
மதிய உணவுக்கான இடைவெளி மணி ”டிங் டிங் டிங்”என ஒலிக்க ஆரம்பித்ததும் “ஹோ“யென பெரும் சத்தம் குழந்தைகளிடமிருந்து அலைகளின் ஓசையென எழுந்து பின் மெதுவாக மெதுவாக ஓய்ந்தது. ஒன்றாம் வகுப்பிலிருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை பெண் குழந்தைகளுக்கு மட்டுமான பள்ளிக்கூடம் அது.மணி அடித்ததும் அதற்காகவே காத்திருந்தவர்கள் போல அனைத்து வகுப்பிலிருந்தும் மாணவிகள் சாப்பாட்டுக் கூடையை எடுத்துக்கொண்டு அவரவர்களுக்கு பிடித்தமான மரத்தடியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அடர்த்தியாக வரிசையாக வளர்ந்திருந்த ஆல அரச வேப்பமரங்களுக்கு அடியில் சிமெண்டினால் ஆன பெஞ்ச் பூங்காவைப்போல வரிசையாக போடப்பட்டிருந்தது.
மைதிலி சோர்வுடன் அருவெறுப்பாக முகத்தை சுழித்துக்கொண்டே மஞ்சள் பூக்கள் பூத்து உதிர்ந்துக்கொண்டிருந்த கொன்றைமரத்தடியை நோக்கி வேகமாக வந்துக்கொண்டிருந்தாள். அங்குதான் அவர்கள் வழக்கமாகச் சந்திப்பார்கள் .தூரத்திலிருந்து பார்க்கும்பொழுது மரத்திலிருந்து வரிசையாக கொத்துக்கொத்தாக சரவிளக்குகள் போலத் தொங்கிக் கொண்டிருந்த மலர்களைக் கண்டதும் மைதிலி முகம் மலர்ந்து சற்றுத்தெளிந்தது. அவளது வருகைக்காக காத்திருந்த அரங்கநாயகி, வாசுகி, பிரியா மூவரும் டிபன்பாக்ஸை திறக்காமல் எதுவோ இரகசியமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் மைதிலியைக் கண்டதும் உடனே பிரியா கைகளை மேலே உயர்த்தி “ ஏய் மைதிலி சீக்கிரம் வந்து தொலை பசி உயிரு போகுது .நீ என்னன்னா ஆடம்பரம் பண்ணிட்டு சவகாசமா வர்ற ! பாரு எல்லாரும் பாதி சாப்பாடு சாப்பிட்டே முடிஞ்சிட்டாங்க நாங்க உனக்காக இவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறோம் வந்து தொலைடி”என சத்தமிட்டாள்.
மைதிலி வெகுவெகுவென இவர்கள் மூவரின் அருகில் வந்து “அதான் லேட்டாகுதுன்னு தெரியுதுல்ல நீங்க மூணுபேரும் சாப்பிட ஆரம்பிக்கலாம்ல்ல அந்த பத்மஜா டீச்சர் சாவடிக்கிது . என்னையே கர்வம் கட்டுது. பொழுதானைக்கும் திட்டிட்டே இருக்கு. இன்னைக்கு தெரியாத்தனமா தலையில ஹேர்பின் குத்திட்டு வந்திட்டேன். ஒழுங்கா படிக்க துப்புல்ல உனக்கு ஹேர்பின் ஒருகேடான்னு கேக்குது எவனைப் பார்க்க இந்த ஆடம்பரமெல்லாம்ன்னு திட்டுது சனியன். எங்க தெருவுல தான் குடியிருக்கு எப்பப் பார்த்தாலும் என்னையே நோட்டம் விட்டுட்டு எதா இருந்தாலும் எங்க அம்மாட்ட போயி ஒண்ணுக்கு ரெண்டா கோளி சொல்லுது. எதோ என்னை பிடிக்கல அதுக்கு என்னை வச்சி செய்யுது. எனக்கு சாப்பாடே வேணாம்பா. குமட்டுது.செத்த நேரம் உங்களோட உட்கார்ந்துட்டு போலாம்ன்னுதான் வந்தேன். இன்னைக்கு விலங்கியல் ப்ராக்டிக்கல் டி-செக்ஸன்ல்ல தவளைய வச்சிட்டாங்க .நான் டி-செக்ஸன்ஸ் பண்ணிட்டு இருக்கும்போது தவளையோட இதயம் துடிச்சிக்கிட்டே இருந்தது. பாவமா இருந்தது தெரியுமா ? தவளைக்கு மயக்க மருந்து கொடுத்து வச்சிருந்தாங்க போல என் கை முழுக்க எவ்வளவு கழுவினாலும் அந்த பார்மால்டிஹைடு வாடை போகவே இல்லை. நான் எப்படி சாப்பாடு எடுத்து சாப்பிடுறது. எனக்கு வேணாம் நான் உட்கார்ந்துருக்கேன் நீங்க சாப்பிடுங்க” எனக்கூறிவிட்டு அரங்கநாயகியின் அருகில் காலியாக இருந்த இடத்தில் அமர்ந்துக்கொண்டாள்.
“இந்தப் புள்ளைகிட்ட இதுதான் பிரச்சினை நாம எவ்வளவு பழகினாலும் ஒட்டவே ஒட்டாது .ஆளப்பாரு! நாங்க ஊட்டிவிடுறோம் சாப்பிடு. காலையிலேர்ந்து சாப்பிடாம தான் இருக்கப்போல மூஞ்ச பார்த்தாலே தெரியுது. இங்க கொடு டிபன் பாக்ஸ , நீ என்னத்தை புதுசா எடுத்துட்டு வந்திருக்க போற அதே மிளகாய் பொடி அதே இட்லி தான , இன்னைக்கு எங்க அண்ணன் எனக்கு பிடிக்குமேன்னு வெள்ளென கிளம்பி மல்லிப்பட்டினம் போயி சுறா மீன் வாங்கிட்டு வந்துச்சி .எங்கண்ணனுக்கு நான்னா அவ்வளவு உசிரு எனக்காக என்னவேணா பண்ணும் . எங்க அப்பா சொத்துசண்டையில அநியாயமா வெட்டுப்பட்டு செத்ததுக்கு அப்பறம் எங்கண்ணன் தான் எனக்கு எல்லாம் மத்தவங்க எல்லாம் அதுக்கு அப்பறம் தான். அம்மா உங்க எல்லாருக்கும் சேர்த்துதான் சுறா புட்டு செஞ்சிக்கொடுத்திச்சி .இந்தாப்புள்ள இங்க வா நான் ஊட்டி விடுறேன் வாயத்திற ! வாயைப்பாரு குருவி வாய் மாதிரி இத்தூணுண்டு இதுல எப்படி புள்ள சாப்பிடுற?” என மைதிலியைக் கேட்டப்படியே அனைவருக்கும் சாப்பாட்டை பகிர்ந்தளித்து விட்டு தானும் சாப்பிடத்தொடங்கினாள் அரங்க நாயகி.
ஆமாண்டி ஆரம்பிச்சிட்டாடி இவ அண்ணன் புராணத்தை இனி வாயே ஓயமாட்டா , இந்தாடி நான் இன்னைக்கு தயிர்சாதமும் உருளைக்கிழக்கு வறுவலுதான் .அம்மா காலையிலையே வெள்ளரிக்கா பறிக்க ஏரிக்கரைக்கு வேலைக்கு போயிட்டு , அக்காதான் செஞ்சி கொடுத்துச்சி இந்தா வாயைத்திற ! என்றுக்கூறிவிட்டு பக்கவாட்டில் அரங்கநாயகி கூடையில் திறக்கப்படாமல் ஒரு டப்பா இருப்பதை கவனித்த வாசுகி . “ஏய் அரங்கா! இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை.நானும் உன்னை பலமுறை நேரடியாவும் சொல்லிட்டேன் மறைமுகமாவும் சொல்லிட்டேன் ஒழுங்கா படிக்கிற வேலையப்பாரு.இன்னொரு டப்பா சாப்பாடு யாருக்கு எடுத்துட்டு வந்த ? அந்த கண்டக்டர் பயலுக்குத்தான ? உனக்கு இதெல்லாம் தேவையா யோசிக்கவே மாட்டீயா ? இப்பவே உன்னைப்பத்தி அரசபுரசலா எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சிட்டு, முந்தா நேத்து மைதிலியும் நானும் தமிழ் வகுப்புக்கு போறப்ப , பிடி டீச்சர் கூப்பிட்டு இனி உன் கூட நாங்க சேரக்கூடாது.பழக கூடாதுன்னு கண்டிச்சிது. அப்படி பழகுனா ப்ரேயர்ல்ல சொல்லி மானத்த வாங்கிடுவேன்னு மிரட்டுது . மறுபடி மறுபடி ஏண்டி இப்படி பண்ற? என்று வாசுகி சொன்னதும், “சரி நீங்க மூணு பேரும் என்கூட இனி பேசாதீங்க நான் எப்படியோ நாசமா போறேன். நீங்க நல்லாருங்க இனி யாருமே எனக்கு தேவை இல்லை என் மூஞ்சில முழிக்காதீங்க . உங்களுக்கு உண்மையா என்ன நடந்துச்சின்னு தெரியுமா ? அன்னைக்கு எங்க பங்காளிவூட்டு சித்தப்பா கடைக்கு பொட்டு வாங்க போயிருந்தேன் கடையில யாருமே இல்லையேன்னு உள்ள இருக்கிற அறைக்கு விறுவிறுன்னு போயிட்டேன் அங்க இந்த பிடி டீச்சர் எங்க சித்தாப்பாவோட இருக்கிறத நான் பார்த்துட்டேன்.அதுவும் என்னை பார்த்துருச்சி அதுலேர்ந்து எங்கப்பார்த்தாலும் என்னைத்திட்டுது .அசிங்கப்படுத்துது நான் இதை யாருட்டையுமே சொல்லல இப்பக்கூட வேறு வழி இல்லாம தான் சொல்றேன்.நான் கெட்டவ நீங்க யாரும் என்கிட்ட பேசாதீங்க என்றுக்கூறிவிட்டு கையலம்பாமல் காய்ந்திருந்த கரங்களோடு முகத்தினைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள் அரங்க நாயகி.
நால்வரும் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தாலும் பதினொன்றாம் வகுப்பில் தனிதனியே அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் வேறு வேறு பிரிவுகளில் படிக்க வேண்டியதாகிற்று இருப்பினும் மதிய உணவு வேளையில் நால்வரும் ஒன்றாகவே உணவு உண்பது என்பது அவர்களுக்குள் விதித்துக்கொண்ட கட்டளை .எந்த சூழல் வந்தாலும் நால்வரும் பிரிந்ததே இல்லை நால்வரும் வேறு வேறு சூழல் உருவ அமைப்பு பொருளாதார வசதி குணங்கள் கொண்டிருந்தாலும் கண்ணுக்குத் தெரியாத சன்னமான பின்னலொன்று பெரிய வலையென நால்வரையும் அழகாக இணைத்திருந்தது.
“வாசுகி உனக்கு எப்ப என்ன பேசணும்னே தெரியாதா?
அவ இந்த வயசுல ஜாலியா இல்லாம எந்த வயசுல சந்தோஷமா இருப்பா? எனக்கு பாரு எவனாவது ஒருத்தனாவது பின்னாடி சுத்துறானா ? எங்க மாமாக்களோட அடாவடிக்கு பயந்துட்டு ஓடியே போயிடுறானுங்க , அவளாவது சந்தோஷமா இருக்கட்டுமே ! எப்பப்பார்த்தாலும் அறிவுரைக் கூறிக்கிட்டே பாட்டிமா மாதிரியே இருக்க, நீயும் சந்தோஷமா இருக்காத யாரையும் இருக்கவும் விடாத, இப்பபாரு அவ இன்னும் சரியா சாப்பிடக்கூட இல்லை. சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்பறமா எதா இருந்தாலும் கேக்கமாட்டீயா? அவளுக்கே அப்பா இல்லை அண்ணிக்காரி ஏழு நொரநாட்டியம் சொல்லுவா, போனவருசமே அவுங்க அண்ணன் இவளுக்கு கல்யாணப் பேச்சை எடுத்துட்டான். விடு கொஞ்சநாளு அவ இஷ்டப்படி இருக்கட்டுமே,
“ஏய் அரங்கா இப்ப என்ன ! பிடி டீச்சர் சொன்னாங்கன்னா நாங்க உன்னை விட்டுட்டு போயிடுவோமா? அப்பறம் பிடி டீச்சரும் உங்க சித்தப்பா ஒண்ணா இருந்தாங்கன்னு சொன்னீயே அப்படின்னா என்னாடி ? நீ கண்ணால பார்த்தீயா ? இதெல்லாம் எங்களுக்கு நீ சொல்லித்தராம உன்னை விட்டுடுவோமா? சொல்லுடி இரண்டு பேரும் என்ன பண்ணுனாங்க “என்றதும் அனைவரும் சத்தம்போட்டு கலகலவென சிரிக்க ஆரம்பித்தார்கள். சீ கண்ணைத்தொடை , எல்லாரும் எந்திரிச்சி வாங்க போய் சித்தேரிக்குளத்துல கைய கழுவிட்டு வகுப்புக்கு போவோம் . நேரமாச்சி இயல்பியல் வகுப்புல ப்ராக்டிக்கல் நோட்டுக்கு கையெழுத்து வாங்கணும்.சரி அரங்கா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லு !உண்மையாவே அந்த கண்டக்டருக்கு தான் சாப்பாடு எடுத்துட்டு வந்தீயா? என்றதும் , மூடியிருந்த கரங்களை விலக்கி “ ஆமாம் என தலையை அசைத்துக் கொண்டே வெட்க்கப்பட்டு சிரித்தவளது கன்னங்கள் இளஞ்சிவப்பாக மாறியிருந்தது. அழகான பெரிய கண்களின் இமைகளில் கண்ணீர்பட்டு கண் இரப்பைகள் இன்னும் அடர்த்தியாக கறுமையாக பேரழகாகத்தெரிந்தது. சந்தன நிறத்து உடலில் அவள் அணிந்திருந்த அரக்குநிற சீருடையில் இளங்குருந்துப்போல பளீரென மின்னினாள். இறுக்கிப்பின்னி மடக்கியிருந்த கூந்தலே மார்புகள் தாண்டி இடுப்புவரை கனமாகத் தொங்கியது. இவளைப் பார்த்தால் யாருக்குத்தான் காதல் வராது என மூவரும் ஒருவரை ஒருவர் கண்களாலே பார்த்துப் பேசிக்கொண்டனர்.
நால்வரும் சித்தேரிக்குளத்தில் ஒருவர்மீது ஒருவர் தண்ணீரை வாரி இரைத்து விளையாடிக்கொண்டே ஒருவழியாக கைகளையும் டிபன் பாக்ஸுக்களையும் கழுவிமுடித்து திரும்பும் பொழுது விடாது சைக்கிள் பெல் அடித்துக்கொண்டே இருக்க மைதிலி அவர்களிடமிருந்து நைசாக சற்று பின்தங்கி திரும்பிப்பார்த்தாள். தூரத்து எதிர்க்கரையிலிருந்து வருண் மைதிலியை நோக்கி கைகளை வேகமாக ஆட்டினான். அவன் கைகள் நிறைய மலர்ந்த இளஞ்சிவப்புத் தாமரைப்பூக்கள். அங்கிருந்துக்கொண்டே ஒருகாலை மடக்கி அமர்ந்து இருகைகளால் அந்த தாமரைப்பூக்களை அப்படியே மைதிலியை நோக்கி நீட்டினான். அதைப்பார்த்த மைதிலிக்கு படபடப்பாக வந்தது. யாராவது அதைப் பார்த்துவிட்டார்களா என பயந்துக்கொண்டே சுற்றிலும் தலையை திருப்பி கண்களை சுழட்டி மிரட்சியோடுப் பார்த்தாள். நல்லவேளை அவளது தோழிகள் அதைக் கவனிக்கவில்லை.அதுவும் வாசுகி இதைப் பார்த்திருந்தாலெனில் தொலைத்துக் கட்டிவிடுவாள். இப்பொழுது என்ன செய்வது? வருணை பார்க்காதவாறு திரும்பி விறுவிறுவென பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். இந்த வருணுக்கு என்னவாகிற்று போனவருடம் வரை இருவரும் ஒன்றாகத்தானே டியூசனுக்கு போய்வந்தோம். நன்றாகத்தானே பேசினான். இப்பொழுது ஏன் படங்களில் வரும் கதாநாயகன்கள் போல சேட்டைகள் செய்கிறான். காலையில் எழுந்து வாசலுக்கு கோலம் போட வந்தால், பக்கத்து தெருவில் இருப்பவன்தானே! அவன் அண்ணன் சைக்கிளை எடுத்துக்கொண்டு பத்துதடவை பெல்லடித்துக்கொண்டே வீட்டைக்கடந்துச்செல்கிறான். நிமிர்ந்து பார்த்துவிட்டால் போதும் ஈன்னு இளிப்புவேறு. அவனைப்பார்ப்பதை அப்பா பார்த்துவிட்டால் என்ன நினைப்பார் ? சே நினைக்கவே அசிங்கமாக இருக்கிறது. ஆனால் அவனைப்பார்பதை என் மனமும் விரும்புகிறதே ! தூரத்திலிருந்து அவன் பார்க்கும்பொழுது அவன் மீதிருந்து கண்களை எடுக்கமுடியாமல் கண்கள் கலக்கும்பொழுது எதோ ஒரு உணர்வு இழுத்து அணைத்துக்கொள்கிறதே! எதோ மெல்லிய சிலிர்ப்பு உருவாகி உடலெங்கும் மின்னலென மின்னி மறைகிறதே. அந்த பார்வையின் கூர்மை மின்சாரமாகப்பரவி பரவசமாகப்பூத்து நிற்கும் தருணங்களை இந்த உடல் அடிக்கடி கேட்கிறதே! என்ன உணர்வு இது ஏன் எனது உடல் இவ்வளவு இறகைப்போல மிதக்கிறது .அவனையே நாடுகிறது. அவன் ஒருநாள் பார்க்கவரவில்லையெனில் மனது சோர்ந்துவிடுகிறது. கடவுளே என்ன நடக்கிறது எனப்புரியவில்லையே இதை யாரிடம் கேட்பது ? இருவரும் இவ்வளவு நாட்கள் ஒன்றாகத்தானே விளையாடிக்கொண்டிருந்தோம். திடிரென அவன் தொடுவது ஏன் இத்தனை இன்பமாகத் தோன்றுகிறது. ஒருவேளை அவனுக்கும் அப்படி தோன்றுவதால்தான் சுற்றி சுற்றி வருகிறானோ ? ஆனால் நாம் இப்படி பலகீனமாக இருக்கிறோம் என்பது அவனுக்கு தெரிந்துவிடக்கூடாது நமக்கு எதுமே தோன்றவில்லை எனக் கூறிவிடுவோம். இந்த உணர்வு ஏனோ மிரட்சியாக உள்ளது என எண்ணியபடியே வந்தவள் மீது ஏழாம் வகுப்பு மாணவிகள் விளையாடிக்கொண்டிருந்த வாலிபால் வந்து விழுந்தது.
“ஏய் எருமைங்களா பார்த்து விளையாட மாட்டீங்களா ? படாத இடத்துல பட்டுட்டா என்னப்பண்றது?எனக்கூறியபடியே பந்தினை எடுத்து குழந்தைகளிடம் தூக்கி எறிந்த வாசுகி” ஏந்தே மைதிலி என்னாந்த எதோ நினைச்சிட்டு பராக்கு பார்த்துட்டுவர்ற ! ஒழுங்கா பார்த்து வா புள்ள , சரி சாயங்காலம் வீட்டுப்பெல்லு அடிச்சதும் பாப்போம். அவுங்கவுங்க வகுப்புக்கு போங்க எனச்சொல்லிவிட்டு வகுப்பறையை நோக்கிச்சென்றாள் வாசுகி.
வாசுகி அங்கிருந்து நகர்ந்ததும் ஓடிவந்து மைதிலியின் கரங்களை இழுத்து கைகளில் பின்னிக்கொண்ட அரங்க நாயகி” மைதிலி எனக்கு ஒரு உதவி செய்வீயா ? யாருட்டையும் சொல்லக்கூடாது. பிரியா ஒரு ஓட்டவாய். வாசுகிக்கு தெரிஞ்சா திட்டுவா . நாளைக்கு காலையில எனக்காக சீக்கிரம் வந்துடுறீயாப்பா? , உங்க வீட்ல சிறப்பு வகுப்புன்னு சொல்லிட்டு வந்துடு “என்றவளை புரியாமல் “ஏன் அரங்கா எதுக்கு சீக்கிரம் வரணும் எங்க அம்மாவ பத்தி உனக்கு தெரியும்ல்ல ஏற்கனவே இல்லாததையும் பொல்லாதையும் சொல்லி அப்பாட்ட அடிவாங்க வச்சிட்டே இருப்பாங்க. நேத்து எங்க அப்பா மண்டையில குட்டுனதே வலிக்குது” என்றபடியே தலையை தடவுபவளின் கரங்களுக்கு மேலே தனது கரங்களை வைத்து ஆறுதலாக தடவிவிட்டாள் அரங்க நாயகி. எனக்கு அப்பா இல்லை . உனக்கு எல்லாரும் இருந்தும் இல்லாதது மாதிரி தான். பாவம் புள்ள நீயி . உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் மைதிலி “என்றாள் கலங்கிய கண்களோடு.
“சீ ஆளப்பாரு எதுக்கெடுத்தாலும் அழுவீயா. சரி சொல்லு . உனக்காக என்ன வேணாலும் பண்றேன் . எதுக்கு சீக்கிரம் வரணும் ? என மைதிலி கேட்டவுடன், “ஒரு கடுதாசி எழுதணும்பா , அந்த கண்டக்டருக்குத்தான் . உன் கையெழுத்துதான் முத்து முத்தா அழகா இருக்கும்.எங்க வீட்டு பிரச்சினைகளை சொல்லி அவனுக்கு ஒரு கடிதாசி எழுதணும். அவன் விளையாட்டுத்தனமா இருக்கான. எதையும் தீவிரமா பெருசா எடுத்துக்கிறதில்லை . அன்னைக்கு பெரிய மார்க்கெட் பக்கத்துல அவனசந்திச்சப்பக்கூட அவன் என்னை பேசவே விடல .அவன் பாட்டுக்கு வர்றான் கொஞ்சுறான் . அவன் வேலைய முடிச்சிட்டு போயிடுறான். எனக்கு ஒரே கவலையா இருக்கு மைதிலி அவன் வேற சாதி, நான் வேற சாதி .எங்க பெரியண்ணன் கூட என்மேல பாசமா இருக்கும் .சின்ன அண்ணன் தான் காட்டுமிராண்டி போட்டு அடிச்சிட்டே இருப்பான் என அரங்கநாயகி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அவ்விடத்தை பத்மஜா டீச்சரும் பிடி டீச்சரும் கோகிலா டீச்சரும் இவர்கள் இருவரையும் பார்த்தபடியே கடந்துச்சென்றனர். உடனே சட்டென இருவரும் பிரிந்து அவரவர் வகுப்பறையை நோக்கி நடந்தனர்.
தொலைக்காட்சியில் போனவாரம் விஜய் நடித்து வெளியான புதுப்படம் ஓடிக்கொண்டிருந்தது . இப்பொழுதெல்லாம் முன்பு மாதிரி தியேட்டரில் போய் இடிபட்டு டிக்கெட் வாங்கி படம் பார்க்கத்தேவையில்லை கேபிள் இணைப்பு வழியாக புதுப்படங்களாக ஒளிப்பரப்புகிறார்கள் .நூறு ரூபாய் பணம் கொடுத்தால் போதும் நிறைய படங்கள் வீட்டில் இருந்து படுத்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டே பார்த்துவிடலாம். வீட்டில் அனைவரும் தொலைக்காட்சிக்கு முன்பு அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருக்க ,சங்கீதா “சொல்லாமலே யார் பார்த்தது நெஞ்சோடு தான் பூப்பூத்தது எனப்பாடி நடித்துகொண்டிருந்தது. உடனே மைதிலிக்கு வருணின் ஞாபகம் வந்தது.இரண்டு நாட்களாக அவனைக் காணவில்லை காரணமும் தெரியவில்லை மனம்முழுவதும் அவன்தான் நிரம்பியிருந்தான் . அவனது சிரிப்பு வசீகரக்கண்கள் அவனது உயரம். நெடுநெடுவென்ற உடல்வாகு. எவ்வளது தூரத்திலிருந்து நடந்து வந்தாலும் இவளால் கண்டுக்கொள்ளமுடிகிற தனிநடை . எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் அருகில் வந்து“ஏய் கட்டச்சி “காதுகளுக்குள் பேசிச்செல்லும் குறும்பு என அவளது உலகத்தில் வருண் மிக அழகனாகமாறியிருந்தான் அவளது உலகமும் அழகால் பூத்துக்குலுங்கியது.வருண் இப்பொழுது என்ன செய்துக்கொண்டிருப்பான்? அவனும் நம்மைப்போலத்தான் படம் பார்த்துக் கொண்டிருப்பானோ! என்ன அற்புதமான பாடல் இது இந்தப் பாட்டைக் கேட்டதும் எனக்கு வருண் ஞாபகம் வந்ததுப்போல அவனுக்கும் என் ஞாபகம் வந்தால் எப்படி இருக்கும்! உடனே அவனைப் பார்க்கவேண்டும் எனத் தோன்றியது .அவனைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே , வாசலில் சைக்கிள் மணி விடாமல் அடிக்கும் சத்தம் கேட்டது .மெதுவாக பக்கத்திலிருந்த புத்தகத்தை எடுத்தவள் அப்படியே பூனைப்போல நடந்து வாசலுக்கு வந்தாள். அங்கு எதிரே மிகப்பெரியதாக வளர்ந்திருந்த புளியமரத்தின் கீழே வருணும் அவனது நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். வருண் அவர்களிடம் பேசுவது போல பாவனைகளோடு மைதிலியை எதிர்நோக்கி காத்திருக்கிறான் என்பது பார்த்தவுடனேயே மைதிலிக்கு புரிந்துவிட்டது.. வருணைப் பார்த்ததும் அவளை மீறி மலர்ந்த புன்னகை முகத்தில் பொலிந்தது. இவள் சிரிப்பாள் என எதிர்ப்பார்க்காதவன் கண்களை அகலமாக விரித்து சிரித்துக்கொண்டே அவளது முகம் மலர்களைப்போல இருப்பதாக விரல்களை அபிநயத்துக்காட்டினான். சட்டென பூனைக்குட்டியைப்போல முகத்தை சுருக்கிக் காண்ப்பித்து “ மியாவ்”எனக்கத்தியதும் , மைதிலிக்கு அடக்க முடியாமல் இதழ்களை விரல்களால் மூடிக்கொண்டு சிரித்தாள்.” இரண்டு நாளா எங்கே போயிருந்த “என மைதிலி சைகைகளால் கேட்க வருண் கழுத்திலும் நெற்றியிலும் விரல்களை வைத்து காய்சல் என காண்பித்தான். மைதிலி சாலையின் இந்தப்புறத்தில் நின்று பேசிக்கொண்டிருக்க, வருண் எதிர்புறத்தில் நின்று பதில் சொல்லிக்கொண்டிருக்க, இருவரும் சுற்றிலும் நடப்பது எதையுமே கவனத்தில் கொள்ளவில்லை . மைதிலி திடிரென திரும்பி பார்க்கும்பொழுதுதான் பத்மஜா டீச்சர் அவளைக்கடந்து சென்றது அவளுக்கு தெரிந்தது . மைதிலிக்கு வருணிடம் பேசிக்கொண்டிருப்பதை டீச்சர் பார்த்திருப்பார்களோ என பயமாக இருந்தது. இல்லை டீச்சர் கவனித்திருக்கமாட்டார்கள் எனத் தனக்குத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள்.
அன்று வழக்கம் போல மாணவிகளுக்கான காலை நேரக்கூடுகை முடிந்ததும் , வானதி டீச்சர் அனைத்து மாணவிகளுக்கான வருகை பதிவேட்டில் பெயர்களை அழைக்க ஆரம்பித்திருந்தார். அதே நேரத்தில் மைதிலியும் , அரங்க நாயகியும் யாருக்கும் தெரியாமல் ஆய்வுக்கூடத்துக்கு பின்புறம் அமர்ந்து கடிதம் எழுதிக்கொண்டிருந்தனர். அரங்கநாயகி சொல்லச்சொல்ல மைதிலி கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள். அதில் அவன் அவளை எங்காவது ஓடிப்போய் விடலாம் என அழைத்ததாகவும் அதற்கு அரங்க நாயகி பொறுமை கடலினும் பெரிது . அனைத்தையும் விட பொறுமை தான் சிறந்தது என எழுதுமாறு சொல்லிக்கொண்டிருந்தாள் .இதென்ன ! படித்த திருக்குறள் விளக்க உரையெல்லாம் எழுதச்சொல்கிறாளே என நினைத்து சிரித்துக்கொண்டே எழுதினாள். பெரிய அண்ணன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் அவனது காலில் விழுந்தாவது சம்மதம் வாங்கிவிடுவதாகவும் அரங்கா அவனுக்கு நம்பிக்கை கூறி எழுதச்சொன்னாள். அடுத்து இந்த மாதம் தலை குளியலுக்கான தேதி கடந்தும் ஏன் இன்னும் விலக்காகவில்லை என புரியவில்லை என எழுதச்சொன்னாள். மைதிலிக்கு ஒன்றும் விளங்கவில்லை என்ன இந்த அரங்கா அசிங்கமாக இதெல்லாம் ஒரு ஆண்பிள்ளையிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள். என்ன அசிங்கம் இது இவளுக்கு அது வரவில்லையெனில் அவனிடம் எதற்கு சந்தேகம் கேட்க வேண்டும் என கூச்சத்தோடு கடிதத்தை எழுதியவள் காதில் பிரேயர் மணி ஒலித்தது . எழுதியது பாதி எழுதாதது பாதியென அரங்க நாயகியிடம் கடிதத்தை ஒப்படைத்தவள்.
“அச்சச்சோ தாமதமாகிருச்சி பேச்சு மும்முரத்தில நாழி ஆனதே தெரியலப்பாரு. வானதி டீச்சர் அட்டணன்ஸ் எடுக்க ஆரம்பிச்சிருப்பாங்க. நான் போறேன் என வேகமாக மைதானத்தை நோக்கி வருகையில் பிடி டீச்சர் கண்களில் மைதிலி பட்டுவிட “ ஏய் இங்க வா பள்ளிக்கு ஒத்தசடை போட்டுட்டு வரக்கூடாதுன்னு உனக்கு தெரியுமா? தெரியாதா? அறிவிருக்கா? மினுக்கிட்டு எவனை மயக்குறதுக்கு இப்படி ஸ்டைல் பண்ணிட்டு வர்றீங்க ? முட்டி போடு . முட்டிப்போட்டுட்டே தலையை அவிழ்த்து பிரிச்சி இரட்டை சடை போட்டுட்டு நீ வகுப்புக்கு போகலாம் .அதுவும் நான் சொல்ற வரை நீ முட்டிப்போட்டுட்டு தான் இருக்கணும் நான் சொல்லாம இந்த இடத்தை விட்டு நகர்ந்தே மைதானத்தை நாலு தடவை சுத்தி ஓடிவரணும். ம்ம் சீக்கிரம் போடு முட்டிய “என பிடி டீச்சர் கண்டிப்பாக சொல்லிவிட,
“டீச்சர் இன்னைக்கு நான் பீரியட் தலை குளிச்சது சுத்தமா காயல முடி முழுக்க தண்ணி சொட்டிட்டே இருந்தது . அதுனால தான் ஒத்த சடை போட்டு வந்துட்டேன் . சாரி டீச்சர் அடுத்த தடவை இப்படி பண்ணமாட்டேன் பீளீஸ் டீச்சர் ஒரே வயித்து வலி என்னால முட்டிப்போட முடியல“ என மைதிலி, பிடி டீச்சரிடம் முட்டிப்போட்டுக்கொண்டே கெஞ்சிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த வானதி டீச்சர் “ஏய் மைதிலி நான் கேட்டுக்கிட்ட உட்கார்ந்து தானே அட்டணன்ஸ் எடுத்தேன் நீ அப்ப வரவே இல்லையே நீ எங்க போயிருந்த ? என கேட்க டீச்சர் இன்னைக்கு பத்மஜா டீச்சர் சிறப்பு வகுப்பு சொல்லிருந்தாங்க அதுக்காக நான் எட்டுமணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்துட்டேன் என மைதிலி சொன்னவுடன் வானதி டீச்சர் எதோ யோசனையாக ஆசிரியர் அறையை நோக்கி சென்றார்.
மைதானத்தில் மைதிலி முட்டிப்போடும் விசயம் தெரிந்து எல்லா வகுப்பு மாணவிகளும் வந்து எட்டிப்பார்த்துவிட்டுச் சென்றுக்கொண்டிருந்தனர். மைதிலிக்கு மிகவும் அவமானமாக இருந்தது . கண்களில் நீர்வழிய கலை முடியை அவிழ்த்து இரட்டை சடைகளாக பின்னிக்கொண்டிருந்தாள். கால் முட்டிகள் கடுமையாக வலித்தது மைதானத்தில் வெறிப்பிடித்த மிருகம் போல வெயிலேறிக்கொண்டிருந்தது. காலையில் சாப்பிடாமல் வந்தது மயக்கமாக கண்களை இருட்டிக்கொண்டு வர . மாதவிலக்கின் போக்கு வேற அகிகமாகி மயக்கமாக வர தூரத்தில் வாசுகியும் பிரியாவும் வருவது தெரிந்தது அப்படியே வெயிலில் சரிந்து விழுந்தாள் மைதிலி.
காலையில் வழக்கம் போல அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள் மைதிலி . காலையிலிருந்தே அப்பாவைப் பார்க்கவில்லை அது ஒன்றும் பெரிய விசயமாக மைதிலிக்கு தோன்றவில்லை . சரியாக பள்ளிக்கு கிளம்பி வாசலில் கால் வைக்கும் பொழுது அப்பா வேகமாக உள்ளே வந்தார். வந்தவுடன் மைதிலிக் கையிலிருந்த புத்தப்பையை பிடுங்கி உள்ளே தூக்கி எறிந்தார்.
“ அப்பா ஏன் அப்பா” என கேட்க வாயெடுக்கும் முன்பு இடியென ஒரு அறை கன்னங்களில் விழ , சுருண்டு அவ்விடத்திலேயே விழுந்தாள் மைதிலி. இனி நீ பள்ளிக்கூடத்துக்கு போக வேணாம். நீ படிச்சி கிழிச்சது எல்லாம் போதும்நேத்து நீ ஸ்கூலுக்கு போகாம எங்க போன? என கோபத்தின் உச்சத்தில் நிற்று கத்திக்கொண்டிருந்த அப்பாவிடம் என்ன சொல்வதெனத் தெரியாமல் “அப்பா நான் ஸ்கூலுல்ல தான்பா இருந்தேன்” எனக்கதறினாள் மைதிலி .
“நேத்து சிறப்பு வகுப்புன்னு பொய்சொல்லிட்டு எங்கையோ போயிருக்கா பத்மஜா டீச்சர் அப்படி வகுப்பே நடத்தலயாம் . எல்லாம் உருப்படாத பழக்கம் வழக்கம் நாலு பொறுக்கி குட்டிகளோட சேர்ந்து எங்கையோ போயிட்டு ப்ரேயர் முடிஞ்சி வந்திருக்கா . பத்மஜா டீச்சர் நேத்து கோயில்ல பார்த்துட்டு இவளைப்பத்தி கதை கதையா சொல்றாங்க.அந்த செட்டியார் வீட்டுப்பய வருணோட பொழுதானைக்கும் ரோட்ல நின்னுகிட்டு பேசிட்டு இருக்காளாம் அடுப்புல தோசைக்கரண்டிய போட்ருக்கேன் இருடி சூடு வைக்கிறேன்” என சொல்லிவிட்டு அம்மா நகர்ந்ததும் மைதிலிக்கு என்ன செய்தெனப் புரியவில்லை அனைத்து விசயங்களும் தனக்கு எதிராக மாறியதைப்பார்த்து மனம் நொந்துப்போனாள் மைதிலி. எப்பொழுது தன்னிடம் எந்த விளக்கங்களும் கேட்காமல் தண்டிக்கும் குடும்பத்தாரிடம் எதைச்சொல்லி விளக்குவதெனவேப் புரியவில்லை. ஆத்திரமாக வந்தது. எல்லாரும் எப்பொழுது தனக்கெதிராகவே நிற்பது குறிந்து தன்னிரக்கம் வந்தது. அழுதுக்கொண்டே கோபத்துடன் சட்டென எழுந்தவள் நான் தப்பு பண்ணலேன்னு சொன்னா நம்ப மாட்டீங்கள்ள நீங்க என்ன எனக்கு சூடு வைக்கிறது நானே வச்சிருக்கேன் என அடுப்பில் பழுத்து ஆரஞ்சு நிறமாக ஜொலித்துக்கொண்டிருந்த தோசைக் கரண்டியை எடுத்து கைகளில் வீம்பாகச் சுட்டுக்கொண்டாள். தோல் கருகி தசையை சுடும் மணம் அவ்விடமெங்கும் வீசியது .அனைவரும் அப்படியே உறைந்து நின்றனர்.
தேர்வுக்கு இன்னும் ஒருவாரங்களே இருந்தது. மைதிலி முற்றிலுமாக மாறியிருந்தாள் . முன்னைப்போல் யாரோடும் பேசுவதில்லை பழகுவதில்லை. வகுப்பறையை விட்டு வெளியே வருவதையே குறைத்துக் கொண்டாள். டீச்சர் அனைவரும் தன்னைப்பற்றியே பேசுவதாகத் தோன்றியது. எங்கு சென்றாலும் தான் கண்காணிக்கப்படுவதாக உணர்ந்தாள். ஒரு நடைப்பிணம் போல மாறினாள். வருணை பார்ப்பதை முற்றிலுமாகத் தவிர்த்தாள் வாசுகி பிரியாவோடுக்கூட கேட்டக் கேள்விக்கு பதிலைச்சொல்லிவிட்டு கூடுதலாக ஒருவார்த்தைக்கூட பேசாமல் தவிர்த்தாள். முழுவதுமாக பத்துநாட்கள் தேர்வுக்கு படிப்பதற்காக விடுமுறை முடிந்து அன்றுதான் பள்ளிக்கு வந்திருந்தாள் அரங்கநாயகியை அவள் நினைக்கவே இல்லை. அவள்தான் இந்த பிரச்சினை அனைத்திற்கும் காரணம் என அவள் மேல் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அன்று தலைமை ஆசிரியை ப்ரேயரில் எதோ பேசிக்கொண்டிருந்தார். யாரோ இறந்துவிட்டதாக அதற்கு இரங்கல் தெரிவித்துக்கொண்டிருந்தார். அனைவரும் அந்த ஆத்மாவுக்காக ஆத்மா சாந்தி அடைவதற்காக பத்து நிமிடம் கண்களை மூடி அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அனைவரும் கண்களை மூடி நிற்க தலைமை ஆசிரியரின் குரல் பின்வருமாறு ஒலித்தது” நமது பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அரங்கநாயகி எனும் மாணவி நேற்று மாலை உயிரிழந்ததால் அவளின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்”
மைதிலிக்கு தலையைச்சுற்றியது . கடைசியாக அவள் எழுதச்சொன்ன வார்த்தைகள் யாவும் நினைவுக்கு வந்தன அவளை எத்தனை பிடிக்குமென அத்தனை முறை முகம் மலர அவள் சொன்னது முழுக்க நினைவிலாடியது. குற்றவுணர்வு உடல் முழுவதும் பரவி வேதனையில் நெஞ்சை அடைக்க கண்களில் நீர்வழிய ஆரம்பித்தது. ப்ரேயர் முடிந்ததும் ஓவென அலறிக்கொண்டு வாசுகியைத்தேடி ஓட்டமாக ஓடினாள் . வாசுகி இவளது வரவை எதிர்ப்பார்த்தவள் போல “இதான் நடக்குன்னு தெரியும் எவ்வளவோ சொன்னனே கேட்டாளா? எல்லாம் முடிஞ்சிருச்சி . அழுது பிரயோஜனமில்லை . அவுங்க அண்ணன் பம்பு செட்டுக்கு வான்னு கூட்டிட்டு போனானாம். பாம்பு கடிச்சிட்டு செத்து போயிட்டான்னு வந்து சொன்னானாம். இது இப்படி தான் நடக்கப்போகுதுன்னு நான் தலைதலையா அடிச்சிக்கிட்டேனே கேட்டாளா பாவி மக போயிட்டா இனி அவ்வளவு தான் இது என்ன புதுசா? இப்படி தான எப்பவுமே நம்ம ஊர்ல நடக்குது இனி யாரு அழுதும் எதுவும் ஆகப்போறதில்லை. கடைசியா அவ பள்ளிக்கூடம் வந்தப்ப உன்னைப்பத்திதான் பேசிட்டே இருந்தா. நீ பேசமாட்டீங்கறேன்னு அவளுக்கு பெரிய குறை உங்க வீட்டுக்கு வர்றத்துக்கு வழி கூட விசாரிச்சிட்டு இருந்தா. அப்பறம் உங்க வீட்டுக்கு நாங்க வந்தால் உங்க அம்மா அதுக்கும் உன்னைப் போட்டுதான் அடிக்கும்ன்னு வரல“ என விரக்தியாக சொல்லிக் கொண்டிருந்தாள் வாசுகி.
“யாரு பண்ணது அவுங்க அம்மா எதுவுமே சொல்லலையா அந்த கண்டக்டர்பய பொறுக்கி எதுமே பண்ணலையா? அவுங்க சின்ன அண்ணன் தான் இப்படி பண்ணிருப்பான் அவன்தான? எனக்கேட்ட மைதிலியை நோக்கி இல்லை அவுங்க பெரிய அண்ணன் தான் என பதிலளித்துவிட்டு வெற்றிடத்தை நோக்கி வெறித்து பார்த்துக்கொண்டே பதில் சொன்னாள் வாசுகி.
எழுதியவர்

-
வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர்.
பல்வேறு அச்சு / இணைய இதழ்களிலும் கவிதைகளை எழுதி வருபவர். ‘நெய்தல்நறுவீ’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இதுவரை.
சிறுகதை21 May 2025ஈரோஸ்
சிறுகதை11 November 2024விளம்பரம் எழுதிய வீடு
கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023நெடுந்துணை
சிறுகதை24 April 2023கைப்புண்