28 April 2024

ஜேம்ஸ் பாதிரியாரின் இருதயம் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது. அதுவரையிலும் வரிசைக் கிரமமாக ஜெபித்துக் கொண்டிருந்த புனிதச் சொற்கள், குரல்வளையில் சிக்கித் திணறலாய் வெளிப்பட்டன. ஸ்டீவனின் நல்லுடலை அடக்கம் செய்யும் இறுதி தருணத்தின் சொற்பமாய் மிஞ்சி இருக்கும் அடர்த்தியான கணங்கள் அவை. புனிதநீரைத் தெளித்து வழியனுப்பும் ஆகக் கடைசி சடங்கில், இப்பேர்ப்பட்ட அதிர்ச்சியை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

 சவப்பெட்டியை மண்ணுக்குள் இறக்கும் இறுதி வேளைக்காக, கைகளில் குடைகளோடு சொற்பமானவர்களே இடுகாட்டில் குழுமியிருந்தனர். சூல்கொண்டிருந்த மேகங்களிலிருந்து சிறுசிறு துளிகளாய் இறங்கும் மழைநீர் தாரைகளின் தாக்குதலுக்குக் கவசமாகக் கறுப்புக் குடைகள் உயர்ந்தெழுந்தாலும், சாரலாய் தெறிக்கும் நீரின் அத்துமீறல் ஆடைகளைப் பாதி நனைத்திருந்தது. பிணக்குழியிலிருந்து ஒருங்கப்பட்டக் களிமண், குன்று போல் ஒரு பக்கத்தில் குவிந்திருக்க, மறுபக்கச் சமதரையில் அழகிய மரவேலைகளால் இழையப்பட்ட சவப்பெட்டி தரையில் கிடத்தப்பட்டிருந்தது. அதன் கீழ் ஓரங்களில் பொட்டு பொட்டாய் மண்துகள்கள் மழையின் தயவால் ஓட்டியிருந்தன. சவப்பெட்டியின் தலைமாட்டில் கண்ணாடியால் வேயப்பட்ட சின்ன சாளரம், முகப்பார்வைக்காகப் பொருத்தப்பட்டிருந்தது. வெள்ளைப்பட்டால் நெய்யப்பட்ட மஞ்சத்தில்,  தலையை அமர்த்தும் பாகத்தில் வெண்பட்டு நெகிழ்ந்து குழிவாய் சரிந்திருந்தது. ரிப்பன் டை கட்டிய உட்சட்டையின் கழுத்துப்பகுதியும், அதன் மேல் மூடப்பட்ட கோட்டுச் சட்டையும் எந்தப் பிடிமானமின்றி வெறுமனே கிடத்தியிருந்தன. அவற்றை அலங்கரித்திருந்த ஸ்டீவனின் உடலை மட்டும் காணவில்லை!

 நசநசக்கும் மழையின் ஒப்பாரி இராகத்தினூடே, தனது பின்புறத்திலிருந்து பைபிள் வாசகங்களை மெல்ல ஒப்புவிக்கும் குரல்கள், சில்வண்டுகளின் ஒருமித்த ரீங்காரமாய் பாதிரியாரின் செவிகளைத் தொட்டுத் தடவிச் சென்றன. பிசிறில்லாத குரல்களின் சங்கமத்தில், ஒரு காத்திரமான கனத்த குரலும் சேர்ந்து கொண்டதாய் பிரக்ஞை பாதிரியாருக்கு ஏற்பட்டது. உள்ளுணர்வின் விசையால் அவரது சிரம் அனிச்சையாய் திரும்பிப் பார்க்க எத்தனித்து, வெகு சிரமப்பட்டு தன்னை அடக்கி கொண்டார். ஒருவாறாகத் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, சவப்பெட்டியின் மேற்கதவை மூடி, தமது அடக்கவியலாதப் பார்வையைப் பின்புறமாய் திருப்பியவருக்கு, இருதயம் சுருண்டு தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கொண்டது. இறைவன் நாமங்களை ஜெபித்து, இறந்த ஆத்மாக்களைப் பிரேத உலகிற்கு அனுப்பும் வாக்கியங்களைச் சிரத்தையுடன் வாசிக்கும் இளைய தேவாலயப் பணியாளர்களின் மத்தியில், ஸ்டீவனின் உதடுகளும் பங்கேற்றுக் கொண்டன. குரல் கட்டை உடையாத இளங்குரல்களின் மத்தியில், ஸ்டீவனின் முற்றிய சாரீரம் சுருதியோடு சேராமல் தனித்து ஒலிப்பது ஜேம்ஸ் பாதிரியாருக்குத் துல்லியமாய்க் கேட்டது.

 பாதிரியார் நகர்ந்ததுமே தேவாலய பணியாளர்கள், குமித்துவைக்கப்பட்டிருந்த மண்ணைக் குழியில் நிரப்பும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.  ஈரக்கசியலோடு செம்மண் சாந்தாய் ஒழுகும் மண், சவப்பெட்டியை மெல்ல மெல்லப் பார்வையிலிருந்து மறைத்தது.

 எப்போதுமே புனிதநீரைத் தெளித்து வழியனுப்பும் இறுதிச்சடங்கிற்குப் பிறகு நகர்ந்துவிடும் பாதிரியார், அன்று மட்டும் மண்ணோடு பிணைந்திருக்கும் மரமாய் அங்கேயே நின்றிருந்தார். அவரின் நகர்வுக்காகவும், ஒரு சொல்லின் ஒலிக்காகக் காத்திருந்த இளம் தேவாலயப் பணியாளர்களைக் கண்சாடையால் போகும்படி உத்தரவிட்டார். நிறைமாதச் சூலியாய் மேடிட்ட வயிற்றோடு சவக்குழி ததும்பியிருந்தது. ஆளரவமே அற்ற அந்த அமானுஷ்ய அமைதியில், ஜேம்ஸ் பாதிரியாரும் ஸ்டீவனும் மட்டுமே சவக்குழியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 பாதிரியார் ஸ்டீவனின் அருகாமையை அங்கீகரிக்கவில்லை. இறந்த ஜீவன்களோடு காரணமின்றித் தொடர்பு கொள்ளுவது கர்த்தாவின் துவேஷனைக்கு ஆளாக்கிவிடும் எனும் கிலேசத்தில், அவரது வலுக்கட்டாயமான கடிவாளமிட்டப் பார்வை தேவாலயத்தை நோக்கி நீண்டது.

 “ஃபாதர்… ஃபாதர்..ஃபாதர்” என அழைக்கும் ஸ்டீவனின் குரலை மட்டும் அவரால் தணிக்கை செய்யமுடியவில்லை.  அவரது பிரத்தியேகத் தேவாலயத் தனியறையில், அவர் விரும்பி அமர்ந்துகொள்ளும் சாய்வுநாற்காலியின் அருகில் ஸ்டீவனின் ஒளியுடல் தெள்ளத்தெளிவாய் உருக்கொள்ள ஆரம்பித்தது. ஜேம்ஸ் பாதிரியாருக்குப் பிரேத ஆத்மாக்களைப் பார்ப்பது அப்படி ஒன்றும் புதிதில்லை. இதுவரை எத்தனையோ ஆத்மாக்களைப் பார்த்திருந்தாலும், இவ்வளவு துல்லியமான வடிவமைப்போடும் ஒளியோடும் எதனையும் கண்டதில்லை.

 கறைபடிந்த வெள்ளை ஒளியாய் உருவங்களைச் சவ அடக்கத்தின்போது நிறையேவே பார்த்திருக்கிறார். சவக்குழியில் தனது உடலையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டும், தமக்கு மிகவும் பிடித்தவரோடு அருகில் நெருங்கி நின்று கொண்டும், சவப்பெட்டியை மண்ணில் இறக்கும்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் வெள்ளை உருவங்களைக் கண்டிருக்கிறார். ஆனால், இப்படி எந்த அட்டகாசங்களும் இல்லாமல், சமர்த்தாய் அமர்ந்து, தன்னோடு தொடர்பு கொள்ள விரும்பும் முதல் ஆவி, இந்த ஸ்டீவனாகத்தான் இருக்கமுடியும்.

 சாய்வு நாற்காலியின் வலதுபக்கக் கைப்பிடிக்கு மேலே ஒளிக்குவையான உருவம்,  உள்ளிருந்து சுரக்கும் ஒளியினால் மிளிர்ந்து கொண்டிருந்தது. காற்றில் அலையும் அலைபோல ஸ்டீவனின் கேசங்கள் மேலும் கீழுமாய் இடதும் வலதுமாய் அசைந்து கொண்டிருந்தன. அவ்வப்போது ஸ்படிக வெள்ளை ஒளியில், மின்னல் கீற்றெனப் பொன்னிற ஒளிச்சிதறல்களும் சேர்ந்து கொண்டன.

 தான் காண்பது இறந்த ஆத்மாவா அல்ல விளையாட்டு காட்டும் தேவமகனா எனும் சந்தேகம் ஜேம்ஸ் பாதிரியாருக்கு வராமல் இல்லை.

 “எனக்கு ஹெல்ப் பண்ணுங்க ஃபாதர்”. பாதிரியார், தனது வெள்ளை மேலங்கியின் பொத்தான்களை விடுவித்து, உடம்பிலிருந்து உருவும் வேளையில் ஸ்டீவனின் குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. உருவிய மேலங்கியைக் கைகளில் மடித்து வைத்துக்கொண்டே ஸ்டீவன் இருக்குமிடத்தை நோக்கினார்.

 “நீ இப்ப ஸ்டீவன் கிடையாது, இறந்த ஆத்மா. உனக்காக கர்த்தர் கிட்டப் பிரார்த்தனை செய்றேன். தயவு செஞ்சி இந்த இடத்த விட்டுப்போ. இன்னும் கொஞ்ச நேரத்துல உன்ன பிரேத ஒலகத்துக்குக் கொண்டு செல்ல தூதுவர்கள் வருவாங்க. மொரண்டு பிடிக்காம போ.” எல்லா இறந்த ஆத்மாக்களும் அடையும் ஒரு தற்காலிக பயவுணர்வுதான் ஸ்டீவனின் ஆவியையும் ஆட்கொண்டிருப்பதாக பாதிரியார் எண்ணினார்.

 ஸ்டீவனின் ஒளிரும் முகத்தை நோக்கி பேசும் திராணி அவருக்கு இன்னும் வந்திருக்கவில்லை. ஆனாலும், மனதில் பயம் விட்டுப் போயிருந்தது. எந்த ஒரு துர் ஆத்மாவும், தினமும் ஆண்டவனின் திருநாமங்கள் ஒலிக்கும் தேவாலயத்திற்குள் புகமுடியாது. இங்கு சூட்சுமமாய் துலங்கி கொண்டிருக்கும் அருள் அலைகளும், தேவனின் புனித சாநித்யமும், எத்தகைய தீய சக்திகளையும் தூர வீசிவிடும். ஸ்டீவனின் மிளிரும் ஒளியுடலும், எந்த பிரயத்தனமுமின்றி தேவாலயத்தில் பிரவேசிக்கக் கூடிய வல்லமையும், அவனைத் ஒரு தூய ஆத்மாவாகவே வெளிப்படுத்தியது.

 பாதிரியாருக்கு மீண்டும் ஒரு விஷயம் தலையைத் தட்டியது. பூதவுடலை நீத்தவர்கள்தானே பிரேத ஆத்மா? ஸ்டீவனின் பருவுடல் புதைக்கும் சமயத்தில் காணாமல் போயிருந்ததே? இந்தக் கேள்வி அவரது சிந்தையில் கொக்கியாய் தொக்கிக்கொண்டது.  

 “கர்த்தர் மேல ஆணையா சொல்லுறேன். உங்கூட பேசனும்னா, நான் கேட்கிற கேள்விக்கு உண்மையான பதிலை, தேவனின் மீது சத்தியமாய் சொல்லனும்?” பாதிரியார் பீடிகையோடு தொடர்ந்தார்.

 ஸ்டீவனின் ஒளியுடல் அனிச்சையாகத் தனது இரு கரங்களையும் நெஞ்சகத்தில் குவித்து உறுதியைத் தந்தது.

 “உன்னோட ஒடம்புக்கு என்னாச்சு? பூதவுடல் இல்லாம நீ பிரேத உலகம் போகமுடியாதே?”

 “எனக்கு தெரியல ஃபாதர். இங்க நடக்கறது எதுவும் புரியல. நான் செத்துட்டேன்னாகூட எனக்கு சந்தேகமா இருக்கு. நீங்க ஒவ்வொரு சண்டே மாஸ்ஸுல சொன்ன மாதிரி, இங்க என்னை அழைச்சிகிட்டு போக யாரும் வரல. காத்தா அலைஞ்சிகிட்டு இருக்கேன். மிதவையா பறக்கறது திரீலிங்கா இருந்தாலும், இதுக்கு அப்புறம் என்ன ஆகும்னு தெரியல ஃபாதர். நல்லவேளையா, உங்க கண்ணுக்கு மட்டுமாவது நான் தெரிஞ்சேன்.”

 ஸ்டீவன் சொல்லுவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் பாதிரியார். மூச்சு சீராக ஓடிக்கொண்டிருந்தாலும், நாக்கு மேல்லண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. கோடைக்காலக் கானல் நீரலையாய் காற்றில் மிதப்பவனிடம் என்ன பேசுவதென்று புரியாமல் சிறிது நேரம் திகைத்தார். வழக்கமான பைபிள் கூறும் வாசகங்களை நினைவுறுத்திக் கொண்டார். புனித நூலில் சொல்லிக்கொடுத்த விஷயங்களும், தன் முன்னே நிதர்சனமாய் நடந்து கொண்டிருக்கும் விந்தையான நிகழ்வும் பாதிரியாருக்கு மனக்குழப்பத்தை உண்டுபண்ணியது.

 “உன்னோட பிரேத உடல் என்னாச்சு?” மீண்டும் மீண்டும் மாயமான ஸ்டீவனின் பூதவுடலைப் பற்றியே அவரது நியூரோன்கள் மேய்ந்து கொண்டிருந்தன. சடங்கிற்காகவும் பொதுநல அமைதியைக் கருதியும், வெறும் உடைகளை மட்டுமே உறையாகத் தாங்கிய வெற்றுச் சவப்பெட்டியைப் புதைத்த சமாச்சாரம், பாதிரியாரின்  நெஞ்சுக்குள் குற்றவுணர்வை உருவாக்கியது. அவருக்கு மிக அருகில் ஸ்டீவனின் ஒளியுடல் நீரில் எதிரொளிக்கும் பிம்பமாய் ஆடிக்கொண்டிருந்தது. ஒளியுடலாயினும், அவனது தீர்க்கமான நாசியும் முகவாயும் வார்த்தெடுத்தது போல் அப்பட்டமாய் தெரிந்தன. கண்கள் மிக அமைதியாய் இருந்தன. அறுவை சிகிச்சையால் சேதமுற்ற தலைப்பகுதி எந்தப் பின்னங்களும் இன்றி சிகையோடு ஜொலித்துக்கொண்டிருந்தது.  வாழும் காலத்தில் பார்த்த ஸ்டீவனை விடவும்  ஒளியுடல் தாங்கிய ஸ்டீவன் இன்னும் இரசிக்கத் தக்கவனாக இருந்தான்.  

 மூளைப்புற்று நோய் அறுவை சிகிச்சை பயனில்லாமல், நிலைமறந்து கோமாவில் இறந்த ஸ்டீவனின் ஆவி, ஒளிகளால் மிளிரும் கண்களை நகர்த்தாமல் பாதிரியாரையே பார்த்தது. சவக்கிடங்கில் உறைந்த உடலோடும், முகத்தை மட்டுமே பார்வைக்கு நிறுத்தி, மூளை அகற்றப்பட்ட வெறும் மண்டையை வெள்ளைத்துணியால் இறுகக் கட்டி, வெளிறிய சவ முகத்தோடும் பார்த்த ஸ்டீவனா இவன் என மனம் துணுக்குற்றது.

 பாதிரியாருக்கு ஸ்டீவனை மிக நெருக்கமாகவே தெரியும். இப்போது ஸ்டீவனாக அறியப்படுவனுக்கு ஆதியில் இன்னொரு பெயரும் இருந்தது. அவனது மணநாளில், நேன்ஸியைக் கைப்பிடித்த தருணத்தில் சூட்டிய நாமகரணம்தான் ‘ஸ்டீவன்’. அவனுக்குப் பெற்றோர்கள் சூட்டிய பெயர், திருநாவுக்கரசு!

 “நான் கோமாவுல தானா இறக்கல ஃபாதர். மூனு மாசம் மூச்சு பேச்சுமில்லாம இருந்தாலும், எனக்குள்ள ஏதோ ஒன்னு பேசிக்கிட்டே இருந்திச்சி.” புருவத்தை நெறித்தார் பாதிரியார்.

“யெஸ் ஃபாதர். சர்ஜரிக்காக அனஸ்தீசியா கொடுத்தப்பவே, நான் என் உடலுக்கு வெளியே வந்துட்டேன். சர்ஜரி நடந்தப்ப, என்னால என்னையே பக்கத்துல இருந்து பார்க்க  முடிஞ்சது. என்னோட தலைய மெஷினால வெட்டி உள்ள இருந்த கட்டியை எடுத்தது, மண்டையோட்ட பசையால ஒட்டினது அத்தனையும் கண்கூடா பார்த்தேன் ஃபாதர். ஆனா, என்னால மறுபடியும் அந்த உடம்புகுள்ள போக முடியல. செத்து போயிட்டேனோன்னு பயந்துட்டேன். இருந்தாலும் உடம்போட உயிர்ப்பை என்னால உணரமுடிஞ்சது. இருதயம் ரொம்ப மெதுவா துடிக்கறது, பின்மண்டை வலியும், ட்யூப் சொருகின மூக்குதுவார எரிச்சலையும் என்னால உணரமுடிஞ்சது. காத்துல மெதக்குற எனக்கும், என்னோட உடம்புக்கும் ஒரு வெள்ளிக்கம்பி மாதிரி ஒரு கயிறு இருந்துச்சு.  அந்த கனெக்‌ஷன்தான் என்னை எங்கேயும் போகவிடாம இழுத்து பிடிச்சிகிட்டு இருந்துச்சு.”

 “அப்புறம் எப்படி கோமாவுல செத்து போனே?”

 “அப்பதான் எனக்கு ஒரு குரல் கேட்டுச்சு ஃபாதர். அந்த குரல் எங்கேர்ந்து வந்துசுன்னு தெரியல, ஆனா என்னால தெளிவா கேட்க முடிஞ்சது. அது ‘அறு அறு’ன்னு சொல்லிகிட்டே இருந்துச்சு”

 “தேவனோட குரலோ”

 “இல்லை ஃபாதர். எங்கப்பாவோட குரல்!” சாய்வு நாற்காலியின் ஓய்வாக உடலைக் கிடத்தியிருந்தவரின் முதுகெலும்பு  நிமிர்ந்தது.

 “யெஸ் ஃபாதர், எங்கப்பாவோட பேசி வருஷங்கள் பத்து ஆகியிருந்தாலும், அது நிச்சயமாய் அவரோட குரல்தான்.”

 “சிவகடாட்சம் ஐயாவோட குரலா? “ பாதிரியாருக்குத் தூக்கி வாரிப் போட்டது.

 “எத்தனை வருசங்களா அவருகூட உட்கார்ந்து தேவாரம் திருவாசகம்னு ஓதியிருப்பேன்? அதே கம்பீரமான குரல்தான் ஃபாதர்”

 “பாட்டு மாதிரி ஏதோ சொல்லி, என்னையும் என்னோட உடம்பையும் பிணைச்சி வைச்சிருந்த  வெள்ளிக்கயித்த அறுக்க சொன்னாரு”

 “பாட்டா?”

 “கேட்கிறதுக்கு ஏதோ மிஸ்டிக்கல் பாட்டு மாதிரி இருந்துச்சு ஃபாதர்.

‘அட்ட கோளத்தில அமைஞ்சிருக்கு அன்னமயகோசம்

ஏழு ரெண்டு வாசலிலே விழிச்சிருக்கு  வாயுதேசம்

வாள் கொண்டு வெட்டி விட்டா நின்றுடுமே சுவாசம்’

 இப்படி வாய்க்கு வெளங்காம ஏதோ ஒரு பாட்டு. அறுத்துட்டு போன்னு கட்டளையா, அவரோட குரல் மட்டும் எனக்கு கேட்டுச்சு. அந்த நேரத்துல, திக்கு தெரியாம அனாதையா மெதந்துகிட்டிருந்த எனக்கு, எங்கப்பாவோட குரல்தான் ஆறுதலா இருந்துச்சு ஃபாதர்.”

“ஏதோ சாத்தான்தான் உன்னோட மனச குழப்பி தேவனுக்கு எதிரா திசை திருப்பியிருக்கு.”

“அது சாத்தான் இல்லை ஃபாதர், எங்கப்பான்னு எனக்கு சர்வநிச்சயமா தெரியும்.”

 பாதிரியார் “கர்த்தரே” என்று ஆழமான பெரும்மூச்சைச் சொறிந்தார்.அவரது வலது கை அனிச்சையாக மார்பில் சிலுவை வரைந்தது.  

“மரணகாலத்துல சாத்தான் இப்படிதான் வேஷம் போட்டுக்கிட்டு விசுவாசிகளை ஏமாத்தறது உண்டு. அதுசரி, அப்புறம் எப்படிதான் அறுத்துகிட்டு வெளியே வந்தே?” பேய்க்கதைகளைக் கேட்கும் சிறுவனின் பேரார்வம் பாதிரியாரைத் தொற்றிக்கொண்டது.

 “அந்த வெள்ளிக்கம்பியை என்னால மொத்தமா அறுக்கமுடியல ஃபாதர். தொப்புள் கொடி மாதிரி, அந்த வெள்ளிகம்பி  சின்ன சின்ன இழைகளால பின்னப்பட்டிருந்துச்சு. என்னோட சக்தியையெல்லாம் கூட்டி இழுத்தாலும்கூட, அந்த இழைகளை என்னால அறுக்கவே முடியல.”

“அப்புறம்?” பாதிரியாரின் கருவிழிகள் படக்கென விரிந்தன. 

 “மறுபடியும் எனக்கு அப்பாவோட குரல் கேட்க ஆரம்பிச்சது. இந்தமுறை அவரோட குரல்தொனி ரொம்ப மாறி இருந்துச்சு. அந்த குரலுக்கான முகத்தை என்னால பார்க்கமுடிஞ்சது. ஏதோ மந்திரங்களை உச்சாடனம் பண்ணிகிட்டே, ‘அறு’ன்னு வார்த்தையை ஏவும் போது, பின்னிக்கிட்டிருந்த அத்தனை இழைகளும், தனித்தனியா சுருளேர்ந்து பிரிஞ்சி ஒத்தையா பத்து இழைகளா ஆடிக்கிட்டு இருந்துச்சு. நானும் அறுக்க ஆரம்பிச்சேன் ஃபாதர்”

 “ஒவ்வொரு இழையா அந்த வெள்ளிக் கயித்த அறுத்துகிட்டே வந்தேன். ஒவ்வொரு இழை அறுபடும்போதும், எனக்கும் என்னோட உடம்புக்கும் உள்ள இடைவெளி கூடிக்கிட்டே போச்சு. முதல்ல உள்ள ஆறு இழைகளை அறுக்கறவரைக்கும், என்னால எதுவும் உணர முடியல. ஆனா, ஏழாவது இழையை வெட்டி விட்டப்ப, என்னோட ஒடம்புல ஓடுற சுவாசம் அடங்கிடுச்சு. எட்டாவது இழை அறுபடும்போது ஈசிஜி மோனிட்டருல இருதயம் நின்னு போனது தெரியுது. கஷ்டப்பட்டு ஒம்போதாவது இழையை வெட்டும்போது, மிச்சமிருந்த மூளையோட இயக்கம் நின்னு போச்சு. டாக்டர்ஸ் என்னைச் சோதிச்சுட்டு, கம்பிளீட் டெட்டுனு கன்போர்ம் பண்ணிட்டாங்க”

 “அப்போ அந்த கடைசி பத்தாம் இழை என்னாச்சு?”

 “அத என்னால தொடக்கூட முடியல ஃபாதர். ஒன்பதாவது இழையை அறுத்தவுடனே, அந்த பத்தாவது இழை, மாயமாய் மறைஞ்சுடுச்சு. விடுதலையை உணர்ந்தாலும், என்னால உடம்பவிட்டு வெகுதூரம் பயணிக்க முடியல.”

 “அதெல்லாம் இருக்கட்டும். எப்படி உன்னோட ஒடம்பு மாயமா மறைஞ்சு போனது? சாத்தான் உன்னோட தேகத்தைத்  தின்னுடுச்சா?”

 “நோ ஃபாதர். என்னால ஓரளவுக்குதான் மேல போக முடிஞ்சது. இராட்சஷ பந்துக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரி, கொஞ்சதூரம்தான் மேலே பறக்க முடிஞ்சது. ஒரு கட்டத்துல,  சுவத்துல எறிஞ்ச பந்து மாதிரி திரும்பவும் உடம்புகிட்ட வந்துடுறேன். எங்கப்பாவோட குரலுதான் எனக்கு கேட்டுக்கிட்டே இருந்துச்சு. ஆனா வார்த்தைதான் மாறி இருந்துச்சு. ‘பொறு பொறு’ ன்னு எனக்குக் கேட்க ஆரம்பிச்சது”

 “மேகம் மாதிரி என்னோட செத்த தேகத்துக்கு மேல மெதந்துகிட்டு இருந்தேன்.  கடைசியா புதைக்கும்போதுதான், அந்த பத்தாவது இழையைப் பார்த்தேன். இந்த தேகத்துகிட்ட இருந்து எப்படியாவது விடுதலையாகனும்னு வெறி எனக்குள்ள ஆக்ரோஷமா ஆர்பரிச்சது. என்னால முழுசா அத துண்டிக்கமுடியல. பற்களால அத கடிச்சேன். அப்பாவோட குரல், வேணாம்னு அத கடுமையா தடுத்துச்சு. இருந்தாலும், விடாம அந்த இறுதி இழையைக் கடிச்சி அறுத்த மறுவினாடி, பொல பொலன்னு உதிர்ற மாதிரி என்னோட ஒடம்போட ஒவ்வொரு பாகமும் துகள்களா பிரிஞ்சி காத்தோட கலந்துடுச்சு.”

பாதிரியார் வாயடைத்துப் போனார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இராட்சத உறிஞ்சு குழலால் ஈர்க்கப்படுவது போல், ஸ்டீவனின் ஒளியுடம்பு எந்த முன்னெச்சரிக்கையுமின்றி உறிஞ்சப்பட்டு மறைந்தது.

 “கர்த்தரே, சாத்தானின் மாயைக்கு ஆளான இந்த பிரேதாத்மாவிற்கு இளைப்பாறல் கொடுங்கள்”  என்று ஜெபித்தபடியே அமைதியானார் பாதிரியார்.

திரும்பவும் அதே வீடு. பத்து வருடங்களில் வீட்டின் முகப்பும் சுற்றுப்புறமும் மாறியிருந்தாலும், வீட்டுத் தலைப்பில் ஓங்கி எழுந்திருந்த வேப்பமரம், கன்றாயிருந்து பெரிய விருட்சமாய் கிளைகளைப் பரப்பி நிறைத்திருந்தது.

காற்றின் விசையால் உந்தப்படும் புழுதியைப் போல், ஏதோ ஓர் ஈர்ப்புச்சக்தி, வீட்டின் முற்றத்திற்கு எந்தத் தடையுமின்றி நகர்த்திச் சென்றது. இப்போது அவனுக்குள் எந்தத் தடுப்புகளும் குரோதங்களும் இல்லை.

 “மொதப் படையல போட்டுடு லட்சுமி”  ஒரு சிறிய மனையில், குங்குமமும் சந்தனமுமிடப்பட்டு, மஞ்சள் நிற சாமந்தி மாலை சூடப்பட்ட ஸ்டீவனின் முகப்படம், சாம்பிராணிப் புகையினால் மெல்ல மறைந்திருந்தது. குழைந்த சாதத்தில் கறுப்பு எள் கலந்து உருண்டையாகப் பிடிக்கப்பட்ட பிண்டங்கள், பாத்திரத்தில் வாழையிலையினால் மூடி வைக்கப்பட்டிருந்தன.

 “பிண்டம் வைக்க வேண்டாம். வெறும் படையலை மட்டும் போடு லட்சுமி.”  லட்சுமி தினுசாய் அவரைப் பார்த்து,

 “இன்னுமா உங்க மனசுல அவன் மேல உள்ள கோவம் தணியல. வேத்து மதத்துல சேர்ந்து செத்து மண்ணாபோனாலும், நாம பெத்த மகந்தானே? நம்ம முறைப்படி பிண்டம் கொடுத்துக் கரையேத்த வேணாமா?” அவளின் தாயுள்ளம் வாதிற்கு நின்றது.

சிவகடாட்சம் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

 “அடிப்பாவி, பிண்டத்தை விட்டுட்டு போனவனுக்குதான் சோத்துருண்டை. அண்டத்தோடு காத்தா கரைஞ்சவனுக்கு இல்லை.” அவர் தனக்குள் சொல்லிக் கொண்டது லட்சுமிக்குப் புரிந்ததா எனத் தெரியவில்லை.

தலைவாழையிலையில் படைக்கப்பட்ட மரக்கறி உணவு பதார்த்தங்களில், கொஞ்சமாய் செம்பிலிருந்த நீரை ஊற்றி, விரல்களால் ஊட்டும் பாவனையில், சட்டமிடப்பட்டிருந்த அவன் முகத்திற்கு அருகே கொண்டுபோகும்போது, லட்சுமியிடமிருந்து சின்னக் கேவலும் விழி நிறைய உப்பு நீரும் பெருகியது.

 அவனது இருப்பை யாரும் அங்கு அறிந்திருக்கவில்லை, சிவகடாட்சத்தைத் தவிர. அவனது பருப்பொருளற்ற ஒளிக்கைகளால் அம்மாவை ஸ்பரிசிப்பதும், தழுவுவதுமாய் இருந்தாலும், அம்மா எந்த ஒரு பிரக்ஞையுமின்றி உள்ளுக்குள் உடைந்து போயிருந்தாள். அப்பா மாட்டிலும் ஈர வேஷ்டியோடு, ஆத்மசாந்திகாக ஏற்றப்பட்ட நல்லெண்ணெய் தீபத்தின் மீது பார்வையைக் கூர்ந்து செலுத்தியபடி முணுமுணுத்துக் கொண்டிருந்தார். .

 “தயாராயிட்டியா திருநா?” அப்பா அவனை அப்படிதான்  சிலவேளைகளில் அழைப்பார். பாசமான பொழுதுகளில், அவனது முழுப்பெயரான திருநாவுக்கரசைச் சுருக்கி “திருநா” என்றுதான் அழைப்பார். அவனுடைய வாழ்நாளில் அத்தகைய தருணங்கள் அமைந்தது வெகு சொற்பமே.

அப்பாவின் வார்த்தைகள் அவனுக்குத் துளி பிசகாமல் கேட்டது. அப்பாவின் மூடிய இமைகளில், விழிகளின் ஓட்டம் அறவே நின்றிருந்தது. உதடுகள் மட்டும் மெதுவாய் லயப்படி அசைந்து கொண்டிருந்தன. ஆனாலும், அவர் அவனிடம் பேசிக்கொண்டிருந்தார். அதே குரல்தான். முன்பிருந்ததைவிட இன்னும் கனிந்த குரல். வயோதிகத்தின் எல்லையாய் அடையாத கண்டாமணி குரல்தான். நீண்ட ஒலியின் கார்வையாய் அவரது குரலின் அதிர்வலைகள் அவனது ஆத்மாவை வந்தடைந்தன. அவரைச் சுற்றிலும் வெளிர் நீலநிற ஒளி வியாபித்திருந்தது. தெள்ளிய கடழாழத்தின் அடியில் அலைகளென உருவாகும் நீண்ட நீல ஒளிக்கற்றைகளைப் போல். அவ்வொளியின் பிரதிபலிப்பு கூடத்தை வெளிச்சமாக்கி, ஸ்டீவனின் ஒளியுடம்போடும் பிரிகளாய் தொடர்பில் இருந்தன. அசைந்துகொண்டிருந்த உதடுகளும் நாவும் ஒரு கணம் அசைவற்று நின்றன. 

   “உன்னோட அவசர புத்தி எங்க வந்து நிறுத்தியிருக்குன்னு பார்த்தியா திருநா? செத்தும் உன்னால பிதுர்லோகத்துக்குப் போக முடியலையே? அன்னைக்கும் அப்படிதான், கைப்புடிக்க போற பொண்ணுக்காக அவசரப்பட்டு மார்க்கத்தை மாத்திகிட்ட?” சிவகடாட்சத்தின் மனகுரலில் அடக்கி வைத்திருந்த ஆதங்கம் ஆரவாரமின்றி வெளிப்பட்டது.

 “எதுனால அந்த பத்தாவது கடைசி இழையை அறுத்தே? பருவுடலை வழிநடத்துற தசவாயுக்களோட சூட்சும வடிவம்தானே அந்த பத்து வெள்ளி இழைகள்? அதுல ஒன்பதை அறுத்து உன்னோட ஆத்மாவிற்குத் துன்பமில்லாம விடுதலை கொடுக்க நினைச்சேன்.”

 அப்பாவை மீறி அவன் பேசியதில்லை. அதற்கெல்லாம் சேர்த்துதான் அவரையும் மீறி மதம் மாறி திருமணமும் செய்துகொண்டான். ஒளியுடல் தந்த சுதந்திரமும் தைரியமும் அவனை அவருக்குள் பேச வைத்தது.

 “அப்ப எனக்கு தெரிஞ்சதெல்லாம் முழுசா விடுதலை அடையனும்னு வெறி மட்டும்தான்ப்பா.”

 “நீ மெனக்கெட்டு அறுத்தது என்னதுன்னு தெரியுமா? அது பஞ்சபூத கலவையான பூதவுடலை மீண்டும் அதே பஞ்சபூதங்களுகளோட மறுசுழற்சிக்கு அனுப்புற தனஞ்ஜெயன்-ங்கிற வாயுவை கட்டுக்குள்ள வைச்சிருக்கற சக்தி. செத்தப்பிறகு உடலை ஊதவைச்சு, மண்ணாலான உடலை அணுக்களா பிரிச்சு, பஞ்ச பூத தத்துவங்களோடு ஐக்கியமாக்கும் சக்தியை அவசரப்பட்டு தூண்டிவிட்டுட்டியே திருநா?”

 “மனுஷதேகம் சுருக்குபையில கொட்டிவச்ச மணிகளைப் போலதான். உடம்போட நவத்துவாரங்கள் வழியாதான் அஞ்சு பஞ்சேந்திரியங்களும் வேலை செய்யுது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் அப்படிங்கற பஞ்சபூத தேகத்தைத், தசவாயுக்களோட முதல் ஒன்பது வாயுக்கள்தான் இயக்குது. செத்தபிறகு வேலைசெய்யுற பத்தாவது வாயுவை, ஒரு நொடியில அக்கினிதத்துவத்தால சீண்டிவிட்டுட்ட. உடம்புங்கற சுருக்குபையோட ஆககடைசி முடிச்ச நீ அவசரப்பட்டு அவிழ்திட்டே. சிதறிய மணிகளைப் போல உன்னோட ஸ்தூல தேகமும் பூவுல இருந்து கொட்டுற மகரந்த பொடியா காத்துல கரைஞ்சி போச்சு. ஏதாவது விளங்குதா திருநா?”

 எந்த அசைவுகளுமின்றி ஒளியுடல் வெறுமனே நின்றது.

“ஸ்கூல்ல பௌதீகம் படிச்சிருக்கில்ல? எனெர்ஜி ஈக்குவல் டு மாஸ் டைம்ஸ் ஸ்பீட் ஒஃப் லைட்  ஸ்குவேர்ன்னு (E=mc2)? எப்படி பருப்பொருள் நேரடி சக்தியா மாறுது? இதைதான் ஜோதியில சங்கமம் ஆகறதுன்னு பெரியவங்க சொல்லுங்வாங்க. இப்படிதான் வள்ளலார் பெருமானும் ஞானபிரகாசமா பிரபஞ்சத்தோடு கலந்தாரு. அவங்க ஞானங்கற வாளெடுத்து பத்தாவது இழைய அக்கினி தத்துவத்தால பஸ்பமாக்கி, இயற்கையோடு கலந்து முக்தி அடைஞ்சாங்க. நீ அவசரத்துல அறுத்து வம்புல மாட்டிகிட்ட. என்னோட ஆன்மபலத்தைத் தாரை வார்த்து உன்ன மேல அனுப்பி வைக்கறவிட வேற வழி எனக்கு தெரியல.”

ஆவியாய் அலைந்தாலும், ஸ்டீவனின் பூர்வாசிரம துடுக்குத்தனமும்  குணமும் அப்படியே இருந்தன. சிவகடாட்சத்தின் கேள்வி, அவனைச் சீண்டிவிட, 

“இப்பவும் சரி அப்பவும் சரி, நீங்க எதைதான் தெளிவா சொல்லியிருக்கீங்க? இதே பௌதீக விதியை நானும் படிச்சிருக்கேன், அது சயின்ஸ். நீங்க சொல்ற மாதிரி மிஸ்டீக்கல் கிடையாது. உங்க கோட்பாடுபடி ஒடம்பு ஒளியா மாறும்போது, இந்த ஃபார்முலாவில இருக்கிற  ஒளியோட வேகம் எப்படி  வேலை செய்யுது விளக்கமுடியுமா? ஸ்டீவனின் சொச்சமாய் ஒட்டிக்கொண்டிருக்கும் தர்க்க மனது சிவகடாட்சத்திடம் வாதிட்டது. 

“அதுதான் அக்கினி தத்துவம்.அது நீ நினைக்கிற மாதிரி சாமானிய சூரிய ஒளியில்லை. அதனையும் தாண்டி பிரபஞ்ச வெளியில ஊடுவியிருக்கிற சூட்சுமமான சக்தி, சூரிய ஒளியைக்காட்டிலும் இருபரிமாண சக்தி.”

“அந்த சக்தியை எப்படி யூஸ் பண்ணி வள்ளலார் ஒளியா மாறினாரு?”

“அது தெரிஞ்சிருந்தா நீ எதுக்கு இப்படியா ஆவியா அலையப்போற?” சிவக்கடாச்சத்தின் இதழ்களின் கோடியில் வருத்தமும் எள்ளலும் கலந்த மென்சிரிப்பு அரும்பி மறைந்தது. 

சிவகடாட்சத்தின் உறைந்த உதடுகள் உக்கிரமாய் அசைய, விடை தெரியா கேள்விகளோடு அலைபாய்ந்தவனின் ஒளியுடல் மிகச்சிறிய ஒளி பொட்டலங்களாக, குவாண்டமாக பிரிந்து  பிரபஞ்சத்தோடு மெல்ல கலந்தது.


 

எழுதியவர்

இராஜேஸ் இராமசாமி
மலேசியா கோலாலம்பூரைச் சார்ந்த மூன்றாம் தலைமுறை மலேசியத் தமிழர். சேலம் மேட்டூரைச் சேர்ந்த விருதசம்பட்டியில் இவரது வேர்க்கொடிகள் பின்னியுள்ளன. மருத்துவத் துறை முனைவர் மற்றும் மருத்துவ இணைப்பேராசிரியராகப் பணிபுரிகிறார். .
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x