18 July 2024

 

09

உலக அமைதி (world peace) :

பூமியில் நிலவுகின்ற நாடுகளும் வாழ்கின்ற மக்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்துஅரசியல் சுதந்திரம், அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்கின்ற இலட்சியத்தைக் குறிக்கிறது. உலகத்தில் வன்முறையும் போரும் மறைந்து, மக்கள் மனதார ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து, அமைதியை வளர்க்கின்ற அமைப்புகளை உருவாக்குவதும் உலக அமைதி என்னும் இலட்சியத்தில் அடங்கும். தனிமனிதர் பகைமை உணர்ச்சிகளையும் செயல்களையும் தங்கள் வாழ்விலிருந்து அகற்றுவதும், மனித உரிமைகளை மேம்படுத்திகல்விதொழில்நுட்பம்மருத்துவம், முதலிய துறைகள் வழியாக உலக அமைதியைக் கொணர்வதும் இதைச் சார்ந்ததே.

 

திப்புவின் நெஞ்சிலும் தோளிலும் பலத்த வெட்டுக் காயங்கள்… புயலென சுழன்று போர்புரிந்த புலியை எதிர்பாராமல் வந்த எதிரியின் துப்பாக்கி குண்டு தாக்கியது!வலது காதிற்க்கு கீழ் குண்டு பாய…தாய்மண்ணில் வீழ்கிறான் அந்த தைர்யன்!

-மகனே…! என் மகனே! கேட்கிறதா இந்த அரூபத் தாயின் குரல்..

-தாயே..கண்ணுக்குத் தெரியா காவிரித்தாயே…அன்னை மடிக்குப் பிறகு நான் ஆடிக் களித்தடெல்லாம் நின் நீர் மடி தானே…

-மகனே திப்பு உன்னைக் காக்க இயலா கையாலாகாதவளாய் ஆகி விட்டேனே இந்த காவிரியை மன்னித்து விடய்யா அன்பு மகனே!

-தாயே எந்த ப் பொழுதிலும் நான் இந்த யுத்தத்தை விரும்பவில்லை.இந்த யுத்தம் பேரழிவினைத்தருமென்பதை அறிவேன்.உயிர்ச்சேதமும் பொருள் சேதமும் இரு புறமும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மிக நன்றாக அறிவேன்.

-மகனே…இந்த பூவுலகம் முழுவதையும் தனக்கே தனக்கென அடிமைப்படுத்தி அடக்கியாள வேண்டுமென்ற பேராசை தானே யுத்தங்களுக்கு அடிப்படையான மூலக் காரணம்…

 

-ஆனால்  அன்னையே இந்த யுத்தம் என் மீது திணிக்கப்பட்டது..வேறு வழியேயின்றி  பெருமிதம் கூடிய என் பெருவாளை ஏந்த வேண்டியதாயிற்று.

இந்நேரத்தில் நான் மவுனம் காத்தால் எதிரி என்னை ஏளனம் செய்வான். போர் புரிந்து கொண்டிருக்கும் போதே இது தேவையா… என என்னை நானே கேட்டுக் கொண்டேன் போரில் இரு பக்கங்களிலும் ஏற்பட்ட அழிவுகள் என் மனதை பாதித்தன

எனக்கு என்ன ஆனாலும் என் குடும்பத்துக்கு எது நேர்ந்தாலும் என் மக்கள் காப்பாற்ற பட வேண்டும் எம் மண்ணின் ஒரு அங்குலத்தை கூட எதிரிகள்..மிதித்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன்

-திப்பு …கர்நாடகம் காக்க வந்த களப்புலியே…யுத்தங்கள் சொல்லும் பாடமென்ன!

வெறும் கொலைகள்! மனிதக் கொலைகள்!

-இந்த மைசூர் ராஜ்யம் என் ஒருவனுக்கானதல்ல..இங்கே கன்னடம் பேசும் மலைநாட்டினர்.  வீரம் செறிந்த குடகு தேசத்தவர்..திசை நோக்கி  தினந்தொழும் இசுலாமியர்.. வேதம் சிறந்த மேல்கோட்டையினர்..என்னைநம்பி அண்டைத் தமிழகத்தில் இருந்து வந்த அருந்தமிழ் மக்கள்…அனைவரையும் காபந்து செய்ய வேண்டிய காவலன் நான்..

 

– ஏற்றிருக்கிறீர்களா.. ராஜாக்களே… என்றாவது.நும் இணையர் பகர்வதை…

தாரைப்புலம்பினாள்…மண்டோதரி வருந்தினாள்..கேட்டீரா..இனியாவது கேட்பீரா …உயிர்கள் பலவற்றை எவ்வித குற்றஉணர்வுமின்றி அழிப்பதே யுத்தம்! யுத்தங்கள்.. உலகமகாப்போர்கள்.. இவைகளால் ஆயுத வியாபாரிகளுக்கோ பெரும் லாபம்..சராசரி மக்களுக்கோ எதிர் காலம் பெரு வினாக்குறியாய்..?

இரத்தம்…நிணம்…பிணம் பார்த்தே புத்தம் தழுவினான் அசோகன்…

– தாயே…நான் அவர்களை நம்பினேன் முழுவதுமாக நம்பினேன் நூறு சதவீததுக்கும் மேல்  நம்பினேன்

அந்த நம்பிக்கையில் பல முக்கியப் பொறுப்புகளை அவர்களிடம் ஆனால் அவர்கள் எனக்கு மட்டுமல்ல இந்த தேசத்துக்கும் இந்த மக்களுக்கும் இந்த மண்ணுக்கும் துரோகம் செய்தார்கள்.

எதிரிகளுக்கு என்னிடம்  மருந்து உண்டு…  பதிலும்  உண்டு… ஆனால்  கூடவே இருந்து முதுகில் குறுவாள் செருகும் துரோகிகளுக்கு என்னிடம்  மருந்து இல்லை…மருந்தே இல்லை…தாயே..

காட்டிக் கொடுப்பவர்கள் மைசூர் மண்ணில் மட்டும்தான் இருக்கிறார்கள் அதுவும்  நம் அரண்மனையில் மட்டுந்தான் இருக்கிறார்கள் என்று கூற முடியாது.

எல்லா இனத்திலும் இருக்கிறார்கள் …

-ம்ம்

எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்…

-ஓ…

எல்லா தேசத்திலும் இருக்கிறார்கள் …

-சரிதான்

-எல்லா மொழியிலும் இருக்கிறார்கள்… எல்லா  போராட்டத்திலும் இருக்கிறார்கள்…

-மிகச்சரி

-உலகில் நடைபெற்ற எல்லா விடுதலைப் போராட்டத்திலும் காசுக்காக பொருளுக்காக பதவிக்காக.பிற சங்கதிகளுக்காக துரோகம் செய்து காட்டிக் கொடுத்தவர்கள் இருந்தே வருகிறார்கள்.

-உண்மை மகனே..எற்கிறேன்..ஆனால்…பட்டினியில் கிடந்தாலும் பாட்டெழுதும் புலவருக்கு பரணி பாடி போர்ச்சேவை செய்து ஆள்சேர்க்கும் அவலம்.வென்றவன் படை தோற்றவன் தேசத்தில் நடாத்திய வெறிகூடிய உங்கள் செயல்களை எது சொல்லி நியாயமாக்க இயலும்?

குறிப்பாக தோல்வி கண்ட தேசப்பெண்டிரின் உடலங்கள் மீது ஒற்றைப் பிரம்படியாய் நிகழ்ந்த வன்புணர்வை மன்னிக்குமோ வரலாறு..

எழுதவும் கூசும் அத்தகைய இழிசெயல்களுக்குப் பதிலேதுமுண்டா படையினரே..இதுகாறும் யுத்தங்களின் மிச்ச அவலங்கள் போர்த்தாய்கள் எனும் புதுக்குலமன்றோ..

தாய்நாட்டைக்காக்க ஆக்கிரமித்த ஆண்களுடன் ஆயுதங்களுடன் போர்புரியும்  வீரர்கூட்டம் எதிரி நாட்டு பெண்டிரை நடத்தும் விதம் யாது..?

தினவெடுத்த தம் உடலுக்கு  தீனியாய் வெறியேறி ஆட்கொள்வதும் அதன் காரணமாக தந்தை பெயர் அறியா மகவுகள் இவ்வுலகில் பெருகுவதும் கூட யுத்த தர்மமோ தளபதிகளே..சேனையின் அதிபதிகளே..

போர்களின் பெயரால்..ஆயுத வியாபாரிகள் செழிக்கஎத்தனைப் பெண்கள் வாழ்விழப்பது? எத்தனை ராணிபத்மினிகள் தீக்குளிப்பது?

ஆநிரைக் கவர்வது தொடங்கி,எல்லை விரிவாக்கம் என்ற பெயரில் நில அபகரிப்பு…அபலைகள் மீதான ஆதிக்க உடல் வன்முறை…கொஞ்சும் குழந்தைகளையும் கொல்ல த்துணிந்த கல்மனது…என்ன சொல்ல….எப்படி எழுத.. சண்டையில் பங்கேற்க தனிநபர்கள், லேசான உளவியல் பிரச்சனைகள் முதல் நிரந்தரமான காயங்கள் மற்றும் படுகாயம் அடையும் வாய்ப்புகளும் உண்டு. சண்டையில் உயிர் பிழைத்தவர்கள் வாழ்க்கை கொடுங்கனவுகளை கொண்டிருக்கும். அக்கனவுகள், அவர்கள் சந்தித்த சூழல், அல்லது காட்சிகள் அல்லது ஒலி அசாதாரண எதிர்விளைவுகளை பற்றியே இருக்கும். ஒரு சிலர் மனநல பாதிப்பிற்கும் ஆளாகின்றனர். அது மட்டுமின்றி, சமரில் பெரும்பாலும் காயமடைவது, ஊனமுறுவது, வடு ஏற்படுவது, உடல்ரீதியான செயல்பாடுகளை இழப்பு, கண்பார்வை மங்குதல், பக்கவாதம் அல்லது மரணம் அடைவது நிகழ்கிறது.

 

துரோகம் என்பது மொழி இனம் தேசம் இவைகளுக்கு அப்பாற்பட்டது.இது போன்ற துரோகங்களை கடந்துதான் வெற்றிக்காக ,நம் விடுதலைக்காக நாம் போராட வேண்டி இருக்கிறது

இன்றைய உலகு ஒழுங்கு மாறி வருகிறது. சர்வதேச அரசியல் உறவுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கின்றன. அரசியல் கோட்பாடுகளிலும் தார்மீக கொள்கைகளிலும் அடிப்படை மட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன. அரசியல் இலட்சியங்களை அடைவதற்காக நடத்தப்படும்ஆயுதம்  தாங்கிய உரிமை போராட்டங்கள் அனைத்துக்குமே ஆதிக்க அரசுகள் பயங்கரவாதம் என்ற முத்திரையைக் குத்தியுள்ளன.

அடிப்படை அரசியல் சுதந்திரம் களுக்காகவும் இழந்தப்உரிமைக்காகவும் குருதி சிந்தி போராடும் தேசங்களின் தார்மீக அடிப்படைகளுக்கும் போராட்டங்களுக்கும் இது ஒரு சவாலாகவும் இருக்கிறது.

இந்த விடுதலைப் போராட்டக் காலத்தில் நான் மன்னனாக தலைமை ஏற்க வேண்டும் என்று எண்ணியது கூட கிடையாது மற்றவர்களை தான் தலைமை ஏற்கச் சொன்னேன் களத்தில் நிறுத்தினேன் ஆனால் அவர்களில் சிலர் நேர்மையாகவும் இல்லை எனக்கும் இந்த மண்ணுக்கும் துரோகம் செய்தவர் .ஆனார்கள். அதனால் தான் நானே தேசத்தைக் காக்க என் மண்ணை காக்க எம் மக்களை காக்க இந்த யுத்தத்தில் தலைமை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

– – மகனே.. திப்பு..! கேள்…!

அவர்கள் உன்னை ஏமாற்றினார்கள்..உன்னைத் துன்புறுத்தினார்கள்…

உன்னைத் தோற்கடித்தனர்..உன் தேசத்தைக் கொள்ளையிட்டனர்

உனக்கு பெருந்துரோகம் செய்தனர்…

இந்த நினைவுகள் பகைமைப்பைகள்…தொலைந்துவிடட்டுமே அவை

போர் என்பது ஆதிக்க வெறி என்பது நாணயத்தின் ஒரு பக்கமெனில் உலக ஆதிக்க வெறியரை தடுத்து நிறுத்தி முற்றிலுமாக முறியடிப்பது அதே நாணயத்தின் மறுபுறம் எனலாம்

நிம்மதியால் இயங்குமிந்த நிலவுலகை சந்தையாய்ப் பார்க்கும் வணிகநோக்கு ஒருபுறமெனில், மூலப்பொருட்களின்தாய்வீடுகளை தங்கள் பொறுப்பில் கொண்டுவருவதன் மூலம் உற்பத்தியை கட்டுப்படுத்த பேராசைப்படுவோர் இன்னொரு புறம், வழிபாட்டு தலங்களின் மீது படை செலுத்தி வெறி தணித்து  அங்கிருக்கும் அபூர்வ பொக்கிஷங்களை அபகரிக்கும் கொள்ளையர் மறுமுறமென யுத்தத்துக்கு காரணங்களா இல்லை…

 

இந்த யுத்தங்கள் யாரோ ஒருவனுக்கு வெற்றி என்கிற மமதை யொன்றைத்தவிர வேறென்ன விளைவுகளைத்தருகிறது..

அப்பாவி ஜனங்களுக்கு அளவற்றத் துக்கம்..

தாங்கவொண்ணா இழப்பு…வாழ்விழப்பும்…பொருளிழப்பும்

வான் மீனைவிட உயிர் இழந்தோர் எண்ணிக்கை அதிகமெனில் சூரியனும் நம்புவான்.., உள்ளம்  வெம்புவான்..

எண்ணற்ற மக்களின் வாழுமிடங்களான நகரங்களும் கிராமங்களும்  தரை மட்டமாக்கப் பட்டு தவிடு பொடியாயழிக்கப்படு கின்றன.

மனித மேதமையின் ஏராளமான மாபெரும் கலைப்படைப்புகள் காணாமல் போயின…மூளியாக்கப்பட்டன..முற்றிலும் அழிக்கப்பட்டன.

குருதிப் புனலோடும் காயங்கள்..கேட்பவர் செவிகளை சித்திரவதை செய்யும் எளியவர்களின் ஓலங்கள்..செயற்கையாய் உருவாக்கப்பட்ட பட்டினிக் கொலைகள்..நீர்நிலைகளில் நஞ்சு கலக்கும் நீசமனதை எதில் சேர்க்க..

தாயில்லா சேய்கள்…சேய் இழந்த தாய்கள்…நோய்க்கொள்ளை….

பேயரசுகளின் ஆயுதப்பசியில் பிணந்தின்னும் சாத்திரங்கள்..

யுத்தமெனும் ரத்தக்காட்டேரியின் பேராபத்தை …போர் நிகழ்த்தும் அபாயத்தைக் குறைத்து மதிப்பிடுவது மிகத் தவறான படிப்பினையையேத்தரும்.

இந்த தவறுக்காக..எளிய ஜனங்கள் ஏராளமான மகத்தான மனித உயிர்களையும்..எக்கச்சக்க பொருள் சேதத்தையும் பெருவிலையாய்க் கொடுத்ததே வரலாறு.இத்துயரம் மீண்டும் நிகழாதிருக்க வேண்டுமென்றால்,போர்த் தொடங்குவதற்கு முன்பே இதற்கு எதிராக போராட மக்களைத் தயார்ப்படுத்த வேண்டும்

-வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழி இல்லை இவ்வுலகில் அன்னையே..

 

-துடைக்கலாம் வெறுப்பை…அன்பெனும் தம்மத்தால்..மகனே…!

மனிதரில் ஒரு சிலரே..வாழ்வுநதியின் அக்கரையை அடைவர்..பலரோ

இக்கரையிலேயே வாழ்ந்து முடிகின்றனர்

-கன்னடக்கழனிகளைக் காக்கும் அன்னையே.. அறம் சார்ந்த உங்கள் வினாக்கணைகளை எதிர்கொள்ள எந்த கேடயமும் என்னிடம் இல்லை..நின்னைச் சரணடைந்தேன்..என்னம்மா..எனினும் மாசக்தி ..மாதா..தங்களிடம் ஒரு வரம் கேட்பேன்..இந்த் பொழுதில் இறந்து கொண்டிருக்குமுன் புதல்வனின் கருணை மனுவை ஏற்பாயா..

– தூங்காதவர்க்கு இரவு நீளம்…களைப்புற்றோருக்கு பயணமோ தூரம்

மேனிலையான அறிவினைப் பெறாதவர்க்கு வாழ்வே பெரும்பாரம்

அரற்றிக்கொண்டிருப்பவள்..அழுகையொலிக் கேட்கணுமோ….கேள்..கேட்ட வரம் தருவேன்..கேளடா மானிடவா..

-விடுதலையை நேசித்த என் கல்லறையை உன் அலைக்கரங்கள் தினம் வருடி தாலாட்ட வேண்டும்..உன் நீரெனும் பாலருந்தி நான் நித்தம் துயில வேண்டும்..இதுவே என் இறுதி விருப்பம்

-வெற்றி பிறருக்கு வெறுப்பை உண்டாக்குகிறது. தோல்வி வலியை உண்டாக்குகிறது வெற்றி தோல்விகளைவிட்டுவிட்ட வாழ்க்கையே மகிழ்வால் அமைதியானது

 

வெள்ளி வெள்ளி டுப்பாக்கியாம்எங்க திப்பு

வெடிமருந்து பாஷாணமாம்

பாஷானம் வெடிச்சதனால்எங்க ராசா

பரலோகம் போனாங்களாம்

செஞ்சிக்கும் சில்லாவுக்கும் 

சேத்துப் பொணைக்கும் வண்டி

 சிறு தொண்டர் ஓட்டும் வண்டிதிப்பு

செத்தான் சேதி கேட்டா செஞ்சி பெரண்டு வரும்என் 

சிறு தொண்டர் கோடிவரும்

மலநாடு..மைசூர்க்கும் மாட்டப் பொணைக்கும் வண்டி

மருதண்டர் வூட்டு வண்டிஎங்க ராசா

மாண்டாண்ணு சேதிகேட்டாமைசூர் பெரண்டு வரும்

அவன்  மக்க ரெண்டும் முன்ன வரும்

 

– பழுத்த இலைமாதிரி இப்போது நீ.மரணத்தை அறிவிப்பவர்கள் உன்னை நெருங்குகிறார்கள் நீண்ட பயணம் நீ செல்ல வேண்டியது..

மகனே..நீ உயர்ந்தவன்..தண்ணீர் விட்டோ வளர்த்தோம்..கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ…என் உயிர் இருக்கும் வரையில் உன்னோடு நானிருப்பேன்….நான் கலக்கும் பூம்புகார் வரையில் உன் புகழ் சேர்ப்பேன்….சென்று வா,,மகனே சென்று வா.!


அடுத்த பகுதி -10
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x