3 December 2024
Devilingam KS2

மேகா வலது கையில் துணிகள் அடங்கிய அந்த பெரிய சூட்கேஸையும், இடது கையில் சூர்யாவின் அலுவலகக் கோப்புகளும், சில முக்கியமான தகவல்கள் எழுதிய அலுவலகக் காகிதங்களும் கொண்ட சின்ன சூட்கேஸையும் தூக்க முடியாமல் மல்லுக்கட்டி ‘தம்’பிடித்துத் தூக்கிக்கொண்டு வாசல் படிகளில் வேகமாக இறங்கினாள்.

வாசலுக்கு எதிரே வாடகைக்கார் வந்து நின்று அரைமணிநேரம் ஆகியது. அது ஏனோ தெரியவில்லை; சொந்தக் கார் வாசலில் பொழுது முழுக்க நின்றாலும் அது ஒன்றும் மனதுக்கு பிரச்சினை தருவதில்லை. ஆனால், வாடகைக் காரோ ஆட்டோவோ வாசலில் நின்றால் ஏதோ ஒரு பதட்டம் தொற்றிக்கொள்கிறது. சூர்யாவிடமிருந்து ஒரு மணிநேரத்துக்கு முன்பு தான் மொபைலில் அழைப்பு வந்தது. அவன் தொழில் சம்பந்தமாக திருச்சிக்கு சென்றிருக்கிறான். ஏதோ உடனடியாக வரிகட்டுவது சம்பந்தமாக பிரச்சனை ஆதலால், அவனே நேரில் செல்ல வேண்டுமெனச் சொல்லிச் சென்றிருந்தான் இப்பொழுது என்னவென்றால், உடனே திருச்சியிலிருந்து அவன் சென்னைக்கு போகவேண்டுமெனவும், ஊருக்கு வந்து திரும்பிச்செல்லமுடியாத அவசரமெனவும் முக்கியமான கோப்புகளை திருச்சி ஏர்போர்டில் கொண்டுவந்து தந்துவிடுமாறும், சொந்தக் காரை அவன் எடுத்துச் சென்றுவிட்டதால் வாடகைக்கார் ஏற்பாடு செய்து அனுப்பியிருப்பதாகவும் மொபைலில் ஒப்பித்துக் கொண்டிருந்தான். ஆம் அது ஒப்பித்தல் தான். தகவலை சொல்வதோடு அவன் வேலை முடிந்துவிட்டதென மொபைலை துண்டித்து விட்டான்.

பள்ளியிலிருந்து ‘மதுநிஷா’ குட்டி இன்னும் வந்து சேரவில்லை. அவளை யாரிடம் விட்டுவிட்டு வருவது. நான் எப்படி இருக்கிறேன்? திருச்சி வருவதற்கு மேகாவின் உடல்நிலை சரியாக உள்ளதா என எதுவுமே சூர்யா கேட்டுக்கொள்ளவே இல்லை. திருமணமான நாளிலிருந்தே இப்படித்தான்; அவன் சாப்பிட வேண்டுமென்றால் காய்கறிகளை வாங்கித்தருவான். அவனுக்கு உடைத் தேவைப்படும்பொழுது இவளையும் இழுத்துக்கொண்டு துணிக்கடைக்கு செல்வான் இரவு உணவு உண்ணும்பொழுதே காலையில் அவனுக்கு என்ன சாப்பிடவேண்டும் எனத் தோன்றுகிறதோ அதைச் சொல்லிவிடுவான். அது செய்வதற்கு எளிதான உணவாகவும் இருக்காது. இவளுக்கு பிடித்ததையும் சேர்த்து செய்ய மெனக்கெடல் அதிகமாகும் அதனால் அவனுக்கு பிடித்ததையே கஷ்டப்பட்டு சாப்பிடப் பழகிக்கொண்டாள். என்றைக்காவது ஒருநாள் இவளுக்கு பிடித்தமாதிரி எதாவது உணவு செய்திருந்தால் கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்துக்கொண்டுச் செல்வான். உடையிலிருந்து நகை அணிவது வரை அனைத்தும் அவனது தேர்வாகவே இருந்தது. அவன் முகம் பார்த்து பார்த்து அவனது திருப்திக்காக அனைத்தும் செய்து எதோ ஒரு வெறுமை மெல்ல புகையென பரவத்தொடங்கி குளிர்க்கால குடிசையைப் போர்த்தும் பனிப் போல மேலெழுந்து முழுவதுமாக தன்சுயத்தை மறைப்பதை சமீப காலங்களில் அவள் அடிக்கடி உணரத் தொடங்கியிருந்தாள். அந்த சலிப்பு இப்பொழுது அவளது பேச்சில் அடிக்கடி தென்பட ஆரம்பித்திருந்தது. ‘இவன் ஏன் இப்படி இருக்கிறான்’ என அடிக்கடி சூர்யாவை நினைத்து தனிமையில் மறுகிப்போகிறாள்.

கழிவிரக்கத்தில் கண்கள் லேசாக கலங்கியது மேகாவிற்கு. ‘ஊர் உலகத்தில் புருஷன் பொண்டாட்டிகளெல்லாம் எவ்வளவு பிரியமாக இருக்கிறார்கள் எனக்கென்ன படிப்பில்லையா, அழகில்லையா’ தன்னை ஒருபொருட்டாவே நினைக்காத கணவன் மீது கோபம் கோபமாக வந்தது மேகாவிற்கு.

எது எதையோ நினைத்துக்கொண்டே சமன் செய்யப்படாமல் வெவ்வேறு எடைகளிலிருந்த சூட்கேசை இரு கைகளிலும் தூக்கிக்கொண்டு இறங்கியவளுக்கு; உடல் சமநிலை தவறி சூட்கேசை கீழேப் போட்டுவிட்டு அதன் மேலேயே தவறிவிழுந்தாள். முழங்காலில் நல்ல அடி இருந்தாலும் வலியை விட விழும்போது யாராவது பார்த்திருப்பார்களோ என அவமானம் தான் முதலில் தோன்றி பிய்த்து தின்றது. சுற்றிலும் கழுத்தை சுழற்றி பார்த்துக்கொண்டாள். நல்லவேளை யாரும் பார்க்கவில்லை என நிமிர்ந்தவளுக்கு காரின் பக்கவாட்டுக் குவியாடியில் வாடகைகாரின் டிரைவரோடு முகம் தெரிந்தது. இவள் விழுந்ததை பார்த்தும் காரைத் திறந்துக் கொண்டு வந்து உதவி செய்யாமல் காரின் முகப்புக் கண்ணாடி வழியாக எதையோ பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் எரிச்சலாக வந்தது மேகாவிற்கு. “சே கட்டுனதும் சரியில்லை. அது அனுப்புன டிரைவரும் சரியில்லை. இந்தாளோட எப்படி திருச்சி வரைக்கும் போயிட்டு திரும்பறது. கருமம் பிடிச்சவன், என்ன ஜென்மமோ? விழுந்து அடிப்பட்டுக்கிடக்கிறேன்; வந்து உதவிப்பண்ணாம பராக்கு பார்க்குது பரதேசி. எதுக்கும் கார்ல்ல ஏறுனதும் அம்மாட்ட கால் பண்ணி அப்பப்ப பேசிட்டே இருக்க சொல்லணும். முழியே சரியில்லை. சரியான சாவுக்கிராக்கி” என முணுமுணுத்துக்கொண்டே வலியோடு சூட்கேஸ்களை கொண்டுபோய் காரின் டிக்கியை கஷ்டப்பட்டு அவளே திறந்து உள்ளே வைத்தாள். அப்பொழுதும் அந்த டிரைவர் நகரவே இல்லை.

அப்பொழுது தான் வேனிலிருந்து வந்த மதுக்குட்டிக்கு அவசர அவசரமாக உடையை மாற்றிவிட்டு, தலையை சீவி சாப்பிடுவதற்கு வாழைப்பழத்தை கொடுத்து சாப்பிட வைத்தாள்.

“மதுக்குட்டி வாடாம்மா நேரமாச்சி, பால் குடிச்சிட்டேல்ல வாவா! வந்து கார்ல்ல ஏறும்மா” என்றபடியே காரின் கதவை வேகமாக திறந்து உள்ளே மது ஏறியதும் வேகமாக, சத்தமாக கோபத்தை வெளிப்படுத்தியவாறேதான் கதவை சாத்தினாள் மேகா. அப்படியே திரும்பி சென்று வீட்டின் கதவை பூட்டிவிட்டு கதவை தள்ளிப் பார்த்தவளுக்கு நன்றாக பூட்டிவிட்டோம் என திருப்தி வந்து காரில் வந்து அமர்ந்து சீட்டில் நன்றாக சாய்ந்து அமர்ந்து பின்கழுத்தில் கைகளை வைத்து அழுத்திக்கொண்டாள். கீழே விழுந்ததில் கழுத்து வலித்தது. மடக்கிய முழங்கையில் தோல் வழுண்டு இரத்தம் வந்துக்கொண்டிருந்தது.

காயத்தில் மண்துகள்கள் அப்பியிருந்தன. மேகா வாயைக்குவித்து ஊதிப் பார்த்தாள். மண்துகள்கள் போகவே இல்லை. அணிந்திருந்த துப்பட்டாவால் இலேசாக துடைத்தாள். எங்கையாவது காரை நிறுத்தும்பொழுது ப்ளாஸ்திரி வாங்கி ஒட்டவேண்டும் என எண்ணினாள்.

முழங்காலிலும் சிராய்த்து லேசாக இரத்தம் வந்துக் கொண்டிருப்பதற்கு அறிகுறியாக அவள் போட்ருந்த சிவப்பு நிற லெக்கின்ஸ் பேண்ட் இரத்த ஈரத்தில் காலோடு ஒட்டியிருந்தது. வலியோடு மேலே அண்ணாந்துப்பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டே “டிரைவர், வண்டிய எடுங்க. AC-யை ஆன் பண்ணுங்க” என்றாள் மேகா. வழக்கமாக அவள் டிரைவர் என்று விளிக்கமாட்டாள் ‘அண்ணா’என்றோ; வயதில் குறைவாக இருந்தாள் ‘தம்பி’என்றோதான் அழைப்பாள். இன்று அவளுக்கு அந்த டிரைவர் நடந்துகொண்ட விதம் எரிச்சலாக வந்ததால் மரியாதைக் கொடுக்க தோன்றவில்லை.

அந்த டிரைவரின் முகத்தைக்கூட அவளுக்கு பார்க்கப் பிடிக்கவில்லை. சன்னல் கண்ணாடி வெளியே வெளியே தெரியும் காட்சிகளை பார்க்க முயன்றாள். மதுக்குட்டியை பிடித்து நெஞ்சோடு சாய்த்துக்கொண்டது சற்று ஆறுதலாக இருந்தது.

மதுகுட்டிக்கு வெளியே செல்வதென்றால் அத்தனை இஷ்டம். அவள் சன்னலில் இருந்து கண்களை திருப்பவே இல்லை. ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியைப் பார்த்தது. அப்படியே அண்ணாந்து பஞ்சுப் பொதிகளென சாயங்கால வெயிலில் ஆரஞ்சு வண்ணங்களில் மின்னிக்கொண்டிருந்த மேகங்களைப் பார்த்தது. பள்ளி விட்டு இரட்டை சடைகளில் காலையில் வைத்திருந்த நெருக்கிக் கட்டிய மலர் சரங்கள் திருவிழா முடிந்த கலர்க் காகிதங்களைப்போல காய்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் எடையிழந்து காற்றில் பறந்துத் தொங்கிக் கொண்டிருக்க; பசியில் முகம் வாடியிருந்தாலும் சிரித்துப் பேசிக்கொண்டே செல்லும் மாணவிகளைப் பார்த்து உற்சாகமாகக் கையை ஆட்டியது. ஓய்ந்து கூடுகளில் உறங்கச்செல்லும் பறவைக் கூட்டங்களின் சிறகசைப்பை சிரித்துக்கொண்டே கண்ணைச்சிமிட்டாமல் பார்த்தது. சின்னவயதில் நம் கண்களுக்கு புலப்படும் அனைத்துமே அதிசயம் தானே என நினைத்துக் கொண்ட மேகாவிற்கு இந்தக் காட்சிகளிலெல்லாம் மனம் இலயிக்கவே இல்லை. எனக்கு மட்டும் ஏன் எல்லாமே இப்படி நடக்கிறது என்ற கேள்வி தொக்கிக் கொண்டே நின்றது… முழங்காலில் அடிப்பட்டது கால்களை நகர்த்தும் பொழுதெல்லாம் சுரீரென வலித்தது. கண்களை இறுக்க மூடிக்கொண்டு பற்களைக் கடித்துக்கொண்டாள்.

“அம்மா, இங்க பாரும்மா கோவில்ல நிறைய பலூன் கடை போட்ருக்காங்க. கோவிலுக்கு போயிட்டு போலாம்மா” என்று மழலையில் கத்தியது மதுகுட்டி. “டிரைவர், வண்டியை நிப்பாட்டுங்க” என்று மேகா சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே கோவிலைத் தாண்டிச் சென்றது கார். மேகாவிற்கு கோபம் உச்சிக்கு சென்றது. “டிரைவர் காரை கோவிலுக்கு திருப்புங்க” என்று அதட்டி சொன்னாள். அதில் கோபத்தின் காரம் வெகுவாக தெரிந்தது. அந்த டிரைவர் காரை திருப்பிக்கொண்டு வந்து கோவில் வாசலில் நிறுத்தினானே ஒழிய வாயைத்திறந்து ஒருவார்த்தைக்கூட பேசவில்லை.

சட்டென ஒரு கையில் மதுவை பிடித்துக்கொண்டு காரை விட்டு கீழே இறங்கியவள். கோவிலுக்குள் வந்ததும் முதல் வேலையாக சூர்யாவை மொபைலில் அழைத்தாள்.
“ஹலோ, ஏங்க இப்படி ஒரு ஆளை டிரைவரா போட்டு என்னை வரச்சொல்லிருக்கீங்க, அந்தாள எனக்கு பிடிக்கவே இல்லை முசுடனா இருக்கான். மது கோவில்ல நிப்பாட்ட சொல்லி கத்துறா அவன்பாட்டுக்கும் காதுல வாங்காம வர்றான். சூட்கேஸை எடுத்து டிக்கில வைக்கமாட்டேங்கிறான். நான் பாத்ரூம் போறேன்னு பெட்ரோல் பங்க்ல நிப்பாட்ட சொன்னாக்கூட பத்துதடவை சொல்லணும் போல ஏங்க என்னை இப்படி கஷ்டப்படுத்துறீங்க? நான் கார்ல்ல ஏறமாட்டேன் நான் வரல, இங்க இருக்கிற எங்க அம்மா வீட்டுக்கு கூட தனியா அனுப்பமாட்டேங்கிறீங்க உங்களுக்கு தேவைன்னா சாயங்காலத்துலக்கூட நான் தனியா வரணும் அப்படிதானே! எல்லாம் சுயநலம் உங்களுக்கு தேவைன்னா எத வேணாலும் செய்யலாம். எப்படி வேணாலும் நடந்துக்கலாம் எதுமே தப்பில்லை அப்படிதான? டிரைவரையே சூட்கேஸை எடுத்துட்டு வரச்சொல்லுங்க நான் இப்படியே பஸ்ல்ல ஏறி வீட்டுக்கு போறேன்”. ன்னு சொல்லிவிட்டு சூர்யாவோட பதிலை எதிர்ப்பார்த்து நின்றாள் மேகா.

“ஏய்! என்ன விளையாடுறீயா? முக்கியமான பைல்லாம் அதுல இருக்கு. அதெல்லாம் நல்ல டிரைவர்தான். சேகர் சித்தப்பாதான் அரேன்ஜ் பண்ணாரு. உன் கதையெல்லாம் கேட்க எனக்கு நேரமில்லை. இன்னும் இரண்டு மணிநேரத்துல வந்து சேரு. சும்மா நொய் நொய்ன்னுட்டு. ஒவ்வொரு பொம்பளைங்க எவ்வளவு வேலை செய்யறாங்க. இதுக்கே அலுத்துக்கிற ஒழுங்கா சொன்ன வேலைய பாரு. மதுக்குட்டிக்கு சாக்லேட் வாங்கி வச்சிருக்கேன்னு சொல்லு” என்றபடியே மொபைல்லை துண்டித்தே விட்டுருந்தான் சூர்யா.

“இப்பொழுது என்ன செய்வது? சேகர் சித்தப்பா பொறுப்பானவர். என் மீது அக்கறை உள்ளவர். மட்டமான டிரைவரை தேர்ந்தெடுத்து அனுப்பிருக்கமாட்டாரே! சூர்யா-க்கு எவ்வளவு திமிரு! பேசிக் கொண்டிருக்கும்போதே போனை துண்டிக்கிறான். எவ்வளவு வேலை இருந்தா என்ன? இதெல்லாம் அலட்சியம். தன்னை எதிர்ப்பார்த்துதான் இவள் வாழ்றான்னு திமிரு. ஆணாதிக்கம்” என்று மனதிற்குள் பொறுமியபடியே சாமியைப்பார்த்து “தாயி! நல்லபடியாக போயிட்டு வரணும் தாயி! நீதான் துணையிருக்கணும்” என மனதார வேண்டிக்கொண்டாள். மனது சற்று அமைதியடைந்தது.

மதுவிற்கு நீல நிறத்தில் ஒரு இதயவடிவ பலூனும், நீல நிறத்தில் மீன் வடிவ பலூனும் வாங்கிக்கொண்டு; இருவரும் காரில் ஏறிக்கொண்டார்கள். சன்னல் கண்ணாடியை ஏற்றிவிடும்பொழுது கண்ணாடி வழியாக ஒரு முதியவள் கையை நீட்டிக்கொண்டு பரிதாபமாக நின்றாள். ‘இதுங்களுக்கு இதே வேலைதான் ஒருகோவிலுக்கு கூட நிம்மதியா போக முடியாது. வரமுடியாது’ என மெதுவாகத் திட்டிக்கொண்டே, “பாட்டி பிஸ்கட் தான் இருக்கு சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு, மதுவுக்காக வைத்திருந்த பிஸ்கட்டில் ஒரு பாக்கெட்டையும், தண்ணீர் பாட்டிலையும் தந்துவிட்டு “டிரைவர் கிளம்பலாம் “என்றாள் மேகா.

வண்டி புறப்பட்டு நகர்வதற்கும் மதுக்குட்டி கையில் வைத்திருந்த பலூனில் ஒன்று அவள் கையிலிருந்து விடுபட்டு திறந்திருந்த சன்னல் வழியாக பறக்கத் தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. பலூன் பறக்கத்தொடங்கியதுமே மதுக்குட்டி சத்தமாக அழத் தொடங்கியது. ‘அய்யோ! கால் வலிக்குதே! இந்த சிடுமூஞ்சிய போய் எப்படி பலூனை எடுக்கச்சொல்றது சொன்னாலும் இது எடுக்காதே இப்ப என்ன செய்வது! என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே காரை நிப்பாட்டி தூரத்தில் பறந்துச்சென்றுக்கிடந்த பலூனை எடுத்துவந்து “இந்தா பாப்பா “எனக்கொடுத்துவிட்டு கண்ணாடியை மேலேற்றி கார்கதவை சாத்திவிட்டு இருக்கையில் அமர்ந்து காரை ஓட்டத்தொடங்கினான் டிரைவர்.

காரில் ஏறி ஒருமணிநேரம் சென்ற பிறகுதான் டிரைவரையே கவனித்துப் பார்க்கிறாள் மேகா. அயர்ன் செய்த வெள்ளை முழுக்கை சட்டை கறுப்புநிற பேண்ட் நரைத்த டிரிம் செய்த தாடி பெப்பர் சால்ட் அழகாக கத்தரிக்கப்பட்ட தலைமுடி. ஐம்பத்துஐந்து வயதிருக்கலாம், ‘இந்த முகம் எங்கையோ பார்த்த சாயல் ஆங்! நினைவுக்கு வந்துவிட்டது தெலுங்கு படத்திலெல்லாம் அப்பாவாக நடிப்பாரே தனக்குகூட ரொம்ப பிடிக்குமே அவர் பெயர் கூட ஜெகபதிபாபு அவரைப் போன்றே லட்சணமான முகம். இந்தாளு குணத்துக்கு அப்படியே எதிர்மறையா ஒரு முகம். பரவாயில்லை, எதோ இந்த சிடுமூஞ்சி புள்ளையயாவது பார்த்துக்குதே’ என நினைத்துக்கொண்டிருந்தவள் அப்படியே தூங்கிப்போனாள்.

“அம்மா பாரும்மா நாய்குட்டி. அழகா குண்டா கொழுகொழுன்னு இருக்கு. அம்மா எந்திரிம்மா! நாய்குட்டிய பாரு லைட்டு வெளிச்சத்துலகறுப்பு கலரா மினுக்குதும்பா” என்று எழுப்பியது மதுக்குட்டி.

“நாய் எல்லாம் வேணான்டா உனக்கு வீசீங் இருக்குல்ல ஒத்துக்காதுடா” என கண்ணைத் திறக்காமலேயே பதில் சொன்னாள் மேகா.

“அம்மா எனக்கு வீட்ல விளையாடவே ஆளில்லாம, என் பிரண்ட்ஸெல்லாம் எப்பப்பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருக்காங்கம்மா … எனக்கு நாய்குட்டிய பிடிச்சிக்கொடு; அது எனக்கு நல்ல கம்பேனியனா இருக்கும்” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தது மது குட்டி.

காலில் வலி அதிகமாகிக் கொண்டிருந்தது. மது வேறு அழுது ஆர்ப்பாட்டம் செய்தது சோர்வாக இருந்தது. ஒரு ‘டீ’ குடித்தால் தேவலாம் போலிருந்தது. அதை டிரைவர் சிடுமூஞ்சியிடம் சொல்லி நிறுத்தச்சொல்ல ஒரு மாதிரியா இருந்தது. ஓங்கி மதுவை முதுகில் சப்பென்று ஒன்று போடலாம் போல இருந்தது. ஆனால் பாவம் குழந்தை அதுக்கென்ன தெரியும், ‘பெரியவர்கள் மீதுள்ள கோபத்தை சின்னப்பிள்ளையிடம் காட்டச் சொல்லுது பார் மனசு. அது எப்பொழுதுமே இப்படிதான் தன்னைவிட கம்பீரமான வலிமையுள்ளவைகளின் காலை நக்கக்கூட துணியும் தனக்கு கீழே வலிமையில்லாத ஒன்று மாட்டிக்கொண்டால் அதனிடம் தனது வீரத்தை நிலைநாட்டத்துடிக்கும்’ யோசித்துக் கொண்டிருந்தவள் அழுதுக் கொண்டிருக்கும் மதுக்குட்டியை இழுத்து கண்களைத் துடைத்துவிட்டு கன்னத்தில் முத்தமிட்டாள். “அம்மு உனக்கு புரியுமான்னு தெரியல. ஆனா அம்மா சொல்றத ஞாபகம் வச்சிக்கணும் சரியா. யாருமே யாருக்குமே இங்க நிலையான கம்பேனியன் இல்லடா. எல்லாருமே கொஞ்சதூரம் தான் நம்மளோட வருவாங்க. அப்பறம் அவுங்கவங்களுக்கு நிறைய வேலை இருக்கும். அவுங்கவுங்க வேலைய பார்த்துட்டு போயிடுவாங்க சரியா?” என்றதும் தலைய தலைய ஆட்டியது மதுக்குட்டி.

“அம்மா ஸ்வேதாவோட மிர்ணாளினி திக் ப்ரண்ட்ஸ்ஸா இருக்கா அம்மா. நிகிலாவோட வித்யா ட்ரூ ப்ரண்டா இருக்காம்மா. அவங்கள்லாம் பிரியவே மாட்டாங்களாம். எனக்கு உண்மையான ப்ரண்டே இல்லைமா” என்று பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் பேசும் ஐந்து வயது சிறுமியைப்பார்த்து சிரிப்பு வந்தது மேகாவிற்கு.

“இங்க உண்மையான ப்ரண்ட்ஸ் பொய்யான ப்ரண்ட்ஸ் அப்படின்னு யாருமே இல்லை குட்டிமா. அவுங்கவங்க ப்ரண்டா இருந்து ஒவ்வொருத்தருக்கும் ஒருவர் ஹெல்ப் பண்ணிக்கிறாங்க அவ்வளவு தான். உன்னோட ஒரு ப்ரண்ட் ட்ரான்ஸ்பர் ஆகி வேற ஊரு போனா நீயும் அவளோட போயிடுவியா என்ன? இல்லேல இப்ப நீ சின்ன பொண்ணு வளர்ந்ததும் உனக்கு எல்லாமே புரியும் சரியா? வா! இந்த பிஸ்கட் சாப்பிட்டு தூங்கு. அப்பாட்ட இதெல்லாம் கொடுத்துட்டு திரும்பி வரும்போது சாப்பிடலாம்.” என்றதும் அம்மாவின் கழுத்தை கட்டிக்கொண்டது மதுக்குட்டி அதுக்கு மேகா பேசியதெல்லாம் புரிந்ததோ இல்லையோ அம்மா தன் அழுகையை அலட்சியப்படுத்தாமல் எதோ சொல்கிறாள் என்பது பிடிந்திருந்தது.

ஒரு வழியாக ஏர்போர்ட் வாசலில் வந்து நின்று உடமைகளை வாங்கிக்கொண்ட சூர்யா. நேரமாகிவிட்டதால் மதுக்குட்டியிடம் சாக்லேட்டை தந்துவிட்டு; உடனே விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டான். அடிப்பட்டதை மேகா அவனிடம் சொல்லவே இல்லை. சொல்லியிருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டான் எனத் தோன்றியது.

ஹோட்டல் ஒரே கூட்டமாக இருந்தது. கைக்கழுவும் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியில் சற்று எட்டிப்பார்த்து கழுவியமுகத்தை துப்பட்டாவால் நன்கு துடைத்தாள் மேகா. கழிப்பறையில் மதுக்குட்டியை சிறுநீர் கழிக்கச் செய்துவிட்டு தான் போக முயன்றபொழுதுதான் முழங்கால் நன்றாக வீங்கிக் கொண்டு மடக்க முடியாதையே உணர்ந்தாள். ஹோட்டலில் உட்கார இருக்கைகளே இல்லாமல்; நான்கு இருக்கைகளே இருந்ததால், வேறு வழியின்றி மேகா, மது உடன் டிரைவரும் வந்து அமர்ந்துக் கொண்டான். அந்த மீதமிருந்த சீட்டில் வெளிநாட்டு பயணி சர்வரிடம் ஏதோ சொல்ல முயல, அவருக்கு புரியாமல் போக; அந்தப்பயணிடம் பேசி டிரைவர் அதை சர்வருக்கு மொழிப்பெயர்த்துக் கொண்டிருப்பதை கவனித்துக் கொண்டே மதுவிற்கு தோசையை அரைகுறையாக ஊட்டிவிட்டு மேகாவும் சாப்பிட்டுவிட்டு மூவரும் ஊருக்கு திரும்பத் தொடங்கினார்கள்.

வாகனப் பரபரப்புக் குறைந்து சாலைகள் அமைதியாக இருந்தது. ஓரிரண்டு வாகனங்கள் காரைக் கடந்துச் சென்றது. மதுக்குட்டி மேகாவின் மடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தது. இன்னும் இரண்டு நாளில் பௌர்ணமி போல நிலவின் வெளிச்சம் மதுக்குட்டியின் முகத்தில் அசாத்திய அழகினை கொண்டு வந்திருந்தது. கூம்பியிருந்த உதடுகள் அத்தனை அழகாய் ஜொலித்தது. மனதிலிருந்த சிடுக்கு கொஞ்சம் குறைந்தது.

மொபைலில் குறுஞ்செய்தி வந்ததற்கு அடையாளமாக இயந்திரக் குயில் ஒன்று கூவிற்று. “என்னடி பண்ற? தூங்குறீயா ? காலை ஏன் நொண்டி நொண்டிட்டு வந்த? மதுக்குட்டி சாக்லேட் சாப்பிட்டாளா? நீ சாப்பிட்டு போ. நான் டிரைவரை பற்றி விசாரிச்சேன். நல்லவர் தானாம் எந்த பிரச்சனையும் இருக்காது பயப்படாம போ மிஸ்! யூ டி என சூர்யாவிடமிருந்து தட்டச்சிய எழுத்துக்கள் மிளிர்ந்தன. சூர்யா மீது கோபமாகத்தான் இருந்தது. ஆனால் எத்தனை நாட்கள் தான் கோபமாக இருப்பது. அவனுக்கு அவன் வேலை நல்லபடியாக முடிந்துவிட்டது. அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். சரி அவன் மகிழ்வை இவள் ஏன் கெடுப்பானேன் என்று ஒரு மிட்டாய் நிற இதயவடிவ எமோஜியை அனுப்பினாள் மேகா.

அப்பொழுதுதான் இந்தப்பயணம் முழுக்க தான் பாடலே கேட்காதது நினைவுக்கு வந்தது. சரி டிரைவரிடம் பாட்டுப் போடச்சொல்லி பேச்சுக்கொடுப்போம் என “நீங்க என்ன படிச்சிருக்கீங்க? இங்கிலீஷ்லாம் சரளமா பேசுறீங்க” என்ற கேட்ட மேகாவிடம் “என்னையா கேட்கிறீங்கம்மா?” என்று கேட்ட டிரைவரைப் பார்த்து “இங்க நீங்க தான இருக்கீங்க” என்று எரிச்சலாக சொன்னாள் மேகா.

“நிறைய படிக்கலம்மா படிக்க வீட்டு சூழல் ஒத்துழைக்கல. அதுனால பதினாலு வயசில வேலைக்கு போயிட்டேன். ஆறு மொழிகள் சரளமா பேசுவேன். புரிஞ்சிப்பேன். கொஞ்சமா ஆங்கிலமும் தமிழும் எழுதுவேன். உங்கள்ட்ட கொஞ்சம் பேசலாமா? எதுவும் நினைச்சிக்க மாட்டீங்களே? என்றவனைப் பார்த்து மெலிதாக ஒரு பயம் வந்தது மேகாவிற்கு.

இருட்டு தனிமை வேறு போகும் சாலை முழுக்க மரங்கள் எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. வாயை மூடிக்கொண்டு வந்திருக்கலாமோ என நினைத்தாலும் “சரி அதெல்லாம் நினைக்கமாட்டேன் சொல்லுங்க. அதுக்கு முன்னாடி எங்க அம்மாவுக்கு போன் பண்ணிச் சொல்லிடுறேன். கால் பண்ணிட்டே இருக்காங்க” என்றபடி “ஹலோ அம்மா ஏன் அம்மா போன்பண்ணிட்டே இருக்கீங்க. நான் துவரங்குறிச்சிகிட்ட வந்துட்டேன்மா பயப்படாதீங்க அம்மா! லொக்கேஷன் தான? இதோ அனுப்பிடுறேன். அம்மா நம்ம இன்ஸ்பெக்டர் சித்தப்பா நேத்து போன் பண்ணிருந்தாரு. நாளைக்கு பண்ணிடுறேன்னு சொல்லுங்க” என்று சம்பந்த சம்பந்தமில்லாது பேசும் மகளிடம் “நீ ஏண்டி இப்ப துவரங்குறிச்சி போன?” என்று மேகாவின் அம்மா மொபைலில் கத்த கத்த மொபைலை துண்டித்துவிட்டு டிரைவரிடம் “இப்ப சொல்லுங்க” என்றாள்.

“நான் நாளைக்கு தற்கொலை பண்ணிட்டு சாகலாம்ன்னு இருந்தேன்மா. எனக்கு இருபது வயசு; அவளுக்கு பதினாறு வயசு இருந்திருக்கும். அப்பதான் அவளைப்பார்த்தேன் வட்டமுகம் அப்படியே நெஞ்சுக்குள்ள ஒட்டிருச்சி மாமா பொண்ணு தான். அவரு பணக்காரரு, பொண்ணு கேட்டதுக்கு தரல, என்கூட வர்றீயாடின்னு கேட்டேன். எனக்கு நம்பிக்கையில்லாமத்தான் கேட்டேன். கூட வந்துட்டா. கோவில்ல வச்சி தாலி கட்டுனேன். பாரீனுக்கு போனேன் அங்க துபாய் சேட்டு என்னை மகன் மாதிரி பார்த்துகிட்டான். சம்பாதிச்சேன் வீடு தோட்டம் வயலு வரப்பு எல்லாம் கற்பகம் வாங்கிச்சேர்த்தா. இரண்டு ஆம்பளை பசங்க பொறந்தானுங்க நான் அங்க பாடுபட்டேன். அவ இங்க பாடுபட்டா. போதும்டா சாமின்னு குடும்பத்தை பிரிஞ்சிருந்ததுன்னு இங்க வந்து ஒருவ ருசமாகுது.

வந்ததுக்கு அப்பறம் தான் தெரியும் கற்பகத்துக்கு சீக்கு முத்திட்டும்மா. இன்னும் ஒருமாசம் தான் உயிரோடிருப்பான்னு டாக்டர் சொல்லிட்டாரு. அவளுக்கு மருத்துவ செலவுப்பண்ண நிலத்தை விக்கப்போனா என் புள்ளை என்னைப்பார்த்து கேள்விக் கேக்குறான். ‘அதான் அம்மா சாகப்போகுதுன்னு தெரியுதுல்ல. ஏன் செலவு பண்ற’ன்னு கேக்கிறான். இப்படி செலவு பண்ணா எனக்கு என்ன மிஞ்சும்ன்னு கேக்கிறான். உழைச்சி உழைச்சி ஓய்வெடுக்க வந்தவன்; போடா எனக்கு கைகால் இருக்கு உழைப்பிருக்குன்னு திரும்பவும் காரோட்ட வந்துட்டேன். எனக்கு டிரைவருங்கறதுனால மத்தவங்க என்னை வேலை வாங்குறது அடிமையா நினைக்கறதெல்லாம் பிடிக்காது. அநாவசியமா யாருட்டையும் பேசமாட்டேன். காசு கூடுதலா வாங்கமாட்டேன். கார்ல ஏறுனதுலேர்ந்து அவுங்க என் பொறுப்பு சின்ன பிரச்சினை கூட அவுங்களுக்கு வரக்கூடாதுன்னு நினைப்பேன். இவ்வளவு நேர்மையா நான் இருந்தும் என்னமா பண்றது? இந்த பாசமேயில்லாத ஜென்மங்களுக்கு மத்தியில எப்படி என் கற்பகம் போனதுக்கப்பறம் வாழறதுன்னு யோசிச்சேன். நாளைக்கு எதாவது பண்ணிட்டு செத்தரலாம்ன்னு நினைச்சேன்மா. ஆனால் நீங்க பாப்பாட்ட கம்பேனியனைப்பத்தி சொன்ன வார்த்தைகள் தான் மனசுக்குள்ள உறுத்திட்டே இருக்கு. எனக்கு வாழ்க்கை மேல மறுபடி பிடிமானம் வந்துருக்கு. சரியா சொன்னீங்க யாருக்குமே யாரும் நல்ல கம்பேனியன் இல்லை. எல்லாரும் எதுக்காகவோ நடிக்கிறோம். அது அலுத்துபோனதும் பிரியறோம். நான் சாக மாட்டேன். கற்பகத்த நல்லபடியா வழியணுப்பணும். அவ எனக்கு உண்மையான கம்பேனியனா இருந்தா, எல்லாமே பொய்யும் கிடையாது. எதுவும் உண்மையும் கிடையாது சரிதானம்மா?” என்று கேட்டுக்கொண்டே வண்டியோட்டிக் கொண்டிருந்தவரிடம் …

“நான் எதோ வாயில வந்ததை சொன்னேங்க. எனக்கு அவ்வளவு எல்லாம் தெரியாதுங்க” என்றவளிடம் “இல்லம்மா நீங்க நல்ல பொண்ணு நீங்க கீழ விழுந்ததும் தூக்கிவிடத்தான் நினைச்சேன்… பணக்காரப் பொண்ணுங்க கைய தொட்டான் காலத் தொட்டான்னு ஏதாவது சொல்லிட்டா என்னப் பண்றதுன்னு ஏதோ யோசனையா விட்டுட்டேன். ஆனால் அந்தக் கோபத்துல கூட அந்தப் பாட்டிக்கு நீங்க சாப்பிடக் கொடுத்தீங்க நல்லா இருப்பம்மா நீ” என்று டிரைவர் சொல்லிக்கொண்டே பக்கத்து சீட்டில் கிடந்த ப்ளாஸ்திரியை எடுத்து மேகாவிடம் “சாரிம்மா இந்தாங்க கையில நல்லா அடிபட்டிருக்கு ஒட்டிக்கங்க” என நீட்டினார்.

அதை எட்டி வாங்கிக்கொண்ட மேகா “எங்கையாவது நல்ல டீக்கடை இருந்தா நிப்பாட்டுங்க நல்ல ‘டீ’யா குடிக்கணும் போல இருக்கு. சரி சின்ன வயசிலேயே வெளிநாடு போயிட்டீங்களே; அங்க ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்ல்ல” என்ற மேகாவிடம் “ஆமாம்மா அத ஏன் கேக்கறீங்க …. அந்த துபாய் சேட்டு இருக்காரே; அவருக்கு மூணு மனைவிங்க” என அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க… நீளும் பாதைகள் முழுவதும் பெயர் தெரியாத மஞ்சள்நிற பூவொன்று இதழ் விரித்து மலரத்தொடங்கி மணம் வீசத்தொடங்கியது.

கடந்துச்செல்லும் குளத்தில் வளர்ந்துக்கொண்டிருக்கும் நிலவு மிதந்துக்கொண்டிருந்தது.


AI-generated art is used in this Story.

எழுதியவர்

தேவிலிங்கம்
தேவிலிங்கம்
வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர்.

பல்வேறு அச்சு / இணைய இதழ்களிலும் கவிதைகளை எழுதி வருபவர். ‘நெய்தல்நறுவீ’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x