
தான் கண்டு கொண்டிருப்பது கனவா, நினைவா என்பதறியாமல் நின்றிருந்தாள். ஹாலிவுட் ஹீரோக்களும், பாப் பாடகர்களும் கனவில் வரும் வயதில், அவள் எதற்காக அந்த இருட்டு அறையில் இருக்கிறாள் என்பதை அறியாமல் உண்டான பயம் ஒருவித நடுக்கத்தை உண்டாக்கியது. “அம்மா நீ எங்கம்மா இருக்க? எனக்கு பயமா இருக்கு” என்றவாறே நகர்ந்தாள். தனிமை நீண்ட கரங்களைக் கொண்டு அவளைக் இறுகப் பற்றிக் கொண்டது. எப்போதும் யானையை அதன் நிறத்திற்காக ரசிக்கும் அவளால் அந்த இருட்டை ரசிக்க முடியவில்லை. அந்த அறை அவளை ஆக்டோபஸ் போல மாற்றியிருந்தது, கைகளால் ஏதாவது தட்டுப் படுமா என்று தேடிச் சென்றவளுக்கு படிக்கட்டு தென்பட்டது. அவள் இறங்க ஆரம்பித்தாள்.
“ஆராதனா மணி ஏழு, எழுந்து ரெடியாகி வா” என்ற அம்மாவின் குரல் அவள் அறையில் மெதுவாக கேட்டது. அந்த பிங்க் நிற அறையில் தோழிகளோடு அவள் இருக்கும் புகைப்படங்களும் “ஐ ஹேவ் ஏன் அமேஸிங் மாம்” என்ற ஸ்டிக்கரும் ஒட்டப் பட்டிருந்தது. கண் விழித்ததும் மெத்தையில் இருந்த அலைபேசியை எடுத்து பள்ளி நண்பர்களின் வாட்சப் குழுவில் குறுஞ்செய்திகளைப் பார்த்தாள் “இஸ் எவ்ரி ஒன் எக்ஸைடட் அபௌட் த பார்ட்டி!!” என்றிருந்தது.
வரும் வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு அவள் தோழி வினயாவின் பர்த்டே பார்ட்டி. வினயாவின் அப்பா பெரிய பிசினஸ் மேன், அம்மா வக்கீல். ஒரே மகள் என்பதால் செல்லம் அதிகம். அது வினயாவின் பதினாறாவது பிறந்த நாள் என்பதால் பார்ட்டி ஒரு ரிசார்ட்டில் நடக்கவிருக்கிறது. வகுப்பில் இருக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தாள் வினயா.
“டார்லிங் எக்ஸ்பெக்டிங் யூ பார் த பார்ட்டி, லாட்ஸ் ஆப் பாய்ஸ், ட்ரிங்க்ஸ், அண்ட் டிஜே மியூசிக்” என்று குழுவில் அல்லாது, ஆராதனாவுக்கு தனியாகவும் செய்தி அனுப்பியிருந்தாள் வினயா. அவளின் டிஸ்ப்ளே பிக்ச்சரை பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா. வினயா வயதை மீறிய உயரம், கண்ணாடித் துண்டு போல பிரதிபலிக்கும் கன்னங்கள், பார்பி பொம்மை போல நெற்றியில் விழுந்த சாயம் பூசப்பட்ட முடி, இதய வடிவிலான வைரக் கம்மல், டஸ்கி நிறக் கண்கள், டார்க் சாக்லேட் நிறத்தில் நைகா லிப்ஸ்டிக் பூசிய இதழ்கள், பச்சை ஸ்லீவ்லெஸ் பனியனும், பிங்க் நிற அரைக்கால் சார்ட்ஸும் அணிந்திருந்தாள். பார்க்க பாப் சிங்கர் போலிருந்தாள்.
ஆராதனாவும், வினயாவும் ஐந்தாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படிப்பவர்கள். உடை, ரசனை, குணம் எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் நட்பு அவர்களை இணைத்திருந்தது. வினயாவின் பார்ட்டிக்கு செல்வதில் ஆராதனாவுக்கும் ஆசைதான். ஆனால் அங்கு அவளுடன் படிக்கும் யுவன் மற்றும் அவன் நண்பர் கூட்டம் வரும். யுவன் வசீகரக் கண்களை உடையவன், பணக்கார வீட்டுப் பிள்ளை, அவனைச் சுற்றி எப்போதும் மாணவிகள் கூட்டமிருக்கும். வினயாவுடன் அடிக்கடி பேசினாலும், யுவனுக்கு ஆராதனா மீது தனிப்பட்ட பிரியமிருப்பது எல்லோருக்கும் தெரியும். நேற்று மைதானத்தில் அவளைத் தடுத்து நிறுத்திய யுவன் “எத்தனை நாள் தப்பிப்ப? பார்ட்டிக்கு வா….ஐ வில் ஷோ யூ மை ரொமான்டிக் சைடு” என்று சொல்லி கண்ணடித்தான். அதைக் கேட்டு வினயா சத்தமாக சிரிக்க, ஆராதனாவுக்கு என்னவோ போலிருந்தது.
“அம்மு லேட் ஆச்சுடா, எட்டு மணிக்கு ஸ்கூல் பஸ் இன்னும் பிரஷ் கூடப் பண்ணலையா?” என்றவாறு ஆராதனாவின் அறைக்குள் நுழைந்தாள் அம்மா , “நான், அப்பா எல்லாரும் ஸ்கூலுக்கு நடந்தே போவோம், உங்களுக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுத்தாலும் சோம்பேறியாக வளர்றீங்க” என்றாள். “காலையிலேயே பாட்டு பாடாதம்மா.. நான் ரெடியாகி வர்றேன்” என்று சொல்லிக் கொண்டே பாத்ரூமுக்குள் சென்றாள் ஆராதனா.
7:45 மணிக்குதான் ஆராதனா கீழே வந்தாள். சாக்ஸ் அணிந்தவாறே ஆ காட்ட , தோசையுடன் தக்காளிச் சட்னி சேர்த்து அம்மா ஊட்டினாள். மணி எட்டைத் தாண்டியதும், ஸ்கூல் பஸ்சுக்காக ஓடவும், அவ “தண்ணி கூட குடிக்கலங்க” என்று டை கட்டிக்கொண்டிருந்த கணவனிடம் சொன்னாள். “இந்த வயசுல அப்படித்தான் இருப்பாங்க ஜெயா, சாப்பிட்டு போனான்னு சந்தோஷப்பட்டுக்க” என்றார் ரகு.
வகுப்பு முழுக்க அடுத்த நாள் நடக்கவிருக்கும் பார்ட்டிக்கு என்ன உடை போடலாம், எந்த வகையான உணவுகள் வைக்கப்பட்டிருக்கும், யாரெல்லாம் வருவார்கள் என விவாதித்தார்கள். “நீ வருவதான? அம்மா ஸடிரிக்டு அப்பா விடமாட்டார் இதெல்லாம் சொல்லாத ஆரா ” மை ஸ்வீட் சிக்ஸ்டீன் பர்த்டே அண்டு ஐ வாண்ட் யூ பை மை சைட்” என்று சொன்னாள் வினயா. பார்ட்டி என்றாலே விட மாட்டாள் அம்மா அதிலும் ரெசார்ட் என்றால் வாய்ப்பேயில்லை என்று நினைத்தாலும் “ஐ வில் பீ தேர் வினு” என்றாள் ஆராதனா.
மாலை, அம்மா பால்கனியில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். “என்ன புக்குமா?” என்றாள். “ரோண்டா பைரன் எழுதிய “ஸீக்ரட் ” இன்ட்ரஸ்டிங்கா இருக்கு என்று அந்தப் புத்தகத்திலிருந்து சில வரிகளைப் படித்து காட்டினாள். “நைஸ் மா, உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்”. “சொல்லுடா” என்றாள். “வினயா சிக்ஸ்டீன்த் பர்த்டே செலப்ரேட் பண்றா.. நாளைக்கு பார்ட்டிக்கு கூப்பிட்டாம்மா” என்றாள். “எங்க” என அம்மா கேட்கவும் “அவங்க வீட்லதான் எட்டு மணிக்குள்ள முடிஞ்சிடும் சீக்கிரமா வந்திடறேன் சரியா?” என்றாள். “சரி நான் அப்பாட்ட சொல்லிடுறேன் போய்ட்டு வா” என்றாள் அம்மா.
ஆராதனாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஐ லவ் யூ சோ மச் மா” என்று குதூகலமாக அம்மாவை அணைத்துக் கொண்டாள். “வினு கெஸ் வாட்? ஐ காட் பேர்மிஷன் பிரம் மாம் டூ கம் பார் த பார்ட்டி” என்று செய்தி அனுப்பினாள். இரு தோழிகள் கட்டிக் கொண்டு ஆடும் வீடியோவோடு “வெயிட்டிங் டு சீ யூ ஆரா” என்று பதிலளித்தாள் வினயா.
பார்ட்டிக்குப் போடுவதற்காக ஆரஞ்சு நிற ஸ்கர்ட்டும், சந்தன நிற டாப்பும், பாஸ்ட் டிராக் வாட்ச்சும் எடுத்து வைத்தாள். பார்ட்டிக்குப் போவதை நினைக்கும்போதே அவளுக்குள் ஒரு சிட்டுக்குருவி பறப்பது போல உணர்ந்தாள். யுவன் கூறியதை நினைத்து அவளுக்கு சற்று பயம் இருந்தது. ஆனால் அனேகமான பள்ளி மாணவிகளின் கிரஷ் யுவன் தன்னை விரும்புவது ஆராதனாவிற்கு மகிழ்ச்சி அளித்தது. தன்னிடம் இருப்பதிலேயே சிறப்பான ஆடை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். இந்த வயதில் அழகாக தோன்றுவதும் தன்னை பார்த்து பிறர் ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வருகிறது என்று அவளுக்கு தோன்றியது. ஆனாலும் நாளை பார்ட்டியில் யுவன் என்ன செய்வான் என்ற ஆர்வமும் மனதில் எட்டிப் பார்த்தது.
தனக்குப் பிடித்த நெட்பிளிக்ஸ் சீரிஸ் பார்த்தபடியே அம்மா தந்த பேபி கார்ன் சூப்பைக் குடித்தாள். “அம்மு இன்னைக்கு, என் பழைய சூட்கேஸ் கிளீன் பண்ணினேன்… அதுல என் சைல்ட்ஹூட் போட்டோஸ் ஆல்பம் இருந்தது“. “வாவ் மா கண்டிப்பா பாக்கலாம்…குட்டி ஜெயாவை பார்த்து ரொம்ப நாளாச்சு ” என்று சொல்லியபடி ஆராதனா அறைக்கு சென்றாள்.
வாட்ஸப் குழுவில் நாளை என்ன மது அருந்துவது என்ற விவாதம் தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆராதனாவை ஆன்லைனில் பார்த்ததும் யுவன் “ஐ அம் கோயிங் டு சப்ரைஸ் சம் ஒன் வித் எ கிஸ்” என்று பதிவிட்டான். “ஐ நோ ஹூ இட் இஸ்” என்று வினயா பதிலளித்தாள். யுவனின் செயல்களை நினைக்கும்போது ஆராதனாவிற்க்கு பதட்டமாக இருந்தது. பார்ட்டி வீட்டில் இல்லை என்று அம்மாவுக்கு தெரிந்தால் என்னவாகும் என்ற பயமும் வந்தது. ஹெட்போனில் பிடிஎஸ் பிளே லிஸ்ட் போட்டு படுத்துக் கொண்டாள். எத்தனை முயன்றும் தூக்கம் வரவில்லை. என்ன செய்வது என்றறியாது அம்மாவின் அறைக்குச் சென்றாள். அப்பா பணி நிமித்தமாக பெங்களூர் சென்றிருந்ததால், அம்மா தனியே உறங்கிக் கொண்டிருந்தாள்.
அம்மாவைப் பார்த்ததும் பொய் சொல்கிறோமே என்ற குற்ற உணர்வு தோன்றியது. அருகில் சென்றாள். மெத்தையில், அம்மா படித்த புத்தகம் திறந்தபடியே இருந்தது. “உன் வாழ்க்கை உன் கையில், உனக்கு என்ன வேண்டும் என்பது உன் மேலான எண்ணங்களைப் பொறுத்தே அமையும் . உன்னால் மட்டுமே உன் வாழ்வை மாற்றிக் கொள்ள முடியும்” என்ற வரிகள் அடிக்கோடிடப் பட்டிருந்தது. அந்த வரிகளையே நினைத்தபடியிருந்தாள் ஆராதனா.
அந்த அறைக்குள் சிறிய விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. அந்தச் சிறு வெளிச்சம் திடீரென மின்னல் போல அம்மாவின் நெற்றியில் பிரதிபலித்தது. ஆராதனா அந்த வெளிச்சத்தை உற்று நோக்கியபடி அமர்ந்திருந்தாள். ஒளி பட்ட இடத்தில் ஒரு சிறிய கதவு இறகுபோல அசைந்தபடி இருந்தது. வியப்புத் தாளாமல் அருகே சென்று அந்தக் கதவைத் தொட்டுப் பார்த்தாள். உடனே அந்தக் கதவு அவளை உள்வாங்கிக் கொண்டது. திடீரென அது இருண்ட அறையாக மாறியது . “அம்மா நீ எங்கம்மா இருக்க எனக்கு பயமா இருக்கு” என்று திகிலோடு நடந்தாள்.
எப்போதும் யானையை அதன் நிறத்திற்காக ரசிக்கும் அவளால் அந்த இருட்டை ரசிக்க முடியவில்லை. கையில் ஏதாவது தட்டுப் படுமா என்று தேடிச் சென்றவளுக்கு படிக்கட்டு தென்பட்டது. அவள் இறங்க ஆரம்பித்தாள். அங்கிருந்து வெளிச்சம் பரவியது.
ஒரு வீட்டின் முன் அவள் நின்றிருந்தாள். வாசல் சாணியிட்டு அழகான கோலம் வரையப்பட்டிருந்தது. இது யாருடைய வீடு என்று அவள் வியந்து கொண்டிருக்கும் போது, பச்சை நிற பாவாடையும் சிவப்பு நிற தாவணி ப்ளவுஸ் அணிந்து தன் வயதை ஒத்த ஒரு பெண் வெளியே வந்தாள். வாசலில் இருந்த கன்று குட்டி அவளை கண்டதும் குதித்தது . அவள் கன்றுக்குட்டி கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்ததும் தண்ணி தொட்டிக்கு ஓடியது . ஆராதனாவும் அவள் பின்னே சென்றாள். அந்தப் பெண்ணின் முகம் பளிச்சென்று நீரில் தெரிந்தது.
அது அவள் அம்மாவின் அழகிய முகம். “அம்மா அம்மா” என்றபடியே அவளிடம் ஓடினாள். ஜெயா ஏதும் கேட்காதது போல கன்றுக்குட்டியை ஒரு தூணில் கட்டினாள். “அம்மா நான் பேசறது கேக்குதாம்மா” எனக் கேட்டுக் கொண்டேயிருந்தாள் ஆராதனா. ஆனால் எதற்கும் பதில் தராமல் வீட்டை நோக்கி நடந்தாள் ஜெயா.
வீட்டினுள் சென்ற ஜெயா “அம்மா நான் கல்பனா வீட்டுக்கு போறேன்” என்றாள் “கண்ணு போனமா வந்தமான்னு இருக்கணும், ரொம்ப நேரம் அங்கேயே இருக்க கூடாது, வந்து படிக்கனும், பால் கறக்கணும்” என்றாள் ஜெயாவின் அம்மா (ஆராதனாவின் அம்மிச்சியும் தான்). “சரிங்கம்மா“ என்று கல்பனா வீடு நோக்கி நடந்தாள். ஆராதனாவுக்கு எப்போதோ ஆல்பத்தில் பார்த்த கல்பனாவின் முகம் நினைவு வர, பின் தொடர்ந்தாள்.
அடுத்த தெருவில் இருந்தது கல்பனாவின் வீடு. பழைய காலத்து ஓட்டு வீடு. “கல்பனா ஜெயா வந்திருக்கா பாரு” என்றார் கல்பனாவின் அப்பா”. வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்து ஜெயாவை அணைத்துக் கொண்டாள் கல்பனா. ”நாம பன்னாங்கல் விளையாடலாமா?” என்று ஜெயா கேட்டதுமே “சரி” என்றாள் கல்பனா. இருவரும் வீட்டின் பின்புறம் இருந்த தூண் அருகே அமர்ந்து விளையாட ஆரம்பித்தனர்.
ஜெயாவும் கல்பனாவும் வேறு வேறு பள்ளிகளில் படித்தாலும் தலைமுறைகளைத் தாண்டி தொடர்கிறது அவர்களின் குடும்ப நட்பு. கல்பனா கொஞ்சம் உயரம் கம்மி, சுருட்டை முடி, கண்ணாடி அணிந்திருந்தாள். “என்ன கல்பனா, முகத்துல பரு வந்திருக்கு, யாருடி உன்னை சைட்அடிக்கிறா” என்றாள் ஜெயா. “அந்த அருண் ஃப்ரெண்ட் செல்வம் இருக்கான்ல, அவன் என்னை பார்த்து கண்ணடித்தான்” என்ற கல்பனாவின் முகம் சிவந்தது. “யாரு அந்த டிவல்வ் ஏ பஸ்ல வருவானே அவனா?” எனக் கேட்டாள் ஜெயா. “ஆமாம்” எனக் கல்பனா சொன்னாள். அவர்கள் எதை பற்றியோ பேசி சிரித்தார்கள். விளையாட்டு முடித்ததும், வீட்டுக்குச் சென்றாள் ஜெயா.
வீட்டுக்குள் நுழைந்ததும் ஜன்னலோரம் சத்தம் கேட்கவே ஜெயா வெளியே பார்த்தாள். பக்கத்து வீட்டு பாபு சீனிப் புளியங்காயை கொக்கியில் இழுத்துக் கொண்டிருந்தான். ”டேய் பக்கத்துல இருக்குற மரத்துல ஏறி அந்தக் கிளைய புடிச்சு இழு நிறைய புளியங்கா கிடைக்கும்” என்றாள் ஜெயா. “எனக்கு பயமா இருக்கு” என்றான். உடனே பாவாடையை சுருட்டி சொருகி மரத்தின் மீது ஏறினாள். ஐந்தாறு சீனி புளியங்காய்களை பிடுங்கிப் போட்டாள். பாபு ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். “போதுமாடா?”என்றாள். “போதும் இறங்கு ஆத்தா பாத்தா அவ்வளவுதான்” என்று சொல்லும்போதே ஜெயாவின் அம்மா வீட்டில் இருந்து வெளியே வந்தாள். அருகிலிருந்த முருங்கை மரக் குச்சியை உடைத்ததும், ஓடி மறைந்தான் பாபு.
“எரங்குடி சீமச்சிறுக்கி மரமேறி கால கைய உடைச்சா… எவண்டி உன்ன கட்டிக்குவான்? வயசுக்கு வந்த கழுத ஆம்பள கணக்கா சுத்துறது, மரம் ஏறது. இந்நேரம் கல்யாணம் கட்டிருந்தா பத்துப் புள்ள பெத்திருப்ப.. வாடி கீழ இன்னைக்கு அப்பா வரட்டும் உன்ன உண்டு இல்லன்னு பண்றானா இல்லையான்னு பாரு” என்றார் அம்மிச்சி.” பாபு கேட்டான் அதனால ஏறினேன் இதுல என்ன ஆம்பளை பொம்பளை வேண்டிக்கிடக்கு” என்று சொன்னாள் ஜெயா. “வாட் இஸ் ஆல் திஸ் மா” என்று சிரித்தாள் ஆராதனா.
ஜெயா ஆராதனாவை கடந்து நடந்தாள். “அம்மா டோன்ட் யு சீ மீ ” என்றவாறே ஜெயாவை பின்தொடர்ந்தாள்.
சட்டென ஜெயா வேறு உடையில் தோன்றினாள். ஆராதனா கல்பனா ஜெயா தண்ணி டாங்க் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்கள். டிவல்வ் ஏ பஸ் வந்தது. மூன்றாவது நிறுத்தத்தில் அருணும் செல்வமும் ஏறினார்கள். அருண் பார்ப்பதற்கு ஒரு ஹீரோ போல் நீட்டான யூனிபார்ம், கையில் வாட்ச் என ஸ்மார்ட்டாக இருந்தான். அருணின் பார்வை புளூடூத் போல அம்மாவையே சுற்றிக் கொண்டிருந்ததை ஆராதனா கவனித்தாள். செல்வமும், கல்பனாவும் மாறிமாறி புன்னகைத்துக் கொண்டார்கள்.
பஸ்ஸை விட்டு இறங்கியதும் அந்த காட்சி மறைந்தது .ஜெயாவும், கல்பனாவும் ஊர்த் திருவிழாவில் நின்றுகொண்டிருந்தனர். பார்ட்டி டிஸ்கோ லைட்ஸ் என்று பழகிய ஆராதனாவுக்கு சீரியல் பல்புகளும் ஜெயின்ட் வீலும் ராட்டினங்களும் பலகாரக் கடைகளும் பொட்டு வளையல் விற்கும் சிறு கடைகளும் நிறைந்த அந்த இடம் புதிதாக தெரிந்தது. எங்கு பார்த்தாலும் மனிதர்கள் நிறைந்த இடம் அவளுக்கு ஒரு வித அச்சத்தை தந்தது. ஆனால் அங்கு ஜெயாவும் கல்பனாவும் ஒரு வளையல் கடையில் நின்று அவரவர்களுக்கு வேண்டுமான வண்ணங்களில் வளையல்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் அருணும், செல்வமும் இருந்தார்கள். அருண் ஜெயாவிடம் “ எந்தப் பெண்ணையும் அழகாகக் காட்டுவது அறிவுதான் அப்படிப்பார்த்தால் உன்னைப் போல பேரழகியில்லை” என்றான். ஜெயா புன்னகைத்தாள். “உனக்காக ஒரு பரிசு வாங்கிருக்கேன், அதை உன்னிடம் தனிமையில் தான் குடுப்பேன்” என்று அழைத்துச் சென்றான் . ஜெயா தயங்கினாள். ஆனால் கல்பனா “அவன் தான் ஆசையா கூப்பிடுறான்ல என்னனு போய் கேட்டுட்டு வா” என்றாள். பக்கத்தில் இருந்த ஒரு கடைக்கு பின்னால் அவளைக் கூட்டிச் சென்றான் அருண். அம்மா “வேர் ஆர் யூ கோயிங்” என்றபடி பின்தொடர்ந்தாள் ஆராதனா. கையில் ஒரு பரிசு பொருளை வைத்திருந்தவன் அவள் அருகில் சென்று அதை கொடுப்பது போல் சட்டென கன்னத்தில் முத்தமிட முயற்சித்தான். அதை எதிர்பாராத ஜெயா “ஏன்டா இப்படி பண்ண, நான் போறேன்” எனச் சொல்லி விலகிச் சென்றாள். ”வாட் இஸ் ஹேப்பெனிங், டிட் ஹி கிஸ் யூ?” என்று ஆராதனா கத்தினாள். கல்பனாவின் கையைப் பற்றி இழுத்து வா வீட்டுக்கு போகலாம் என்று கூறி வேகமாக நடந்தாள். அருண் ஜெயா ஜெயா என்று அழைத்தும் அதை திரும்பி கூட பார்க்கவில்லை. அம்மாவின் வேகத்திற்கு நடக்க முடியாமல் பின்னே ஓடினாள் ஆராதனா.
வீட்டுக்குச் செல்லும் வழி எங்கும் கல்பனா புன்னகைத்துக் கொண்டே வந்தாள். என்னடி ஆச்சு உனக்கு என்று ஜெயா கேட்க. “தேர் கடைக்குப் பின்னாடி கூட்டிட்டு போயி செல்வம் ஒரு முத்தம் குடுத்தாண்டி. அந்த மயக்கத்திலிருந்து என்னால மீளவே முடியல” “உனக்கு பைத்தியம் புடிச்சிருக்கு உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்” என்றாள் ஜெயா “அட போடி இந்த வயசுல கிஸ் பண்ணாம எப்ப பண்ண? திரும்பத் திரும்ப அந்த முத்தம் தான் மனசுல நிக்குது இன்னும் வேணும், வேணும்னு கேக்குது தெரியுமா? “. “உணர்ச்சிகளை மயக்க செய்யற எந்த விஷயமும் நிரந்தரம் இல்ல கல்பனா. எது சந்தோஷம்கறத நம்ம தான் முடிவு பண்ணனும். உடம்புக்கே ஏத்த மாதிரி மனசு மாத்திக்க கூடாது மனசுக்கேத்த மாதிரி தான் உடம்ப மாத்திக்கணும்” என்றாள் ஜெயா . அந்தப் பதில் ஆராதனாவை ஆச்சரியப் படுத்தியது. “அடி போடி வாழ்க்கையில எதையுமே அனுபவிக்க தெரியாதவள் நீ” என்றாள் கல்பனா. ஜெயா எதுவும் பேசாமல் வீட்டுக்கு வந்தாள்.
“அம்மு சீக்கிரமா எழுந்திருக்கணும் தூங்கு” அம்மாவின் குரல் ஆராதனாவை இயல்புக்கு கொண்டு வந்தது. மீண்டும் அம்மாவின் அறையில் அவள் நின்றிருந்த போது ஏனோ அவளுக்கு அந்த கிராமத்து உலகத்தில் இருந்து வெளியே வந்தது வருத்தம் அளித்தது. “அம்மா நீ தூங்கு ஐ அம் ஓகே” என்றாள். அந்த திருவிழாவிற்கு பிறகு நடந்ததை அறிய ஆர்வமாக இருந்தாள் ஆராதனா. நல்ல வேளையாக அம்மா மீண்டும் தூங்கினாள். மீண்டும் அந்த இருட்டறைப் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தாள் ஆராதனா. அங்கிருந்து மெல்லிய வெளிச்சம் தென்பட்டது அந்தக் கதவு திறந்ததும் உள்ளே சென்றாள் ஆராதனா.
கல்பனாவின் அம்மா அழுதுகொண்டே ஜெயாவிடம் “சாமி அவங்க எங்க போனாங்க சொல்லு… அந்த நாயக் கொன்னா தான் நிம்மதி” என்று சொன்னாள். “எனக்கு தெரியாதுங்க அத்த” என்றழுதாள். ஜெயாவின் கை வீங்கிப் போயிருந்தது. அப்போது தான் அம்மிச்சி கையிலிருக்கும் இரும்புக் கரண்டியை கவனித்தாள் ஆராதனா. “அம்மா அடிச்சாங்களா இஸ் இட் பெயினிங்” என்று அழுத ஜெயாவிடம் கேட்டாள் ஆராதனா.
புடவையில் இருக்கும் அம்மாவை பார்த்ததும் அவள் இன்னும் அந்த உலகத்தில் தான் இருக்கிறாளா இல்லை வீட்டுக்கு வந்து விட்டாளா என்ற சந்தேகம் வந்தது. ஆனால் அவர்கள் நின்றிருந்த இடம் அம்மிச்சியின் ஊர் தான் என்று தெரிந்ததும் சற்று நிம்மதி அடைந்தால் ஆராதனா. அம்மா இப்போது இருப்பது போலவே கழுத்தில் தாலிவுடனும் நெற்றியில் குங்குமம் வைத்திருந்ததால் அது திருமணத்திற்கு பிறகான நினைவு என்பதை உணர்ந்து கொண்டாள் ஆராதனா. “அருண் எப்படி இருக்க?” என்றாள். “இன்னும் உன்னை நான் மிஸ் பண்றேன்” என்றான் அருண். “அந்த வயசுல உடம்புலயும் மனசுலயும் ஏற்படும் மாற்றங்கள ஏத்துக்க தெரியறதில்ல” என்றாள்.” ஸ்டில் நீதான் என் பஸ்ட் லவ் என்னோட பஸ்ட் கிஸ் ட்ரை உனக்கு தான்” என்று சிரித்தான். “அது லவ்வுன்னு சொல்ல முடியுமான்னு தெரியல அருண் ஆனா கல்பனா மாதிரி உடம்பை நான் நம்பல. புத்தி சொன்னதைக் கேட்டேன், அவ்வளவுதான்” என்றாள். “ஐ யம் எ டெக் கை நவ் . நீ என்ன சூஸ் பண்ணி இருந்தாலும் இப்ப நல்லா ரிச்சா இருந்திருக்கலாம்” என்றான். “மேபி ஆனா நான் உன்ன சூஸ் பண்ணி இருந்தா நீ இந்த பொசிஷன் கே போயிருக்காம இருந்திருக்கலாம். ஆல்சோ நல் ஐ அம் எ ப்ராஜெக்ட் மேனேஜர் இன் ஐபிஎம் டூ” என்றாள். அருண் திகைத்து நின்றான். ஆராதனாவும் தான்.
பூங்காவில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த கல்பனா கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது. செல்வத்தை நம்பி தன் வாழ்வை தொலைத்து விட்டதாகவும் தற்போது ஒரு மில்லில் கூலி வேலை செய்வதாகவும் சொல்லி அழுதாள். ” உடம்பும் மனசும் பூட்டாவும் சாவியாவும் மாறிக்கும். மனச சாவியா வைச்சு உடம்ப திறக்கலாம் அதேபோல உடம்ப சாவியா வச்சு மனச திறக்கலாம். ஆனா இந்த பூட்டையும் சாவியையும் நம்ம தான் பத்திரமா வெச்சிக்கனும் ஏன்னா ரெண்டுமே நம்மோடது.” என மடியில் கல்பனாவின் குழந்தையை வைத்துக்கொண்டு ஜெயா சொன்னதும். கல்பனா மீண்டும் அழுதாள். “புத்தி வெறும் பெட்டிதான் அதுக்குள்ள இருக்கிற எண்ணங்களைப் பொறுத்து தான் அது விலைமதிப்பா மாறுது. நாம தப்பு பண்றதுக்கு முன்னாடி இருக்கற ஒரு நிமிஷம் ரொம்ப முக்கியம். அப்பதான் புத்தி நம்ம கிட்ட பேசும்” என்று சொன்னாள் ஜெயா. உனக்கு என்ன உதவி வேணும்னாலும் தயங்காம என்கிட்ட கேளு எப்பவும் உனக்காக நான் இருப்பேன் சரி நேரமாச்சு நான் கிளம்புறேன் என்றாள் ஜெயா.
ஆராதனாவுக்கு தன் அம்மாவை அணைத்துக் கொள்ள வேண்டுமெனத் தோன்றியது. ஆனால் அதற்குள் அலாரம் அடிக்க , “அம்மு இங்க என்ன பண்ற..” என்று கேட்டபடி எழுந்து அமர்ந்தாள். ஜெயாவின் உலகத்திலிருந்து மீளாதவளாய் “அம்மா நீங்க எங்க இருக்கீங்க?” என்று திரும்பத் திரும்பக் கேட்டாள் ஆராதனா. “அம்மு உனக்கு என்ன ஆச்ச? நான் இங்க தான் டா இருக்கேன் போயி ரெடியாகுடா” என்று சொல்லவும், “அம்மா உங்க சைல்ட்ஹூட் ஆல்பம் எங்கிருக்கு” என்று கேட்டாள்.” இதோ” என்று மேஜை மீதிருந்து எடுத்து நீட்டினாள். கல்பனா இருக்கும் புகைப்படத்தைக் காட்டி “கல்பனா ஆன்ட்டி பக்கத்துல இருக்கிறவங்க யாரும்மா?” என்று கேட்டாள் ஆராதனா. “இது செல்வம் இது அருண் நாங்க எல்லாரும் பஸ்ல ஸ்கூலுக்கு ஒண்ணா போவோம்” என்று சொன்னாள். ஆராதனாவுக்கு தலை சுற்றுவது போலிருந்தது.
பள்ளியிலிருந்து மாலை வீடு திரும்பினாள். பார்ட்டி உடைக்கு ஏற்ப புதிதாக கம்மல் வாங்கி வைத்திருந்தாள் அம்மா. அவள் தயாராகி கீழே வந்ததும் “அழகா இருக்க அம்மு” என்று சொன்னாள். பார்ட்டிக்கு சென்றதும் கொஞ்சமாக மது அருந்தச் சொல்லி வினயா வற்புறுத்தினாள், ஆராதனா மறுத்து விட்டாள். அவளிடம் வந்த யுவன் அவள் கைகளைப் பற்றி ஆட அழைத்தான். அவனுடைய தீண்டல் ஆராதனாவுக்கு ஒரு சுகத்தை தந்தது. சிறிது நேரம் ஆடியதும், அவன் அவளை முத்தமிட முயல, சட்டென விலகி நடந்தாள். “திஸ் இஸ் வெரி நார்மல் இட்ஸ் ஜஸ்ட் எ கிஸ் கம் ஆன் பேபி” என்று அவன் கூறி கையை பற்றினான். ” சில் ஆரா” என்றாள் வினயா. “நான் வீட்டுக்குச் போகனும்” என்று வினயாவிடம் சொன்னாள். “கேன் ஐ டிராப் யூ இன் மை கார்” என யுவன் கேட்க “நோ” என்று சொல்லிவிட்டு, டாக்சி ஏறி வீட்டுக்குச் சென்றாள் ஆராதனா.
அடுத்த நாள் காலையில் ஜெயா ஆராதனாவின் நெற்றியில் முத்தமிட்டு “ஐ அம் வெரி ப்ரவுட் ஆஃப் யூ மை கேர்ள்” எனச் சொன்னாள். “ஏம்மா?” என்று கேட்ட ஆராதனாவிடம் “ எப்பவுமே தப்பு பண்றதுக்கு முன்னாடி இருக்கற ஒரு நிமிஷம் ரொம்ப முக்கியம்” என்று சொன்னாள். ஆராதனா ஜெயாவை ஆச்சரியத்துடன் பாரக்க. அம்மா ஆராதனா தலையிலிருந்த கதவின் வழியாக வெளியே வந்தாள். அவள் உலகத்திற்குள் அனுமதித்த தன் மகளின் அன்பை எண்ணி மகிழ்ந்தாள் ஜெயா. காற்று சில இலைகளை உதிர்த்து போடலாம் ஆனால் வேர் பற்றியிருக்கும் வரை செடியை யார் அசைத்து விட முடியும் என்று நினைத்தவாறே உறங்கிக் கொண்டிருக்கும் மகளை பார்த்தாள் ஜெயா . விடியலில் பூ போல மலர்ந்தபடி கண் விழித்தாள் ஆராதனா.
எழுதியவர்

இதுவரை.
கதைகள் சிறப்பிதழ் 202523 January 2025ரகசிய அறை
கதைகள் சிறப்பிதழ் - 20221 August 2022ரகசியா