27 April 2024

ங்க ஊருல மழை பெய்யுறதுக்கு முன்னால கொஞ்ச நேரம் பலமா காத்தடிக்கும், இடி மின்னல் எல்லாம் கலாட்டா பண்ணும். அதற்கப்புறமாத்தான் மழையே பெய்ய ஆரம்பிக்கும். இங்க என்னடானா…”

“ஆமா எந்த முன்னறிவிப்பும் இல்லாம அடிச்சு பெய்யுறதுதான் இந்த ஊரு மழை.”

இருவரும் பலவிதமான கடைகள் நிறைந்த கட்டட முகப்புக்கு முன்னால் நீட்டிக் கொண்டிருந்த மிகக் குறுகிய கூரைக்கு முன்னால் இருவரும் உடல்களைக் குறுக்கிக் கொண்டு நின்றிருந்தார்கள்.

வத்சலாவின் பக்கத்தில் நின்றிருந்தவன் அவளைவிட வயதில் பல வருடம் சின்னவனாக இருக்க வேண்டும். ஒரு பத்து வருடமாவது? துல்லியமான தேனின் நிறத்தில் கட்டான உடலோடு உயரமாய் இருந்தான். ஆண்களுக்குச் சாதாரணமாய் வாய்க்காத பெரிய அகலமான கண்களில் சதா சிரிப்பு ஓடிக் கொண்டிருந்தது.

வத்சலா அன்று காலை வீட்டிற்கென்று வாங்கிய பொருள்கள் நிறைந்த பளபளக்கும் சிவப்புப் பைகளை உயரத் தூக்கித் தன் மார்போடு அணைத்தபடி நின்றிருந்தாள். இதோ பக்கத்திலிருக்கும் கடைகளுக்குத்தானே போகிறோம் என்று நினைத்து அவசரமாய் எடுத்து செல்வாவின் சட்டையை அணிந்திருந்தாள். அவன் அருகாமையால் சட்டைக்கும் பைகளுக்கும் இடையே ஏற்பட்ட சரசரப்பில் வத்சலாவின் மார்புகள் ஒரு விநோதமான உணர்வு பெருகியிருந்தது.

அருகில் நின்ற பையனின் உடம்பிலிருந்து வீசிய நறுமணத்தை; மழையினால் எழுந்த மண்வாசம் மேலும் எடுத்துக் காட்டவே, அவள் அதை ஆழச் சுவாசித்துக் கொண்டாள். சட்டைக்குள்ளிருந்த மார்புகளைப் போலவே அவள் மூக்கின் நுனிகளும் குறுகுறுத்தன.

வத்சலா தனது உடலோடு இறுக அணைத்திருந்த பையகளை கண்களில் சிரிப்போடு அவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“பிறந்த நாளா?” என்றான்.

“ஆமாம். குட்டிக்கு. என் பொண்ணுக்கு. நாலு வயசு.”

அதிகமாய் விளக்கம் அளிக்க ஆரம்பிப்பதே தனது தற்காப்பு அரண்கள் தகர்ந்து கொண்டு வருவதற்கு முதல் அறிகுறி என்று வத்சலா தனக்குள் பேசிக் கொண்டாள்.

அதிகம் பேசாதே. அப்படி என்ன செண்டுதான் அடிக்கிறான் இவன்.

வத்சலாவின் கண்கள் அவன் கையிலிருந்த பொருள்களில் பதிவதை அந்தச் சிரிக்கும் கண்கள் கவனித்திருக்கக் கூடும்.

“ஓவியக் கல்லூரி. இதோ பக்கத்துலதான் இருக்கு. லைப்பரரிக்கு அடுத்தாப்ல.”

கையிலிருந்த ஒரு வளர்ந்த ஆண்மகனின் முன்னங்கை பருமனுள்ள கறுப்பு நிற உருளையையும் தோளில் மாட்டியிருந்த கான்வாஸ் பையையும் உயரத் தூக்கி வத்சலாவிடம் காட்டினான். வத்சலாவின் முகத்தில் கதகதப்பான மழைத்துளிகள் பட்டுத் தெறிக்க ஆரம்பித்ததில் அவள் கன்னங்கள் எரிந்தன.

அவளுக்கு அருகில் நின்றிருந்த பையனுக்கு நீண்ட அழகிய மிகத் தூய்மையான கைவிரல்கள் அமைந்திருப்பது பொருத்தமானதே என்று விழியின் ஓரத்தால் கவனித்துவிட்டுத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

அப்படியெல்லாம் யோசிக்காதே. அவன் கைவிரல்களைப் பார்த்தாயா. எந்த நேரமும் இடைவிடாமல் சின்னச் சின்ன நாட்டியங்களை ஆடுவதைப்போல் அசைந்து கொண்டே இருக்கின்றன. அவற்றுக்கும் மேலே தசைகள் லேசாய் புடைத்திருக்கும் பலமான கரங்கள்.

“…சனிக்கிழமைனாலும் ஒரு கண்காட்சிக்காக வந்தேன்…”

“நீ – நீங்க என்னெல்லாம் வரைவிங்க?”

அவன் வாய்விட்டுச் சிரித்தே விட்டான். வரிசையான நேர்த்தியான பெரிய வெள்ளைப் பற்கள். வத்சலா தனது காதோரமாய் உள்ள கழுத்துப் பகுதியில் திடீரென்று ஏற்பட்டிருந்த காயத்தைத் தொட்டுப் பார்ப்பதைப்போல் விரலால் நீவி விட்டாள். பின்பு கழுத்திலிருந்த விரலை எதையோ நினைத்துத் திடுக்கிட்டவள்போல் வெடுக்கென்று கீழே இழுத்துக் கொண்டாள்.

மழை வலுத்துப் பெய்ய ஆரம்பித்திருந்தது.

“ஓவியம்தாங்க.”

செல்வா இயந்திரங்களோடு நாள் முழுவதும் வேலை செய்கிறவன். கணினி இன்ஜினியர். வத்சலா மாதந்தோறும் சம்பளப் பட்டியல்கள், போனஸ் கடிதங்கள், மருத்துவச் சான்றிதழ்கள், வேலையிடத் தகராறுகள் முதற்கொண்டு கழிவறை விளக்குகள் பழுதாகிப் போனால் பழுது பார்ப்பவனை அழைத்து வரச் செய்ய வேண்டிய இடத்தில் நாற்பது ஊழியர்களைக் கொண்ட ஒரு சிறிய சீனன் நிறுவனத்தில் மனிதவள மேலாண்மையைத் தனியாய்ப் பார்த்துக் கொள்கிறாள்.

இரவுகளிலும் வார இறுதிகளிலும் முடிக்க வேண்டிய வேலைகள் இல்லாத நேரத்தில், அவர்கள் இருவருக்கும் ரசிக்கக் கிடைக்கும் விஷயங்கள் – வகைவகையாய் வீட்டிற்கு வரவழைத்துச் சாப்பிட்டுப் பார்க்கும் உணவைத் தவிர – ஓடிடி தளங்களில் பார்க்கும் திரைப்படங்களும் அவற்றில் ஓடும் பாடல்களும்தான். பிறகு, நேரம் சரியாக அமையும் பட்சத்தில் வத்சலாவும் செல்வாவும் மகிழ்ச்சியாக இருக்க; குட்டிப்பெண் ராதிகாவோடு விளையாடும் விளையாட்டுக்களும் பேசும் பேச்சுக்களும்.

காமம்கூட அவர்கள் இருவருக்குமிடையே எந்தவிதமான பாராட்டுதல்களும் வியப்போ இன்றியே நடந்து வந்தது. ஒருமுறை வத்சலாவோடு சேர்ந்து இருந்துவிட்டு வியர்த்த உடலோடு திரும்பிப் படுத்த செல்வா, பல்லிடுக்கில் மாட்டிக் கொண்ட மாமிசத் துணிக்கை விரல்நுனியால் குத்தி வெளியேற்ற சிரமப்பட்டுக் கொண்டே சொன்னது:

“இன்னைக்குச் சாயந்திரம் ஆர்டர் பண்ண பிரியாணி சூப்பரா இருந்துச்சு இல்ல. புதுக் கடையா?”

அதுவும்கூட வேலை நாட்களில்தான். வார இறுதிகளில் மற்ற நாள்களில் செல்வாவின் அம்மா வீட்டில் தங்கி வளரும் ராதிகா வந்து விடுவாள். வெள்ளிக்கிழமை இரவு முதல் ஞாயிறு மாலை வரை. ஐந்து நாட்கள் பெற்றோரைப் பிரிந்த குழந்தை; மீதமிருக்கும் இரண்டு நாளும் அவர்கள் இருவரோடும் பசைபோட்டு ஒட்டிக் கொள்வாள் என்பதால் வேறு எதுவும் அந்த நாட்களில் சாத்தியமில்லை.

சாத்தியமில்லையா? உனக்கு இஷ்டமில்லையா!

பையன் கண்களில் கேள்வியோடு வத்சலாவை உற்றுப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

“ம்?” ஆழ மூழ்கிக் கொண்டிருக்கும் நீண்ட நெடிய தியானத்திலிருந்து விடுபட விரும்பாதவள்போல் வத்சலா குரல் எழுப்பினாள்.

அதைக் கேட்டு அவன் திடமான மார்புகளை நிமிர்த்தி மழையின் பெரும் சாம்பல் பரப்பை நோட்டமிடுகிறவனைப்போல் கண்களை அவளிடமிருந்து தூரத்தில் திருப்பிக் கொண்டான். அவன் உதடுகளில் ஒட்டியிருந்த சிரிப்பு இப்போது பெரிதாகி இருந்தது.

“நான் ஓவியக் கல்லூரிக்குப் போறேன்னு சொன்னதும் என்ன வரைவேன்னு கேட்டிங்க. ஓவியம்னு சொன்னேன்…”

செல்வா வத்சலா ராதிகா என்ற மூவரின் வாழ்விலும் வருடம்தோறும் நடந்தேறும் மிகப் பெரிய சாகசமே அவர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள்தான். எல்லாம் பெரிய பெரிய நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் சுற்றுலாக்கள். கால அட்டவணை போட்டு முப்பது பிரயாணிகள் உள்ள பயணத்தில் அவர்கள் தன்னிச்சையாய் எதுவும் செய்து மற்றவர்களுக்குத் தொந்தரவாகி விடாமல் பார்த்துக் கொள்ளக் காலவரையறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து எழு நாளிலிருந்து பத்து நாள்வரை நடக்கும் இடையறாத கண்காட்சிகள்.

பிரயாணிகளைக் கண்டிப்பாகப் பார்த்துக் கொள்ளவும், நேர அவகாசங்களை அறிவிக்கவும், போய் நிற்கும் இடங்களைப் பற்றிச் சொல்லவும் ஒவ்வொரு குழுவோடும் ஒரு வழிகாட்டி இருப்பார். தேர்தெடுத்த உணவகங்களில் மட்டும் சாப்பிட வசதி செய்திருப்பார்கள். அங்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட உணவு பரிமாறப்படும். முப்பது பேர்கள் தனித்தனியாய் ஆசைப்பட்ட உணவைச் சாப்பிட்டால் பயணத்தின் ஒழுங்கு கெட்டுப் போகும்.

பயணத்தின்போதுகூட முன்னமேயே தீர்மானிக்கப்பட்ட வழித்தடங்களிலிருந்து விலகி விரும்பிய இடத்தைப் போய்ப் பார்க்கவோ தேர்ந்தெடுத்த இடத்திலும் அதிக நேரம் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவோ யாருக்கும் அனுமதி தரப்படுவதில்லை.

வத்சலா இப்போது குழுவின் பயண நிரலிலிருந்து தன்னையே மொத்தமாய் விடுவித்துக் கொண்டு ஒரு பெருநகரத்தின் அறியப்படாத குளிர்ந்த சுவர்கள் நிறைந்த தெருக்களில் உலவும் பயணியாகத் தன்னை உணர்ந்தாள்.

“இல்லிங்க. சில ஓவியர்கள் இயற்கை காட்சிகள வரைவாங்க. சில பேர் மனுஷங்கள வரைவாங்க. சிலர் மாடர்ன் ஆர்ட். இதுல நீங்க…”

இத்தனை விஷயங்களைத் தன்னால் கேட்க வருகிறதே என்பதுபோல் வத்சலாவின் முகத்தில் வெளிச்சம் கூடி நின்றது. பையன் மீண்டும் வத்சலாவின் முகத்தையும் அவள் கையிலிருந்த பைகளையும் உற்றுப் பார்க்க ஆரம்பித்திருந்தான்.

இப்போது வத்சலவின் முகத்தில் வெளிச்சத்தோடு வெப்பமும் கூடியிருப்பதைப்போல் அவளுக்குத் தோன்றியது. அவன் கண்களைச் சந்திக்காமல் தன் கண்களை விலக்கிக் கொண்டாள்.

“இப்பேர்ப்பட்ட தொழில் ரகசியங்களை இந்த ஊருல காபி சாப்பிட்டுகிட்டுத்தான் பேசுவோம்.”

வத்சலா தன்னையும் அறியாமல் சிரித்துவிட்டாள். கண்களைப் பின்னால் ஓடவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவர்களுக்குப் பின்னாலிருந்த கடை வரிசை ஒரு கோடியில் காபிக்கடை தெரிந்தது.

“நான் யுவன்.”

“வத்சலா.”

இருவரும் வட்டமான சிறிய மேசையில் பருகுவதற்குச் சூடான பானங்கள் நிறைந்த கோப்பைகளுக்கு முன்னால் அமர்ந்திருந்தார்கள். மழை விடுவதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்ததால் காபிக்கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

“உடம்புல கொஞ்சம்கூட துணியே இல்லாம வரையும்போது கூச்சமா இருக்காது? அது சரி, நீங்க ஆம்பிளைதான. உங்களுக்கென்ன கூச்சம்.”

“ஓவியத்துமேல உண்மையான காதலோட இருக்குறவனுக்கு ஒருத்தர உடுப்பில்லாம வரையும்போது கூச்சமோ ஏன் காமமோகூட இருக்காதுங்க வத்சலா.”

“அப்புறம்…”

“ஆச்சரியம். ஆச்சரியம் இருக்கும். கோடுகள் நிழல்கள் வெளிச்சம்னு இயற்கை உருவாக்குன ஓவியம்தான் ஒவ்வொரு மனுஷ உடலும். கோடு, நிழல், வெளிச்சம் எல்லாம் ரொம்பச் சரியா அமைஞ்சிருக்குற அழகான மனுஷ உடம்ப உடுப்பில்லாம பார்க்குறப்ப இந்த ஆச்சரியம் பன்மடங்காகும். இப்படி ஒரு அற்புதமான விஷயத்தை உருவாக்குன இயற்கை மேல பொறாமை பொறாமையா வரும். நானும் இதை உருவாக்கிக் காட்டுறேன்னு ஒரு கோபம் தோணும். எல்லா கலைப்படைப்புக்கும் ஜெயிச்சுக் காட்டணும்ங்கிற இந்த கோபம்தான் வர்சலா அடிப்படை.

இவனுக்கென்ன இருபத்திநான்கு வயது என்று சொன்னானா. தன்னைவிடப் பதின்மூன்று வயது குறைவு. இந்தச் சின்ன வயதில் எப்படி இவ்வளவு தீர்மானமாகப் பேசக் கற்றுக் கொண்டான். என்ன வகையான ஓவியம் வரைவாய் என்பதை விளக்க அவனிடம் சொன்ன உதாரணங்களை எண்ணி வத்சலாவிற்கு நாணம் வந்தது.

யுவன் கோப்பையிலிருந்த சூடான தேநீரை உதடுகள் குவித்துப் பத்திரமாய் உறிஞ்சிக் குடித்துக் கொண்டே வத்சலாவை ஓயாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஆனாலும் கடைசியில இயற்கையைகூட மனுஷன்தான் ஜெயிக்கிறான். எப்படினு சொல்லுங்கள்? இயற்கை வரைஞ்ச எவ்வளவு எவ்வளவு பேரழகான ஓவியமும் – அதாவது மனுஷ உடலும் – ஒரு நாள் காலாவதியாகி மண்ணோட மண்ணா மக்கிப் போயிடும். ஆனா மனுஷங்களோட உன்னதமான கலைப்படைப்பு காலத்த தாண்டி ஏன் அதைப் படைச்சவனையும் தாண்டி நிரந்தரமா அழிவில்லாம நிக்கும்.”

இப்படிச் சொல்லும்போது அவன் முகத்தில் தெரியும் கம்பீரம் பிடித்திருக்கிறது. ஆனால் எல்லாக் கலைகளும் தந்திரம் நிறைந்தவைதானே. அவனுடைய சிரிக்கும் கண்களில் மிகுந்த தந்திரம். தெரிகிறது. எளிதில் நம்பி வீணாகிவிடாதே வத்சலா.

வத்சலாவுக்கு யுவன் வரைந்த நிர்வாண ஓவியங்களையும் அவற்றிலிருக்கும் ஆண் பெண்களையும் பார்க்க வேண்டும்போல மனது பரபரத்தது.

“நான் இப்படிப்பட்ட நிர்வாண ஓவியங்கள ஃப்ரான்ஸ், இத்தாலி, ஜெர்மனினு குடும்பத்தோட டூர் போனப்ப பார்த்திருக்கிறேன். ஆனா எல்லாம் அந்தக் காலத்து ஓவியங்க. இந்தியாலகூட ராஜாங்க காலத்துல இப்படிப்பட்ட ஓவியங்கள வரைஞ்சாங்கனு வாசிச்சிருக்கேன். ஆனா இந்தக் காலத்திலேயும் இந்த ஊருலகூட இப்படிப்பட்ட ஓவியங்கள வரைவாங்கனு நினைக்கல. மாடர்ன் ஆர்ட் மாதிரியான நிர்வாண ஓவியங்களையோ ஸ்கெட்களையோ அவ்வளவா நான் பார்த்ததில்ல…”

வத்சலா யுவனின் முகத்தை முழுதாய் உற்றுப் பார்த்துக் கொண்டே ‘பார்த்ததில்லை’ என்ற சொல்லை அழுத்திச் சொன்னாள். வெகு தூரம் ஓடி நெஞ்சு படபடத்து அடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பேசுவதுபோல் அவள் குரல் மெல்லிய விசில் சத்தத்தோடு வெளிப்பட்டது. அவள் பார்வையில் மீண்டும் ஓவியம் பற்றிய தனது பொது அறிவை எண்ணிப் மீண்டும் பெருமிதம் குடியேறி இருந்தது.

யுவன் அவளை பெரிய அழகிய கண்கள் விரியப் பார்த்துவிட்டுத் தன் பக்கத்திலிருந்த கான்பாஸ் பையிலிருந்து ஒரு கறுப்பு நிற ஓவிய நோட்டை உருவினான். கோப்பைகளாலும் மற்ற தேநீர் உபகரணங்களையும் கவனத்தோடு ஓரமாய் ஒதுக்கிவிட்டு நோட்டை அந்தச் சின்ன மேசைமீது வைத்து அதை அவள் பக்கமாய்த் தள்ளினான்.

வத்சலா மிகுந்த அலட்சியமான தோரணையோடு நோட்டைப் புரட்டினாள். நோட்டைப் புரட்டும் விரல்களில் நுனிகளில் முன்னர் அவள் உடம்பு மொத்தமும் தகித்த குறுகுறுப்புப் பாய்ந்து அவை மெல்ல நடுங்குவதை உணர்ந்தாள்.

எல்லாப் பக்கங்களிலும் பெரியதும் சிறியதுமாக ஆடையில்லாத ஆண் பெண்களின் பென்சில் ஓவியங்கள் வெள்ளை வெளேர் என்ற தாளில் பூக்களாய் இதழ் விரிந்து கிடந்தன. வத்சலா தன்னையும் அறியாமல் ஒவ்வொரு ஓவியத்தையும் விரலால் தடவிக் கொண்டே கடந்து போனாள்.

“ஒரு உடம்புலகூட சுருக்கம் இல்லையே.”

ராதிகா பிறந்தபோது அவளை வெட்டி எடுத்திருந்தார்கள். அப்படி வெட்டி எடுத்தபோது அவள் அடிவயிற்றில் விழுந்த சந்திரப் பிறைபோன்ற தழும்பு ஏற்பட்டிருந்தது. இன்னமும் அவளுடைய மாநிறமான உடலில் வெள்ளையாய் மின்னும் சீசேரியன் தழும்பு வத்சலாவுக்கு நினைவுக்கு வந்தது.

“மனுஷ உடம்புல விழுந்த தேவையில்லாத குறைகள எல்லாம் நீக்கிட்டு, அதை பரிசுத்தமாக்குறதுதான் ஓவியக் கலையோட மகிமை வத்சலா.”

“இந்த மனிதர்கள எல்லாம் எங்க பிடிச்சிங்க? தெரிஞ்சவங்களா…”

குரலில் ஈரம் வற்றி கரகரப்பாகி இருப்பது வத்சலாவுக்கே தெரிந்தது.

“பொதுவா இப்படிப்பட்ட மாடல்களை ஒரு தொகை பேசி கல்லூரிக்கு அழைச்சுவர ஆளுங்க இருக்காங்க. ஆனா தெரிஞ்சவங்களையும் வரையறது உண்டு. உதாரணத்துக்கு இந்தப் பக்கத்துல….”

அவன் காட்டிய பெண் ஆசையோடும் பெருமிதத்தோடும் கைகளைத் தனது தலைக்கு மேலே கோர்த்து மார்புகள் பொங்க அநாயசமாய்ப் படுத்துக் கிடந்ததாய் வத்சலாவுக்கு தோன்றியது. அவள் மார்புக் காம்புகள் சிறிய பூமொட்டுகளாய் விறைத்திருந்தன.

ஓவியம் வரையும் அறை குளிராய் இருந்திருக்குமோ என்று வத்சலா எண்ணினாள். பின்பு ஏனோ யுவனின் அகலமான கண்கள் நினைவுக்கு வர தலை குனிந்து ஓவியங்களை மீண்டும் உன்னிப்பாகப் பார்த்தாள்.

வலையில் விழுந்துவிடாதே வத்சலா.

வத்சலா முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டு நோட்டை மீண்டும் மேசைமீது வைத்தாள். மேசையிலிருந்த தேநீர்க் கோப்பைகள் கிணுகிணுங்க நோட்டை யுவனிடம் தள்ளினாள்.

“உங்களுக்கு இது சாதனைதான். ஆனா இப்படி உங்க முன்னால காசுக்காக அம்மணமா படுத்துகிட்டு இருக்கும்போது இவங்க எல்லாரோட மனசும் எவ்வளவு கலவரப்பட்டிருக்கும்னு கொஞ்சமாவது யோசிச்சிங்களா?”

“இல்லையே. இந்தப் படங்கள வரைஞ்ச பிறகு அவங்ககிட்ட காட்டிட்டுத்தான் பணமே தருவோம். நிறைய சதை, கொழுப்பு, கொஞ்சம் பீ, மூத்திரம் இதையெல்லாம் பொட்டலமா கட்டி வச்சிருக்குற உடம்பு ஒரு ரெண்டு மணி நேரத்துல இதையெல்லாம் கழட்டிப் போட்டுட்டு வெள்ளை பேப்பர்ல அழகான கலைப்பொருளா ஆகி இருக்குறத பார்த்து எல்லாரும் அவ்வளவு திருப்தியா கிளம்புவாங்க. ஒருத்தி அழக்கூடச் செய்தா. அப்புறம்தான் தெரிஞ்சது அவ பகுதி நேரமா விபச்சாரத் தொழில்ல இருக்குறவனு.”

“…”

“அது மட்டுமில்லாம, இப்படி மூணாவது மனுஷனோட கண்கள் வழியா தன்னையே இப்படி முழுசா அழகா பார்த்துக்குறது ஒரு வரம் வத்சலா. எல்லாருக்கும் இது வாய்க்காது. பல ஓவியர்கள் தங்களையே ஓவியம் வரைஞ்சுக்க முயற்சி பண்ணது இதனாலதான். நீங்க எப்பவாவது உங்களையே வேறொருத்தரோட கண்கள் வழியா முழுசா ஒரு கலைப்பொருளா பார்த்திருக்கிங்களா வத்சலா?”

“ப்ச்சு, இதுக்குக் கைத்தொலைபேசில இருக்குற காமிரா போதும். நடுவுல நீங்க எதுக்கு?”

“பார்க்குறதுக்கும் பார்வைக்கும் வித்தியாசம் உண்டு வத்சலா. இயந்திரம் வெறும பார்க்க மட்டும்தான் செய்யும். உங்க குறை நிறைகளோட மொத்தமா உங்களை அள்ளி வச்சுக்கும். ஆனா ரசிக்குற ஆற்றல் மனுஷ பார்வைக்கு மட்டும்தான் இருக்கு. ஃபோன்ல இருக்குற காமிரா மட்டும் போதும்னா அப்புறம் ஏன் அதுல எடுக்குற படங்கள அழகாக்க ஃபில்டர் போட்டிருக்கான்?”

யுவனின் கண்களில் நல்ல பசி இருந்தது. வத்சலாவின் நினைவில் தன்னோடு கலவியில் ஈடுபட்டு விட்டு சாயந்திரம் சாப்பிட்ட பிரியாணியைப் பற்றி சிலாகித்துப் பேசிய செல்வாவின் முகத்திலிருந்த அலுப்பு மின்னி மறைந்தது.

யுவன் நாற்காலியைப் பின் தள்ளி அதன் மீது பின்னோக்கிச் சாய்ந்து அமர்ந்து கொண்டான். அவனுடைய அகலமான பெரிய கண்கள் அவள் உடலை மேலும் கீழும் ஆராய்ந்து துளைத்தன. பின்பு அவன் பார்வை வத்சலாவின் வலது தோள்பட்டைக்கு மேலே இரண்டு அங்குல உயரத்தில் நிலைகுத்தி நின்றது.

“நீங்க விரும்பினா உங்களையும் நான் இப்படி வரைஞ்சுத் தர முடியும்.”

வத்சலா மந்திரத்திலிருந்து விடுபட்டவள்போல் உடலை லேசாய் உதறிச் சுற்றிப் பார்த்தாள். மழை விட்டிருந்தது. காபிக் கடையில் கூட்டம் கணிசமாய்க் குறைந்திருந்தது. காலடி ஓரமாய் வைத்திருந்த பைகளை அள்ளி வத்சலா கிளம்பத் தயாரானாள்.

“நான் ஒண்ணும் தப்பா சொல்லிடலையே,” என்றான் யுவன். அவன் கண்களிலும் குரலிலும் பலத்த சிரிப்பு தங்கியிருந்தது. அந்தச் சிரிப்பின் வழியாக அவன் அவளுக்குச் சவால் விடுகிறான் என்று புரிந்து கொண்டு அவள் லேசாய் எரிச்சலடைந்தாள்.

வத்சலா தனது வலது கையை உயர்த்தி தனது விரலிலிருந்த திருமண மோதிரத்தை யுவனின் முகத்துக்கு நேராய் திருப்பிக் காட்டினாள்.

“நான் கல்யாணமானவ, யுவன். எனக்குனு பல தற்காப்புகள் இருக்கு. மத்தவங்க முன்னால அவுத்துப் போட்டுக் கிடக்க என்னால் முடியாது.


 

னால் கலை என்பது தந்திரம் நிறைந்தது. அதைப் பயில்பவனை மட்டுமின்றி அதன் தாக்கத்திற்கு உள்ளானவர்களையும் அவர்களுக்கே அறியாதபடி உள்புகுந்து மெல்ல மெல்ல அடையாளமே தெரியாமல் மாற்றக் கூடியது.

வீட்டிற்குப் போன வத்சலா அடுத்த இரண்டு வாரங்கள் சதா ஓவியங்களைப் பற்றியும் ஓவியர்களைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தாள். இணையத்துக்குப்போய் பல நிர்வாண ஓவியங்களைப் பார்த்தாள். பார்த்துவிட்டு அவள் அப்படிப் பார்த்த தடயங்களைத் தனது கணினி இன்ஜினியர் கண்டு விடாதபடிக்கு அவசர அவசரமாக அழித்தாள்.

வத்சலா தொலைக்காட்சி பார்க்கும்போதும் பாட்டுக் கேட்கும்போதும் கையில் கிடைத்த துண்டுத் தாள்களிலும் பழைய கடித உறைகளிலும் சின்னச் சின்ன ஓவியங்கள், பூக்கள், வடிவங்கள் ஆகியவற்றை வரைந்து பார்த்தாள்.

சில நேரங்கள் வத்சலா அவர்கள் வீட்டுப் பூஜையறையில் வைத்திருந்த ஐம்பொன் சிலையையும் அதில் வார்க்கப்பட்டிருந்த வளைவுகளையும் ஆசையாய் ஒன்றுக்கு இரண்டுமுறை உற்றுப் பார்ப்பாள்.

ஒரு நாள் வத்சலா ராதிகாவின் பள்ளிப் பையிலிருந்து ஒரு தாளை உருவி ஆரம்பம் சிறப்பாக இருக்கட்டுமே என்று பிள்ளையாரை வரையத் தொடங்கினாள். அவள் வரைந்த உருவம் கடைசியில் குரங்குபோல் தோற்றம் அளித்தது. அதைப் பார்த்த வத்சலா தன் கையிலிருந்த பேனாவை மேசைமீது ஆத்திரமாய் தூக்கிப் போட்டாள்.

வீட்டு வரவேற்பறையில் கணினியில் ஏதோ வேலையாய் இருந்த செல்வாவிடம் சென்று,

“இந்த ஓவியமே ஒரு ஏமாத்து வேலைதான் இல்லையா?” என்று சொன்னாள்.

வேலையை முடிக்கும் மும்முரத்தில் இருந்த செல்வா வத்சலாவை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

“கண்ட இடத்துல கண்டதையும் கிறுக்கி வீட்டுல இருக்குற ரஃப் பேப்பர் எல்லாத்தையும் வீணாக்காத ”என்று மெல்லிய முணுமுணுப்பாய் வத்சலாவைக் கடிந்து கொண்டான்.


 

காபி கடையில் யுவன் கொடுத்த தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி அவள் அவனை அழைத்ததற்கு மழையும் ஒரு காரணம்.

வேறொரு நாளில் மழையில் நனைந்து மருத்துவ விடுப்பில் இருந்த நாளில்தான் வீட்டில் நிறைந்திருந்த பேரமைதியும் சலிப்பும் தாங்காமல் வத்சலா யுவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

யுவன் நகரத்தின் மத்தியில் அவர்கள் இருவரும் முதன்முறையாகச் சந்தித்த இடத்துக்கு வெகு அருகே ஒரு வாடகை அறையில் தனியே தங்கியிருந்தான்.

வத்சலா அறைக்குள் நுழைந்தபோது யுவனின் ஆடைகள், ஓவிய உபகரணங்கள், நோட்டுகள், முடித்துச் சட்டம்போடக் காத்திருக்கும் ஓவியங்கள் யாவும் சுற்றி அரையிருளில் கிடக்கக் குறுகலான அந்தப் படுக்கை மட்டும் வெளிச்சத்தில் மிதந்து கொண்டிருந்தது.

இம்முறை அவர்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. வத்சலா தன் உடல்களை ஒவ்வொன்றாய் மெதுவாகக் கழற்றித் தன்னைச் சுற்றிக் கேள்வியோடு பார்த்தபோது யுவன் அவள் உடுப்புக்களைக் கைநீட்டி வாங்கிக் கொண்டான். அறையின் கதவுக்குப் பின்னாலிருந்த ஆணிகளில் அவன் அவற்றைக் கவனமாய் மாட்டினான்.

பிறகு வத்சலாவின் தோளைத் தொட்டுக் கட்டிலைக் காட்டி முதல்கட்டமாக எப்படிப் படுத்திருக்க வேண்டும் என்று விவரித்தான்.

வெட்கத்திலும் பயத்திலும் என்ன செய்வதென்று தெரியாமல் தான் அசைவின்றிப் படுக்கையில் படுத்திருக்கப் போவதாகத்தான் வத்சலா முதலில் நினைத்தாள். ஆனால் அந்த ஆடையைச் சூழ்ந்திருந்த நிழல்களும் வெளிச்சமும் எப்படியெல்லாம் உடலை அசைத்து வைத்துக் கொள்வது என்று அவளுக்குச் சொல்லித் தந்தன.

இது அநாதி காலமாய் மனிதர்களின் உடலுக்கும் நிழல்களுக்கும் ஒளிக்குமிடையே நடக்கும் உரையாடல். இதை யாரும்
யாருக்கும் சொல்லித் தரத் தேவை இருப்பதே இல்லை.

ஓவியம் வரையப்படும்போது தான் யுவனின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கப் போய் முட்டாள்போல் வாய்பிளந்து கிடக்கப் போவதாக வத்சலா நினைத்துக் கொண்டாள். ஆனால் ஓவியம் வரையப்பட்ட அந்த இரண்டரை மணி நேரமும் அவள் பார்வை தனக்கு யுவன் அமர்ந்திருந்த இடத்துக்கும் இடையே திரண்டு மெல்லச் சுழன்று கொண்டிருந்த ஒரு வெளிச்சம் மிகுந்த வெளியில் நிலை குத்தி இருந்தது.

இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகு யுவன் அவளுடைய நிர்வாணத்தை ஓவியமாய் வரைந்து அவளிடம் நீட்டியபோது வத்சலா தனது வீட்டுப் பூஜையறையில் இருக்கும் ஐம்பொன் சிலையை நினைத்துக் கொண்டாள்.

வரம்தரும் குணம் அவளுக்குள் அந்த நேரத்தில் நிரம்பி இருந்தது. யுவனின் உடல் அறையில் புழுக்கத்தால் வியர்வையில் நனைந்திருந்தது.

யுவனும் வத்சலாவும் எந்தப் புள்ளியில் உடலுறவு கொள்ளத் தொடங்கினார்கள் என்பது இருவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.

ஒருவேளை ஓவியத்தை வத்சலாவிடம் காட்டிவிட்டு யுவன் அவளுக்கு நன்றி சொல்வதற்காக அவள் தோள்பட்டையைத் தொட்ட கணமாக அது இருக்கலாம். அல்லது ஓவியத்தைக் காட்டிவிட்டுத் திரும்பப் போன யுவனை வத்சலாவே ஆரத் தழுவி வியர்வையால் நனைந்த அவன் உடம்பிலிருந்து எழும் வாசனையை ஆழ முகர ஆரம்பித்திருக்கலாம்.

இருவர் படுத்துக் கொள்ள வெளிச்சத்தில் கிடந்த அந்தக் குறுகலான படுக்கையின் அகலம் நெடு நேரத்துக்குப் போதாமல் திணறியது.

யுவனின் கட்டான முதுகில் அலைந்து கொண்டிருந்த தனது கையில் மாட்டியிருந்த திருமண மோதிரத்தின் வெளிச்சம் ஒரு கணம் வத்சலாவின் பார்வையில் மின்னி மறைந்தது. அவள் அவன் காதுக்குள் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் ஊரில் மழை வருவதற்கு முன்னால் பலமான காற்று எழுந்து வீச, தெருவில் ஒன்றோடொன்று கட்டிக் கொண்டு மிக வேகமாய் புரளும் இலைகளும் கூடும் அவள் நினைவுக்கு வந்தன.

வெளியே கூடி நின்ற இருட்டுக்கு எதிராய் படுக்கை அருகே இருந்த சன்னல் கண்ணாடியில் அறையிலிருந்த விளக்கின் வெளிச்சம் பரவி நிற்க அதில் பிரதிபலித்த தனது முகத்தின் நிழலை வத்சலா பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெளியே மழை அடித்துப் பெய்ய ஆரம்பித்திருந்தது.


 

எழுதியவர்

சித்துராஜ் பொன்ராஜ்
சிங்கப்பூரில் வசிக்கும் சித்துராஜ் பொன்ராஜ் . இதுவரை தமிழில் 'பெர்னுய்லியின் பேய்கள்' (அகநாழிகை, 2016) 'விளம்பர நீளத்தில் ஒரு மரணம்' (காலச்சுவடு, 2018) ஆகிய நாவல்களையும், 'மாறிலிகள்' (அகநாழிகை, 2015), 'ரெமோன் தேவதை ஆகிறான்' (காலச்சுவடு, 2018) ‘கடல் நிச்சயம் திரும்ப வரும்' (வம்சி புக்ஸ், 2019) , ‘அடுத்த வீட்டு நாய் & இன்னபிற அதிசயம்வற்றாத ஆண் பெண் கதைகள்' (உயிர்மை, 2022) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார்.

'கதைசொல்லியின் ஆயிரம் இரவுகள்' (யாவரும், 2019) என்ற கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளார்.

'காற்றாய்க் கடந்தாய்' (அகநாழிகை, 2015), 'சனிக்கிழமை குதிரைகள்' (பாதரசம், 2017) ,
’இரவுகள் பொதுமக்களுக்கானவை அல்ல’ (உயிர்மை, 2023) ஆகிய கவிதைத் தொகுப்புகளும் வெளியிட்டு உள்ளார்.

உலக மொழிகளிலுள்ள பல இலக்கியப் படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.

2019ல் இவருடைய 'இத்தாலியனாவது சுலபம்' என்ற கவிதைத் தொகுப்பும், 'மரயானை' நாவலும், 2020ம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுப் போட்டியில் தமிழ்ப் புனைவு மற்றும் கவிதைப் பிரிவுகளில் முறையே முதல் பரிசினையும் தகுதிப் பரிசினையும் வென்றன.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x