27 July 2024

ருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களின் முதல் சந்திப்பு இது. எதேச்சையிலும் எதேச்சையான ரயிலில் சைட் லோயர் மற்றும் சைட் அப்பரில் அமர்ந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.

அருகிலிருந்து பர்த்களில் எல்லோரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தது நவீனுக்கு ஏனோ வேடிக்கையாக இருந்தது. ரயில் எனும் நகரும் அற்புதத்தை அவன் எப்போதும் ஆச்சர்யமாய் பார்த்து ரசித்துக் கொண்டே வருவான். மனிதர்களைப் பற்றி என்னும் போது அவனுக்கு ரயில்தான் நினைவில் வரும், இந்த உலகம் சுற்றுகிறது; ரயில் நகர்கிறது… இரண்டும் ஒன்றுதானே, சுற்றிக் கொண்டிருக்கும் உலகத்திலிருந்து வெளியே குதித்தாலும் ரயிலிலிருந்து வெளியே குதித்தாலும் மரணம் நிச்சயம். ஆனால், உள்ளே அமர்ந்து சுற்றியபடி ரயிலுக்குள் வாழ்ந்தபடியிருக்கும் மக்களை உன்னித்துப் பார்த்தால் அவ்வளவு சுவாரஸ்யங்களை அறியலாம்.

அவனுக்கு எதிரில், அமர்ந்திருந்தவரின் கையில் ஏதோ ஒரு தமிழ்ப் புத்தகம். அவருக்குக் குத்துமதிப்பாக ஒரு 65 முதல் 70 வயதுக்குள் இருக்கும். பார்த்தால் தமிழ் தெரியாதவரைப் போல இருந்தாலும், தமிழ்ப் புத்தகம் படிக்கிறார், அதனால் தமிழராகத் தான் இருப்பார் என்று அவன் புரிந்து கொண்டான்.

நவீன் அவனின் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்து சில மாதங்களானது. அவனின் அம்மா அப்பாவிடம் எப்போதாவது பேசுவான். மொபைல் ஃபோன் அவனிடம்தான் இருக்கிறது,பீஹாரில் வாழும் அவனின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஃபோனில் பேசக் கூடத் தெரியாது. அவன் சென்னைக்கு வந்த புதிதில் வியந்த விசயமே, சென்னையில் அனைவராலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் பெயராவது எழுதத் தெரிந்திருந்தது. அவனுக்கு இன்னும் ஆங்கிலத்தில் அவனின் பெயரைச் சரியாக எழுதத் தெரியாது. ஆனால், அவன் எப்போதும் நினைத்துக் கொள்வது, ‘நம்ம ஊர்ல இந்தியிலதான பேசுறோம் அப்புறம் நமக்கெதற்கு மத்த மொழி?” என்பதே.

ஆனால், வாழ்க்கை ஒரு கேள்விக் குறி அல்லவா, வளைந்து நெளிந்து கண் போல் மாறி கண்ணீராக ஒரு புள்ளியைச் சிந்த வைக்கும் அல்லவா? அப்படிதான் அவனுக்கும். அவர்களின் கிராமத்தில் பஞ்சம் வர, உள்ளூரில் வேலைக்குத் தட்டுப்பாடு வந்துவிட்டது. சம்பாதிக்கும் பணம் வீட்டுச் செலவுக்குப் பத்தும் ஆனால், நவீனுக்குத் திருமணம் செய்து கொள்ளுமளவு சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

அப்போதுதான், அவனை அவன் வீட்டிலிருந்து நாலாவது வீட்டில் வாழும் பிஷ்னோய் மாமாவின் மகன் சென்னையில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி அழைத்தான்.

வந்து சில மாதங்கள் வேலை செய்தவனால் அவ்வளவு கடின உழைப்பைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை. இதுதான் வேலை என்றில்லாமல், நடு இரவில் சாலையில் நின்றபடி சிவப்பு கொடி காட்டி வண்டிகளைத் திசை மாற்றும் வேலையை எல்லாம் செய்யச் சொன்னார்கள். சில நாட்களில் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே தூங்கிவிட்டு எழுந்து வேலைக்கு ஓட வேண்டியிருந்தது.இதனால், எங்கே தன் உடல் வீணாகி விடுமோ என்றும் அஞ்சத் துவங்கினான்.

அப்போதுதான் சிவா சிங் என்ற ஒரு ஏஜென்டின் மூலமாக, திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றுக்கு ஆள் தேவை என்று தெரிய வரவே, உடனே ‘சரி’ என்று சொல்லிவிட்டு சம்பளம் கூட எவ்வளவு என்று கேட்காமல் இதோ ரயிலேறிவிட்டான். காண்டிராக்டர்தான் ரயில் டிக்கெட்டையும் புக் செய்து கொடுத்தார். முதல் மாதச் சம்பளத்தில் எல்லாவற்றையும் பிடித்துக் கொண்டுதான் தருவார்கள். ‘இரண்டாம் மாதச் சம்பளத்திலிருந்து பார்த்துக் கொள்ளலாம்’ என்று எண்ணியவாறு ரயிலில் அமர்ந்திருக்கிறான்.

சென்னையிலிருந்து ரயில் கிளம்பி அரை மணி நேரம் இருக்கும். சில்லென்று காற்று வீசினாலும், டாய்லெட்டிற்கு அருகிலிருக்கும் சீட் என்பதால் சற்றே சிறிது நாற்றம் இருந்து கொண்டுதான் இருந்தது.

பள்ளிப் படிப்பை ஒழுங்காகப் படிக்காவிட்டாலும் நவீன் மிகவும் ஒழுக்கமானவன். அவன் சகாக்கள் பான், சாராயம் என்று சுற்றினாலும் கூட இவன் அவற்றின் அருகில் கூடச் சென்றதில்லை.

சென்னைக்கு வந்த இந்த சில மாதக் காலத்தில், ஓரளவுக்குத் தமிழ் பேச கற்றிருந்தான். ஊரும் மொழியும்தான் கூட்டு. ஊருக்கேற்ற மொழிப் பழகுதலில் தவறில்லை என்று ஏற்றுக் கொண்டான்.

நவீன் ஏதோ சிந்தனையிலேயே வருவதைக் கண்ட எதிர் பர்த் பெரியவர், அவனைப் பார்த்துச் சிரித்தார். பதிலுக்கு நவீனும் சிரித்தான். அவர் கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டுப் புத்தகத்தை எடுத்துத் தன் பைக்குள் வைத்துக் கொண்டார். பிறகு நவீனிடம் பேசத் துவங்கினார்.

“தம்பி! தமிழ் தெரியுமா?”

“கொஞ்சம் கொஞ்சம் தெரியும் சார்” என்றான் நவீன்.

“பரவாயில்லையே அது போதும். இந்த ஊர்ல இருக்கவங்ககிட்டலாம் இந்தி கத்துக்க சொன்னா கத்துக்க மாட்டேங்குறாங்க, ஆனா, நீ இங்கே வந்து தமிழ் கத்துக்கிட்ட. ரொம்ப நல்ல விசயமில்லையா இது?”

பெரியவர் சொன்னதைப் புரிந்து கொண்டான் நவீன். அப்போது அவன் எதிரில் வடை டீ விற்றுக் கொண்டு வந்தவருக்காக இலேசாக ஒதுங்கி வழிவிட்டான்.

“சார்! நான் பொழைக்கத்தான சார் இங்கே வந்தேன். பொழைக்க வந்த ஊர்ல அந்த பாஷையை கத்துக்கிட்டு ஓட்டிக்கிட்டிருக்கேன். ஊருக்குப் போயிட்டா மறுபடி தமிழ் பேச மறந்து போனாலும் போயிடுவேன் சார்!”

“எந்த மொழியுமே அவ்வளவு எளிதில் மறந்து போகாது தம்பி. அப்புறம் என் பேரு சண்முகம், நான் ஒரு ரிடயர்டு ஆசிரியர். திருப்பூர்தான் சொந்த ஊரு. சென்னைக்கு ஒரு வேலையா வந்தேன். திரும்ப ஊருக்குப் போறேன். உங்க பேரு என்ன தம்பி?” என்று கேட்டார் சண்முகம்.

“என் பேரு நவீன்குமார் திவாரி சார். திருப்பூர்ல இருக்குற பனியன் ஃபேக்டரில எதோ வேலையிருக்குன்னு சொன்னாங்க, அதான் அங்க போறேன். நீங்க வேலையை முடிச்சிட்டு ஊருக்குப் போறீங்க, நான் வேலைக்காக உங்க ஊருக்கு வரேன் சார்!” என்று சொல்லி புன்முறுவலாகச் சிரித்தான்.

நவீனின் கவனம் சட்டென்று சண்முகம் சாரிடம் இருந்து தரையில் தவழ்ந்தபடியே வந்த கால்கள் மடங்கிப் போன சிறுவனை நோக்கிச் சென்றது. அவன் நவீன் அமர்ந்திருந்த பர்த்தின் தரையைத் துடைத்துவிட்டு கை நீட்டினான். பாக்கெட்டைத் துழாவிய நவீன் தன்னிடமிருந்த ஐந்து ரூபாயை எடுத்து அவனுக்குக் கொடுத்தான்.

பையன் பெரியவரை நோக்கி கை நீட்டினான்,”சில்லறை இல்லப்பா” என்று பதிலளித்தவர், முகத்தைத் திருப்பிக் கொண்டு சன்னல் வழி பார்க்கத் துவங்கினார். இது போன்ற பலரைப் பார்த்திருந்த சிறுவன் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான்.

“ஏன் சார் அவன் நம்ம உட்கார்ந்திருக்கும் இடத்தை தானே சுத்தம் பண்ணான், இரண்டு ரூபாயாவது கொடுக்கலைன்னாலும் பரவால்ல, அதை சிரிச்சிக்கிட்டே சொல்லியிருக்கலாம் இல்லையா சார்?” என்றான் நவீன்.

சண்முகம் நவீனைப் பார்த்து சற்று எள்ளலாகச் சிரித்தார். “தம்பி நீ இந்த ஊருக்கு வந்து எத்தனை நாளாச்சு? ”

“4-5 மாதங்களிருக்கும் சார்?”

“முதல்ல ஒன்னு புரிஞ்சிக்கோ. இங்கே யாரு நல்லவங்க யாரு கெட்டவங்கன்னு தெரிஞ்சிக்கிட்டு அப்புறமாதான் உதவனும். பார்க்குற எல்லாருக்கும் உதவ நாம என்ன கோடீசுவரனா? இரண்டாவது, இந்த ரயில்ல அந்தப் பையனை மாதிரி தொடர்ந்து பல பேரு வருவாங்க எல்லாருக்கும் கொடுக்க முடியாதுல்ல?” என்று அவர் சொன்ன போதுதான் முன்னர் நவீனுக்கு எதிர்புறமாக சென்ற டீ விற்பவர் இப்போது சண்முகம் சாருக்கு எதிர்புறம் வந்தார்.

“டீ ஒன்னு கொடுப்பா? தம்பி நீ குடிக்கிறியா?” என்று நவீனைப் பார்த்தார்.

சரியாக எண்ணி 10 ரூபாய் சில்லறையாகக் கொடுத்து டீ வாங்கினார்.

நவீனுக்கு உள்ளே அவ்வளவு கோபம். அவன் இதற்கு முன் இப்படிப்பட்ட ஒரு மனிதரைப் பார்த்ததே இல்லை. அவன் தொடர்ந்து அவருடன் பேசாமல் மேலேயேறி படுத்துவிடலாம் என்றும் கூட நினைத்தான், ஆனால், மேலே சன்னல் கிடையாதே. அவர் படுக்கும் வரைதான் சன்னல் வழி காற்றும், காட்சிகளும் அவனுக்குக் கிடைக்கும் என்பதால், சகித்துக் கொண்டு சன்னலுக்கு வெளியே நகரும் உலகைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“தம்பி!! வாழ்க்கையில பணம் ரொம்ப முக்கியம். அதே நேரம் பணத்தை எங்கே எப்போ செலவு பண்ணனும்னு முடிவு பண்ணுறதும் முக்கியம். உங்களுக்கு உதவின்னு யாரும் செய்ய வர மாட்டாங்க, ஆனா, நீங்க உதவிக்கிட்டே இருந்தீங்கன்னா, உதவி கேட்கும் நிலைக்கு ஒரு நாள் தள்ளப்படுவீங்க. இது நான் கண்ட அனுபவம். ஆயிரம் நல்லவங்களுக்கு நடுவுல ஒரு துரோகி போதும் உங்களைச் சாய்த்து சரிக்க. அதனால ஜாக்கிரதையாக இருங்க” என்றபடி இன்னொரு சிப் டீயை உறிஞ்சினார் சண்முகம்.

நவீன் அவரை ஓரக்கண்ணால் பார்த்தான். அவரிடம் என்ன பேசுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. ஃபோனை கையிலெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நடுவில் “சல் சல்” ஓசைக் கேட்கவே நிமிர்ந்து பார்த்தான். சண்முகம் சாருக்கு அருகில் பக்கத்து சைட் பர்த்திலிருந்து ஒரு குட்டிப் பாப்பா வந்து நின்று கொண்டிருந்தாள். நவீன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.

வாயில் ஆட்காட்டிவிரலை வைத்தபடி, நகரும் ரயிலில் பட்டுப் பாவாடை சட்டை போட்டுக் கொண்டு அசராமல் நின்று கொண்டிருந்தாள் அந்த பாப்பா. நவீன் அவளைப் பார்த்து தன் இரண்டு கண்களையும் சிமிட்டினான். பாப்பா சிரித்தாள். ஃபோனைப் பாக்கெட்டில் வைத்துவிட்டு, அவளுடன் பேச ஆயத்தமானான், அப்போதுதான், “ஏம்மா இந்த குழந்தை யாரோடது? இப்படி தனியா சுத்த விடுறீங்க, யாராவது தூக்கிட்டுப் போயிட போறாங்க.” என்றொரு சத்தம் போட்டார் சண்முகம்.

உடனே அந்த பாப்பாவின் அம்மா அவளைத் தூக்கி வைத்துக் கொண்டார்.

நவீனுக்குத் தன்னைதான் சொல்கிறாரோ என்ற சந்தேகமும் வராமல் இல்லை, சரி அவர் சொல்வதிலும் ஒரு சின்ன நியாயம் இருக்கிறதென்று நினைத்துக் கொண்டு கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

டீயைக் குடித்து முடித்ததும், சன்னல் வழியே பேப்பர் கப்பைத் தூக்கி எறிந்தார் சண்முகம். சட்டென்று அதிலிருந்து இரண்டு துளி டீ தெறித்து நவீன் மீதும் அடித்தது.

“சாரிப்பா! தெரியாம பட்டுடுச்சு” என்றார் சண்முகம்.

அவன் சென்னையில் இருந்த நாட்களில் இப்படியொரு தமிழரைச் சந்தித்ததே இல்லை. ‘இவர் வயசானவராக இருக்கிறாரே ஒழிய, வயதான சிறுவனாகவும் இன்றி, வயதான மனிதராகவும் கூட இல்லாத, இங்கிதமற்றவராக இருக்கிறாரே’ என்று சற்றே வேதனையடைந்தான் நவீன்.

“பரவால்ல சார். ஆனா, அடுத்த தடவை எல்லாம் இப்படி டீ கப்பை சன்னல் வழியா தூக்கி போடாதீங்க சார்.”

“ஹாஹ்ஹா! அப்போ பர்த்துக்கு பர்த் ஒரு குப்பைத் தொட்டிதான் வைக்க சொல்லனும்.” என்று சிரித்தார்.

நவீனுக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை. சிறிது நேரம் ரயில் கதவின் அருகில் நின்றபடி வேடிக்கை பார்க்கலாம் என்றெண்ணி எழுந்து சென்றான்.

காற்று மிகவும் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. தூரத்துப் பனை மரங்கள், நவீனின் முடி காற்றில் பறப்பதை கண்டு, “அங்கே பாரேன் அந்த நகரும் பெட்டிக்குள்ள நிற்கும் மனுசனோட இலையெல்லாம் எப்படி காத்துல பறக்குது” ன்னு சொல்லிச் சிரிப்பதைப் போல நினைத்துக் கொண்டான். ஹெட்போனைக் காதில் மாட்டிக் கொண்டான். அதில் ஒரு பக்கம் தான் வேலை செய்யும், மறுபக்கம் பிய்ந்து டேப் அடித்தும் வேலை செய்யவில்லை. அதனால் அப்படியே விட்டுவிட்டான். இசைக்கு ஸ்டீரியோ மோனோ டால்பி எல்லாம் கிஷோர் குமாரோ அல்லது முகம்மது ரஃபியோ பாடும் போது தேவைப்படாது இல்லையா!!அதனால் அவனுக்கு அந்த ஒரு பக்க மோனோவே இசையின் மலை மீது ஏற்றி அருவியாக விழ வைத்துவிடும். இனி எப்போதாவது அந்த மறுபுற ஹெட்ஃபோன் வேலை செய்தாலும் கூட, அவனுக்கு அதில் கேட்கப் பிடிக்காமல் போகும் அளவிற்கு.

பத்து பதினைந்து பாடல்கள் முடிந்ததும் கால் வலி வரவே தன் பர்த்துக்கு வேறு வழியின்றித் திரும்பினான். லோயர் பர்த்தை இணைத்துவிட்டு கால்நீட்டியபடி மீண்டும் அதே புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார் சண்முகம். “வாப்பா! உட்கார் தம்பி” என்றவரிடம் “இல்லை சார் நானும் படுக்க போறேன். திருப்பூர் ஸ்டேசன் வந்தா மட்டும் சொல்லுங்க” என்று கிடுகிடுவென மேலே ஏறிப் படுத்துவிட்டான்.

நிலைமறந்து தூங்கிப் போனவன் திடீரென்று எதோ குழந்தை அழும் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டான். கண்களைக் கசக்கி சுற்றுமுற்றும் பார்த்தான். கீழே சன்னல் வழியே பெய்து கொண்டிருந்த மெல்லிய வெளிச்சத்தில் பக்கத்து பர்த் குட்டி பாப்பா அழுது கொண்டிருந்தது தெரிந்தது. அருகில் சண்முகம் சார் அவளை அமைதிபடுத்திக் கொண்டிருந்தார்.

சரசரவென கீழே இறங்கி வந்தான் நவீன்.

“என்னாச்சு சார்?” என்றதும் அவர் வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்கும்படி சொல்லவே, பக்கத்து பர்த்தை பார்த்தான். குட்டி பாப்பாவின் அம்மா, பாப்பாவுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அவளின் முந்தானை விலகியபடி தூங்கிக் கொண்டிருந்தாள்.

பாப்பா சண்முகம் சாரை கை காட்டி அழுது கொண்டிருந்தாள். அவ்வளவு அழுகை ஒலியிலும் அவர்கள் யாருமே எழவில்லை, அப்படி என்னதான் அயற்சியோ. இருட்டில் சண்முகம் சாரின் உடல் நடுங்கி கொண்டிருப்பதைக் கவனித்தான். அவர் பாப்பாவிடம், “ஷ்ஷ்ஷ்” “ஷ்ஷ்ஷ்” என்று மட்டும் சொல்லிக் கொண்டேயிருந்தார். இவன் கேள்விக்குப் பதிலும் சொல்லவில்லை.

சண்முகம் சார்தான் பாப்பாவிடம் அல்லது பாப்பாவின் தாயிடம் எதோ செய்திருக்கிறார் என்று புரிந்து கொண்டான். அவரை நெருங்கினான், தன் உதட்டின் மீது விரலை வைத்து அவரை அமைதியாக இருக்கும்படி சைகையில் சொன்னான். “பளார்ர்ர்” என்று ஓர் அறை சண்முகம் சாரின் கன்னத்தில் விழுந்தது. “ஆஆஆஆ” வென்ற சத்தம் கேட்டு பாப்பாவின் குடும்பமும் இவர்களின் பக்கத்தி பர்த்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களும் எழுந்து லைட்டை போட்டு “என்ன ஆச்சு என்ன ஆச்சு??” என்று சலசலத்தார்கள்.

அறையைப் பார்த்து பயந்த பாப்பா அம்மாவிடம் சென்று அமைதியாக ஒடுங்கிக் கொண்டாள். இப்போதுதான் தன் நிலையைப் பார்த்து உணர்ந்த அவளின் அம்மாவும் தன் முந்தானையைச் சரி கொண்டு எழுந்து அமர்ந்து கொண்டாள். சண்முகம் சாரிடம்,”என்ன ஆச்சு சார்? ஏன் சத்தம் போட்டீங்க” என்று கேட்டான் பாப்பாவின் அப்பா, “ஒன்னுமில்லப்பா போய் படுங்க” என்று சொல்லிவிட்டு படுத்துவிட்டார் சண்முகம் சார்.

நவீனும் படுத்துவிட்டான். அடுத்த முறை இப்படி செய்ய நினைக்கும் போதெல்லாம் அவரை பயமுறுத்த அந்த ஒரு அறை மட்டுமே போதும் என்று அவன் அறிவான்.

சண்முகம் சார் மெதுவாகப் பாப்பாவிடமிருந்து பிடுங்கிய பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து ஒவ்வொன்றாக படுத்துக் கொண்டே சாப்பிடத் துவங்கினார்.


AI-generated art is used in this Story.

எழுதியவர்

குமரகுரு
சென்னையிலுள்ள ஐ.டி துறை நிறுவனமொன்றில் பணிபுரியும் குமரகுருவின் கவிதைத் தொகுப்புகள் இதுவரை தமிழில் இரண்டு ஆங்கிலத்தில் ஒரு தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Nithyanandam vms
Nithyanandam vms
10 months ago

❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌🙏🏿🙏🏿

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x