18 July 2024

ல்ப்ஸ் மலைத்தொடரின் நெடிதுயர்ந்த சிகரங்கள் ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லும் பள்ளத்தாக்கில் ஓடும் பனியாற்றின் அடிவாரத்தில் இருக்கும் மரத்தாலான மற்ற விடுதிகளைப்போலவே இருந்த ஷ்வாரென்பாக் விடுதி ஜெம்மி கணவாயைக் கடக்கும் பயணிகளுக்கு இளைப்பாறுதலுக்கான இடமாக இருந்தது.

வருடத்தின் ஆறு மாதங்கள் மட்டுமே விடுதி இயங்கும். அந்தச் சமயத்தில் ஜான் ஹவுஸரின் குடும்பம் அங்கே தங்கியிருக்கும். பனிவிழத் தொடங்கி லோச்சுக்குச் செல்லும் பாதை மூடத் தொடங்கியதும் தந்தையும் அவரின் மூன்று மகன்களும் அங்கே இருந்து கிளம்பிவிடுவார்கள். அடுத்து வரும் மாதங்களில் விடுதி வயதில் மூத்த வழிகாட்டியான காஸ்பார்ட் ஹரி, இளையவரான உல்ரிஹ் குன்சே ஆகிய இருவரின் பொறுப்பில் இருக்கும். சாம் என்றழைக்கப்பட்ட மலை நாய் அவர்களுக்குத் துணையாக இருக்கும்.

வேனில் காலம் தொடங்கும்வரை அந்தப் பனிச் சிறையில் அவர்கள் இருவரும் நாயும் மட்டுமே இருப்பார்கள். கண்ணுக்கெட்டும் தூரம் வரை பால்ம்ஹார்னின் பிரம்மாண்டமான வெள்ளைக் குன்றுகளையும் ஒளியில் மின்னும் முகடுகளையும் தவிர வேறெதுவும் இருக்காது. இடைவிடாது பொழியும் பனி பாதையை அடைத்து அவர்களை வீட்டுக்குள்ளேயே கட்டி வைத்திருக்கும்; விடுதியைச் சுற்றிலும் ஒரு சுவர் போல எழுந்து அந்தச் சின்னஞ்சிறிய வசிப்பிடத்தை விழுங்கப் பார்க்கும்; கூரையில் குவிந்து ஜன்னல்களில் படர்ந்து வாசல் கதவை மறைத்துவிடும்.

பனிக்காலம் நெருங்கிவிட்டதால் இனிமேல் மலைப்பாதையில் கீழே இறங்குவது ஆபத்தான முயற்சியாகிவிடும். எனவே அன்றைக்கு லோச்சுக்குத் திரும்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தது ஹவுசர் குடும்பம். முதலில் மூன்று மகன்களும் மூன்று கோவேறுகழுதைகளில் சுமையை ஏற்றிக்கொண்டு கிளம்பினார்கள். அடுத்து அவர்களின் தாய் ஜீன் ஹவுசரும் தங்கை லூயிஸும் நான்காவது கழுதையின்மீது ஏறிக்கொண்டார்கள். பின்னாடியே அவர்களின் தந்தையுடன் விடுதியின் பொறுப்பாளர்களும் பயணப்பட்டனர். மலையின் இறக்கம்வரை அவர்கள் இருவரும் துணை வருவார்கள். முதலில், விடுதிக்கு முன்னால் பரந்து விரிந்திருந்த பாறைக் குவியலின் அடிப்பகுதியில் அமைந்திருந்த உறைந்துகிடந்த ஏரியைச் சுற்றிக் கடந்தார்கள். பிறகு இருபுறமும் பனிபடர்ந்த முகடுகள் உயர்ந்துநின்ற பள்ளத்தாக்கின் வழியே நடந்தார்கள்.

வெண்ணிறத்தில் மின்னிய அந்த உறைந்த பாலைவனத்தினுள் ஊடுருவிய சூரிய ஒளியின் கீற்று கண்ணைக் கூசச்செய்யும் குளிர்ந்த தீப்பிழம்பாக ஒளிர்ந்தது. கடல்போல பரந்திருந்த அந்த மலைப்பரப்பில் எந்த உயிரினமும் வசிக்கவில்லை. அங்கே சூழ்ந்திருந்த அளவிடமுடியாத தனிமையில் ஒரு அசைவைக்கூட பார்க்கமுடியவில்லை. அங்கே நிலவிய ஆழ்ந்த அமைதியைக் குலைக்கும் வகையில் சின்ன ஓசைகூட எழவில்லை.

உல்ரிஹ் குன்சே சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞன், நல்ல உயரமாகவும் நீளமான கால்களையும் கொண்டிருந்தான். ஹவுஸரையும் காஸ்பார்டையும் விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னே சென்று இரண்டு பெண்களும் பயணம் செய்துகொண்டு இருந்த கோவேறுகழுதையை எட்டிப்பிடிக்க முயன்றான். அவன் நெருங்கி வருவதைப் பார்த்த அந்த இளம்பெண் சோகமான கண்களால் அவனைத் தன்னருகில் வரச் சொல்வதுபோல இருந்தது. பனிப் பிரதேசத்தில் நீண்டகாலம் வசித்து வந்ததால் அதன் நிறத்தைப் பெற்றுவிட்டதுபோல இருந்தது அவளின் வெளிர்நிறத் தலைமுடியும் பால்வண்ணக் கன்னமும். அவள் சவாரி செய்யும் விலங்கை எட்டிப் பிடித்ததும் அதன் வாரைப் பிடித்து வேகத்தைக் கட்டுப்படுத்தினான் உல்ரிஹ். ஹவுஸரின் மனைவி அவனிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார். பனிக்காலத்தில் அவன் செய்துமுடிக்கவேண்டிய வேலைகளை ஒன்றுவிடாமல் பட்டியலிட்டு விளக்கத் துவங்கினார். பனி மலைகளுக்கு நடுவில் நின்ற ஷ்வாரென்பாக் விடுதியில் ஏற்கனவே பதினான்கு வருடங்கள் வசித்திருக்கிறார் முதியவர் ஹரி, ஆனால் இளைஞனுக்கு அதுதான் முதல் தடவை.

அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாலும் உல்ரிஹ் குன்சேக்கு எதுவுமே புரியவில்லை. வைத்தகண் வாங்காமல் அந்த இளம்பெண்ணையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவ்வப்போது, “சரி, திருமதி ஹவுஸர்,” என்று பதில் சொன்னாலும் அவனுடைய நினைப்பெல்லாம் வேறு எங்கோ இருந்தது. ஆனால், அமைதியான முகபாவனையில் எந்த மாற்றமும் இல்லை.

பள்ளத்தாக்கின் எல்லைவரை பரந்திருந்த உறைந்த மேல்பரப்பையுடைய டோப் ஏரியை அடைந்தார்கள். வலதுபுறத்தில் லொம்மேர்ன் உறைபனியாற்றின் வண்டலுக்கு அருகில் கரும்பாறையாலான கூர்முகடுகளைக் கொண்ட டோபென்ஹார்ன் மலை தெரிந்தது. அதற்குப் பின்னால் உயர்ந்திருந்தது வைல்ட்ஸ்டருபேல் மலை. ஜெம்மி கணவாயை நெருங்கினார்கள்; அங்கிருந்துதான் லோச்சுக்குப் போகும் பாதை தொடங்கியது. திடீரென ஆல்ப்ஸ் வலைஸின் தொடுவானம் கண்ணுக்குத் தெரிந்தது. நடுவே இருந்த ஆழ்ந்த அகண்ட ரோன் பள்ளத்தாக்கு கணவாயையும் ஆல்ப்ஸையும் பிரித்தது.

சிறிது தொலைவில் வெண்மையான, தட்டையான, ஏறுமாறான, கூரிய எனப் பலவிதத் தோற்றம்கொண்ட மலைமுகடுகள் சூரிய ஒளியில் மின்னின: இரண்டு சிகரங்களைக் கொண்ட மிஸ்காபெல், பெரிய கூட்டமாக இருந்த வெஸ்ஹார்ன், கனத்த தோற்றம்கொண்ட ப்ரூனேக்ஹார்ன், தன்மீது ஏற முயலும் மனிதர்களை அழித்துவிடும் உயரத்தைக் கொண்டிருந்த செர்வின் மலை, பயங்கரமான பசப்புக்காரியைப் போன்ற டென்ட் ப்ளாஞ்செ.

அவர்களுக்குக் கீழே பெரிய குழிக்குள், ஆழமான பள்ளத்தின் அடியில் இருந்தது லோச் கிராமம். அதிலிருந்த வீடுகள் பெரிய பிளவினுள் வீசி எறியப்பட்ட மணற்துகள்போல இருந்தன. அந்தப் பிளவின் ஒருபுறத்தை ஜெம்மி கணவாய் மூடியிருந்தது. மறுபுறத்தில் ரோன் பள்ளத்தாக்கு விரிந்திருந்தது.

அதுவரையிலும் வளைந்தும் நெளிந்தும் மடிந்தும் சென்ற பாதையின் முடிவை அடைந்ததும் கோவேறுகழுதை நின்றுவிட்டது. அந்த இடத்தில் இருந்து பாதை மலையின் பக்கவாட்டில் பயணித்து அடிவாரத்தில் இருந்த கண்ணுக்குத் தெரியாத குக்கிராமத்தை சென்று சேர்ந்தது வியப்பை ஏற்படுத்தியது. பெண்கள் இருவரும் பனிக்குள் குதித்தனர், மற்ற இரு ஆண்களும் அவர்களோடு வந்து சேர்ந்துகொண்டனர். “நல்லது நண்பர்களே, நாங்க கிளம்புறோம். அடுத்த வருஷம் வரையிலும் நல்லபடியா இருங்க,” என்றார் திரு. ஹவுஸர். “அடுத்த வருஷம் பார்க்கலாம்,” என்று விடைகொடுத்தார் முதியவர் ஹரி.

ஆண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டனர். திருமதி ஹவுஸர் முதியவருக்குத் தன் கன்னத்தைக் காட்டினாள், அவள் மகளும் அதையே செய்தாள்.

உல்ரிஹ் குன்சேயின் முறை வந்ததும், “மேலே இருக்கிறவங்களை மறந்துவிடாதே,” என்று லூயிஸின் காதில் கிசுகிசுத்தான். “மாட்டேன்,” என்று மெல்லிய குரலில் அவள் சொன்னது அவளுக்கேகூட கேட்டிருக்காது என்று நினைத்துக்கொண்டான். “போயிட்டு வர்றோம், உடம்பைப் பார்த்துக்கோங்க,” என்று மீண்டும் சொன்னார் ஜான் ஹவுஸர். இரண்டு பெண்களையும் தாண்டிச் சென்று கீழே இறங்க ஆரமபித்தார். பாதை திரும்பியதும் மூன்று பேரும் பார்வையில் இருந்து மறைந்தார்கள். இரண்டு ஆண்களும் ஷ்வாரென்பாக் விடுதிக்குத் திரும்பினார்கள்.

எதுவும் பேசாமல் ஒன்றாக நடைபோட்டார்கள். இனி அடுத்த நான்கைந்து மாதத்துக்கு அவர்கள் இருவரும் மட்டும்தான். சென்ற ஆண்டின் பனிக்காலத்தைப்பற்றிச் சொல்லத் தொடங்கினார் காஸ்பார்ட் ஹரி. அவருடன் அப்போது தங்கியிருந்தவரின் பெயர் மைக்கேல் கானோல். அவருக்கு வயதாகிவிட்டதால் இத்தனை உயரத்தில் பல மாதம் தனியாக இருக்கும்போது திடீரென்று ஏதாவது விபத்து நடந்துவிட்டால் தாக்குப்பிடிக்க முடியாது. எப்போதும் எதுவும் செய்யாமல் சோம்பலாக இருக்கமாட்டார்கள்; முதலில் இருந்தே மனதைத் தனிமைக்குத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். அதைச் செய்துவிட்டால் பொழுதைப்போக்க ஏராளமான விளையாட்டுகளும் வேலையும் வேறு பல விஷயங்களும் இருந்தன.

நிலத்தைப் பார்த்து நடந்தபடியே அவர் சொல்வதைக் கேட்டான் உல்ரிஹ் குன்சே. அவன் எண்ணமெல்லாம் கீழே இருக்கும் கிராமத்துக்குப் பயணம் செய்துகொண்டு இருப்பவர்களின்மீது இருந்தது. விரைவில் விடுதியை அடைந்தார்கள். அது இருப்பது கண்ணுக்குத் தெரியவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும். மிகப் பெரிய அலைபோன்ற பனிக்கு நடுவே சின்ன கறுப்புப் புள்ளியைப் போலத்தான் இருந்தது. கதவைத் திறந்ததும் சுருள்சுருளான சடைமயிர்கொண்ட சாம் அவர்களைச் சுற்றி குதிபோட்டுக் கும்மாளமிட்டது.

“வா, பையா, வீட்டுல பெண்கள் யாருமில்லை, இரவுச் சாப்பாட்டை நாமதான் சமைக்கணும். கொஞ்சம் இந்த உருளைக்கிழங்கோட தோலை உரிச்சுத் தா,” என்றார் காஸ்பார்ட். மரக் குந்துமணையில் உட்கார்ந்து சூப் தயாரிக்க ஆரம்பித்தார்கள் இருவரும்.

மறுநாள் காலை நீண்டுகொண்டே போவதுபோலத் தோன்றியது உல்ரிஹ் குன்சேவுக்கு. முதியவர் ஹரி புகைப்பிடித்தபடியும் கணப்பில் காறி உமிழ்ந்தபடியும் பொழுதைக் கழித்தார். அவன் ஜன்னலின் வழியே வீட்டுக்கு எதிர்ப்புறத்தில் இருந்த பனிபடர்ந்த மலையைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

மதிய நேரத்தில் வெளியே போய் முந்தைய நாள் நடந்துசென்ற பாதையைப் பார்த்தான். பெண்களைச் சுமந்துசென்ற கோவேறுகழுதையின் தடத்தைத் தேடினான். ஜெம்மி கணவாயை அடைந்ததும் நெடுஞ்சாண்கிடையாகப் படுத்துக்கொண்டு லோச்சைப் பார்த்தான்.

நாலாபக்கத்திலும் அடர்ந்த பைன் மரக் காடுகள் அரண்போல அமைந்திருந்ததால் பாறைக் குழிக்குள் இருந்த அந்தக் கிராமம் இன்னும் பனியில் புதைந்திருக்கவில்லை. மேலே இருந்து பார்க்கும்போது அங்கிருந்த தாழ்வான வீடுகள் புல்வெளியில் பதிக்கப்பட்ட நடைபாதைக் கற்களைப்போலத் தோன்றின. அந்தச் சாம்பல் வண்ண வீடுகளுள் ஒன்றில்தான் ஹவுஸரின் சின்ன மகள் இப்போது இருக்கிறாள். எதில்? ஒவ்வொரு வீட்டையும் தனித்தனியாக அடையாளம்காணமுடியாத தூரத்தில் இருந்தான் உல்ரிஹ் குன்சே. கீழே இறங்கிச் செல்லமுடியும்போதே ஒரு முறை அங்கே போய்வரவேண்டும் என்று ஆவல்கொண்டான்.

ஆனால் வைல்ட்ஸ்டருபேல்லின் உயர்ந்த முகட்டின் பின்னால் சூரியன் மறைந்துவிட்டதால் விடுதிக்குத் திரும்பிச் சென்றான். ஹரி புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். இவன் திரும்பிவந்ததும் சீட்டு விளையாடக் கூப்பிட்டார். இருவரும் மேசையின் எதிரெதிர் பக்கத்தில் உட்கார்ந்தனர். ப்ரிஸ்க் என்ற எளிய ஆட்டத்தை வெகுநேரத்துக்கு ஆடினார்கள். பிறகு இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு உறங்கப்போனார்கள்.

அடுத்தடுத்த நாட்கள் முதல் நாளைப்போலவே வெளிச்சத்தோடும் குளிர்ச்சியாகவும் இருந்தன. பனிப்பொழிவு எதுவும் இல்லை. முதியவர் காஸ்பார்ட் ஹரி மதிய வேளைகளில் பனிமலைக்கு மேலே பறந்த கழுகுகளையும் மற்ற அரியவகைப் பறவைகளையும் வேடிக்கை பார்த்தபடி பொழுதைக் கழித்தார். உல்ரிஹ் குன்சே தினமும் தவறாமல் ஜெம்மி கணவாய்க்குப் போய் அங்கிருந்து கிராமத்தைப் பார்த்தான். பிறகு, சீட்டோ தாயக்கட்டமோ சதுரங்கமோ ஆடுவார்கள். ஆட்டத்தில் சுவாரசியத்தைக் கூட்டுவதற்காகக் கொஞ்சமாகப் பணம் வைத்தும் ஆடினார்கள்.

ஒரு நாள் காலை, முதலில் எழுந்துகொண்ட காஸ்பார்ட் ஹரி தன்னுடைய தோழனை அழைத்தார். அடர்ந்த பளீரென்று மின்னும் மேகமொன்று நகர்ந்தபடியே வெள்ளை நிறத் திவலைகளை ஓசையின்றித் தூவிக்கொண்டு இருந்தது. அவர்கள் மெல்ல கனத்த நுரைப் போர்வையொன்றில் புதைந்துகொண்டு இருந்தனர். நான்கு பகலும் இரவும் இது தொடர்ந்தது. பன்னிரண்டு மணிநேர உறைபனிப் பொழிவு பனித்துகளை கருங்கல்லைப்போல உறையச் செய்திருந்தது. அதை வெட்டி அகற்றுவதோடு கதவையும் ஜன்னலையும் வெளியே சென்றுவரும் பாதையையும் அவ்வப்போது சுத்தம் செய்யவேண்டி இருந்தது.

சிறைவைக்கப்பட்ட கைதிகளைப்போல வெளியே போகமுடியாமல் உள்ளேயே அடைந்துகிடந்தனர். தினசரி வேலைகளை இருவருக்குமிடையே பிரித்துக்கொண்டு அவற்றைத் தவறாமல் செய்தனர். வீட்டைத் துப்புரவாக வைத்திருப்பது கழுவுவது போன்ற சுத்தம் தொடர்பான வேலைகளை உல்ரிஹ் குன்சே செய்தான். கூடவே விறகுவெட்டும் பணியையும் செய்தான். காஸ்பார்ட் ஹரி சமைப்பதையும் கணப்பு அணையாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் எடுத்துக்கொண்டார். இந்த அலுப்பூட்டும் தினசரி வேலைகளுக்கு நடுவே சீட்டு அல்லது தாயக்கட்டம் போன்ற விளையாட்டுக்களை ஆடினார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் சண்டைபோட்டுக் கொள்ளாமல் அமைதியாகவும் சாந்தமாகவும் இருந்தார்கள். ஒருபோதும் ஒருவர்மீது மற்றவர் பொறுமையிழந்தோ கோபப்பட்டோ எரிச்சல்பட்டோ கடிந்தோ பேசவில்லை. ஏனெனில் மலைமீது கழிக்கும் பனிக்கால நாட்களுக்காகவென நிறைய பொறுமையை சேகரித்து வைத்துத் தயாராகியிருந்தார்கள்.

சில நேரம் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு மலையாடுகளைத் தேடிப் போவார் ஹரி. எப்போதாவது ஒன்றைக் கொல்லவும் செய்வார். அதுபோன்ற நாட்களில் ஷ்வாரென்பாக் விடுதியில் விருந்து களைகட்டும். புத்தம்புது இறைச்சியைச் சுவைத்து சாப்பிட்டார்கள். எப்போதும்போலவே ஒரு நாள் காலையில் கிளம்பிச் சென்றார் ஹரி. வெளியில் இருந்த வெப்பமானி உறைபனியின் குளிர் பதினெட்டு பாகைகள் இருப்பதைக் காட்டியது என்றாலும் கதிரவன் இன்னும் உதித்திருக்கவில்லை. அந்த நேரத்தில் வைல்ட்ஸ்டருபேல்லுக்குச் செல்லும் பாதையில் வரும் விலங்குகளை எளிதில் வேட்டையாடலாம் என்று திட்டமிட்டார். தனியாக இருந்ததால் பத்துமணிவரை படுக்கையைவிட்டு எழுந்து கொள்ளவில்லை உல்ரிஹ் குன்சே. அவன் சரியான தூங்குமூஞ்சி என்றாலும் விடிகாலையில் எழுந்துவிடும் பழக்கம்கொண்ட முதிய வழிகாட்டி உடன் இருக்கும்போது அவர் முன்னே அதைக் காட்டிக்கொள்ள ஒருபோதும் விரும்பியதில்லை.

சாமோடு சேர்ந்து ஆறஅமர காலை உணவைச் சாப்பிட்டான். அதுவும் நெருப்புக்கு முன் படுத்துத் தூங்கியபடி பகலையும் இரவையும் கழித்தது. தனிமை அவனுடைய உற்சாகத்தைக் குறைத்ததோடு அச்சமூட்டவும் செய்தது. பழக்கப்பட்டுவிட்ட ஒரு விஷயத்தில் ஏற்படும் அளவுக்கு அதிகமான நாட்டத்தினால் தினசரி சீட்டாட்டத்தை ஆட வேண்டும் என ஏங்கினான். பிறகு, நாலு மணிக்குத் திரும்பி வருவதாகச் சொல்லியிருந்த தோழரைச் சந்திப்பதற்காக வெளியே கிளம்பிப்போனான்.

பனிப்பொழிவு அந்த ஆழமான பள்ளத்தாக்கு முழுவதையும் சமன்படுத்தி இருந்தது. பாறைப் பிளவுகள் எல்லாம் பனியால் நிறைந்திருந்தன. இரண்டு ஏரிகளும் பாறைகளும் இருந்த இடமே தெரியவில்லை. உயர்ந்த மலை முகடுகளுக்கு இடையே பரந்துவிரிந்த வெண்மையான பளபளக்கும் உறைந்த பரப்பைத் தவிர வேறு எதுவுமே இல்லை. மூன்று வாரங்களாகக் கிராமத்தைப் பார்ப்பதற்காக செங்குத்தான பாறையின் முனைக்குச் செல்லவில்லை உல்ரிஹ்.  வைல்ட்ஸ்டருபேல்லுக்கு இட்டுச்செல்லும் மலைச்சரிவுக்குப் போகுமுன்னர் அங்கே ஒரு முறை சென்றுவர விரும்பினான். இப்போது லோச்சும் பனியால் மூடப்பட்டு இருந்தது. வெள்ளைப் போர்வை போர்த்தியதுபோல இருந்ததால் வீடுகள் தெளிவாகத் தெரியவில்லை.

அங்கிருந்து வலப்பக்கம் திரும்பி லோயெம்மர்ன் பனியாற்றை அடைந்தான். மலையேறுபவரைப்போல நீளமான எட்டுவைத்து கூர்முனையைக் கொண்ட இரும்புத் தடியைப் பாறைபோல இறுகியிருந்த பனியில் ஊன்றி நடந்தான். பரந்துவிரிந்த வெண்ணிற வெளியில் தூரத்தில் எங்காவது சின்ன கறுப்புப் புள்ளி அசைவதுபோலத் தெரிகிறதா என்று கவனத்துடன் பார்த்தான்.

பனியாற்றின் எல்லையை அடைந்ததும் ஒரு நொடி நின்று காஸ்பார்ட் அந்தப் பாதையில்தான் போயிருப்பாரா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். பிறகு பனியாற்றின் வண்டலை ஒட்டிப்போகும் பாதையில் சின்னச்சின்ன அடியெடுத்து வைத்து சிரமத்துடன் நடந்தான். பொழுது சாய்ந்துகொண்டு இருந்தது. இப்போது பனி இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது. அதன் பளிங்குபோன்ற மேற்பரப்பின்மீது வறண்ட உறைந்த பனிக்காற்று விட்டுவிட்டு வீசியது. காதைத் துளைக்கும் அதிர்வூட்டும் நீண்ட ஒலியொன்றை எழுப்பினான் உல்ரிஹ். இறப்புக்குப்பின் நிலவும் அமைதியைப் பிரதிபலிக்கும் சூழலில் உறங்கிக்கொண்டிருந்த மலைகளைத் துளைத்தபடி பயணித்தது அவன் குரல். கடல் அலைகளைக் கடந்துசெல்லும் பறவையின் குரலைப்போல அசைவற்ற பனியாற்றின் நுரை ததும்பும் அலைகளைக் கடந்துசென்றது அவன் குரல். பிறகு மெல்லத் தேய்ந்து மறைந்தது. பதில் குரல் எதுவும் கேட்கவில்லை.

மீண்டும் நடக்க ஆரம்பித்தான். வானத்தின் பிரதிபலிப்பால் ஊதா நிறத்தில் ஒளிர்ந்த மலைச் சிகரங்களுக்குப் பின்னால் மறைந்தான் கதிரவன். பள்ளத்தாக்கின் ஆழமான பகுதி சாம்பல் நிறமாக மாறிக்கொண்டு இருந்தது. திடீரென அவனைப் பயம் கவ்வியது. அந்த அமைதியும் குளிரும் தனிமையும் பனியின் இறப்பைப் போர்த்திக்கொண்ட மலைகளும் அவனை ஆட்கொண்டு இரத்தத்தை உறைய வைத்து கைகாலை மரத்துப்போகச் செய்து ஜடமாக மாற்றுவதுபோல உணர்ந்தான். உடனே தன் வசிப்பிடத்தை நோக்கித் தப்பியோட ஆரம்பித்தான். தான் அங்கு இல்லாத நேரத்தில் முதியவர் திரும்பி வந்திருப்பார் என நம்பினான்.

அவர் வேறு வழியில் சென்றிருப்பார். இப்போது சந்தேகமில்லாமல் எரிந்து கொண்டிருக்கும் கணப்பின் முன்னால் அமர்ந்திருப்பார். அவர் காலடியில் இறந்த மலையாட்டின் உடல் கிடத்தப்பட்டு இருக்கும். சீக்கிரமே விடுதியை அடைந்தான். ஆனால் அதில் இருந்து புகை எதுவும் எழவில்லை. உல்ரிஹ் வேகமாகச் சென்று கதவைத் திறந்தான். அவனை வரவேற்க ஓடி வந்தது சாம். ஆனால் காஸ்பார்ட் ஹரி இன்னும் திரும்பி வந்திருக்கவில்லை. பயத்தில் வேகமாகப் பின்னோக்கித் திரும்பினான் உல்ரிஹ். விடுதியின் ஏதாவது ஒரு மூலையில் காஸ்பார்ட் ஒளிந்திப்பார் என்று நினைத்தான். ஒவ்வொரு நொடியும் முதியவர் விடுதிக்குள் நுழைவார் என்று எதிர்ப்பார்த்தபடியே நெருப்பைப் பற்றவைத்து சூப்பைச் சமைத்தான். கொஞ்ச நேரத்துக்கு ஒருமுறை வெளியே போய் அவர் வருகிறாரா என்று பார்த்தான். இப்போது இருட்டிவிட்டது. மலைப்பிரதேசங்களில் கவிழும் சோகையான இரவுக்கு மலைகளுக்குப் பின்னால் மறைந்துகொண்டிருந்த நிலவின் மெல்லிய மஞ்சள் கீற்று ஒளியூட்டியது.

பிறகு உள்ளே போய் உட்கார்ந்து ஒவ்வொரு விபத்தாக எண்ணிப் பார்த்தபடி கைகாலுக்கு வெப்பமூட்டினான். காஸ்பார்ட் காலை உடைத்துக்கொண்டு விட்டாரோ, பாறைப் பிளவுக்குள் விழுந்துவிட்டாரோ, நடக்கும்போது காலை மாற்றிவைத்துச் சுளுக்கிக்கொண்டு விட்டாரோ. அல்லது பனியில் விழுந்து குளிரில் விறைத்துப்போய் மனம்பதைத்து உதவிகேட்டு, தன்னால் இயன்றவரை, சத்தமாகக் குரல்கொடுத்துக்கொண்டு இருக்கிறாரோ. ஆனால் எங்கே இருக்கிறார்? இந்த மலை பரந்து விரிந்திருந்தது, கரடுமுரடாக இருந்தது, அதுவும் வருடத்தின் இந்தச் சமயத்தில் சில இடங்களில் பயங்கரமாகவும் இருந்தது. இப்படியொரு இடத்தில் ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் பத்து அல்லது இருபது வழிகாட்டிகள் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு நாலாபுறமும் சென்று தேடவேண்டும். மறுநாள் காலை ஒரு மணிக்குள் காஸ்பார்ட் வீடு திரும்பவில்லை என்றால் சாமோடு அவரைத் தேடக் கிளம்பிச் செல்வது என்று முடிவு செய்தான் உல்ரிஹ் குன்சே. அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தான்.

இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை ஒரு பையில் எடுத்துவைத்தான். மலையேற்றத்துக்கான இரும்புக் காலணியை எடுத்துவைத்தான். மெல்லிய நீண்ட வலுவான கயிறொன்றை இடுப்பில் கட்டிக்கொண்டான். பனியை வெட்டிப் படி அமைக்கத் தேவையான இரும்புப் பூண்போட்ட தடியும் கோடரியும் இருக்கிறதா என்று சரிபார்த்தான். பிறகு, காத்திருக்க ஆரம்பித்தான்.

கணப்பு எரிந்துகொண்டு இருந்தது. அதன் முன்னால் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்தது நாய். மரக் கூட்டுக்குள் இருந்த கடிகாரம் இதயத் துடிப்புபோல ஓசை எழுப்பியபடி மெல்ல நகர்ந்தது. தூரத்தில் கேட்கும் எந்த ஓசைக்கும் காதைத் தீட்டி வைத்துக்கொண்டு காத்திருந்தான். குளிர்ந்த காற்று கூரைமீதும் சுவர்கள்மீதும் மோதும்போது சிலிர்த்துக்கொண்டான். கடிகாரம் பன்னிரண்டு மணி அடித்தபோது அவன் உடல் நடுங்கியது. வெளியே கிளம்பிப்போவதற்கு முன்னால் கொஞ்சம் சூடான காஃபியைக் குடிக்கலாம் என்று பயத்தில் சிலிர்த்தபடியே தண்ணீரைச் சுடவைத்தான். கடிகாரம் ஒரு மணி அடித்ததும் எழுந்து நின்று சாமை எழுப்பினான். பிறகு கதவைத் திறந்துகொண்டு வைல்ட்ஸ்டருபேல் இருக்கும் திசையை நோக்கி நடந்தான்.

இரும்புக் காலணியின் உதவியோடு ஐந்து மணி நேரம் மலையேறினான். பனியை வெட்டி பாதை அமைத்தபடி முன்னேறிச் சென்றுகொண்டே இருந்தான். அதிகச் செங்குத்தான பகுதிகளில் அவ்வப்போது நாயைக் கயிற்றில் கட்டி மேலே தூக்கவேண்டி இருந்தது. மலையாட்டைத் தேடி காஸ்பார்ட் அடிக்கடி வரும் சிகரத்தை அடைந்தபோது ஆறு மணி ஆகியிருந்தது. பகல்நேரத்தின் வெளிச்சம் மறையும்வரை அங்கேயே காத்திருந்தான்.

தலைக்குமேலே வானத்தின் நிறம் மங்கிக்கொண்டு இருந்தது. திடீரென எங்கிருந்தோ வந்த அதிசயமான ஒளி கடல்போல நூறு காததூரம்வரை பரந்திருந்த மங்கலான மலைச்சிகரங்களுக்கு வெளிச்சமூட்டியது. என்னவென்று புலப்படாத பிரகாசமொன்று பனியில் இருந்து எழுந்து பரந்த வெளியை நிறைத்தது என்றுகூடச் சொல்லலாம். கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தில் இருந்த மிக உயர்ந்த சிகரங்கள் மென்மையான இளஞ்சிவப்பு வண்ணத்தைக் கொண்டன. பிரம்மாண்டமான பெர்னிய ஆல்ப்ஸின் பின்னால் கதிரவன் சிவப்பு நிறத்தில் தோன்றினான்.

உல்ரிஹ் குன்சே மறுபடியும் கிளம்பினான். ஒரு வேட்டைக்காரனைப்போல கீழே குனிந்து தடங்களைப் பார்த்தபடி நாயிடம் குரல்கொடுத்தான், “தேடு, பையா, போய் அவரைத் தேடு!”

இப்போது மலையுச்சியில் இருந்து கீழே இறங்கிக்கொண்டு இருந்தான். பள்ளமான பகுதிகளில் நின்று கவனமாகத் தேடினான். அவ்வப்போது நீண்ட தூரத்துக்கு ஒலிப்பதுபோல குரல்கொடுத்துக்கொண்டே இருந்தான். அரவமற்ற பரந்த வெளியில் பயணம்செய்து மங்கி மறைந்துபோனது அவன் குரல். நிலத்தில் காதை வைத்துக் கவனமாகக் கேட்டான். திடீரென ஏதோ குரல் கேட்பதுபோல இருந்தது. சத்தம்போட்டபடி அந்தத் திசையில் ஓடினான். ஆனால் அதற்குப் பிறகு எதுவும் கேட்கவில்லை என்றதும் சோர்வும் விரக்தியும் மேலிட அப்படியே உட்கார்ந்துவிட்டான். நண்பகலானதும் காலையுணவை சாமுடன் சேர்ந்து சாப்பிட்டான், அதுவும் அவனைப் போலவே சோர்வுற்று இருந்தது. பிறகு மீண்டும் தேட ஆரம்பித்தான்.

மாலையான பிறகும் நடந்துகொண்டே இருந்தான். அந்த மலைகளின்மீது முப்பது மைலுக்கு மேல் நடந்திருப்பான். வீட்டிலிருந்து நெடுந்தொலைவு வந்துவிட்டதால் இப்போது திரும்பிச் செல்ல முடியாது. கூடவே இனிமேல் நடக்கமுடியாது, மிகவும் சோர்வுற்று இருந்தான். பனியிலேயே குழி ஒன்றைத் தோண்டி அதில் நாயுடன் குறுகிப் படுத்து போர்வையைப் போர்த்திக்கொண்டான். மனிதனும் நாயும் ஒருவருக்கொருவர் வெப்பமூட்டிக்கொண்டு அருகருகே படுத்துக்கிடந்தார்கள். ஆனால் குளிர் எலும்பைத் துளைத்து உறையச் செய்தது. உல்ரிஹ் தூங்கவேயில்லை, பலவிதமான காட்சிகள் அவன் மனக்கண்ணில் தோன்றித் திகிலூட்டின. குளிரில் அவன் கைகாலெல்லாம் நடுங்கியது.

பொழுது விடியும்போது எழுந்துகொண்டான். இரும்புத் துண்டங்களைப் போலக் கால்கள் விறைத்து கனத்துப் போயிருந்தன. மனம் மிகுந்த சோர்வுக்குள்ளாகி இருந்தது. கடுந்துயரத்திலும் பயத்திலும் எப்போது வேண்டுமானாலும் அழுதுவிடுவான்போல இருந்தது. எந்த ஒரு சின்ன ஓசையைக் கேட்டாலும் உணர்ச்சிமேலீட்டால் இதயம் படபடவென்று துடித்ததில் கீழே விழுந்துவிடுவான்போல இருந்தது.

திடீரென இந்தப் பரந்த தனிமையான இடத்தில் குளிரால் இறந்துபோவதுபோலக் கற்பனை செய்துகொண்டான். அப்படிப்பட்ட சாவைப் பற்றிய பயம் அவனுடைய சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி புத்துணர்ச்சியையும் விறுவிறுப்பையும் தந்தது. விடுதிக்குச் செல்வதற்காகக் கீழே இறங்க ஆரம்பித்தான். கீழே விழுந்தும் பின் எழுந்தும் நடந்தவனுக்குப் பின்னால் மூன்று காலில் நொண்டியபடியே வந்தது சாம். ஷ்வாரென்பாக் விடுதியை அடையும்போது பிற்பகல் நான்கு மணியாகி இருந்தது. வீடு வெறுமையாக இருந்தது. தீயை மூட்டி உணவைச் சாப்பிட்டுவிட்டு உறங்கப்போனான். மிகவும் அசந்துபோய் இருந்ததால் எதைப்பற்றியும் யோசிக்கத் தெம்பு இல்லை.

வெகு நேரத்துக்குத் தூங்கிக்கொண்டே இருந்தான். ஆளை அடித்துப்போட்டது போன்ற தூக்கம். திடீரென கேட்ட ஒரு குரல், ஒரு சத்தம், ஒரு பெயர், “உல்ரிஹ்!” அளவிடற்கரிய அசதியில் இருந்த அவனை எழுப்பி உட்கார வைத்தது. கனவு கண்டானா? கலங்கிப் போன மனதில் உதிக்கும் அதிசயமான வேண்டுகோள்களில் ஒன்றா? இல்லை, இன்னமும் அந்தக் குரல் கேட்டது. அவனுடைய உறுதியான விரல்களில் அதிர்வலைகளை எழுப்பிய அந்தக் குரல் காதுக்குள் நுழைந்து உடம்புக்குள் தங்கிவிட்டது. “உல்ரிஹ்!” என்று பெயரைச் சொல்லி அவனை யாரோ அழைத்தது உண்மை. வீட்டுக்கு அருகில் யாரோ இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. கதவைத் திறந்து சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி உரத்த குரலில் கேட்டான், “நீங்களா, காஸ்பார்ட்?” பதிலேதும் இல்லை, ஒரு முணுமுணுப்போ முனகலோ எதுவும் இல்லை. இன்னமும் இருட்டாக இருந்தது, பனி மங்கலாகத் தெரிந்தது.

காற்று வீச ஆரம்பித்தது. பாறைகளையும் வெடிக்கச்செய்யும் சில்லிடும் காற்று திடீர் திடீரெனப் பலமாக வீசியது. எந்த நடமாட்டமும் இல்லாத இத்தனை உயரத்தில் ஒன்றையும் உயிரோடு விட்டுவைக்காத உறையவைக்கும் குளிர்காற்று. பாலைவனத்தின் சுட்டெரிக்கும் காற்றைவிட பயங்கரமானதாகவும் வறட்சிகொண்டதாகவும் இருந்தது. மீண்டும் கத்தினான், “காஸ்பார்ட், காஸ்பார்ட், காஸ்பார்ட்.” பிறகு காத்திருக்க ஆரம்பித்தான். மலையின்மீது அமைதி மட்டுமே தவழ்ந்தது.

பயத்தில் ஒடுங்கிப்போனது உடல். ஒரே ஓட்டமாக விடுதிக்குள் ஓடிப்போய் கதவைச் சாத்தித் தாழ்ப்பாளைப் போட்டான். நடுக்கத்துடன் நாற்காலியில் உட்கார்ந்தான், இறக்கும் தருவாயில் அவனுடைய பெயரைச் சொல்லியபடியேதான் காஸ்பார்ட் உயிரைவிட்டார் என்பது உறுதியாகத் தெரிந்தது.

தான் உயிருடன் இருப்பதும் ரொட்டியைச் சாப்பிடுவதும் எத்தனை தெளிவாகவும் உறுதியாகவும் ஒருவருக்குத் தெரியுமோ அத்தனை உறுதியாகத் தெரிந்தது. முதியவர் காஸ்பார்ட் ஹரி இரண்டு பகல் மூன்று இரவுகளாக இதுவரை யாரும் கால் பதித்திராத ஆழமிகுந்த மலையிடுக்கில் இருக்கும் ஏதோ ஒரு குழியில் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டு இருந்தார். அங்கே பரவியிருக்கும் வெண்ணிறம் பாதாள உலகின் இருட்டைக்காட்டிலும் கொடியது. இரண்டு பகல் மூன்று இரவுகளாக உயிருக்குப் போராடி இறுதியில் கொஞ்சநேரத்துக்கு முன்னால் தன் தோழனைப்பற்றி நினைத்துக்கொண்டே உயிரைவிட்டார். உடம்பில் இருந்து பிரிவதற்கு முன்னால் அவருடைய ஆன்மா உல்ரிஹ் உறங்கிக்கொண்டு இருந்த விடுதிக்கு வந்தது. இறந்தவர்களின் ஆன்மாவுக்கு உயிருடன் இருப்பவர்களை அச்சுறுத்தும் மர்மமான சக்தி உண்டு. அதைப் பயன்படுத்தி அவனைப் பெயர் சொல்லி அழைத்தது. குரலற்ற ஆன்மா உறங்கிக் கொண்டிருந்தவனின் சோர்வுற்ற ஆன்மாவிடம் அழுதது; அவனிடம் விடைபெற்றுக்கொண்டதா கடிந்து பேசியதா அல்லது சரியாகத் தேடாததற்காகச் சாபமிட்டதா.

அது அங்கே இருப்பதை உல்ரிஹ்ஹால் உணரமுடிந்தது, அவனுக்குப் பக்கத்தில், சுவற்றுக்குப் பின்னால், கொஞ்சநேரத்துக்கு முன்னால் அவன் தாழ்ப்பாளிட்ட கதவுக்குப் பின்னால். வெளிச்சம் கசியும் ஜன்னல் ஒன்றின்மீது இரவு நேரத்துப் பறவையின் சிறகு மெல்ல உரசுவதுபோல அங்கே அலைந்தது. ஏற்கனவே திகிலடைந்திருந்தவன் பீதியில் அலறத் தயாராக இருந்தான். அங்கிருந்து ஓட விரும்பினாலும் வெளியே போகப் பயமாக இருந்தது. அப்போது மட்டுமல்ல இனி எப்போதுமே வெளியே போகும் தைரியத்தை இழந்திருந்தான். முதியவரின் உடலைத் தேடிக் கண்டுபிடித்து தேவாலயத்தின் புனிதமான சுடுகாட்டில் புதைக்கும் வரையில் அந்த அருவம் இரவும் பகலும் விடுதியைச் சுற்றிக்கொண்டேதான் இருக்கும்.

ஒளிநிறைந்த சூரியன் வானில் மீண்டும் உதித்ததும் உல்ரிஹ் குன்சேவுக்குச் சிறிது தைரியம் வந்தது. சமைத்துச் சாப்பிட்டுவிட்டு நாய்க்கும் கொஞ்சம் கொடுத்தான். பிறகு நாற்காலியில் அசைவின்றி உட்கார்ந்திருந்தான். பனியில் விழுந்துகிடக்கும் முதியவரைப் பற்றி நினைத்து நினைத்து மனதைச் சித்திரவதை செய்துகொண்டான். இரவின் கருமை மீண்டும் மலைகளைப் போர்த்தியபோது புதிய பயங்கள் தலைதூக்க ஆரம்பித்தன. ஒற்றை மெழுகுவர்த்தியின் சுடரில் அதிக வெளிச்சமில்லாமல் இருந்த சமையலறையில் மேலும் கீழும் நடந்தான். அதன் ஒரு பக்கம் இருந்து எதிர்ப்புறத்துக்குக் காலை எட்டிவைத்து நடந்தான். முந்தைய இரவின் அச்சமூட்டும் அலறல் மீண்டும் வெளியே நிலவும் துயரூட்டும் அமைதியைச் சிதறடிக்குமோ என்று உற்றுக் கேட்டபடியே நடந்தான்.

இந்த உலகில் தான் மட்டுமே எந்த மனிதனைவிடவும் அதிகத் தனிமையிலும் சோகத்திலும் இருப்பதுபோல உணர்ந்தான். மக்கள் வசிக்கும் நிலத்தில் இருந்து ஐந்தாயிரம் அடிக்கு மேலே இந்தப் பரந்த பனிப் பாலைவனத்தில் இருக்கிறான். உணர்ச்சியோடு உயிர்ப்போடு ஓசையோடு இருக்கும் மனிதர்களின் வசிப்பிடத்தில் இருந்து மிக உயரே சில்லிடும் வானுக்குக் கீழே தனிமையில் இருந்தான். அங்கிருந்து எங்கேயாவது ஓட வேண்டுமென்ற பித்துப்பிடித்த ஆசையொன்று அவனைத் தூண்டியது. பாறையின் முனைக்குப் போய் கீழே குதித்து லோச்சுக்குப் போய்விட வேண்டுமென்று நினைத்தான். ஆனால் கதவைத் திறப்பதற்குத் தைரியம் வரவில்லை. இறந்த மனிதர் வெளியே நின்றுகொண்டு அவன் போகும் பாதையை மறிப்பார் என்பது உறுதியாகத் தெரியும்.

நடுராத்திரி ஆகும்போது நடந்து நடந்து அயர்ந்து போயிருந்தான். துயரமும் பயமும் அவனை நசித்திருந்தன. கடைசியில் படுக்கையும் பேய் உலவும் இடமாக மாறியிருக்கும் என்ற பயத்தில் நாற்காலியில் அமர்ந்தபடியே உறங்கிப்போனான். ஆனால் முந்தைய மாலையில் கேட்ட அதே கொடூரமான அலறல் அவன் காதை மீண்டும் துளைத்தது. அந்தக் கிரீச்சிடும் சத்தத்தைக் கேட்ட உல்ரிஹ் பேய் தன் அருகில் வந்துவிட்டதென்று பயந்துபோய் அதைத் தள்ளிவிடுவதற்காகக் கைகளை வேகமாக ஆட்டும்போது நாற்காலியில் இருந்து பின்பக்கமாகக் கீழே விழுந்தான்.

சத்தம்கேட்டு கண்விழித்த சாம் பயத்தில் ஊளையிடத் துவங்கியது. வீடுமுழுவதும் நடந்து ஆபத்து எங்கேயிருக்கிறது என்று மோப்பம் பிடித்தது. கதவருகே சென்றதும் அதன் அடியில் ஆழ்ந்து மோப்பம் பிடித்ததும் அதன் ரோமம் சிலிர்த்து நின்றது, வாலை விறைப்பாக்கிக் கொண்டான், கோபத்துடன் உறும ஆரம்பித்தது. பயத்தில் குதித்து எழுந்து ஒரு காலைத் தூக்கி நாற்காலியில் வைத்துக்கொண்டு கத்தினான்: ‘வேண்டாம், உள்ள வராதே, உள்ள வராதே வந்தா கொன்னுடுவேன்.” இந்த மிரட்டலால் உணர்ச்சிவசப்பட்ட நாய் எஜமானனின் வார்த்தையை மதிக்காத கண்ணுக்குத் தெரியாத எதிரியைப் பார்த்துக் கோபத்துடன் குரைக்க ஆரம்பித்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அமைதி அடைந்து மீண்டும் வந்து நெருப்புக்குப் பக்கத்தில் நீட்டிப் படுத்துக்கொண்டது. ஆனால் நிலைகொள்ளாமல் அவ்வப்போது தலையைத் தூக்கிப் பற்களைக் காட்டி உறுமியது.

திரும்பவும் சுயநினைவு பெற்ற உல்ரிஹ் பயத்தில் வலுவிழந்ததுபோல உணர்ந்தான். அலமாரியில் இருந்து பிராந்தி பாட்டிலை எடுத்து மளமளவென்று ஒரே விழுங்கில் குடித்து முடித்தான். அவன் எண்ணம் தெளிவில்லாமல் இருந்தது. தைரியம் திரும்பியது. காய்ச்சல் கண்டவனைப்போல ஒருவிதமான வெப்பம் நரம்பில் ஏறியது.

மறுநாள் பெரிதாக எதுவும் சாப்பிடாமல் மதுவை மட்டுமே அருந்தினான். இப்படியே பல நாட்கள் வெறியேறிய குடிகாரனைப்போல இருந்தான். காஸ்பார்ட் ஹரியின் நினைவு வந்ததும் மீண்டும் குடிக்க ஆரம்பித்தான். போதை தலைக்கேறி மயக்கமுற்று கீழே விழும்வரை குடித்தான். பிறகு அப்படியே போதையில் அடித்துப்போட்டவனைப்போல நிலத்தில் முகம் படிய படுத்துக்கொண்டு குறட்டைவிட்டபடியே தூங்கிப்போனான். பைத்தியமும் எரிச்சலுமூட்டும் மதுவின் போதை தெளியும் முன்னரே அந்தக் குரல் மீண்டும் கேட்டது, “உல்ரிஹ்!” மூளையைத் தோட்டா துளைப்பதுபோல உசுப்பியது அந்தக் குரல். தடுமாறியபடி எழுந்து உட்கார்ந்து கீழே விழுந்துவிடாமல் இருப்பதற்காகக் கைகளை நீட்டி உதவிக்கு சாமைக் கூப்பிட்டான். எஜமானனைப் போலவே நாயும் பைத்தியமாகிக் கொண்டு இருந்தது. கதவருகே ஓடி நகத்தால் பிராண்டி கூரிய பற்களால் கடித்தது. பயத்தையும் வெறியையும் எண்ணங்களையும் நினைவுகளையும் உறக்கத்தில் ஆழ்த்தி அமைதிப்படுத்துவதற்காகத் தலையைப் பின்னால் சாய்த்துக்கொண்டு பச்சைத் தண்ணீரைப்போலப் பிராந்தியைக் கோப்பை கோப்பையாகக் குடித்தான் உல்ரிஹ்.

மூன்று வாரத்தில் இருந்த எல்லா மதுவையும் குடித்துத் தீர்த்தான். இடையறாத போதையில் இருந்தபோது மட்டுப்பட்ட கிலி, போதை தெளிந்ததும் இன்னும் தீவிரமாகத் தலைதூக்கியது, அவனால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு. அவன் ஏற்கனவே முடிவு செய்துவிட்ட கருத்து கடந்த ஒரு மாதமாக ஏற்பட்டிருந்த குடிப்பழக்கம் மற்றும் தனிமையின் காரணமாகத் தீவிரமாகியிருந்தது. இப்போது இன்னும் அதிகமாகி, கூர்மையான ஆயுதத்தைப்போலத் துளைத்தெடுத்தது. கூண்டில் அடைபட்ட காட்டு விலங்கைப்போல வீட்டுக்குள் அலைந்தான். அவ்வப்போது கதவில் காதை வைத்து அந்த இன்னொன்று இன்னும் அங்கேதான் இருக்கிறதா என்றும் அவனை ஏமாற்றிவிட்டு சுவற்றின் வழியே உள்ளே வரப் பார்க்கிறதா என்றும் உற்றுக்கேட்டுக்கொண்டே இருந்தான். அசதியில் தூங்கிவிட்டாலும் அந்தக் குரல் கேட்டதும் சட்டென்று தாவி எழுந்துவிடுவான்.

கடைசியில் ஓர் இரவில், பயத்தின் எல்லைக்குத் தள்ளப்படும் கோழைகள் செய்வதைச் செய்தான். தன்னை அழைப்பது யார் என்று பார்க்கவும் அந்த மனிதனைச் சத்தம் போடாமல் இருக்கச் சொல்லவும் சடாரென்று கதவைத் திறந்தான். ஆனால் உறைந்த காற்று முகத்தில் வேகமாக அறைந்ததில் எலும்பு வரை குளிர் நடுக்கியதும் சட்டென கதவைச் சாத்தித் தாளிட்டான். அதற்குள்ளாக சாம் வெளியே ஓடிவிட்டதை அவன் கவனிக்கவில்லை. இன்னமும் குளிர் நடுக்கியதால் அடுப்புக்குள் விறகை வைத்துவிட்டுச் சூடேற்றிக் கொள்வதற்காக உட்கார்ந்தான். திடீரென்று தூக்கிவாரிப்போட்டு எழுந்தான். யாரோ சுவற்றைப் பிராண்டியபடி அழும் குரல் கேட்டது. எல்லா நம்பிக்கையும் இழந்தவனாகச் சத்தமாகக் குரல் கொடுத்தான்: “போயிடு!” ஆனால் நீளமான சோகம் நிறைந்த அழுகுரலைத் தவிர வேறெந்த பதிலும் வரவில்லை.

மிதமிஞ்சிய பயத்தில் அவனுடைய மற்ற புலன்களும் வேலைசெய்வதை நிறுத்தின. “போயிடு!” என்று மீண்டும் சொன்னான். வீட்டுக்குள் ஒளிந்துகொள்ள ஏதாவது பாதுகாப்பான மூலை இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தான். வெளியில் இருந்தவனோ வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து சுவற்றை உரசியபடியே அழுதான். தட்டு பாத்திரம் மற்றும் உணவுப்பண்டங்களை அடுக்கி வைத்திருந்த பெரிய ஓக் மர அடுக்கை அமானுஷ்யமான சக்தியுடன் கதவருகே இழுத்துக்கொண்டு வந்து தடை அரண் ஒன்றை அமைத்தான் உல்ரிஹ். அதன்மேலே மற்ற தட்டுமுட்டுப் பொருட்களையும் மெத்தை நாற்காலியையும் அடுக்கிவைத்தான். எதிரியிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு ஜன்னல்களையும் அடைத்தான்.

வெளியே இருந்தவன் அளவற்ற சோகத்துடன் முனகத் துவங்கினான். உள்ளே இருந்த இளைஞனும் பதிலுக்கு அதேபோல முனகினான். இருவரும் மாறி மாறி ஊளையிட்டுக் கொண்டபடியேஅடுத்து வந்த நாட்கள் கடந்தன. வெளியே எந்நேரமும் வீட்டைச் சுற்றி நடந்துகொண்டே இருந்தவன் சுவற்றை உடைக்க விரும்புவதுபோல அதை நகத்தால் சுரண்டிக்கொண்டே இருந்தான். உள்ளே இருந்தவனோ அவனுடைய எல்லா நடவடிக்கைகளையும் பின்தொடர்ந்தபடியே இருந்தான். தரையில் தவழ்ந்து சுவற்றில் காதை வைத்து உற்றுக் கேட்டான். வெளியே இருந்தவனுடைய வேண்டுகோளுக்குப் பதில்சொல்வதுபோலப் பயங்கரமான சத்தம் எழுப்பினான். ஒருநாள் மாலை, உல்ரிஹ்ஹுக்கு எந்தச் சத்தமும் கேட்கவில்லை. கீழே உட்கார்ந்தவன் அசதியில் உடனே தூங்கிப்போய்விட்டான். காலையில் எழுந்தபோது எதைப் பற்றிய சிந்தனையுமில்லை, என்ன நடந்தது என்றும் நினைவில்லை. நன்றாக நிறைய நேரம் தூங்கி எழுந்ததில் அவன் தலைக்குள் இருந்தது எல்லாம் காணாமல் போனதுபோல இருந்தது. பசி எடுத்ததால் உணவைச் சாப்பிட்டான்.

பனிக்காலம் முடிந்து ஜெம்மி கணவாய் போக்குவரத்துக்குத் தயாரானது. ஹவுஸரின் குடும்பம் விடுதிக்குத் திரும்ப ஆயத்தமானது. மலை உச்சியை அடைந்ததும் பெண்கள் இருவரும் கோவேறுகழுதையைவிட்டுக் கீழே இறங்கி விடுதியில் இருப்பவர்களைச் சந்திக்கப் போவதைப்பற்றிப் பேசிக்கொண்டார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பாதை திறந்தவுடன் வழக்கம்போல இருவரும் கீழே இறங்கிவந்து தங்களின் நீண்ட பனிக்கால அனுபவங்களையும் கதைகளையும் பகிர்ந்துகொள்ளவில்லை என்பது குறித்து ஆச்சரியப்பட்டார்கள். கடைசியில் விடுதி கண்ணுக்குத் தெரிந்தது. இன்னமும் ஒரு மெல்லிய மெத்தை போன்ற பனியால் சூழப்பட்டிருந்தது. கதவும் ஜன்னல்களும் மூடப்பட்டிருந்தன. ஆனால் புகைபோக்கி வழியே வந்த புகையைக் கவனித்த ஹவுஸர் கொஞ்சம் நம்பிக்கைகொண்டார். கதவருகே போனதும் கழுகுகளால் பிய்த்தெடுக்கப்பட்ட ஏதோ ஒரு விலங்கின் எலும்புக்கூடு கிடப்பதைப் பார்த்தார். அருகிலேயே பெரிய எலும்புகூடொன்றும் கிடந்தது.

எல்லோரும் பக்கத்தில் போய்ப் பார்த்தார்கள். “சாம் மாதிரி இருக்கே!” என்று சொன்னார் அம்மா. பிறகு உரக்கக் குரல் கொடுத்தார், “காஸ்பார்ட்!” பதிலுக்கு வீட்டுக்குள் இருந்து ஏதோ சத்தம் வந்தது. கூடவே விலங்குகள் எழுப்பும் கிரீச்சிடும் ஒலியொன்றும் கேட்டது. ஹவுஸர் மீண்டும் அழைத்தார், “காஸ்பார்ட்!” முதலில் கேட்டது போலவே கிரீச்சிடும் ஒலி பதிலாக வந்தது.

அப்பாவும் பிள்ளைகளும் ஒன்றுசேர்ந்து கதவைத் திறக்க முயற்சி செய்தனர். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. காலியாக இருந்த மாட்டுத் தொழுவத்தில் இருந்து பெரிய மரத்தூண் ஒன்றை எடுத்து வந்து பலம்கொண்டமட்டும் வேகமாகக் கதவை இடித்தனர். கதவு உடைந்து நாலாபுறமும் சிதறியது. அப்போது ஒலித்த உரத்த குரல் வீட்டையே உலுக்கியது.

உள்ளே தலைகீழாகக் கிடந்த பெரிய மர அடுக்குக்கு அருகே யாரோ ஒரு மனிதன் நிற்பதைப் பார்த்தார்கள். அவனுடைய நீளமான தலைமுடி தோளில் புரண்டது, தாடி மார்பைத் தொட்டது, கண்கள் பளபளத்தன, நைந்து கிழிந்துபோன ஆடையை அணிந்திருந்தான். அவர்களுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. ஆனால், லூயிஸ் ஹவுஸர் ஆச்சரியத்தில் கத்தினாள்: “அம்மா, அது உல்ரிஹ்.” அவன் தலைமுடி வெளுத்துப் போயிருந்தாலும் அது உல்ரிஹ்தான் என்பதை உறுதி செய்தார் அம்மா.

அவர்கள் அருகில் வந்து தன்னைத் தொடுவதற்கு அனுமதித்தான். ஆனால் அவர்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. அவனை லோச்சுக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் அவனுக்குச் சித்தம் கலங்கிவிட்டது என்பதைக் கண்டுபிடித்தார்கள். அவன்கூட இருந்த தோழருக்கு என்ன ஆனது என்று யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

அந்தக் கோடைகாலத்தில் உடல்நலம் குன்றி கிட்டத்தட்ட இறந்துவிடும் நிலைக்குப் போனாள் லூயிஸ் ஹவுஸர். மலையின் குளிர்ந்த காற்று அவளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று சொன்னார்கள் மருத்துவர்கள்.


பிரெஞ்சு மூலம்: கீ டு மோப்பஸான்

தமிழில்: கார்குழலி

ஆசிரியர் குறிப்பு:
கீ டூ மோப்பஸான் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு எழுத்தாளர். சிறுகதையாளர், நாவலாசிரியர், பயணக் கட்டுரையாளர், கவிஞர். ஆன்டன் செக்காவைப் போலவே சிறுகதை வடிவத்தின் ஆசான் என்று கொண்டாடப்பட்டவர். புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியரான குஸ்டாவ் ஃப்லோபவின் சீடராக அறியப்படுபவர்.

விதியின் பிடியிலும் சமூக விசையின் அழுத்தத்திலும் சிக்கி உழலும் மனித வாழ்க்கையை இயல்பான நடையில் வடித்தவர். பெரும்பாலும் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதினர். ‘நெக்லெஸ்’ என்ற இவருடைய சிறுகதை மிகவும் பிரபலமானது. இதுவரை அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டதும்கூட.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
கார்குழலி தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் எழுதும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்.  பல்வேறு இணைய இதழ்களிலும் அச்சு இதழ்களிலும் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன.

எழுதியவர்

கார்குழலி
கார்குழலி
கார்குழலி தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் எழுதும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய இதழ்களிலும் அச்சு இதழ்களிலும் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x