிப்பதில் அவளுக்கு அலாதி இன்பம்!

                   அப்படி வைக்கும் டெஸ்டுகளில் ஜெகன் எப்போதும் எழுபது, எண்பதென எடுத்து தனது அக்காவிடம் ‘குட்’ வாங்கிவிடுவான். நான் பெரும்பாலும் ‘புவர்’தான்! எனக்கு மார்க் நாற்பத்தைத் தாண்டாது. கடவுள் புண்ணியத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மட்டும் புவரை ஃபேராக காட்டியது. ஆமாம், எப்படியோ கணக்கில் ஐம்பதைத் தொட்டுவிட்டிருந்தேன். அதற்கு ரேவதியக்காவும் ஒரு காரணம்தான். 

                   ஜெகனுடைய அப்பா சென்னையில் தங்கி வேலைப் பார்த்து வந்தார். சொல்ல மறந்துவிட்டேனே நான் ஜெகன் வீட்டிற்குச் செல்வது வரைவது மற்றும் ரேவதி அக்காவிடம் டியூஷன் படிக்க மட்டுமில்லை. ஜெகன் அப்பா சென்னையிலிருந்து கொண்டு குவிக்கும் புதிய புதிய சினிமா கேஸட்டுகளை சுழலவிட்டு இஷ்டத்திற்கு பாட்டுக் கேட்கவும்தான்.

                   அப்போது ஜெகனுடைய அப்பா சினிமா கம்பெனியொன்றில் தயாரிப்பு பிரிவின் கணக்காளராக இருந்து வந்தார். அதனால் வீட்டில் ஆங்காங்கே சினிமா சார்ந்த விஷயங்கள் கண்களில் தென்படும். குறிப்பாக காலண்டர்கள், வரவிருக்கும் படங்களின் போஸ்டர்கள், கம்பெனி ஆடியோ கேசட்டுகள், இத்யாதி இத்யாதி.. என வீடெங்கும் ஏதாவது ஒன்று நிறைந்திருக்கும். 

                    அப்புறம் அவர்கள் வீட்டில் யமஹா ஆர் எக்ஸ் 100 வண்டியும் இருந்தது. ஊருக்கு வந்தால் ஜெகன் அப்பா அம்மாவும் சாட்சாத் சினிமா ஹீரோ ஹீரோயின் போல அதில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். ஜெகனுக்கும் தனது அப்பா என்றால் அவ்வளவு உயிர்! ஒவ்வொரு மகனுக்கும் தனது தந்தைதான் கதாநாயகன் என்பார்களே அதுபோல தனது அப்பாவைப் பற்றி எப்போதும் பெருமையாகப் பேசிக்கொண்டிருப்பான். 

                  ஜெகனையும் பெண் பிள்ளைகளையும் அதில் வைத்துச் சுற்றித் திரிவார் என்றாலும் அவனை தனியா ஓட்ட மட்டும் அனுமதிக்க மாட்டார். இதில் இன்னொரு விஷயமும் உண்டு. என்னுடைய அப்பாவிற்கு பைக் ஓட்ட தெரியாது. அதனால் இயல்பாகவே ஜெகன் அப்பா மீது அந்த விஷயத்தில் தனிப்பட்ட ஈர்ப்பும் இருந்து வந்தது. என்னையும் கூட ஏற்றிக்கொண்டு வரும் நேரங்களில் ஒரு முறையாவது சுற்றிவிடுவார்.

                 ஜெகன் அப்பா பார்க்கவும் ஜம்மென்று சினிமா நடிகர் கார்த்திக் போல மிகவும் அழகாக இருப்பார். அவனது அம்மா சற்று உயரம் கம்மி என்றாலும் நடிகை கீதாவை ஞாபகப்படுத்துவார். அதனால் அவர்கள் ஜோடி போட்டு வெளியில் செல்லும் வேளைகளில் முன்பு சொன்னது போல சினிமா நடிகர்களை போலத்தான் பளிச்செனத் தெரிவார்கள். 

              நான் அவரிடம் சற்று கலகலவென பேச தயங்குவேன் என்றாலும் எங்கள் நண்பன் சின்னா என்கிற சின்னய்யன் அப்படியில்லை. வயது வித்தியாசமோ மரியாதை நிமித்தமான தயக்கங்களோ ஏதும் காட்டாமல் அவரோடு நேருக்கு நேர் அமர்ந்து அப்பா அப்பா என்று உருகுவான். அவரும் அவனுடைய தைரியத்தையும் பிரியத்தையும்  பாராட்டிப் பேசுவார். 

              அதற்கு முக்கியான காரணமுண்டு. சின்னாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும். அதற்காக ஜெகன் அப்பா வரும் நேரங்களிலெல்லாம் சினிமாவைப் பற்றிய விபரங்கள் எதையாவது கேட்டறிந்துக்  கொண்டேயிருப்பான். அவருக்கும் சினிமாவைப் பற்றி பேச ஒரு ஆள் கிடைத்துவிட்டால் போதும் தன்னிலை மறந்து நட்பு பாராட்டிவிடுவார்.

                   சின்னா மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தவன். தோற்றத்திலும் சுமாரே என்றாலும் அவனுடைய கனவுகளும், நுழைந்துவிட்டால் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோமென்கிற அதீத நம்பிக்கையும், சினிமா மீதான தீராத மோகமும், வேகமும் அவருக்கு சிறந்த கூட்டு போல் ஆகிவிட்டிருந்தது. 

                  வர்க்க பேதங்களையெல்லாம் மீறி அவர் சின்னாவிற்கு கொடுத்து வந்த முக்கியத்துவத்தைப் பார்த்து அந்த தருணத்தில் உண்மையான நாயகனுக்குரிய அந்தஸ்த்தையும் என்னளவில் பெற்றிருந்தார். 

                  அதேபோல் ஜெகன் என்னுடைய அப்பாவிற்கு ‘பெட்’. படிப்பது அவனுக்கு பிடிக்கும், என்னுடைய அப்பாவிற்கு படிப்பவர்களை மிகவும் பிடிக்கும். கோடை விடுமுறைகளில் கூட அடுத்துச் செல்லும் வகுப்பிற்கான புத்தகங்களோடு எங்கள் வீட்டிற்கு வந்துச் சேர்ந்து விடுவான்.  

                   என்னையும் ‘படிக்க வா, படிக்க வா!’ என்றுப் பாடாய் படுத்துவான். அப்பா அவனைப் பாராட்டுவார், எந்நேரமும் ஓவியத்தில் மூழ்கியிருக்கும் என்னைக் கடிந்து கொள்வார். நான் வரைவதை ஊக்குவிப்பவர் என்றாலும் தேர்வுகள் நெருங்கும் நேரங்களில் கூட சார்ட்டும் வாட்டர் கலருமாக திரிந்தால் எந்த அப்பாவிற்குத்தான் கோபம் வராது?  

                   ஆனால் ஜெகன் அப்பா அப்படியில்லை. அவரைப் பொறுத்தவரை படிப்பதெல்லாம் ஒரு பொருட்டில்லை. கலைகளை நேசிப்பவர்களை மிகவும் பிடிக்கும். அதனால் சின்னாவைச் சேர்த்து என்னையும் அவருக்கு பிடிக்கும்.

                   ஜெகனுடைய ஓவியங்கள் அவ்வளவு தத்ரூபமாகவெல்லாம் இருக்காது.  சுமாராகதான் வரைவான். அதனாலேயே நான் அவர் பக்கம் செல்ல கூச்சப்பட்டாலும்  ‘எங்கே வரைஞ்சதை காட்டு.. காட்டு ’என வாங்கிப் பார்த்துவிட்டு, ‘வெரி குட்!’ ‘வெரி குட்!’ எனப் பாராட்டி தொடர்ந்து ஊக்கம் தருவார். அது அந்த அளவில் நின்றிருந்தால் கூட அவரும் மற்றவர்களைப் போலவே எனக்கு சாதாரணமானத் தெரிந்திருப்பார். 

                  ஆனால் ஒரு முறை டிராயிங் புக், 2பி, 3பி, 6பி என்று வெவ்வேறு ஷேடுகளில் எச்.பி. பென்சில்கள் மற்றும் கலர் பென்சில்கள், ஏன் வாட்டர் கலர் கூட மெட்றாஸிலிருந்து எனக்காக வாங்கி வந்து என் பிறந்த நாளுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறார். அதனாலும் ஜெகன் எங்கள் வீட்டிற்கு வரும் வேளைகளில் அம்மா அப்பாவின் உபசரிப்புகளும் அவனுக்கு பலமாக நடக்கும். நேரிடையாக சந்தித்துக் கொள்ளா விட்டாலும் எங்களால், இரு பெற்றோர்களும் மனதளவில் ஒரு நல்லுறவைப் பேணி வந்தனர்.

                   எனக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடியவும் அப்பாவிற்கு எங்கள் சொந்த ஊர் பக்கமே பணிமாற்றம் கிடைக்கவும் சரியாகயிருந்தது. அதனால் அங்கிருந்து எல்லோருமிடமிருந்து பிரியா விடைப் பெற்று ஒரு சோகமான நல்ல நாளில் அங்கிருந்து கிளம்பி வந்தோம். அந்த சமயம் ஜெகனுடைய அப்பா சென்னையிலேயே இருந்ததால், சந்திக்கவெல்லாம் முடியவில்லை. 

                     ஜெகனுக்கும் எனக்கும் அவ்வப்போது கடிதங்கள் மூலம் சில மாதங்கள் வரை விசாரிப்புகள் தொடர்ந்தன. பிறகு சில காலம் எல்லாம் அறவே நின்று போனது.

                     வீட்டுக்கென்று  தொலைப்பேசி இணைப்பு வந்தவுடன் அவனை மீண்டும் தொடர்பு கொள்ளலானேன். இளங்கலை வணிகவியலில் சேர்ந்திருப்பதாகச் சொன்னான். தனது அப்பாவின் இன்ஜினியர் கனவை தான் எடுத்த மதிப்பெண்கள் தகர்த்துவிட்டாலும், எந்தவித வருத்தங்களையும் வெளிக்காட்டாமல் தன்னுடைய விருப்பத்திற்கே கல்லூரி படிப்பை விட்டுவிட்டதாக அவரை நெகிழ்ந்துப் பாராட்டிப் பேசினான். ஆச்சர்யமில்லை என்றேன். ரேவதியக்கா இன்ஜினியரிங்தான் சேர்ந்திருந்தாள். சின்னா சினிமா கனவில் சென்னைக்கே சென்றுவிட்டான் என்று குறிப்பிட்டான்.

                   கல்லூரி காலங்களில் ஒரேயொரு முறை மட்டும் நேரில் சந்தித்துக் கொண்டோம். படிப்பு முடிந்து நான் பணி நிமித்தமாக சென்னைச் சென்றிருந்த போது அவனும் ஒரு பிரபலமான நிறுவனத்தில் சேர்ந்திருந்தான். அப்பாவுடனே தங்கி வேலைப் பார்த்து வந்தது ஆச்சர்யமாகவும் சந்தோசமாகவும் இருந்தது. நகரத்தில் இருவரும் வெவ்வேறு திசைகளில் தங்கிக் கொண்டிருந்தோம். ஓரிரு முறை சென்றதை தவிர அடிக்கடி ஒருவரையொருவர் நாங்கள் அவ்வளவாகக் கண்டுகொள்ள முடியவில்லை. 

                   அங்கு பணி புரிந்து வந்த கொஞ்ச நாளிலேயே மாமா வெளிநாட்டிற்கு என்னை எடுத்துவிட்டார். கடைசியாக ஜெகனைப் பார்த்தபோது செல்வமும் அவன் நிறுவனத்திலேயே சேர்ந்திருப்பது தெரிய வந்தது. சின்னாவிற்கு சினிமா வாய்ப்பு ஏதும் அமையாமல் ஊர் பக்கமேச் சென்றுவிட்டதாக அவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். ஜெகனுடைய அப்பாவிடம் நான் வெளிநாடு செல்லவிருக்கும் விஷயத்தை சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதுதான் நான் அவரை கடைசியாக கண்டதும் கூட.

                   அதற்கப்புறம் வாழ்க்கை ஓட்டத்தில் எனது வட்டங்களும் மாறிப்போனது. பணியிடங்களில் புதிய புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். ஜெகனையோ அந்த ஊரைச் சார்ந்த மற்றவர்களையோ தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கும் வாய்க்கவில்லை; என்னைத் தொடர்பு கொள்ள அவர்களாலும் முடியவில்லை. காலச் சுழற்சியியில் குடும்பம் பிள்ளைகளென ஆன பின்னர் கிட்டத்தட்ட பழைய நண்பர்களைப் பற்றி நினைப்பது கூட அரிதாகிப்போனது.

முகநூல் வந்த பின்னர் ஜெகனை, செல்வத்தை, சின்னாவை என்று பள்ளிக்காலங்களில் பழகி வந்த அனைவரையும் தோன்றும் நேரங்களிலெல்லாம் தேடி வந்தேன். ஆனால் கண்டுபிடிக்கதான் முடியவில்லை. அந்த சமயத்தில்தான் எங்களின் பள்ளித் தோழி நான்சி என்னை தனது முகநூல் கணக்கு வழியாக எப்படியோ என்னைக் கண்டுபிடித்து தொடர்பு கொண்டாள். 

                   அவளும் அதே ஊர் என்பதால் ஜெகன் மற்றும் மற்றவர்களைப் பற்றி விசாரித்தேன். தன்னிடம் சரியான விபரங்கள் ஏதும்  இல்லை எனவும் எனக்காக விசாரித்துச் சொல்கிறேன் என்றுச் சென்றவள் அடுத்த நாளே ஜெகனுடைய நம்பர் தந்தாள். இதில் ஆச்சர்யங்கள் ஏதுமில்லை. பள்ளி நாட்களில் நான் ஆத்மார்த்தமாக பார்த்துக் கொண்டிருந்தது ரேணுவை என்றாலும், எங்களிடையேயும் ஒரு வித ஈர்ப்பு சார்ந்த தோழமை ஒரு பக்கம் தனியாக ஓடிக்கொண்டிருந்தது. அதெல்லாம் இந்த கதைக்கு தேவையில்லாதது என நினைக்கிறேன்.

                   அவளின் அந்த துரிதமான உதவிக்கு பின்னான இன்னொரு காரணமும் உண்டு. நான் வெளிநாட்டிலிருப்பதை எப்படியோ அறிந்துவிட்டிருக்கிறாள். அவளது கணவன் அச்சமயம் வேலையில்லாத நிலையில் அல்லாடிக் கொண்டிருந்ததால் என் மூலமாக எதுவும் வாய்ப்பு அமைய வாய்ப்பிருக்கிறதா என்று இன்னொரு நாள் விசாரித்தபோதுதான் அவள் என்னைத் தொடர்பு கொண்ட முழு அர்த்தத்தையும் விளங்கிக் கொண்டேன் அல்லது நானே அதற்கத்தான் இருக்குமென நானே எடுத்துக் கொண்டேன்.

                   அப்புறம் ஜெகனோடு பேசினேன். செல்வமும் தொடர்பு எல்லைக்குள் வந்தான். நான்கே நான்கு பேரை வைத்து ஒரு வாட்சப் குரூப்பையும் ஆரம்பித்தோம். முதல் இரண்டு மூன்று நாட்கள் பேசிக்கொள்ள நிறைய கதைகள் இருந்தன. பின்னர் குட் மார்னிங் மட்டும் தொடர்ந்துக் கொண்டிருந்தது. 

                  நான் ஊருக்கு வரும் நேரத்தில் ஒரு கெட் டுகெதர் போட வேண்டும் என்பது எல்லோருடைய ஏக விருப்பமாக இருந்தது. ஆனால் ஊருக்கு வந்தவன் அந்த நினைப்பையும் வாக்குக்குறுதியையும் ஒரு வித குற்றவுணர்வோடு ஓரமாக வைத்துவிட்டு சொந்த ஊர்ப்பக்கமே திரிந்துக் கொண்டிருந்த போதுதான் மணிமாறன் சட்டென இந்த பயணத்தை என்னை நம்பி ஏற்பாடு செய்திருந்தான்.

                  இது ஜெகனை சந்திக்க கடவுளாகப் பார்த்து அமைத்துக் கொடுத்த வாய்ப்பென நினைத்தேன். சென்னையில் போகும் வேலை நல்லபடியாக முடியும் கையோடு அவனை நிச்சயம் சந்தித்து விட வேண்டுமென மனதளவில் உறுதிக் கொண்டிருந்தேன். 

                  செல்வமும் அங்கே இருக்கிறான் என்பது கூடுதல் மகிழ்ச்சி. நான்சி சொந்த ஊரில் இருக்கிறாள். ஆண் நண்பர்களை தேடிப் போவதிலேயே இத்தனை யோசனையும் தகுந்த சந்தர்ப்பத்திற்கான காத்திருப்பும் இருக்க அவளை எங்கே இந்த முறை சந்திப்பது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தவிர்த்துவிட்டேன்.

                  போகும்போது பஸ்ஸில்தான் சென்றேன். மணிமாறன் பணித்த வேலைகள் சார்ந்த எண்ணோட்டங்கள் மனக்கண்ணில் ஓடிக்கொண்டிருந்தன. எதிர்காலத்தில் நானும் எப்படி அதில் நுழைவது, நுழைந்தால் என்னுடைய வாழ்க்கை முறை எப்படியெல்லாம் மாற வாய்ப்பிருக்கிறது என ஒவ்வொன்றையும் அசைப்போட்டுக்கொண்டேச் சென்றேன்.

                   ஜெகன் மற்றும் செல்வத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு காணப்போகும் மகிழ்ச்சியும் மனதை பரவசப்படுத்திக் கொண்டிருந்தது என்றாலும் நான் வருவதை தெரிவிக்காதது எனக்கு ஒரு உறுத்தலாகவேத் தோன்றவில்லை. முடிந்தால் சந்திக்கலாம் அல்லது நேரம் மிச்சமானதையொட்டி சீக்கிரம் ஊருக்குத் திரும்பி விடலாம். 

                 பணம் மற்றும் தங்களின் சுகதுக்கங்களை மட்டுமே பிரதானமாக வைத்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த அதிவேக உலகத்தில் யார் சின்ன சின்ன சந்தோசங்களுக்காக அதிக நேரம் ஒதுக்கி, நினைத்து வருந்தப் போவது? 

                அதிக பட்சம் சில நிமிடங்கள் சந்திக்க முடியாததைப் பற்றி நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். பிறகு? தத்தம் உலகுக்குள் சுருங்கிக் கொண்டுவிடுவதுதானே சமகாலப் போக்கு!

                  பஸ்ஸை விட்டு இறங்கி அருகிலிருந்த விடுதியொன்றில் அறையெடுத்து, குளித்து ரெடியாகி  மணிமாறன் சொன்ன ‘யுவெர்சல் ப்ரோமோட்டர்ஸ்’க்கு செல்ல ஆயத்தமானேன். அந்த அலுவலக வளாகமே பிரமிக்க வைத்தது. வெளிநாட்டு பிழைப்பை விட்டுவிட்டு சென்னைக்கே வந்துவிடலாம் என்ற அளவிற்கு நகரின் தொழில் மற்றும் மக்களின் மேம்பட்டுக்கொண்டுச் செல்லும் வாழ்க்கைத்தரம் நம்பிக்கைத் தந்தது.

                  சென்ற வேலை நல்லபடியாக முடிந்த கையோடு, ஜெகனுக்கு போன் செய்தேன். எப்போது வந்தாய்? நன்றாக இருக்கிறாயா? வீட்டில் அனைவரும் நலமா? என்று என்னை எந்த விதத்திலும் சங்கடப்பட வைக்காத கேள்விகளால் அவன் எப்போதுமான நட்போடு விசாரித்தது பெரும் ஆறுதலைத் தந்தது. தனது அலுவலக முகவரியை வாட்ஸப் செய்தான். இருக்கும் இடத்தையும் கூகுள் புண்ணியத்தில் இணைத்து அனுப்பியதால் ‘ஊபர்’ நண்பருக்கு வசதியாகப் போனது.

                  ஒருவழியாக கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்டோம். இருவருமே வயதுக்கேற்றார் போல புறத்தோற்றத்தில் மாறிப்போயிருந்தோம். ஆனால் முகங்கள் அப்படியேதான் இருக்கின்றன என சாட்சியம் சொல்லி எங்களை நாங்களேத் தேற்றியும் கொண்டோம். ஏதோ பதினான்கு பதினைந்து வயதிற்கே திரும்பிவிட்டது போலொரு அந்த நேர பரவசம். தனது பல்சரில் என்னை ஏற்றிக்கொண்டான். எனக்கு அவனது அப்பாவின் யமஹா 100 ஆர் எக்ஸ் ஞாபகம் வந்தது.

                   எல்லோரையும் பற்றி விசாரித்தேன். தற்சமயம் வீட்டில் அம்மா மட்டும்தான் இருப்பார்; மனைவி வேலைக்குச் சென்றுவிட்டாள், குழந்தைகளும் பள்ளி முடிந்துதான் வருவார்கள் என்றான். 

“அப்பா..?” என்றேன். ‘அவரும் அங்கேதான் இருக்கிறார்’ என்றான் பட்டும் படாமல். 

                 வீட்டிற்கு செல்லலாம் என்றான். நெடு நாளைக்கு பிறகு சந்திக்கச் செல்கிறேன். கையில் பரிசுப்பொருட்கள் எதுவுமில்லாமல் போவது ஒரு மாதிரியாக இருந்தது. அதனால் நேரமில்லை பிறகொரு நாள் கண்டிப்பாக வருகிறேன் என தட்டிக்கழிக்க நினைத்தேன். ஆனாலும் வற்புறுத்தினான்.

               செல்வத்திற்கு அவனே போன் செய்தான். ஆனால் அவன் அலுவலக பணிகளுக்காக பெங்களூரு வரைச் சென்றிருந்தான். இருவரும் அருகிலிருந்த கடையொன்றில் தேநீர் அருந்தியபடி பள்ளி நாட்களை மீண்டும் ஒரு முறை அசைப்போட்டோம். 

                 அவன் காதலித்த வித்யாவும் நான் பார்த்துக்கொண்டிருந்த ரேணுவும் எங்களது உரையாடலை மேலும் கலகலப்பாக்கினார்கள். அவர்களை கவர் செய்வதற்காக நாங்கள் எடுத்து வந்த சிறுபிள்ளைத்தனமான பிராயத்தங்களை ஒவ்வொன்றாக சொல்லிச் சொல்லி ஒருவரையொருவர் கேலிப்பேசிக்கொண்டோம். நான்சியின் ஸ்டோரியும் நான் ஸ்டாப்பாகச் சென்றது.

                 ஆனால் அதையெல்லாம் மீறிய ஏதோ ஒன்று அவன் சிந்தனைகளை அவ்வப்போது கலைத்துக் கொண்டிருந்ததை நான் கவனித்தேன். அதைப்பற்றி நான் கேட்க வாயெடுக்கும் முன்னமே அந்த டீக்கடையை அடுத்திருந்த ஒரு பைனான்ஸ் கம்பெனி பக்கம் கூட்டிச் சென்றான். அந்த வரவேற்பறையே எனக்கு ஒரு வித இறுக்கத்தை ஏற்படுத்தியது. வெளியில் நன்றாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த ஜெகன். உள்ளே வந்ததும் கொஞ்சம் குரலைத் தாழ்த்திக் கொண்டவாறு பேசிக்கொண்டிருந்தான். “ஏதும் பிரச்சினையா?” என்றேன். 

“ச்சேச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்ல!” என்று தன்னை சகஜமாக்கி கொள்ள முயற்சித்தான்.

                 சரியாக இருபது நிமிடத்தில் வெள்ளையும் சொள்ளையுமாக திடகாத்திரமான அந்த ஆள் உள்ளே நுழைந்து நேராக ஒரு பெரிய அறையினுள் சென்றார். அவரைக் கண்டதும் பவ்யமாக எழுந்து கொண்டவன். ஒரு ஐந்து நிமிடம் என்னைக் காத்திருக்கும்படிச் சொல்லிவிட்டு அவர் சென்ற அறைக்குள் நுழைந்தான். 

                அந்த நேரத்தில் என் முறைக்கு செல்வத்தை தொடர்பு கொண்டுப் பேசினேன். நான் ஜெகனைத்தான் பிரதானமாக சந்திக்க வந்திருக்கிறேன் என்று அவனும் அறிவான் என்பதால் அவனும் சம்பிரதாயமாக அடுத்த முறை வந்தால் கண்டிப்பாக சந்திப்போம் தற்சமயம் தானும் வேலைபளுவில் இருப்பதாக வருத்தத்தை தெரிவித்தான்.

                 அந்த மரியாதை நிமித்தமாக அழைப்பு முடியவும் ஜெகன் அந்த அறையைவிட்டு வெளியில் வரவும் நேரம் சரியாக இருந்தது.

                 வீட்டிற்கு மறுபடியும் அழைத்தான். நான் செல்ல சுணக்கம் காட்டினேன். குறைந்த பட்சம் ஆபிஸிற்காவது வா என்று அழைத்துச் சென்றான். அவனுடைய அலுவகம் அச்சமயம் நன்றாக ஷட்டர் போட்டு மூடியிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. கோடிகளில் வணிகம் செய்து வருவதாக சொன்னவன் ஒரு சாதாரண ஊழியணைப் போல அந்த ஷட்டரை சிரத்தையோடு அவனே திறந்ததும் எனக்கு இன்னும் வியப்பளித்தது.

                ஒரே ஒரு அறை. அதைத் தவிர எண்பது சதவீத இடம் பெரிய குடோன் போல காட்சியளித்தது. அது குடோனேதான் என்று அவனும் சாட்சி கூறினான். சீக்கிரம் கெட்டுப்போகாத அத்தனை பல சரக்கு பொருட்களும் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பைகளில், பேக்குகளில், கண்ணாடி பாட்டில்களில் அடைப்பட்டு அட்டைப்பெட்டிகளின் உள்ளேயும் வெளியேயும் குவியல் குவியலாக சிதறிக் கிடந்தன.

                சில கோப்புகளும் ஓரிரு தெய்வ படங்களும் சின்னஞ்சிறிய சிலைகளும் அவனது மேசையின் ஒரு ஓரத்தை ஆக்கிரமித்திருந்தன. பள்ளிக்காலத்தில் அவனிடம் குடிக் கொண்டிருந்த விடலைத்தனங்களெல்லாம் மறைந்து பொறுப்பான மகனாக, கணவனாக, தந்தையாக மாறியிருப்பது மட்டுமல்லாமல் அதீத தன்னம்பிக்கையும் அவன் பேச்சில் நிறைந்திருந்தது.

                 சற்று முன்பு சென்றுவந்த நிறுவனத்தில் தான் தொழில் ரீதியாக ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்ய எண்பது லட்சங்கள் வரை கடன் எடுத்திருப்பதாக கொஞ்சம் சோர்வோடு சொல்ல ஆரம்பித்தான். நானும் கூட அங்கே நுழைந்தபோது அதுதான் அவன் ஆபிஸ் என்று நினைத்துக் கொண்டேன். அதைச் சொன்ன போது ஹா ஹாவெனச் சிரித்தான். ஒரு காலத்தில் அப்படியொரு ஆபிஸ்தான் தனக்கும் இருந்ததென்று விரக்தியாகச் சிரித்தான். 

                நன்றாக சென்றுக் கொண்டிருந்த பிசினஸ் கொரானா நெருக்கடியால் முடங்க ஆரம்பித்துவிட்டதென்றும் அதனால் இரண்டு மூன்று கோடிகள் வரை தனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதென்றும். அதை இதுவரை சரிசெய்ய முடியவில்லை எனவும் கூறி வருந்த ஆரம்பித்தான். 

                 அவனுடைய நிலை சங்கடமா தெரிந்தாலும், அவனை தேற்றும் விதமாக அவனது வளர்ச்சியை பற்றி பாராட்டிப் பேச ஆரம்பித்தேன். அப்பா அம்மாவெல்லாம் உன்னை நினைத்து, உன் வளர்ச்சியைப் பார்த்து  மிகவும் பெருமைப்பட்டிருப்பார்கள் என்று தோன்றியதை அதன் தொடர்ச்சியாக சேர்த்துக் கொண்டேன். அப்போதுதான் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினான்.

               தனது அப்பாவால் தான் மிகவும் கஷ்டப்பட்டுப் போய்விட்டதாக சொல்ல ஆரம்பித்தான். என்னாச்சு என்றேன். எங்கள் மூவரையும் நன்றாகப் படிக்க வைத்துவிட்டார்.. ஆனால் அதன் பிறகு தனது சொத்து, சேமிப்பு என்று அனைத்தையும் சினிமா எடுக்கப் போகிறேன் என அத்தனையையும் தொலைத்துவிட்டு எங்களை நிர்கதிக்கு ஆளாக்கிவிட்டார் என கொஞ்சம் கோபப்பட்டான். 

              கடைசியில் அவர் தனது நண்பர்களோடு சேர்ந்து தயாரிக்கவிருந்த அந்த படமும் இடையிலேயே நிறுத்தப்பட்டுவிட்டு எல்லாம் ஒண்ணுமில்லாமல் ஆகிவிட்டது என்ற போது எனக்கு அதிர்ச்சியில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பாவமாய் அவனைப் பார்த்தேன்.

                என்னாலும் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லைதான். ஆனாலும் அவனுடைய அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கொஞ்சம் சமரசமாகப் பேச வாயெடுத்தேன். ஆனால் அக்கா, தங்கை என இருவரின் கல்யாணச் செலவுகளும் அது சார்ந்த பிரச்சனைகளும் அவனை மேலும் சோதனைக்குள்ளாகியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் காரணம் தனது அப்பா எடுத்த முடிவுதான் அவரைக் குறைப்பட்டுக் கொண்டான். வார்த்தைகளின்றி ஓரிரு நிமிடங்கள் ஓடின.

               அப்புறம் எப்படி இந்த தொழிலை ஆரம்பித்தாய் என்றேன். தான் சேர்த்து வைத்திருந்த சிறு முதலீடும், மனைவியின் நகைகளை மட்டுமே கொண்டு சிறிதாக ஆரம்பித்து சில வருடங்களிலேயே பெரும் வளர்ச்சியை எட்டியதாக கூறினான். ஆனாலும் அப்பா மீதான வருத்தங்கள் குறைவதாக இல்லை. இந்நேரம் அந்த சொத்துக்கள் இருந்திருந்தால் நான் ஏன் பைனான்ஸ் கம்பனியையும் கந்து வட்டிக்காரர்களோடும் போராட வேண்டுமென தனது இயலாமையை வெளிப்படுத்தினான். 

                இதில் இன்னொரு துயரமான சம்பவம் அவனுடைய அப்பா சில வருடங்களாக பக்க வாதத்தில் படுத்துக் கிடக்கிறாராம். அது சார்ந்த மருத்துவ செலவுகளும், அலைச்சல்களும் மேலும் வருத்துகின்றனவாம்.  அதைச் சொன்னபோது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தனை வருடங்களுக்கு பின்னான எங்களின் சந்திப்பு இப்படியா நிகழ வேண்டுமென வருந்தினேன்.

                 வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றான். பிறகு ஓட்டலில் சாப்பிடுவதாக திட்டம். என்னுடைய பெயர் சொல்லாமல் ‘யாரென கண்டுபிடிங்க பார்ப்போம்!’ என்று தனது அம்மாவிடம் என்னை தன்னுடைய ஃப்ரெண்ட் என அறிமுகம் செய்து வைக்க, மகராசி சரியாக அடையாளம் கண்டுகொண்டுவிட்டார். உன்னை எப்படி மறக்க முடியும்? என்று என்னைக் கண்ட மகிழ்ச்சியில் அவர் நெகிழ்ந்த போது, இவரையா பார்க்காமல் தவிர்க்க எண்ணினோம் என்று என்று உள்ளுக்குள் என்னை நானே கடிந்துக் கொள்ளலானேன்.

“ரொம்ப நாள் செண்டு வந்திருக்க, கண்ணுக்கு சரியா சாப்பாடு கூட எதுவும் செஞ்சி வைக்கலையே..!” என்று அங்குமிங்கும் அவர் ஓட, ஜெகன்தான் அவரை சமாதானப்படுத்தி நாங்கள் ஓட்டலுக்குச் செல்லவிருக்கிறோம் என்றான். தண்ணீர் கொண்டு வந்துக் கொடுத்தார்.

“அப்பா நல்லாருக்காங்களா?” அம்மா, மகன் இருவரின் முகத்திலும் ஒரு வித சலிப்பு, விரக்தி. ஜெகன் அம்மா அப்பாவுடைய உடல்நிலையைப் பற்றி சொன்னதுமில்லாமல், இவரை வைத்துக்கொண்டு நல்லது கெட்டதுக்கு கூட எங்கும் செல்ல முடியவில்லை என்றார். ஊருக்குச் சென்றே இரண்டு வருடங்களாகிவிட்டனவாம். அவரால் தானும் கூட வீட்டினுள்ளேயே சிறைப்பட்டுக் கிடப்பதாகக் குறைப்பட்டுக் கொண்டார். 

                ஆனால் அதன் அர்த்தம் அவர் மீதான வெறுப்பெல்லாம் இல்லை. எல்லாவற்றையும் பார்த்து பழகி சலித்துப் போன ஒரு நிலைமை. ஆறுதலான விசயம் ஜெகனுடைய அம்மா மற்றபடி அவரைப் பற்றி குறையாக எதுவும் புலம்பவில்லை. ஜெகன்தான் அவரோடு பல வருடங்களாகப் பேசுவதில்லையாம்.

                ஜெகனுடைய அப்பாவை உள்ளே அறையில் படுக்க வைக்கப்பட்டிருந்ததை என்னால் அறிந்துகொள்ள முடிந்திருந்தாலும், உள்ளேச் சென்று அவரை காணும் விருப்பத்தைச் சொல்ல ஏனோ தயக்கமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அதை தவிர்ப்பது போல அவர்களும் நடந்துக் கொண்டனர். அப்படியே அவரை நான் சந்திப்பதையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டது போல் எனக்கும் தோன்றவில்லை. மேலும் சீக்கிரம் அங்கிருந்து கிளம்ப வேண்டுமென்கிற என்னுடைய அதீத அவசரம் வேறு அங்கிருந்து சீக்கிரம் கிளம்ப வைத்துவிட்டது.

                ரேவதியக்கா பக்கத்திலேயே இருப்பதாகச் சொன்னான். சுவாதி ஆபிஸ் போயிருப்பாள் என்றான். அதனால் ரேவதியக்காவிற்கு மட்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்தோம். அவரும் என்னை பார்த்தவுடன் விளங்கிக் கொண்டார். அரசுப் பள்ளியொன்றில் தலைமை ஆசிரியராகபணிபுரிந்து வருகிறாராம். 

                பதினெட்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே சுறுசுறுப்பு, உரிமையோடு என்னை ‘டா’ போட்டும் பேசும் பிரியம் எதுவும் குறைந்ததாகத் தெரியவில்லை. அவரிடமும் சம்பிரதாயமான “அடுத்த முறை நிச்சயம் உங்களோடு நிறைய நேரம் ஸ்பென்ட் பண்ணுகிறேன்” என்ற குறிப்போடு விடைபெற்றுக் கொண்டேன். 

                  ரேவதியக்காவும் அப்பாவைப் பற்றி பேச எதுவும் விருப்பப்படவில்லை! தவிர்த்துவிட்டார். அது தாழாமையாகவும் இருக்கலாம்.                  

                 அருகிலிருந்த ஒரு உயர்தர சைவ உணவகத்தில் சாப்பிட்டு முடித்து, நீயா நானா என்று பில் கொடுக்கும் போட்டியில் அவன் ஏரியா என்பதால் ஜெகனை ஜெயிக்க வைத்து அழகுப் பார்த்தேன். ஞாபகத்திற்கு சில செல்பிகள் எடுத்துக்கொண்டோம். அந்த பயணமும் சந்திப்பும் அத்தோடு நிறைவாக நிறைவடைந்தது. 

                 ஒரு வாரத்தில் துபாய் திரும்பிவிட்ட நிலையில் செல்வத்திடமிருந்து ஒரு மெசேஜ் வந்திருந்தது. ஜெகனுடைய அப்பா தவறிவிட்டார் என்று. அன்று கடைசியாகப் பார்த்திருந்திருக்கலாமோ, ஒரு அன்பான மனிதரை இப்படி தவறவிட்டுவிட்டோமே என்ற குற்றவுணர்வோடு வருந்தினேன். என்னுடைய மனமும் இவ்வளவு கடினமாகியிருக்க கூடாது சில நிமிடங்கள் அவர் சம்பந்த ஞாபகங்களில் ஆழ்ந்தேன்.

                  ஜெகனுக்கு போன் செய்தேன். எடுத்தவன் மிகவும் இயல்பாகப் பேச ஆரம்பித்தான். பூர்வீகம் வந்துவிட்டோம் இன்னும் ஒரு மணி நேரத்தில் எடுத்துவிடுவோம்; சடங்குகள் போய்க்கொண்டிருக்கின்றன, பிறகு பேசுகிறேன் என்று மிக சாதாரணமாக அந்த உரையாடலை முடித்து விட்டான். அதனால் குறைந்த பட்சம் நான் சொல்லவிருந்த ‘கவலைப்படாதே!’ என்ற சம்பிரதாய வார்த்தை கூட அங்கே தேவையில்லாமல் போனது. 

                 இப்படி அப்பா-மகன் உறவில் விரிசல் வரும் அளவிற்கு அப்படி என்னதான் பெரும் பாதகக் குற்றம் நிகழ்ந்துவிட்டது என எல்லோருக்காகவும்  பரிதாபப்பட்டேன். அதே நேரம் தன் கணவனுக்காக ஜெகன் அம்மா நிச்சயம் வருந்தியிருப்பார் என நம்பினேன். இத்தனை நாட்கள் அவரோடு அல்லும் பகலுமாக போராடி வந்ததற்கு, இனி வரும் காலங்கள் ஒரு ஆசுவாசத்தையும் நிம்மதியையும் ஏற்படுத்தலாம்; இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமோ என்ற ஏக்கத்தையும் கொடுத்திருக்கலாம்.

                சில நிமிடங்களிலேயே நானும் கூட அந்த துயரச் செய்தியிலிருந்து முழுவதும் மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டது போல் உணர்ந்தேன். இவ்வளவுதானா இந்த வாழ்க்கை எனத் தோன்றியது. இருந்தாலும் அங்கேச் சென்றிருந்தபோது கடைசியாக ஒரு முறை அவரைப் பார்த்திருக்கலாம்; அப்பா என்று அழைத்திருக்கலாம். நான் அமர்ந்திருந்த அந்த ஹாலுக்கும் அவர் படுத்திருந்த ரூமிற்கும் அத்தனை தூரமா என்ன?


 

எழுதியவர்

இத்ரீஸ் யாக்கூப்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப்.. நுண்ணுயிரியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்று; தற்சமயம் ஐக்கிய அரபு நாடுகள் என அழைக்கப்பெறும் அமீரகத்தில் பணி நிமித்தமாக வசித்து வருகிறார். ஓவியங்கள் வரைவதில் ஆர்வமுள்ள இவர் கவிதைகள், கதைகளும் எழுதி வருகிறார். இவரின் முதல் நாவலான 'ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்' கோதை பதிப்பகம் மூலம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் கீற்று, சொல்வனம் மற்றும் வாசகசாலை போன்ற இணைய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x