23 November 2024
anbathavan

01

 “பொதுவாக, சண்டை அல்லது சமர் (battle) என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆயுதப் படைகள், அல்லது போராளிகள் மத்தியில் நடைபெறும் போர் முறை ஆகும். ஒரு சண்டையில், ஒவ்வொரு சண்டை இடுபவரும் ஒரு இராணுவத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பர், அது நாடு, மொழி, இனம், என ஏதாவது ஒரு அடிப்படையில்  தீர்மானிக்கப்படுகிறது.

போர்கள், அல்லது இராணுவத் தாக்குதல்கள் பொதுவாக போரியல் மூல உபாயம் மூலம் திட்டமிடப்படுகின்றன. ஆனால், சண்டை அல்லது சமரில் பெரும்பாலும் காயமடைவது அல்லது மரணம் அடைவது நிகழ்கிறது

” ஆ ஹயா… ஹமாரா சுல்தான் ஆ ஹயா…”-மைசூர் படையணியில் காவிரியின் புதுவெள்ளம் போல் எழுந்ததோர் உற்சாகத்தைச் சொற்களால் சொல்லவும் கூடுமோ!
‘இதுகாறுமில்லா உற்சாகம் ஒவ்வொரு வீரனுக்கும்…!

“ஆஹா… வந்துவிட்டான் எம் தலைவன்!” -குருதியில் கலந்தது புது உற்சாகம்… கரங்கொண்ட ஆயுதங்களுக்கோ புது உத்வேகம்.

ஸ்ரீரங்கப்பட்டணத்து சமர்க்களம்  அமளிதுமளியாகிக் கொண்டிருக்க… கோட்டைச்சுவர்மேல் உறுமியது மைசூர் புலி!

”ஹா.‌. சுல்தான்…திப்புசுல்தான்! ..”

கூலிக்குப் போரிடும் கோழைக் கூட்டம். குரலில் மட்டுமல்ல… உடலிலும் நடுக்கம்.

”ஆம்! நான் சுல்தான்….! திப்பு சுல்தான்….!”-உச்சக்குரலில் உறுமியது புலி., கோட்டையரண் மேல்.தகத்தகாய சூர்யன் போல நின்றிருந்தார் திப்பு..

விழிகளில் வெறி.. போர்வெறி….

வெள்ளைப் பரங்கியரை வெற்றிக்கொள்ளவேண்டிய வெறி!

முகத்திலே சினம்…முறுக்கிய மீசை துடிக்க, உரத்த குரலில் உறுதி!

இடதுகையில் கருந்துவக்கு !

வலதிலோ ஊரெல்லாம் பேர் சொல்லும் போர்வாள்! திப்புவின்… சோராத போர்வாள்! வெற்றிகளை மட்டுமே ஈட்டித் தந்த விஜயவாள்!

கோட்டைச் சுவரிலிருந்து யுத்த களத்துக்குள் குதிக்கும் புலியை எதிர்க்க துணிவு எவருக்குண்டு…? களத்தில் சுழல்கிறது புலி. கலைந்து பயந்தோடுகிறது பரங்கிப்படை.

 

வெட்டருவா கோடாலி

வெலைக்கு வெல வாங்கிஅந்த

வேலூரான் வேலங்காட்ட

வெட்ட வெளியாக்கி

துண்டு துண்டா மரங்க வெட்டி

தூலத்துல ஏத்திஅந்தத்

தூலக்குல சுட்ட குண்டு

தொரமாரெல்லாம் மாள..

மண்டு மண்டா மரங்க வெட்டி

மைதானத்தில் ஏத்திஅந்த

மைதானத்துல சுட்ட குண்டு

மனுசாளெல்லாம் மாள..”

ஆயுதங்களைத் தரித்த திப்பு காவல் கோபுரத்தின் மீது துணிந்து ஏறினார். வெல்லுங்கள் வீரர்களே! நம் படை வெல்லட்டும்” முழங்கிய சுல்தான் குரலைக் கேட்டு உற்சாகம் பொங்கியது மைசூர் வீரர்களுக்கு
-ஜெய் ஜவான்… மைசூர் மாதாக்கி ஜீத் ஹை”…புலி புகுந்த யுத்தகளம் அதகளமெனலாம்!

பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே

போர்முகத்தி லெவர்வரினும் புறங்கொ டாத

பருவயிரத் தோளெங்கே யெங்கே யென்று

மைசூரின் போரேறு  போகும் வழியெல்லாம் எதிரிப்படை அர்த்த நாசம் ஆனது!

ஆனால், காலம் எழுதிய கணக்கு வேறுவிதமாக இருந்தது.

-சுல்தான்…திப்பு இப்போதாவது தோல்வியை ஏற்றுக் கொள்.. உனக்கு மன்னிப்பு அளிக்கிறேன், உன் வீரர் படைக்கு மருத்துவமும் சிகிச்சையும் தர உத்தரவிடுகிறேன்…. என்ன சொல்கிறாய்?

– மிஸ்டர் வெல்லஸ்லி இந்த பாரத தேசம் பரங்கியருக்குக் கிடைத்த ஒரு பிரம்மாண்ட சந்தை! இல்லையென்றால் வெயில் தாங்காத வெள்ளை வியாபாரிகள் இந்த இந்திய தேச உஷ்ணம் தாங்கி அவர்கள் உடம்பில் வெடித்து ரத்தமும் சீழும் ஒழுக வந்து தவமிருப்பார்களா…?

-எம் உரிமையை தற்சார்பைக் காத்துக்கொள்ள பேச்சுவார்த்தைகள் உதவுமெனில் சரிதான்…ஏற்கிறேன். ஆனால் பேச்சுவார்த்தை எனும் பெயரில் நிகழ்த்தப்படும் நாடகத்தை கண்துடைப்பைக் காண சகியாமல் தான் இந்த திப்பு வாளேந்துகிறேன்

-மிஸ்டர் வெல்லஸ்லி உணருங்கள் ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பு நடத்துவதைவிட …புலியைப் போல இரண்டே நாட்கள் வாழ்ந்து மடியலாம்… நான் புலி! ஹைதர் அலி பெற்ற மைசூர்ப் புலி!
இந்த யுத்தத்தை மிகவும் தனித்துவத்தோடு நடத்த வேண்டுமென விரும்புகிறேன்! எம்மை எதிர்க்கும் எவருக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும்

-என்னுடம்பில் துளி உயிர் இருக்கும்வரை எம் மண்ணைப் பரங்கிப் படைகள் தீண்டவும் விடமாட்டேன்.-கர்ஜித்தார் திப்பு.


அடுத்த பகுதி -02 

எழுதியவர்

அன்பாதவன்
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x