28 April 2024

றையினுள்ளே அமர்ந்து மடிக்கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஹாலில் புதிய அதே சமயம் பழக்கப்பட்ட குரலைக் கேட்டு எட்டிப்பார்த்தேன். சுந்தரம் சித்தப்பா வந்திருந்தார். அம்மாவும் உள்ளே வந்து ‘ஒரு ஹாய் மட்டும் சொல்லிட்டு போய்டு’ எனச் சொல்லவும் வெளியே வந்தேன்.

அப்பா பத்திரிக்கையைக் கண்ணாடியணிந்து பின்பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார். அநேகமாக அவருடைய பெயரையும் அம்மாவின் பெயரையும் தான் தேடிக்கொண்டிருப்பார்.

சுந்தரம் சித்தப்பா கையில் காபி கோப்பையுடன் அவசியம் எல்லாரும் வரணும் எனச் சொல்லும்போதே என்னைப் பார்த்ததும், ’அடடே! இங்கதான் இருக்கியாம்மா! நல்லாருக்கியா?’ என்றார்.

’நல்லாருக்கேன் சித்தப்பா. நீங்க? சித்தி சதீஷ் எல்லாம் நல்லாருக்காங்களா? ’

’எல்லாம் நல்லாருக்கோம். சதீஷ் கல்யாணத்துக்குத்தான் பத்திரிக்கை வைக்க வந்தேன். அவசியம் வந்துடணும்’.

’கண்டிப்பா சித்தப்பா!’ எனச் சொல்லிவிட்டு அவர் செல்லும் வரை அங்கே நிற்கலாம் என நின்றிருந்தேன்.

அப்போதுதான் அவர் அதை ஆரம்பித்தார். ’முன்னாடி வீட்டுக்கு வரணும்னாலே பயமா இருக்கும். ஒரு தடவை வந்தப்ப அந்த நாய் கடிக்க வந்து….. அப்பா… இப்ப நினைச்சாலும் ஒரு மாதிரி இருக்கு. அந்த நாய வித்தாச்சுல!’ என எதுவுமே தெரியாதது போல கேட்டார். அவர் கேட்டதுமே எனக்கும் அம்மாவுக்கும் முகம் மாறியது.

’சும்மா கொடுத்துட்டேன்.’ என அப்பா பத்திரிக்கையை அருகிலிருந்த சேரில் வைத்துவிட்டு கண்ணாடியை கழட்டியபடியே சொன்னார்.

அதுவும் சரிதான் அது இருந்து மட்டும் என்ன கண்டுபிடிச்சுச்சு… என சொல்ல அம்மா அடுப்படிக்குள் வேகமாக நுழைந்தார். அப்பா வழி சொந்தக்காரர்களுக்கு அம்மா வழி சொந்தங்களைக் குறை சொல்வதென்றால் அவ்வளவு பிரியம். அதுவும் இந்த விஷயத்தில் குற்றமே செய்திருக்கிறார்கள். சும்மாவா விடுவார்கள். முடிந்து நான்கு வருடமானாலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

அந்த நாயைப் பற்றிய பேச்சு வந்ததும் நானும் வேகமாக உள்ளே சென்றுவிட்டேன்.

அத்தனைக் காலம் நினைவிற்கு கொண்டு வராமல் மனதின் ஒரு மூலையில் பூட்டி வைத்திருந்த நினைவுகள், ஸ்கூபியைப் பற்றி பேச்சு வந்ததும் அவிழ்த்து விடப்பட்ட நாய் தனக்கு பிடித்த இடத்தை நோக்கி ஓடுவது போல, அவனை நோக்கி ஓடியது. அவனுடைய அந்த வெகுளி சிரிப்பு கண்முன் வந்து போனது.

மெல்ல சன்னலின் துணியை விலக்கி எதிரில் இருந்த வீட்டைப் பார்த்தேன். தற்போது குடியிருக்கும் வருண் அங்கிள் தன் வண்டியை துடைத்துக் கொண்டிருந்தார். இப்படி நான் பார்க்கும் சமயங்களில் எல்லாம் பூந்தென்றல் என்கிற பூ எங்கள் நாயோடு விளையாடிக் கொண்டேயிருப்பான்.

ஆனால் நாயோடு மட்டுமானது தானா அவனுக்கும் எனக்குமான உறவு! நிச்சயமாக இல்லை… ஏனெனில் எங்கள் வீட்டிற்கு நாய் வந்தது நான் கல்லூரி முதலாமாண்டு சேர்ந்த பொழுது. அதற்கு முன்பும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஈறு தெரிய ஈஈஈஈ என சிரிப்பானே அது என்ன வகை! அதே போல சிரித்துப் பார்த்தேன்.

நானும் அவனும் பதினொன்றாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்போது இந்த வீட்டை வாங்குவதற்காக முதன்முதலாகப் பார்க்க வந்தோம். எங்கள் வீட்டிற்கு முன்புறம் இப்போது இருக்கும் சற்குணம் சார் வீடு காலி இடமாக இருந்தது. அங்குதான் அவன் பசங்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பான். அப்படி விளையாடும் போது பந்து உள்ளே வர அதை எடுக்க வந்தவன் என்னைப் பார்த்துச் சிரித்து ’ஹாய்!’ என்றான்.

எதுவும் பேசாமல் திரும்பிக் கொண்டேன். ஏனென்றே தெரியவில்லை. அவனை நான் அவ்வளவு வெறுத்திருக்கிறேன். என் தம்பி பந்தை எடுத்துக் கொடுத்தான். ’இந்த வீட்ட வாங்க வந்துருக்கிங்களா!’ எனக் கேட்க ’ஆமா’ எனத் தம்பி சொல்ல ’நல்ல வீடு!’ என்றவன் ’முன்னாடி எங்க இருந்திங்க!’ என விசாரித்தான். என் தம்பி பதில் சொன்னதே எனக்குப் பிடிக்கவில்லை.

’நாங்க அந்த பின்னாடி வீட்ல தான் வாடகைக்கு இருக்கோம்’ என காண்பித்தான். நான் திரும்பிப் பார்க்கவில்லை.

அதன்பிறகு இந்த வீட்டையே வாங்கி பாத்திரங்கள் இறக்கி வைக்கும்போது அவனும் வந்து ஈறு தெரியச் சிரித்துக்கொண்டே சில உதவிகள் செய்தான். முதல் நாள் வீட்டிற்கு வந்து பால் காய்ச்சிய போது, அவன் வீட்டிற்குப் பால் கொடுக்கப் போகமாட்டேன் எனப் பிடிவாதமாக இருந்தேன். அம்மாதான் கொடுத்துவிட்டு வந்தார். இப்படி இதே சன்னல் வழியாக அன்று பார்த்தபோது அவனும் அம்மாவோடு வாசல் வரை வந்து வெளிக்கதவைத் திறந்து ’சரிங்க ஆன்ட்டி’ என சிரித்து வழியனுப்பி சன்னலில் பார்த்துக் கொண்டிருந்த என்னையும் பார்த்து ’ஹாய்’ என்றான். வேகமாக சன்னலை சாத்தினேன். இப்போது நினைத்தாலும் எனக்கே என் மேல் கோபம் வருகிறது. எனக்குத் துரோகம் செய்தவர்களுக்கு காட்டிய இரக்கத்தைக் கூட அவனுக்குக் காட்டவில்லை.

சுந்தரம் சித்தப்பா ’அம்மாடி நான் போய்ட்டு வரேன்!’ என வெளியேயிருந்து சொன்னது கேட்கவே வெளியே வந்து ’சரிங்க சித்தப்பா’ எனச் சொல்லிவிட்டு உள்ளே வந்து மடிக்கணினி முன் அமர்ந்தேன். சிறிது நேரம் கணினித்திரையே பார்த்த நான் எரிச்சலாகி மூடிவிட்டு டேபிளிலே கவிழ்ந்து படுத்தேன். மனமெங்கும் அவன் தான் சூழ்ந்திருந்தான்.

****

ப்போது எங்கள் வீட்டில் பழைய வீட்டுக்காரர்கள் நட்டு வைத்திருந்த செம்பருத்தி செடியும் இருந்தது. என் அம்மா வெளிப்படிகட்டில் அமர்ந்து எனக்கு ரெட்டை சடை போட்டுக்கொண்டிருந்தார்கள். கேட்டைத் தட்டியவன் அதே சிரிப்போடு உள்ளே வந்து நின்றான்.

“வாப்பா பூ, என்ன?” எனச் சடை பின்னிக்கொண்டே அம்மா கேட்க பயாலஜி க்ளாஸ்க்கு செம்பருத்தி வேணும் பறிச்சுக்கவா ஆன்ட்டி என்றான். எறும்பு இருக்கும் பாத்து பறிச்சுக்க என்றார் அம்மா. எங்கள் வீட்டிலிருந்தது அடுக்கு செம்பருத்தி. பயாலஜி க்ளாஸில் அதை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது. ஒற்றை செம்பருத்தி தான் பயாலஜிக்கு சரியாக இருக்கும். இந்தச் செம்பருத்தி யூஸ் ஆகாதே என அவனிடம் கேட்க, எல்லாம் செம்பருத்தி தான அதெல்லாம் யூஸ் ஆகும் எனச் சொல்லி என்னைப் பார்த்துச் சிரித்தான். பூவுக்காகவா வந்திருப்பான்!

ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிக்கெட் ஆடும் போது என் தம்பியையும் விளையாட்டில் சேர்த்துக்கொண்டான். நான் பலமுறை பார்த்திருக்கிறேன். சற்குணம் சார் வீடிருக்கும் இடத்தில்தான் ஸ்டெம்ப் ஊன்றிருப்பார்கள். எங்கள் வீட்டு வாசலுக்குக் கொஞ்சம் முன்பாக பீல்டிங் நிற்பவன் ஒருபோதும் பந்தைப் பிடித்து நான் பார்த்ததில்லை. வீட்டிற்குள் விட்டுவிட்டு நேராக வந்து பால் எனக் கத்துவான். அம்மா எத்தனையோ முறை ’பால் வந்தா நீயே கதவ தொறந்து எடுத்துக்க பூ! என சொன்னாலும் கேட்கமாட்டான். நான் வந்து பார்க்கும் வரை எதாவது சொல்லி வந்துகொண்டேயிருப்பான். எங்கள் வீட்டருகில் பீல்டிங் நிற்கும் போது வந்தால் கூட பரவாயில்லை. பேட்டிங் பிடித்து அவன் அடித்திருந்தாலும் அவன் தான் வருவான். கீப்பிங்கில் நின்றிருந்தாலும் பந்து உள்ளே வந்தால் அவனே தான் வருவான். கேட்டால் மற்றவர்கள் வீட்டில் பந்து எடுக்க வந்தால் நாங்கள் எதாவது திட்டிவிடுவோம் என பயந்து எடுக்க வருவதில்லை என காரணம் கூறுவான். அணிக்குள் என் தம்பியை வைத்துக் கொண்டே!

அதற்கடுத்த வருடத்தில் நான் கல்லூரிக்கு கோயம்புத்தூர் சென்றேன். பூ இங்கே படிப்பைத் தொடர்ந்தான். விடுமுறைக்கு மட்டுமே வந்ததால் அவன் தொல்லை குறைவாக இருந்தது.

மேலும் அவனுடைய தொல்லைக் குறைந்ததற்கும் இப்போது இங்கு அவர்கள் இல்லாமல் போனதற்கும் காரணமான சிம்பா என் தம்பியின் பிடிவாதத்தால் எங்கள் வீட்டிற்கு வந்தான்.

சிம்பா டாபர்மேன் இனத்தைச் சேர்ந்தவன். என் தம்பியின் பிடிவாதத்தால் ஆறு மாதக் குட்டியாக அம்மாவின் தம்பியான பிரான்சிஸ் மாமாவின் வீட்டிலிருந்து வந்தான். சிம்பா வந்த சில மாதங்கள் தம்பி அவனை நன்றாகவே பார்த்துக் கொண்டான். அந்தச் சமயங்களில் பந்தை எடுக்கவோ இல்லை வேறு எதாவது வாங்கவோ கேட்டின் முன்னால் வந்தாலே சிம்பா தாவிக்குதித்து ஈரக்குலையே நடுங்கும் வண்ணம் குரைப்பான். அந்தக் கணங்களில் அவன் கண்களில் பயத்தைக் கண்டிருக்கிறேன். அதனால் அவனே எங்கள் வீட்டருகே பீல்டிங் நின்றாலும் விழுந்த பந்தை எடுக்க தம்பியே வருவான்.

கல்லூரிக்கு தம்பி பெங்களூரைத் தேர்ந்தெடுத்ததில் ஆரம்பித்தது பிரச்சனை. சிம்பாவை பார்த்துக் கொள்ள ஆளில்லை. அப்பா வாரத்திற்கு ஒரு முறை மட்டும் சிம்பாவை வெளியே அழைத்துச் செல்வார். மீதி நேரங்களில் சிம்பா வீட்டிற்குள்ளே அடைந்து கிடப்பான். அந்த நிலைமையில் தான் சுந்தரம் சித்தப்பாவின் அம்மா இறந்தார். அப்பாவின் சொந்தச் சித்தி என்பதால் அப்பாவும் அம்மாவும் போய்விட்டு ஒரே நாளில் வந்துவிடலாம் எனக் கிளம்பிச் சென்றனர். நாங்களும் கல்லூரியிலிருந்து நேராக அங்குச் சென்றுவிட்டோம். அடக்கம் முடிந்த அடுத்த நாளில் கருமாதி வைத்துக்கொள்ளத் திட்டமிட அப்பாவும் அம்மாவும் அங்கே தங்கிக்கொண்டனர். நாங்கள் கல்லூரிக்குக் கிளம்பிவிட்டோம். அதற்கடுத்த நாளில் சுந்தரம் சித்தப்பாவிற்கு நெஞ்சுவலி வர அப்பா மருத்துவமனையில் சேர்த்துக் கூட இருந்து பார்த்துக்கொண்டார்.

இந்த மூன்று நாள் பரபரப்பில் சிம்பாவை நாங்கள் மறந்தே போனோம். சிம்பாவிற்கு தேவையான உணவை வெளியே வைத்துக் கட்டி வந்ததோடு சரி. சிம்பா வந்ததற்குப் பின் எங்கள் வீட்டில் யாருமே இல்லாமல் போனது அதுவே முதல் முறை. சிம்பா தனிமையில் ஊளையிட்டு அழுதிருக்கிறான்.

பக்கத்து வீட்டிலிருந்தவர்களால் அதன் அழுகையைக் கேட்கவே முடியடில்லை. அந்தச் சமயத்தில் தான் பூந்தென்றல் எங்கள் வீட்டு வெளிக்கதவைத் தாண்டி ஏறிக் குதித்து அதற்கு உணவு வைத்திருக்கிறான். என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. சிம்பா அவனை எப்படிக் கடிக்காமல் விட்டான் என. அப்படிக் கடிக்கத் தோன்றாமல் அவன் கொடுத்த உணவை உண்டு அவனோடு ஒட்டியிருக்கிறானென்றால் எவ்வளவு பயந்திருப்பான்.

ஊருக்கு அப்பாவும் அம்மாவும் வந்த பின் பூந்தென்றலே நான் தான் சிம்பா அழுவது தாங்காமல் சுவரேறிக் குதித்தேன் ஸாரி எனக் கேட்க மற்ற வீட்டுக்காரர்களும் உங்களுக்கு போன் பண்ணா ரீச் ஆகல. அதான் நாங்களே தம்பிய குதிக்க சொன்னோம். தப்பா எடுத்துக்காதிங்க எனக் கூறினர். ’ஐயோ அதனால ஒன்னுமே இல்லங்க. சிம்பாவ பாத்துகிட்டதே பெரிய விஷயம்’ என என் அப்பா அம்மா கூறினர். சிம்பாவை அதன் பிறகான நாட்களில் பூந்தென்றலே தினமும் வாக்கிங் அழைத்துச் சென்றான். சுதந்திரமாக எங்கள் வீட்டிற்குள் நுழைய ஆரம்பித்திருந்தான். சிம்பா அவன் வருகைக்காக தினமும் காத்திருக்க ஆரம்பித்தான். பின்பக்கம் அவன் வண்டிச்சத்தம் கேட்டாலே சிம்பா எழுந்து நின்று சுவற்றை தாண்ட முயற்சி செய்து வாலை ஆட்டி சந்தோசத்தில் குதிப்பதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன்.

சிம்பா எங்கள் எல்லாரையும் விட அவனை மிகவும் நேசித்தான். நாங்கள் அவனோடு எவ்வளவு நேரம் விளையாடினாலும் நன்றாகப் பார்த்துக்கொண்டாலும் அவன் வண்டியின் ஒரு ஹாரன் சத்தமோ அவன் குரலோ எங்களிடமிருந்து சிம்பாவை அந்நியப்படுத்திவிடும். ஒருமுறை சுந்தரம் சித்தப்பா எங்கள் வீட்டிற்கு வந்தபோது அவரைப் பார்த்து குரைக்க வெளியே நடந்து சென்ற பூந்தென்றல், சிம்பா என கத்த அமைதியாகி கதவோரம் நின்று கொண்டது. அவருக்கு எங்கள் வீட்டு கதவைத் திறந்து அவன்தான் உள்ளே விட்டான். அப்போதே அவருக்கு சிம்பா மீது கோபம் இருந்தது. அதைத்தான் இப்போதும் காட்டிவிட்டு போயிருக்கிறார்.

எங்கள் சின்ன பாட்டி இறந்த சில நாட்களுக்குப் பிறகு நான் வீட்டிற்கு வந்தபோது சிம்பா அவனோடு விளையாடியதையும் என் வீட்டிலிருப்பவர்கள் அவனோடு பேசியதையும் என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவன் எப்படி உள்ள வந்தான் என கேட்டபோது அவன் ஏறிக்குதித்து சோறு வைத்தான் எனக் கேட்டதும் கோபம்தான் வந்தது.

‘ஒருத்தவங்க வீட்டுக்குள்ள ஆளில்லாதப்ப எப்படிக் குதிக்கலாம். ரொம்ப தப்புமா. இதை என்கரேஞ் பண்ணாதிங்க. ஏன்னா அவன் சிம்பாவுக்காக குதிச்ச மாதிரி தெரியல!’ என கத்தினேன். சத்தியமாக அவன் என்னைப் பார்க்கவே வருகிறான் என்ற கோணத்தில் தான் நான் சொல்லியிருந்தேன். அதுவே பின்னாளில் ஆபத்தாகும் எனக் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை.

அதை சொன்னதும் அம்மாதான் ‘ஹேய், அவன் ரொம்ப நல்ல பையன்டி! சிம்பா பயங்கரமா அழுதுருக்காண்டி. வீட்டுக்கே ஆகாது தெரியுமா! அவன் அழவும் தான் சுந்தரம் சித்தப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்துருக்கு. இங்க சாப்பாடு வச்சு பாத்துக்கிட்டான். சித்தப்பா சரியாயிட்டாரு என ஏதேதோ சொன்னார்..

ஒருமுறை சிம்பாவை வெளியே அழைத்துச் செல்ல வரும்போது வழக்கம்போல சிரிக்கும் அந்த ஈஈஈ சிரிப்பை காண்பித்து ’லீவுக்கு வந்துருக்கியா?’ எனக் கேட்டான். அவன் பேசியதே எரிச்சலாக ‘எப்படி நீ எங்க வீட்டு சுவரேறி குதிக்கலாம்?’ என கேட்டேன். அதே சிரிப்போடே, ’சிம்பா ரொம்ப அழுதுட்டு இருந்தான். கேட்கவே முடியல. ரொம்ப பரிதாபமா இருந்துச்சு. அதான் கடிச்சாலும் பரவாயில்லனு குதிச்சுட்டேன்’ என அதன் தலையைத் தடவியபடி சொன்னான்.

’அதுக்காக அடுத்த வீட்டு சுவரேறி குதிப்பியா!’ என கத்த என் அப்பாவே வந்து ‘ஏய் சும்மாயிருக்கமாட்டியா! நீ போப்பா’ என அவனை அனுப்பினார். சிம்பா என்னைப் பார்த்து உர்ரென்றான். அது கூடப் பரவாயில்லை நாலு நாள் வந்துட்டு இவ பண்ற டார்ச்சர் என அம்மா சொன்ன வார்த்தை இன்றளவும் என்னால் ஜீரணிக்க முடியாத ஒன்று. அம்மா அவனையும் ஒரு பிள்ளைப் போல எப்போதும் வீட்டிற்கு வர அனுமதித்திருந்தார். எங்கள் வீட்டிலிருப்பவர்கள் சுதந்திரமாக சிம்பாவை வீட்டிலேயே விட்டுவிட்டு வெளியே செல்ல ஆரம்பித்தனர். வெளிகேட் சாவியை பூந்தென்றலிடமே கொடுத்து சாப்பாடு வைக்கச் சொல்லிவிட்டுச் சென்றனர். எனக்கு அது பிடிக்கவேயில்லை. அவன் இதையெல்லாம் எனக்காகத் தான் செய்கிறான் என்பது அவர்களுக்கு புரியவில்லை என நொந்து கொண்டேன்.

அப்படியே வாழ்க்கை ஓடியது. பூந்தென்றல் என்கிற பூ எங்கள் வீட்டின் அங்கமாய் ஆனான். எங்கள் இருவருக்கும் கல்லூரி இறுதியாண்டு அது. நான் கேம்பஸிலேயே இதோ இப்போது பணிபுரியும் இந்த கம்பெனியில் செலக்ட் ஆகியிருந்தேன். அந்த சமயத்தில் தான் சதீஷின் அக்கா திருமணம் நடந்தது. திருமணத்திற்காக சென்னை சென்றிருந்தோம். வெளிச் சாவியை வழக்கம் போல அம்மா பூவிடமே கொடுத்துவிட்டு வந்திருந்தாள். அப்போதும் நான் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தேன்.

திருமணம் முடிந்து திரும்பி வந்த போது தான் எங்களுக்கு அந்த இடி காத்திருந்தது. அம்மா சிரித்துக்கொண்டே பூவிடமிருந்து சாவியை வாங்கி வந்தாள். வந்த களைப்பில் வீட்டில் நுழைந்தவுடன் படுத்துவிட்டேன். அம்மா மட்டும் பீரோவைத் திறந்து பார்த்தாள். பார்த்தவள் பதட்டத்தில் மீண்டும் மீண்டும் தேடினாள். என் தலையணையை வாங்கி அதைத் தட்டிப் பார்த்தாள். சில சமயங்களில் தலையணையில் காசு வைக்கும் பழக்கம் அம்மாவிற்கு உண்டு. கைகள் நடுங்க முகமெல்லாம் வியர்க்க அப்பாவிடம் வைத்திருந்த 40 பவுன் நகையைக் காணவில்லை என்றார். எனக்கு அப்போதுதான் அம்மா அதை பேங்க்கில் எடுத்து வீட்டில் வைத்திருக்கிறார் என்றே தெரியும்.

’என்னமா சொல்ற பேங்க்ல இல்லையா?’ என கேட்க அழுதவாறே, ‘இல்லடி கல்யாணத்துக்கு சில நகை மட்டும் எடுக்க வேணாம்னு மொத்தமா எடுத்துட்டு வந்துருந்தேன். கல்யாணம் முடிஞ்சு மொத்தமா வச்சுக்கலாம்னு நினைச்சேன்’ எனத் தேம்பி அழுதாள். எங்கள் குடும்பத்தின் 20 வருட உழைப்பு அது. என் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்த நகை அது. யோசித்துப் பார்த்தால் இந்த வீட்டைத் தாண்டி எங்களுக்கு இருந்த ஒரே சொத்து இந்த நகை மட்டுந்தான். என் அப்பா அம்மா இத்தனை வருடமாக ஓடி ஓடி மாணவர்களுக்குப் பாடமெடுத்தது எல்லாமே ஒரே நாளில் காணாமல் போயிருக்கிறது.

எனக்கு வந்த கோபத்திற்கு அறிவிருக்காமா என அம்மாவைச் சொல்ல அப்பா என்னைத் திட்டிவிட்டு அம்மாவைப் பார்த்து பொறுமையாக ’நல்லா பாத்தியாம்மா!’ என கேட்டார். நல்லா பாத்தேங்க என அழுதவாறே சொல்லத் தம்பி நான் போய் பாக்கறேன் என உள்ளே போய்த் தேடினான். அப்பாவும் ஒரு முறை தேடிப் பார்த்தார். அம்மா கேவி அழ ஆரம்பித்தார்.

’என்னங்க பண்றது?’ என அம்மா கேட்க, ’பூட்டுன வீடு பூட்டியே கிடக்கு எப்படி தொலைஞ்சு போகும்!’ எனக் கேட்ட அப்பாவிடம் யாரோ தெரிஞ்சவங்க தான் இதை எடுத்துருக்கணும் போலிஸ்ல சொல்லுங்க என்றார் அம்மா. தம்பியும் ஆமாப்பா என சொல்ல அப்பா தன் இன்ஸ்பெக்டர் நண்பரான குமாரிடம் தகவலைச் சொன்னார். உடனே குமார் அங்கிள் வீட்டிற்கு வந்தார்.

வந்தவர் எங்கு வைத்தீர்கள் வந்தபோது வீடு எப்படி இருந்தது என விசாரித்தார். எல்லாமே வச்சுட்டு போன மாதிரியே தான் அங்கிள் இருந்தது என சொன்னோம். உறுதியா இங்க வச்சுட்டு போனிங்களா என இரண்டு முறை கேட்டவர் யார் மேலயாவது சந்தேகமிருக்கா என கேட்க அம்மா மனசாட்சியே இல்லாது பூந்தென்றலின் பெயரைச் சொன்னார். அவனும் நம்ம புள்ள மாதிரி என சொன்ன அம்மாவின் வாயா அது!

அதிர்ச்சியில் ‘அம்மா என்னம்மா பேசற நீ! அங்கிள் அவன் அப்படியெல்லாம் பண்ற பையன் இல்ல’ என சொன்னேன்.

அம்மா என் பக்கம் திரும்பி வாய மூடிட்டு போடி எல்லாம் எனக்கு தெரியும் என அடித்தொண்டையிலிருந்து கத்தினாள்.

’குமாரண்ணா, நாங்க நாயப் பாத்துக்கறதுக்காக எப்பயும் வெளிச்சாவிய அவங்கிட்டதான் கொடுத்துட்டு போவோம். நாயும் கத்தாம இருக்குனா பழகுன ஆள் தான் வந்துருக்கணும். அவனத் தவிர இந்த ஏரியாவுல வேற யாருகிட்டயும் சிம்பா ஒட்டமாட்டான்!’ என்றாள்.

அப்ப அவன தூக்கி நாலு மிதி மிதிச்சா நகை தன்னால வந்துடும் என்றார் குமார் அங்கிள். நான் பயந்துவிட்டேன். நகை தொலைந்ததை விட அவனைப் பற்றி தவறாகச் சொன்னது தான் எனக்கு வருத்தமாக இருந்தது. இத்தனைக்கும் அவனை நான் வெறுக்கவே செய்திருக்கிறேன். இருந்தும் அவனுக்காக நான் குமார் அங்கிளிடம் கெஞ்சினேன். ‘அங்கிள் இவங்க சொல்றாங்கன்னுலாம் நம்பாதிங்க! அவன் ரொம்ப இன்னசன்ட்டான பையன்! சத்தியமா இத செஞ்சிருக்கமாட்டான் என்றேன்.

குமார் அங்கிள் மெதுவாக ‘சரிடா கண்ணு, நாய் குரைக்காம இருந்ததுனா யாராவது தெரிஞ்சவங்களா தான இருக்கணும். நம்ம போய் கேட்டுப் பாப்போம். வேற யாராவது வந்துருக்காங்களானு! என என்னைச் சமாதானப்படுத்தி எந்த வீடு என அப்பாவிடம் கேட்டு அவர்கள் வீட்டிற்கு சென்றனர். நான் வேகமாக என் அறைக்கு வந்து சன்னல் வழியே பார்த்தேன். என்னிடம் மெதுவாக பேசிய குமார் அங்கிள் இல்லை அது. கூப்பிடும் தோரணையிலையே அவனைக் குற்றவாளியாக்கியிருந்தார். பூந்தென்றல் னா நீ தானா! அவன் அப்பா அதற்குள் வந்து ’என்னாச்சு? என்ன பிரச்சனை?’ எனக் கேட்டார். அம்மாவும் வெளியே போய் நின்றுகொண்டார். ’இவங்க வீட்ல இருந்த 40 சவரன் நகையைக் காணோம். அதை விசாரிக்க வந்தோம்’ என குமார் அங்கிள் சொல்ல பூ வின் அம்மா என் அம்மாவிடம் ஓடி வந்து ‘அய்யய்யோ! அம்மா என்னாச்சுமா?’ என அக்கறையாக கேட்டார். என் அம்மா அழுதவாறே நகையைக் காணோம் என்று மட்டும் சொன்னார். ‘பூட்டுன வீட்டுல எப்படிம்மா காணாப்போகும்?’ என பூ அம்மா கேட்க, குமார் அங்கிள், ’அதைத் தான் விசாரிக்க வந்துருக்கோம். தம்பி வா உங்கிட்ட விசாரிக்கணும்!’ என்றார். அதுவரை அமைதியாக இருந்த பூ வின் அப்பா ’என்ன விசாரிக்கணும்?’ என குரலை உயர்த்தி பேசினார்.

உடனே குமார் அங்கிளும், ’ஹலோ என்ன கத்துறிங்க! வெளிச்சாவி உங்க பையன்ட்ட இருந்துருக்கு, நாய் உங்க பையன் போனா மட்டுந்தான் குரைக்காம இருந்துருக்கும். வேற யார விசாரிப்பாங்க! கம்ப்ளைன்ட் மட்டும் கொடுத்தா ஸ்டேசன் கூட்டிப் போய் ஜட்டியோட விசாரிப்பேன்’ என மிரட்ட பளாரென பூ-வை அவன் அப்பா அறைந்தார். சுற்றி இருந்த எல்லா வீட்டாரும் கூட்டம் கூடிவிட்டனர்.

’இந்த மயிருக்குதான்டா கண்ட நாய் வீட்டுக்கெல்லாம் போகாதனு சொன்னேன்! பார்ரா எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க!’ என மீண்டும் அறைந்தார். ’என்னை எதுக்குப்பா அடிக்கிற?’ என பூ அழுதான். அவன் அழுததைதப் பார்க்க என்னால் தாங்கமுடியவில்லை. அவன் என் பின்னால் சுற்றி வருவான். அதைத் தாண்டி வேறு எதையும் செய்திருக்கமாட்டான் என நான் பரிபூரணமாய் நம்பினேன். ’ஹலோ என்ன நாய் கீய்னு பேசுறிங்க மரியாதை கெட்டுடும், உங்க பையன் சுவரேறி குதிச்சு நாய்க்கு சோறு வச்சவன் தான’ என்றான் என் தம்பி. மீண்டும் பூந்தென்றல் அப்பா ’பார்ரா நான் சொன்னேன் கேட்டியாடா’ என அவனை அடித்தார்.

அதுவரை அமைதியாய் இருந்த ஏரியா மக்கள் குரல் கொடுத்தனர். ’தம்பி மரியாதையா பேசு என்ன சுவரேறி குதிச்சான்ற. நாய வாங்குனா போதாது வளர்க்கணும். அந்த மூனு நாள் நாய் எப்படி ஊளைவுட்டுச்சுனு தெரியுமா! அன்னைக்கு ப்ளூக்ராஸ்க்கு போன் பண்ணி குடும்பத்தோட உள்ள வச்சிருக்கணும். இரக்கப்பட்டு அவன் உள்ள குதிச்சா உன் சவுரியத்துக்கு பேசுவியா!’ என மூன்று வீடு தள்ளியிருந்த வக்கீல் அங்கிள் பேசினார்.

’நீங்க ஏன் சார் நம்ம பையன அடிக்கிறிங்க. என்ன பண்ணிடுவாங்கனு பாத்துரலாம்! வெளிச்சாவி தம்பிகிட்ட இருந்துச்சு சரி உள்சாவி கொடுத்திங்களா? பூட்டு உடைஞ்சிருந்ததா!’ என கேட்க ஹலோ அதெல்லாம் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்ல என குமார் அங்கிள் சொல்ல அதே மாதிரிதான் கம்ப்ளைன்ட் இல்லாம இவங்களும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்ல. என்னமோ ஸ்டேசன் கூட்டிட்டு போவேன்ற. கூட்டிட்டு போ பாப்போம் என பூந்தென்றலிற்கு ஆதரவாகப் பேசினார்.

’எனக்கு வக்கீல் அங்கிள் பேசியதுதான் நிம்மதியாக இருந்தது. ஏம்மா எத்தன நாளு உங்க புள்ள மாதிரி உங்க நாய பாத்துருப்பான்! உங்களுக்கு சந்தேகம்னா நீங்களா வந்து கேட்க வேண்டிதான! என்னம்மா போலிஸ்லாம் கூட்டி வந்து அசிங்கமா விசாரிக்கிறிங்க?’ என அம்மாவைப் பார்த்துக் கேட்டார்.

குமார் அங்கிள், ’விசாரணையில இவன்னு மட்டும் தெரியட்டும் அப்பறம் இருக்கு!’ என சொல்ல முதல்ல எந்த ஸ்டேசன் நீங்க இந்த ஏரியாலே பாத்தது இல்லையே எந்த அடிப்படையில நீங்க வந்து மிரட்டிட்டுருக்கிங்க!’ எனக் கேட்டார். சுற்றியிருந்த அனைவரும் அதையே சொல்ல குமார் அங்கிள், ’நீங்க முதல்ல கம்ப்ளைன்ட் கொடுங்க! அப்பறம் பாருங்க’ என சொல்லி கோபமாக எங்கள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

’இன்னும் எதுக்குடி இங்க நிக்குற வாடி!’ என அம்மாவைக் கத்திவிட்டு உள்ளே வந்த அப்பா எல்லாம் இந்த சனியனால என வந்த வேகத்தில் சிம்பாவை ஓங்கி உதைத்தார். சிம்பா கத்திய கத்தில் அங்கு நின்றவர்களே திரும்பிப் பார்த்தனர். பூ சிம்பா குரல் கேட்டு சிம்பா என கத்தி வீட்டிற்கு வர முயன்றான். அவனை சுற்றியிருந்தவர்கள் தடுத்தார்கள். ’இதோ சத்தம் கேட்டு போறானே இதான் சார் நம்ம மனசு! மிதிக்கறானே அதான் சார் அவங்க மனசு! நம்ம பையன சொன்னா விட்ருவோமா சார்!’ என வக்கீல் அங்கிள் பேச எனக்கு ஆறுதலாக இருந்தது.

’எதுனாலும் கால் பண்ணு பூந்தென்றல்!’ என சொல்லி அங்கிருந்து கிளம்பினார். மற்றவர்களும் பூந்தென்றலிற்கு ஆதரவாக பேசிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அம்மா வீட்டிற்கு வந்ததும் பூ குடும்பத்துடன் சண்டை போட்டிருந்த செந்தில் சார் குடும்பம் மெல்ல வீட்டு வாசலுக்கு வந்து நின்றனர்.

சிம்பா குரைக்க அப்பா, ’இப்ப மட்டும் கத்துது சனியன், நகை காணாப் போனப்ப என்ன பண்ணுச்சாம். அத பாத்தாலே இரிடேட் ஆகுது!’ என வெறுப்பில் பேசினார். அம்மா சென்று வெளியே பார்த்து அவர்களை உள்ளே கூட்டி வந்தார்.

’நீங்க வேற யாரும் வீட்டுக்கு வந்தத பாத்திங்களாம்மா!’ என அம்மா கேட்டார்.

’இல்லம்மா தினமும் நாயை வாக்கிங் ஒரு மணி நேரம் கூட்டிட்டுப் போவான். அப்ப யாராவது வந்து எடுத்துருக்கலாம். வாக்கிங் கூட்டிட்டு போய்ட்டு வந்து கட்டி வச்சிட்டு நைட்டு ஒன்பது மணி போல வந்து சாப்பாடு வைப்பான் மா’ என்றார் அர்ச்சனா ஆன்ட்டி.

’ஒரு மணி நேரம் நாய எதுக்கு வாக்கிங் கூட்டிட்டு போறான். சாப்பாடு வைக்க சொல்லி தான சாவி கொடுத்திங்க!’ என குமார் அங்கிள் கேட்டார். ’கண்டவங்கள வீட்டுக்குள்ளே விடக்கூடாது. இப்ப பாரு காணாமாப் போனா அவங்கள கேள்வி கேட்டா கூட குத்தம்பானுங்க. அந்தாளு யாரு வந்து ஓவரா பேசறான்’ என கேட்க வக்கீலு என அப்பா சொன்னதும், ’நினைச்சேன்! அவன்னு மட்டும் தெரியட்டும். இவனும் உடந்தைனு இவன் மேலயும் சார்ஜ் ஃபைல் பண்ணி ஸ்டேசன்ல நிக்க வைக்கறேன்’ என கத்தினார்.

அம்மா விசும்பிக் கொண்டே, ’அப்பவே எம்புள்ள சொன்னா ணே!, அம்மா என்னயிருந்தாலும் சுவரேறி குதிச்சு சோறு வச்சது தப்பு, அவன் நாய்க்காக வந்த மாதிரி தெரியலனு! கேட்டேனா நான்!. பெத்த புள்ள மாதிரியில்ல நம்பி வுட்டேன்’ என்றாள்.

’தங்கச்சி ஒன்னும் பயப்படாத. நகை எங்கயும் போகாது. இவன்தான் எடுத்துருப்பான்னு எனக்கும் தோணுது. ஈஸியா கண்டுபிடிச்சடலாம். டேய்! நீ வந்து ஒரு கம்ப்ளைண்ட் மட்டும் எழுதிக் கொடு. மிச்சத்த நாங்க பாத்துக்கறோம். உழைச்ச காசும்மா நம்மள விட்டு போகாது’ என ஆறுதல் கூறிவிட்டு அப்பாவை அழைத்துக் கொண்டு போனார்.

வெளியே போன சிறிது நேரத்தில் அப்பா கத்தியது கேட்டது. பதட்டத்தில் வெளியே எட்டிப்பார்த்தோம். கோபத்தில் வெளியேறிய அப்பா சிம்பாவைப் பார்த்து வெறியேறி மீண்டும் உதைக்கப் போக பயந்து போன சிம்பா லேசாக அவரைக் கடித்துவிட்டான். வெறிபிடித்த அவர் காயம்பட்ட காலைப் பிடித்தபடி கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து எறியப் போக சிம்பா பயந்து போய் என் பின்னால் வந்து நின்றுகொண்டான். ’இந்த நாய வந்து வச்சுக்கறேன்! வா குமாரு, போலாம்’ என சொல்ல அம்மா ’ஊசிப்போட்டுட்டு வாங்க’ என்றார். தம்பியையும் அப்பாவோடு போகச் சொன்னார். கட்டியிருந்த சிம்பா எங்கள் வீட்டிலிருப்பவர்களுக்கு அந்நியமானான். அவன் இருப்பே என்னைத் தவிர மற்ற அனைவரையும் எரிச்சலடைய வைத்தது. சிம்பா பூந்தென்றலைத் தேடினான்.

அவன் பயத்தில் என் கூடவே இருக்க விரும்பினான். நான் அவன் கழுத்தைத் தடவிக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றேன். செந்தில் சார் குடும்பமும் இந்தக் கலவரத்தில் வெளியேறியிருந்தனர். உள்ளே சோபாவில் அமர்ந்திருந்த அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் பார்வையைத் தாங்காமல் என் பக்கம் திரும்பி, ’என்னடி அப்படி பாக்குற?’ எனக் கேட்டார்.

’அம்மா இது டூ மச் மா! பாவம் மா அவன். நீ தான அவன வந்து நாய பாத்துக்கனு வெளி கேட் சாவி கொடுத்த. நீயே அவன் மேல போலிஸ்ல சந்தேகம்ன்ற’

’உனக்கு இவனுகள பத்திலாம் தெரியாதுமா. நீ சின்னப் பொண்ணு. இவங்கலாம் செஞ்சிருப்பாங்க. இவன் எப்படி முதல்ல வந்தானு நியாபகமிருக்கா. நம்ம ஊர்ல இல்லாதப்ப நம்ம வீட்ல ஏறி குதிச்சவன்தான!’ இவங்க எல்லாம் என அம்மா சொன்ன வார்த்தையிலே அவன் சாதி முதல் வர்க்கம் வரை எல்லாமே அடங்கியிருந்தது.

’சத்தியமா உன்னை பாக்கவே அருவருப்பா இருக்குமா! என்னம்மா ஜென்மம் நீ! அவன நீயே பாசமா பேசற மாறி பேசி வீட்லருக்க நாய பாத்துக்கன்றது. இப்ப நகைகாணும்ங்கவும் அவனையே திட்டுறது. வெளிசாவி தான கொடுத்த. உள்ள எப்படி வந்திருப்பான் அவன்!’

’வெளிய வரை வர முடிஞ்சவனால உள்ள வர முடியாதா! இந்த இன்ஜினியரிங் படிக்குறவங்களே இப்படித்தான் பண்ணுவாங்க. பேப்பர்லாம் பாக்கறதில்லயா நீ!’

’நானும் தம்பியுந்தான் இன்ஜினியரிங் படிக்கிறோம். நாங்களும் திருடங்களா!’

’உனக்குலாம் சொன்னா புரியாதுடி!’ என சொல்லிவிட்டு பிரான்சிஸ் மாமாவிற்கு தகவல் சொல்ல போனை எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றார்.

குமார் அங்கிள் கொடுத்த நம்பிக்கையில் நாங்கள் கொஞ்சம் தைரியமாகவே இருந்தோம். அம்மா போனிலும் பூந்தென்றலையே குற்றவாளியாக சொல்லிக்கொண்டிருந்தார்.

நான் வெறுப்பாகி என் அறையில் வந்து அமர்ந்தேன். மெல்ல சன்னலின் வழியே பூந்தென்றலின் வீட்டைப் பார்த்தேன். பூந்தென்றல் கேட் வெளியே நின்றுகொண்டு, ’அப்பா கதவைத் திறப்பா!’ என கத்தினான்.

அவன் அம்மா வந்து, ’ஏங்க இப்படி அநியாயம் பண்றிங்க! மரியாதையா கதவத் திறங்க!’ என அழுதார். ’நீ உள்ள போடி’ என சொன்னவர், ’போடா, படிச்சு படிச்சு சொன்னேன்ல அந்த வீட்டு நாய்க்கு சேவகம் பண்ணாதனு கேட்டியாடா நீ! மரியாதையா வெளிய போடா’ என கத்தினார். ’அப்ப நான் கேட்டப்ப நீ நாய் வாங்கி குடுத்துருக்கலாம். நீ நாய வளக்க விட்டா ஏன் நான் போகப் போறேன்’ என கத்தினான்.

நாய்க்காகத்தான் உண்மையில் வந்தானா என்ற சந்தேகமே எனக்கு சோகத்தைக் கொடுத்தது. எனக்காக அவன் வரவில்லையா! இல்லை இருக்காது என மனதைத் தேற்றினேன்.

’நிக்காம மரியாதையா போடா!’ எனக் கத்த, ’இந்தாளுக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சுடா!’ என அவன் அம்மா அழுதார். அம்மா விடும்மா என சொல்லிவிட்டு திரும்பினான். சன்னல் வழியாகப் பார்த்த என்னைப் பார்த்ததும் எப்போதும் சிரிக்கும் அந்த சிரிப்பை அந்த சோகத்திலும் சிரித்தான். ஐயோ! என் குடும்பத்தாலே கழுவிக்கொள்ள முடியாத பாவச்சிரிப்பு அது. எங்கள் வீட்டு நகை காணாமல் போனது அறிந்தபொழுது வராத அழுகை கூட அவனது அந்த சிரிப்பைப் பார்த்ததும் வந்துவிட்டது. அந்தச் சிரிப்பு ஆட்டை அணைத்துக் கொண்டபடியே சிரிக்கும் என் கடவுளின் சிரிப்பை ஒத்திருந்தது. என் இதயம் ஒரு கணம் நின்றதை உணர முடிந்தது. அந்த சிரிப்பின் வெம்மை தாங்காமல் கதவை வேகமாகச் சாத்திவிட்டேன்.

கதவைச் சாத்தியதால் என்னைத் தவறாக நினைத்துக் கொள்வானோ என வருந்தினேன். எருசலேத்து பெண்கள் சிலுவை சுமந்து போன இயேசுவைப் பார்த்ததைப் போல அவனைப் பார்த்ததாய் கற்பனை செய்து பார்த்திருந்தேன். அந்தக் கணத்தில் தோன்றிய உணர்வுகள் இன்றளவும் துல்லியமாக நினைவிலிருக்கிறது. இத்தனை காலமாய் அவன் சிரித்ததற்குத் திரும்பிச் சிரிக்காமல் இருந்ததற்காக என்னை நானே நொந்து கொண்டேன். அந்த ஒவ்வொரு முறை சிரித்ததையும் நினைத்துப் பார்த்து அதற்காக மனதளவில் அவனிடம் மன்னிப்பு கோரினேன். இறுதியாக அவன் சிரித்த சிரிப்பை நினைத்த தருணம் என் ரோமங்கள் சில்லிட்டு நின்றன. இதோ இப்போதும் அதை நினைக்கும் போது அப்படித்தான் இருக்கிறது.

என் இதயம் வேகமாகத் துடித்தது. காய்ச்சல் அடிப்பது போல அந்தக் கணத்தில் உணரவே என்னைத் தொட்டுப் பார்த்தேன். என் மூச்சில் வெம்மையை உணர்ந்தேன். என் நகங்களை பதட்டத்தில் கடித்தேன். உடனடியாக அவனைப் பார்க்க வேண்டும் என்பது போல இருந்தது. அவன் கடந்து போனதை அறிந்த சிம்பா அவனை நினைத்து பலமாக குரைத்தான். கயிற்றை அவிழ்த்துவிட்டால் அவனிடம் ஓடி தஞ்சம் அடையும் நிலையில் பயங்கரமாகக் கத்தினான். அம்மா போனை கட் செய்துவிட்டு நாயை அடக்கக் கத்தினாள். அவன் சிம்பா கண்பார்வையில் மறையும் வரை சிம்பா குரைப்பதை நிறுத்தவில்லை. அவன் போன ஏமாற்றத்தில் சிம்பா அழுதான்.

எனக்கும் சிம்பாவைப் போலவே அவனைப் பார்க்க வேண்டுமெனத் தோன்றியது. பார்த்து அவன் கைகளைப் பிடித்து, ’என் குடும்பத்தையே மன்னிச்சுடு பூ! சாரி பூ உங்கிட்ட சிரிக்காம இருந்ததுக்கு’ எனச் சொல்ல வேண்டும் போல இருந்தது.

வேகமாக வெளியில் சென்று அவன் சென்ற பாதையைப் பார்த்தேன்.

அம்மாவின் போனை எடுத்து அவன் நம்பரை என் போனில் டைப் செய்து அவனுக்கு போன் செய்தேன்.

ஹலோ … பூ வின் குரல் கேட்டு மனம் சிம்பாவைப் போல அலைபாய்ந்தது.

’பூ நான்.. நான்….’ எனப் பெயரைச் சொல்வதற்குள் ’ம்ம் தெரியுது சொல்லுங்க’ என்றான்.

’பூ உன்ன நான் பாக்கணும். பாக்கலாமா?’

சிறிது யோசித்தவன், ’ஒரு ஒன் அவர் கழிச்சு உள்ள குமரன் பூங்காகிட்ட வரியா. இங்க பாத்து பிரச்சனையாயிடுச்சுனா போச்சு’ என்றான். நானும் அப்பாவும் தம்பியும் வந்த பிறகே போகலாம் என நினைத்துச் சரி என்றேன். போனவர்கள் சிறிது நேரத்தில் வந்தார்கள். அப்பா வந்து உம்புள்ள என்ன பண்ணியிருக்கான் பாரு! என கத்தினார்.

அப்பா கம்ப்ளையன்ட் கொடுக்க போன போது தம்பியை மருத்துவமனையில் டோக்கன் வாங்கி காத்திருக்கச் சொல்லியிருக்கிறார். டோக்கனை ரிஜஸ்டர் செய்தவன் தன் நண்பர்களோடு சென்று பூ எங்கிருக்கிறான் என விசாரித்து அடிக்க சென்றிருக்கிறான். சுற்றியிருந்தவர்கள் அவர்களைக் கண்டித்து அப்பாவிற்கு போன் செய்து உங்க புள்ள ரோட்ல போற ஒருத்தன ஆளக்கூட்டி வந்து அடிக்கிறான் என சொல்லியிருக்கின்றனர். அப்பா பாதியிலேயே எழுந்து போய் தம்பியை அழைத்து வந்திருக்கிறார்.

’நீயும் ஏன்டா அவங்களோட போய் நிக்குற! அதான் கம்ப்ளைன்ட் கொடுக்குறோம்ல. போலிஸ் பாத்துக்கும்டா’ என அம்மா சொல்ல, ’அம்மா! வீட்ல பூந்து நகையை எடுத்திருக்கான் அவன என்ன கொஞ்சிட்டு இருப்பாங்களா! அவனை அடி வெளுத்துருப்பேன் தப்பிச்சிட்டான் மாட்டாமலா போய்டுவான்.’

’அவன் எடுத்தத பாத்தியாடா நீ!’ என நான் கேட்க ஏய் சும்மா பேசாத போடி என்றான். வாடி போடினா மரியாதை கெட்டுருண்டா நாயே!’ எனக் கத்தினேன். இந்த நாய் ஒழுங்கா இருந்துருந்தா இதெல்லாம் நடந்துருக்குமா!’ என சிம்பாவைப் பார்த்து பேசியவர், ’இதை எப்படி ஹேன்டில் பண்ணனும்னு நான் பாத்துக்குறேன். தம்பி! நீ எதுவும் பண்ணாத படிக்குறப்ப அவன அடிச்சு போலிஸ் கேஸ்னு ஆயிடுச்சுன்னா போச்சு. நமக்கும் அவங்களுக்கும் அப்பறம் என்ன வித்தியாசம். நீ இத விட்டுடு அப்பா பாத்துக்கறேன்’ என்றார்.

அவனுக்கு திரும்ப போன் செய்த போது போன் சுவிட்ச் ஆஃபில் இருந்தது. இருந்தும் அவன் சொன்ன இடத்திற்கு ஸ்கூட்டியில் ஒரு நம்பிக்கையில் சென்றேன். உள்ளே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான்.

அவனைப் பார்த்ததுமே மனம் பரபரத்தது. வண்டியை நிறுத்திவிட்டு அவனருகில் அமர்ந்தேன். நான் வரவும் எழ முயன்றவனின் கைகளைப் பற்றிக் கொண்டு, ‘ஸாரி பூ, என் வீட்ல இருக்கவங்க பண்ணதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்’ எனச் சிறுபிள்ளை போல அழுதேன். அழாத எல்லாம் பாக்கறாங்க என கூறி அவன் என் கைகளை விடுவித்தான். அவன் கைகளில் இருந்து விடுபட்டதே எனக்கு ஒருமாதிரி இருந்தது. அந்த கைகளைப் பற்றிக் கொண்டிருக்கவேண்டும் போல தோன்றியது.

’சாரி பூ என மீண்டும் சொல்ல நீ நான் செய்யலனு நம்புறல்ல அது போதும்’ என்றான்.

’பூ என் தம்பி அடிக்க வந்தானாம்மே! சரியான லூசு அவன்.’

’விடுங்க! சின்னப்பையன் நகை காணாமாப் போன பதட்டத்துல வந்துட்டான்’ என்றான்.

’எதுவும் ஆகலயே!

பாத்தா எதாவது ஆன மாதிரி இருக்கா என கேட்டான்.

இல்லை என்றேன்.

ஃப்ரியா விடுங்க. பாவம் அங்கிளும் ஆன்ட்டியும் கஷ்டப்பட்டு உனக்குனு சேத்து வைச்சிருப்பாங்க. காணாமப் போச்சுன்ற பதட்டத்துல அப்படி பேசிட்டாங்க. யாராயிருந்தாலும் அடிக்கடி வீட்டுக்கு வரவங்க மேல சந்தேகம் வரும்ல.

அவன் இவ்வளவு தெளிவாகப் பேசுவான் என்பதே ஆச்சரியமாக இருந்தது. அந்த போலிஸ் வந்தாருல அவருகிட்ட உங்க சொந்தக்காரங்களயும் யார் யார் சிம்பாவுக்கு பழக்கமோ அவங்கள எல்லாம் விசாரிக்க சொல்லு. கண்டிப்பா வெளி ஆள்னால உள்ள நுழைய முடியாது. சிம்பா விடமாட்டான். இன்னொன்னு வீடு அப்படியே இருக்குன்னா சாவியெல்லாம் இருக்க ஒருத்தனால தான் பண்ண முடியும். கரெக்டா ரெடி பண்ணி டேட் பிக்ஸ் பண்ணி நீங்க இருக்கமாட்டிங்கனு தெரிஞ்சு பண்ணியிருக்கான் என்றான். நான் ஆமா என்றேன்.

சாயங்காலம் ஒரு மணிநேரம் சிம்பாவோட வாக்கிங் வருவேன். அப்பக்கூட எடுத்துருக்கலாம். ஆனா பயப்படாதிங்க கண்டுபிடிச்சுடுவாங்க. நகை கிடைச்சுடும் என எனக்கு ஆறுதல் சொன்னான்.

நான் அவனைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். ஒரேயொரு ஹெல்ப் எனத் தயங்கியபடியே கேட்டான். ’என்ன?’ எனக் கேட்டேன்.

’சிம்பா பாவம். அவன அடிக்காதிங்க. அவனுக்கு என்ன தெரியும். பழக்கப்பட்டவங்கனு தான் உள்ள விட்டிருப்பான். இல்லனா நான் வாக்கிங் கூட்டிட்டு போன நேரமா வந்திருப்பான். அதுக்காக சிம்பாவ எதுவும் பண்ணிடாதிங்க. அப்படி ஒருவேள விக்கிறதா இருந்தா சொல்லுங்க என் ஃப்ரண்ட வாங்கிக்க சொல்றேன். நான் நாய் வளக்கறது அப்பாவுக்கு பிடிக்காது. இது மட்டும் பண்ணுங்க. பாவம் சிம்பா… உங்கப்பாவே அடிச்ச பயத்துல இருப்பான்!’ என்றான்.

’உங்க வீட்ல அப்பா வெளியே போக சொல்லிட்டாரு நீ எப்படி போவ நான் வேணா அங்கிள் கிட்ட பேசவா!’ என சொல்ல, ’நீ கேட்டதே சந்தோசம். அவருக்கு அவ்ளோ சீன்லாம் இல்ல. நான் நைட்டு போய்ருவேன். ஒன்னும் பிரச்சனையில்ல’ என்றான். ’இல்ல நான் வேணா பேசிப் பாக்கறேன்’ எனச் சொன்னதற்கு ’ஒன்னுமில்ல நான் பாத்துக்கிறேன்! நான் சொன்ன ஹெல்ப் மட்டும் பண்ணு’ என்றான்.

அவன் என்னிடம் கேட்ட அந்த உதவியை மட்டும் எப்படியாவது செய்துவிட வேண்டுமென நினைத்து கிளம்பினேன். இரண்டு மூன்று நாட்கள் அப்படியே போனது. போலிஸ் அவர்கள் வீட்டில் வந்து விசாரித்துவிட்டு போனார்கள். அந்த நேரத்தில் வக்கீல் அங்கிளும் அவர்கள் கூடவே இருந்தார்.

சற்குணம் சார் இடத்தை வாங்கி வீடு கட்டுவதற்கான பணிகளைத் துவங்கியிருந்தார். அதனால் கிரிக்கெட் ஆட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. போலிஸ் சொந்தக்காரர்களையெல்லாம் விசாரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

அப்பா பூந்தென்றலின் வீட்டு உரிமையாளரிடம் பேசி அவர்களைக் காலி பண்ணச் சொல்லச் சொன்னார். ஒருநாள் அதிகாலையிலே சிம்பாவை தூக்கிக் கொண்டு சென்றார். எங்குச் சென்றார் சிம்பாவை என்ன செய்தாரென இப்போது வரை சொல்லவில்லை. நான் எவ்வளவோ வந்து கேட்டுப் பார்த்தும் சொல்லவில்லை. சில சமயங்களில் கடித்த கோவத்தில் சிம்பாவை கொன்றிருப்பாரோ என்றெல்லாம் பயந்திருக்கிறேன். ஆனால் அப்பாவிற்கு அவ்வளவு தைரியம் கிடையாது. சிம்பாவை அதிகபட்சம் போனால் கண்ணைக் கட்டி எங்காவது விட்டிருப்பார். அதைச் செய்யுமளவிற்கு கூட கல் நெஞ்சக்காரர் இல்லை அவர். ஏனெனில் அப்பாவைக் கடித்த மறுநாள் சிம்பாவிற்கும் அப்பா ஊசி போட்டார். அவர் சுந்தரம் சித்தப்பாவிடம் சொன்னபடி யாருக்காவது இலவசமாகக் கொடுத்திருப்பார் அவன் நிச்சயம் பாதுகாப்பாக இருப்பான் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறேன்.

சிம்பா இல்லாத வீட்டைச் சுற்றி சுற்றி வந்து பார்த்தான். நானும் தம்பியும் கல்லூரிக்குச் சென்றுவிட்டோம். அதற்குப் பின் நடந்தததெல்லாம் எனக்கும் என் தம்பிக்கும் செய்தியாகவே எட்டியது. போலிஸ் சிம்பாவுடன் பழக்கமாக இருந்தவர்களையும் அந்தக் கல்யாணத்திற்கு வராத சொந்தக்காரர்களையும் வைத்து தயார் செய்த லிஸ்டில் நடத்திய விசாரணையில் அம்மாவுடைய சொந்தத் தம்பி பிரான்சிஸ் மாமா தான் அதை எடுத்தது எனக் கண்டுபிடித்தனர். 30 பவுன் வரை திரும்பக் கொடுத்துவிட்டார். பத்துப் பவுனை இன்று வரை தரவில்லை. இதைக் கேட்டு அம்மா சரிந்து விழுந்தார். அப்பா பெருந்தன்மையாக கேஸ் எழுத வேண்டாம் என சொல்லி குடும்பப் பிரச்சனை நாங்க பாத்துக்கறோம் என வாபஸ் வாங்கிக் கொண்டார்.

பிரான்சி மாமா ஊரில் வைத்திருந்த கடை நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது என்று மட்டும் தெரியும். அதற்காக நகையை எடுக்கும் அளவு வருவார் என எதிர்பார்க்கவில்லை. இரவு இரண்டு மணிக்கு மேல் வந்து ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த சாவியை வைத்து நகையைத் திருடியிருக்கிறார். சிம்பா அவரைப் பார்த்ததும் குரைக்காமல் வாலாட்டி அமைதியாக இருந்திருக்கிறான்.

அம்மா பளாரென அறைந்து ’இருந்த ஒரு தம்பியும் செத்துட்டான்னு நினைச்சுக்கிறேன்!’ என சொல்லி போலிஸ் ஸ்டேசனிலிருந்து வீட்டிற்கு வந்திருக்கிறார்.

வந்தவர்கள் நேராக பூ வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். அவர்களை பூ-வின் தந்தை உள்ளே கூட விடவில்லையாம்.

‘நகைய காணோம்னதும் எம் புள்ளையை நீங்களோ, இல்ல சாரோ கேட்டுருந்தா நான் எதுவும் சொல்லிருக்கமாட்டேன். புள்ள மாதிரி நினைச்சிருந்தா அதைதான் பண்ணியிருப்பிங்க! ஆனா நீங்க அப்படி பாக்கலம்மா. சம்பளமில்லாம நாயப் பாத்துக்குற ஒரு வேலைக்காரனாப் பாத்துருக்கிங்க! அதாம்மா போலிஸ விட்டு கேட்டிங்க. அப்படி கேக்கறப்பயாவது அவன் அப்படி பண்ணியிருக்கமாட்டான்னு ஒரு வார்த்த சொன்னிங்களா? மண்ணு மாதிரி நிக்கிறிங்க! உங்க பையன் பேசறான் அவனை அடக்குனிங்களா? வேலைக்காரனாப் பாத்துட்டு தயவுசெஞ்சு அப்படி பாக்கலன்னு சொல்லாதிங்க. நீங்க போலிஸ்ல சொன்னப்பவே இது முடிஞ்சு போச்சு. அதுக்கும் ஒரு படி மேல போய் வீட்ட காலி பண்ண சொல்ல சொல்லி ஹவுஸ் ஓனர்ட்ட பேசிருக்கிங்க. சந்தோசம். இப்ப எடுத்தது யார்னு தெரிஞ்சிருச்சுல. எங்க கொண்டு போய் வச்சுக்குவிங்க உங்க முகத்த. எங்களால இங்க உங்க முகத்த பாத்துட்டு நிம்மதியா இருக்க முடியாது. நாங்க சீக்கிரம் கிளம்பறோம் விட்ருங்க என கையெடுத்து கும்பிட்டிருக்கிறார்.

’நீங்க வீட்டுக்குள்ள விடாட்டியும் பரவால்ல. நாங்க பண்ணது தப்பு. தொலைஞ்சு போன பதட்டத்துல பண்ணிட்டோம். அதுக்கு காரணம் சொல்லி திருத்திக்க முடியாது. மன்னிச்சுக்கங்க!’ என கையெடுத்து கும்பிட்டுவிட்டு வந்திருக்கிறார்.

 

டுத்த விடுமுறைக்கு நான் வருவதற்குள் அவர்கள் வீட்டைக் காலி பண்ணியிருந்தார்கள். அதற்குப் பின் நானும் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை. ஏதோவொன்று அவனிடம் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனச் சொல்லியது. நாங்கள் அவர்களைப் பற்றியோ சிம்பாவைப் பற்றியோ பேசுவதைத் தவிர்த்துக் கொண்டோம். இப்படி எப்போதாவது யாராவது கிளறிவிட்டால் அவன் நினைவு வந்துவிடும்.

இவ்வளவுக்கும் காரணமான பிரான்சி மாமாவுடனான சண்டை எங்கள் பாட்டி இறப்பு வரை தான். பாட்டி இறந்ததும் அம்மா மன்னித்து உறவாடிக் கொண்டார். அப்பாவும் அதற்குள் தலையிடவில்லை. சில விஷயங்கள் எங்கள் குடும்பத்திற்குள் அப்படித்தான். அதனால் தான் நானும் அம்மாவும் கிறிஸ்தவர்களாகவும் அப்பாவும் தம்பியும் இந்துவாகவுமே இருக்கிறார்கள்.

அந்தக் காதல் திருமணத்தை இன்று வரை இரு வீட்டிலுமே ஏற்றுக்கொள்ளவில்லை. முழுமையாக இந்துவாக அம்மா மாறியிருந்தால் நிச்சயமாக அப்பா குடும்பம் ஏற்றுக் கொண்டிருக்கும். இல்லாவிட்டால் இப்படி பத்திரிக்கை கொடுத்துத் தெரிந்து கொள்ளும் அளவிலா சுந்தரம் சித்தப்பா குடும்பம் இருந்திருக்கும். அப்பாவும் அல்லவா பெண் பார்த்தது முதல் கூடவே இருந்திருப்பார்.

கோயம்புத்தூரில் நான் படிக்கும் போது அங்குத் தங்கிப் படித்திருப்பேனே. இல்லையென்றால் ஒரு நாளாவது அவர்கள் வந்து என்னைப் பார்த்திருப்பார்களே! என் மதம் என்னை அம்மாவின் மகளாக்கியது. தம்பிதான் அப்பா குடும்பத்திற்கு. எனக்கு அம்மா குடும்பம் தான். அதுவும் பிரான்சி மாமா செய்த காரியத்தில் நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன். சிலவற்றை நாங்கள் அதன் போக்கிலேயே விட்டுவிடுவோம்.

சதீஷின் திருமணத்திற்காக கோயம்புத்தூர் சென்றிருந்தோம். வழக்கம்போல தம்பியைத் தான் அவர்கள் பார்த்து விசாரித்து நன்றாக பேசினார்கள். என்னிடம் கடமைக்கு பேசினார்கள். பிரான்சி மாமாவிற்கும் பத்திரிக்கை வைத்திருந்தார்கள். பிரான்சி மாமாவும் வந்தார். ’இவன் எதற்கு வந்தான்?’ என ஒருவர் கேட்க, ’இங்க வராட்டி நேரா போய் அண்ணன் வீட்ல திருடிருவான் அதான் வச்சேன்!’ என தங்களுக்குள் சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்க எதுவும் கை வச்சிரப் போறான் பாத்துக்கங்க என என் காதுபடவே பேசினார்கள். என்ன சொல்லி சண்டை போடுவது. இதெல்லாம் வீண் என விட்டுவிட்டு அமைதியாக சேரில் அமர்ந்திருந்தேன்.

சற்று நேரத்தில் ஸ்ரீ வருவதாக சொல்லியிருந்தாள். கோவையில் படித்த பொழுது என் நெருங்கிய தோழி அவள். அவளே வந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வதாய் கூறியிருந்தாள். இந்த நரகத்திலிருந்து எப்போது தப்பிப்பேன் அவள் வருவாள் என அமர்ந்திருந்தேன்.

பிரான்சி மாமா வந்ததும் மொய் வைத்துவிட்டு கிளம்ப ஆயத்தமானார். அம்மா நிறுத்தி வைத்து நலம் விசாரித்து பணம் கொடுத்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது அருகிலிருந்த சேரில் அமர்ந்த என் தம்பி ‘பாத்தியாக்கா அம்மாவ! பத்து பவுன இன்னும் தராத தம்பிகிட்ட கொஞ்சுறத’ என்றான். ‘இந்தாள பாத்தாலே கடுப்பா இருக்கு. எப்படிக்கா அம்மா போய் பேசறாங்க!’ என்றான்.

‘பாட்டி இறந்தப்பறம் அம்மாவுக்கு சொந்தம்னு யாரு இருக்கா! அப்பா சொந்தம்னு தயவு செஞ்சு பேச்சுக்கு கூட சொல்லாத. அடிச்சாலும் புடிச்சாலும் திருடுனாலும் தம்பிதான் அம்மாவுக்கு இருக்க ஒரே ஒரு சொந்தம் எப்படி விட்டுக்கொடுப்பாங்க!’ என அவனைப் பார்த்து சொன்னேன்.

மெல்ல என் தோளில் சாய்ந்து கொண்டான். ’புரியுதுக்கா அம்மா நிலைமை. ஆனா அந்த நகையை திருடனான்னு ஒரு குடும்பத்த பழி சொல்லி.. அவன நான் அடிச்சுட்டேங்க்கா!’ என்றான்.

’அடிச்சியா!’ என ஆச்சரியமாகக் கேட்டேன்..ஆமாக்கா பளார்னு அறைஞ்சிட்டேன். அடிச்ச அடியைப் பாத்துட்டு தான் சுத்தி இருந்தவங்க கூடிப் பேசி எங்களப் பிடிச்சுவச்சு அப்பாவுக்கு போன் பண்ணாங்க.

அவன் என்னிடம் அடிக்கவில்லை எனச் சொன்னதையும் கதவைச் சாத்திவிட்டு சிரித்த சிரிப்பையும் நினைத்துப் பார்த்தேன். கண் கலங்கியது. ’சிம்பா என்னக்கா பண்ணான். நம்மள விட நல்லாப் பாத்துகிட்டான். புள்ள மாதிரின்னு சொன்னவனும் இந்தாளால தான போனான். அவனுக்கு நம்ம பண்ண பாவத்துக்கு….’

அவன் கையைப் பிடித்து ’வேணாம் தம்பி!’ என சொன்னேன்.

’இல்லக்கா பாவம்க்கா பூ அண்ணே! நான் ஒரு ஸாரி கூட கேக்கலக்கா.. எந்த மூஞ்சிய வச்சுட்டு கேக்கமுடி…..’

’தம்பி ப்ளீஸ் …. அவன் பேரைச் சொல்லாத!’ என சொன்னேன். லேசாகக் கண்களைத் துடைத்துக் கொண்டேன். அவன் பேசவில்லை.

ஸ்ரீக்கு கால் செய்தேன். ’நான் வேணா போய் ஸ்ரீ வீட்ல விடவா?’ என கேட்டான். ’எதுல?’ என கேட்க, சுந்தரம் சித்தப்பா வண்டில என சொல்லும் போதே, ’வேணான்டா ஸ்ரீ வந்துருவா நான் போய்க்கிறேன்!’ என்றேன்.

பிரான்சி மாமாவோடு சேர்ந்து திருமணத்தில் குடும்பப்படம் எடுத்தவுடன் நானும் பிரான்சி மாமாவும் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். ஸ்ரீ வந்து என்னை அழைத்துக் கொண்டு சென்றாள்.

அத்தனைக் காலம் நினைவிற்கு கொண்டு வராமல் மனதின் ஒரு மூலையில் பூட்டி வைத்திருந்த நினைவுகள் தம்பி சொன்னதும் அவிழ்த்து விடப்பட்ட நாய் தனக்கு பிடித்த இடத்தை நோக்கி ஓடுவது போல அவனை நோக்கி தறிகெட்டு ஓடியது.

ஸ்ரீ வீட்டிற்கு வர வேண்டும் என்பதற்காக அங்கு போகவில்லை. கல்யாணத்தில் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் அவள் வீட்டிற்கு சென்றேன். கல்யாண வீட்டிலிருந்து கிளம்பும் அரை மணி நேரத்திற்கு முன் அப்பா போன் செய்தால் ஸ்ரீயே மீண்டும் அங்கு விட்டுவிடுவதாய் கூறியிருந்தாள். மண்டபத்திலிருந்து சுமார் இருபது நிமிடத் தொலைவு தான் அவள் வீடு. நல்ல அமைதியான தெருவாகவே இருந்தது. கல்லூரிக் கதைகளை ஜாலியாக பேசி பொழுதைப் போக்கினோம். தனக்குப் பார்த்திருந்த மாப்பிள்ளைகளின் போட்டோவைக் காண்பித்து கமெண்ட் அடிக்க சிரித்துக்கொண்டேன்.

அப்பா போன் செய்யவும் அங்கிருந்து கிளம்பி வெளியே வந்தேன். நான்கைந்து தெரு தாண்டி வண்டி நிற்கவே வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்றாள்.

ஸ்டார்ட் ஆகாதாதால் அருகிலிருந்த மெக்கானிக் ஷாப்பை விசாரித்து தள்ளியபடி பேசிக்கொண்டே நடந்தோம்.

ஒரு வீட்டிலிருந்து பழக்கப்பட்ட ஒரு சத்தம் கேட்டது. அது எங்கள் குடும்பத்திற்கு உறவுகளைக் கொடுத்த சத்தம். உறவுகளைக் கெடுத்த சத்தம். நான் செய்ய முடியாமல் போன உதவியின் சத்தம்.

சிம்பா பூட்டியிருந்த கேட்டின் வழியே என்னைப் பார்த்து கேட்டைத் தாண்டி எம்பிக் குதித்தபடி வாலாட்டி மகிழ்ச்சியில் குரைத்தான். சிம்பாவைப் பார்த்ததும் எனக்குச் சந்தோசம் தாங்கவில்லை. இரும்புக்கதவின் கம்பி இடைவெளியில் அவன் வாய் மட்டும் நீட்ட முடிந்தது. அதன் வழியாகவே மொத்த அன்பையும் குரைத்ததுத் தீர்த்தான்.

’சிம்பா நல்லா வளந்துட்ட டா நல்லாருக்கியா! உன்னைப் பத்தி அடிக்கடி நினைப்பேன்டா சிம்பா! உன்ன நல்லா பாத்துக்கறாங்களாடா!’ என சந்தோசத்தில் ஏதேதோ பேச அவன் நான் தொடத்தொட இன்னும் உற்சாகமாகிக் குரைத்தான். வாலை ஆட்டிக்கொண்டே கதவின் இடைவெளியில் இன்னும் நுழைய முடியுமா என முயற்சித்தான். ’உன்னைப் பத்தி பூ -கிட்ட சொல்லணும்!’ என்ற போது சிம்பாவின் சத்தம் பயங்கரமாகக் கேட்டதால் அந்த வீட்டுக்காரர்கள் உள்கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. கதவைத் திறக்கும்போதே ’சிம்பா என்னாச்சுடா!’ என கொஞ்சி பேசிக்கொண்டே வந்தான்.

அந்தக் குரல்….. …உன்னைப் பத்தி பூ-க்கிட்ட சொல்லணும் எனச் சொல்லிக்கொண்டிருந்தபோது அவனே முன்பாக வந்து நின்றான்.

பூந்தென்றல்……

சிம்பாவைப் போல என் மனம் அவனைக் கண்டதும் மகிழ்ச்சியால் பரவசமடைந்தது. கண்களில் கண்ணீர் முட்டியது.

சிம்பா ஓடிச்சென்று அவனருகில் ஒரு சுற்று சுற்றி வாலாட்டியபடியே குரைத்து மீண்டும் என்னிடம் ஓடி வந்து ஒரு சுற்றி வாலாட்டி குரைத்து எம்பினான்.

பூ சற்று எடை கூடியிருக்கிறான். முடி கொட்டியிருக்கிறது. கண்ணாடி அணிந்திருக்கிறான். அதனாலென்ன! மாறாத அந்த ஈறு தெரியச் சிரிக்கும் அதே வெள்ளந்திச் சிரிப்பை என்னைப் பார்த்துச் சிரித்தான். அழுகையினூடே முதன்முதலாக நானும் அவனைப் பார்த்து ஈறு தெரியச் சிரித்தேன். எங்கள் இருவருக்குமிடையில் அன்பின் பிரவாகமாய் சிம்பா குரைத்துக் கொண்டிருந்தான்.


 

எழுதியவர்

இரா. சேவியர் ராஜதுரை
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x