மலையும் மழையும் ஒன்றாக வாய்த்த கணத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன்
நனைத்துக்கொண்டிருக்கும்
நனைந்து கொண்டிருக்கும்
இவ்வுடலையும் மழையையும் விகிதாசாரத்தில் பிரிக்க விரும்பாத மனநிலையில் அமர்ந்திருக்கிறேன்
இம்மலை என் உடலாக நனைந்து கொண்டிருக்கிறது
என் மேடு பள்ளங்கள்
வளைவுகள்
என் மார்பின் கனிந்த பரப்பு
உதட்டின் ஈரங்கள்
விழியின் பசுமை
அடர்ந்த இருட்டின் தொடர்பாகமான
என் கூந்தல்
இவை எல்லாம் நனைக்க வேண்டியவை நனைந்து மணந்தவை
மழை நனைக்கின்ற முதல் உடலாக இருக்கிறது
என் உயிர் வாழும் இவ்வுடல்
மழைக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்பதை ஒத்துக்கொள்ளாத
இவ்வுடலைத் தான்
மழை தேடி வந்திருக்கிறது
வேண்டி வந்திருக்கிறது
பின்பு எனக்கு ஏற்றபடி என் உடலும்
என் உடலுக்கு ஏற்ற படி இம்மழையும் இலக்கணங்களை எழுதிக் கொண்டன.
இப்போது மழை எனக்கே எனக்கானது மழை மலைக்கானது
மலையும் மழையும் ஒன்றையொன்று அனுமதிக்கின்றன
ஒன்றோடொன்று அனுசரிக்கின்றன.
மழை தூரலாகிறது
சாரலாகிறது
பெருமழையாகிறது
நனைக்கிறது.
மலை நனைகிறது
இணங்குகிறது
சிணுங்குகிறது
துளிர்விடுகிறது
அரும்புகிறது
மலர்கிறது.
மழை இலக்கணத்தோடு வரும்போதெல்லாம்
மலையின் அற்புதத்தை
மழை அறிந்து நோக்கும் போதெல்லாம்
இவ்வுடல் மழைக்காகக் காத்திருக்கிறது நனைய தனது கூந்தலை
அவிழ்த்து விடுகிறது.
சிவ நித்யஸ்ரீ
எழுதியவர்
இதுவரை.
- கவிதை17 July 2021சிவ நித்யஸ்ரீ கவிதை