வேர்த்து வெடித்து மனித சக்கையாக வெளியே வரும் அவளுக்கு இரவு-பகல், நாள், மாதம் எல்லாம் ஒன்றாகி வெகு நாட்களாகி விட்டது. தன்னுள் இருக்கும் இயந்திரத்தை நகர்த்திக் கொண்டே அறைக்கு வந்த போது இரவு 9-ஐ தாண்டி விட்டது சுழலும் பூமியின் சூட்சும நேரம். சுதந்திரம் என்பது சொற்களில் கூட இல்லாதவர்கள். முகவரி அற்று முகமும் அற்ற மாற்றுப் பொருள் தான் அவர்களுக்கு இப்போது வாழ்வது.
பின்னாலயே கணவன்… கடல் தாண்டி வந்து விட்ட துக்கத்தின் நுகர்வில் உயிர் தகிக்க வந்தான். அவர்கள் புன்னகைத்து நாட்களாகி விட்டன. கள்ளம் கபடம் இல்லாத வாழ்க்கையிலிருந்து… இது கள்ளத்தின் வழியே உயிர் பிழைத்துக் கிடக்கும் கால கட்டாயம். ஆதி வாழ்விலிருந்து அகதி வாழ்வு…. ஐயோ… அடி வயிறு பற்றி எரியும் தண்ணீரும்.
அறைக்குள் நுழைந்த போது… கண் கட்டி காதுக்குப் பஞ்சு அடைத்துப் படுத்திருந்த மனைவிக்கு ஒரு தொடுதலின் மூலம் தன்னை உணர்த்தினான். ம்ம்ம் என்பது போல அனிச்சையாய் முணங்கி… திரும்பிப் படுத்துக் கொண்டாள். இரவுக்கு அடர்த்தி அதிகம். கண் மூடி காது மூடியை அணிந்து கொண்டு பெருமூச்சைத் துக்கமாக வெளியேற்றி விட்டு அவனும் படுத்தான்.
சற்று நேரத்தில் இன்னொரு ஜோடி வந்தார்கள்… கழிவறை போனார்கள்… முகம் கழுவினார்கள். திரும்ப அறைக்குள் வந்தார்கள். அவரவருக்கான கண் மூடியையும்…காது மூடியையும் பொருத்திக் கொண்டு படுத்துக் கொண்டார்கள். அவர்களுக்குள்ளாவது ஒருவகை சமிக்ஞை இருந்தது. இவர்களுக்குள் வெற்றிடம் தான்.
சற்று நேரத்தில் இன்னொரு ஜோடி அதே போல. வந்தார்கள். கண் மூடி காது மூடியை அணிந்தார்கள். படுத்திருக்கும் இரு ஜோடிகளுக்கு அருகே சத்தமில்லாமல் படுத்தார்கள். தாங்களே யாரோ தான் என்பது போன்ற உடல்மொழி.
அவரவர் உணவை அவரவர்கள் வேலை செய்யும் உணவகங்களிலேயே முடித்துக் கொள்வது வழக்கம். இணைந்து சாப்பிட… மாறிக் கொண்டே இருக்கும் விடுமுறைகள்… எப்போதாவது ஒன்றாக வர… காலம் சம்மதிக்க வேண்டும்.
அடுத்த ஜோடி கீழே அந்த வீதி சந்தில் நுழைகையிலேயே ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். வாரம் முழுக்க சுமந்த கனம் மெல்ல விலகுவதாக ஓர் இலகு. கைகள் கோர்த்துக் கொண்டார்கள். கவலைகளை எல்லாம் கழற்றி விட வேண்டும் என்பது போன்ற பாவனை..பரிதவிப்பு. ஆசுவாச பெருமூச்சு.
படிக்கட்டில் ஏறும் போது கவனத்தோடு ஏற வேண்டும். நொடி தவறினால் ஏதாவது சந்துக்குள் கால் மாட்டிக் கொள்ளும். அத்தனை சிக்கலான கட்டிட அமைப்பு. மெதுவாய் திரும்பினால் கூட வேகமாய் முட்டிக்கொள்ளும் சுவற்றின் நெருக்க இறுக்கம். அத்தனை சிக்கலான இடத்தில் ஊசி போல ஒரு கட்டடம். ஒவ்வொரு அறையிலும் ஒரு குடித்தனம். ஒவ்வொரு அறையிலும் நான்கைந்து ஜோடிகள்.. ஏழெட்டு நண்பர்கள்… ஏழு பேர் கொண்ட குடும்பம் கூட.
புறாக் கூண்டு போலத் தான் பெட்டி பெட்டியாய் வாழும் சவப்பெட்டி அந்த அறை. திடும்மென நினைத்துக் கொண்டால் ஓவென அழத்தூண்டும் பிறந்த மண்ணின் விசாலம். வெடி குண்டும் வெடித்த குண்டுமான வாழ்வின் வளைவுகள் வேறொரு நிலத்துக்குத் தீர்மானித்து விட்ட காலத்தின் அதிகாரத்தை… கல் கொண்டு அடிக்கலாம். ஆனால் இன்று இல்லை.
அறையை நெருங்குகையிலேயே ஒருவரின் வாசம் ஒருவரை இழுத்தது. திருட்டு பூனைகளைப் போல அறை நுழைகையில்.. மற்ற ஜோடிகள் காது மூடி… கண்கள் மூடி பிணங்களைப் போல ஒதுங்கிக் கிடந்தார்கள். இவர்களுக்கான இடம் சற்று விரிவடைந்து கிடந்தது. கண்கள் சிரிக்க கண் மூடி காது மூடி கிடக்கும் மற்றவர்களைப் பார்த்துக் கொண்டே மெல்ல நெருங்கினார்கள்.
சுவற்றில்… மேலே… சாமி படத்துக்குக் கீழே… வழக்கமான நோட்டீஸில்… “இன்று வியாழன் – வதனன் – ராதிகா” என்று எழுதி இருந்தது.
மற்றவர்களின் உலகம் அடைத்துக் கிடைக்க இவர்கள் அணைத்துக் கொண்டு தங்களைத் திறக்க ஆரம்பித்தார்கள். புறாக்கூண்டு பார்த்தும் பார்க்காதது போலத் தகிக்க ஆரம்பித்தது.
எழுதியவர்
- கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இதுவரை.
- சிறுகதை29 July 2024புதியவன்
- சிறுகதை20 February 2024மீண்டும் கோகிலா
- சிறுகதை18 January 2024கணுவாய் டு ஆனைக்கட்டி
- சிறுகதை1 December 2023சபரி பேக்கரி