17 September 2024

ந்தப் பிளாட்பாரத்திற்கு நான் வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு எத்தனையோ புதுக்கடைகள் முளைத்துப் பழைய கடைகளும் மூடப்பட்டன. இந்தக் கடை வீதியின் கடைசி முனையிலிருக்கும் டீக்கடையில்; டம்ளர் கழுவுவதுதான் எனக்கு வேலை. டீக்கடையில் போடப்படும் பாத்திரத்தில் இருக்கும் டீ, யாரேனும் மிச்சம் வைக்கும் டீ இதுபோக சில கடைகளில் தருகிற பன், பிளாட்பாரத்தின் இட்லிக் கடைகளில் மிஞ்சும் இட்லி இதெல்லாம்தான் சில வருடங்களாக எனக்கு உணவு.

நான் ஊரிலிருந்து கிளம்பி வந்த பிறகு; அம்மா மட்டும் இதே பிளாட்பாரத்தில் இருந்த சேகர் அண்ணாவின் பேன்சி ஸ்டோரின் முகவரிக்கு ஏதாவது பணமிருந்தால் அத்திப்பூத்தாற்போல அனுப்பி வைப்பாள். நானும் அம்மாவும் ஊரில் சொந்தங்கள் இருந்தும் இல்லாதவர்கள்.  சொத்துக்களை அப்பா உயிருடன் இருந்த போதே அவர் போனவளிடம் எல்லாம் ஒவ்வொன்றாக எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விடுவார்.

கூத்தியா இல்லாத பொழுதுகள் அவருக்கு இல்லை. தினுசு தினுசாக விதவிதமாக வகைக்கொன்றாக வயது வாரியாக பெண்கள் அவருக்கென்றே உண்டு. எப்படி அவர்களைச் சரிக்கட்டுவார் என்பது அவருக்கே வெளிச்சம். அம்மா நகைகள் கூட சில நேரங்களில் யார் கழுத்திலாவது தொங்கும். எதையாவது பொறுக்க மாட்டாமல் அம்மா கேட்டு விட்டால் அன்று பிரளயம் நடக்கும் வீட்டில்.

“வக்கத்த முண்டக்கிப் பேச்சப் பாரு” என்று காது படவே கத்துவார். “துப்பத்த தேவுடியா, போடி கண்ணு முன்னால வராத” என்று அவர் ஏசுவது எனக்குப் பழகிப்போன ஒன்றானது. நான் இருக்கிறேனென்ற கவலைகள் அவருக்கு ஒரு நாளும் இருந்ததில்லை. அப்பாவின் நடவடிக்கைகளால் அவர் இருந்த போதே ஒதுங்கத் தொடங்கியவர்கள்; அவர் போன பிறகு சொத்துக்களும் பறி போனதால் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டோம் நானும், அம்மாவும்.

அவர் செய்த தவறுகளை பொருட்படுத்தாமல் ‘இவ ஒழுங்கா இருந்தா அவன் ஏன் இப்படி இருந்துருக்கப் போறான்’ என்று வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது ஊர். ஊருக்குப் பயந்து நாங்களும்,ஊருக்குப் பயப்படாமலென அவரும்; அவரவர்க்கு வாழ்க்கை ஒவ்வொரு வழியைத் திறந்து விடுகிறது.

ரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வரும் பேன்சி ஸ்டோரின் சேகர் அண்ணன் அந்த முறை ஊருக்கு வந்திருந்தார். பக்கத்து வீடு என்பதால் வரும் போது எங்கள் ஏழ்மை கண்டு இங்கிருந்து இரண்டு சட்டை,பேண்ட் சாப்பிட ஏதேனும் தீனிகளென்று வாங்கி வருவார்.

“எப்படி இருக்கீங்கம்மா?” என்று உள்ளே கேட்டுக் கொண்டு வந்தார் சேகரண்ணன்.

“வாப்பா,தம்பி… பட்டணத்துல புள்ள பொண்டாட்டி எல்லாம் சவுக்கியமா?”

“ஏதோ நீ ஒருத்தன்தான் எங்க ரெண்டு பேரையும் மனுசனா மதிச்சு எப்ப வந்தாலும் வந்து பாக்குற.”

சொத்துக்கள் முழுவதும் பறிபோய் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பமாகப் பிழைப்புக்கான திக்கும் தெரியாததால் ஒரு குடிசையை மட்டும் போட்டுக்கொண்டு அங்கேயே இருந்தோம். அம்மாவை அந்த ஊரில் யாரும் வேலைக்குக் கூப்பிட மாட்டார்கள். பக்கத்து ஊர்களில் ஏதாவது கூலி வேலை கிடைத்தால் செய்து வாங்கி வரும் காசுதான் வருமானம்.

நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்கிறீர்களா?? அப்பா மீதிருந்த கோபத்தில் நான் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தேன். சுத்தமாக எனக்குப் படிக்க பிடிக்கவில்லை. அப்பாவைத் திருத்த வேண்டும், நாங்கள் எல்லார் முன்பும் நன்றாக வாழவேண்டும் என்று முயற்சி செய்து தோற்றுப் போய் படித்து என்னாகப் போகிறது என்று ஏதேதோ எரிச்சலை அதன் மீது காட்டி நின்றுவிட்டேன்.

சேகர் அண்ணனிடம் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள் அம்மா. ‘ராசா மாதிரி ஆளணும்னுதான் இந்தப் பயலுக்கு இப்படி ஒரு பேரு வச்சேன்ப்பா. அப்பன்தான் உருப்படாம உசுர வாங்கி மானத்தயும் வாங்கி போய்ச் சேந்தான். இவனாச்சும் ராசா மாதிரி படிச்சு பெரிய வேலைக்குப் போவணும்னு ஆசப்பட்டேன். எல்லாத்துலயும் மண்ணள்ளிப் போட்டுட்டு இந்தப் பயலும் சும்மா கெடக்கான் தம்பி. கேட்டா ஒம்புருசனால தான் இப்படி ஆயிட்டேன்னு திட்டறான்.’

“ஏஞ்சேகரு, நீ இருக்கியே பட்டணத்துல நம்ம ராசாப் பயலுக்கு ஒரு வேல ஏதும் வாங்கித் தர முடியுமா தம்பி?” பிச்சை எடுக்கும் தொனியில் அவள் குரல் ஒலிக்க ஆரம்பித்திருந்தது.

ராஜா, இந்தக் கடை உனக்கு பிடிச்சிருக்கா?”

சேகர் அண்ணன் தனது பேன்சி ஸ்டோரில் வேலை தருவதாகக் கூறினார். அம்மாவின் அழுகை அவருக்குக் கஷ்டமாகி விட்டதால் என்னை அழைத்து வந்து விட்டார்.

பத்துக்குப் பத்தடி கொண்ட ஒரு அறை போன்ற இடம். கடை முழுவதும் பெண்களுக்கான மணிகள், வளையல்கள், பாசிகள் என்று விதவிதமாக டப்பாக்களில் அடுக்கி வைத்து இருந்தார். அவர் உள்ளே இருந்தால் நான் வெளியே போட்டு இருக்கும் ஸ்டூலில் அமர்ந்து கொள்ள வேண்டும். நான் உள்ளே இருந்தால் அவர் வெளியே இருக்க வேண்டும். அவ்வளவு தான் இடம். சில நேரங்களில் அவர் வெளியே தின வட்டிக்கு கொடுத்த இடங்களில் வசூலுக்குச் செல்ல வேண்டும். ‘இங்கே கொஞ்ச நாள் இரு ராஜா, இருந்து கிட்டே வேற வேலை தேடுவோம்’என்றார்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு அந்த வேலை பிடிக்கவில்லை. அதற்குக் காரணம் அப்பாவின் அனுபவங்களால் எனக்குப் பெண்களைக் கண்டாலே சுத்தமாகப் பிடிக்காமல் போயிருந்தது. சேகர் அண்ணன் கடையில் இல்லாத நேரத்தில் யாரேனும் பெண்கள் வந்தால் எனக்கு எரிச்சலும்,கோபமுமாக வரும். ஆர்வமாக எதையாவது வளையல்கள் செயினை எடுத்து “இது அவனுக்குப் புடிக்கும்டி” என்று கிசுகிசுப்பாகப் பேசினால் இதை எல்லாம் போட்டுட்டுத் தான் மயக்கறீங்களா என்று கேட்க வேண்டும் போலத் தோன்றும். ஆனால் தவறாகிவிடக் கூடாதே என்று பொறுமையாக அடக்கிக்கொண்டு விடுவேன். இதெல்லாம் யார் தவறு. சொல்ல முடியாத எரிச்சல் ஏனோ பெண்கள் மீது வந்துவிட்டது. என்ன செய்ய?

இப்படியே மென்று விழுங்கி இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. பிடிக்காமலும், சொல்ல முடியாமலும் ஒரு வேலையைச் செய்வது போலக் கொடுமை இல்லை. அழுது கொண்டே இருக்கும் அம்மாவுக்காகவும், சேகர் அண்ணன் மீது இருந்த அன்புக்காகவும் மட்டும் இருதலைக்கொள்ளியாக வேலையில் இருந்தேன்.

அன்று மாலை சேகர் அண்ணன் வசூலுக்குச் சென்று விட்டு வெகுநேரம் ஆகியும் காணவில்லை.போன் செய்தாலும் எடுக்கவில்லை. திடீரென்று பக்கத்துக் கடை ரஹீம் பாய் கத்திக்கொண்டு ஓடி வந்தார்.

“ராஜா, மோசம் போயிட்டோம் டா..  நம்ம சேகர வண்டில யாரோ பசங்க தண்ணியடிச்சுட்டு வந்து மோதி அங்கே செத்துட்டானாமாடா” என்று ஓவெனக் கதறினார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதைக் கேட்டவுடன் தலை கிறுகிறுக்க மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன். கண் விழித்துப் பார்த்த போது சேகர் அண்ணனைக் கடை வாசலில் போட்டுக் கிடத்தி அழுது கொண்டிருந்தார்கள். சேகர் அண்ணன் மகள், மனைவி எல்லாம் தலையில் அடித்து ஓவெனக் கதறி அந்த இடமே மரண ஓலமாகக் கிடந்தது. மனம் இருளடைந்தது. இருந்த ஒரு பிடியும் போனது.

“யாரானால் என்ன? செத்துவிட்டால் ஒன்றுமில்லை” என்று தோன்றியது.

நானோ ஒண்ட வந்தவன் அவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும். சேகர் அண்ணனைக் கொண்டுபோய் எரித்தார்கள். நான் பிரமை பிடித்தது போயிருந்தேன் அந்த இடம்விட்டு நகரவில்லை. அவர்களுக்கும் இங்கே யாருமில்லை. இரண்டொரு நாளில் அந்த ஜாமான்களை பாயிடம் விற்றுவிட்டுக் கையிலிருக்கும் பணத்துடன் அவர் மனைவியின் அம்மா ஊருக்குப் போவதாக சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள்.

இரண்டு மூன்று நாட்களுக்குள் ஒரு வாழ்வே முடிந்து புரண்டு கிடந்தது.

ந்து சேருதுங்க பாரு நமக்குன்னே, காலைலே இட்லி இருக்கா அது இருக்கா இது இருக்கான்னு காலங்காத்தால சாவு கிராக்கி… இங்க நமக்கே சிங்கியடிக்குது இதுல இதுங்க வேற”கத்தித் துரத்தினார்கள்.

சேகர் அண்ணன் இறந்த பிறகு பாய் கடையில் சில மாதங்கள் வேலை பார்த்தேன். அவரும் வியாபாரம் சரி இல்லை என்றும் வயதாகிறது என்றும் ஊருக்குக் கிளம்பி விட்டார். பிறகு ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி வேலை தேடி துரத்தப்பட்டுத் தெருநாயைப் போல டீக்கடையில் சேர்ந்து டீயும் பத்தாமல் ஒவ்வொரு இடத்தில் கிடைத்ததை உண்டு இதோ இப்போது பிச்சைக்காரன், பைத்தியம் என்ற அடைமொழிகளுடன் வாழ்கிறேன்.

சேகர் அண்ணன் போன பிறகு மானம், ரோஷம், அசிங்கம் இதெல்லாம் ஒரு விஷயமாகவேத் தோன்றவில்லை எனக்கு. எல்லாமே இங்கே நாடகம். எல்லாம் பொய்.

அம்மாவை அதன் பிறகு சில மாதங்கள் அவ்வப்போது சென்று பார்த்து வந்தேன். இப்போது இரண்டு வருடங்களாக அதையும் காசில்லாததாலும், இந்த அலங்கோலங்களைக் கண்டால் தாங்க மாட்டாள் என்றும் போவதையே நிறுத்தி விட்டேன்.

அவள் எப்படியும் பிழைத்துக் கொள்வாள் கூலி வேலை செய்தாவது. அம்மாவை நினைக்கும் போது மட்டும் துக்கம் வயிற்றில் இருந்து புரண்டு கிளம்பி வந்து தொண்டையை அடைப்பது போலவே இருக்கும்.

நாளடைவில் எனக்குப் பிச்சைக்காரன், பைத்தியம் என்கிற அடை மொழிகள் பிடித்துப் போனது. அதை நான் ரசிக்க ஆரம்பித்து இருந்தேன். ஆம். உண்மையைத்தானே சொல்கிறார்கள். எனக்கு இப்போது வேலை செய்கிற நேரம் போக அம்மா, அப்பா, சேகர் அண்ணன், ரஹீம் பாய், ஏசிய ஊர் சனங்கள், படிக்கும் போது கேலி செய்த நண்பர்கள் எல்லாம் மண்டையைக் குடையும் அளவுக்கு சிந்தனைகளில் நிரம்பி இருந்தார்கள்.

இவர்கள் நினைப்பது போல் நான் பைத்தியம் இல்லை.என் சுயநினைவோடுதான் எல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இதை எல்லாம் வெளியே சொன்னால் டீக்கடை வேலையும் போய் விட்டால்? ஆம் நான் என் அனுமதியோடு பைத்தியமாக மாறிக் கொண்டு இருந்தேன்.

த்தித் துரத்திய கடையோரத்தில் சாக்கடை ஒன்று இருந்தது. எனக்கு அங்கே உக்காருவதற்குக் கூச்சமெல்லாம் இல்லை. அங்கே போய் அமர்ந்து கொண்டேன்.

“நான் எப்படிப் பைத்தியம் ஆனேன் ??”

வேலை நேரம் போக மீதி நேரங்களிலும் அவர்கள் நினைவுகள் என்னைக் கொடூரமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. என்னால் அந்த நினைவுச் சாத்தானை நிறுத்தவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் அது எனக்கு மிகவும் பிடித்தது. டீக்கடையின் பின்புறமாகச் சென்று ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்ப்பேன். கொஞ்ச நேரத்தில் ஆற்றாமை கோபம் எல்லாம் ஒன்றாகக் கிளம்பி என்ன செய்வது என்று புரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போலத் தோன்றும். மண்டை முழுவதும் பூரான் ஓடுவது போல குறுகுறுவென்று இருக்கும். புழு நெளிந்து ஊர்வது போலவே இருக்கும். திடீரென ஆத்திரம் தாளாமல் நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு அழுவேன். அப்படியே தலையைப் பிய்த்துக் கலைத்துக் கொள்வேன். அடித்துக் கொண்டும் ஆத்திரம் தீராது. சட்டையைக் கிழிக்க வேண்டும் போலத் தோன்றும்.

“ராஜா சட்டையைக் கிழி, அப்பனாம் அப்பன் அந்தாளுக்காக ஒரு கிழி, அம்மாவைப் பார்த்துக் கொள்ள வக்கில்லாததுக்கு ஒரு கிழி, பேசிய சனங்களை நினைத்துக் கிழி, இருந்த ஒரு சேகர் அண்ணணும் போனான் கிழி…நன்றாகக் கிழி! நன்றாகக் கிழி ! நன்றாகக் கிழி !! . பத்தவில்லை அடங்கவில்லை இன்னும் கொடூரமாகக் கைலியைக் கிழி, துரத்தியவர்களை நினைத்துக் கிழி” இப்படிக் கிழிக்கையில் ஆத்திரம் குறைந்தது போலிருக்கும்.

இன்று திட்டியதை கேட்டதிலிருந்து மனம் ஆறவில்லை.

இனிமேல் வாழ்ந்தால் என்ன வாழாட்டி என்ன? மரணம் எப்படி இருக்கும்?சிந்தனைகள் வழக்கத்தை விட தறிகெட்டு ஓடின. என்னால் முடியவில்லை. இந்தப் பசியோடு போராட முடியவில்லை. இவர்கள் நினைவுகளோடு போராட முடியவில்லை. இதையெல்லாம் நிறுத்தவும் முடியவில்லை. இப்படி திட்டுக்களோடு வாழ முடியவில்லை.

“மரணம் மரணம் மரணம் எப்படி இருக்கும்? வாழவும் முடியாமல் சாகவும் தெரியாமல் என்ன கொடுமை இது?”

“எனக்குப் புதிதாக இன்று மரணத்தைப் பிச்சையிடுங்கள்” என்று கேட்க வேண்டும் போலிருந்தது.

“மரணம்… மரணம்… மரணம் யார் தருவீர்கள்? யார் தருவீர்கள்?”

இருட்டத் தொடங்கியது. அங்கிருந்து மெதுவாக எழுந்து நடந்து டீக்கடையின் பின்புறம் வந்து அமர்ந்து கொண்டேன். திரும்பி எல்லாரும் நினைவில் வந்தார்கள். மண்டை முழுவதும் பூரான் ஓடியது. புழு நெளிந்து. நெஞ்சில் ஓங்கி அடித்து குத்திக் கொண்டேன். தலையைப் பிய்த்துச் சில முடிகளைக் கையால் பிடுங்கி இழுத்தேன். சட்டையை நார் நாராகக் கிழித்தேன். ஆத்திரம் அடங்கவில்லை. கால்களைக் கைகளைத் தரையை நோக்கி ஓங்கி அடித்தேன். கண்களை இறுக்க மூடிக் கொண்டேன். சுவற்றில் சாய்ந்தேன். சுவற்றில் தரையில் தலையை மாற்றி மாற்றி நன்கு வலி வரும் வரை முட்டிக் கொண்டேன். உலகம் தலைகீழாகச் சுற்றுவது போல இருந்தது. கண்களை மெல்ல மூடியபடி தரையில் அயற்சியால் உடலைக்கிடத்தினேன்.

சற்று நேரத்தில் கண்களுக்குள் ஈட்டியைப் பாய்ச்சுவது போல ஒரு ஒளி. மீண்டும் இருள். மீண்டும் ஒளி. மீண்டும் இருள்.

“ஏ! மரணமே எங்கே இருக்கிறாய்?? ” ஆழத்திலிருந்து குரல் வெளிவராமல் தொண்டை மட்டும் கிழிவது போல இருந்தது.

மீண்டும் மீண்டும் ஒளி இருள் ஒளி இருள். ஒரு ஒளி தலையில் கிளம்பி கண்கள் கைகள் தொடை வயிறு என்று உடல் முழுவதும் பரவியது. மீண்டும் ஒரு இருள். அதள பாதாளத்தின் உட்பகுதிக்கு வந்தது போலிருந்தது. அது அம்மாவின் கருவறை போலவே உணர்ந்தேன். அம்மா, அம்மா கண்களை மூடியபடியே உச்சரித்தேன். மெல்ல மெல்ல நினைவுகள் மங்கின. நான் பைத்தியமாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.

“யாரானால் என்ன? செத்துவிட்டால் ஒன்றுமில்லை” சேகர் அண்ணன் இறந்த போது தோன்றிய எண்ணம் மட்டும் நினைவுக்கு வந்தது. அவ்வளவு தான்.

இப்போது நான் எந்த நினைவுகளுமற்ற காற்று வெளியில் பறந்து கொண்டிருந்தேன்.


 

எழுதியவர்

சுபி
தமிழக தலைநகர் சென்னையை சார்ந்த சுபிதா எனும் இயற்பெயரை கொண்ட சுபி வரலாறு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கவிதைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக, பள்ளி வயதிலிருந்தே சிறு சிறு கவிதைகள் எழுதி, தற்போது முகநூலிலும் கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு “காலடித் தடங்கள்” கிண்டில் பதிப்பாக வெளியாகியுள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x