21 November 2024
Devasemma

ந்தக் காலை வெயிலில் பளபளத்த தண்டவாளத்தின் மேற்பரப்பை உற்றுப் பார்த்தபடி லேசாய் சூடேறியிருந்த ஆழ்கருப்பிலிருந்த கிரானைட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள் மஞ்சு.

தண்டவாளம் என்று ஒருமையில் சொல்லலாமா, அது தப்பில்லையா? அவை ஒரே வயிற்றில், ம்ஹூம் ஒரே பட்டறையில் உருவானவை அல்லவா, அவளையும் அஞ்சுவையும் போல. அவை வேறு வேறா? இல்லை ஒன்றே தானா?

அவளுக்கும் அஞ்சுவுக்கும் இரண்டரை வயது வித்தியாசம் இருந்த போதிலும் இருவரையும் இரட்டையர் போலவே உணர்வர் புதிதாகப் பார்ப்போர்.

இதோ இப்போது அப்பா திடீரென்று இரண்டு வாரத்துக்கு முன்னால் ஹார்ட் அட்டாக்கில் போய்விட, காரியத்துக்கு வந்த வலங்கைமான் பெரியத்தை “இரட்ட புள்ளையாட்டம் அச்சா இருக்குதுவோ, ஓரே மாவுல சுட்ட இரட்டை பணியாரமாட்டமா, அண்ண எங்கூட்ல கொடுத்திருக்கலாம் இரண்டையும்” சொல்லும் போதே அத்தையின் கண்கள் அம்மாவின் கனத்த தாலி சங்கிலியிலும் ஆறு கைவளைகளிலும் படிந்து மீண்டது.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த ராசு பெரியப்பா சத்தமாகவே “பெரிய களுத, எங்க வந்து என்ன பேச்சு பேசற, தம்பி தான் தன் கடமையல்லாம் செய்ய வேண்டியதுக்கு அதிகமாவே செஞ்சுட்டு தான போயிருக்கான், என்றவாறே தன் பெரிய மகள் சுந்தரியை தன்னையறியாமல் பார்த்துக் கொண்டார். சுந்தரியை கட்டிக் கொடுத்த நன்னிலம் சின்னத் தலையாரி வீட்டின் இரண்டாவது மகனுக்குத் தான் மஞ்சுவை ரொம்ப ஆசை ஆசையாய்ப் பெண் கேட்டார்கள். அவர்கள் வீட்டில் ஐந்து பையன்கள்.

சுந்தரியின் எல்லா கல்யாண சடங்குகளிலும் அழகழகான சல்வார் கமீஸ், பாவாடை தாவணி அணிந்தபடி கலகலவென பேசிச் சிரித்தவாறு திருமண மண்டபத்தினை கலக்கிக் கொண்டிருந்த மஞ்சுவையும் அஞ்சுவையும் மாப்பிள்ளை வீட்டாருக்கு அவ்வளவு பிடித்துப் போய் விட்டது. “மின்னாடியே தெரிஞ்சிருந்தா இரண்டையும் பிடிச்சு போட்ருந்திருக்கலாம், எங்க அத்தாச்சிக்கு அத்தினிக்கு சமத்து காணாது என முணுமுணுத்தார் மாப்பிள்ளையின் நடுவத்தை.

திருமணம் முடிந்த கையோடு மஞ்சுவை பெண் கேட்டும் விட்டார்கள் சுந்தரியின் புகுந்த வீட்டினர். அதுவும் யாரிடம்? மஞ்சுவை விட மூன்று வயசு மூப்பான, இன்னும் யாரும் பெண் கேட்காத, ஏதும் வரன் உண்டா சுமதிக்கு, (கவனிங்க நல்ல வரன் கூட இல்லை வெறும் வரன்) என்று கேட்கும் பொழுதுதோறும் தொயந்து உதட்டை இல்லையென்றே பிதுக்கிக் காட்டும் மானோஜிப்பட்டி ஜோசியர், தரகர் கொளந்தசாமி சலிப்புடன் தரம் பார்க்கும் சுமதியை ஐந்து வருடங்களாக வீட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கும் ராசு பெரியப்பாவிடமே.

அவர் கொண்ட ஆத்திரத்தினை வார்த்தைகளால் வடித்து விட முடியாது. வடித்தாலும் சம்மந்தி வீட்டாரிடம் எப்படி அதனைக் கொட்டுவது.

அந்தப்புள்ள படிக்கிது, அவன் தருவானோ மாட்டானோ நீங்க மாணிக்கத்தையே கேட்டுக்கிடுங்க சம்மந்தி என வெளக்கெண்ணயில முக்கி வெண்டக்கா நறுக்குவது போல் வழவழா கொழ கொழாவென பேசி நழுவிக் கொண்டார்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல தளர்ந்திடாமல் மாணிக்கத்திடம் நடையாய் நடந்து அவரைக் கரையாய்க் கரைத்து மஞ்சுவை தன் இரண்டாவது மகன் சேட்டுக்கு பெண் கேட்டார் சுந்தரியின் மாமனார் தாஸ்.

ஒரு பொண்ண கொடுத்த இடத்தில இன்னொரு பொண்ணயுங் கொடுத்தா ஒட்டிப் பொறந்த இரட்டைங்க போல சந்தோசமா இருந்தாலும் துக்கமா இருந்தாலும் இரண்டு மடங்கா இல்ல வந்து சேரும் என்பது அப்பாவின் நெனப்பு.

பின் தாஸ் மாமாவின் தொடர் வற்புறுத்தலைத் தட்ட முடியாமல், மஞ்சுவை சேட்டுக்கு கொடுக்க சம்மதித்து விட்டார். சுந்தரி புருசனாவது நாலு ஏக்கரில் பயிர் வைத்து வாழும் சம்சாரி தான். சேட்டோ நாலு ஏக்கர் விவசாயி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழாசிரியர்.

இந்த விஷயம் வேறு ராசு பெரியப்பாவின் இரத்தத்தை கூடுதலாகக் கொதிக்க வைத்தது. அவர் அப்பாவிடம், படிக்கிற புள்ளையவலுக்கு இப்ப எதுக்கு கல்யாணம் என நைச்சியமாகப் பசப்பி திருமணத்தைத் தடுக்கப் பார்த்தார்.

அப்பாவா ஏமாறுகிறவர், ‘பரவால்ல அண்ணே, படிப்பு முடிய இன்னும் மூனு மாசந்தான கெடக்கு, அதும் மாப்ள வீட்ல இந்த படிப்பு மட்டுமில்ல, இன்னும் படிக்கறதுனாலும் படிக்கட்டும், நாம்படிக்க வச்சுக்கறேன்னு மாப்ளையே சொல்ட்டாரேண்ணா’, என்று விட்டார்.

இந்த வார்த்தைகளில் வாயடைத்து நின்ற ராசு பெரியப்பா, அப்படியேவும் விட்டு விட மனமில்லாமல், ‘என்னவோ மலை மேலிருந்து உருண்டு வர பாற நிக்க முடியாதுங்கற மாதிரி பேசற, நாம நெனச்சா என்ன வேணா பண்ணலாம். உனக்கு மனசில்ல மாப்ளய விட, என்னவோ போ’.

என்னத்தையோ பண்ணித் தொல என்கிற மாதிரியே பேசி முடித்து விட்டார்.

பெயருக்கு ஒரு பெண் பார்த்தல் சம்பவம் நடக்கும் என இவர்கள் தரப்பில் நினைத்திருந்தனர். ஆனால் அந்த பெண் பார்க்கும் சம்பவமே ஒரு வைபவம் போல் நடந்தேறியது. ஏழெட்டு பேர் காரில் நெருக்கியடித்தும் பத்து பனிரெண்டு பேர் குட்டி யானையில் அரட்டை அடித்தபடியேயும் வந்திருந்து நிகழ்வை கோலாகலமாக்கி விட்டனர்.

கிட்டத்தட்ட நிச்சயதார்த்தத்தினை ஒத்திருந்த அந்நிகழ்வில் தான் மஞ்சுவும் சேட்டும் ஒருவரை ஒருவர் முதல்முறையாக சீராகப் பார்த்துக் கொண்டனர். சேட்டுக்கு மஞ்சுவின் அழகில் தோன்றிய மயக்கம் அன்று தொடங்கி அடங்க மறுத்தது. பைக் வாங்க, புடவை வாங்க,பாத்திரங்கள் வாங்க எனத் தொடர்ந்த பல நாட்களில் இருவரும் இரு குடும்ப கும்பல்களுக்கிடையே சந்தித்துக் கொண்டனர். கூட்டங்களுக்கே உரிய அசட்டுத்தனமான புன்னகைகளையும் பரஸ்பரம் பரிசளித்துக் கொண்டனர்.

ஒரு வாரத்தில் திருமணம் என்ற நிலையில், பரிட்சை ஒன்றை எழுத வேண்டும் என்று சொல்லி சென்னை சென்ற மஞ்சு அப்படியே காணாமல் போனாள். சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்து வந்த குமார் பெரியப்பா அப்பாவின் மூத்த அண்ணன் வீட்டில் தங்கி மாணிக்கமும், சேட்டும் ,சுந்தரி மாப்பிள்ளையும் அவளை இரண்டு நாட்களாகத் தேடினார்கள். பத்திரிக்கை எடுத்துட்டு வந்தியாடா சின்னவனே என்றவாறு வரவேற்ற குமார் பெரியப்பாவிடம் கண்களில் நீருடன் மாணிக்கம் கேவினார். ‘பாப்பா நம்மள ஏமாத்திடுச்சுண்ணா’ வீட்டை விட்டு ஓடிருச்சுண்ணா, என்று அழுகையில் விம்மியவரிடம் ‘நம்மூட்டு புள்ளைக அப்படியெல்லாம் செய்யாதுகடா, நம்பிக்க வேணும்டா, அழுகாம ஒழுங்கா தேடிப்பாரு, இங்கனக்குள்ள தான் ஏதாவது கூடப்படிச்சதுக வீட்டுக்கு போய்ருக்கும், தேடாமப் பேசாத’ என்று கடுமையாகக் கண்டித்தார் பெரியப்பா.

இருபத்தி நான்கு மணிநேரம் ஆனவுடன் போலீஸ் ஸ்டேஷனில் புகாரைப் பதிந்தார்கள், போலீசாருக்கு அவசியமான, ஆனால் குடும்பத்திற்கு பதற்றமான நேரத்தினை ஆற அமர எடுத்துக் கொண்ட பின் தேடத் தொடங்கிய போலீசார், ‘உங்க பொண்ணோட செல்போன் கடைசியா சைதாப்பேட்டை கருணீகர் கோயில் கிட்ட தான் சிக்னல் காமிக்குது’, என்றனர்.

சாப்பாடு தண்ணீரின்றி தேடிக் கொண்டிருந்தவர்களை காவலர்களின் இந்த பதில் குரல் கொஞ்சமும் அமைதிப்படுத்தவில்லை. கடைசியில் சமாதானப்படுத்தியது என்னவோ இவ்வளவு துன்பத்துக்கும் காரணமான மஞ்சுவின் குரலாகத் தான் இருந்தது.

தெரியாத ஒரு லேண்ட் லைன் எண்ணிலிருந்து சேட்டின் எண்ணிற்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மஞ்சு சேட்டிடம், ‘உங்கள பாக்கறதுக்கு முன்னாடியே லோகுவ பார்த்துட்டேன். மனச மாத்திக்கலாம்னு தான் நினைச்சேன், ஆனா, மனசு என்னை மாத்திடுச்சு,’என்றாள்.

‘உனக்கு ஒண்ணுமில்லல, நீ நல்லாருக்கல்ல, அது போதும்’ என்றவனிடம் ‘அப்பாட்ட போன் கொடுங்க பேசணும்’, ‘அப்பா நாம்பண்ணது பூராம் தப்பு தான்’, என்னையத் தேடறத விட்ருங்க, நான் கொஞ்ச நாள் கழிச்சு வீட்டுக்கு வரேன்’, என்றவளிடம் ‘வேணாம்மா, நீ வரவே வேணாம், அவனுக்காவது உண்மையா இரு, அவனையும் நம்ப வச்சு கழுத்தறுத்திடாத’, என்றவருக்கு எதிர்முனையில் பதில் அளிக்க நாதியில்லை.

இருந்த நான்கு நாள் அவகாசத்தில் மஞ்சுவை விட இரண்டரை வயது குறைவான அஞ்சுவை அப்பாவும் அம்மாவும் பெரியப்பாக்களும் அத்தைகளும் சித்திகளும் பெரியம்மாக்களும் மாமாக்களும் அவர்தம் மக்களும் சேர்ந்து பலவாறாக நயந்து பேசி அவளை சேட்டுடனான திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டனர்.

அஞ்சு அப்போது தான் பி.எஸ்சி நர்சிங் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள். திருமணம் முடிந்து விட்டாலும் மற்றதெல்லாம் படிப்பிற்கு பிறகு தான் என்பதில் தெளிவாக இருந்தாள்.

அவள் கல்லூரி விடுதியில் இருந்த காலம் முழுவதும் வார இறுதிகளில் சுவையாய் அவள் அம்மா சமைத்துக் கொடுக்கும், மீன் வறுவல், றால் தொக்கு, கருவாட்டுக் குழம்பு, கோழி ரோஸ்டு இத்யாதி இவற்றை சுமந்து கொண்டு மாமனாரும் மருமகனும் சென்னைக்கு வண்டி ஏறி விடுவார்கள். வரும்போதே அண்ணன் வீட்டிற்கு பத்மா காபிப் பொடியும், அண்ணன் பேரக் குழந்தைகளுக்கு பால்கோவாவுமாக கிளம்பி விடுவார் மாணிக்கம்.

பால்கோவாவை பார்க்கும் குழந்தைகளை விடவும் அதிகமாகக் காபிப் பொடியை பார்க்கும் அண்ணியின் முகம் குறிஞ்சி மலராக மலர்ந்து,’ வாங்க தம்பி’ எனத் தழுதழுக்கும் என்பதும் அவருக்குத் தெரியும் .

சேட்டும் தன் பங்கிற்கு,’பெரியத்தை எளச்சிட்டீங்க, வீட்டு நெய் கொண்டாந்திருக்கேன், சேர்த்துக்கோங்க என உருகுவான்.

இதனால் வாராவாரம் வந்தாலும் இவர்களுக்கு முகச்சுளிப்பு கிடையாது. வரவேற்பு மட்டுந்தான் கிடைக்கும்.

சேட்டையும் அவன் இனிய குணங்களையும் தொடர்ந்து வாராவாரம் கவனித்துக் கொண்டு இருந்த அஞ்சுவிற்கு தான் அவனுக்கு அநியாயம் செய்வதாகப்பட்டு விட்டது.

ஒரு நாள் சனியன்று ஆட்டோவில் பெரியப்பா வீட்டிற்கு போகையில் அருகில் அமர்ந்திருந்த சேட்டிற்கு அடுத்து உட்கார்ந்திருந்த அப்பா அறியாமல் கன்னத்தில் முத்தமிட்டு விட்டாள் அஞ்சு. தன்னை அது வரை சரியாக நிமிர்ந்தும் பார்க்காத மனைவி முத்தமிட்டவுடன் பொறுக்க முடியாத அவன் பொங்கல் சீருக்காக மாமியார் வீட்டிற்கு வந்த அவளிடம் அவள் சம்மதம் கேட்டு பேசியும் விட்டான்.

விளைவாக அஞ்சு ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்தாள் கடைசி பரிட்சையின் போது.

நல்லா வாழ்பவர்களின் கதை கேட்பவர்களுக்கு கொஞ்சம் சலிப்பு தட்டக் கூடியதாகையால், கொஞ்சம் கெட்ட பெண்ணான, தன் இஷ்டத்துக்கு ஆடக்கூடிய. அப்பாவின் வார்த்தைகளில் நம்பிக்கை துரோகியான, சரி ஊர்பங்கிற்கு இன்னொன்றும் சேர்ப்போம் ஓடுகாலியான, அவள் நெஞ்சுரத்திற்கு இதற்கு மேலும் வசைச் சொற்களை தாங்கக்கூடியவள் தான் அவள், அவள் தான் அந்த மஞ்சு, அவளுக்கு என்ன ஆனது?

எல்லா ஓடிப் போனவள்களின் கதை தான் அவளதும். கையில், காதில், கழுத்தில் தங்கம் (ஓடி வருகையில் கொண்டு வந்த இருபது பவுன்) கிடந்த வரை பளபளத்த வாழ்க்கை, போட்ட படுக்கை போட்டபடியே இருந்த மட்டும் இனித்த வாழ்க்கை, திடீரென லோகுவுக்கு போதி மரத்தடி ஞானம் கிடைத்து விட்டதைப் போல பேசினான். ‘படுக்கை இப்படி சுருட்டாமக் கெடந்தா வீட்ல தரித்திரம் தாண்டவமாடுமாம், எங்கம்மா சொல்லும், அவன் அந்த ஆறு மாதத்தில் அம்மாவைப் பற்றி சொன்னது அது தான் முதல் முறை.

அன்று அதில் தொடங்கிய விரிசல், தொடர்ந்து வளர்ந்து வந்தது அவன் அம்மா புராணம் பாடப் பாட அவள் எங்கப்பா எப்படியெல்லாம் எங்கள வளர்த்தார் தெரியுமாவில் போய் முடிந்து கொண்டிருந்தது.

கட்டக்கடைசியான ஒரு நாளில் லோகு ‘எங்கம்மா என்னை வேலை செய்ய விட்டதே இல்ல, ஆம்பளை பையன் தொடப்பம் எடுத்தா தரித்திரமுன்னு சொல்வாங்க’ என ஆட்டுரலில் அரைத்தபடி குடிக்க கொஞ்சம் தண்ணி குடுவேன் எனக் கொஞ்சலாகக் கேட்டவளிடம் அவன் நீட்டி முழக்க, ‘ஆமா அந்த அறுதலி முண்ட வளர்த்த லட்சணந் தான் நல்லா தெரியுதே என இவள் அலற, ஆமா உங்காத்தா கட்டுக்கழுத்தி முண்ட, உன்னய ஓடுகாலியா வளர்த்த லட்சண மயிரு தான் தெரியுதே’ , என அவள் வீட்டை விட்டு ஓடி வந்த காரணத்தையே மறந்து விட்டு அவளைக் குதறிக் கொண்டிருந்தான் அவன்.

சுருக்கென்று குத்திய சொற்களில் ஒரு விநாடி கூட தயங்காமல் பிறந்த வீடு தேடிச் சென்று விட்டாள் மஞ்சு.

அவளுக்குத் தான் தன் பெற்றோர் தன் மீது வைத்திருக்கும் தீராத பாசம் குறித்து நிச்சயமாகத் தெரியுமே. அந்த நிச்சயத்துடன் அங்கு போய் அமர்ந்து விட்டாள். இவள் பிறந்த வீட்டிற்கு சென்ற நாளில் தான் அஞ்சுவிற்கு வளைகாப்பு முடிந்து, கையோடு பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்கள்.

அப்பாவும் அம்மாவும் சிறு முணுமுணுப்புடன் மஞ்சுவை ஏற்றுக் கொண்டார்கள். தாய்மையில் ஜொலித்த தங்கையை தங்கம் தங்கமாய்ப் பார்த்துக் கொண்டாள் மஞ்சு. அவளுக்கு எல்லா சேவைகளையும் பார்த்துப் பார்த்து செய்த வண்ணம் இருந்தாள். அவ்வப்பொழுது வீட்டிற்கு வந்து சென்ற சேட்டும் என்ன? எப்படிருக்கீங்க? என்பதோடு அவளுடன் பேச்சை நிறுத்திக் கொள்வான். அவன் உலகமே அஞ்சு தான்.

அப்போது தான் அது நிகழ்ந்திருந்தது. பிரசவம் முடிந்து அஞ்சு ஆண் குழந்தை பெற்றிருந்தாள். மனைவியைக் காண மாமியார் வீட்டுக்கு வந்திருந்த சேட்டை கடுமையான ஜுரம் தாக்கியது. விட்டு விட்டு வந்த ஜுரம் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்து பார்க்கும் அளவில் அதிகமாக இருந்தது. பக்கத்தில் நலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அவனுக்குப் போடப்பட்ட பல ஊசிகளுக்குப் பின் ஒருவழியாக ஜுரம் குறைந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான். அஞ்சு பச்சை உடம்புக்காரி ஆனதால் ஆஸ்பத்திரிக்கும் வீட்டிற்குமாக அதிகமாக அலைந்தது மஞ்சு தான்.

ஒரு வழியாக ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வந்த சேட்டு இரண்டு நாட்களுக்குப்பின் இரத்த வாந்தி எடுத்தான். இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சேட்டு தொடர்ந்த சில நாட்களில் எவ்வித சிகிச்சைக்கும் உட்படாமலேயே இறந்தும் போனான்.

கல்லூரி சென்று படித்த தனக்கு மஞ்சு ஓடிப் போனதால் தானே இப்படி ஒரு திருமணமும் நடந்து இப்படி இருபத்தோரு வயதில் கணவரை இழந்து நிர்க்கதியாக நிற்க நேரிட்டது. இதை எல்லாம் யோசித்து மஞ்சுவின் மேல் கோபப்படக்கூட அஞ்சுவுக்குத் தெரியவில்லை. சொந்தங்கள் இடித்து சொல்லித் தூண்டி விட்ட போதும் அவள் அதைச் செய்யவில்லை.

மஞ்சுவுக்கு என்ன யோசிப்பதென்றே புரியவில்லை. தனக்கு சேட்டுடன் நடக்க இருந்த திருமணத்தை தான் லோகுவுடன் ஓடிப் போய் நிறுத்தியதை நினைத்து சந்தோஷப்படுவதா, விதவைக் கோலம் தனக்குப் பதிலாக அஞ்சுவிற்கு கிட்டியதை எண்ணி துக்கப்படுவதா? ஒன்றும் புரியவில்லை.

ஆனால் தன் விதியை அஞ்சுவிற்கு தான் சாமர்த்தியமாக கடத்தி விட்டதாக எண்ணி உள்ளூர மகிழ்ந்து போனாள். கையில் குட்டிக் குழந்தையுடன் தான் இப்படி நிர்க்கதியாக நின்றிருக்க வேண்டிய இடத்தில் அப்பாம்மா சொல் பேச்சினைத் தட்டாது கேட்கும், மிக நல்ல பெண்ணான, அடக்க ஒடுக்கமான, சிறந்த மகள் மற்றும் மனைவியான, முக்கியமாக ஓடுகாலியில்லாத அஞ்சுவிற்கு இக்கொடுமைகள் நிகழ்வது கடவுளின் சிறந்த தீர்ப்பு என மனதிற்குள் எண்ணி எண்ணி மகிழ்ந்து பூரித்து போனாள். வெளியில் இந்த புன்னகையினை யாராவது இனம் கண்டு விழி விரித்தால், ‘பாவி தெய்வம், அது கண்ண குத்த யாருமில்லையா, இப்படி ப்ரேக் இல்லாத வண்டி மாதிரி’எதிர வர்றவன் வராதவனெல்லாம் கொல்லுதே’, என முதலைக் கண்ணீரில் அதனை அவசரமாக மறைத்துக் கொள்ளுவாள். தான் தற்காலிகமான ‘வாழாவெட்டி’ தான் எனவும் ‘விதவை’ இல்லை என்றும் சமாதானம் சொல்லிக் கொள்வாள்.

அப்போது தான் லோகு வீட்டிலிருந்து மஞ்சுவை கூட்டிப் போக தூது வந்தது. சமாதானத்திற்கான விலையாக பத்து பவுன் தங்க நகையும், புது பைக் ஒன்றும் போதுமென லோகுவின் அம்மா சொல்லி விட்டார். கடனை உடனை வாங்கியாவது தருவதாக முடிவுக்கு வந்த அப்பாவை வேண்டாமெனத் தடுத்து விட்டாள் மஞ்சு.

‘இவம் மொகரகட்டைக்கு இவெங்கூட நான் வாழப்போறதே அதிகம், இதுல நகையும் பணமும் வேற நொட்டனுமா,’ என ஆங்காரமாய்க் கத்தி தடுத்து நிறுத்தியவளை கையைப் பிசைந்தபடி பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி எஞ்சி இருக்கவில்லை.

சேட்டின் இறப்பின் முப்பது கழிந்த உடன் தாஸ் மாமா வீட்டிற்கு வந்தார். வந்தவர் மாணிக்கத்திடம் அஞ்சுவை தன் அடுத்த மகனான பொன்னருக்கு பெண் கேட்டார். மருமகளை இப்படி பார்க்க முடியவில்லை என்றும், தன் வாரிசு தங்கள் வீட்டிலேயே வளரட்டும் என்றும் கூறி கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

அப்பாவும் மகிழ்ச்சியோடு பெண் கொடுக்க ஒப்புக் கொண்டார்.

மூன்று நாட்களில் எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் ஊர்க்கோவிலில் திருமணம் நடந்தேறியது. குழந்தை சுகனை தன் மடியில் வைத்துக் கொண்டே தனக்குத் தாலி கட்டிய பொன்னரை மிகவும் பிடித்துப் போனது அஞ்சுவிற்கு. தான் எங்கோ அஞ்சுவிடம் தோற்று விட்டதாகத் தோன்றத் தொடங்கி விட்டது மஞ்சுவிற்கு.

லோகுவுடன் திரும்ப சேர்ந்து வாழ்வதைக் குறித்து அவள் சிந்திக்கத் தொடங்கிய பொழுதில் சரியாக லோகுவின் இரண்டாவது திருமண செய்தி அவளை வந்தடைந்தது. வெளியே காட்டிக் கொள்ளாத அளவில் உடைந்து போனாள் மஞ்சு.

தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவில் தீவிரமாக இருந்த மஞ்சுவை தான் இக்கதையின் முதல் பத்தியில் தண்டவாளங்களை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்த போது நாம் பார்த்தோம்.

ரயில் சத்தத்தை மீறி ஒலித்த அலைபேசி அழைப்பின் சத்தத்தில் கலைந்த மஞ்சுவின் கவனம், பரிசோதனை லேப் ஒன்றில் பணிபுரியும் தோழியின் பேச்சில் குவிந்தது. ‘மஞ்சு உனக்கு யூரின் டெஸ்ட் பாசிட்டிவ்டி, பத்து வாரம்’, மஞ்சு புன்னகைத்தபடி ‘பிரேமா டாக்டரிடம் அப்பாயின்மெண்ட் புக் பண்ணிடுடி, கலைச்சிரலாம் என்றாள்.


 

எழுதியவர்

தேவசீமா
தேவசீமா
குளித்தலையில் பிறந்தவர். தஞ்சையப் பூர்வீகமாகக் கொண்டவர். பூர்வீகத்தைக் கிள்ளித் துளி வாயில் போட்டுக்கொள்வதை இனிய சடங்காக மேற்கொள்பவர். பிரபஞ்சத்தின் நடு மையத்தில் எண்ண விதைகளைத் தூவி விட்டு கனிகளாக கதைகள் விழுமெனக் கை நீட்டிக் காத்திருப்பவர்.
இவர் எழுதிய ’வைன் என்பது குறியீடல்ல’, ‘நீயேதான் நிதானன்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
Subscribe
Notify of
guest

3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
PROF. VEERAMANI
PROF. VEERAMANI
1 year ago

Which one is there in the story , a small portion of Realism and a small portion of Feminism ? there are both mixed in a right way. Congrats

You cannot copy content of this page
3
0
Would love your thoughts, please comment.x
()
x