24 May 2025
Subi May 21

சுந்தரிக்கு அப்போது ஏழு வயதிருக்கும். செங்கல்லால் கட்டப்பட்டு நிறைவு பெறாமல் இருந்த எங்கள் வீட்டின் பெரிய காம்பவுண்டு சுவரையொட்டி கைசூப்பியபடி எப்போதும் நின்றிருப்பாள். எப்படி மாற்றி மாற்றி யோசித்துப் பார்த்தாலும் சாம்பல் நிறத்தில் ஒரு சட்டையும், அடர் ஊதா நிறத்தில் பாவாடையும் தவிர அவள் வேறெதுவும் அணிந்து பார்த்ததில்லை. அதுவே யாரோ தந்த பள்ளி சீருடை போலிருக்கும். அவளின் எண்ணெய் வைக்காத பரட்டைத் தலையும், மூக்கில் அடர்த்தியாக பச்சை நிறத்தில் பாதி வந்தபடி ஒழுகாது கெட்டியாக இருக்கும் சளியும் அவளை நெருங்கி பேசக்கூடத் தோன்றாமல் தள்ளி நிற்க வேண்டும் போலாகிவிடும். ஊமச்சி எங்கள் வீட்டில் வேலை செய்தபோது தினமும் சுந்தரியையும் அழைத்து வருவாள். அவளுக்கும் அவள் மகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். ஊமச்சி அவளை எவ்வளவு நேர்த்தியாக அழைத்து வந்தாலும் பத்து நிமிடங்களில் தன்னை அழுக்காக மாற்றிக் கொண்டு விடுவாள். 

ஊமச்சியை, ஆமாம் ஊமச்சி என்று அவளை அழைக்க நாங்கள் யாரும் கூச்சப்படவில்லை.. அதனால் குற்றவுணர்வும் எங்களுக்கு ஏதுமில்லை.. ஏன், தெருவில் இருந்த எல்லோரும் அவளைக் கைத்தட்டித்தான் அழைப்பார்கள். ஒருவருக்கொருவர் நாங்கள் பேசிக்கொள்ளும் போது ஊமச்சி வந்தாள், போனாள் என்றே பேசிக்கொள்வோம். அவள் வேலைக்கு வந்து சில வருடங்கள் கழித்துத்தான் அவள் பெயர் லட்சுமி என்பது தெரிந்தது. பெயரில் லட்சுமையை சுமந்தவளுக்கு சோற்றுக்குக்கூட சிரமம் என்று யோசிக்கையில் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. மேலும் தன் மகளுக்கு சுந்தரி என்று பெயர் வைத்திருப்பதற்கு நேர்மாறாக அவள் அழுக்கு சுந்திரியாக வலம் வருகையில் ஒரு பெயருக்கும், அதனை நாம் அழைப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று உறுதியாகத் தோன்றும்.

மெலிந்த தேகத்தோடு இருக்கும் ஊமச்சி எந்தக் கோவிலுக்குப் போனாலும் மரங்களில் வேண்டுதலுக்குக் கட்டித்தொங்கும் சிகப்பு சாமிக்கயிற்றில் ஒன்றை உருவி எடுத்துக் கழுத்தில் கட்டிக் கொள்வாள். பெருவிரலால் பட்டையாக அதன் அளவுக்கு விபூதியை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு காலையில் கிளம்பி வந்து விடுவாள். எல்லா வீடுகளிலும் வேலை செய்வாள். எங்கே வேலை செய்தாலும் எங்கள் வீட்டுத் திண்ணையில்தான் அவளுக்குப் பகலில் குடியிருப்பு. ஊமச்சியைக் கை வேலைக்கு, கடைக்குப்போக அழைக்க வேண்டும் என்றால் நேராக எங்கள் வீட்டுத் திண்ணையில் வந்துதான் பார்த்து விட்டுச் செல்வார்கள்.

எனக்கு ஊமச்சி பற்றி நினைத்தாலே மனதில் ஆச்சரியம் கிளம்பும். அடுத்த நேரம் சோற்றுக்கு நிரந்தர வருமானமில்லை. படுத்தால் ஒரு நேரம் காபி வைத்துத் தரக்கூட ஆளில்லை. ஒரு சின்ன கூரை சாப்பு மட்டும் அவளே வேய்ந்தது இருந்தது. சுந்தரியும் லேசாக மனநிலை பிசகியவள் போலத்தான் காணப்படுவாள். இத்தனைக்கு மத்தியிலும் ஊமச்சி முகத்தை ஒரு நாள் கூட அழுது நாங்கள் கண்டதில்லை. அவளுக்கு இந்த மாதிரியான ஒரு வாழ்வு பற்றிய எந்தப் புகார்களுமில்லை. தனக்கான எந்த வேண்டுதல்களுமில்லாதவளாக இருந்தாள்.

ஊமச்சியின் மகள் யாருக்குப் பிறந்தவள் என்று யாருக்குமே தெரியாது. ஊமச்சியின் கணவனோ, சுந்தரியின் அப்பா என்றோ ஒரு நாள் கூட யாரையும் நாங்கள் பார்த்ததில்லை. அம்மாவிடம் அவளுக்கு ரொம்பப் பிரியம் உண்டு. அம்மாவுக்கும். பகல் நேரத்தில் வீட்டில் வேலை முடிந்து திண்ணையில் உட்கார்ந்து கொள்ளும் அல்லது கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு ஓய்வெடுக்கும் அம்மாவிடம் அவள் எதுவும் கேட்காமலேயே ஓடி வந்து கால்களைப் பிடித்து அமுக்கி விடுவாள். வேண்டாம் என்று மறுத்தாலும் கேட்கமாட்டாள். வீட்டுக் கொல்லையில் ஓடி அங்கே சின்ன கண்ணாடியருகே வைக்கப் பட்டிருக்கும் தேங்காய் எண்ணெய் பாட்டிலை எடுத்து வந்து கைகளில் ஊற்றி அதை இரண்டு கைகளாலும் நன்கு சூடு பறக்கத் தேய்த்துப்பின் அம்மாவின் பாதங்களில் தடவி விடுவாள். அம்மாவுக்குத் திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டு சேலையை விலக்கப் பிடிக்காது. அது அம்மா சொல்லாமலேயே அவளுக்குத் தெரியும்.  கெண்டைக்கால் நுனி வரை மட்டும் இலேசாக சேலையை உயர்த்தி நகர்த்தி விட்டு அம்மாவின் வெடிப்பேறிய பாதங்களை எண்ணெய் கொண்டு நீவி விடுவாள். அம்மா தலைக்குக் குளித்து விட்டு கயிற்றுக் கட்டிலில் வந்து தலை காயவைத்துக் கொண்டு படுத்தால் போதும். அலுங்காமல் சென்று சுடுதண்ணீர் போட்ட அடுப்பில் கிடக்கும் தணலில் சாம்பிராணி போட்டு எடுத்து வந்து அம்மாவின் கட்டிலுக்குக் கீழ் வைத்து 

அவள் தலைமுடியைக் கோதி தலை முழுவதும் தனது கைகளால் அளைந்து சாம்பிராணி வாசத்தை ஏற்றி விடுவாள்.

நான் சிறு வயதாக இருக்கும் பொழுது தலைக்குத் தேய்த்து அவள்தான் ஊற்றி விடுவாளென்று அம்மா சொல்வாள். எனக்கும் நினைவில் அது தங்கியிருக்கிறது. ‘பர்ரக் பர்ரக் என்று ஒருவித ஓசையோடு அவள் தேய்க்கும் போது நான் கத்துவதை கண்டுக் கொள்ளவே மாட்டாள். தலை எனக்கு கழண்டு விழுந்து விடும் போலாடும். நல்லெண்ணெய் வைத்து ஏதோ ஒரு ராகம் போல பாடித் தேய்த்து சீயக்காய் போட்டு தலையை அண்ணார வைத்து  கண்களுக்கு வராமல் அலசி விடுவாள். வேலையாக இருக்கும் அம்மாவிடம் தலையில் பேன் இருக்கிறது ‘ஙேஙே எனத் தலையைக் காண்பித்து அவளிடம் குறைப்பட்டுக் கொண்டே தலை அலசுவாள். அம்மாவின் பஞ்சு போன்ற பழைய வாயில் புடவைகள் அனைத்தும் ஊமச்சியிடம் இருக்கும். அதை அழகாகத் துவைத்து மடித்துக் கட்டிக்கொண்டு வந்து விடுவாள். சில நேரங்களில் என்னை வம்படியாக மடியில் இழுத்துப் போட்டுக்கொண்டு ஈரு குத்துகிறேன் என இரண்டு பெருவிரல் நுனிகளை வைத்துத் தலையில் நங்கு நங்கென்று இடிப்பாள். அம்மாவின் வாயில் புடவையும், அவள் இடிப்பதும் ஒணக்கையாக இருக்க நான் அவள் மடியிலேயேத் தூங்கியிருப்பேன் என்று அம்மா சொல்வாள். அப்படித் தூங்கியதும் விலக்கி அம்மாவின் அருகில் படுக்க வைத்து விட்டு இருவருக்கும் முத்தி வைத்து நெட்டி முறித்து கைகளில் சொடக்கு எடுப்பாளாம். அது மட்டுமல்ல அம்மாவின் கால்களை வெடுக்கென்று இழுத்து எல்லா விரல்களையும் பக்கவாட்டில் ஆட்டிப் பார்த்து ஒவ்வொரு விரலாக சொடுக்கெடுப்பாளாம். அப்போது அவள் கைகள் காப்புக் காய்த்து சொரசொரவென்றிருக்கும் .‌.பதமாக இருக்காது. ஆனால் அதுவே தனக்குப் பிடிக்கும் என்பாள் அம்மா.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ஊமச்சிக்கு இரண்டு விஷயங்களுக்கு மட்டும் கோபம் வந்து விடும். சுந்தரியின் அப்பா யார் என்று யார் கேட்டாலும் அதிகமாக ஒலியெழுப்பிக் கத்தி விட்டு வந்துவிடுவாள். அதேபோல் யாரும் அவள் முன்பு மூக்கைச் சொறிந்து விடக்கூடாது. துரத்திக்கொண்டு போய் கல்லெடுத்து வீச ஆரம்பிப்பாள். அம்மாவிடம் மட்டும் சுந்தரியின் அப்பா யார் என்று ஒரு முறை சொல்லி இருந்திருக்கிறாள். அம்மா ஒரு முறை கேட்டபோது அவள் முகம் மிகவும் கொடூரமாக மாறிவிட்டதாம். கண்கள் முழுவதும் சிவந்து கோபம் கொப்பளிக்க அவளது இரண்டு கைகளையும் மடக்கி நீட்டி முன்புறமாக விரித்து ‘நாசமாய்ப் போகட்டும் என்பது போல சைகை காண்பித்தாளாம். அவனோடு அம்மா சேர்த்து வைக்கிறேன் என்றவுடன் நாண்டுக்கிட்டு தொங்குனாலும் தொங்குவேன் அவனோடு போகமாட்டேன் என்றாளாம். அதிலிருந்து அம்மா அந்தப் பேச்சை எடுக்கவே இல்லை.

அம்மாவோடு நான் இருக்கும் நேரத்தில் இல்லாத நேரத்திலென அவளோடு தினமும் பேசுவது எனக்கொரு விளையாட்டு. அந்த சைகை மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அந்த வயதில் மிகப்பெரிய ஆசையாக இருந்தது. பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எனது ஆசைகளில் முதலாவதாக சைகை மொழியைக் கற்க வேண்டும் என்ற விருப்பம் உருவானது ஊமச்சியால்தான். ஆம். அவள் சொற்களுக்கு சொந்தக்காரி. 

அவளிடம் நிறைய சொற்கள் இருந்தன. ஒருநாள் காலையில் விபூதிப் பட்டையோடு வந்த அவளிடம் நீ என்ன வேண்டிக்கொண்டாய் சாமியிடம் என்றேன்…கைகளைக் கோபுரம் போல் செய்து, அவள்  புன்னகைத்தபடி இந்த உலகை இரண்டு உள்ளங்கைகளால் விரித்துக் காண்பித்தாள். அவளே என் தலைமீது கைவைத்து நெட்டிமுறித்து மேவாய் நீவி உனக்கும்தான் எனக் காண்பித்தாள்.

ஊமைகளுக்கு மூக்கைச் சொறிந்தால் கோபம் வருமென்றதால் துடுக்கின் உச்சத்தில் ஓடி அதைச் செய்து காண்பித்தேன். கோபம் வந்து ஆட்காட்டி விரல் மேல் நடுவிரலை வைத்து காய் விட்டாள். ‘ஙேஙே என்னோடு பேசாதே போ என்றாள்.

மறுநாள் அவள் வந்தபோது துணுக்குற்று அவளிடம், அம்மா எனக்குத் தந்த சூடான இட்லிகளில் இரண்டை எடுத்துத் தந்தேன்.  ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் ஒன்றன் மேல் ஒன்றாய் வைத்துக் காண்பித்தேன்.  வேறு விதமான ‘ஙேஙே ஒலியோடும் குழறலோடும் கண்ணீர் துளிர்த்தபடி அதை ஒன்றாக்கிப் பழம் விட்டு எனக்கு முத்தி வைத்தாள். என்னிடம் மட்டுமல்ல எல்லோரிடமும் பேசிப் புரியவைக்க, புரிந்து கொள்ள அவளுக்குச் சொற்கள் இருந்தன. ஆம். அவள் சொற்களைப் பெற்றெடுத்த மகராசி.

மகள் சுந்தரி கொஞ்சம் மனம் பிசகியவள் போலிருந்ததால் ஆடை பற்றியோ சுத்தம் பற்றியோ விழிப்புணர்வு இல்லாதவளாக இருந்தாள். ஊமச்சி எத்தனை முறை சரி செய்து வைத்தாலும் கலைத்துக் கொள்வாள் தலைமுடிகளை. அதனால் தான் இருக்கும் போதே அவளை யார் கையிலாவது பிடித்துக் கொடுத்து விடவேண்டும் என்று அம்மாவிடம் சொல்லியபடியே இருந்தாள். ஒரு நாள் திடீரென சுந்தரியை ஒரு வயதான ஆளோடு மாலை போட்டுக் கூட்டி வந்திருந்தாள். தூரத்து வகையில் சொந்தம் என்றும்‌ அவனுக்குக் கட்டிவைத்து விட்டதாகவும் வேறு யாரும் அவளை மணக்கத் தயாராக இல்லை என்றும் சொல்லி அம்மாவை ஆசீர்வாதம் செய்யச் சொன்னாள். அவனைப் பார்க்கவே அம்மாவிற்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு சுந்தரியை அதுவும் லேசாக மனம் பிசகியவளைக் கொண்டு போய் அவனுக்குத் தந்ததைச் சொல்லி அவளைத் திட்டிக் கொண்டிருந்தாள் அம்மா.

அம்மாவின் சில நல்ல புடவைகள் ஊமச்சியிடம் இருந்து சுந்தரிக்குக் கைமாறியிருந்தன. வெட்கப்பட்டுக்கொண்டே ஒரு நாள் வந்தவள் அம்மா முன்பு மூக்கு ஒழுகாமல் அவள் புடவையைக் கட்டிக்கொண்டு வந்து நின்றாள். அவள் அம்மா புடவையைக் கட்டியிருந்ததை அம்மா ஏனோ விரும்பவில்லை. ஊமச்சி தான் சேர்த்து வைத்திருந்த காசில் இரண்டு ஆடுகளையும், சுந்தரிக்கு சில தட்டு முட்டு சாமான்களையும் வாங்கித் தந்திருந்தாள். இரண்டு ஆடுகளை மேய்த்து வயிறு வளர்த்துக் கொள்ளட்டும் என்று அம்மாவிடம் சொல்லியபடியே இருந்தாள். ரெண்டு ஆடு ரெண்டு ஆடு என்று கைகளால் ஜாடை காண்பித்துக் கொண்டிருந்தாள். ‘ரெங்ங்ஙி ஆங்ங்ஙி என்று அவள் பாஷையில் சொல்லும் போது தானே உழைத்துச் சம்பாதித்த பெருமையும், இந்த உலகில் யாருமே செய்யாத ஒரு சீரைத் தன் மகளுக்குத் தந்துவிட்டது போலும் அவளது கண்களில் ஓர் ஒளி மின்னி மின்னி மறையும்.

ஒரு நாள் சுந்தரியைச் சென்று பார்த்து வருவதற்காக அம்மாவிடம் மூன்று நாள் விடுமுறை கேட்டுக் கிளம்பினாள். அம்மாவின் ரேஷன் கார்டை வாங்கிச் சென்று பருப்பு, அரிசி, சர்க்கரை போன்றவற்றை எப்போதும் வாங்கி வைத்துக் கொள்பவள் இந்த முறை அதையெல்லாம் மகளுக்கு மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பினாள். அவள் செல்லும் முதல் நாள் தெரு முழுவதும் ஒவ்வொரு வீடாகச் சென்று ‘சுங்ஙஙரி வீங்ஙங்டுங்ஙு போறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். டவுன் பஸ்ஸில் பத்து ரூபாய் டிக்கெட் எடுத்துப் போகும் அளவு தூரத்துக்கு எதுக்குடி இத்தனை அலப்பறையென எல்லோரும் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். 

ஊமச்சி எப்போதும் கோடாலிக்கொண்டைதான் போட்டிருப்பாள்.. அம்மாவின் வாயில் புடவை உடுத்தி கோடாலிக்கொண்டையுடன் விபூதி வைத்து சிகப்புக் கயிறோடு வரும் போது ‘ஏண்டி, உனக்கேக் கல்யாணம் பண்ணலாம் போலயே என்று தெருப்பெண்கள் யாராவது கிண்டல் செய்தால் போதும் ஊமச்சி முகம் செக்கச்சிவந்து வெட்கத்தில் தள்ளாடும். ‘போங்ஙங்ங்ஙக்ஙா என்று குழறியபடி விழுந்து விழுந்து சிரிப்பாள்.  அவள் மாநிறத்தில் இருக்கும் எளிமையான அழகி. இப்பவே இப்படி இருக்காளே வயசுல எப்படி இருந்திருப்பா அதான் யாரோ புள்ளயக்குடுத்துட்டுப் போயிட்டான் போல என்று தெருப்பெண்கள் அவளைப் பற்றி குசலம் பேசிச் சிரிப்பார்கள்.

பருப்பு, அரிசி, சர்க்கரை மூட்டைகளோடு பெருமையாகப்போய் சுந்தரி வீட்டில் இறங்கியவளுக்கு சுந்தரி கிடந்த கோலம் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. மருமகக்கிழவன் ஆடோட்டிச் சென்றிருந்தான். ஊமச்சி அவளை உலுக்கி எழுப்பி என்னாச்சு என்று அழுதுகொண்டே விசாரித்தாள். இரண்டு ஆடுகளை மேய்ப்பது செலவுக்குப் போதவில்லை என்றும் உங்கம்மாவிடம் போய் இன்னொரு ஆடு வாங்கி வா என்றும் அவளிடம் சொல்லியிருக்கிறான். அம்மா பாவம் அவளால் அதெல்லாம் முடியாது என்றவுடன் சண்டை வலுத்து அவளை அடித்துப்போட்டிருக்கிறான். அவள் அம்மாவைக் கஷ்டப்படுத்த மனமின்றி அழுதவாறே கிடந்திருக்கிறாள் என்பது தெரிந்ததும் ஊமச்சி தலைதலையாக அடித்துக் கொண்டு அழுதாள். ‘நாஙஙமாப் போஙாஙாஙாவஙஙே என கைகளால் சத்தமாக முறித்து சாபமிட்டாள். சுந்தரி எதுவும் சமைக்கவில்லையென்று அவளை எழுப்பிக் கடையில் வாங்கி வந்த இரண்டு வடைகளைப்  பிட்டு ஊட்டிவிட்டாள். அவன் வந்தவுடன் நான் பேசிக்கொள்கிறேன் எனச்சொல்லி மறுநாள் சுந்தரியை ஆடுமேய்க்க அனுப்பினாள்.

சுந்தரி ஊருக்குச் சென்று வந்ததில் இருந்து ஊமச்சி முகம் சரியில்லை, வாடியிருக்கிறதென அம்மா கண்டுபிடித்து விட்டாள். எப்போதும் போல கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டு காலை நீட்டியபடி பேசிக்கொண்டிருந்தாள் அம்மா ஊமச்சியிடம். திடீரென கால் பாதங்களில் ஒன்றிரண்டு கண்ணீர்த்துளிகள் விழுந்தது கண்டு அம்மா அவள் முகத்தைத் தூக்கினாள். கண்கள் கலங்கி இருந்தவுடன் பதறிப்போய் விசாரித்தாள் அம்மா. ‘இங்ங்ஙிங்ஙிஙேமே சுந்தரி ஊருக்குப் போகமாட்டேன் போகமாட்டேன் எனக்கத்தினாள். தலையில் அடித்துக் கொண்டு தப்பு செஞ்சிட்டேன் புள்ளயக் கொரங்கு கைல புடிச்சிக் குடுத்துட்டேன் என்று சைகையில் சொல்லி கண்ணீர் பெருக்கினாள். சுந்தரி ஆடோட்டிச் சென்ற நேரத்தில் இருவருக்கும் ஆடு சம்பந்தமாக கடும் விவாதம் வந்திருக்கிறது. அவளைக் கண்டபடி பேசியதோடல்லாது சுந்தரி பிறப்பு குறித்து இழிவாகப் பேசியவன் அவள் வாயில் துணியை வைத்து அடைத்து அவளைப் புணர்ந்திருக்கிறான் மருமகக்கிழவன். அவன் சுந்தரி வயசுக்குத்தான் கிழவனேயொழிய ஊமச்சியை விட கொஞ்சம் மட்டுமே மூத்தவனாக இருந்திருக்கிறான். கட்டவிழ்த்து அவனை அடித்துத் தப்பி சுந்தரியிடமும் சொல்ல முடியாது ஓடி வந்துவிட்டாள் இவள்.

சுந்தரி, அம்மா ஏன் சொல்லாமல் ஓடிவிட்டாளெனப் புரியாது புலம்பியிருப்பாளென்று அம்மாவிடம் அழுதழுது மாய்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். தெருக்காரர்கள் யாரையேனும் அழைத்துப்போய் பஞ்சாயத்து செய்து சுந்தரியை அழைத்து வந்து விடலாம் எனச்சொன்னாள். தன் வாழ்வில் எப்போதும் சிரித்தே எல்லாவற்றையும் கடந்து போனவளுக்கு சில நாட்களில் அழுகை நிரந்தரமானது. 

அன்று காலை எல்லாவற்றையும் மறந்து அருகில் இருக்கும் முத்தாலம்மன் கோவிலுக்குப் போய் வேண்டிக்கொண்டு வந்ததாக விபூதி எடுத்து வந்திருந்தாள். அம்மாவின் அரக்குநிறப் புடவையில் மஞ்சள் நிற பார்டர் வைத்த ப்ளெய்ன் புடவை அணிந்து வந்திருந்தாள். எண்ணெய் வைத்துப் படிய வாரி கோடாலிக்கொண்டையும், புடவையும், விபூதிப் பட்டையும் அவள் அழகை மேலும் கூட்டியிருந்தன. மலைமீது ஏற்றியிருக்கும் தீபம் போல நெடுந்தூரத்தில் இருந்து வரும் போதே அவள் ஒளி மின்னியபடியே இருந்தது. பளிச்சென்று துலக்கிய பித்தளை விளக்கு போலிருந்தது அவளது முகம். சுந்தரிக்கு மட்டும் தான் வேண்டிக்குவியா, எனக்கு வேண்டிக்கலயா என்றேன் அவளிடம். எப்போதும் போல சிரித்தபடி கைகளால் உலகளந்து காண்பித்தவள் உனக்கும் தான் என என் நெற்றியைத் தொட்டு முத்திவைத்தாள். பாரு எவ்வளவு திருஷ்டி என சொடக்கு சப்தங்களைச் சுட்டிப் பேசினாள். மகிழ்ச்சியா, கவலையா என அறியாதபடிக்கு இரண்டொரு நீர்த்துளிகள் அவள் கண்களில் திரையிட்டு நின்றன.

இரவு வழக்கம் போல அம்மாவிடம் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுவிட்டுச் சென்றவள் காலையில் வெகுநேரம் ஆகியும் வரவில்லை. ஆள்விட்டுத் தேடியபோது தான் அந்த அதிர்ச்சித் தகவல் தெருவுக்குள் வந்தது. அவள் வீடு இரவோடு இரவாகப் பற்றி எரிந்ததாகவும் அவளின் ‘ங்ஙேஙேஙேஙே ஒலி கேட்டு எல்லோரும் ஓடி அணைப்பதற்குள் கூரை சாப்பு முழுவதும் பற்றியெரிந்து விட்டதாகவும் அவளை உயிரோடு காப்பாற்ற முடியாமல் எரிந்து விட்டாள் என்றும் சொன்னார்கள். தெருவே ஊமச்சி இறந்த சேதி கேட்டு ஓடியது. அனைவரும் அம்மாவை அழைத்தபோது போவதற்கு மறுத்து விட்டாள். அன்று காலையில் இருந்து அம்மா எதுவும் சாப்பிடாமலே கிடந்தாள். என்ன நினைத்தாளோ ஊமச்சிக்குத் தந்த இரண்டு வாயில் புடவைகளை ஆற்றில் விடச் சொல்லிக் குடுத்து விட்டாள். சமாதானம் அடையாமல் கிடந்தவள் எழுந்து தலைக்கு ஊற்றிக்கொண்டு வந்து தலை காயும் படியாக கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டாள். நான் சென்று பார்த்தபோது ஒருக்களித்தவாறு அவள் முதுகுப் பகுதி மட்டும் தெரிந்தது. அம்மா என்ன செய்து கொண்டிருக்கிறாளென ஊன்றிக் கவனித்தேன். காற்றில் கைகளை ஆட்டி ஆட்டி சாடை காண்பித்தபடி யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள்.


 

எழுதியவர்

சுபி
கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் தொழிலின் பொருட்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழைய ஜெயங்கொண்டசோழபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். வரலாறு பிரிவில் எம்.ஏ முடித்து விட்டு எம்ஃபில் பட்டபடிப்புகள் நிறைவுச் செய்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு, சென்னையில் வசித்து வருகிறார்.

காலடித் தடங்கள், தேம்பூங்கட்டி நோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கவிதை, கதைப் புத்தகங்களின் விமர்சனங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கவிதைகள் மட்டுமல்லாது எழுத்துலகின் அனைத்து வடிவங்களையும் தொட முயற்சிப்பவர் சுபி.

இனிய உதயம் இலக்கிய இதழ், உதிரிகள் இலக்கிய இதழ்,
கதிர்ஸ் மின்னிதழ், நுட்பம், மத்யமர், வாசகசாலை, படைப்பு, பட்டாம்பூச்சி, மக்கள் வெளிச்சம் நாளிதழ், பூபாளம், காற்றுவெளி‌, சிற்றுளி ஆகியவற்றில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

கலகம் இணைய இதழ், நடுகல் இணைய இதழ், வாசகசாலை இணைய இதழ், தமிழ்ப்பல்லவி அச்சு இதழ் ஆகியவற்றில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன.

க.சீ. சிவகுமார் நினைவு இயக்கம் நடத்தியதில் இவரது ‘காவன்மரம்’ சிறுகதை பரிசு பெற்றுள்ளது.

‘மாதவிடாய் சிறப்பிதழ்’ மற்றும் ‘ ‘உணவு சிறப்பிதழ்’ கட்டுரைகள் புழுதி இதழில் வெளிவந்தது. ‘காதல் _ ஹார்மோன்களின் விளையாட்டு’ கட்டுரை ஹர்ஸ்டோரிஸ் பதிப்பகத்தின் புத்தகத்திலும், ‘பேசாப் பொருளைப் பேசத் துணிவோம்’ கட்டுரை திருச்சி ஆத்மா மனநலை மருத்துவமனை வெளியிடும் மருத்துவ இதழிலும் வெளியாகி உள்ளது.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Karthi Karthikeyan
Karthi Karthikeyan
2 days ago

உணர்ச்சி ததும்பும் காவியம்.. அற்புதமான எழுத்து நடை…. எழுத எழுத மெருகேறுகிறது உங்கள் எழுத்துக்கள்….

இயற்கை
இயற்கை
1 day ago

எல்லாமே திடுக்கென நடக்கின்றன. கோர்வையான கதைச் சொல்லும் முறையில் நேர்த்தி என்றாலும் சுந்தரி கல்யாண வயதுக்கு வந்துவிட்டக் கால மாற்றம் பிடிபடவில்லை. டையரிக் குறிப்பு போலவும் வாசிக்கையில் தோன்றியது. ஆனால் எதிர்மறையான முடிவைத் தர துணிச்சல் வேண்டும் அது முடிவுக்குள் மறைக்கப்பட்டிருக்கும் உண்மையின் மீதான நம்பிக்கையில் வருவது. இந்த முடிவில் கதைசொல்லியின் அம்மா ஊமச்சியோடு தொடர்கிறாரா அல்லது ஊமச்சியாகத் தொடர்கிறாரா என்பதில் அசத்தியிருக்கிறார். வாழ்த்துகள்..

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x