27 April 2024

வேசிகள் ஜகஜாலக்கில்லாடிகள் பொறி கலங்கடித்து மயக்கமூட்டி அழிக்க வல்லவர்கள். சூது தவறினால் அரைஜான் குண்டித்துணியையும் உருவி எடுத்துக்கொண்டு நிராயுதபாணியாகத் தெருவில் பித்தாய் திரிய விடுபவர்கள். ஜாக்கிரதை. பயம் கலந்த ஒரு விதண்டாவாத மனநிலையில் சிகரெட் ஒன்றினை பற்றவைத்தபடி ஆளரவமற்ற அந்தச்சாலையின் எல்லையைப் பார்த்தான் சாலை சுழிந்து வலதுபக்கம் வெடுக்கெனக் கீழ் இறங்கி மறைந்தது. அதற்கப்பால் அமானுஷ்யக் காடு. அவன் நாற்காலியின் பின்புறம் தலைக்கு மேலே பைன் மரமொன்று தனியே உறைந்து நின்றிருந்தது, அதன் உச்சிக்கு அப்பால் உயரத்தில் கார்மேகம் யோசித்தபடி சூழ்ந்துகொண்டிருக்க, சிகரெட்டின் புகை மதிமயக்கச்செய்தது, புகை மட்டுமில்லாமல் அவன் மதிமயங்க நியாயமான வேறு காரணங்களும் இருந்தன. சிகரெட் கரைந்து கொண்டிருக்க, வாட்சப்பில் பெண்களின் புகைப்படங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சுழன்று கொண்டிருந்தன. முற்பத்திநான்கு வயதைத் தாண்டிய செல்ல மகனின் திருமணத்திற்கு அம்மாவினால் பார்த்த பெண்களின் புகைப்படங்கள் என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள். அது தன் பால்யகால நண்பனின் தொழில்யுக்தி. சில்லறைத் தனமாகச் சென்று வந்ததெல்லாம் போதும் எனும் எண்ணம். அவன் வளர்ந்துவிட்டான் அல்லவா அதுவும் ஒரு காரணம், வளர்ச்சி என்றதும் உடல் சார்ந்தது என்றும் நினைத்துவிடாதீர்கள். திருமணம் ஏன் இன்னமும் கைகூடவில்லை அதற்கு அவனிடம் பதில் இருந்தது ஒப்புக்கொள்ளத்தான் தயாரில்லை அல்லது தைரியமில்லை. வட்டாரத்தின் முக்கியமான ஆளுமைகளின் பட்டியலில் சுடச்சுட சேர்ந்தவன். ஆளுமைகளுக்கே உரித்தான பண்பு எனவும் நினைத்துவிடாதீர்கள்.

மேற்கே சாலை தாண்டி மேட்டின் காடுகளில் பறவைகளின் ரகம் ரகமான கீச்சொலிகள், நேரம் மாலை சுமார் ஐந்தை தாண்டி ஓடவில்லை, எடைகூடி நத்தையின் வேகமாக நகர்ந்தது. புகைப்படங்கள் அனைத்தும் தயாராகின. நண்பன் நல்ல தொழில்காரன் என்பதை அறிவான். வழக்கமாகப் பார்த்து வெறுப்பான முகங்களுடன் புதியதாக ஒன்றை மட்டும் சேர்த்திருப்பான். அந்த ஒன்றையும் பார்த்தவுடன் ‘இது சரியாக இருக்கும் எனும் தகவலைத் தூது விடுவான். தூது சென்று சேர்ந்தால், தூங்கிக்கொண்டிருப்பவள் தன் அழகை உசுப்பியெழுப்பிக்கொண்டு வந்துவிடுவாள்.

இன்று இரவில் முழுவதும் இதன் அனைத்து உச்சங்களையும் சென்றடைந்து இழந்த என் மகிழ்ச்சியை மீட்டுக்கொள்ள வேண்டுமெனும் நினைப்பு. எல்லாமும் இருக்க ஏதோ ஒன்றைத் தொலைத்துவிட்டுத் தேடுவது எதை என்றும் தெரியாத ஒரு விலங்கு பசியின் மனோநிலை அல்லது பரபரப்புக்குப் பஞ்சமில்லாத தெருவில் தொலைந்த குட்டிபூனையின் வசிப்பிடத் தேடலாக இருக்கலாம். நல்ல அந்தி. அவன் எதிரே மேற்கின் மலைமுகட்டில் சூரியன் ஆரஞ்சுப்பழம் போல் கனிந்து அரைக்கண் காட்டி கண் அறியா அசைவுகளில் மறைந்து கொண்டிருந்தது. சூரியன் முழுவதுமாக கொட்டாவி விட்டுக்கொண்டு மறைய இருள் சோம்பல் முறித்துக்கொண்டு சலிப்புடன் வந்தது. இருளின் கம்பளிப் போர்வையில் பைன் மரம் வெறும் கரு முக்கோணக் காட்சியாக உருவம் பெற்று ஓவியமாக நின்றது. சிகரெட்டை சுண்டி வீசினான் அது சுழன்று விழுந்து புல் நுனிகளில் மிதந்து வான்நோக்கி புகை கக்கியது வளைந்து வளைந்து. வந்திருப்பாள். சரி செல்லலாம் எனும் தோன்றிய கணம் அவன் உடல் இறுகிக் குறி துடித்து அக்குள் பள்ளத்தில் வியர்வை ஊறியது. நேராகச்சென்று வலதுபுறம் கடைசி அறை.

கதவை திறந்தான். கதவு நளினமாக வழுக்கித் திறந்தது, வழக்கமான சுற்றுலாத்தல ரெசாட்களின் அறை வாசனைகளோடு முல்லைப் பூவின் மயக்கமான வாசனை முகத்தில் ஏறி நாசித்துவாரங்களைச் சுத்தம் செய்தது. ஜன்னலினூடே திரண்டு கொண்டிருந்த இருளில் மூழ்கிக்கொண்டிருந்த பைன் மரத்திடம் மௌனமாக எதையோ பேசிக்கொண்டிருக்கிறாள் போன்றதாகக் கம்பிகளை கைகளால் இறுக்கி நின்றிருந்தாள். கண்கள் இடை, புட்டம்,பாதம் வரை போய் வந்தன. முதலாக அப்போதுதான் அவனைப் பார்க்கிறாள். புன்னகைத்தான்.

‘இருங்க குளிச்சிட்டு வரேன்’ என்றபடி ‘கதிர் சொன்னார்…. எல்லாத்தையும் தெளிவா’… எனக் கேட்டு பதிலை எதிர்பார்த்து துண்டை தேடினான். அது முன்னதாகவே குளியலறையில் காத்துக்கொண்டிருந்தது.

‘சொன்னாருங்க ஆனா காலையில கொஞ்சம் நேரமே கெளம்பனும்’ எனத் தயங்கினாள்

‘யேன்’

‘நாளைக்கு சஷ்டி ல்ல கோவிலுக்கு போகனும் அதான்’

இவர்களைப் போன்றவர்கள் கோவிலுக்கு எல்லாமா செல்கிறார்கள்? எனும் கேள்வியெழ ‘கோவிலுக்குலாம் போவிங்களா’ வென குறும்பாகச் சிரித்தான்

‘ஏன் நாங்க கோவிலுக்கு போவக்கூடாது… எதாச்சும் சட்டம் இருக்கா’ வென இயலாமையாகச் சீறினாள்.

‘இல்ல சும்மா கேட்டன்’ என்றபடி சாரை ஊறுவதாய் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

மூடப்பட்ட குளியலறை கதவுகளை இலக்காரமாகவும் சலிப்புடனும் பார்த்துப் பின் திரும்பி ஜன்னல் கம்பியை இறுக்கியவாறே, மறைந்து கொண்டிருந்த பைன் மரத்தைத் தேடினாள், அது சற்றே இருளில் மென் அசைவுகளுடன் இங்குதான் இருக்கிறேன் என்றது. அதனைத் தொடர்ந்து குளியலறை குழாயில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நீர் விடுதலை பெற்று ‘ச்ஜர்’ என வாளியில் குதித்து சுழிந்து அடங்கியது. மலையின் உறைய வைக்கும் அந்நீர் அவனிடம் அன்று தோற்று மீண்டுமாவென சாக்கடை சென்று கலந்தது. ஜன்னல் கம்பியிலிருந்த கைகள் தளர்ந்து கீழ்நோக்கி செல்ல, வளையங்கள் வரிசை மாறாமல் மணிக்கட்டை அடைந்தன. திரும்பியவள் இரண்டடி உயரமான வெண்ணிறப் படுக்கையில் சென்றமர்ந்தால் அது அவளை வாங்கி அரையடி உள்ளிழுத்து எம்பியமரச்செய்தது.

இந்த ரெசாட் அவள் வழக்கத்திற்கு மாறானது, வழக்கமான ரெசார்டு காட்டில் இருக்கும் சிறு நகரத்தில் இருப்பது. அது சுற்றுலாப் பயணிகளால் திணறிக்கொண்டிருக்கும் ஓர் இடம் பெரிதாக அதில் சுட்டிக்காட்டுமளவில் வேறொன்றும் இல்லை. மனிதர்களின், வாகனங்களின், சத்தங்களால் நிரம்பி வழியக்கூடியது. ஆனால் அங்குத் தொழில் பறக்கும். வேட்கையைத் தனித்துக் கொள்ளத் திரியும் அப்பா ஆண்களும், பருவத்தின் கிளர்ச்சியில் சூடேறிய குழந்தை வாலிபர்களும். அது சாங்கியம் போலத்தான் அரை மணி நேரம் கால் விரித்தபடி கிடந்தால் போதும். இப்படி பெரிய ஆட்களுக்கு எப்போதாவது வந்து செல்வாள், அதில் ஆயிரமாயிரம் விதிமுறைகள் இருந்த போதிலும் உள் தாழிட்ட அறையில் பாறை விரிசலில் சிக்கிய தவளை தான். நன்றாகச் சாப்பிடக் கிடைக்கும், அப்போதெல்லாம் நிர்வாணத்தின் குற்றவுணர்வைத் தாண்டி நல்ல உணவை நான் மட்டும் சாப்பிட்டு விட்டேனே எனும் குற்றவுணர்வில் அம்மாவை நினைத்துக்கொள்வாள். மயக்கத்தில் முனகுபவனாக இருந்தால் எப்படியாவது காலை உணவை பார்சலாக எடுத்துச்செல்வாள்.

‘க்டக்’ எனும் ஓசையுடன் குளியலறை கதவு உள்ளே செல்ல, புத்துணர்ச்சி பொங்க வெளியே வந்தான். அவன் அதிகம் பேசுவதில்லை குறிப்பாக வேசிகள் என்றாள் ஊமை களியாட்டம் அவ்வளவுதான். ‘க்ரோக் க்ரோக்’ வென தவளைகளின் மெட்டுகளை கவனித்தபடியிருந்தவள் அநாயசமாக வந்த அவனைப் பார்த்தாள், தடித்த அகன்ற மார்பு, உலக்கை போன்ற உருண்ட கைகள், சமமான வயிறு, அதற்கு கீழே வெண்ணிறத் துண்டில் முட்டி உப்பிப் புடைத்திருந்த குறி. சற்று அவளை மயக்க நியாயமான உடல் கட்டுதான் எனினும் கால் மிதியில் அழுத்தித் தேய்த்துக் கொண்டிருந்தவன் பள்ளிக்குச் செல்லும் சிறுவனாக அவள் விழிகளில் நிரம்பினான். தலை உயர்த்தினான். தன்னை கவனித்துக் கொண்டிருந்த அந்தக் கண்கள் அவனைப் பதற்றமடையச்செய்ய அவ்வமைதியைக் கலைக்கும் படி ‘குளுரே தெரியல பாத்திங்களா’ என நின்றான், பிரக்ஞையற்று விரிந்த கண்களுடன் பார்த்துச் சிலை போல் இருந்தவள் பதற்றத்தைக் கூட்டினாள். என்ன செய்வதெனத் திகைத்து நின்றவன். வேண்டுமென இருமி அமைதியைக் கலைத்தான்.

‘ என்ன கேட்டிங்க’

‘இல்ல …. சாப்டிங்களா’

‘சாப்டன்…இப்ப கொஞ்சம் மறுபடியும் பசி எடுக்குது’ என விசித்திரமாகப் பார்த்தாள்

எதையோ புரிந்துகொண்டு சரி என்பதைப்போல் நடந்து தலை சிலிப்பியிபடி ஜன்னலருகில் நின்றான், அறையின் கண்கூசும் வெளிச்சம் இருளை பழக அவகாசம் தரவில்லையென்பதனால் பைன் மரம் சில நொடிகள் காணாமல் ஆகின. ஓர் இரவென்பது முதல்முறை. இதை எப்படிக் கையாளுவது நிறைவடைய என்ன செய்வது கேள்விகள். கற்பனை குதிரை கட்டவிழ்ந்து தறிகெட்டுத் திரிய உடல் பரவசநிலைக்குச் சென்று கொண்டிருந்தது. நொடிகள் செல்லக் குளிர்காற்று ஜன்னலினூடாக மெல்ல நான் வந்துகொண்டிருக்கிறேன் என்பத்தைபோல் கள்ளத்தனமாக உள்புகுந்து அறையில் பெருகியது.

‘அந்த ஜன்னல தான் சாத்துறது’

கண்ணாடி வளையல்களுடன் இணைந்து வந்தது அவளின் குரல், பாடலும் இசையுமாக. போதை தனமாக இருந்தது.எல்லைகளற்ற உணர்வு மண்டலங்களின் வாசல்கள் ஒன்றன்பின் ஒன்றெனத் திறந்து கொண்டிருந்தன அவனுக்கு. ஏதோ கட்டளைக்குப் பணிவது போல் பதில் ஏதும் இல்லாமலேயே ஜன்னலை உள் தாழிட்டான்.

‘என்ன பஸ்ட் டைமா’

‘அதுலாம் இல்ல நிறைய முற உண்டு’ தொண்டை கவ்வியது.

‘எனக்கேதோ மொத வாட்டி வரவனுங்க மாதிரி தான் தோனுது’

‘ஜாதகம் ல பாக்க தெரியுமோ’

‘என்னது’

‘இல்ல பாத்தாலே பஸ்ட் டைமா இல்ல பலவாட்டி வந்தனானு கேக்குறிங்களே அதான் சொன்ன’

‘ஒரு நல்ல ஜோக்கு சொல்ல தெரியுதா பாரேன்’ “புஹாஹா” வென வெடித்து சிரித்தாள்.அவள் சிரித்தது அவனைச் சிறுமை செய்தாளும் உள்ளூர அவன் அதை ரசித்து மகிழ்ந்தான், இல்லையென்றால் அகத்தின் உடைந்த அமைதியின் துண்டுகள் மீண்டும் அதனதன் இடங்களில் பொருந்த தொடங்காமலிருந்திருக்கும். சங்குப்பூ நிறச் சரிகை கொண்ட தங்கநிறப் புடவை புதியதும் கூட, அதில் ஒருமுறை அலசியபின் வரும் மணம், மதியம் முதல் வைத்து வைத்து எடுத்த முல்லையின் நன்கு வாடிய வாடை, அவளின் மேல் எந்த வியர்வை வாடையுமில்லை என்பது ஆச்சரியம் தான். மூச்சுமுட்டியது. அருகே அமர்ந்துகொண்டான்.

‘அதானே பாத்தன்’

‘என்னது’

‘வானமே பொலந்துகிட்டு ஊத்துனாலும் ஒத்த காலுல நிக்கிறக கொக்குக்கு கண்ணெல்லாம் கெண்ட மேலயாம், எனச் சிரித்தாள். இம்முறை கூட்டணி போட்டுச் சிரித்தார்கள். அறை விழித்துக்கொண்டது. அவன் சற்று வெட்கத்துடன் சிரித்தான்.

‘பலவாட்டி போன மாதிரி ஒன்னும் தெரியலயே’

அறைகூவல் ஆக இருக்குமோ வெனும் எண்ணம். ஆனாலும் சென்ற மாதம் வந்தவள் மரக்கட்டை போல் உருண்டு சென்று விட்டாளே என நினைத்துக்கொண்டு ‘டைம் ஆகட்டும் தெரியும்’ என்றான் ஆண்களுக்கே உரித்தான தோரணையுடன்.

‘இருக்கட்டும் இருக்கட்டும்’ என ஆச்சரியமாகக் கூறினாள்

‘ஆமா நீங்க கலியாணம் பன்னலயா’

‘யேன் நீ பன்னிக்கறயா’ என வேண்டுமேன சீன்டினாள்,நொடிப்பொழுதில் அகம் திகிலடைந்து ஒருவித பயத்தை எழுப்பி அவள் கண்களை பார்க்க ஏனோ சங்கடத்தை நிரப்பியது அவனுள். முகம் வாடி காற்று குறைந்த பந்தாய் ஆனது தன்னிலை மறந்து கொண்டிருந்தான்

‘இந்தத் தொழிலுக்கு ஏன் வந்திங்க’ அக்கேள்வி சம்பிரதாயமாக எழவில்லை என்பதை அவளால் உணரமுடிந்தது.

‘சொல்றன் கேளு எனக்கு அப்பா இல்ல மொத்தம் மூனு தங்கச்சி பெரியவ ஓடி போயிட்டா சின்னவ ரெண்டும் படிக்குறாளுங்க அம்மாவுக்கு நோவு’ எனத் தலை குனிந்தபடி அவன் முகத்தை பார்த்தாள் காதல் தோல்வி அடைந்த சிறுவனைப் போல் இருந்தது முகம், உண்மையாகவே அவளை நினைத்து வருந்தினான். வாகனம் பெரிதும் வராத அந்த ரெசார்டின் சாலையில் ஒரு வாகனம் இரும்பு கிழியும் ஓசைகளுடன் கடந்து அப்பால் மறைந்தது. ‘ப்ச்’ என திரும்பினான். ‘அது என்ன வரவன் எல்லாம் சொல்லி வச்ச மாதிரி இதயே கேக்குறிங்க’ என நினைத்துக்கொண்டு வெடித்துச் சிரித்து, சிரித்துக்கொண்டே பெரியவ ஓடிட்ட எனச் சொல்லிச் சிரித்தாள் அப்பா இல்ல எனவும், சிரித்தபடி நானும் இந்த மாதிரி வரவன் எல்லார்கிட்டையும் நிறைய கத சொல்லியிருக்கன் என்ன புரயோஜனம் தண்ணி வந்துட்டா தொட கூட மாட்டானுங்க’ என அமைதியடைந்தாள் .ஒன்றும் விளங்காதவனாய் கேள்வி நிறைந்த முகத்தோடு பார்த்து இருந்தவனுக்கு சட்டென விளங்கியது. அவனாலும் அடக்கமுடியாமல் சிரிப்பெழ கோபித்துக் கொண்டவனாய் தலையணையைத் தூக்கி அடித்தான். வெந்நிற இலவம்பஞ்சு தலையணை அதே மாதிரியான அவள் சருமத்தில் உரசி காற்று போல் கீழே விழ விரைந்து எடுத்து எதிர்தாக்குதல் நிகழ்த்தினாள், இவன் தற்காப்பாக மற்றுமொரு தலையணையை கையில் எடுத்து எதிரே நின்றான் மலர்ந்த முகத்தோடு. சிரிப்பை அடக்க முடியாமல் மூச்சுத் திணறிய போதும் தலையணை தாக்குதல் நிகழ்த்தியபின் படுக்கையில் பின்னாலிருந்து விழுவதைப் போல் சாய்ந்தாள் அது அவளின் மொத்த உடலையும் அரையடி உள்ளிழுத்து எம்பச்செய்தது. அந்த சிரிப்பு மட்டும் விலகவேயில்லை, மூச்சிரைத்தபடி இடுப்பில் கைவைத்துப் படுக்கையில் அமர்ந்தான். மூளையின் கணக்குகள் தவறிப்போக மற்ற உறுப்புகள் வேகம் எடுத்தன. அப்போது காலம் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறந்தது. நேரம் பதினொன்றையை கடந்திருந்தது. படுக்கைக்கு நேரேயிருந்த சுவர்க்கடிகாரம் அவளுக்கு நிகழ்காலத்தை நினைவூட்டி வந்த காரியத்தைப் பார் என்றது.

‘ஹே நேரம் என்னாச்சு பாத்தியா’ எனத் தீவிரமாக இருமுறை பின்னாலிருந்து முதுகில் ‘சத்’ எனத் தட்டினாள். நல்ல உரமேரிய கை, பளிங்கு போன்ற முதுகின் காபி நிறத் தோலில் பதிந்தது. வலித்ததைப்போல் போல் சிணுங்கினான். ‘ஹே ஹே சாரி சாரி’ எனச் சமாதானம் செய்தாள். ‘போ’ என மீண்டும் சிணுங்கினான். எழுந்து படுக்கையில் வழுக்கியபடி அருகில் சென்று அமர்ந்து ‘வலிச்சிடுச்சோ’ என சோர்வாகக் கேட்க , அவளின் இரு கைகளையும் நழுவாத படி இறுக்கிப் பிடித்துக்கொண்டு ‘வலிச்சிதான கேக்கற’ என சங்குப்பூ சரிகைக்கு பின்னாலிருந்த உலர்ந்த சர்க்கரைப்பாகு பதத்தின் இடை தசைகளைச் செல்லமாகக் கிள்ளினான். நெளிந்தபடி சிரித்தாள். காலமற்ற ஒரு நிலையில் காலம் தன்னை நிறுத்திகொள்ள எவ்வளவு போராடுகிறது, அச்சுவர்கடிகாரம் பன்னிரண்டைக் காட்டி தொடர்ந்து அதன் போக்கில் சுழன்றது. விளையாட்டு தொடர்ந்த விளையாட்டு வியர்வையை ஊறச்செய்து அழுக்குகளை வெளியேறச் செய்யும் விளையாட்டு. மூச்சிரைக்க இருவருக்கும் வியர்வை பொங்கி குபுகுபுவென ஒழுகியது. நெற்றியில் ஊசலாடியபடி அவளின் அழகைக் கூட்டிக் காட்டும் அந்தக் கற்றை மயிர் வியர்வையில் ஊறி காதருகே ஒட்டிக் கொண்டது நீரில் விழுந்த மயில் தோகையாக. அவளின் வியர்வை நெடி இவன் தலையில் ரீங்காரமிட்டுப் பொறிகலங்க வைத்தது. பூக்களின், வாசனைத் திரவியங்களின், அறையின் அனைத்து மணங்களும் தலை குனிந்து வெளியேறின.

மூச்சிரைத்தது.

‘ஹே நேரம் போயிட்டே இருக்கு நியாபகம் இருக்கா என்றாள்’

‘அதுக்கென்ன’

‘கதிர் என்னன்னவோ பாடம் சொல்லி அனுப்புனான்…. நீ என்னடானா தலவாணில சண்ட போட்டுட்டு இருக்க’ என அடக்க முடியாமல் சிரித்தாள். ‘அவன் கெடக்குறான் திருடன்’ என நிதானம் வந்து அமர்ந்தான்.

‘அவன் என்னமோ திருடன் தான்’ எனக் கடிகாரத்தைப் பார்த்தபடி கூறினாள். சட்டென திரும்பி ‘யேன் அப்டி சொல்ற என்றாள்’

‘அஞ்சு வருசம் முன்னாடி அந்தப் பரதேசி கலியாண தரகரென்று தான் ஜாதகம்லா குடுத்து பொண்ணு இருந்தா பாரு டா மாப்ள னு சொன்னே’

சிரிப்பை அடக்கிக் கொண்டாள்

‘நா ஒரு தம் போட்டு வர இரு’ என நாற்காலியில் கிடந்த பனியன் ஒன்றைப் போட்டுக்கொண்டு வெளியேறி வராந்தாவில் வந்து நின்று பற்ற வைத்தான், திறந்திருந்த கதவுகளினூடே படுக்கையில் புடவை சரிசெய்தவாறே இவன் கண்களை வேறெங்கும் சென்றிடாமல் பார்த்துக்கொண்டாள். நல்ல குளிர் விசுவிசுவென முகத்தில் பூசியது. காட்டின் ஏதேதோ செடிகளின் மூலிகை மணங்கள் காற்றில் பெருகி வர, மழை வரும் வாய்ப்பிருக்கிறது என நினைத்துக்கொண்டான். சிகரெட் இரண்டு இழுப்பிலேயே அலுத்துப்போக வாய் கசந்து கொண்டு வந்தது அவனுக்கு. இருமனதாகச் சிகரெட்டை வீசி எறிந்தான் அது இருளில் எங்கோ சென்று இருக்குமிடம் தெரியாமல் மறைந்தது. அறைக்குள் புகுந்து வாஸ்பேசன் கண்ணாடி முன் நின்று வாய் கொப்பளித்தபடி அதனூடாக அவளைக்கண்டான். எதைப்பற்றியும் அக்கரைகளில்லாத ஓர் உயிர் எனத்தோன்றியது அவனுக்கு. அழகிற்கு மட்டும் பஞ்சமேயில்லை. கொப்பளித்துத் துப்பினான். வாய் கொப்பளித்ததுமே பசி என்ற உணர்வு மெதுவாய் எட்டிப் பார்த்தது. அவளருகே வந்தவன். ‘சாப்ட எதாச்சும் வச்சிருக்கியா’ எனப் பள்ளிச்சிறுவன் போல் எதிர்பார்ப்புகளுடன் நின்றான். ‘முழுசா நா இருக்கனே’ என கைகளை விரித்தாள்.குறி துடித்துப் புடைக்க ‘இவ ஒருத்தி’ எனத் தனக்குள் முனகிக் கொண்டு ‘இரு நான் ரிசப்சன் ல கேட்டுட்டு வரன்’ எனக் கிளம்பினான். கதவருகே நின்று ‘நா வெளிய பூட்டிட்டு போறன்’ என்றான். தலையை மட்டும் அசைத்தாள் சரி என்பதைப் போல். சில நொடிகள் நகராமல் அவளையே பார்த்து பின்பாக திரும்பி வராந்தாவில் நடந்தான். சும்மா சொல்லக் கூடாது இனிக்க இனிக்க ஊறிய ஜிலேபி போலத்தான் இருக்கிறாள் என நினைத்துக்கொண்டு நடந்தான்.

அறையின் தனிமை அந்த இரவு விளக்கின் மென்வெளிச்சத்தினால் தூக்கத்தினை உண்டு செய்தது அவளுக்கு. படுத்துக்கொண்டு விட்டத்தினைப் பார்த்தபடி கிடந்தாள். எவ்விதச் சிந்தனைகளுமில்லாமல் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் அம்மாவை மட்டும் நினைத்துக்கொண்டு சிலநிமிடங்களுக்குள் அப்படியே உறங்கிப்போனாள்.

உணவு தேடிச் சென்றவன் நிரம்பிய வயிற்றுடன் சில ஆப்பிள் பழங்களையும் கொண்டு வந்தான். ஒருவித நிறைவுடன் எடைகள் இல்லாதவனாய் வந்து கதவினைத் திருடன் போல் மெல்லத் திறந்து “ப்பே” என அடங்கிய குரலில் கத்தினான். அதைக்கண்டுகொள்ள உலகத்தில் அப்போது இருந்த அவள் ஒருத்தியும் உடல் குறுக்கி இரண்டாம் சாமத்தில் இருக்க, யாரும் கவனிக்கவில்லை எனும் பாதுகாப்புணர்வுடன் மெல்லிய சிரிப்புகளோடு ஆப்பிள்களை மேஜையின் மீது வைத்தான். புரண்டு படுத்தாள். தலையிலிருந்த முல்லைப் பூக்கள் சிதறி விழுந்தன. குலுங்கிய புட்டத்தின் மேல் கண்கள் குவிந்தது பின் அதில் வளைந்து இறங்கிய இடையிடம் செல்ல, அவ்வமைதி அவனை நிதானமாக்கியது. பெருமூச்சொன்றுடன் அவள் அருகே சென்று படுத்துக்கொண்டான். தலையில் கைவைத்துக் கோதினான், அவனின் அகம் நிரம்பி வழிந்தது. அவசர அவசரமாக இதற்கு முன்பாக அவன் புணர்ந்த பெண்களை நினைத்தான், அவன்மீதே எரிச்சல் பெருக இவளைக் கட்டி இறுக்கி அணைத்துக்கொள்ள வேண்டுமென அகம் துடிக்க அது அத்துமீறல் ஆகிவிடக்கூடும் என நினைத்துக்கொண்டு, வெகு நேரம் தலை கோதியவன் அவ்வாறே உறங்கிப்போனான்.

குறட்டைச்சத்தம் “கர் கர்”-வென இரட்டையாக அறையில் அதிர்ந்தது.

எங்கோ யாரோ விரட்டியடிக்கிறார்கள், மெல்ல அருகில் செல்கிறான், வானளவு உயரம் கொண்ட கருநாகம், வாள் கொண்டு வெட்டுகிறான், இரண்டு துண்டுகளாகச் சரிகிறது நாகம், திடுக்கிட்டு எழுந்தமர்கிறான். கண்கள் சிரமப்படுகிறது. தலைப் பாரம். முற்றிலும் நிதானம் பெற கடிகாரம் பார்க்கிறான் ஏழு மணியைத் தாண்டிய சுவர்க்கடிகாரம் ஒருமாதிரியான பீதியைக் கிளறியது. அருகில் இருந்த அவளைக் காணவில்லை என்பது புரிகிறது. ‘வேசி மவ’ என முனகியபடி எழுந்தோடி பர்சினை தேடியெடுத்து நோட்டுகளைச் சரிபார்த்தான். குழப்பம் இல்லை. கைப்பேசி வைத்த இடத்தில் இல்லாமல் சார்ஜரில் இணைக்கப்பட்டிருந்தது. வாஷ்பேசனில் சென்று முகம் கழுவி பல் துலக்க பசி எடுத்தது. படுக்கையருகே மேஜையில் வைத்த ஆப்பிள் பழங்கள் நினைவில் வரத் தேடினான் . ஆப்பிள் அங்கு இல்லை. சென்று சார்ஜரில் இருந்த போனை எடுத்தான், அதற்குக் கீழே ஒரு துண்டுச்சீட்டு. அதில் “ஆப்பிளைத் தேட வேண்டாம்” எனும் குறிப்பு மற்றும் தேவி எனும் பெயர் அதற்கும் கீழே அவளின் கைப்பேசி எண். பல வருடங்களுக்குப்பின் தனிமையில் வெடித்துச் சிரித்தபடி , கைப்பேசியில் தேவி அதன் அருகே சிவப்பு இதயக் குறியீடு, பதிவு செய்து பின் தன் பால்யகால நண்பனின் எண்ணை பட்டியலிருந்து நீக்கினான். அதிகாலையின் பூமியை விழுங்கும் சூரிய உதயத்தில் பறவையொன்று மெத்தனமாக உச்சி கிளையில் வந்தமர, அந்த ஒற்றை பைன் மரம் காற்றின் விசையில் சலசலத்துக்கொண்டிருந்தது.


 

எழுதியவர்

பொன் சக்திவேல்
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பிறந்தவர் பொன்சக்திவேல். பட்டதாரியான இவர் தற்போது wedding decor சார்ந்த சொந்த தொழிலை செய்துக் கொண்டிருக்கிறார். இலக்கியத்தின் மீதான ஆர்வத்தில் தீவிர வாசகராக உள்ள பொன்சக்திவேல் சிறுகதைப் படைப்புகளை எழுதத் தொடங்கி இருக்கிறார்.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Faslul Haq
Faslul Haq
2 months ago

Brilliant writing and You have a real gift for storytelling, keep at it!

மக்கள் செல்வன்
மக்கள் செல்வன்
2 months ago

The way of telling a story is only known to one who has flipped through many books. Best wishes brother and wish you to write more works.

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x