வாழ்க்கை ஒருவனுக்கு ஒன்றை இந்த உலகத்தில் நிர்ணயித்து இருக்கையில் , அந்த நிர்ணயித்த ஒன்றில் இருந்து மாற்றுப்பாதையை நோக்கி பயணிக்க வைக்கிற சக்தி இங்கு எவருக்கும் இல்லை. சிலவற்றுக்காக நாம் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பது மட்டுமே சரியாக இருக்கும். தனது வாழ்வு தனக்கு விடுக்கின்ற புதிர்களை விடுவிக்க அறியாதவன் வாழ்வை இழந்தவன் ஆகிறான். புதிர்களை அவிழுங்கள். பிரபஞ்சத்தின் மொழியை கவனமாக செவிமடுங்கள். உள்ளுணர்வு காட்டுகிற பாதையை இறுக்கமாக பிடித்துக்கொள்ளுங்கள். மனதார நிரப்பிக்கொள்கிற ஆத்மார்த்தமான கனவுகள் ஆசைகள் நம்மைவிட்டு எங்கும் சென்றுவிடுவதில்லை. கனவுகள் எவ்வளவு பெரியவை, சிறியவை என்றில்லை. அது உன் கனவுகளா, உன் ஆன்மாவை பூரணப்படுத்துபவையா என்பதே மிக முக்கியமானது. பாலோ கொய்லோவின் “ ரசவாதி “ என்ற இந்த நூல், கனவுகளை பின்தொடர்ந்து செல்கிற ஒரு இளைஞன் பற்றியது.
எழுத்தாளர் பாலோ கொய்லோ 1987 இல் ஒரு புனித யாத்திரையை மேற்கொள்கிறார். அந்த பயணத்தின் பின்னர் நாடு திரும்பிய அவர் தனது புனிதப்பயணம் பற்றிய நூலை “ த பில்கிரிமேஜ் என்ற பெயரில் எழுதுகிறார். அந்தப்பயணம் உண்மையில் அவர் வாழ்வை திருப்பி போட்டிருந்தது. அந்த ஒருவருடத்தின் பின் அவர் மீண்டும் ஒரு நூலை எழுதுகிறார். அதுவே “ ரசவாதி “ என்ற நூல்.
ஒரு கலைஞனின் வாழ்வில் எப்போதேனும் ஒருமுறை அவனது படைப்பாற்றல் அதி உன்னதத்தை அடையும். அது அந்த கலைஞனின் அதி அற்புத படைப்பாக (Master work) இருக்கும். பிரபஞ்சத்தின் ஆன்மாவுடன் ஒரு கலைஞனின் மனம் ஒன்றித்து செயற்படுகின்ற போதெல்லாம் இந்த அதி உன்னதம் வெளிப்படும். பாலோ கொய்லோவின் உலகப்புகழ் பெற்ற The Alchemist இலக்கிய உலகில் ஒரு Master work என்று சொல்லலாம் .
ஆனால் இந்த நூல் பற்றி பாலோ கொய்லோ குறிப்பிடுகையில் இப்படி சொல்லியிருப்பார்.
“1988 இல் என்னுடைய தாய்நாடான பிரேசிலில், என்னுடைய தாய்மொழியான போர்த்துகீஸில் முதன் முதலாக வெளியிடப்பட்ட போது யாருமே அதைக்கண்டுகொள்ளவில்லை. முதல் வாரத்தில் ஒரே ஒருவர் மட்டும் வாங்கிச் சென்றார். இரண்டாவது பிரதி விற்பனையாக இன்னுமொரு ஆறு மாதங்கள் எடுத்திருந்தன. ஆண்டு இறுதியில் அவை ஒழுங்காக விற்பனை ஆகவில்லை என்று பதிப்பாசிரியர் ஒப்பந்தத்தை இரத்து செய்துவிட்டார்.
ஆனால் அந்த நூலின்மீது நம்பிக்கை இழக்கவில்லை நான். நான் கொண்டிருந்த முன்னோக்கில் இருந்தும் நான் பிறழவில்லை. ஏன், ஏனெனில் என்னுடைய இதயம், ஆன்மா ஆகியவையுட்பட என்னுடைய ஒட்டுமொத்த இருத்தலும் அந்தப்புத்தகத்தில் இருந்தது. ”
எட்டு மாதத்துக்கு பிறகு பிரேசிலுக்கு வருகை தந்த அமெரிக்கர் ஒருவர் இந்த நூலை வாங்குகிறார். பின்னர் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உதவிட பாலோ கொய்லோவிற்கு விரும்புகிறார். ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் ஒப்புக்கொள்கிறது. பிரமாண்டமாக நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் முதல், உலகம் முழுவதும் கொய்லோவின் ” ரசவாதி” கொண்டாடப்பட்டது. உலகில் உள்ள எண்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் அது மொழி பெயர்க்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பத்துபுத்தகங்களில் அதுவும் ஒன்று. மிகச்சிறந்த புத்தகம். கனவு காண்பவர்கள், அந்த கனவை அடைய முடியாது இடையில் கைவிடுபவர்கள், கனவு என்ற ஒன்றை வாழ்வில் உணராதவர்கள், ஆன்மாவை நிறைக்கிற கனவு காணத்தெரியாதவர்கள், அப்பாவித்தனமான கனவு காண்பவர்கள் என்று இப்படி எல்லோரும் படிக்க ஏற்ற, உகந்த படைப்பே பாலோ கொய்லோவின் ” ரசவாதி”.
கதை இதுதான்,
சான்டியாகோ ஒரு இளைஞன். செம்மறியாடுகளை மேய்க்கின்ற ஒரு இளைஞன். ஆனால் அவன் பிறப்பில் இருந்து செம்மறியாடுகளை மேய்ப்பவன் அல்ல. இந்த உலகத்தில் உள்ள உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அது போல அவனுக்கும் ஒரு நோக்கம் இருந்தது. இந்த உலகம் முழுவதும் பயணம் செய்வதுதான் அவனது நோக்கம். ஆனால் நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்த அவனது பெற்றோர்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அது சான்டியாகோவை ஒரு கிறிஸ்தவ பாதிரியாராக்குவது. ஒரு எளிய விவசாய பின்னனியினை கொண்டிருந்த அவர்கள், அவர்களது மகனை பாதிரியாராக்குவதன் மூலம் குடும்பத்திற்கு கௌரவம் கிடைக்கும் என்று நினைத்தார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் நீருக்காகவும், உணவுக்காகவும் அந்த நிலத்தில் வருந்தி உழைத்தார்கள். அதனால் அவனது பதினாறாவது வயதுவரை அவனுக்கு வேறுவழியின்றி அந்த கிறிஸ்த்தவ பள்ளியில் படிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவன் கிறிஸ்த்தவ மதம் தொடர்பிலும், பல சமய கொள்கைகளையும், இறையியல், லத்தீன், ஸ்பானிய மொழி போன்றவற்றை கற்றிருந்தான். ஆனால் அவன் அவனது குழந்தை பருவத்தில் இருந்து அறிய விரும்பியது இவற்றையல்ல. கடவுளைப்பற்றியும், மனித பாவங்களை பற்றியும் அறிவதைவிட இந்த உலகத்தை அறிவது மிக முக்கியமானது என்று கருதினான். தான் வாழ்நாள் கனவு ஒரு மதப்பாதிரியாராவது அல்ல. மாறாக உலகம் முழுவதும் பயணித்து அங்குள்ள மனிதர்கள், அந்த தேசத்தின் கலாச்சாரம், பாரம்பரியம், நம்பிக்கை எல்லாவற்றையும் அறிந்துக்கொள்வது என்று கருதுகிறான். பற்றற்று இந்த உலகை நோக்கி பயணப்பட அவன் விரும்பினான். அதை ஒரு நாள் அவனுடைய ஏழை தந்தையிடம் கூறுவான்.
அதற்கு சான்டியாகோவின் தந்தை இப்படி கூறுவார்,
” மகனே உலகின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த மக்கள் இந்த கிராமத்தின் வழியாகப் பயணித்துள்ளனர். புதிய விஷயங்களை தேடி அவர்கள் இங்கு வருகின்றனர். ஆனால் அவர்கள் இங்கிருந்து புறப்பட்டு செல்லும்போது, அவர்கள் முதலில் இங்கு வந்தபோது எப்படியிருந்தார்களோ அதே போலவே திரும்பிச் செல்லுகின்றனர். அவர்கள் மலைமீது ஏறிச்சென்று கோட்டையை பார்க்கின்றனர். அப்போது, இக்கணத்தில் நம்வசம் இருப்பவற்றைவிடக் கடந்தகாலம் அதிக சிறப்பாக இருந்ததாக அவர்கள் நினைக்கின்றனர். பொன்னிறத் தலைமுடியைக் கொண்டவர்கள், கருப்புத்தோல் கொண்டவர்கள் என்று அவர்கள் பலவிதங்களில் இருக்கின்றனர். ஆனால் அவர்களும் இங்கு வாழ்கின்ற மக்களை போன்றவர்கள்தான். அவர்கள் நம்முடைய நிலங்களை பார்க்கும்போது என்றென்றும் இங்கேயே வாழ்ந்துவிட விரும்புவதாக கூறுகின்றனர்.
அதற்கு சான்டியாகோ தான் அவர்கள் நிலத்தையும், அவர்கள் எப்படி வாழ விரும்புகின்றனர் என்பதையும் பார்க்க விரும்புவதாக கூறுகிறான்.
அதற்கு அந்த ஏழை தந்தை உலகம் முழுவதும் பயணம் செய்வதற்கு அவர்களிடம் பணம் இருக்கிறது. உன்னிடம் இல்லை. இங்குள்ளவர்களில் இடையர்கள் மட்டுமே வேறு இடங்களுக்கு பயணிக்கின்றனர் என்று சொல்வார். அப்போதுதான் சான்டியாகோ இறையியல் போதிக்கிற மதக்கல்வியை துறந்து செம்மறியாடுகளை தான் மேய்த்து ஒரு ஊரில் இருந்து ஒரு ஊரை கடக்கப்போவதாக சொல்லுவான். ஆரம்பத்தில் மறுத்துவிடுகிற தந்தை
பின்னர் தனக்கும் தனது யௌவனத்தில் அப்படி பயணம் செய்வதன் மீது அதீத விருப்பம் இருந்ததை உணர்கிறார். பின்னர் வறுமையும், பசியும், இந்த நிலத்தோடு போராடும் வாழ்வை அவருக்கு அளித்திருந்தது. மகனையும் தன்னைபோலவே இந்த உலகில் வயிற்றுக்காக போராடும் வாழ்வில் இணைக்க அவர் விரும்பவில்லை. அவர் தனது வயலில் தான் வேலை செய்யும்போது கண்டெடுத்த புதையலை மகனிடம் கொடுத்து அதை விற்று செம்மறி ஆடுகளை வாங்கிக்கொள்ளுமாறு சொல்வார். அப்படித்தான் சான்டியாகோ ஆடு மேய்க்கும் இளைஞனாக மாறினான்.
அந்த செம்மறி ஆடுகள் அவனிடம் நன்றாக பழகியிருந்தன. ஒருநாள் அவன் நாள் முழுவதும் மேய்ச்சல் நிலங்களில் அவற்றை மேய்த்துவிட்டு கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் இருந்த பாழடைந்த தேவாலயத்தில் அந்த இரவை கழிப்பதற்கு அவன் நினைத்திருந்தான். அவனுக்கென்று உடைமையாக இருந்த ஒரு தடித்த போர்வையும், ஒரு புத்தகமும் இருந்தது. அதை தலைக்கு வைத்தப்படி மந்தைகளை சரிபார்த்துவிட்டு ஒரு சிறிது நேரத்தில் தூங்கிவிடுகிறான். அப்பொழுது அவன் ஒரு கனவு காண்பான். இது இன்று, நேற்று புதிதாக வருகிற கனவில்லை. முன்பு பலமுறை இந்த கனவு அவனுக்கு வந்திருக்கின்றது. ஆனாலும் எப்போதும் அந்த கனவு முற்றுப்பெற முடியாதப்படி திடீரென குழப்பத்துடன் அவனுக்கு நித்திரை கலைந்துவிடுகிறது. அதுவொரு குழப்பமும், சுவாரஸ்யமும் நிறைந்த கனவு. அதை பின்தொடர்ந்து போனால் அவனுக்கு புதையல் இருக்கிறது. புதையலை அடைய அவன் எகிப்துக்கு போகவேண்டும். இதுதான் கனவின் செய்தி. அவன் வாழ்ந்த அந்த எளிய கிராமத்தில் இருந்து எகிப்தை நோக்கி படிப்படியாக எப்படி பயணிக்கிறான்?, அந்த பணத்தில் அவன் யாரையெல்லாம் சந்திக்கிறான், புதையல் கிடைக்குமா, கிடைக்காத, புதையல் என்பது உண்மையில் பாலோ கொய்லோவின் வாழ்வில் எது? இவையெல்லாம்தான் கதை.
பாலோ கொய்லோ இப்படி குறிப்பிடுவார்,
“ரசவாதியில் அந்த இளைஞன் ஒரு அழகான மாயாஜாலமான இடத்தை கனவு கண்டபடி ஒரு பயணத்திற்குள் அடியெடுத்து வைக்கின்றான். தான் தேடிய பொக்கிஷம் அவ்வளவு நேரமும் தன்னுடன்தான் இருந்தது என்பதை அப்பயணத்தின் முடிவில் அவன் உணர்கிறான். நான் என்னுடைய பிறவி நோக்கத்தை பின்தொடர்ந்து கொண்டிருந்தேன். எழுதுவதற்கான என்னுடைய திறன்தான் என்னுடைய பொக்கிஷம்.
நான் ரசவாதியில் எழுதியுள்ளதுபோல, நீங்கள் ஒன்றை விரும்பும்போது, உங்களுக்கு உதவுவதற்காக இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் உங்களுக்கு சாதகமாக காய்களை நகர்த்துகிறது. “
பாலோ கொய்லோவின்” ரசவாதி ” வாசகரிடையே நிரப்புவது எல்லாம் இத்தகைய மனநிலையையே. உண்மையில் இந்த நூலை ஒரு சிறந்த ஆன்மீக புத்தகம் என்றுக்கூட சொல்லிவிடலாம். நிட்சயமாக வாசிப்பு பிரியர்கள் வாசிக்க வேண்டிய நூலே ரசவாதி என்றால் அது மிகையாகாது.
– நர்மி
ரசவாதி
வகை : நாவல் -மொழிபெயர்ப்பு
ஆசிரியர் : பாலோ கொய்லோ
தமிழில் : நாகலட்சுமி சண்முகம்
பதிப்பகம் : மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
பதிப்பு ஆண்டு : 2019
பக்கங்கள் : 250
விலை : ₹250
எழுதியவர்
- நர்மி என்ற பெயரில் எழுதி வரும் நர்மியா 1991 ஆம் வருடம் மதுரையில் பிறந்தவர். தற்போது கல்கத்தா ஜதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியலில் தனது இரண்டாவது முதுகலை பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார். கல்கத்தா நாட்கள் எனும் பயணக்கட்டுரைத் தொகுப்பு நூலும் , பனிப்பூ எனும் கவிதைத் தொகுப்பு நூலும் வெளியிட்டு இருக்கிறார்.
இதுவரை.
- கலை28 February 2023ஈரானின் நடுத்தர மக்களின் வாழ்வை பேசும் “சில்ரன் ஆஃப் ஹெவன்”
- கலை26 November 2022காதம்பரி – திரைப்பட விமர்சனம்
- நூல் விமர்சனம்20 July 2021பாலோ கொய்லோவின் “ரசவாதி “
சிறப்பான நூல் அறிமுக கட்டுரை. வாழ்த்துக்கள் நர்மி 💐