அதென்ன பிளாக்கி, ஜாக்கி? அடுக்குமாடிக் குடியிருப்பில் என் பக்கத்து வீட்டு நாய்களின் பெயர்கள்தான் இவை. ராஜமரியாதை, நல்ல சாப்பாடு, தனிக்கவனம். இருந்தால் அவற்றைப்போல இருக்கணும் என்று அவ்வப்போது மனதிற்குள் தோன்றும். வளர்ப்பு பிராணிகள் குறிப்பாக நாய்களை விரும்புவோர் உலகெங்கும் உண்டு.  உக்ரைனிலிருந்து தாம் வளர்க்கும் நாயை விட்டுவிட்டு வரமாட்டோம் என்றவர்கள், வளர்ப்புப் பிராணிகளோடு தாயகம் திரும்பியவர்கள் இதற்கான சாட்சியங்கள். மேலைநாடுகளின் நாய்வளர்ப்பு முறையைப் பார்க்கும்போது அடுத்த ஜென்மத்திலாவது நாயா பொறக்கணும் என்பதன்  அர்த்தம் புரிகிறது. இங்கு பெரும்பாலான வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள். குழந்தையைப் போல வளர்க்கிறார்கள். தனித்து வாழ்பவர்கள், முதியவர்கள் துணைக்கு குழந்தையாகவே வளர்க்கிறார்கள்.

மனித சமூகத்தில் தவிர்க்க முடியாதது

மனித சமூகத்துக்கும் நாய்களுக்குமான உறவு இரும்புக் காலத்திலிருந்தே(கி.மு.1430) துவங்கியது. விவசாயக்குடிகள் வேட்டையாடவும், மேய்ச்சல் சமூகங்கள் கால்நடைகளைப் பராமரிக்கவும், இடைக்காலத்தில் பொருட்களைச் சுமக்கும் சிறு வண்டிகளை இழுக்கவும் நாய்கள் பயன்படுத்தப்பட்டன. தற்பொழுது அவற்றின் ரகங்களுக்கேற்ப பயன்பாடுகளும் அதிகப்பட்டுள்ளன. இன்றைய நவீனக் காலத்தில் இவை விலங்குகள் நிலையிலிருந்து மனிதத் தோழமை நிலைக்கு சென்று விட்டன. தனிப்பட்ட பாதுகாப்பு துவங்கி குழந்தைகளின் விளையாட்டுத் தோழமை என குடும்ப உறுப்பினராகவே வீடுகளில் வலம் வருகின்றன.

வாழ்வில் உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு குறிப்பாக உடல் ஊனமுற்றோருடன் உடனிருக்க, பார்வையற்றோருக்கு வழிகாட்ட பயிற்றுவிக்கப்பட்ட உதவி நாய்கள் இருக்கின்றன. ஓய்வு நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு மகிழ்ச்சியையும் பொழுதுபோக்கையும், மன அமைதியையும் சிகிச்சை நாய்கள் அளிக்கின்றன. வனாந்தரத்தில் தொலைந்து போவது, பனிச்சரிவுகளின் கீழ் பனியால் மூடப்படுவது, இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் புதைந்து கிடப்பது போன்ற உறுதியற்ற அவநம்பிக்கையான சூழ்நிலைகளில் மனிதருக்கு மீட்பு நாய்கள் உதவுகின்றன.

நம் நாட்டில் பொறந்தா போலீஸ் நாயா பொறக்கணும். அந்தளவிற்கு காவல்துறையின் கண்காணிப்பு நாய்களுக்கு இங்கு தனி மவுசு. காணாமல் போனவர்களைக் கண்டறிய, சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளைக் இனம்காட்ட, பேரழிவு தரும் வெடி பொருட்களை அகற்றிட, கொலை மற்றும் தற்கொலை சாட்சியங்களைக் கண்டுபிடிக்க நாய்களின் பங்களிப்பு பிரமாதம். பல ஆண்டுகளாக போதைப் பொருள், கொலை, கொள்ளை, வெடிகுண்டு என 365 க்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க உதவியாயிருந்தது மும்பையின் ராக்கி என்கிற காவல்துறை நாய். அது கடந்த 2020 – யில் இறந்தபோது போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

நாயாப் பொறந்தாலும் கியூபால பொறக்கணும்

மரபணு ரீதியாகவே மனிதனோடு ஒன்றி வாழவும், உதவுபவர்களுக்கு நன்றியோடும், சுற்றத்தில் நட்போடும் வாழக்கூடியவை நாய்கள் என்கின்றன ஆய்வுகள். மனித வாழ்விற்கு நாய்கள் தரும் அன்பையும், மகிழ்ச்சியையும் அங்கீகரிக்கவே சர்வதேச நாய்கள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26 கொண்டாடப்படுகிறது. இன்று பல காப்பீட்டு நிறுவனங்கள் நாய் போன்ற செல்லப்பிராணிகளுக்கான சிறப்பு சுகாதாரக் காப்பீட்டுக் கொள்கைகளையும் வழங்குகின்றன. இவான் பாவ்லோவ் போன்றவர்கள் நாய்களை வைத்து மனித நடத்தைசார் உளவியல் ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.

கியூபாவின் கம்யூனிச அரசு மனிதர்களைப் போலவே நாய்களுக்கும் சம உரிமை கொடுத்து வாழ வைக்கிறது. இங்கு 20 லட்சம் நாய்கள் வாழுகின்றன. அவற்றிற்கு உணவு, உறைவிடம், ஏன் அடையாள அட்டையும் உண்டு. இங்கு ஒரு நாய்க்குத் தேவையான உணவு, உறைவிடத்தை குறைந்தபட்சம் இருவராவது வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் தங்குவதற்கும், உணவு உண்பதற்கும் ஏற்றவாறு அவை வாழும் பகுதிக்கு அருகிலே இருக்கும் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். கியூபாவுக்குச் சுற்றுலா சென்ற இஸ்ரேலியப் புகைப்படக்கலைஞர் அலெக்ஸ் லெவாக்ஸ் (Alex Levax) தனது புகைப்படங்களால் இதனை விவரித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், ‘ஒரு வாரம் முழுவதும் நான் ஹவான்னாவின் வீதிகளில் சுற்றினேன். அந்நகரத்தின் நிலையை அங்கிருந்த தெரு நாய்களே சொல்லின. கியூபாவில் ஏழ்மை இருந்தாலும் அங்கிருந்த மக்களின் கண்களில் தெரிந்த அன்பும் புன்சிரிப்பும் அவர்களின் வாழ்க்கையைப் புரியவைத்தன. அந்தப் பொதுவுடைமை நாட்டில் வாழும் நான்கு கால் நண்பர்களுக்குக்கூட அவர்களுக்கான உரிமைகளை வழங்கியுள்ளார்கள். அவர்களின் கொள்கைப்படி அனைவரும் அங்கே சமம்தான்…’

நாம் செய்ய வேண்டுவன

உலகில் 60 கோடி நாய்கள் பராமரிப்பின்றித் தெருக்களில் சுற்றித் திரிகின்றன. அவை பெரும்பாலும் ஆசிய நாடுகளில் உணவுக்கும் உறைவிடத்துக்கும் வழியின்றி, பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கும், மனித வதைப்புக்கும் ஆளாகி மடிகின்றன. மேலைநாடுகளில் தெருநாய்களைப் பார்க்கவே முடியாது. அடுக்குமாடி குடியிருப்புகளை வசிப்பிடங்களாகக் கொண்டிருக்கும் மேற்கத்தவர்களின் வீடுகளுக்குள்ளே நாய்களும் வளர்கின்றன. அவற்றிற்கென்று தனியிடமோ கூண்டுகளோ இல்லை. சட்டத்திற்கு உட்பட்டு காப்பீடு செய்து வளர்க்கிறார்கள். போதிய தருணத்தில் தடுப்பூசிகள் மற்றும், மருத்துவப்பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப ஆடைகளை அணிவிக்கிறார்கள். அனுதினமும் ஒன்றிரண்டு முறை வெளியில் அழைத்துச் செல்கிறார்கள். அப்பொழுது அவை இயற்கை உபாதை செய்ய நேரிட்டால் தங்கள் கரங்களில் வைத்திருக்கும் நெகிழி பையினால் கழிவினைச் சேகரித்து குப்பைத்தொட்டியில் போடுகின்றனர். அருகாமை இல்லங்களுக்கு அவற்றால் எந்த தொந்தரவும் இல்லை. வீடுகளில் நாய்கள் வாழ்கின்றன என்று சொல்லும்படியான சிறுநீர் நாற்றமோ, ஏனைய கழிவு நாற்றமே இல்லை. வீடுகளில் குழந்தைகள் வளர்வதுபோன்றே வளருகின்றன.

வளர்ப்புப்பிராணியாக விதவிதமான நாய்களை வளர்க்கும் ஆர்வம் கொண்டவர் நம்மிலும் உள்ளனர். ஊடகங்களுக்குள் தொலைந்து போய்விடாமல் நேரத்தை பயன்படுத்தவும், இயற்கை மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும், உணர்வுகளை நெறிப்படுத்தவும் செல்லப்பிராணிகளின் வளர்ப்பில் குழந்தைகளை ஈடுபடுத்துவது நல்லது. மன அழுத்தம் குறைய வளர்ப்புப்பிராணிகளை பேணுவதை ஒரு யுக்தியாக உற்சாகப்படுத்துகிறது உளவியல். அதே வேளையில் அயல்நாடுகளைப் போல பிள்ளைகளுக்கு மாற்றாக நாய் போன்ற வளர்ப்புப்பிராணிகள் அமைந்திடாமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம். நாய் வளர்ப்பில் காட்டும் ஆர்வம் அதனை தூய்மையாகப் பேணி பாதுகாப்பதிலும் அதிகம் தேவை. பெரும்பாலும் இயற்கை உபாதைகளுக்காக வளர்ப்பு நாய்களை பொதுவெளிக்கு துரத்துகின்ற பழக்கம்தான் நம்மில் பலருக்கு உள்ளது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பழக்கப்படுத்துவதில் நேரும் தவறுகளால் நாம் வளர்க்கும் நாய்கள் பல நேரங்களில் அண்டை வீட்டாருக்கு தொந்தரவாகவும் அமைகின்றன. இதனால் சண்டைகள் ஏற்படுகின்றன. தெரு நாய்களைக் கண்டதும் கல்லெறிந்து காயப்படுத்தும் போக்கு இங்கு சாதாரணமாகவே நிகழ்கிறது. காயப்பட்ட நாய்கள் உடலில் புண்களோடு அலைவதை பார்க்க முடிகிறது. வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாரின் மண் இது என்பதனை மதித்து பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் வேண்டாமா? சில தன்னார்வலர்கள் தெருநாய்களுக்கு உணவு கொடுப்பது, பராமரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அரசும் தன்னார்வலர்களோடு கரம்கோர்த்து வாயற்ற பிராணிகள் வதைக்கப்படாமல் பாதுகாத்திட முன்வர வேண்டும்.

இப்படி இரண்டு இந்திய நாய்கள் பேசிக் கொண்டனவாம் : இன்னிக்கு என்ன ரொம்ப அழகா இருக்க. என்ன நடந்தது? இல்லையே நான் அப்படியே தான் இருக்கேன். உனக்கு தான் ஏதோ ஆகியிருக்கு…ம்ம்ம் அது ஒண்ணுமில்ல. வயித்துக்குத் தேவையான சாப்பாடு கெடச்சுது. அதுதான் பாக்குற எல்லாமே அழகா தெரியுது. அத சொல்லு. நமக்கென்ன மனுசங்க மாதிரி வீடு, சொத்துன்னு எதுவும் இல்ல. கவலையும் இல்ல. கிடைச்சத சாப்பிட்டுட்டு புடிச்ச எடத்துல தூங்குற அளவுக்கு நம்மளால முடியும். அவங்களால முடியாது.  அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா இதே மாதிரி நாயா தான் பொறக்கணும். இந்த மனுசனா மட்டும் பொறக்கக்கூடாது.


 

எழுதியவர்

ம.டைட்டஸ் மோகன்
ஆய்வு மாணவர், மிலான்நகர்.

குமரி மாவட்ட எழுத்தாளர். இதுவரை தன்னம்பிக்கை, இளையோர் முன்னேற்றம், அரசியல், ஆன்மீகம் சார்ந்த 42 நூல்களைப் படைத்துள்ளார். சில நூல்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார்.  தற்பொழுது இத்தாலியின் மிலான் நகரில் தனது முனைவர்பட்ட ஆய்வினை அறநெறி கோட்பாடுகளில் மேற்கொண்டுள்ளார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x