காலையில் இருந்து பணி செய்த களைப்பில் ஆதவன் தன் கரங்களை சுருக்கிக் கொண்டு, தன் வேலை முடிந்துவிட்டதை உலகிற்கு உணர்த்தும் அந்த இனிமையான மாலைப் பொழுதில் அருகிலுள்ள பள்ளியில் இருந்து தோழிகளுடன் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் ஸ்ரீதேவி. பஸ் ஸ்டேண்டுக்கு அருகே உள்ள அவர்களின் வீட்டின் எதிரே உள்ள கடையில் ஆள் நடமாட்டம் அதிகம் இருப்பதை பார்த்து கேட்டருகிலேயே நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அவளுடன் அவள் தோழிகளும் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தனர். கோவையிலிருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு சிறிய டவுன். தேவியின் அப்பா அதே ஊரில் ஒரு சிறிய துணிக்கடை வைத்திருந்தார். தேவி அதே ஊரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள். அவர்கள் வீட்டிற்கு எதிரே உள்ள அவர்கள் உறவினர் ஒருவரின் கடை கடந்த ஒரு வருட காலமாக பூட்டியே கிடக்கிறது. அந்த கடைக்குப் புதிதாக ஆள் வந்திருக்கிறார்கள் என்பதே பெரிய கேள்விக்குறியாய் இருந்தது அந்தப் பகுதி மக்களுக்கு. உழைப்பு, விடாமுயற்சி, முன்னேற்றம் என்று வாட்சப் ஸ்டேட்டஸ்களில் வசனங்களைத் தெறிக்க விடும் தமிழர்கள் தங்கள் வியாபாரம், தொழில் என்று வந்தவுடன் பழைய பஞ்சாங்கங்களான ஜோசியம், ஜாதகம்,ராசி என்று பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படித்தான் அந்த எதிர்வீட்டு கிரவுண்ட் ஃப்ளோரில் இருக்கும் கடையும் பல நாட்களாக யாரும் வராமலே இருக்கிறது. அங்கு வரும் கடைகள் அதிக காலம் நிலைப்பதில்லை, வருமானம் பெருகுவதில்லை, பெரும்பாலும் நஷ்டமே வருகிறது என்று ஆளாளுக்கு கதை கட்டி விட்டு உள்ளூர் வாசிகள் யாரும் அங்கு வாடகைக்கு கடை போடுவதில்லை.
‘இந்த கடைக்கு நிச்சயமா உள்ளூர்காரன் எவனும் வந்திருக்க மாட்டான்டி. யாரோ ஒரு இளிச்சவாயன் மாட்டிக்கிட்டான்’ என்று வம்பளந்தாள் அவளின் தோழி ரெஜினா.
‘ஆமாடி. எங்கப்பா கூட நிறைய பேர் கிட்ட சொன்னார். அக்கம் பக்கம் விசாரிச்சுட்டு ஒரு ஆளும் வரல. இப்போ எப்படி ஆள் கிடைச்சதுன்னு தெரியல’ என்று தேவிக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை.
‘அந்த ஏமாளி மூஞ்சிய ஒரு வாட்டி பாத்துட்டு போயிடலாம்’ என்று அனைவருமே ஒரு முடிவோடு தெருவை அடைத்து நின்று கொண்டிருந்தனர்.
நேரம் கூடக் கூட ஆட்களும் வந்த வண்ணமே இருந்தனர். அதில் நிறைய முஸ்லீம் பெண்களும் ஆண்களும் இருந்தனர். அப்போது தான் அவர்களுக்குப் புரிந்தது.
‘அதான பார்த்தேன். அடியே ரெஜினா யாரோ உங்க ஆளுக யாரோ தான் மாட்டிக்கிட்டாங்க போல’ என்று தன் முஸ்லீம் தோழியிடம் முணுமுணுத்தாள்.
‘அப்படித்தான் போல. நாங்க ஒண்ணும் உங்கள மாதிரி ஜாதகத்த தூக்கிட்டு அலையுறதில்லை. தெரியுமா?’ என்று ரெஜினா அவள் பங்கிற்கு காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள்.
நேரம் கூடக்கூட இருள் கவ்வத் தொடங்கியது. கூட்டமும் அதிக அளவில் கூடியது. இதற்கு மேல் இங்கே நிற்பது சரியில்லை என்று அனைவரும் அவரவர் வீட்டுக்கு கலைந்து செல்லத் துவங்கினர்.தேவியும் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு பண்ணிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். கீழ் போர்சனில் ‘ஸ்ரீதேவி டெஸ்க்டைல்ஸ்’ என்று அவர்களின் கடையும் மாடியில் வீடும் இருந்தது. மாடிப்படிகளில் வேகவேகமாக ஏறி வீட்டுக் கதைவைத் திறந்து ஹாலில் இருந்த சோபாவில் தொப்பென்று விழுந்தாள்.
‘ஷூவை கழட்டாம அப்படியே ஷோபா மேல உக்காராதேன்னு எத்தன தடவ சொல்றது’ டிவி சீரியல் பார்த்துக் கொண்டே இரவு உணவிற்கு காய் நறுக்கிக் கொண்டிருந்த அவள் அம்மா சரஸ்வதி ஒரு கடுகடுப்போடு முறைத்தாள்.
‘யாரும்மா சேகர் மாமா வீட்டுல கடை போடுறது? உனக்கு தெரியுமா?’ என்று கேட்டுக்கொண்டே டேபிள் மேல் இருந்த சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து கொரிக்க ஆரம்பித்தாள். ‘தெரியலடி. ஆனா நம்ம ஊர்க்காரங்க இல்லை. வெளியூர்ன்னு கேள்விப்பட்டேன். பல வருசமா கோயம்பத்தூர்ல தான் இருக்காங்களாம். டெய்லரிங்க் கடை போட்டிருக்காங்க’ என்று தகவல் கொடுத்தாள்.
‘ஓகோ… ‘ என்ற ஒற்றைச் சொல்லுடன் யூனிஃபார்ம் மாற்றி வர தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
சரஸ்வதிக்குத் தங்கள் வீட்டருகே ஒரு முஸ்லீம் கடை வருவது அவ்வளவாய் பிடிக்கவில்லை. இவர்களே அங்கே ஒரு டெய்லரிங் கடை வைக்கலாம் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால் தேவியின் அப்பா தான் ஜோசியம், ராசி என்று அந்த எண்ணத்தை கிடப்பில் போட்டு விட்டார். பல யோசனைகளுடன் நறுக்கிய காயை எடுத்துக்கொண்டு மகளுக்கு டீ போட்டுத் தர சமயலறைக்குள் புகுந்தாள்.
கையில் வைத்திருந்த டீ கோப்பையுடன் மாடிக்கு வந்த தேவி அங்கிருந்தே மீண்டும் கடையை நோட்டம் விட ஆரம்பித்தாள். புதிதாக யாரேனும் அருகில் வருகிறர்கள் என்றால் இயல்பாய் எழும் ஆர்வத்தை அடக்க முடியாமல் அவள் கண்கள் அலைமோதிக்கொண்டே இருந்தது. கூட்டத்தில் ஒருவன் நீல நிற குர்தா போன்ற ஆடையுடன் அங்கும் இங்கும் பம்பரமாய் சுற்றுவதை பார்த்துக்கொண்டே இருந்தாள். ‘ஒரு வேளை இவன் தான் ஓனராக இருப்பானோ. ச்சேச்சே இருக்காது ஓனரோட பையனா இருப்பான். சின்ன பையன் போலத்தானே இருக்கிறான்’ என்று தனக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். ‘அப்பா வந்துட்டார் கீழ வா’ என்ற அம்மாவின் குரல் கேட்கவே மீண்டும் வீட்டுக்குள் புகுந்து கொண்டாள். சோபாவில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த அப்பா தணிகாசலத்தின் மடியில் சென்று உட்கார்ந்து கொண்டாள். ‘ஏழு கழுதை வயசாச்சு இன்னும் மடியில வெச்சு கொஞ்சிட்டே இருங்க’ என்று அம்மா முணுமுணுப்பதை அவர்கள் இருவரும் கண்டுகொள்ளவே இல்லை.
இன்றோடு கடை திறந்து ஒரு வாரம் ஆகிறது. கடை பக்கம் பெரிதாக கூட்டம் இல்லை. பெரும்பாலும் கடை பூட்டியே கிடந்தது. தோழிகளும் பள்ளி முடிந்து வரும்போதும் போகும்போதும் கடையை அடிக்கடி நோட்டம் விட்டுக்கொண்டே இருந்தனர். அந்த நீல நிற குர்தா போட்டிருந்த பையன் மட்டும் தான் அதிகமாய் தெரிந்தான். அன்றும் வழக்கம் போல் பள்ளியை விட்டு வந்த ஸ்ரீதேவி வீட்டின் ஹாலில் யாரோ குரல் கேட்கவே தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தாள். சோபாவில் அப்பாவின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது அன்று மாடியிலிருந்து பார்த்த அதே ஆண். நல்ல ஆறடி உயரம் இருக்கலாம். மாநிறம். தெளிவான கணீரென்ற குரலில் அப்பாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். திடீரென அவளைக் கண்டதும் தயக்கமேதும் இல்லாமல் அவளைப் பார்த்து இயல்பாய் சிரித்த பெரிய கண்கள். மாடியிலிருந்து பார்க்கும் போது சின்னப் பையனாக தெரிந்தது போல என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். அவருக்கு ஒரு சின்ன புன்னகையை உதிர்த்து விட்டு அவளது அறைக்குள் சென்று விட்டாள். டீ குடித்து விட்டு அவர் சென்றதும் அடுப்படிக்கு சென்று அவர் வருகைக்கான காரணத்தை அம்மாவிடம் விசாரித்தாள்.
‘புதுசா கடை போட்டிருக்குறதால நிறைய ஆட்களுக்கு தெரியலையாம். அதான் நம்ம கடையில் துணி வாங்குறவங்களுக்கு அவங்க கடை விசிட்டிங்க் கார்டு கொடுக்கச் சொல்லிருக்காங்க’
‘ஓ அப்படியாம்மா. அங்க கடை போட்டிருக்காங்களே அதான் ராசி இல்லாத கடைன்னு யாரும் வர மாட்டாங்கல்ல. இப்போ இவங்க மட்டும் எப்படி வந்தாங்க?’
‘முஸ்லீம்காரங்க அதிகமா அதெல்லாம் பாக்க மாட்டாங்க.’
‘அப்போ கல்யாணம் பண்றதுக்குக் கூட அவங்க ஜாதகம், ஜோசியமெல்லாம் பாக்க மாட்டாங்களா?’
‘பாக்க மாட்டாங்கன்னு தான் நினைக்குறேன்’
‘ஏம்மா அவங்க மதத்துல ஜாதி எல்லாம் கிடையாதாம்மா’
இந்த கேள்வியில் சிறிது கடுப்பான அவள் அம்மா கொஞ்சம் முறைக்கவே மெதுவாக அவ்விடம் விட்டு அகன்றாள் தேவி. ஹாலுக்கு வந்து விசிட்டிங் கார்டு பாக்ஸை எடுத்துப் பார்த்தாள். “அஹ்மத் டெய்லரிங்க்” வாசகம் டிஜிட்டல் எழுத்தில் மின்னியது. அதை தடவிப் பார்த்தாள். அதிலிருந்து அத்தர் மணம் வீசுவது போல் தோன்றவே மெல்ல தன் மூக்கருகில் வைத்து முகர்ந்தாள். அத்தர் மணம் அவள் மனதிற்குள் சுகந்தமாய் வீசியது.
‘அஹ்மத் டெய்லரிங்’ கடை திறந்து ஆறு மாதத்திற்கும் மேல் ஆகியிருந்தது. ஆரம்பத்தில் சரியாக போகவில்லை என்றாலும் பின்னர் கொஞ்சம் தொழில் முன்னேற்றம் கண்டது. தேவியின் அப்பாவே கூட ‘பரவாயில்லை பையன் கொஞ்சம் பிக்கப் பண்ணிக்கிட்டான்’ என்று பலமுறை புகழ்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் விளையாட்டாக கடையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவள் இந்த ஆறு மாதத்தில் வெகுவாக மாறிவிட்டிருந்தாள். ஒரு நாள் கடை திறக்கவில்லை என்றாலும் மனது தவித்து விடுகிறது. தோழிகள் கூட சில வேளைகளில் அவள் அஹ்மத் கடையைப் பற்றி அதிகம் பேசுவதை கவனித்து கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அனைவரிடமும் ‘அப்படியெல்லாம் இல்லடி’ என்று பாசாங்கு செய்தாலும் அவள் மனதிற்கு அவளால் பொய்க்காரணம் சொல்ல முடியவில்லை.
அடுத்த மாதம் தன் பெண்ணுக்குத் திருமணம் என்று ஊரிலிருந்து பெரியப்பா வந்து பத்திரிக்கை வைத்துவிட்டு போனார். குடும்பத்தில் முதல் திருமணம். அப்பாவிற்கு தலை கால் புரியவில்லை. ‘பெரியவங்க எல்லாரும் சேர்ந்து நடத்தி வைக்கும் திருமணம் இது. இவங்க குடும்பத்தை பாருங்கன்னு ஊரே சொல்லணும். அப்படி சிறப்பா செய்யணும்’ என்று தகப்பன் குதியாட்டம் போட்டது ஏனோ முதல் முறையாக தேவிக்கு எரிச்சலை ஊட்டியது.
திருமணங்கள் ஏன் இப்படி நடக்கிறது என்று தேவி அடிக்கடி யோசித்திருக்கிறாள். தன் மனதிற்குப் பிடித்தவனை எப்படி பெற்றோர்களால் கொண்டு வந்து தர முடியும். அதிலும் குறிப்பாக இந்த ஜாதி, இந்த குலம் என்று அனைத்து வரையறைக்குள்ளும் வரும் ஒருவன் அவன் குடும்பத்திற்கு ஏற்ற அதே குணங்கள் கொண்ட ஒரு பெண்ணை கல்யாணச் சந்தையில் பிடிப்பது எப்படி மனம் ஒத்த தேர்வாக இருக்கும். அதிலும் இந்த ஜாதகம் என்ற விசயத்தில் துளியும் மனம் ஒப்புவதேயில்லை அவளுக்கு. இந்த பெண்களும் கூட எப்படி இதை எல்லாம் சகித்துக் கொண்டு திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்கள். சரி இவ்வளவு சிந்திக்கிறோமே சிறிது காலம் கழித்து நமக்கும் இதே போல் ஒரு திருமண பந்ததைத் தானே தனது தந்தையும் நமக்கு செய்து வைப்பார் என்ற எண்ணம் வந்ததும் அவள் மனதில் இனம் புரியாத ஒரு கலக்கம் வந்தது. ‘இது போன்ற ஒரு பந்தத்தை நான் ஒரு பொழுதும் ஏற்க மாட்டேன்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.
உறவினர்கள் படையோடு காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள பெரிய துணிக்கடையில் திருமணத்திற்குத் தேவையான பட்டுப்புடவைகள் வாங்கி விட்டு அனைவரும் ஒரு ஹோட்டலில் உணவு அருந்திக் கொண்டிருந்தனர்.
‘ஜாக்கெட்டு எங்கடி தைக்குறது. இங்க டவுன்ல கொடுத்தா கொள்ள காசு கேப்பாங்க’ என்று அம்மா கேட்க
‘எனக்கு பெருசா எம்ப்ராய்டரிங்க் எல்லாம் போடணும்’ என்று தன் பங்கிற்கு அவள் சித்தி பெண்ணும் சொல்ல சற்றும் யோசிக்காதவளாய்
‘அஹ்மத் கடையில கொடுக்கலாம்மா’ என்ற தேவியின் உற்சாகமான முகத்தை முதன் முதலாக சந்தேகத்தோடு பார்க்கத் தோன்றியது சரஸ்வதிக்கு.
அவளின் பார்வையை கவனித்த தேவி சமாளித்துவிட்டு
‘அவர்கிட்ட என் ஃப்ரண்டு ரெஜினா போன மாசம் ஒரு ஜாக்கெட் தெச்சாம்மா. நல்லா இருந்துச்சு. அதான் சொன்னேன். ‘ என்று ஒரு அசட்டுச் சிரிப்புடன் சொன்னாள்.
‘சரிக்கா. அப்போ என்னோடதும் அங்கேயே கொடுத்திருங்க என்று தங்கையும் சொல்ல
‘அட இதுல என்ன யோசிக்குற சரசு. நமக்குத் தெரிஞ்ச தம்பி தான. இந்த தேதியில தைச்சு குடுங்க்கன்னு கேட்டா தைச்சு குடுத்துட போறாரு’ என்று பச்சைக் கொடி காட்ட அஹ்மத் கடையிலேயே அனைத்துத் துணிகளும் தைப்பது என்று முடிவானது.
அடுத்த நாள் கலையில் நேரமே எழுந்து எப்போதும் இல்லாத அளவிற்கு தன்னை அலங்காரம் செய்துகொண்டு மனதில் பெரும் உற்சாகத்தோடு கடையில் வாங்கிய துணிகளை எடுத்துக்கொண்டு அஹ்மத் கடைக்கு ஓடினாள். கடை வாசலில் இருந்து குரல் கொடுத்து விட்டு உள்ளே சென்ற தேவிக்கு ஏனோ இதயம் படக் படக் என்று அடித்துக் கொண்டது. அவளைப் பார்த்ததும் வரவேற்று
‘என்ன வேணும்’ என்று கேட்டான்.
‘சிஸ்ட்டர் மேரேஜ்க்கு ஜாக்கெட் தைக்கணும். இதுல புடவை இருக்கு’ என்று கையில் இருந்த பையை அவனிடம் நீட்டினாள்.
‘ஜாக்கெட் அளவு இருக்குங்களா ‘ அருகில் நின்று பேசிக்கொண்டிருந்த அஹ்மதின் குரல் தேனாய் இனித்தது தேவிக்கு.
‘இல்லங்க. ரொம்ப நாள் முன்னாடி தைச்சது. இப்போ பத்தறதில்லை’
‘சரி என் அம்மா இப்போ வருவாங்க. வந்ததும் அளவு எடுக்க சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு அவளிடம் இருந்து புது புடவையை வாங்கிக் கொண்டான். அவன் அம்மா வரும் வரை கடையில் உட்கார்ந்திருந்த அவள் முதல் முறையாக அவனை அருகில் ரசித்துக் கொண்டிருந்தாள். அவன் வேலையில் காட்டும் ஒழுங்கு, கடையை வைத்திருக்கும் விதம், உதவிக்கு வரும் பையனிடம் காட்டும் அக்கறை என சகலத்தையும் அந்த அரை மணி நேரத்தில் மனது உள்வாங்கி ரசிக்க ஆரம்பித்து விட்டது. இதற்கு மேல் இங்கே இருக்க முடியாது என்ற எண்ணம் வந்தவளாய்
‘அம்மா வந்ததும் கூப்பிடுங்க’ என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் ஓடி வந்துவிட்டாள். அன்றிரவு அவள் கனவில் அவன் வந்தான். இத்தனை நாள் வராமல் இருந்தது தானே ஆச்சரியம்.
பெரியப்பா பெண்ணின் திருமணம் முடிந்து சரியாக மூன்று மாதம் ஆகியிருந்தது.
‘ஏங்க நம்ம பொண்ணு அடிக்கடி அஹ்மத் கடைக்கு போற மாதிரி தெரியுது. என்னன்னு தேவிட்ட கேளுங்க’ என்று பெரிய பீடிகை போட்டாள் சரசு.
‘நானும் தான் பார்த்திருக்கேன். தேவி மட்டும் இல்ல. அவ ஃப்ரண்ட்ஸ் எல்லாம் கூட அடிக்கடி அங்க பார்க்குறேனே. இந்த காலத்து பொண்ணுங்க பசங்க கூட சகஜமா பேசுறத பழகுறதயெல்லாம் சும்மா போட்டு தோண்டித் துருவக்கூடாது. ‘
‘அதுக்கில்லை அவ படிப்பில கூட கவனம் வைக்குற மாதிரி தெரியல. அதான் சொன்னேன்’
‘நர்ஸிங்க் தான் படிப்பேன்னு பிடிவாதமா இருக்கா. அவளுக்கு அதுக்கு என்ன பண்ணணும்ன்னு தெரியுலம்ல. நீ சும்மா கவலைப்படாத’ என்றுவிட்டு அப்போதைக்கு பேச்சை முடித்தார்.
பள்ளிக்கூடம் முடிந்து வரும்போது தோழிகள் வேண்டுமென்றே அஹ்மத் கடையை நெருங்கும்போது தேவி பெயரைச் சொல்லி அழைப்பதும், அவளும் வெட்கப் புன்னகையுடன் அஹ்மதைப் பார்ப்பதும் ஒரு வாடிக்கையாகவே மாறி விட்டது. ஆரம்பத்தில் இதை கவனிக்காத அஹ்மத், கடைக்கு வேலைக்கு வரும் பையன் கவனித்து சொன்னதில் இருந்து அவனுக்கும் தேவியின் செயல் மனதில் சிறு உருத்தலைத் தந்தது. அவன் நினைத்தது போலவே அவர்கள் அனைவரும் அடிக்கடி கடைக்கு வந்து வம்பளப்பதும் தேவி மட்டும் சிறிது வெட்கப் புன்னகையோடே இருப்பதும் அஹ்மதிற்க்கு சரியாகவே படவில்லை. ஆனால் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் தானே முன்வந்து அவளுக்கு அறிவுறை சொன்னால் அது தவறாகப் போய்விடுமே என்று கவலைப்பட்டான். அவள் மனதில் எந்த சலனத்தையும் உருவாக்கக் கூடாது என்று கவனமாகவே பேசி வந்தான். ஆனாலும் அவன் நினைத்தது போலவே ஒரு நாள் மாலை அவன் கடைக்கு தேவி தனியாக வந்தாள்.
‘பிஸியா இருக்கீங்களா’ என்று ஆரம்பிக்கும் போதே அவள் நினைப்பது நடக்காது என்பதை உறுதியாக சொல்லிவிட வேண்டுமென்று அஹ்மத் நினைத்தான். எப்படி ஆரம்பிக்கலாம் ‘படிக்கும் காலத்தில் இதெல்லாம் தவறு’ன்னு என்று ஏதேதோ எண்ணிக் கொண்டிருக்கையில்….
‘ஹலோ’ என்ற அவளின் குரலுக்கு நிகழ்விற்கு வந்தான்.
‘கொஞ்சம் வேலை இருக்கு. பரவாயில்லை என்ன தேவி?’
‘உங்க கிட்ட தனியா பேசணும். கடையில் யாரும் இல்லேன்னு மாடியில் இருந்து பார்த்துட்டு தான் வந்தேன்’
இவர்களின் உரையாடல் நடந்து கொண்டிருந்த அதே நேரம் கடை வேலையாக வெளியே போய் விட்டு அப்போது தான் வீடு திரும்பிய தணிகாசலம் வீட்டில் தேவி இல்லாததைக் கண்டு
‘தேவி எங்கம்மா’ என்று சரசுவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
‘அவ ஃப்ரண்டு வீட்டுக்கு எதோ நோட்ஸ் வாங்க போயிருக்காங்க’
‘எப்போ போனா?மணி எட்டாகப் போகுது. இன்னும் வரலயா?’
‘ஆறு மணிக்கு போனா. இருங்க நான் போன் பண்ணி பாக்குறேன்’ என்று போனைக் கையில் எடுத்தாள்.
‘இல்ல வேணாம்’
என்று அவளைத் தடுத்தவர் மாடியில் சற்று நேரம் காற்று வாங்கலாம் என்று வெளியே வந்தார். எதிரே அஹ்மத் கடையில் பாதி மூடியிருந்த ஷட்டர் ஏனோ வித்தியாசமாய்ப் பட்டது. எப்பொழுதுமே அவன் கடை இப்படி பாதி மூடியிருந்ததில்லை. வெள்ளிக்கிழமை கடைக்கு லீவு விடுவதால் ஞயிறு எப்பொழுதுமே இரவு பத்து மணி வரை கடை திறந்திருக்கும். பளீரென்ற லைட்டோடு மின்னிக் கொண்டிருக்கும். இப்போது விளக்கு கூட மங்கலாகவே தெரிகிறது. மனதில் ஏதோ இனம் புரியாத சலனம் வந்து விழ யோசனையில் இருந்தவருக்கு தேவி பாதி மூடிய ஷட்டர் வழியாக யாரும் பார்த்து விடக் கூடாது என்று பதுங்கிப் பதுங்கி வருவதை பார்த்தபோது உலகமே இருண்டு கண் முன்னே வந்தது.
அஹ்மத் கடையில் இருந்து வந்ததைப் பற்றி தணிகாசலம் தன் மகளிடம் ஏதும் கேட்கவில்லை. அஹ்மத்தும் தேவியின் மனதில் ஏற்பட்ட பருவ வயது காதல் தவறு என்று அவளுக்கு புத்தி சொல்லி அனுப்பிவிட்டான். தன்னால் அவளை காதலிக்க முடியாது என்று மறுத்துவிட்டது பெரும் ஏமாற்றமாகவே முடிந்தது தேவிக்கு. ஆனாலும் எல்லா பெண்ணுக்கும் பருவ வயதில் முதன் முதலில் ஏற்படும் காதல் அவ்வளவு எளிதாய் அவர்களிடம் இருந்து விலகுவதில்லை. பள்ளிப்படிப்பு முடித்து அவள் நினைத்தபடியே நர்ஸிங்க் படிப்பிலும் சேர்ந்தாயிற்று. ஆனால் மனதில் எழுந்த முதல் காதல் மட்டும் அதன் போக்கை மாற்றிக் கொள்ளவே இல்லை.
காத்திருத்தல் என்பது மனிதனுக்குப் பிடிக்காத ஒன்று. மனிதன் எங்கும், எப்போதும், எதற்காகவும் காத்திருக்க விரும்புவதில்லை. ஆனால் காதல் மட்டும் விதிவிலக்கு. அங்கு மட்டும் காத்திருத்தல் வெற்றி பெறுகின்றது. தாய் தன் குழந்தையை பத்து மாதத்தில் ஈன்றெடுக்கிறாள். அவளின் காத்திருப்பு பத்து மாதங்களில் அவளை பலனடையச் செய்கிறது. பரீட்சை எழுதும் மாணவனும், போருக்குச் செல்லும் வீரனும், பயிர் விளைவித்த உழவனும் தங்களின் உழைப்பின் பலனுக்கு சிறிது காலமே காத்திருக்கின்றனர். ஆனால் ஆணும் பெண்ணும் தங்கள் காதல் கனவுகள் நிறைவேற கோடிக்கணக்கான மணித்துளிகள் காத்திருக்கின்றனர். அதன் வலியும் சுகமும் காதலிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது தேவிக்கு ஒரு ஆக்ஸிடெண்ட் ஆனது. ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்குத் திரும்பிய அவளைப் பார்க்க அஹ்மத் வந்திருந்தான். அஹ்மதைப் பார்த்த அந்த நொடி தேக்கி வைத்திருந்த காதல் அனைத்தும் தன் கண்களில் தெரிய தன்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த நொடி அஹ்மதும் அவள் மேல் காதல் கொண்டான். விளைவுகள் அனைத்தும் பாதகமாகவே விழும் என்ற போதும் நிமிர்ந்து எழ வேண்டும் என்பது தானே பொல்லாத காதலின் வழக்கம். இரண்டு வருடங்கள் ஊரில் யாருக்கும் தெரியாமல் அவர்களின் காதல் இனிதாய் நடந்து கொண்டிருந்தது. நர்ஸிங்க் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக சில இடங்களில் அப்ளிக்கேஷன் போட்டு விட்டு காத்திருந்தாள்.
‘வேலை கிடைச்சதும் என்ன பண்ணப்போற தேவி?’
‘வேலைக்குப் போகப் போறேன்’ நக்கலான அவளின் பதிலில் இம்முறை அஹ்மத் சிரிக்கவில்லை.
‘என்னப்பா? ஏன் முகம் கடுகடுன்னு இருக்கு?’
‘இல்ல. நம் காதல் அடுத்த கட்டத்துக்கு வந்திருச்சோன்னு தோணுது?’
‘ஏன் அப்படி சொல்ற?’
‘உனக்கும் எனக்கும் நடுவுல பல வேறுபாடு இருக்கு. கூடவே உன்னைவிட நான் அஞ்சு வயசு பெரியவன். எல்லாம் தெரிஞ்சும் நிஜமாவே நீ என்ன லவ் பண்றயா?’
‘இதே கேள்விய நீ பத்தாயிரத்து முன்னூறு தடவ கேட்டிருக்க. என் பதில் எப்பவுமே ஒண்ணு தான்’
‘எங்க வீட்டுல எனக்கு மேரேஜ் பண்ணணும்ன்னு பேச்சு அடிபடுது’.
‘நாம நினைச்ச மாதிரி ரெண்டு பேர் வீட்டுலயும் பேசலாம்’
‘நம்ம கல்யாணத்துக்கு உங்க வீட்டுல கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்கல்ல. என்ன பண்ணலாம்?’
‘ஆரம்பத்துல ஒத்துக்க மாட்டாங்க. ஆனா என் அப்பா என் பேச்சை கேப்பாரு. அவர் மட்டும் தான் என் ஒரே ஒரு நம்பிக்கை.’
‘அவரும் ஒத்துக்கலைன்னா.’
‘என் பிடிவாதத்தைப் பத்தி அவருக்குத் தெரியும். இறங்கி வருவார். எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ கவலைப் படாதே’
சிட்டியில் இருக்கும் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்த ஆறாவது மாதம் தான் அஹ்மதை காதலிப்பதை வீட்டில் சொல்லும் ஒரு வேளை வந்ததே விட்டது தேவிக்கு. சொன்ன மறுகணம் கன்னம் வீங்கி கண்கள் சிவந்து மூலையில் ஒடுங்கிப் போய் இருப்பதை பார்க்க சகிக்காமல் சரஸ்வதி மகளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள்
‘உனக்கு ஏண்டி இந்த காதல் கருமமெல்லாம். அதுவும் வேற மதத்துப் பையன போய் காதலிக்குறேன்னு சொல்றியே. நானும் உன் அப்பாவும் உசிரோடயே இருக்க மாட்டோம்’
‘விடு சரசு. அவளுக்கு நான் அதிகமா செல்லம் கொடுத்தது தப்பாயிருச்சு. கை நீட்டாத பொண்ணு மேல இப்போ அடிச்சு கொல்ற அளவுக்கு கோவம் வர வெச்சுட்டா’
‘அந்த பையன் உன்ன கல்யாணமெல்லாம் பண்ண மாட்டான். வயித்துல ஒரு கொழந்தைய கொடுத்துட்டு விட்டுட்டு ஓடிப் போயிருவான்’ இது அம்மா.
‘அம்மா ரெண்டு வருசமா பேசிக்கிட்டு இருக்கேன். எனக்கு புடிச்சிருக்கு. அவருக்கும் என்ன புடிச்சிருக்கு. என்னை நல்லா பாத்துப்பார்னு தோணுதுமா. ப்ளீஸ்மா என்னை கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்கோங்க’
‘உன்ன உன் விருப்பத்துக்கு இருக்க விட்டது, உன்னோட கல்யாணம் என் இஷ்டப்படி நடக்கணும்ன்னு தான். நீ ஆசைப்பட்ட எல்லாத்தையுமே வாங்கித் தந்தாச்சு. நான் உங்கிட்ட கேக்குறது இது ஒண்ணு தான். கல்யாணம் என் விருப்பப்படி நம்ம ஜாதியில, ஜாதகம் ஒத்து வர்ற பையன் தான். அப்படிப்பட்டவனத்தான் எனக்கு மருமகனா கொண்டுவருவேன். இத நீ செஞ்சே ஆகணும்’ என்று ஆத்திரம் மேலோங்க கத்தினார் தணிகாசலம்.
‘அப்பா. நீங்க மட்டும் தான் என் ஒரே நம்பிக்கை. அவர் ரொம்ப நல்லவர்ப்பா. கூப்பிட்டு பேசுங்க. உங்களுக்கு நல்லா பழக்கம் ஆனவங்க தான. பேசினா எல்லாமே சரி ஆகிறும்பா. ப்ளீஸ்ப்பா. எனக்காக ஒரே தடவை’
‘அதெல்லாம் ஒத்து வராது. இப்போவே நீ அவன் கூட பேச மாட்டேன் பழக மாட்டேன்ன்னு சொல்லு. இல்லேன்னா இப்போவே எலி மருந்த குடிச்சிருவேன்’ என்று அம்மா சாமியாடினாள்.
‘குடிச்சுக்கோ போ!’ என்று அழுது அழுது வற்றிப் போயிருந்த தொண்டையோடு கத்திவிட்டு தேவி அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
குடும்பத்தில் அந்த நிகழ்விற்க்குப் பிறகு யாரும் யாருடனும் அதிகம் பேசிக்கொள்வதில்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு அருகிலிருந்த ஒரு ஆஸ்பத்திரிக்கு போகவேண்டும் ஸ்கூட்டியில் வந்து விடுமாறு அம்மா அவளை அழைத்துக் கொண்டு போனாள்.
‘இப்போ எதுக்குமா ஹாஸ்பிட்டல் வந்திருக்கோம்’
‘ஒருத்தர பாக்கணும். பேசாம வா’
‘கைனகாலஜிஸ்ட் அப்பாயின்ட்மெண்ட் வாங்கினது நீங்க தான’ என்ற ரிசப்சனிஷ்ட் குரலுக்கு
‘ஆமாம்’ என்று எழுந்தாள் சரஸ்வதி.
‘ரூம் நம்பர் 34 க்கு போங்க’ என்று வரவேற்பறையில் உள்ள ஒரு பெண் சொன்னாள்.
மாடி ஏறி ரூம் நம்பர் 34 க்கு உள்ளே சென்றனர்.
‘வாங்கம்மா. உக்காருங்க’ என்று டாக்டர் அமர வைத்தார்.
‘என்ன பிரச்சனைம்மா’
‘அது வந்து’ என்று அம்மா மென்று முழுங்கினாள்
ஒன்றும் புரியாமல் தேவி முழித்துக் கொண்டிருந்தாள்.
‘டாக்டர் என் பொண்ணு நர்சிங் படிச்சிருக்கா. பக்கத்துல ஒரு ஆஸ்பத்திரில தான் வேலை பாக்குறா’ என்று தயங்கினாள்.
‘ஓ வாழ்த்துகள்ம்மா. இப்போ யாருக்கு என்ன பிரச்சனைம்மா. என்னை எதுக்காக பார்க்க வந்திருக்கீங்க ‘
‘இல்ல மேடம் என் பொண்ணு ஒரு பையன லவ் பண்றா. ரெண்டு வருசமா லவ் பண்றேன்னு சொல்றா. அவங்க அப்பாவுக்கு இந்த லவ்வெல்லாம் புடிக்காது. உடனே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிடனும்ன்னு சொல்றார். இவ வேற ஆஸ்பத்திரியில வேலை பாக்குறா அதான் கர்ப்பம் ஆகி அபார்ஷன்னு ஏதாச்சும் பண்ணி தொலைச்சிருக்காளான்னு தெரியணும். அவ கற்போட தான் இருக்காளான்னு எனக்கு தெரியணும். கர்ப்பம் அப்படி இப்படின்னு ஏதாச்சும் பிரச்சனைன்னா எங்க குடும்ப மானமே போயிரும். நீங்க தான் பெரிய மனசு பண்ணி செக் பண்ணி சொல்லணும் மேடம். உங்க கால்ல வேணாலும் விழறேன்’ என்று அவர் காலில் விழப் போனார்.
இப்போதே இந்த பூமி இரண்டாக பிளந்து உள்ளே செத்து விழுந்துவிட மாட்டோமா என்றிருந்தது தேவிக்கு. தன் உடல் பெரிய அணுச்சிதைவுற்று தூசியாக மாறிப்போவதைப்போல உணர்ந்தாள். உலகிலுள்ள மலம் அனைத்தும் தன் மேல் வீசப்பட்டதைப் போல் அருவருப்பு அவளைச் சூழ்ந்து கொண்டது. தன்னை மீறி எழுந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு மூச்சு மட்டுமே விடும் ஒரு ஜடப் பொருளாய் சேரிலிருந்து எழ முயற்ச்சித்தாள்.
‘என்னம்மா இப்படியெல்லாம் பேசுறீங்க. பொண்ணு காதலிச்சா புத்திமதி சொல்லுங்க. உங்க நிலைமையை பொறுமையா எடுத்து சொல்லுங்க. அத விட்டுட்டு இப்படி அறிவில்லாம நடந்துக்காதீங்க. மொதல்ல இங்க இருந்து கிளம்புங்க. சிஸ்ட்டர் இவங்களை வெளிய தொரத்துங்க’ என்று கடுகடுத்த டாக்டர் அவர்களை வெளியே அனுப்பி கதவை சாத்திவிட்டார்.
‘உன்னை அம்மான்னு கூப்பிடவே கேவலமா இருக்கு’
‘உனக்கென்ன நீ தான் எங்க மானத்த வாங்குறதுன்னு முடிவு பண்ணிட்டல்ல. நாங்க எல்லாத்துக்கும் தயாரா தான் இருக்கணும்’
‘நீ இப்படி பண்றது அப்பாவுக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா?’
‘அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்ததே உங்க அப்பாதான்’
இந்த வார்த்தை சொன்ன பிறகு அவள் அம்மா ஏதேதோ பேசினாள். ஆனால் தேவியின் காதில் ஒன்றும் விழவில்லை. வீடு வரும் வரை அவள் ஏதும் பேசவில்லை. வீட்டில் ஹாலில் நடுநாயகமாக உட்கார்ந்து இருந்த அப்பாவை ஒரு புழுவைப்போல் பார்த்துவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் அவள் ரூமிற்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள். ஒரு வாரம் அப்பா , அம்மா இருவரிடமும் பேசவில்லை. அன்றிலிருந்து ஏழாம் நாள் தேவி அஹ்மத்துடன் ஊரை விட்டே ஓடிப்போனாள்.
மூன்று வருடங்கள் கழிந்தது.
சென்னைக்கு தனது துணிக்கடை விசயமாக தணிகாசலம் அவர் நண்பருடன் சென்றிருந்தார். அவரின் அலை பேசி அடிக்கவே
‘சொல்லு சரசு’
‘மறக்காம பட்டுப்புடவை வாங்கி வாங்க. இல்லேன்னா உங்க அக்கா என்னை சும்மா விடமாட்டா. தேவி போனப்புறம் எப்போ பார்த்தாலும் என்னை அழ வைக்குறதே அவங்களுக்கு வேலையாப் போயிருச்சு’
‘சரி வாங்கிட்டு வரேன்’
என்றவர் அவர் நண்பரோடு சேர்ந்து பக்கத்தில் உள்ள பெரிய துணிக்கடைக்கு சென்றனர். அவர்கள் விரும்பியபடியே சேலை வாங்கிவிட்டு பில் செக்சனுக்கு சென்ற போது
‘சார் கொஞ்சம் வெயிட் பன்ணுங்க. ஓனர் வருவாங்க. அவங்க கிட்ட பணம் கொடுத்து சேலை வாங்கிக்கங்க’ என்று சொல்லிவிட்டு சேல்ஸ்கேர்ல் வேறு ஒரு கஸ்ட்டமரைப் பார்க்கச் சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்தது அவர் வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நினைத்த மகள் சாயிராபானு என்கிற ஸ்ரீதேவி.
மகளைப் பார்த்ததும் மூன்று வருடமாய் தேக்கி வைத்த ஆத்திரமெல்லாம் அப்படியே அடங்கி பொங்கி வந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தரையில் விழுந்து கதறி அழ ஆரம்பித்தார். அடக்க முடியாத அழுகையை சிறிது நேரம் சிந்திய சாயிராவும் மெதுவாக அப்பாவின் பக்கத்தில் வந்து அவரைத் தேற்றி கடைக்குள் அழைத்துச் சென்றாள். போன் போட்டு அஹ்மதையும் கடைக்கு வரவழைத்தாள். மூன்று வருடம் அவர்கள் அனுபவித்ததை மாறி மாறி பேசிவிட்டு தணிகாசலம் கிளம்பத் தயாரானார்.
‘அடுத்த வாரம் கண்டிப்பா நீயும் அஹ்மத்தும் வீட்டுக்கு வரணும். அம்மாவும் நானும் நீ வருவேன்னு காத்துட்டு இருப்போம்’
சரியாக அடுத்த வாரமே சாயிரா அவள் கணவரோடு துள்ளித் திரிந்து விளையாடிய அவள் ஊருக்குச் சென்றாள். வீடே விழாக்கோலமாக இருந்தது. அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா அவர்களின் குழந்தைகள் என்று ஒரே கும்மாளமாய் இருந்தது. சில நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு எல்லோரும் அமர்ந்து உணவு அருந்தினார்கள். இரவு வரும்வரை கதை பேசிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் உறங்கச் சென்றனர். தூக்கம் வராதவளாய் மொட்டை மாடிக்குச் சாயிரா சென்ற போது இருட்டில் மூலையில் ஒரு உருவம் அசைவற்றுக் கீழே கிடந்தது. இதயத்தில் எழுந்த படபடப்போடு அருகில் சென்றவள் அது தந்தைதான் என்று அறிந்து அருகில் சென்று அவர் முதுகைத் தொட்டாள். அவளின் ஸ்பரிசத்தால் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்த தணிகாசலம்
‘என்னம்மா தூங்காம மாடில என்ன பண்ற?’
‘இல்லப்பா. தூக்கமே வரல’
‘ஏன் தேவி? என்ன ஆச்சு? யாராச்சும் எதாவது சொன்னாங்களா’
‘அதெல்லாம் இல்லப்பா. நீங்க ஏன்பா தூங்காம இங்க வந்து படுத்திருக்கீங்க’
‘மனசு இப்போ தான் நிம்மதியா இருக்கு. ஒரு பெரிய பாரத்தில இருந்து விடுபட்ட மாதிரி இருக்கு. அதான் இங்க வந்து படுத்துட்டேன்’
‘என் மேல் கோவம் இல்லையாப்பா. உங்களுக்கு எவ்வளவு அவமானத்தை தேடிக் கொடுத்துட்டேன்’
‘உன்னைக் கண்டதும் வெட்டிப் போட்டுடணும்ன்னு கோவம் இருந்துச்சு. ஒரு வாரம் தேடிப் பார்த்துட்டு அதுக்கு அப்புறம் உன்னை தேடவே வேணாம்கற அளவுக்கு மனசு கல்லாகிருச்சு. ஊருக்குள்ள அவமானம் மட்டும் தான் மிச்சம் இருந்தது. சொந்தக்காரங்க யாரும் எதுலயுமே எங்களை சேர்க்காம ஒரு பித்துபிடிச்ச மனநிலையில் தான் நானும் அம்மாவும் இருந்தோம்’
‘அப்பா நானும் என்னோட பிடிவாதத்துல தான் அப்படி ஒரு முடிவ எடுத்தேன். அஹ்மதுக்கும் அதுல துளி கூட விருப்பம் இல்லை. ஆனா எனக்கு உங்களையோ அம்மாவையோ பார்க்கவே புடிக்கலைப்பா. என்னை மன்னிச்சிருங்க’
‘நானும் உன் அம்மாவும் பண்ண காரியத்துக்கு மன்னிப்பு நாங்க தான் கேக்கணும். நீ பண்ண முடிவு தான் சரின்னு கொஞ்ச நாள்லயே எனக்கு தோண ஆரம்பிச்சிருச்சு. உன் அம்மாவுக்கு கர்ப்பப்பை ஆப்ரேஷன் பண்ணப்போ கூட யாருமே தொணைக்கு வரல. நானும் அம்மாவுமே தனியா கஷ்டப்பட்டோம். குடும்பம், ஜாதின்னு யாருக்காக நான் பெத்த பொண்ணயே அவமானப்படுத்தினேனோ அவங்களே எனக்கு உதவிக்கு வரல. என்னையும் அம்மாவையும் ஒதுக்கி வைச்சதோட மட்டும் இல்லாம கேவலமா நடத்தின இந்த சமுதாயத்துக்காகவா என் ஒரே பொண்ணை விட்டுக் கொடுத்தேன்னு என் மேலயே எனக்கு கோவம் வந்துச்சு ’
‘அப்படி இல்லப்பா. அது வந்து…’
‘நீ ஒண்ணும் சொல்ல வேணாம். உன் மனசு எவ்வளவு வலிச்சிருக்கும்ன்னு என்னால இப்போ புரிஞ்சுக்க முடியுது. இந்த மானம் கெட்ட மனசு ஒரு தகப்பனா யோசிக்கவே இல்லடா கண்ணு. உன் வாழ்க்கையை இப்படி நரகமாக்கிட்டேன்னு நான் நிம்மதியிழந்து கிடக்குறேன்மா’ என்று சொல்லிவிட்டு தேம்பி அழ ஆரம்பித்தார்.
‘அப்பா ப்ளீஸ் அழாதீங்க.நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்பா. அவர் என்னை நல்லா பாத்துக்குறார். ஒரு பொண்ண இப்படி பெத்தவங்க சம்மதம் இல்லாம கூட்டிட்டு வந்திட்டோமேன்னு அவர் வருந்தாத நாளே இல்ல. நான் சொன்னேன்ற ஒரே காரணத்துக்காக என்னை கூட்டிட்டு சென்னை வந்து ஒரு வருசமா படாத பாடு பட்டோம். அப்புறமா அவங்க குடும்பத்துல எல்லாரும் எங்களை கண்டுபிடிச்சு சேர்த்துக்கிட்டாங்க. என்னோட விருப்பத்தினால தான் நான் என் பேர மாத்திக்கிட்டு முஸ்லீமா கன்வெர்ட் ஆனேன். அவங்க யாருமே என்னை மாறக் கூட சொல்லலை. நான் அப்போவே சொன்னேன்ல்ல அப்பா அவர் ரொம்ப நல்லவர்ன்னு. கடையை என் பேர்ல தான் வாங்கியிருக்கார். நர்ஸிங் வேலைக்கு போகணும்ன்னாக் கூட போக சொல்லியிருக்கார்’
‘எனக்கு அது போதும் தேவி. என் ஒரே பொண்ண இந்த ஊருக்காக நானே அசிங்கப்படுத்தியிருக்கக் கூடாதுன்னு தோணுது. இப்போ கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கு’ என்று விட்டு ஏதோ நினைவு வந்தவராய் இடுப்பு வேட்டிக்குள் வைத்திருந்த தேன் மிட்டாயை எடுத்து பெண்ணிடம் நீட்டினார்.
‘உனக்கு ரொம்ப பிடிக்கும்ன்னு மத்தியானமே வாங்கி வெச்சேன்’
ஆசையாய் அப்பாவின் கைகளில் இருந்து அத்தனையையும் பிடுங்கியவள்
‘வாங்கப்பா கீழ போகலாம்’
‘இல்லமா. எனக்கு இப்படியே வானத்தைப் பார்த்து தூங்கணும். நீ போ’ என்று அவள் கன்னத்தை தட்டிக் கொடுத்தார்.
மெதுவாக அப்பாவின் தலையில் கை வைத்து அழுத்திவிட்டு ஒற்றை முத்தத்தைக் கொடுத்து விட்டு மாடிப்படிகளில் கீழே இறங்கப்போனாள்.
‘எல்லாத்தையும் நீயே சாப்பிடாத. அஹ்மத்துக்கும் கொஞ்சம் கொடு’
‘சரிப்பா.’ என்ற அவள் வார்த்தை காற்றில் மெதுவாய் கரைந்தது.
அதிகாலை குளிப்பதற்காக பாத்ரூம் அருகில் சென்ற தணிகாசலம் எதிரே வந்த அஹ்மதைப் பார்த்து ‘பேர் சொல்லி கூப்பிட்டா நல்லா இருக்காது தம்பி. இனிமே உங்களை மாப்பிள்ளைன்னு கூப்பிடட்டுமா’ என்று கேட்டுவிட்டு அவர் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார். ஹாலில் இருந்து அதை கவனித்துக் கொண்டிருந்த சாயிரா சிறு புன்னகையுடன் ஜன்னலின் வழியே வெளியே பார்த்தாள். மூடப்பட்டுக் கிடந்த ‘அஹ்மத் டெய்லரிங்’ கடையின் பெயர்ப்பலகை தூசிபடிந்து மங்கலாகத் தெரிந்தது.
– சாந்தி
எழுதியவர்
- கோவையைச் சேர்ந்த சாந்தி சண்முகம் தற்போது துபாயில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரியான இவருக்கு வாசிப்பதிலும் பயணங்களிலும் ஈடுபாடு உண்டு. 'தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்' என்னும் தலைப்பில் தன் வெளிநாட்டு அனுபவங்களை தொகுத்து கட்டுரைத் தொடராக herstories.xyz எனும் இணைய இதழில் எழுதி வருகிறார்.
இதுவரை.
- சிறுகதை20 July 2021தகப்பன்சாமி