
முகத்துக்கு நேரே வீசியெறிந்த கோப்பிலிருந்து தாள்கள் லேசான தகடு போல தனித்தனியாக பறந்து அறையில் இறங்கியது.
“சரி பண்ணி வீட்டுக்கு கொண்டு வந்திடு. urgent.”.. சொல்லிக் கொண்டே கிளம்பிவிட்டாள் வாஸந்தி.
பூர்ணிக்கு அவமானத்தில் கண்கள் தளும்பிவிட்டது. முதலாளியென்றால் கொம்பு முளைத்துவிடுகிறது. ஏதோவொரு சாக்கு…. கால்களை மண்ணில் எத்தி நெம்புகிற மூர்க்க மாடு போலவே சதா அலைகிறாள். அவளைப் பொருத்தமட்டில் எல்லாரும் மண்ணாங்கட்டிகள்.
வாஸந்தி உடம்பு ஊற்றுநீர்ப் புழுங்கலில் மழமழப்பாகின ஜில்லென்ற கருங்கல். மனசும் கருங்கல்தான்.
அது சூடான கருங்கல். கறுப்பு நிறம் அப்பாவிடமிருந்து வந்திருக்குமாக்கும். அவளைக் கரும்புக்காரி என்றும் சொல்லமுடியாது.
கொற்றவை..ம்… கொற்றவை தான் பொருத்தமாயிருப்பாள். மண்டையோட்டு மாலையைக் கழற்றி வைத்துவிட்டு ஜீன்ஸ் அணிந்து கொண்டு முலைகள் அதிர தொம் தொம்மென்று பவனி வருகிறாள்.
அரைப் பார்வைக்கு நேராக வந்துவிழுகிற கருள் கற்றையை காதுக்குப் பின்னால் இழுத்து விட்டுக்கொண்டே எதிரி நாட்டுக்காரனை துப்பாக்கி முனையில் நிறுத்தியதைப் போல அலுவலகத்து பணியாட்களை கையாளுகிற திமிரிருக்கிறதே..
நடுங்கிக் கொண்டிருக்கிறவனுக்கும் துளியூண்டு ஸ்கலிதமாகிவிடுகிறபடி எந்தக் கோணத்திலிருந்தும் வசீகரிக்கிற கருங்கல். கற்சிலைக்கு கண்திறக்கிற சடங்கில் முகம் பார்க்கிற கண்ணாடி நொறுங்கி விடுகிறதைப்போல ஒளியை உள்வாங்கி பீச்சுகிற அந்தக் கண்களுக்குத்தான் எத்தனை தீட்சண்யம்.. பூர்ணியும் நொறுங்கியிருக்கிறாள். கண்களை நேரே பார்க்கும்போதெல்லாம் மின்னலொன்று விறுவிறுவென்று பரவி ரகஸிய அங்கங்ளை மலர்த்தும்.
“ச்சீ என்ன இது”… என்று தலையை சிலுப்பிக்கொள்வாள்.
நேரமாகிவிட்டது கோப்புகளை தூக்கிக்கொண்டு காரில் புறப்படும்போதே இருட்டிவிட்டது. மெதுவாய் ஆரம்பித்த தூரல் பலத்து கார்க் கண்ணாடி வழியே தாரைதாரையாய் இறங்கியது. அனேக தடவை அலுவல் நிமித்தம் வாஸந்தி வீட்டிற்கு சென்றிருக்கிறாள் ஆனால் இன்று கொஞ்சம் பதற்றமாயிருந்தது.
அவ்வளவு பெரிய பங்களாவில் தனியே வசிக்கிறாள். பெரிய சுற்றுச்சுவர். இரும்பு கிராதியைத் தள்ளி திறந்து விட்டான் காவலாளி. ஜெர்மன் ஷெப்பர்டு காரிடாரில் உறுமிக்கொண்டே வாலாட்டியது. மாடியறைக்கதவை மெல்ல தட்டினாள்.
“யெஸ்” உள்ளவா பூர்ணி.
“மேம் ஃபைல் ரெடி.”
“முதல்ல உக்காரு. சாரி.. நான் அப்படி நடந்திட்டிருக்ககூடாது. டென்ஷன்ல…. சாரி….”
‘ஐயோ மேம் பரவால்ல “- ஒரு மாதிரியாகிவிட்டது பூரணிக்கு.
“ஓ…உனக்கு சாரி – கூட சொல்லத் தெரிந்திருக்கிறதே” உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்.
வாஸந்தி கைகளில் வாங்கிய கோப்புகளை டீப்பாயின் மீது வைத்தாள்.
அப்போதுதான் பூரணி அதை கவனித்தாள். டீபாயின் மீது வைக்கப்பட்டிருந்த பூக் குடுவை… கொஞ்சம் வித்தியாசமாய் இருக்க என்னவென்று உற்று நோக்கியபோது நாயுருவியேதான். மேல்நோக்கிய நீட்சிகள் நுனியில் சின்னஞ்சிறுவயலட் நிற பூக்கள். அழகாயிருந்தது. வாஸந்தியின் விருப்பங்கள் கூட வித்யாசமானதாயிருக்கிறது.
அவள் எழுந்து பூர்ணியிடம் நடந்துவந்தாள். எழுந்து நடந்தாளா அல்லது தரை வழுக்கிக்கொண்டு பின்னால் நகர்ந்ததா?
அலட்சிய நடை.
பூர்ணிக்கு நெருக்கமாய் சோபாவில் அமர்ந்து கொண்டு தயாராய் இருந்த உயர்ரக மது போத்தலின் மூடியை லாவகமாய் நெம்பித் திறந்தாள்.. கசப்பு தெறிக்கிற பொன் திரவத்தை கண்ணாடி கோப்பைகளில் சரியான அளவில் ஒரு கோடு போல இறக்கி கோலிகுண்டு பனிக்கட்டிகளை ஃபோர்ஸப்ஸில் கவ்வி கோப்பையுள் விட்டாள்.அது’க்ளிங்’கென்று விழுந்தது.
கண்ணாடிக் குளிர். பொன் திரவ எரிச்சலை ஆலிங்கனித்தது.
“எடுத்துக்கோ”….தயங்கினாள் பூர்ணி.
“பழக்கமிருக்குல்ல”
ஆமாம்! எனும்படி தலையசைத்தாள்.
“பின்னே.?… எடுத்துக்கோ”…
எடுத்துக்கொண்டாள் பூர்ணி.
“சியர்ஸ்”…
சிப்பினாள்.
போதையுடன் வாஸந்தியை அவ்வளவு அருகில் கண்டபோது தடுமாறினாள். ஒப்பனைகள் கலைத்தபின்னும் அந்த உதடு இளஞ்சிவப்பில் ஈரமாய் மின்னியது.
“ஐயோ என்ன இது ஏன் இப்படி தளும்புகிறேன்”…
வாஸந்தி மீதிருந்து இழை இழையாய் எழும்பின ஃபெர்பியூம் தான் கிறக்கத்திற்கு காரணமா… மெலிதாக உள்நாக்கில் இனிக்கற வாசனையா….. இல்லையில்லை அந்தக் கருங்கல் அழகு…. அடி ஆழத்தில் நான் இவளை மோகித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் தான் சிறு ஸ்பரிசமும் என்னைத் தடுமாறச் செய்கிறது..
வாஸந்தி உட்கார்ந்த வாகிலேயே இடக்கரத்தால் பூர்ணியின் முதுகை வளைத்து தோள்களை அழுத்தினாள்.
‘ஜிவ்’வென்று இருந்தது பூர்ணிக்கு.இன்னும் விரிவதற்கு நாட்களிருக்கிற பச்சையத்தோடிருக்கிற காயரும்பு மெல்ல விடைத்துக்கொண்டது யுத்தகளத்தில் ஆயுதத்தை தயாராய் தூக்கிப் பிடிப்பதைப்போல..
வாஸந்தி குழல்விளக்கு வெளிச்சத்தை நிறுத்திவிட்டு கிராம்போனை ஆரம்பித்தாள். மெல்ல குழைந்து விரவிய இசை அறையின் சுவரில் படிந்திருந்த ஏசி குளிரை அடர் பனியாய் திரித்துக் கொண்டிருந்தது. இப்போது பூர்ணி மலையுச்சி பனிப் பிரதேசத்தில் சஞ்சரிக்கிறாள். மூச்சுக்காற்று புகையாய் படர்கிறது. புகையிலிருந்து யட்சணியாய் எழுகிறாள் வாஸந்தி. கரைந்து கரைந்து கூடுகிறது அவளின் பிம்பம்…
சிறுகச் சிறுக காய், செங்கனி, நிலையிலிருந்த இரு உடல்களும் இன்று காமத்தில் கனிந்து வெடிக்கிற பருவம்போல. இன்று வந்திருக்கக்கூடாது. ஏதாவது காரணம் சொல்லி கோப்புகளை யாரிடமாவது கொடுத்து விட்டிருக்கவேண்டும்.
வாஸந்தியின் உடல் ஊதா நிறத்துப் பெளர்ணமியாய் அருகில் மிக அருகில் இறங்கி கிரணங்களால் தழுவுகிறதையும், தன்னுடல் மாமை நிறத்து கடலாய் எழும்பி விழுந்து ஆர்பரிக்கிறதையும் அப்பட்டமாய் உணரமுடிகிறது.
“மேம்…. வந்து”….
“கால் மீ வாஸந்தி ப்ளீஸ்”
” வாஸந்த்த்த்தீ”…சொல்லிப் பார்த்து கிறங்கினாள் பூர்ணி.
அறையின் அரையிருட்டுக்கும்,
வாஸந்தியின் எண்ணத்திற்கும்,
கமழும் நறுமணத்திற்கும்,
தவழும் மெல்லிசைக்கும்,
பச்சோந்தியாக நிறமாறிக்கொண்டிருந்தாள் பூர்ணி.
ஒவ்வொரு நகர்வுக்கும் ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு வண்ணம். இப்போது இளஞ்சிவப்பில் …
பதட்டித்த விரல்கள் கோப்பையிலிருந்து சில துளிகளை வாஸந்தியின் மார்மீது சிந்தி படர்ந்திருந்த ஸாட்டின் இரவாடையை புள்ளி புள்ளிகளாய் நிறமாற்றியது.
“சாரி மேம்…சாரி”…என்றபடி பூர்ணி தன் கைகளால் அவளின் ஆடையை துடைக்க கரை பரவி பெரிதானது.
“இட்ஸ் ஓக்கே”… விடு.. இப்படி பண்ணா இந்தக்கரைப் போகாது…விடு”…
“ஆடையைக் கழற்றப்போகிறாளா?…. கடவுளே.
சில கரும்புள்ளிகளை அவ்ளோ சுலபமா அழிச்சுட முடியாது பூர்ணி…
இரவாடை தரையில் நழுவியது. மொத்த உடம்பும் துடைத்து வைத்த நாவல்பழம். யே… யப்பா…
வலது தோளிலும் இடது மார்பிலும் மச்சம் விலையுயர்ந்த நீலக்கல் பாவியதைப் போல மின்னியது.
“மேம்..சாரி.. வாசு நீ ரொம்ப ரொம்ப அழகாயிருக்கே சிலை மாதிரி. அந்த மச்சம் இன்னும் அழகு…என்றாள் பூர்ணி
“மச்சத்த மட்டுந்தா தெரியுதா. இங்க பாத்தியா?….” வயிறைக் காட்டினாள்
என்ன இது?.. அட்டைப்பூச்சியின் உடற்சுருக்கங்களோடான தழும்பு சுண்டு விரலளவு மேடிட்டிருந்தது. மூன்று இடங்களில் தழும்பு பெரியதாக தெரிந்தது.
“இங்க பாரு” என இடது தொடையைக் காட்டினாள். “இது சிகரெட்ல சூடு வெச்ச வடு ”
“இத பாத்தியா இத பாத்தியா..” என்று அழுகை ததும்புகிற கண்களோடு அம்மாவிடம் முறையிடும் சிறுமியாக மாறியிருந்தாள். அலுவலகத்தில்அப்படி திரிந்த வாசுவா இது.
“பாத்தியா எப்படியிருக்கு… லவ் ங்கிற பேர்ல என் அப்பாகிட்ட போராடி அவனை கட்டிக்கிட்டேன். ப்ளடி ஸ்கௌண்ட்ரல்… ஆசை அறுபது, மோகம் முப்பது முடிஞ்சதும் அவன் சுயம் வெளுக்க ஆரம்பிச்சது. பிஸினஸ சாக்கு வெச்சுட்டு எங்கயோ தூரதேசத்துல, தூரதீவுல விதவிதமா ஆடிட்டிருந்தான். மண்ணுக்குள்ள புதைஞ்சு மறைஞ்சுக்கிட்டு முன்னேயும் பின்னேயும் நகர்ந்து தப்பிக்கிற மண்ணொளி பாம்பு மாதிரி என்கிட்டேயிருந்து தப்பிச்சிட்டே இருந்தான். எதைக் கேட்டாலும் ஒரு பொய் தயாரா வெச்சிருப்பான். எல்லாமே எனக்கு தெரிஞ்சும் எதுவும் செய்ய முடில. அப்பாவும் போய் சேந்தார்.
ஒருநாள் என் வீட்ல என் பெட் ரூம்ல ஒருத்திய கூட்டிட்டு வந்து சல்லாபம் பண்ணிட்டிருந்தப்ப என்கிட்ட மாட்டினான். அந்த மண்ணொளிப் பாம்பை செருப்பால அடிச்சேன். முகம் வாயெல்லாம் ரத்தம் பிச்சுகிடிச்சி. நல்ல போதையில இருந்ததால என்னை அவனால எதுவும் செய்ய முடியல.. போடா மயிருன்னு விரட்டிவிட்டேன்… பாவம் அந்தப் பெண். பயந்து அழுதுட்டு நின்னது. டிரஸ்ஸை எல்லாம் பொறுக்கி எடுத்து குடுத்து பொறுமையா போட்டுக்கச் சொல்லி அனுப்பி வெச்சேன்”.
தீர்க்கமாய் எங்கோ நோக்கின பார்வை…. அநேகமாய் அவனை செருப்பால் அடிக்கிறதை மறுபடி மறுபடி ஓட்டிப்பார்க்கிறாளா?
அவளைப் பற்றி எவ்வளவு தப்பாக எண்ணியிருந்தேன். பாவம்.. என்னைவிட பாவப்பட்ட ஜென்மம்.
“வாசு உன்னை தப்பா புரிஞ்சு வெச்சிருந்தேன்”
‘என் நிலம எவ்ளோ தேவலாம்போல’… என்றாள் பூர்ணி.
“என்ன தேவலாம்?”…
“என் புருஷன் அவ்ளோ மோசமில்லை….”
‘அப்படியா?. எகத்தாளம் இருந்தது பார்வையில்.
யோசித்துப் பார்த்தால் சில மட்டைகள் ஒரே ரகத்திலிருக்கின்றன. சில குட்டைகளிலும் அதே நாற்றமடிக்கிற பாசி நீர்தான். மட்டைகள் குட்டைகளில் ஊறி உப்பியிருப்பதில் கொஞ்சம் முன்னே பின்னே வித்தியாசம்… அவ்வளவுதான்.
எதை எதையெல்லாம் சகிக்க வேண்டியிருக்கிறது பெண் ஜென்மம். பூர்ணிக்கு கண்கள் கவங்கியது. இரண்டு விழிகளும் சின்னஞ் சிறிய வெண் மார்பகங்களாய் கசிந்தது. வாஸந்தி பூர்ணியின் விழிகளை உதடுகளால் மூடி விழிநீரை உறிஞ்சினபடி முத்தமிட்டாள்.
அசைவுகளால் டீபாயின் மேலிருந்த பூக்குடுவை உருண்டு விழுந்து உடைந்தது. நாயுருவித் தண்டுகளின் மேல்நோக்கிய “நான்” என்கிற நீட்சி, அதன் சொரசொரப்பு, அதன் தினவு பூர்ணியின் ஹை ஹீல்ஸ்ஸினடியில் சிக்கி நசுங்கியது.
பூர்ணி வாஸந்தியிடம் கேட்டாள், “உனக்கெப்படி தோணிச்சு… என்னை இப்டி தொடணும்னு.. நான் சம்மதிப்பேன்னு..”
“தோணிச்சு. நீ சராசரியில்ல. உன் கண்ணுல என் கதை தெரிஞ்சது. நீயும் அடிப்பட்ட பெண்புலின்னு. உன்னை மடியில கிடத்தி ஒவ்வொரு வரியா நீவி விடணும்னு. என்னை சமன்படுத்த உன்னாலதான் முடியும்னு. இன்னைக்கு சந்தர்ப்பத்தை நானே உருவாக்கினேன். நீ என்னை அறைஞ்சிட்டு ஓடிட்டாலும் பரவாயில்ல. ஆனா என் மனச இன்னைக்கு உனக்கு தெரியபடுத்திடனும்னு தோணிச்சு. உனக்கும் பிடிச்சிருக்குல்ல?”.
“ம்”,- ஆனா இது தப்பில்லையா?” வெட்கினாள் பூரணி.
“ல்ல பூர்ணி..எது தப்பு. எது ஆபாசம்.. சமையல்ல ஏதோ ஒரு சாமான் தவறி விழுந்து கறியோடு கலக்கும். அது எப்பவுமில்லாதபடி தனியா புதுசா ருசிக்கும். அப்படித்தான் எப்பவாவது ஏதோ ஒரு விபத்துல ஒரு கலை தன்னைதானே நிகழ்த்திக்கும்”.
பூர்ணியின் மாநிறத்தை தன் கன்னங்களிலும், முலைகளிலும் பூசிக்கொள்வதைப்போல உரசி அணைத்துக் கொண்டாள் வாசு..
இதுதான் இத்தனை நாள்
நான் தேடியலைந்த இளஞ்சிவப்பு…
இதுதான் எனை ஆழமாய் தூங்க வைக்கிற இருட்குழைவு.. இது தான் நான் சமன்படுகிற பாதித் தனிமை…
வத்திப் பெட்டியுள் கால்களை முடக்கிக் கொண்டிருந்த பொன் வண்டுகள் ஒன்றையொன்று விடுவித்துக்கொள்கின்றன.
அறையில் ரீங்காரம்…
ஏதோ ஒன்றைத் தேடப்போய், தொலைந்துபோன எல்லாமும் பாதள கொலுசில் தொத்திக்கொண்டு கிடைத்த மாதிரியான ஒளிர்வு நான்கு விழிகளிலும்.
அர்த்தநாரீஸத்தின் இருபாதியும் ஸ்த்ரீகோலம்.
சுயம் இழக்காத கலப்பு.
நாகங்கள் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு ஒன்றின் சட்டை இன்னொன்றில் மாட்டி உரிகின்றது.
“ஸ்”…
மழை விட்டிருந்தது.
படுக்கையறை ஜன்னல் கண்ணாடி சதுரங்கள் ஒவ்வொன்றின் மீதும் ஒரு பிறை நகர்ந்து கொண்டிருந்தது.
எழுதியவர்

- காஞ்சிபுரத்தில் பிறந்த ஜெயநதி B.Sc (Nursing) பட்டப்படிப்பு நிறைவு செய்தவர். இவரின் கவிதைகள் கல்கி, ஆனந்தவிகடன், குங்குமம், பேசும் புதிய சக்தி உள்ளிட்ட இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன.
நீதியான உணர்வுகளுக்கான மிக அற்புதமான அங்கிகாரம். நேர்த்தியான கதை நாரேஷன். கிட்டத்தட்ட ஒரு நாவலுக்கான உணர்வுக் கோர்ப்புகளாலான உவமைகளும் வர்ணிப்புகளும் விவரனைகளும் வாசிப்பு அனுபவத்தை முத்தமிடுகின்றன. எல்லோருள்ளும் பெண்மையை மலர்த்தக் கூடிய நல்ல கதை. வாழ்த்துகள்..