12 March 2025
subi KS 25

1.

மாலதி அவளுடைய ஆயாவின் கிராமத்து வீட்டில் இறங்கும் போது பளிச்சென்று விடிந்துவிட்டது. விடிய விடிய அழுத பெண்கள் ஆங்காங்கே மூலைகளில் சுவரோடு சாய்ந்து கிடந்தார்கள். விடிந்ததும் இன்னும் வரிசையாக வர ஆரம்பிப்பார்கள். இரவோடு இரவாகப் போட்ட பந்தலில் இருந்த டியூப்லைட்களின் வெள்ளை வெளிச்சத்தை நிறுத்தினர் மாலதியின் அத்தையான கலாவினுடைய பையன் ரமேஷூம், கணவர் முத்தையாவும்.

இரவு வந்த டீ ட்ரம்மில் இருந்த டீ ஆறிப்போய் ஒரு ஓரமாகக் கிடந்தது. பக்கத்து வீட்டு சாந்தி அக்கா அவள் வீட்டில் வரட்டீ போட்டு எடுத்து வந்து சிறிய பிளாஸ்டிக் டம்ளர்களில் ஊற்றி தாம்பாளத்தில் வைத்து எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

மாலதிக்கு சத்தம் போட்டு கத்தி அழக்கூட தோன்றவில்லை. உடலில் உள்ள ஒரு உறுப்பு சேதமாகி தன்னை விட்டு விழுந்தது போலிருந்தது வேலு சித்தப்பா இறந்தது. மருத்துவமனை வாசலிலேயே அதிர்ச்சியில் மயக்கமடைந்த ஜெயா சித்தியைத் தேற்றி கலா அத்தை, மற்ற பெண்களோடு வேனில் ஏற்றி மாலதியை துணைக்கு அனுப்பி வைத்தார்கள் வீட்டு ஆண்கள். மாலதி மட்டும் கரூரில் அவள் அம்மா வீட்டில் இறங்கி எல்லோருக்கும் தேவையான துணிமணிகளை எடுத்துக்கொண்டு விடியற்காலை ஐந்து மணி பஸ்ஸில் வந்து கல்லுப்பட்டியில் இறங்கினாள்.

வீட்டு ஹாலில் ஐஸ் பெட்டியில் இருந்தது பிரேதம். வேலுவிற்குப் போட்ட மாலைகளை அவ்வப்போது நகர்த்திவிட்டு வருகிறவர்கள் பார்க்க ஏதுவாக இரண்டு பெண்கள் தொடர்ந்து அதை கவனமாக செய்தனர்.

‘அடியே மாலதி, ஒஞ்சித்தப்பன பாத்தியா? மாலா மாலானு வாய் நெறயா கூப்புடுவாரே, இனிமேட்டு சித்தப்பா கூட ஒக்காந்து எப்படிடியம்மா ஊர்க்கதை எல்லாம் ரெண்டுபேரும் பேசுவீங்க. புள்ள வந்துட்டா, அவளுக்கு புடிச்சதல்லாம் செய்யினு என்ன வெரட்டுவாரேடி. பாத்தியா பாத்தியா பாத்தியா .. அந்த மனுசெ கோலத்தப் பாத்தியா ? எந்த காலத்திலும் நீயும்நானும் அழக்கூடாதுனு மூச்சுக்கு முந்நூறு தடவெ சொல்வாரே? இனிமேல் நமக்கு யாரு சொல்லுவா? சொல்லு மாலதி’ என்று அவளை உலுக்கினாள் சித்தி.

மனம் இறுகி கனமாகி பெரிய கல்லை வைத்து அமிழ்த்துவது போலிருந்தது சித்திக்கும் மாலதிக்கும்… ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வராமல் கண்கள் அவரை சவப்பெட்டியில் வைத்திருந்ததைவெறித்துப் பார்த்தபடியே சித்தியைக் கைத்தாங்கலாக பிடித்தவாறு நின்றாள்.

‘அடியே அழுவ வந்தா அழுது தொலச்சிருங்கடி… கல்லாட்டம் ஏண்டி நிக்கிறீங்க இப்படி? அழுவய அடக்காதீங்கடி, கனத்த ஏத்திக்காம அழுதுருங்கடி’ என்று அவர்கள் இருவரையும் உலுக்கிக் கதறி அழுதாள் கலா அத்தை.

‘இல்ல அத்த, நாங்க அழுதா சித்தப்பாவுக்கு எப்பவுமே புடிக்காது. பொம்பளப்புள்ளக விடியா மூஞ்சியாட்டம் இருக்கப்டாது. தெகிரியமா இருக்கணு… சிரிச்ச மொகமா இருந்தாத்தேன் வூட்டுல லெட்சுமி தங்கும்டா …எப்பவுமே மொகத்த சிரிச்சமாதிரி வச்சுக்கணுங் கண்ணுங்களா’ம்பாரு. நாங்க அழுதாதான் அவரு மனசு வேதனப்படும்.’ சலனமற்று சொல்லிக் கொண்டிருந்தாள் மாலதி.

நடக்க முடியாத நிலையில் இருந்த சுந்தரம்மா ஆயாவை சித்திக்கு பக்கத்துச் சேரில் உட்கார வைத்திருந்தார்கள். கலா அத்தை ஆயாவுக்குக் கீழே அமர்ந்து அவளை‌ சமாதானப்படுத்தினாள்.

‘எம் பய போயி இந்த உசுர வச்சிகிட்டு இருக்கணுமா மாயவா‌… உனக்கு கண்ணு காது ஏதுமில்லயா, ஈத்து பேத்தெடுத்து பயல தொலச்சப் பாவியடா நானு மாயவா, நானிங்கபுழுத்தஒடம்பவச்சிகிட்டு வாழறேனே..
என்னக் கொண்டு போயி எம்பயல வச்சுருக்கக் கூடாதா…அய்யோ ய்யோ ய்யோ ய்யோ’ என நிலைதடுமாறி கண்ணாடி பெட்டியைத் தட்டினாள். வெள்ளைப் புடவையும் விரிந்து பரந்த அவிழ்ந்த நரைமுடிகளோடும் பச்சை குத்திய கைகளோடும் ரவிக்கை இல்லாத மாரோடும் உட்கார்ந்து அவள் மாரடிப்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் கண்களில் கண்ணீர் அடைமழையாகப் பெய்வது போன்று ஊற்றியபடி வழிந்தோடுவதை பொருட்படுத்தாது.

திடீரென மாலதியையும், சித்தியையும், கலா அத்தையையும் சுற்றி பத்துப் பன்னிரண்டு பெண்கள் வட்டமாக வளையமிட்டது போல தங்கள் இரு கைகளையும் அடுத்தவர் தோள்களில் போட்டவாறு எழவடிக்கக் கூடினார்கள். அது மாலதிக்கு என்னவோ போலிருந்தது. வேலு சித்தப்பாவிற்கு அழுதாலே புடிக்காதேயென நினைத்தபடி அவள் மட்டும் நிதானமாகத் தன்னைச் சுற்றி நின்றவர் கரங்களை விடுவித்துக்கொண்டு தனக்குப் பதிலாக பக்கத்தில் நின்றவர் கரங்களைக் கோர்த்து வைத்துவிட்டு வாசலுக்கு அருகில் இருந்த மாடிப்படியில் வந்து அமர்ந்து கொண்டாள்.

மண் வாசலைத்தாண்டி கரடுமுரடான கற்களுள்ள செப்பனிடாத வாசலில் பறையடிச் சத்தம் காதைப்பிளந்தது.

‘நம்ம அருமெ மவராச சீவம்பட்டி பொன்னுச்சாமி அண்ணெ’ ஐநூறு கொடுத்துருக்காக…அவரு குடும்ப நல்லாருக்கணு சீருஞ்செறப்புமா பல்லாண்டு வாழணுமின்னு வாழ்த்தறோம்’ …. வாழ்த்தி முடித்தவுடன் ‘டங்டணக்கு டணக்கு டங்டணக்கு டணக்கு டங்டணக்கு டணக்கு’ மைக்கில் ஒருவர் சொல்ல சொல்ல தாளத்தோடு அடித்தார்கள்.

விடிந்தவுடன் ஆண்களும் வரத்தொடங்கினர். வருபவர்கள் நேராக வேலு பையன் தினேஷிடமும், மாலதி அப்பா புகழேந்தியிடமும், மற்ற பங்காளிகளிடமும் கை நீட்டிவிட்டு வாசல் பந்தலில் போட்டிருந்த சேர்களில் உட்கார்ந்தனர்.

சற்று நேரத்தில் வேலுவின் மூத்த அண்ணன் ராமச்சந்திரன் சென்னையில் இருந்து காரில் வந்து இறங்கினார். தன் தம்பிகளிடம் வாஞ்சையோடு இன்றும் இருக்கும் அவருக்கு, தம்பியை அப்படிப் பார்க்கத் தெம்பில்லாதவரைப் போலத் தடுமாறியபடி நடந்து வந்தார். அவரைக் கண்டவுடன் வாசலிலேயே புகழேந்தியும், தினேஷூம் கட்டிக்கொண்டு கேவென அழுதார்கள். அவர்கள் இருவரையும் அவர் அணைத்தபடி உள்ளே சென்றதுதான் மாயம்; சுந்தரம்மா ஆயா, கலா அத்தை, மற்ற ஒன்றுவிட்ட அத்தைகள் என்று அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

‘வா, சாமி நம்ம தங்கத்தப்பாரு.’ என சுந்தரம்மா தலையில் அடித்து கொண்டு அழுதவாறு கண்ணீர் ஒழுக ஒழுக பாட ஆரம்பித்தாள்.

“ஆத்துக்கு அந்தப்பொறம்
ஆரஞ்சி வில்லமரம்
நாங்க அரும்பெடுக்கப் போனாலும்
ஆத்திலுள்ள வேடரெல்லாம்
அம்பு போடுவாங்கெ
எங்கள ஆதரிக்க நீயிருந்தா
அம்பே தடுத்துருவெ
ஆறுதலு சொல்லிடுவ
கொளத்துக்கு அந்தப்பொறம்
கோலாஞ்சி வில்லமரம்
நாங்க கொழுந்தெடுக்கப் போனாலும்
கொளத்திலுள்ள வேடரெல்லாம்
கொம்பால அடிப்பாங்கெ
எங்கள கொண்டணைக்க
நீயிருந்தா
கொம்பே தடுத்தருவெ
கொண்டணைச்சு பாத்துக்குவெ
இப்பொ அம்பே தடுக்க நீயுமில்ல
எங்கள ஆதரிப்பார் ஆருமில்லெ
கொம்பெ தடுக்க நீயுமில்ல
எங்கள கொண்டணைக்க ஆருமில்லெ.”

சுந்தரம்மா ஆயா தன் மற்ற இரண்டு மகன்களைக் கட்டிக்கொண்டு சத்தமாக ஒப்பாரிப்பாடி அழுதாள். அந்தக் காட்சியை கண்டு அந்த பட்டாசாலையில் இருந்த அனைவரும் தன்னையறியாது குலுங்கிக் குலுங்கி அழுதனர்.

ஆயா ஒப்பாரி முடிந்தவுடன் வெளியே தப்படிப்பவர்கள் பாட ஆரம்பித்தார்கள்.

“பொன்னராட்ட பொறுமெயா
பெரிய அண்ணெந்தானிருக்க
சங்கராட்ட பொங்கியெழ
சின்ன அண்ணெந்தானிருக்க
போலாமோ எங்க சின்ன எசமான்
போலாமோ எங்க செல்ல எசமான்
கந்தெறந்து பாருங்கொ
கண்ணீருங் கம்பளையா
ஒங்க ஒடம்பொறப்பெல்லா
நிக்கறத பாருங்கொ
பன்னீருப்பந்தலிட்டு
பாட கட்டுவதெப்படியோ
கண்ணீருப்பந்தலிட்டு
அதக் காங்குவதெப்படியோ “

டங்டணக்கு டணக்கு டங்டணக்கு டணக்கு
டங்டணக்கு டணக்கு டங்டணக்கு டணக்கு
டங்டணக்கு டணக்கு டங்டணக்கு டணக்கு

வெளியே வந்தார் ராமச்சந்திரன். ‘என்னடா, முருகா நல்லாருக்கியா…?

‘என்னத்தங்கயா நல்லாருக்கம்… சாவுல வாழ்வு… ஈனப்பொழப்புங்கய்யா.’

இந்த சீமையே கேக்கற அளவுக்கு உடாம அடிங்கடா. புள்ள குட்டி எல்லாம் எப்படி இருக்கு. வீட்ல எப்படி இருக்கு.. பொட்டப்புள்ள பெருசாயிட்டாளா… தொடர்ந்து முருகனைக் கேட்டுவிட்டு பதில் தந்தவுடன்…. ந்தா ஆயிரம் ரூபா வச்சுக்க. அடிச்சுக் கெளப்புங்க’ என்று தந்துவிட்டு நகர்ந்தார்.

‘மூணு முத்துக்களிலே மொத முத்து… எங்க ஐயா சீமெயாளும் பெரியய்யா குடும்பம் நல்லாருக்கணு சீருஞ்செறப்புமா பல்லாண்டு வாழணுமின்னு வாழ்த்தறோஓஓம்.’

டங்டணக்கு டணக்கு டங்டணக்கு டணக்கு டங்டணக்கு டணக்கு.

 

2

சுந்தரம்மாவின் மகன்கள் ராமச்சந்திரன், புகழேந்தி, வேலுச்சாமி மூவரும், ஒரே மகள் கலாவும் இருக்கும் சொத்துக்களைப் பார்க்க முடியவில்லையென குத்தகைக்கு விட்டுவிட்டு ஆளுக்கு ஒரு ஊரில் குடிபெயர்ந்தார்கள். சுந்தரம்மா கணவன், அவர்கள் பங்காளிகள் என்று அவர்கள் வம்சத்தில் யார் இறந்தாலும் சொந்த ஊர் கல்லுப்பட்டிக்கு கொண்டு போவதுதான் வழக்கம்.

கலா பாளையத்தில் இருந்தாள். கரூர் அருகில் இருக்கும் வாங்கப்பாளையத்தில்தான் வேலுச்சாமி பைனான்ஸ் வைத்திருந்தார். புகழேந்தி கரூரிலும், ராமச்சந்திரன் சென்னையிலும் பைனான்ஸ் வைத்திருந்தார்கள். ரோட்டுக் கடைகள் பலவற்றில் தின வசூலுக்கும் தந்திருந்ததால் மூவருமே மாலையில் வசூலுக்குப் போய்விடுவார்கள். இரவானால் மூவரும் அரை மணி நேரமாவது போனில் பேசிவிட்டுத்தான் படுப்பார்கள்.

மாலதி சென்னை பெரியப்பா வீட்டுக்குச் சென்றதில்லை. பக்கத்தில் இருந்ததால் விடுமுறை நாட்கள் என்றால் வேலு சித்தப்பா வீட்டில் கொண்டுபோய் புகழேந்தி விட்டு விடுவார். வேலுவும் மாலதியும் வாசலில் சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு தெருவில் போவோர் வருவோரை வம்பிழுத்து அவர்களை அழைத்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

‘அவளெக் கொண்டு போய் அங்கே ஒக்கார வச்சிகிட்டு நாளைக்கு போற ஊட்லயும் இதே வாய் வரப்போவுது. வாய் நீளம்பாங்க. அப்ப போவிங்களா கொட புடிச்சிக்கிட்டு அண்ணெந்தம்பியெல்லா. ஒரு சமையல் கத்துக்க மாட்டிக்கறானு நங்கையாக்கா மூக்கால அழுவுது… நீயாச்சுஞ்சொல்லுடின்னு. இங்கே இந்த கூத்து பண்றீங்க ரெண்டு பேரும் சேந்துகிட்டு.’

‘அதெல்லா எங்க புள்ள எங்க போனாலும் பொழச்சுக்கும் போடி’ என்று அவளைச் செல்லமாகக் கடிந்து கொள்வார்.

வேலுவுக்கு மனைவி ஜெயா என்றால் உயிர். அத்தை மகளையே கட்டிக்கொண்டார். எந்த விசேஷமென்றாலும் தன் எம்ஐடி-யை எடுத்துக்கொண்டு இருவரும் ஜில்லென்று கிளம்பி விடுவார்கள். மனைவியைக் கேட்காமல் வீட்டில் எதுவுமே நடக்காது. அவளுக்கு தினமும் மாலையில் பூக்கார அக்கா மல்லிப்பூ கொண்டு வந்து தந்துவிடச் சொல்லியிருப்பார். மல்லிப்பூ இல்லாமல் ஜெயாவை பார்ப்பது அரிது. அவளை அவர் அனுசரணையாக பார்த்துக் கொள்வதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

முக்கியமாக எங்காவது வெளியே கிளம்பவேண்டும் என்றால் சலவை செய்த வெள்ளை வேட்டி சட்டைகள்தான் அணிவார். வெள்ளைச் சட்டையில் என்ன வித்தியாசம் இருக்கும் என்று தெரியவில்லை. மாலதி ஹாலில் உட்கார்ந்து இருந்தாளென்றால் இரு மாலா, சித்தியை வம்பிழுக்கலாமெனச் சொல்லிவிட்டு ’ அம்மிணி அஞ்சு வெள்ள சட்ட கைல வச்சிருக்கேன் எத போட்டுக்கட்டும்?’

அவளும் சிரத்தையாக வந்து இதுல லேசா மஞ்சள் ஒட்டியிருக்கு, இது கொஞ்சம் பழசாயிருச்சென ஒவ்வொன்றையும் கழித்துவிட்டு இருப்பதிலேயே நல்ல பளிச்சென்று இருக்கும் ஒரு சட்டையைக் காட்டி ‘இதப்போட்டுக்கங்க நல்லாருக்கும்’ என்பாள். அவள் நகர்ந்தவுடன் ‘பாத்தியா, மாலா!’ என்று வாய் கொள்ளாமல் சிரித்து விட்டு ‘ஒரே வெள்ளைல எப்படி நொண கண்டுபிடிக்கறா ஒஞ்சித்தி’ என்பார்.

சித்திக்கு விதவிதமான புடவைகள் போகும் இடங்களில் எல்லாம் நன்றாக இருந்தால் தூக்கிக் கொண்டு வந்து விடுவார் சித்தப்பா. சித்திக்கென தனி பீரோ உண்டு அவள் வீட்டில். சித்தி சில சமயங்களில் அவசரமாகக் குளிக்கப் போய்விட்டால் மாலதியை அழைத்து பீரோவில் இருக்கும் புடவை கலரைச் சொல்லி எடுத்து வரச் சொல்வாள். மாலதி போய் பீரோவை எப்போது திறந்தாலும் திபுதிபுவென நான்கைந்து புடவைகளாவது கீழே விழுந்துவிடும். அவ்வளவு புடவைகள் செட்டு செட்டாக மடித்து வைக்கப்பட்டிருக்கும்.

அவள் ஆரஞ்சு கலர் புடவை எடுத்து வரச் சொன்னால் அந்த கலரிலேயே பூக்கள், கட்டங்கள், கோடுகள், பார்டர் கலர் என்று விதவிதமாக இருக்கும். சிகப்பு சொன்னால் மிளகாய் சிகப்பு, ரத்தச் சிகப்பு, குங்கும சிகப்பு, அரக்கு என்று அதிலும் ஏழு வகை இருக்கும். பச்சை என்றால் கேட்கவே வேண்டாம். பாசிப்பயறு பச்சைக் கிளிப் பச்சை, இலைப் பச்சை, சோடா பாட்டில் கண்ணாடி பச்சை என நீளும். திரும்பிப்போய் மாலதி கேட்கவேண்டும். ரெண்டாவது ரேக்கில் மூணாவது வரிசையில் இருக்கும் இரண்டாவது புடவை என்று மிகச்சரியாகச் சொல்வாள் சித்தி.

சித்தியின் ரசனை, பிடித்த நிறம், துணி என்று சித்தப்பாவிற்கு அத்தனையும் அத்துப்படி. அவள் கடைக்குப் போகவேண்டிய அவசியமே இருக்காது. அழகழகான நிறங்களில் எடுக்கும் புடவைகளுக்கு மேட்சாக அதே கடைகளில் தேடி உள்பாவாடை, பிரா, ரவிக்கைத்துணி எல்லாவற்றையும் வாங்கிவிடுவார். அதை சித்தியிடம் தரும் போது அவ்வளவு காதலும் அந்தக் கரங்களில் வெளிப்படும். ஒவ்வொரு முறையும் அலுக்காமல் ‘உனக்கு புடிச்சிருக்கா ஜெயா எடுத்த புடவை ‘என்று கேட்பதை அவர் இருக்கும் வரை நிறுத்தவே இல்லை. அவள் ஒரு முறை கட்டிய புடவையை அடுத்தமுறை கட்ட பல மாதங்கள் கூட ஆகும்.

சித்தி வீட்டுக்கு விலக்காக இருந்தால் காலை வசூலுக்குச் செல்லும் போது நாப்கின்களை வாங்கி வெள்ளைத்தாளில் சுருட்டி வந்து நீட்டுவார் அவள் கேட்காமலேயே. அந்த நாட்களில் சமையல் செய்யாமல் கடையிலோ அல்லது தயிர் ஊற்றியோ சாப்பிட்டுக்கலாம் என்று சொல்லிவிடுவார். மாலதி ஏதாவது செய்யப் போனால் கூட தடுத்து விடுவார். அவளைக் கட்டிலில் படுக்க வைத்து அவள் கால்களை அமுக்கிவிட்டபடி மாலதியை துணைக்கு வைத்துக் கொண்டு வம்பிழுப்பார்.

‘ஏம்மாலா, உங்க சித்திக்கு என்ன மாதிரி ஒரு புருஷன் கிடைச்சதுக்கு குடுத்து வச்சிருக்கணுமில்ல. நீயே சொல்லு அவகிட்ட அருமெ தெரியாதவ…’

‘ஆமா சித்தப்பா’ என்று சொன்னால் அவளுக்கு சாயந்திரம் ரெண்டு வாழைக்காய் பஜ்ஜி கூடுதலாக கிடைக்கும்.

‘இப்ப என்னத்துக்கு அப்பனும் புள்ளையும் ஐஸ்கட்டிய மொத்தமா தூக்கி வெக்கிறீங்கெ?’

‘இல்ல சித்தி, ஒரே பையன் தான தினேஷ் அண்ணன் அது விரும்பற புள்ளயே கட்டிவச்சிட்டா என்னன்னு சித்தப்பா நெனக்கிறாரு போ…ல!’ மென்று விழுங்கினாள்.

‘என்னாது நம்ம சாதிசெனத்துல எத்தனை புள்ளைக இருக்காளுக ஊரு பேரு தெரியாதவள இவரு விரும்புனா கட்டி வெக்கணுமா?’ சித்தி பொரிய ஆரம்பித்தால் பேசாமல் அமைதி ஆகிவிடுவார் சித்தப்பா. அண்ணன் விஷயத்தில் மட்டும்தான் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது.

எதுவுமே நடக்காதது போல மறுநாளே சித்தியையும், மாலதியையும் சினிமாவுக்கு கூட்டிப் போய் விட்டு அவளுக்குப் பிடித்த ரோஸ் மில்க், காளி கடை பரோட்டா என்று வாங்கித் தருவார். அவர்களுக்கு பெண் குழந்தை இல்லாததால் மாலதி வீட்டுக்கு வந்தால் போதும். என்ன கேட்டாலும் கிடைக்கும், கேட்காமலும் கிடைக்கும். பாவாடை தாவணி, மிடி, சுடிதார் என்று விதவிதமாக வாங்கித் தந்துவிடுவார் சித்தப்பா.

மாலதியை கோயம்புத்தூரில் கட்டிக் கொடுத்திருந்தார் புகழேந்தி. வீட்டிற்கு வந்தவள் சித்தப்பா உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டவுடன் போலாம் என கலா அத்தைக்குப் போன் செய்தாள். அத்தை வீட்டுக்கு போனால் நிமிஷமாக கோழிக்குழம்பு வைத்து சாப்பிட்டு விட்டு போகலாம் என்று பிடிவாதமாக சொல்ல இருவரும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினார்கள்.

வேலு சித்தப்பா வீட்டுக்குள் நுழைந்தவுடன் ‘வாடா கண்ணு மாலா, சித்தப்பா எப்படி இருக்கேம்பாரு ’ என காண்பித்தவர் காலில் கஞ்சி குடிக்கையில் கைத்தவறி தெரியாமல் விழுந்து முழங்காலில் இருந்து பாதம் வரை தோலுரிந்து கிடந்தது.

‘அச்சச்சோ, சித்தப்பா என்னாச்சு?’ என்றவளிடம் சித்தி நீ வருமென்னு தலக்கறி கொழம்பு வச்சிருக்கா எடுத்துட்டு வா சாப்டுட்டு பேசலாம், என்றார்.

‘போங்க சித்தப்பா, ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா ஏன் யாருமே சொல்லல?.’

‘சொன்னா நீ சங்கடப்படுவேன்னு சொல்லல கண்ணு. புள்ள பசியோட இருப்ப மொதல்ல சாப்பிடு கண்ணு.’

‘நான் அத்தை வீட்லயே சாப்ட்டேன். இப்ப அதுக்கென்ன அவசரமா?’

சித்தப்பாவிற்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம்.

‘என்னது, அத்தை வீட்டில் சாப்டியா? உங்கத்தை நீ வரேன்னு சீக்குக்கோழிக் கொழம்பு அடிச்சுதா?’ என அத்தையை வம்பிழுத்தார்.

‘அத்தை செல்லக் கோபத்துடன் ஆமாண்டா தம்பி, எதோ எங்கைல உண்டானது. சீக்குக்கோழி கொழம்பா சாப்டு நான் என்ன செத்தாப் போயிட்டேன்.’

‘ஆமாமா, யாரு செத்தாலும் அப்படி தான். நாளைக்கு நாஞ்செத்தா மட்டும் ரெண்டு நாள் அழுதுட்டு எட்டா நாளே கறி விருந்து வச்சு சாப்டுவீங்க’ என்றவுடன் சித்தி, மாலதி, அத்தை மூன்று பேரும் ஒரு சேரக் கத்தினார்கள்…’எதுக்கு இப்படி எல்லாம் பேசறீங்க?’

அன்றிரவு ஆஸ்பத்திரி கூட்டிக்கொண்டு போனவரை இரத்தச் சர்க்கரையுடன் புண்ணாகி உட்புறம் புரையோடி விட்டதால் முழுக்காலை எடுக்க வேண்டுமென்றனர். சிகிச்சை வீரியம் தாங்கமுடியாமல் நான்கு நாட்களில் பிணமாக கிராமத்து வீட்டுக்கு வந்தார் வேலு சித்தப்பா.

 

3.

ஜெயாவிற்குக் கூடப் பிறந்த அண்ணன் தம்பி யாருமில்லை. பெரியப்பா பையன் என பொன்னுச்சாமி தான் பக்கத்து கிராமத்தில் இருந்தார். தங்கை ஜெயா மேல் தனிப்பாசம் என்றாலும் தண்ணியடித்துவிட்டு ரகளை செய்து விடுவதால் நல்ல விசேஷங்களுக்குக் கூட ஒப்புக்குத்தான் அழைப்பாள். ஜெயா மாமனார் இறந்த போதும் ரகளை. இன்று என்ன செய்வாரோயென யோசித்தபடியே இருந்தாள் ஜெயா.

காலை சாப்பாடு சாந்தி வீட்டில் சாப்பிட்டனர் பாதிபேர். தீட்டு சாப்பாடென்றும் எப்படியும் மதியத்துக்கு மேலாகி விடும் என்றும் பாதிப்பேர் கடைக்குச் சென்று டீ குடிக்க வர என்றிருந்தனர்.

‘ பொறந்த புள்ளைக எல்லாம் குளிப்பாட்டத் தண்ணி எடுத்துட்டு வாங்க’ என்றவுடன் பெண்கள் குடங்களைத் தூக்கிக்கொண்டு கிளம்பினார்கள். தெருமுனையில் இருந்த அடிபம்பில் எல்லோரும் குளித்து விட்டு ஈரச்சேலைகளுடன் அவரவர் குடங்களை எடுத்து தண்ணீர் நிரப்பி கதம்பப்பூக்களைப் போட்டனர்.

அதற்குள் சுந்தரம்மா ஆயா வீட்டுச் சார்பில் ராமச்சந்திரன் மகன்கள் மற்ற பங்காளிக்கட்டு ஆண்கள் குழுவாக கோடி எடுக்கக் கிளம்பியிருந்தார்கள். அவர்கள் சென்று இரண்டு மணி நேரம் ஆகியும் காணவில்லை என கூட்டத்தில் லேசான சலசலப்பு உண்டானது.

பொன்னுச்சாமி அரைப்போதையில் வேலு மகன் தினேஷிடம் வந்தார். ‘ஏம்பா, நானெல்லாம் கோடி எடுத்துட்டு வந்துட்டேன். அப்பன எப்ப நாளைக்கு எடுப்பீங்களா?’ என்றவுடன் தினேஷிற்கு கோபம் தலைக்கேறத் துள்ளி எழுந்தான்.

‘யோவ், அவனவன் அப்பன் போன கவலைல கெடக்கான். எங்கம்மாவுக்கு யாருமில்லைனு நீயென்ன நக்கல் பண்றியா? எவ்வளவு அதுப்பு இருந்தா இப்படி கேப்ப.?’

‘தம்பி, அவரோட என்ன வோரியாட்டம் நீ பேசாம இருடா’ என ராமச்சந்திரன் அவனை இழுத்து வந்தார். ராமச்சந்திரனைப் போல பொறுமையானவர்கள் அல்ல புகழேந்தியும், தினேஷூம்.. மூக்கு மேல் கோபம் வந்து சன்னதம் ஆடிவிடுவார்கள்.

‘இல்ல பெரீப்பா கடுப்பா இருக்கா இல்லியா அந்தாளு பேசறது?’ ஒவ்வொரு எழவுலையும் ஒரண்ட இழுத்துக்கிட்டு இருக்கான்.’

‘சரிடா தம்பி, நீ நம்ம பசங்களுக்கு போனப்போடு? ஏன் லேட்டுனு கேளு. எல்லாரும் காத்துக் கெடக்காங்கல்ல. நம்பூட்டுத் தேவ இது. அப்பனக் காடு சேத்தற வரைக்கும் நாமதான் பொறுப்பா இருக்கணு புரியுதா.?’

அதற்குள் குளித்துவிட்டு பெண்கள் குடங்களைச் சுமந்து தப்புத்தாள மேளத்தோடு வெள்ளை வேட்டி மேல்பந்தலாக பிடிக்க அதன் நிழலில் வந்து விட்டார்கள். பெண்கள் குடங்களை இறக்கி வைத்து விட்டு மீண்டும் எழவு கட்டினார்கள்.

‘பொன்னுச்சாமி ஓரமாக அமர்ந்திருந்தார். அவர் பங்காளி மகன்கள் இருவரும் என்னா பெரீப்பா உன்ன மதிக்க லியா? நீ தேன் தங்கச்சி தங்கச்சினு அலையிற. அவனுங்க ஒன்ன குண்டி‌ தொடைக்கிற கல்லுக்கு சமானமா கூட மதிக்க மாட்றானுங்க.?’

‘ஊய்க்காளிங்க…ங்கொம்மால …க்க இன்னிக்குப் பாருங்கடா என்ன பண்றம்னு…பொன்னுச்சாமிய வெத்துப்பயனு நெனச்சுப்புட்டானுங்க. எப்படி பொணத்தத் தூக்கறானுங்கனுங்கனு பாக்குறேன். வெளியூருக்கு போயிட்டா பவுசி வந்துரு மா…இவனுங்க இங்கே வாழ்ந்த வாழ்க்க எல்லாந்தெரியாதா? ரப்புத் தாயலிங்க கொட்டத்த இன்னிக்கு அடக்குறேன். போய் ரெண்டாயிரத்துக்கு பட்டாசு வாங்கிட்டு வாங்கடா’ அன்ட்ராயரில் இருந்து பணத்தை எடுத்து நீட்டினார்.

குளிக்க வைத்து வாசலில் கிடத்தி நான்கு குச்சிகள் நட்டு அதன் மேல்புறம் வெள்ளைத் துணியில் போர்த்தி வெயில் படாமல் கிடத்தினர் வேலுவை, ஜெயா எடுத்துத்தரும் வெள்ளை சட்டை வேட்டியோடு பாயில் படுக்க வைத்திருந்தனர். குளிக்கவைத்த பின் தளதளவென்று முகம் ஜொலித்தது. மற்ற சடங்குகள் ஒவ்வொன்றாக நடந்தன.

‘கோடி போடறவங்க எல்லாம் மந்தைக்குப் போங்கப்பா… தாளத்தோட அழைச்சிட்டு வாங்க…. பொறந்தவூட்டுக் கோடி தான் மொதல்ல.. பெறவு புகுந்த வூட்டுக்கோடி அப்பறம் ஆசைப்படறவங்க போடலாம். ஆம்பளமாருங்க எந்திரிச்சு மந்தைக்கு போவலாம் போங்க.’ ஆண்கள் கூட்டம் கலைந்து மந்தைக்குப் போனது.

வேலுவின் உயிர் நண்பன் மதி வெளியூர் போனதால் விஷயம் கேள்விப்பட்டு அப்போது தான் வந்து சேர்ந்தார்.

‘ஏம்மா ஜெயா, இந்த அண்ணன் நெனப்பு உனக்கு வரலியாடா. தகவலே இப்பத்தேன் தெரிஞ்சுது. அய்யோ, இந்த நேரம் பாத்து நானில்லாம போனனே. இந்தப்பய ஆசுபத்திரி போனதக்கூட சொல்லலியே. ஒரு வாரம் ஊருக்கு போனதுல என்னென்னவோ நடந்து போச்சே’ தலையில் அடித்துக் கொண்டு ஆவேசமாக அழுதார்.

‘அய்யோ அண்ணா, ரெண்டு பேரும் ஒண்ணுக்கொண்ணா பெணஞ்சு கெடப்பீங்களே இப்படி கடைசி நேரத்தில தள்ளி வச்சிருச்சே உங்கள. சாதிசெனத்த விட ஒங்களோடே சுத்துனவரு உங்ககிட்ட சொல்லாம போயிட்டாரண்ணா. போயிட்டாரண்ணா.’ அழக்கூட சக்தியற்று அவர் கரங்களைப் பற்றிக்கொண்டாள்.

மந்தையில் பிறந்த வீட்டுக் கோடி புறப்பட்டு விட்டது. பொன்னுச்சாமி தலையில் தாம்பாளத்தில் கோடித்துணியை வைத்து அழைத்து வந்தார்கள்.. மற்ற உறவுமுறைகளும் அவரோடு கூட நடந்தனர்.

தப்படிப்பவர்களை அழைத்தார் பொன்னுசாமி. புகழேந்தி, ராமச்சந்திரன் அவர்கள் பங்காளிகள் எல்லோரும் புகுந்த வீட்டுக்கோடி கொண்டு வர அடுத்தடுத்து நின்று கொண்டிருந்தார்கள்.

அவர்கள் காதில் விழும் படி ‘இந்த பொன்னுச்சாமிய கேவலம் பண்ணிட்டாங்க. நான் யாருனு அவிங்களுக்கு தெரியணு. பத்தடிக்கொருக்கா நின்னு நின்னு தப்படிங்கடா லேய்…பத்தடிக்கு எரநூறு பத்தடிக்கு எரநூறு… வெக்கிறே புரிஞ்சுதா’ என்றார்.

‘புரிஞ்சுதுங்க சாமி…அப்படியே செஞ்சிரலாம்.’

‘டங்டணக்கு டக்கு டக்கு டங்டணக்கு டக்கு டக்கு டங்டணக்கு டக்கு டக்கு டங்டணக்கு டக்கு டக்கு’ வேகமாக அடிக்கத் தொடங்கினர்.

‘இர்லே இர்லே நில்லுங்க நில்லுங்க… ந்தா எரநூறு அடி அட்டி அட்டி அடி.’

‘டங்டணக்கு டக்கு டக்கு டங்டணக்கு டக்கு டக்கு டங்டணக்கு டக்கு டக்கு டங்டணக்கு டக்கு டக்கு’ முழங்கியது பறைச்சத்தம்.

‘லே நில்லு நில்லு, அந்த பத்தாயிரம் வாலா பட்டாச எடுங்கடா, அல்லாம் நவுருங்க லே, டேய் சீனி , காசு குடுத்தன்ல எடுத்து வச்சி வெடிக்க உட்றா. இந்த சீமையில இப்படி ஒரு பொறந்தவூட்டுக் கோடி போறது இங்கேதான்னு தெரியணு.’

பத்தாயிரம் வாலா பட்பட்பட்பட்பட்டென்று அந்த ஊர் முழுவதும் கேட்கும் படி வெடித்துச் சிதறியது.

‘இப்ப அடிங்கடா… லே சீனி, சசி, எளஞ்சிட்டு எல்லாம் வந்து ஆடுங்கடா ….’

‘ந்தா எரநூறு அடி அட்டி அடி அட்டி அடி.. டங்டணக்கு டக்கு டக்கு டங்டணக்கு டக்கு டக்கு டங்டணக்கு டக்கு டக்கு…ஆட்றா எந்தங்கச்சிக்கு ஆருமில்லனு நெனச்சானுங்களா. அடிங்கடா, ஆடுங்கடா’ என அவரும் தாம்பாளத்தில் வைத்து ஆடியபடியே வந்தார்.

வாசலில் வேலு நண்பர் மதியின் அழுகை நிற்கவில்லை. ‘டேய், வேலு உன்ன இப்படி வந்துத்தான் நாம்பாக்கோணுமா சொல்லுடா, சொல்லு என்று கத்திய நண்பன் மதி அவர் வாங்கி வந்த வெள்ளை வேட்டியை எடுத்து வாஞ்சையோடு போர்த்திவிட்டு கீழே உட்கார்ந்து அவர் முகத்தில் தன் முகத்தை வைத்து அழுதார்.’

பொறந்த வீட்டுக்கோடி பத்தடிக்கு ஒரு முறை ஆடி வாசலை நெருங்கி விட்டது. மதி வேட்டியை முறை தெரியாமல் பட்டென்று போர்த்தி விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

பிணத்தை நெருங்கிய பொன்னுச்சாமி ‘டேஏஏஏய்’ என்று கத்தினார்.

‘ஏண்டா, எந்த எடுபட்ட பய சொம்பப்பய கோடி போட்டது மொதல்ல. ஈனப்பயலுவளா நம்ப வச்சுக் கழுத்தறுத்துட்டீங்களா. நாங்க எல்லாம் என்ன கேனப்பூனானு நெனச்சீங்களாடா… மந்தைல இருந்து பத்தடிக்கு எரநூறு போட்டு பத்தாயிரம் வாலா வச்சு வெடிச்சு எம்மச்சானுக்கு கோடி கொண்டு வந்தா இங்கே பொறவால வழில பூந்து எவம்டா போட்டது.’

‘நாம் போடக்கூடாதுனு மொத எவம்போட்டது சொல்றீங்களா இல்லியா? இதுக்கு பதில் சொல்லாம மச்சானத் தூக்குங்கடா பாத்துக்குறேன்.’

‘அண்ணெ, வேலண்ணன் பிரண்டு தெரியாமப்போட்டுட்டாருண்ணெ… கத்தி பிரச்சினை பண்ணாமல் அமைதியா இருங்க’ என்று பக்கத்தில் நின்று பெண்கள் சமாதானம் செய்தார்கள்.

‘எவனோ ஒரு ஈனப்பய அசலூர்க்காரன் போடுவான் நான் பெத்துப்பொறப்பா இருந்து கிட்டு வேடிக்கை பாக்கணுமா? வாங்கடா, லேய், வாங்கடா பாக்கலாம்’ என்று எகிறினார். தகவல் தெரிந்து புகுந்த வீட்டுக்கோடி போட நின்றிருந்த புகழேந்தி, ராமச்சந்திரனுடன் எல்லோரும் வந்துவிட்டனர்.

அதற்குள் தினேஷ் பொன்னுச்சாமியை நெருங்கி ‘லே, அம்மாவுக்கு சொந்தம் னு பேசாம இருந்தா காலைல இருந்து நீ செலம்பிகிட்டேருக்க..‌.நீ கோடி போட்டது போதும் ஓரமாப்போய்யா’ என்று அடிக்கப் பாய்ந்தான்.

ராமச்சந்திரன் ‘பொறுமையா இருங்கடா’ எனத் தடுக்க தடுக்க புகழேந்தி ‘டேய், தூக்குங்கடா தம்பிய சடங்கும் வேணாம் ஒரு மசுரும் வேணாம். எந்த மயிராண்டி என்ன பண்றான்னு நானும் பாக்குறேன். லே கண்ணுங்களா தினேசு, வாசு, விஜய் எல்லாம் தூக்குங்க’ என்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தேருக்கு எடுத்துச்செல்ல குனிந்து முதலில் புகழேந்தி தூக்கினார். வேலுவின் இறுதி ஊர்வலம் பட்டாசு வெடித்தபடி தடபுடலாக துவங்கியது.

 

4

பெண்கள் எல்லோரும் வீதி வரை சென்று அழுது திரும்பினர். ஒவ்வொருவராக குளித்துவிட்டு வந்து வீட்டைக்கழுவ ஆரம்பித்தார்கள். அரைமயக்கத்தில் ஜெயா சேரில் சாய்ந்து கிடந்தாள். கலா அத்தைதான் வந்து எழுப்பினாள்.

‘ஜெயா, எந்திரிம்மா, போன பய வரவாப்போறான். செத்த டீத்தண்ணியாச்சுங் கொண்டாங்கம்மா யாராவது’ என்று மாலதியைக் கண்டவள் அவளைக் கொஞ்சம் டீ எடுத்து வரச் சொன்னாள்.

தண்ணீரை அவள் முகத்தில் தெளித்து, ‘ஆம்பிளக வராங்காட்டி குளிக்கோணுமில்ல எந்திரியாயா’ மீண்டும் எழுப்பினாள் கலா.

கழுத்தில் ஒரு துணிக்கட்டும் தலையில் முக்காடும் போட்டிருந்தவளைக் கண்டு கலா கண்களில் தண்ணீர் வந்தபடியே இருந்தது.

‘இப்படி முண்ட முக்காடப்போட்டுட்டு போயிட்டானே பாவிப்பய. தெரிஞ்சு தேன் நாஞ்செத்தா கறிச்சோறு திம்பீங்கனு சொன்னானா டேய், தம்பி’ என்று கத்தினாள்.

ஒரு வழியாக எழுந்து ஜெயா குளித்தாள். கிணற்றடி கல்லுக் கட்டையில் காய்ந்த மாலதியின் சேலையை எடுத்துச் சுற்றிக்கொண்டு உள்ளே போனாள்.

காட்டுக்கு ஆண்கள் போனபிறகு தூரத்துச்சொந்தம் விசாரிக்க வந்திருந்தார்கள். ஜெயாவைப்பார்க்க அவர்கள் வாசலில் காத்திருந்தனர்.

அறைக்குள் புடவை கட்டச் சென்றவளைக் காணவில்லை என்று மாலதியைப் பார்த்து வரச் சொன்னாள் கலா அத்தை.‌

சித்தி இருந்த அறைக்குச்சென்று ‘சித்தி! சித்தி!’ அழைத்தாள் மாலதி. பதிலில்லை. மீண்டும் சித்தி என்றாள். எந்தப் பதிலும் வராமல் இருக்கவே கதவை லேசாகத் தள்ளி ஒருக்களித்துப்பார்த்தாள்.

சித்தப்பாவின் கல்லூரிக் காலப் பெரிய புகைப்படம் அறையில் மாட்டியிருந்ததை எடுத்து முந்தி கலைந்து போனது கூட தெரியாமல் நெஞ்சணைத்த புகைப்படத்தோடு முதுகைக் காட்டியவாறு சுருண்டு படுத்திருந்தாள். மாலதி உள்ளே சென்று அவளைத் தொட்டு ‘சித்தி சித்தி’ என அழைத்தாள். அவள் கூப்பிடுவதைக் கூட காதில் வாங்கிக் கொள்ளாம்ல ஜெயா சித்தி சித்தப்பா புகைப்படத்திற்கு முத்தமிட்டபடி பாடத்தொடங்கினாள்.

“பொன்னு மஞ்சி கட்டிலிலே
போத்தி படுத்துருந்தா
பொன்னு மெடலுமுண்டு
பொழுதொரு பேச்சுமுண்டு

நீங்க பொன்னு மஞ்சி கட்டிலிலே
போத்தி படுக்காமெ
பொன்னு மெடலெழுந்தே
பொழுதோரு பேச்செழுந்தே.

தங்க மஞ்சி கட்டிலிலே
நீங்க சாஞ்சி படுத்திருந்தா
தங்க மெடலுமுண்டு
தனியொரு பேச்சுமுண்டு

நீங்க தங்கமஞ்சி கட்டிலிலே சாஞ்சி
படுக்காம நான் தங்க
மெடலெழுந்தே
தனியொரு பேச்செழந்தே.”


 

எழுதியவர்

சுபி
கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் தொழிலின் பொருட்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். வரலாறு பிரிவில் எம்ஏ முடித்து விட்டு எம்ஃபில் படிக்கும் போது திருமணம் நிகழ்ந்தது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

காலடித் தடங்கள், தேம்பூங்கட்டி நோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கவிதை, கதைப் புத்தகங்களின் விமர்சனங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கவிதைகள் மட்டுமல்லாது எழுத்துலகின் அனைத்து வடிவங்களையும் தொட முயற்சிப்பவர் சுபி.

இனிய உதயம் இலக்கிய இதழ், உதிரிகள் இலக்கிய இதழ், கதிர்ஸ் மின்னிதழ், நுட்பம், மத்யமர், வாசகசாலை, படைப்பு, பட்டாம்பூச்சி, மக்கள் வெளிச்சம் நாளிதழ், பூபாளம், ற்றுவெளி‌ ஆகியவற்றில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
இயற்கை
இயற்கை
1 month ago

அற்புதமான எதார்த்தமான ஒரு கதைக்களம். மிக நேர்த்தியாக ஒரு துக்க வீட்டின் சித்திரங்கள் கண்ணெதிரே காட்சியாக விரிந்தன.
ஒவ்வொரு இடத்திலும் இந்தக் கதை தனது முடிவை நோக்கி கச்சிதமாய் பயணித்தது. அதுதான் ஒரு சிறுகதைக்கு அத்தியாவசியமான போக்கு என்றும் கருதுகிறேன். யார் யார் வந்தார்கள் என்னென்ன உறவு முறையில் இருந்தார்கள் யார் யார் சென்றார்கள் யாருக்கு உரிமை அதிகம் இன்று எத்தனை பேச்சுகள் எத்தனை தீர்வுகள் நிகழ்ந்தாலும் கடைசியில் மிச்ச காலத்திற்கு வேலுவோடு வாழ்ந்த ஞாபகங்கள் மட்டுமே அவரது மனைவிக்கு போதுமானதாய் அல்லது எதார்த்தமான துணையாய் அமைந்து விடுகிறது. அந்த ஞாபகங்களின் இடத்தில் எத்தனை பெரிய இதயத்தையும் வைத்து நிரப்பி விட முடியாது. ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை எல்லா பெண்களுக்கும் வாய்த்து விடுவதும் இல்லை. ‘போனால்’ போதும் என்கிற வாழ்க்கை வாழ்பவரும் இருக்கவே செய்கிறார்கள். என்றாலும் இது போன்றதொரு வாழ்க்கை வாழ்ந்து மறைந்து போவது பிறப்பிற்கான பெரும் ஆசியாக அமைகிறது. கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x