தனுக்குட்டி எவ்வளவு வேகமாக வளர்ந்துவிட்டாள். அம்மா இதற்கு முந்தைய ஒரு கிறிஸ்துமஸின் போது தனது பழைய சிங்கர் மெசினில் தைத்து உடுத்திவிட்டவேளையில், இந்த வெல்வெட்மிடி அவளது முட்டிக் காலைத் தொட்டுக்கிடந்தது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.
அப்போது, கிறிஸ்துமஸ் இராவிழிப்பு பூசைக்குச் செல்வதற்காக நாங்கள் கிளம்பிக் கொண்டிருந்தோம். அப்பா தன்னுடைய ஹெர்குலஸ் சைக்கிளை பளபளவென்று தேங்காய் எண்ணெய் விட்டுத் துடைத்திருந்தார். அதன் மட்கார்டில் ஜேம்ஸ், தனு என்று எங்கள் பெயரை அவரே தனது கைப்பட அணில்வால் முடி ப்ரஷ் கொண்டு பெயிண்ட்டில் நுணுக்கி நுணுக்கி அதற்கு முன்தினம் தான் எழுதியிருந்தார். அவர் அதனை எழுதுகிற போது ஆச்சர்யத்துடன் அப்பாவின் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த தனுவிடம் புதுவருடம் முடியும் வரைக்கும் சைக்கிளை அழுக்கு பண்ணக் கூடாதென்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். ஏனென்றால், அப்பாவின் சைக்கிளின் பின் சக்கரம் முழுகும்படி தெரு மணலைக் குவித்துவிட்டு பெடலைச் சுழற்றினால், மணல் அருவியாய் சீறி விழுவதைக் கைதட்டி ரசிப்பது தனுவின் தினப்படி வாடிக்கையான விளையாட்டுக்களில் ஒன்று.
தனு கேரியரில் ஏறி அமர்வதற்குச் சிரமப்படுவதைக் கண்ட அப்பா, ஒற்றைக்கையால் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு மறுகையால் தனுக்குட்டியை அக்குளில் பற்றித் தூக்கி மேலே அமர வைத்தார். அதன்பின், கேரியரின் பின்புறத்தில் நான் அமர்ந்து தனுவைக் கட்டிக் கொண்டேன். நானும் அப்பாவும் திருச்செந்தூர் ஏ.வி அண்ட் கோ டெக்ஸ்டைல்ஸ்சிலிருந்து அம்மா எடுத்து வந்திருந்த சட்டைத்துணியில் ஒரே மாதிரியான சட்டையை அணிந்திருந்தோம். நான் சிறுவன் என்பதால் எனக்கு நெஞ்சுப் பகுதியில் சிறிய மினுக்கல் பூ வேலைப்பாடுகள் வைத்துத் தைத்திருந்தார் எங்கள் ஊரின் ஆஸ்தான தையல்காரரான சீனிதாசம்பிள்ளை. ஆண்பிள்ளைகள் ஆடையில் அம்மாவுக்கு அவ்வளவாகத் தேர்ச்சி இல்லாததால், எங்களுக்கு வெளியில் தைப்பது என்று ஆகியிருந்தது.
தனுக்குட்டி பிறப்பதற்கு முன்பாக அம்மா என்னை வைத்துத்தான் தையல் பழகிக் கொண்டு இருந்தாள். அவள் தனது உயரத்துக்கு மிகுதியான நீளமாக இருக்கிற சேலைகளின் உள்குத்திலிருந்தெல்லாம் துணியைக் கத்தரித்து எனக்குச் சட்டை தைத்துப் போட்டு விடுவாள். அப்போது அவள் அணிந்திருந்த ஊதா நிற சைனா சில்க் சேலையில் கூட எனக்குச் சட்டை இருந்தது. ஆனால் எனக்கு இப்போது அது சின்னதாகப் போய் விட்டதால், தனு அதை அணிந்து கொள்கிறது. சட்டையைப் போட்டுக் கொண்டு,”ஹை… ஹை… அண்ணஞ்சட்டை! அண்ணஞ்சட்டை!” என்றபடி சட்டையைத் தடவித்தடவிக் குதிப்பது பார்க்க வேடிக்கையாக இருக்கும். எங்கள் மூவருக்கும் சட்டை தைப்பதற்கான துணியை அதற்கு முன்தினம்தான் திருச்செந்தூர் சென்று வாங்கி வந்தாள் அம்மா. எங்கள் மாமா திருவிழா பணம் தந்திராவிட்டால் அந்தப் பண்டிகைக்குக் கூட நாங்கள் பழைய ஆடைகளைத்தான் அணிந்திருப்போமோ என்னவோ!
எங்கள் மாமா வெளிநாட்டில் பணி செய்கிறவர். வருடத்துக்கு ஒருமுறை ஊருக்கு வரும்போது செண்ட்டு பாட்டில், சாக்கலேட்டுகள், பேரீச்சம்பழம் என்று என்னவெல்லாமோ கொண்டு வந்து எங்களைப் பார்ப்பார். ஒரு தாய் வயிற்றில் பிறந்திருந்தாலும் தான் ஆண் என்பதாலேயே தனக்கு அத்தனை சொத்துக்களும் கிடைக்க, உடன்பிறந்தவள் வறுமையில் உழல்வதைக் காணும்போதெல்லாம் அவரது மென்மனம் எப்போதும் ஒரு குற்ற உணர்விலேயே இருந்தது.
அவர் வருடத்துக்கு ஒருமுறை வருகிற நேரம் கிறிஸ்துமஸ் நேரமாக இருப்பதால் விழாச் செலவுக்கு என்று கொஞ்சம் பணத்தை ஒரு சுருளாக அம்மாவிடம் தருவார். அம்மா ரொம்பவும் தன்மானம் பார்க்கிறவள். தனது கைகளால் அந்தப் பணத்தை அவள் வாங்கவே மாட்டாள். எங்களையும் வாங்க விட மாட்டாள். அம்மா பணத்தை மறுத்தாலும், எங்கள் மாமாவும் பணத்தைத் தராமல் அங்கிருந்து நகர மாட்டார். ஆனால் உண்மையில் நாங்கள் அந்த பணத்துக்காகத்தான் காத்துக் கொண்டு கிடப்போம். மாமா வந்தால் தான் எங்களது வீட்டில் பண்டிகை என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். அம்மா அவருக்குத் தேநீர் எடுத்துவர உள்ளே செல்லும் தருணத்தில் அரிசிப் பானையினுள்ளோ, தையல் மெசின் நூல் டப்பாவினுள்ளோ, குழந்தை இயேசுவின் சுருபத்தின் முன்பாகவோ பணத்தை எங்களுக்குத் தெரியாமல் வைத்து விடுவார் மாமா. அவர் சென்ற பிறகு நாங்கள் பணத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது ஒரு ருசிகரமான விளையாட்டு. அந்தக் கிறிஸ்துமஸில், சோற்றுப் பானையின் உள்ளேயிருந்து பணச்சுருளை எடுத்தோம்.மாமா வந்து சென்ற மாலையே அம்மா துணிக்கடைக்குச் சென்று எங்கள் பண்டிகை துணிமணிகளை வாங்கி வந்துவிட்டாள்.
சீனிதாசம்பிள்ளைக்கு விழாத்தையல் அதிகமாக வந்து விடும் என்பதால் அப்பாவுக்கும், எனக்குமான இரண்டு சட்டைகளுக்கு ஏற்கனவே அவரிடம் ஜவாப் சொல்லி வைத்திருந்தார் அப்பா. நாங்கள் பூசைக்குச் செல்லுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பாகத்தான் சட்டைகளை கடையிலிருந்து வாங்கிவந்தார் அப்பா. அவசரத் தையல்தான் என்றாலும், நேர்த்தியாகக் கரி இஸ்திரி போடப்பட்டு செய்தித்தாள் உரை சுற்றப்பட்டு இருந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டபோது அதிலிருந்த சூட்டுக் கரியின் வாசனையும், கதகதப்பும் இன்னமும் என் நினைவிலிருக்கிறது.
தலைக்கு பிரார்த்தனை முக்காடிட்ட வண்ணம் வீட்டைப் பூட்டிவிட்டு பூட்டை இழுத்து இழுத்து பரிசோதித்துக் கொண்டிருந்த அம்மாவுக்கு கேரியரில் தனு அமர்ந்திருந்த காட்சியைப் பார்த்துச் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
“ பன்னென்டு அடிக்கத்தான பாலன் சுருபத்த குடில்ல வைப்பாங்க. நம்ம குட்டி சேசுவ இப்பமே தூக்கி வெச்சாச்சு” என்றபடி சிரிப்பில் குலுங்கினாள். கேரியரில் பின்புறமிருந்து கங்காரு போல நான் அணைத்துப் பிடித்திருக்க ஒரு பக்கமாக இரண்டு கால்களையும் போட்டபடி பொம்மை போல அமர்ந்திருந்த தனுக்குட்டியை அப்பாவும் திரும்பிப் பார்த்துச் சிரித்தார். அவரது திருவிழா மழிப்பு கண்டிருந்த தாடை, கோவில் தரையின் மொசைக் போல மின்னியது.
அப்போதெல்லாம் அப்பா எனக்கு மிகவும் உயரமானவராகத் தெரிந்தார். அந்த கிறிஸ்துமஸில் எங்கள் வீட்டைச் சுற்றி நட்சத்திரங்கள் மின்னின. வீட்டின் எதிரில் இருந்த எங்களது சிறிய மளிகைக் கடையில் கூட்டம் நான்கைந்து வரிசையில் அலைமோதியது. அப்பா அடிக்கடி வங்கிக்குச் சென்று வரும் அம்மாவின் மூங்கில் டிசைன் கொண்ட தங்க வளையலை மீட்டுக் கொடுத்திருந்தார். அம்மா ஏலச் சீட்டை முறித்து திருவிழா சாமான்கள் வாங்கிப் போட்டிருந்தாள். வீட்டில் எல்லாப் பாத்திரங்களிலும் கனம் இருந்தது. நாங்கள் பசிக்காவிட்டாலும் போகும்போதும் வரும்போதும் ஏதாவது பட்சணத்தை வாயில் போட்டு அரைத்துக் கொண்டே இருந்தோம்.
வீட்டின் தலைச்சனாகிய நான் உணவு உண்ணக்கூட வீட்டுக்கு வராமல் குடும்பத்துக்காக உழைக்கிற அப்பாவுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று ஆலாய்ப்பறந்தேன். என்னை மளிகைக் கடைக்குள் அனுப்புவதில் அவர் அவ்வளவாய் முனைப்பு காட்டவில்லை. இந்த மிளகாய், மல்லி வாசனை தன்னோடு போகட்டுமென்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், நான் எப்போதும் மளிகைக் கடையில் தராசு பிடிப்பதான கனவுகள் வரப்பெற்றேன். பாடவேளைகளில் நோட்டுப் புத்தகங்களில் தாள்களைக் கிழித்து பொட்டலம் செய்து கொண்டிருப்பேன். ஒருமுறை நான் கணக்கு பரீட்சையில் குறைந்த மதிப்பெண் பெற்ற போது ஜோசப் வாத்தியார் ,”இவன்லாம் அவங்கப்பா கடையில பொட்டலம் மடிக்கத்தாம்ல லாயக்கு!” என்று சொல்ல மொத்த வகுப்பறையும் என்னைப் பார்த்துச் சிரித்த சிரிப்பில் கூசியவன், இடைவேளை மணி ஒலிக்க வீட்டில் இருந்தேன். அம்மாவும் அப்பாவும் மதிய நேரத்து அரைத்தூக்கத்தில் இருந்தனர். அப்பா எப்போதும் போல தனக்கான நார்க்கட்டிலில் படுத்துக் கொள்ளாமல், எங்களது பழம்பாயில் அம்மாவுடன் படுத்துக் கொண்டிருந்தார் என்பதை அவ்வளவு ஆவலாதியிலும் நான் கவனிக்கத் தவறவில்லை. மதிய உறக்கம் கலைந்த கோபத்தில், தனது மகனைப் பகடி செய்த ஜோசப் வாத்தியாரை ஒரு வழி செய்து விட்டார் அப்பா. வாத்தியார் பள்ளி முடிந்து வீடு செல்கையில், எங்கிருந்தோ தனது ஹெர்குலஸ் சைக்கிளில் பாய்ந்து சென்று இடைமறித்த அப்பாவுக்கும், ஜோசப் வாத்தியாருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பா தனது சட்டையை உயர்த்தி இடுப்பில் கட்டிக் கொண்டு வந்திருந்த திருக்கை வாலை காண்பிக்கவும் வாத்தியாருக்கு சப்தநாடியும் ஒடுங்கிப் போயிற்று. அதன் பின்னிருந்து நான் பள்ளி சென்ற இறுதிநாள் வரைக்கும் ஜோசப் வாத்தியார் என்னிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசவில்லை. நான் கூட்டல் பெருக்கல் கூட அறியும் வகையற்றுப் போனது இப்படித்தான்.
அரைப் பரீட்சை முடியும் தறுவாயில், ஊரில் திருவிழா கொடி ஏறுவதற்கு முன்பாகவே எப்போதும் தனுவின் கால்களில் கொலுசுகளை மாட்டி விட்டு விடுவாள் அம்மா .கொலுசு தான் அவளுக்குத் திருவிழா சந்தோஷம்… தனுவின் தோழிகள் சிம்மீஸுக்கு மாறிவிட்டபிறகும், அப்பாவின் வேட்டித்துணியில் அம்மா தைத்துக் கொடுக்கும் பெட்டிக்கோட்டைத் தான் தனு அணிந்து கொண்டிருந்தது.. ஒருநாள் கடையில் நவீன மோஸ்தரில் சிம்மீசைப் பார்த்து விட்டு வந்த அம்மா தனது தையல் மெசினில் கழுத்தைச் சுற்றி நெளி நெளியாக லேஸ் வைத்து பெட்டிக்கோட்டை தைத்துக் கொடுத்தாள். தனுக்குட்டி அதைப் போட்டுக் கொண்டு தெருவெல்லாம் கொலுசு சத்தத்தை வாரியிறைத்தபடி காலை உதைத்து உதைத்து நடந்து கொண்டிருந்தாள்.
இந்தப் பண்டிகைக்கு எங்களுக்குப் பழைய ஆடைகள் தான் என்று ஏற்கனவே சொல்லி விட்டிருந்தாள் அம்மா. அவளும்தான் என்ன செய்வாள்… தனுக்குட்டியின் ஒரு கால் கொலுசு தொலைந்து விட்டிருந்தது. அதைத் தொலைத்த அன்று வீட்டுக்கு வரவே எங்களுக்குப் பயமாக இருந்தது. பள்ளியின் எதிரில் இருக்கும் கொடிமரத்தின் அருகில் தான் இடைவேளையில் நாங்கள் விளையாடுவோம் என்பதால், அங்கு கொலுசு விழுந்திருக்க வாய்ப்பு அதிகம் என்பதாக எனக்குப் பட்டது. அங்குச் சென்று தனுவும் நானும் தேட ஆரம்பித்தோம். மணலைச் சிறு மேடாகக் குவிப்பது அதன் மீது சிலுவை அடையாளம் வரைவது பின் நான்கு பக்கங்களிலுமிருந்து மணலில் தேடிக்கொண்டே வருவது என்று மைதானம் முழுதும் வெளிச்சம் இருக்கும் வரையிலும் சலித்துப் பார்த்தும் கொலுசு கிடைக்கவில்லை. கொலுசு தொலைந்ததை அம்மாவிடம் எப்படிச் சொல்லவென்று தயங்கித்தயங்கி வீடு வந்த போது, எங்கள் வாழ்வில் முதல்முறையாக அப்பா அழுது கொண்டிருப்பதைக் கண்டோம். அவரது ஹெர்குலஸ் சைக்கிளை வாங்கிய கடனுக்காக ஒருவர் எடுத்துச் சென்றது பிறகு தெரியவந்தது.
அப்பாவின் துயரத்துக்கு முன் தனுவின் கொலுசு தொலைந்தது அம்மாவுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், கொலுசுச் சத்தம் இல்லாததாலும், புதுத்துணி எடுக்காததாலும் இந்தத் திருவிழா மெல்ல நகர்வது போல எங்களுக்குத் தோன்றியது.
அப்பா சமீப நாள்களில் மிகுந்த கவலையுடன் இருக்கிறார். இம்முறை வங்கிக்குச் சென்ற, அம்மாவின் மூங்கில் டிசைன் வளையல் திரும்பி வரவே இல்லை. கூடுதலாக, ஏற்கனவே வங்கியில் அடமானத்தில் இருந்த அம்மாவின் அன்னம் வைத்த பெண்டன்ட் செயினும் மூழ்கிப்போனது. ஓரிருமுறை தான் நான் அதை நெருக்கத்தில் பார்த்திருக்கிறேன். அம்மா அதைப் போட்டுக் கொண்டாள் என்றால் கழுத்து நிறைந்தது போல இருக்கும். ஒற்றை தாமரைப் பூவும், அதன் மீது கழுத்தை வளைத்து முகத்தைப் பதித்திருக்கும் அன்னமும் என்று அந்த பெண்டன்ட் அம்மாவுக்கு அத்தனை பாந்தமாயிருக்கும்.
கூடத்தின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் அம்மா அப்பாவின் கருப்பு வெள்ளை கல்யாணப் புகைப்படத்தில் அம்மா இந்த பெண்டன்ட்டை அணிந்து கொண்டிருப்பாள். அதைத்தவிர, அந்தப் படத்தில் அவள் அணிந்திருந்த வேறு நகைகளை நேரில் பார்த்ததாக எனக்கு நினைவிலில்லை. அப்பா கவனமாய் கத்தரித்த மீசையும் ,கோட் சூட்டும் சட்டையில் சொருகிய பூவுமாக இருப்பார். அம்மாவின் தலையில் அணிந்திருந்த மணப்பெண்களுக்கான பூமுடி நெற்று அவளை வேற்று கிரகவாசி போலக் காட்டிற்று. கழுத்தில் கசமுசாவென்று கிடக்கும் நகைகளுக்கு மத்தியில் இந்த பெண்டன்ட் மட்டும் எங்களுக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது. ஆரம்ப நாள்களில் அதன் அடிப்பகுதியில் முத்துக்கள் கரைகட்டியது போல வரிசையாகத் தொங்கிக் கொண்டிருக்கும். தனு நடக்க ஆரம்பித்த பிறகு, அம்மா ஒருநாள் அந்த முத்துக்கள் ஓயாமல் உதிர்ந்து விழுகிறது என்று அங்கலாய்த்த வண்ணம் கணபதி ஆசாரியிடம் பெண்டன்ட்டைக் கொடுத்து முத்துக்களை மட்டும் எடுத்து உருக்கச் சொல்லி விட்டாள். ஆனால், ஆசாரியிடம் கொடுக்கும்போது எல்லா முத்துக்களும் அதன் வரிசையில் சரியாகத்தான் இருந்தன.
“சரியாத்தானம்மா இருக்கு எல்லாம். மொத்தம் இருபது முத்து. ஒண்ணு கூட விழுகலையே. எதுக்கு உருக்க போறீங்க?” என்று அங்கலாய்த்தேன் நான்.
அம்மா என் தலையைச் செல்லமாகக் குட்டியபடி, ”அதுக்குள்ள எண்ணிட்டியா… எந்தங்கம் பெரிய கணக்கு வாத்தியாரா வருவான் பாருங்க” என்று அப்பாவைப் பார்த்துச் சிரித்தாள்.
கணபதி ஆசாரி நகையைத் திருப்பித் தரும்போது பெண்டன்ட் செயினில் வரிசை கட்டி நின்ற முத்துக்கள் இல்லாததைக் காணவும் எனக்கு ரொம்பவும் வருத்தமாகப் போய் விட்டது.ஆனால் ரோஸ் கலர் காகிதத்தில் சுற்றியிருந்த இரு சிறிய தங்கக் கம்மல்களை காண்பித்து,
“அம்மாவோட பென்டன்ட் குட்டி போட்டிருக்கு பாத்தியா?”, என்று சிரித்தபடி அம்மா கம்மல்களை தங்கைக்குப் போட்டுவிட்டபோது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த பெண்டன்ட் இனிமேல் வீட்டுக்கு வரவே வராது என்பதை அப்பா தெரிவித்த போது, அம்மா ஒரு கசந்த புன்னகையுடன் அதனைக் கடந்து போவதை நான் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அன்று அம்மாவும் அப்பாவும் எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தது போல எனக்குத் தோன்றியது. அம்மாவின் நகைகளையெல்லாம் விற்றது போகவும் அப்பா நிறைய இடங்களில் வட்டிக்கு வாங்கியிருந்திருக்கிறார். அட்டமெல்லாம் காலியாகக் கிடந்ததால் கடையைச் சில மாதங்களாகத் திறக்கவே இல்லை. திறந்து வைத்திருந்தாலும் வருபவர்களுக்கு இல்லை என்ற பதிலைச் சொல்லாமல் இருக்க அப்பா நிறையவே கஷ்டப்பட்டார்.
“மிளகு இருக்கா கொழுந்தனாரே?”
“நாளைக்கு வந்துரும் மைனி!”
“நாளைக்கு ஒம்ம கடைக்கி மிளகு வார வரைக்கும் நா ரசம் வைக்காம காத்திருக்கணுமோ?”
“கொழுந்தனுக்காண்டி காத்திருக்கலாம் தப்பில்ல மைனி!” சிரித்துச் சமாளிப்பார் அப்பா.
இனியும் தன்னால் சமாளிக்க முடியாதென்று தோன்றியதும் அப்பா கடை திறப்பதை அடியோடு நிறுத்தி விட்டார்.
வீட்டுக்கு அப்பாவைத் தேடி வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வறண்ட குளத்தில் ஒளிய இடமற்ற மீனைப்போல அப்பா நெளிந்து கொண்டிருந்தார். அதன்பிறகு அவர் வீட்டினுள் இருந்து கொண்டே அவரைத் தேடி வருகிறவர்களுக்கு, அவர் இல்லை என்று சொல்லும்படி அம்மாவை வற்புறுத்தினார். தேடி வருகிறவர்களுக்குத் தாக்கல் சொல்லிச்சொல்லி அம்மா ஓய்ந்து போனாள். அவளது காதோரம் நரைக்கத் தொடங்கியிருந்தது. அம்மா சலிப்பு மிக்கவளாக மாறியிருந்தாள்.
அன்று ஒரு பழைய சிறுவர் மலரை எழுத்துக் கூட்டி வாசித்துக் கொண்டிருந்தேன். தெருவில் கந்துவட்டிக்காரரின் புல்லட் சத்தம் கேட்டதும் அப்பா சரேலென்று வீட்டினுள் ஓடி மறைந்து கொண்டார். அம்மா அறங்கூட்டின் கதவின் பின் பதுங்கி நின்றாள். வாழ்வில் நான் முதன்முறையாகத் தனிமையில் விடப்பட்டதை உணர்ந்தேன். அந்தச் சிறிய அறை திடீரென்று உயரமானது போலத் தோன்றியது. எனக்குப் பயத்தில் நாக்கு உலர்ந்தது. நான் கண்களை மூடிக் கொண்டேன்.
கெத்சமனியில் இயேசு தனது பாடுகளைக் குறித்து முன்னரே அறிந்தவராய் மிகுந்த அச்சத்துடன் இரத்த வியர்வை வியர்த்தபடி பிதாவிடம் மன்றாடினார்,
“ தந்தையே! கூடுமானால் இந்த துன்பக்கலம் என்னை விட்டு அகன்று அப்பாலே போகட்டும்!”. என் வாய் என்னையும் அறியாமல் முணுமுணுத்தது.
நான் என் அம்மா மறைந்து நின்ற திசையைப் பார்த்தேன். அவள் சைகையில் கைகளை விரித்து என்னிடம் எதையோ தெரிவித்து விட முனைந்தாள். ஆனால்,அது எனக்குப் புரியவில்லை. என் மேலெல்லாம் வியர்வை ஆறாக வழிந்தது. பாதங்களின் அடியில் தரை வழுக்கியது. நீயும் இங்கிருந்து எங்காவது ஓடிச் சென்று மறைந்து விடு என்று என் மூளை எனக்குக் கட்டளையிட்டது. ஆனால், என் கால்கள் நகர மறுத்தன. நிலையை விடவும் உயரமாக இருந்த தலையை வளைத்து, அந்த மனிதர் வீட்டினுள் நுழைந்தபோது நான் அங்கேயே தான் நின்று கொண்டிருந்தேன்.
“உங்கொப்பன் எங்கடா?”
என் நாக்கு அன்னத்தில் ஒட்டிக்கொண்டது.
“அப்பா…அப்பா… வீட்ல இல்ல…”
“கண்டாரோழி… காச வாங்கி தின்னுட்டு கட்டமண்ணா போனபய ஏச்சங்காட்டிகிட்டு திரியுதான். ஒம்மாள எங்க?”
“கோயிலுக்கு போயிருக்காங்க…”
“பொய் சொல்லாதல… ஒனக்க அம்மையும் அப்பனும் இப்பம் இங்க வராம நா இந்த எடத்த விட்டு போ மாட்டம் பாத்துக்க…”
அவர் அமர்ந்து விட்டார். இப்போது தான் அம்மனிதரை நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். இல்லை…இதற்கு முன்னும் பார்த்திருக்கிறேன். ஆனால், இவ்வளவு நெருக்கத்தில் இதுதான் முதல்முறை. மனிதர்கள் மிதமிஞ்சிய கோபத்தில் இருக்கிற போது அவர்களுக்கு வேறு சாயல் வந்து விடுகிறது. சினத்தில் அவரது மூக்கு விடைத்து உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. இயலாமையில் பல்லை நர நரவென்று கடித்தார். நான் இதுவரை அறியாத பல வசைச் சொற்கள் அவரது வாயிலிருந்து வெளி வந்தன.
அவமானத்தில் என் கண்கள் தேவாலயத்தின் தீர்த்தத் தொட்டி போல நிறைந்து விட்டன. பயத்தில் தலையிலிருந்து கால் வரை வியர்த்துச் சொட்டியிருந்தது. நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று எனக்குப் புலப்படவில்லை. அப்பாவும்,அம்மாவும் இந்தச் சூழலிலிருந்து என்னைக் காக்க வரவே மாட்டார்களா… என்னை இந்த மனிதரிடம் இப்படியே தண்டனைத் தீர்ப்புக்கு ஒப்படைத்து விட்டு பிலாத்துவைப் போல கையைக் கழுவி விட்ட அவர்களின் கையாலாகாத்தனத்தை நினைத்து நான் மனம் கலங்கினேன்.
அந்த மனிதர் எங்கள் சிறிய வீட்டைக் கண்களால் அளந்தார். அவர் இழந்திருக்கும் பணத்திற்கு ஈடாக, எடுத்துச் செல்ல ஏதாவது இருக்கிறதா என்று தேடினார். பசி கொண்ட ஒரு பருந்தின் பார்வை அது! கடைசியாக,அவரது பார்வை நிலைகொண்ட இடத்தைப் பார்த்து எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. என் அம்மாவின் பிரியத்துக்குரிய சிங்கர் மெஷின். அந்த மனிதர் மெஷினை நோக்கி நகர்ந்தார். அறங்கூட்டின் உள்ளிலிருந்து ஒரு அமுங்கிய கேவல் என் காதுகளை அடைந்தது. அம்மனிதர் தையல் இயந்திரத்தை அதன் சட்டத்திலிருந்து பிரிக்க முடியுமா என்று பார்த்தார். அப்போது ஏற்பட்ட அதிர்வில், மெஷினின் ஒரு காலின் கீழ் தரையில் இருந்த சிறு பள்ளத்தில் அம்மா கொடுத்திருந்த சக்கை நகர்ந்து மெஷின் நடுங்கியது.
நான் எவ்வளவோ முயற்சி செய்தும், என் அனுமதியின்றி எனது கால்சட்டை நனைவதை என்னால் உணர முடிந்தது .நான் பயத்தில் சிறுநீர் கழித்திருந்தேன். என் புறம் திரும்பிப் பார்த்த அம்மனிதர் என் பரிதாப நிலையைக் கண்டார். தனக்குள் எதையோ முணுமுணுத்த வண்ணமாய், அதன்பின் எதுவும் பேசாமல் கிளம்பிச் சென்று விட்டார்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, நான் மிகவும் சோர்ந்திருந்தேன் .என் கைகளில் வெல்லம், தேங்காய்ப் பூ சேர்த்து அம்மா பிசைந்து தந்த சீனிக்கிழங்கு உருண்டை இருந்தது. அம்மா எனக்கு உடை மாற்றி விட்டிருந்தாள். கூடம் சுத்தமாகக் கழுவப்பட்டு, சர்வோதயப் பத்தியின் மணம் நிறைந்திருந்தது.
கோயிலிலிருந்து வீட்டுக்கு வந்த தனுக்குட்டி அம்மாவிடம் முரண்டு பிடித்தாள்.
“நா இனிமே இந்த வெல்வெட் மிடிய போட மாட்டேன்.”
“ எதுக்காம்?”
“இவ்வளவு குட்டையா பாவாட போட்டுகிட்டு கோயிலுக்கு வரக் கூடாதுன்னு சிஸ்டர் சொன்னாங்கமா”, என்றது.
“ க்கும்! அம்மம்மாருக்கு என்ன… புள்ளையா குட்டியா? இஷ்டம் போல சொல்லிட்டு போயிருவாங்க. இவளோ வெலை குடுத்து வாங்குன வெல்வெட் துணி. சுருக்கு தைக்கக்குள்ள எத்தன ஊசி ஒடஞ்சு போச்சு தெரியுமா… நீ கோயில் கொடிமரம் கணக்கா வளருவன்னு எனக்குத் தெரியுமா என்ன. பண்டிகைக்கு போடலாம்னு பத்திரமா எடுத்து வெச்சிருந்தா இப்டி சின்னதா போகும்னு யாரு கண்டா?”
“யம்மா…”
“என்னடி”
“எனக்கு பாவாட வேணும்”
“பாவாடையா?”
“பட்டுப் பாவாடம்மா. நான்சி கிறிஸ்மஸ் பூசைக்கு போட்டிருந்த மாதிரி!”
“அவளுக்கென்ன.. கப்பக்காரன் மக. பட்டும் பவிசுமா மினுக்குவா!”
“அதெல்லாம் தெரியாது. எனக்கு இந்த கிறிஸ்மசுக்கு பட்டுப் பாவாடைதான் வேணும்.”
“இப்பம் பாவாடைக்கு என்ன அவசரம். வீட்டுல கொமரு இருக்குன்னு ஊருக்கு கொட்டடிச்சி சொல்லணுமோ!பாவாடைலாம் ஒண்ணும் வேணாம்…”
தனு அழ ஆரம்பித்தது. அடுக்களைக்குள் சென்று அவித்த சீனிக்கிழங்குகளில் ஒன்றையும், லோட்டாவில் கருப்பட்டி காப்பியையும் எடுத்து வந்து தனுவிடம் நீட்டினாள் அம்மா.
“ச்சீ…கடுங்காப்பி. எனக்கு வேண்டாம். பால் காப்பி தான் வேணும்”
எனக்கு தனுவைப் பார்க்கப் பாவமாய் இருந்தது.அம்மாவிடம் அவளது லோட்டாவை வாங்கிக்கொண்டு புறவாசல் பக்கம் சென்றேன். ஆட்டாங்கல்லில் கட்டிப் போட்டிருந்த ஜம்போ என்னைப் பார்த்ததும் எழுந்து நின்றது. வீட்டில் இருந்த ஆடுகளை ஒவ்வொன்றாக விற்றது போக ஜம்போ மட்டுமே எஞ்சி நிற்கிறது. கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் இன்னும் கட்டித் தீராததால் ஜம்போவின் வலது காதில் கிடந்த பித்தளைக் கம்மல் இன்னும் கழற்றப்படவில்லை. இல்லையென்றால் அதையும் விற்றிருப்பார்கள். ஜம்போவின் குட்டிகளை அம்மா சமீபத்தில் விற்றிருந்தாலும்,அதற்குச் சுரப்பு இன்னும் நிற்கவில்லை. நான் ஜம்போவின் காம்பிலிருந்து லோட்டாவில் சிறிது பால் பீய்ச்சினேன். ஆள்காட்டிவிரலால் அதைக் கலக்கி வந்து அழுது கொண்டு கிடந்த தனுவிடம் நீட்டினேன். தனு எட்டிப் பார்த்துவிட்டு,
“ச்சீ…ச்சீ… ஆட்டுப்பால்! எனக்கு வேண்டாம்!”, என்றபடி டம்ளரைத் தட்டி விட்டுப் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது.
“பொட்டச்சிக்கு எவ்வளவு ஏத்தம் பாத்தியா?”என்றபடி, தனுவின் முதுகில் ஓங்கி ஒரு அறை வைத்தாள் அம்மா. தனு வீறிட்டு அழுதாள். தனு டம்ளரைத் தட்டி விட்டதை விட, இது ஆட்டுப்பால் என்று கண்டுகொள்ளும் அளவுக்கு அவள் வளர்ந்து விட்டது எனக்கு வியப்பாக இருந்தது. இப்போதெல்லாம் தனுவை அவ்வளவு சீக்கிரம் ஏமாற்ற முடியவில்லை.
“நா இங்க பொறந்ததே தப்பு. இங்க எதுமே இல்ல… என்னைய ஏன்மா பெத்தீங்க?நான் மாமா வீட்ல பொறந்துருக்கணும்.”
இளம்பிள்ளை அதைப்போய் அடித்துவிட்டோம் என்று குற்ற உணர்ச்சியில் மருகிக்கொண்டிருந்த அம்மாவுக்கு, அழுகையின் உச்சியில் தனுவிடமிருந்து வந்த இந்த வார்த்தைகளில் தீச்சுட்டது போலானது.
“ஆமாம். இப்பம் மட்டுமென்ன? போயேண்டி.. உன் மாமன் வீட்டுக்கு!”
தனுவின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து படிவாசல் தாண்டி வெளியில் நிறுத்தி கதவை அடைத்தாள்.
தனுவின் அழுகைச் சத்தம் என்னால் சகிக்க முடியாததாக இருந்தது.
மாமாவைச் சொன்னதும் அம்மாவின் கோபத்துக்கான காரணம் எனக்குத் தெரிந்தது தான். இம்முறை மாமா வந்து சென்ற பிறகு, எங்கள் வழமை போலவே, நாங்கள் எல்லா இடங்களிலும் பணச்சுருளைத் தேடி ஏமாந்தோம். கடைசிவரையில், பணம் கிடைக்கவில்லை. மாமா வீடுகட்டிக் கொண்டிருப்பதால் பணமுடையில் இருந்திருக்கலாம் என்று அப்பா சொல்ல எங்களைத் தேற்றிக் கொண்டோம். அம்மாவுக்கு எவ்வளவு ஏமாற்றம் இருந்திருக்கும் என்பதை இரவு ஜெபத்தின் போது பலமுறை அவள் குரல் உடைந்து போனதை வைத்து நான் அறிந்து கொண்டேன்.
நான் நீல நிற இருளுக்குள் இருக்கிறேன். தொட்டால் ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு இருள்…அந்த அறையின் சுவர்கள் எனக்கென்று அளவெடுத்துச் செய்தது போல இருக்கின்றன. என் கைகளால் அந்தச் சுவரைத் தடவிப் பார்க்கிறேன்.சுவர் கதகதத்துக் குழைகிறது… சுவரில் காது பதிக்கிறேன். என் பிரியத்துக்குரிய அன்னையின் குரல் எங்கிருந்தோ மங்கலாகக் கேட்கிறது. புலன்களை இன்னும் ஒருமைப் படுத்துகிறேன். அது அவளின் விசும்பாலொலி! அப்பாவின் குரல் அவளைச் சமாதானப் படுத்துகிறது.
“சரி…விடும்மா! அழாத. எல்லாம் சரியாயிடும்…”
“இல்லைங்க… நான் தனுவ அடிச்சிருக்கக் கூடாது. பிஞ்சு முதுகுல அஞ்சு வெரலும் பதிஞ்சு இருக்கே… அய்யோ… நான் ராட்சசி!”
நீல இருளுக்குள் ஒளி வட்டம் பாய்கிறது. கண்களைச் சிரமப்பட்டுத் திறக்கிறேன். டார்ச் லைட்டின் சிறிய வட்ட ஒளி தனுவின் சின்ன முதுகில் தளிர் இலை போலக் கன்றிச் சிவந்திருந்த அம்மாவின் கைத்தடத்தை எனக்குக் காண்பிக்கிறது.
“தனு பாவம்!”
நான் புரண்டு படுக்கிறேன். ஒளி மறைந்து மறுபடியும் நீல இருள் என்னை விழுங்குகிறது… நான் இருளின் அடியாழத்துக்குள் விழுந்து கொண்டே இருக்கிறேன்.
“ஒங்கப்பன் எங்கடா!”
முடிவற்ற ஆழத்துக்குள் திட்டுமெனக் கேட்ட அந்தக் குரல் இருளை இரண்டாக வெட்டிப் பிளக்கிறது.
“அய்யே! கழுத வயசாச்சி… இதென்ன புதுப்பழக்கம். டேய் ஜேம்ஸ்ஸு… எழுந்திருடா.. ஏங்க! இன்னிக்கும் மூத்திரம் பெஞ்சுட்டான் பாருங்க.”
அம்மா ஈரப்பாயை ஒரு ஓரமாக நகர்த்திவிட்டு கோணியொன்றை உதறி விரித்தாள். அவளது புடவையொன்றைக் கொடியிலிருந்து எடுத்து உதறி குழந்தைக்குச் செய்வது போல எனக்கு விரிப்பு தயாரித்துக் கொண்டிருக்கிறாள்.
“அம்மா… அம்மா…”
“என்னடா!”
“உங்ககிட்ட மஞ்ச கலர்ல ஒரு சேலை இருக்குல்லா!”
“ மஞ்ச கலர்லயா?”
“ஆமம்மா… பட்டுச் சேல. மாம்பழ மஞ்ச கலர்ல. கரையில மாங்கா டிசைன் போட்டு இருக்குமே!”
“ஆமா!”
“அதுல தனுக்குட்டிக்கு ஒரு பாவாடை தச்சுத் தாரீங்களாம்மா?”
அம்மா ஒருநிமிடம் அமைதியானாள். ஒரு நீளமான பெருமூச்சு அவளிடமிருந்து வெளிவந்தது..
“ தனு பாவம் அம்மா!தச்சு குடுங்கம்மா”
“தைக்கலாம்… தைக்கலாம்… நீ வந்து படு மொதல்ல! ரா ஜெபத்த ஒழுங்கா சொன்னியா இல்லையா நீ… மூத்திரக் குண்டிப் பயலே!”
அம்மாவிடம் இருப்பதிலேயே நல்ல புடவை அதுதான் என்பதை அவதானித்திருந்தேன். ஒவ்வொரு புதுவருடத்தின்போதும் அவள் அதைத் தான் அணிவாள். தவிரவும், ரொம்பவும் உருத்தான சொந்தங்களின் விசேஷங்களுக்கு அவள் அதை நேர்த்தியுடன் அணிவதைப் பார்த்திருக்கிறேன். அம்மாவிடம் அதைக் கேட்பது எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும், தனுவின் துயரம் என்னால் செரிக்க முடியாததாக இருக்கிறது. எங்களை மூழ்கடிக்கும் இந்த வியாகுலத்தில் யாராவது ஒருவரின் துயரையாவது தீர்க்க முடிந்ததைக் குறித்து எனக்குச் சந்தோஷம்தான்.
நான் அம்மாவை ஒட்டிப்படுத்துக்கொண்டேன். அம்மாவின் தைல வாசனையினூடே மறுபடியும் உறங்கிப்போனேன்.
மறுநாள் கண்விழிக்கையில் தையல்மெசின் மீது பட்டுப் பாவாடை, சட்டை மடித்து வைக்கப்பட்டிருந்தது. அம்மா உறங்கிக் கொண்டு இருந்தாள். இரவெல்லாம் கண்விழித்துத் தைத்திருப்பாள் போல… கனிந்த மாம்பழ வண்ணத்தில் பெரிய பெரிய பெட்டிச் சுருக்குகளுடன் பாவாடை ஜொலித்தது. “ஹை… ஹை… பாவாடை… பட்டுப்பாவாடை!” என்று தனு அதனைத் தன் மேல் வைத்துக் கொண்டு சுழன்றாடிய போது, அதன் கரைகளில் சிறிய சிறிய தங்க மாங்காய்கள் ஓட்டுப்புரையினூடே கசிந்து வரும் வெயிலின் சிறிய சிறிய வட்டங்களாய் கண்ணைப் பறிக்கின்றன. இந்தச் சரிகை மாங்காய்களை நான் இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறேன். அனிச்சையாய் திரும்பி சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் அம்மா அப்பாவின் திருமணப் புகைப்படத்தைப் பார்த்தேன். கருப்பு வெள்ளையில் இருந்த அந்தப் படத்தில் அம்மாவின் புடவையின் கரைகளில் சின்னச் சின்ன சரிகை மாங்காய்கள்…
அது அம்மாவின் கல்யாணப்பட்டு!
எழுதியவர்
- தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தை சார்ந்தவர் ப்ரிம்யா கிராஸ்வின். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். இவரின் கவிதைகள், சிறுகதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி இருக்கிறது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “தப்பரும்பு” வாசகசாலை பதிப்பகத்தின் வெளியீடாக 2022-ஆம் ஆண்டு வெளியானது.
கதையா இது என் வாழ்வின் ஓரிரு பக்கமும் இதிலுள்ளது.மனம் கனத்து போனது.
அதுவும் வசதியான உறவுகளுக்கு இடையே நாம் படும் பாடு.எத்தனை வருடங்கள் கழித்தும் மறக்கமுடியாத காயங்கள்.
அருமையான கதை. வாழ்த்துக்கள்