24 May 2025
Sa anandh kumar may 21

தாத்தாவை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருந்தார்கள். அங்கு நிலவிய மயான அமைதி.. கொஞ்சம் பயமாய் இருந்தது. சபேசன் இதை எதிர் பார்க்கவில்லை. கொஞ்ச நாட்களாகவே அவனுக்கு ஒன்று மாற்றி ஒன்று என ஏதாவதொரு பிரச்சனை வந்து கொண்டேதான் இருக்கிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை. 

வீட்டில் கேட்டால் அம்மா “எல்லாம் நம்ம விதி. நாம வாங்கிட்டு வந்த வரம் அப்படி” என்று பொறுமையாய் என் மனைவியை பார்ப்பாள்.

உடனே என் மனைவி “பொறந்த வீட்லதான் தரித்திரம் தாண்டவம் ஆடுதுன்னா இங்க அதுக்கு மேல.. நான் ஆசைபட்டது இந்த வீட்ல..  இதுவரைக்கும் என்னதான் நடந்துருக்கு..  அஞ்சு வருஷமா இப்படியே புலம்பி புலம்பியே வாழ்கை ஓடுது நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்ட ஜென்மம்” என்று பதிலுக்கு ஆரம்பிப்பாள்.

சபேசனுக்கு புரிந்து விடும். இதனால் எந்த தீர்வும் பிறக்க போவதில்லை. அதற்கு பதிலாக ஒரு குருஷேத்திரம் தொடங்குவதற்கான ஆரம்ப கட்ட வார்த்தை பரிமாற்றங்கள்  இதுவென்று.  இது தொடர்ந்தால் எங்கே போய் முடியும் என்பதும் அவனுக்குத் தெரியும்.

பெரும்பாலும் இது மாதிரியான நேரங்களில் மௌனம் அணித்து அங்கிருத்து வெளிநடப்பு செய்வதுதான் நல்லது என்று பேசாமல் நகர்த்து விடுவான். 

மாமனாரை கேட்டால் எதோ ‘குரு,  சனி பெயர்ச்சி’ என்று கொஞ்சம் கட்டங்கள் வைத்து கதை சொல்லுவார். அவர் சொன்ன எல்லா பரிகாரங்களும் செய்து முடித்தாகி விட்டது. எல்லா கோவில்களையும் பார்த்தாயிற்று. எதுவும் மாறவில்லை.

இன்னும் கூட அந்த நாள் மறக்க முடியாமல் அப்படியே நினைவில் அமர்ந்திருக்கிறது. காலை ஒரு பதினோரு மணி இருக்கும். மேனேஜர் கூப்பிடுகிறார் என்று சொன்னதும் அவசர அவசரமாக சபேசன் அவர் அறைக்கு சென்றான். அவனும் இதை எதிர்பார்த்ததுதான் இருந்தான் நேற்று அவசரத்தில் லெட்ஜெரில் ஒரு சிறிய தவறு செய்திருந்தான்.

உள்ளே நுழைந்ததும் பேசாமல் சரணாகதி அடைவது ஒன்றுதான் தீர்வு என நினைத்தவன்

“சார் ரொம்ப சாரி.  அந்த தப்பை இன்னிக்கு காலையிலதான் கண்டு பிடிச்சேன். நிச்சயமா இந்த மாசம் அதை அக்கௌன்ட்ஸ்ல சரி பண்ணிடறேன் சார்” என்றான்.

“அது பரவாயில்லை. உக்காருங்க” என்றான் மேனேஜர் சாந்த சொருபியாய்..

இதை சபேசனால் நம்ப முடியவில்லை. பொதுவாய் இந்த மாதிரி தவறுகளுக்கு எல்லாம் குறைந்தது அரை மணி நேரமாவது வறுத்து எடுத்து விடுவார். . அப்படிப்பட்ட நல்ல மனிதர் இன்று அமைதியாக உட்கார சொல்கிறார் என்றால்..

“இல்ல பரவாயில்ல.. சொல்லுங்க சார்” என்றான் சபேசன்

“உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும்..அதை எப்படி ஸ்டார்ட் பண்ட்ரந்துன்னுதான் .. “ என்று இழுத்தார் மேனேஜர்.

“பரவாயில்லை சொல்லுங்க.. சார் இது ஒரு சின்ன தப்புத்தான.. சரி பண்ணிடலாம்”

“ச்சே.. ச்சே.. இது ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல.. உங்களுக்கே தெரியும் கொரோனாவுக்கு அப்புறம் நம்ம கம்பெனி வியாபாரம் முன்ன மாதிரி  இல்லன்னு.. எல்லா செலவும் ஏறிப்போச்சு. அதனால நம்ம முதலாளிக்கும் வேற வழி தெரியல.. “

இரண்டு நிமிட இடைவெளிக்குப்பின் “வேற ஆப்ஷனே இல்லாமதான் இந்த முடிவு எடுத்துருக்கோம். உங்களோட சேர்த்து ஒரு இருபது பேர அடுத்த மாசத்துல இருந்து வெளிய அனுப்பரோம்”

“சா..சார் என்ன சொல்றிங்க” என்ற சபேசனுக்கு மெதுவாய் தலை சுற்ற ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டான். கொஞ்சம் தண்ணீர் எடுத்து கொடுத்தவன்

“கொஞ்சம் யோசிச்சு பாருங்க. என்னோட இருபது வயசுல இருந்து பதினாறு வருஷமா இந்த கம்பெனிக்கு நான் எவ்வளவு உழைச்சுருக்கேன்.. என்னோட கல்யாணம் முடிஞ்சதும் ரெண்டே நாள்ல முதலாளி சேல்ஸ் டேக்ஸ்ல பிரச்சனைன்னு சொன்ன உடனே அப்படியே லீவ கேன்சல் பண்ணிட்டு வந்தேன் சார்.. இதுவரைக்கும் ஒரு வருஷம் கூட லீவ முழுசா எடுததுல்ல.. எனக்கு இந்த கம்பனிய தவிர வேற எதுவும் தெரியாது சார். என்னால எந்த பிரச்சனையும் இல்லியே..” அனேகமாய் சபேசன் அழுது விடுவான் போலிருந்தது. 

“அதெல்லாம் புரிஞ்சது சபேசன். அதுனாலத்தான் உங்களுக்கு முதலாளி மூணு மாசம் சம்பளம் கொடுக்க சொல்லிருக்கார். மத்தவங்களுக்கு எல்லாம் ஒரு மாச சம்பளம்தான்.. “

மூன்று மாத சம்பளத்தை வைத்து கொண்டு என்ன செய்வது. அம்மா, மனைவி, தாத்தா மற்றும் என்னை நம்பி இன்னும் எட்டு மாதத்தில் இந்த பூமிக்கு வர போகிற ஒரு புது ஜீவன். இத்தனை பேரையும் வைத்து கொண்டு எப்படி வாழ்கையை ஓட்டுவது.

இருந்த பி எப் பணத்தை வேறு ஜம்பமாக கல்யாணத்திற்கு பாதி எடுத்து செலவு செய்தாயிற்று. வெறும் பட்டபடிப்பை வைத்து கொண்டு நாற்பதை நெருங்கும் இந்த நேரத்தில் எங்கு போய் வேலை தேடுவது? ஒன்றுமே புரியவில்லை.

“நான் முதலாளிய ஒரு முறை பாத்து பேசணும் சார்” என்றேன் ஏமாற்றத்தை வெளிக்காட்டி கொள்ளாமல்..

“அதெல்லாம் இப்ப முடியாது..புரிஞ்சுக்குங்க.. நீங்களா இருக்கறதுனால இப்படி உக்கார வெச்சு பேசிகிட்டு இருக்கேன்.மத்தவங்க எல்லாரயும் ‘கேட்’லயே கணக்கு முடிச்சு அனுப்பியாச்சு” என்றார் சற்று கடுமையாக

கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியே அனுப்பி விட்டார்கள். நேற்று வரை மரியாதையாக வணக்கம் போட்டவர்கள் எல்லாம் நிமிடத்தில் மாறி போனார்கள். 

பதினாறு வருடங்களாக கூடவே பயணித்தவனை எப்படி இரக்கமே இல்லாமல் சட்டென தூக்கி வீச முடிந்தது.

முதலில் வீட்டில் அதிர்ச்சி அடைந்த எல்லோரும் சில வாரங்களில் மெதுவாக சகஜமானர்கள்.

“சரி பாத்துக்கலாம், உலகத்திலயே அது ஒண்ணுதானா கம்பெனி” என்றார்கள். கொரோனா தயவில் நிறைய பேரின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி இருந்தது. சபேசன் நினைத்தது போல அவ்வளவு ஒன்றும் சுலபமாக வேலை கிடைத்து விடவில்லை.

‘ஒரே நிறுவனத்தில் பல வருடமாக இருந்து விட்டாய்’,  ‘மேல்படிப்பு இல்லை’ என்றார்கள். மிகவும் சிறிய வேலை கிடைத்தது. சம்பளத்தை குறைவாக பேரம் பேசினார்கள். எதுவும் சரிவரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கும் நம்பிக்கை தேய தொடங்கியது. விளையாட்டாக எழு மாதம் ஓடி விட்டது.

முதலில் ஆறுதலாக இருந்தவர்கள் பிறகு மெதுவாக குத்தி காட்ட தொடங்கினார்கள். கொஞ்சம் நண்பர்களிடம் கடன் கேட்க தொடங்கியதும் திரும்பவும் செலவுக்கு எங்கு பணம் கேட்டு விடுவானோ என்கிற பயத்தில் நண்பர்கள் மெதுவாக அவனின் போன் அழைப்பை நிராகரித்தார்கள்.

பணமற்றவனின் உலகம் மெதுவாக தன் கோர முகத்தை சபேசனுக்கு காட்ட ஆரம்பித்தது. மனைவியின் வளைகாப்பிற்கு இருந்த பணத்தை புரட்டி போட்டு எப்படியோ சமாளித்து விட்டான்.

வளைகாப்பிற்கு வந்த பழைய அலுவலக நண்பர்கள் சொல்லித்தான் தெரிந்தது. தன்னை வெளியே அனுப்பியதற்கான காரணம் முதலாளி இல்லை அந்த மேனேஜர்தான் என்று. அவனுடைய இடத்திருக்கு அவருடைய சொந்தக்காரன் யாரையோ கொண்டு வந்திருக்கிறார் என்று.  

அடுத்த மாதத்திற்குள் அம்மாவின் நகையை வேறு சபேசன் மீட்டாக வேண்டும். பூமி ஒன்று விலைக்கு ஊரில் வருகிறது என்று இரண்டு  வருடங்களுக்கு முன் கொஞ்சம் கடனும் மீதி பணத்திற்கு அம்மாவின் நகையையும் அடகு வைத்து நிலம் வாங்கி இருந்தான். மற்ற கடனை எல்லாம் அடைத்தாயிற்று. நகைக்கு இந்த வருட போனசை நம்பி இருந்தான்.

இப்போது என்ன செய்வது..  வேலையும் இல்லை போனசும் இல்லை என்று கையை பிசைந்த போதுதான் சபேசனுக்கு அது தோன்றியது. நேரம் சரியில்லை என்றால் இப்படி மனது யோசிக்கும் போல் இருக்கிறது. மாதா மாதம் தாத்தாவின் பென்ஷன் பணத்தை அவன்தான் எடுத்துக்கொண்டு வருவது வழக்கம்.

போன மாதம் வரை எதையும் பார்க்காமல் அவருக்கு தேவையான ஐந்தாயிரம் ரூபாயை மட்டும் எடுத்து கொண்டு வந்து விடுவான். காசோலை எழுதுவது முதல் அவரின் பாஸ்புக் வரை எல்லாம் அவன் கட்டுப்பாடில்தான் இருக்கும். தாத்தாவுக்கும் சரியாக கண் தெரியாததால் இவன் நீட்டிய இடத்தில் கேள்வி கேட்காமல் கையெழுத்து போட்டு விடுவார்.

அவசர பணத்தேவைக்காக முதன் முறையாக தாத்தாவின் கணக்குகளை நோட்டம் விட்டான். லட்ச ரூபாய்க்கு மேல் கணக்கில் வைத்து இருந்தார். தேவை நியாயம் பேசியது. பணத்திற்கு பதில் வீட்டில் நகை இருக்க போகிறது. இதில் என்ன தவறு என்று.

இரண்டு மாதங்களாக ஒரே ஒரு ஜீரோவை கூட சேர்த்து போட்டு விட்டான். பயமாகத்தான் இருந்தது. ஒரு வேளை கண்டு பிடித்து விடுவரோ என்று அனால் அவருடய கண்பார்வை பிரச்சனை  அவனுக்கு துணை நின்றது. நகை பிரச்சனை அத்தோடு முடிந்தது. இல்லை என்றால் அம்மா ஒரு வேளை பத்ரகாளி ஆகி இருக்ககூடும்.  தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்பதை சமீப நாட்களாக காலம் அவனுக்கு உணர்த்தியிருந்தது.

முதல் இரண்டு நாட்களுக்கு மனசாட்சி தூங்க விடவில்லை. தாத்தாவை பார்க்கும்போதெல்லாம் பேசாமல்  தலை குனிந்து கொண்டான். வேலை கிடைத்ததும் பணத்தை திரும்பவும் அங்கேயே போட்டு விடுவேன் என அவனுக்கு அவனே சமாதனம் கூறி கொண்டான்.

ஆனால் தாத்தா சொல்லாமல் கொள்ளாமல்  திடிரென பேங்க்கிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை.  வயதின் காரணமாக உடனே ஹார்ட் அட்டாக் வந்து விட்டது. இனியொரு ஆஸ்பத்திரியில் மனைவி பிரசவத்திற்கென சேர்க்கப்பட்டிருகிறாள். எந்நேரமும் குழந்தை பிறக்கலாம்.

அவசர சிகிச்சை பிரிவின் முன் தாத்தாவிற்கென அமர்திருந்தான். குற்ற உணர்ச்சி நெஞ்சை குத்தியது. தன்னால்தான் தாத்தா இங்கே படுத்திருக்கிறார் என்ற உண்மையில் தலை விண் விண் என்று விடாமல் வலித்து கொண்டே இருந்தது.

மயான அமைதியை கலைத்துக்கொண்டு போன் வந்தது. பழைய முதலாளி கூப்பிட்டார். மன்னிப்புடன் ஆரம்பித்தவர் அவனை திரும்பவும் வேலைக்கு அழைத்தார். மேனேஜர் கம்பெனி பணத்தில் கை வைத்து விட்டதால் நாணயமான ஒருவன் வேண்டும் என்று இவனை அழைத்தார். 

தாத்தாவின் உடல் நிலை பற்றி சொல்லி விட்டு அடுத்த வாரம் முதல் திரும்ப வேலைக்கு வருவதாக ஒத்துக்கொண்டான். முதன் முறையாக சில மாதங்களுக்கு பின் நிம்மதி பிறந்தது. எல்லாம் குழந்தை பிறக்கிற நேரம் என்று அவனுக்குள்ளே சொல்லி கொண்டவன் மனைவிக்கு போன் அடிக்க எழுத்தான்.

இவனைத்தேடி அவசரமாக வந்த  நர்ஸ் .

“உங்க தாத்தா கண்ணு முழிச்சிட்டாரு. போய் பாருங்க. அதிகம் பேசாதீங்க” என்றாள்.

மிகுந்த தயக்கத்துடன் தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தான் சபேசன். அருகே தலை ஆட்டி அழைத்தவர்

“எங்கிட்ட கேட்கலாமே.. கண்ணா.. நானே கொடுத்திருப்பேன். பயப்படாத யார்கிட்டயும் நான் சொல்லல” என்றார் திக்கி திணறி..

அவர் கையை பிடித்து “என்னை மன்னிச்சுருங்க தாத்தா..அப்ப எனக்கு நகையை மீட்க வேற வழி தெரியல. ஆனா திரும்ப எனக்கு வேலை கிடைச்சிருச்சு.. ரெண்டே மாசத்தில திருப்பி பணத்தை கொடுத்துருவேன் தாத்தா” 

என்று சொல்லி நிமிர்த்த போது சிரித்த மாதிரியே அவர் உயிர் பிரிந்திருந்தது. துரோகம் செய்ததை தாத்தா யாரிடமும் சொல்லவில்லை என்ற உண்மையில் இவருக்கு போய் இப்படி செய்து விட்டோமே என்று கூனி குறுகினான் சபேசன்.

மாமனாரிடம் இருந்து போன். 

“மாப்பிள்ளை உங்களுக்கு பையன் பொறந்து இருக்கான்’ என்ற அவரின் குரலில் சந்தோசம் குறைந்து இருந்தது.

“ஆனா..” என்று இழுத்தவர் அவனுக்கு

“பார்வைல எதோ குறை இருக்கும்னு டாக்டர்ஸ் சந்தேகப்பட்றாங்க.. எதோ டெஸ்ட்ஸ் எடுக்கணுமாம். கூட்டிகிட்டு போயிருங்காங்க..எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு. உடனே கிளம்பி வாங்க” என்றார்.

நிமிர்த்து பார்த்தான். இப்போது தாத்தா அவனை பார்த்து புன்னகைத்த மாதிரி அவனுக்கு தோன்றியது.தாத்தாவுக்கு தண்டிக்க தெரியாது என்ற நம்பிக்கையும் பிறந்தது. இதுவே வாழ்க்கையின் ஆகச் சிறந்த தண்டனையென்று கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சொன்னது.


 

எழுதியவர்

ச.ஆனந்தகுமார் .
கோயம்புத்தூரில் பிறந்த இவர், தற்போது பணியின் நிமித்தமாக சென்னையில் வசிக்கிறார். இதுவரை
ஆனந்த விகடன், அவள் விகடன், கணையாழி, காலச்சுவடு, தீராநதி,கல்கி, காக்கை சிறகினிலே, ஆவநாழி, பேசும் புதிய சக்தி, வாசகசாலை ,நடுகல் குங்குமம், படைப்பு-கல்வெட்டு, தகவு, காற்று வெளி, தளம், அம்ருதா ஆகிய இதழ்களில் இவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.

முடிவிலியின் நினைவு சங்கிலி , மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x