18 July 2024

ஞாயிற்றுக் கிழமை மதியம் சாப்பிட்ட கறிக்குழம்பு வாசம் வீட்டைச் சுற்றிக் கொண்டிருந்தது.

சமைத்த பாத்திரங்களும் எச்சில் தட்டுகளும் சமையலறையில் குவிந்திருந்தன. திலகா அக்கா சமையலறையை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். மகா, அன்னக்கூடையில் பாத்திரங்களை அள்ளிப் போட்டு தோட்டத்துக்குக் கொண்டு சென்றாள். சீக்கிரமே பாத்திரங்களைக் கழுவி முடித்துவிட்டால் அன்று மாலை டீவியில் படம் பார்க்கும்போது அக்கா திட்டமாட்டார் என்பதால் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்துவிட்டு, வீட்டையும் சுத்தமாகப் பெருக்கி எடுத்தாள்.

மகாவின் கோடைக்கால விடுமுறை எப்போதும் அக்கா வீட்டில் தான். வெற்றிகரமாக ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றிருப்பதாக ஊரிலிருந்து சொல்லியனுப்பி இருந்தார்கள். பள்ளிக்கூடம் திறக்கப் போகும் அந்த முதல் நாளுக்காகக் காத்திருந்தாள். அவளுக்குச் சீக்கிரமே ஒன்பதாம் வகுப்புக்குப் போக வேண்டும் எனப் பேராசை இருந்தது. ஒன்பதாம் வகுப்பென்பது அவளைப் பொறுத்தவரை பாவடைச் சட்டையிலிருந்து பாவாடை தாவணிக்கு பதவி உயர்வு அடைவது. ஒவ்வொரு நாள் தூங்கும்போதும் தாவணிப் பாவாடையில் மணி அக்கா போல, கலை அக்கா போல அழகாக பள்ளிக்குச் செல்வதை நினைத்துப் பார்ப்பாள். அவளது அப்போதைய பெருங்கனவு தாவணிப் பாவாடை அணிவது மட்டும் தான்.. அதிலும் பட்டுப்பாவாடை அணியப் போகும் நாள் எப்போதுதான் வருமோ என்று ஏங்காத நாள் இல்லை.

திண்ணையில் அம்மா தூங்கிக் கொண்டிருந்தார். இல்லை. படுத்துக் கொண்டிருந்தார். அம்மாவின் உடலை நோய் முழுவதுமாகத் தின்றிருந்தது.

மாட்டுக்குப் புண்ணாக்கு கலந்து வைத்துக் கொண்டிருக்கும்போது மயக்கம் வந்து விழுந்தவர் தான். மருத்துவமனைக்குக் கொண்டு போக, வயிற்றில் கட்டி என்று சொல்லிச் சிகிச்சை மேல் சிகிச்சை என்று மருந்து மாத்திரைகளோடு அறுபடாத பந்தம் உருவாகிவிட்டது. திலகா அக்கா தான் கூடவே வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆறு மாதத்திற்கும் மேலாகப் படுத்தப் படுக்கையாக, அக்கா வீட்டுத் திண்ணையே கதியாகத்தான் இருக்கிறார் அம்மா. திரைச்சீலையைப் போட்டு திண்ணையை அம்மாவுக்கு ஒரு அறை போல மாற்றியிருந்தார்கள். அந்த மெல்லிய இருட்டுக்குள் மாத்திரைகளும் அவ்வப்போது வலியில் அழும் குரலும் பிறகு மயான அமைதியும் மட்டுமே நிறைந்திருக்கும்.

வீட்டில் திலகா அக்காவும் அவரது இரண்டு பிள்ளைகளும் மகாவும் டீவியின் முன் அமர்ந்துவிட்டார்கள். ஞாயிற்றுக் கிழமை மாலை வாழ்வே மாயம் திரைப்படம் என்று முந்தின நாளே அறிவிப்பு வந்திருந்தது. அதனால் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுப் படம் பார்க்கத் தயாராகிவிட்டார்கள். படத்தின் இறுதிக் காட்சிக்கு முன்பாகச் செய்தி வாசிப்பிற்கான நேரம் வந்ததும் அக்கா இரவு உணவுக்கு என்ன செய்யலாம் என்று கேட்டபடியே எழுந்தார்.

ஹாலில் இருந்து சமையலறைக்குச் செல்லும்போதெல்லாம் வலது புறத்தில் இருந்த திரைச்சீலையை விலக்கி அம்மா என்ன செய்கிறார் என்று பார்ப்பது வழக்கம். அதேபோல் பார்த்த திலகா அக்கா கத்தி அழத் தொடங்கினார்.

அம்மாவின் பார்வை நிலைகுத்தி இருந்தது. ஆனால் மூச்சு இருந்தது. வெளியில் சென்றிருந்த மாமாவுக்கு போன் செய்து வரச் சொன்னார். டாக்டரும் மாமாவும் வந்து சேர்ந்தார்கள். திலகா அக்காவின் குழந்தைகள் இருவரும் மகாவைக் கட்டிக் கொண்டு என்ன நடக்கிறது எனப் புரியாமல் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தனர். மகாவுக்கும் எதுவும் புரியவில்லை. திலகா அக்கா, அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தார். மகாவுக்கு அழக் கூட வரவில்லை. உறைந்து போயிருந்தாள்.

“நினைவு தப்பிடுச்சி.. ஊருக்குச் சொல்லிடுங்க…”

சலனமற்ற முகத்துடன் மிக மெதுவான குரலில் சொல்லிவிட்டு டாக்டர் திண்ணையிலிருந்து எழுந்து கொண்டார்.

இரவு யாருமே சாப்பிடவில்லை. காருக்குச் சொன்னார்கள். நள்ளிரவில் மகாவின் அப்பா வந்து சேர்ந்தார்.

நினைவு தப்பிப் போன அம்மாவைத் தோளில் சாய்த்தபடி அப்பா காரின் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டார். அக்கா அம்மாவின் அருகில் அமர்ந்து கொள்ள மகாவும் குழந்தைகளும் டிரைவர் அருகில் உள்ள சீட்டில் அமர்ந்து கொண்டனர். கார் கிராமத்திற்குப் புறப்பட, காரைப் பின் தொடர்ந்தபடி மாமா பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

மகா, பின்னிருக்கையைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தப் பத்து வருடத்தில் அவள் இதுவரை அம்மாவையும் அப்பாவையும் இப்படிப் பார்த்ததே இல்லை. அவளுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டதேயில்லை.

 

ப்போது, முதல் வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றிருந்தாள் மகா.

முதல் நாள் வகுப்பின் முதல் மணி நேரம். மணியடித்த கொஞ்ச நேரத்தில் வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையுமாக வகுப்பறைக்குள் நுழைந்தார் ஆறுமுகம் சார். அந்தத் தொடக்கப் பள்ளியில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பதாகச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டார்.

“எல்லாரும் உங்க பேர், உங்க அப்பா அம்மா பேர், எங்க இருந்து வர்றிங்க? வரிசையா எழுந்து நின்னு சொல்லுங்க பார்ப்போம்?”

இடது பக்கமிருந்து ஆரம்பிக்கச் சொன்னதால் பையன்கள் ஒவ்வொருவராக எழுந்து சொல்லிக் கொண்டே வந்தனர். வலது பக்கம் பெண்பிள்ளைகள். மகா முதல் வரிசையில் அமர்ந்திருந்ததால் பையன்கள் எல்லாம் சொல்லி முடித்ததும் பெண்கள் வரிசையில் மகா தான் முதலில் எழுந்து கொள்ள வேண்டியிருந்தது.

வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையில் இரண்டு கைகளைகளையும் கட்டிக் கொண்டு, நெளிந்தபடியே அவள் பெயரையும், அவள் அம்மா பெயரையும் சொல்லிவிட்டு, அப்பா பெயர் சொல்லத் தெரியாமல் தடுமாறினாள். நீண்ட நேரம் நெளிந்து கொண்டே இருந்ததால்  “சீக்கிரம் சொல்லு. மத்தவங்களும் சொல்லனும்ல” என்று கடுமையான குரலில் சொன்னதும் வாய்க்குள் இருந்து பயம் அழுகையாக வெடித்துச் சிதறியது.

“ஏன் அழறிங்க… சரி நாளைக்கு வரும்போது உங்க அப்பா பேர் என்னனு உங்க அம்மாகிட்ட கேட்டுட்டு வந்து சொல்லுங்க… கண்ணைத் துடச்சிக்கோ.. உட்காரு இப்போ” என்று சொல்லிவிட்டு, அடுத்தடுத்த பெண் பிள்ளைகளை எழுந்து சொல்லச் சொன்னார். எல்லாரும் சொல்லி முடிக்கவும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

“நன்றி அய்யா……..” என்று கோரசாக எல்லோரும் சொல்ல ஆறுமுகம் சார் வகுப்பிலிருந்து கிளம்பினார். வகுப்புத் தோழிகள் எல்லாரும் மகாவைச் சூழ்ந்து கொண்டு நிஜமாவே உங்க அப்பா பேரு தெரியாதா என்று கேட்டு நச்சரிக்கத் தொடங்கினர்.

யாருக்கும் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தாள்.

மாலை கடைசி பெல் அடித்ததும், மாலை நேர பிரேயர் எப்போது முடியுமெனக் காத்திருந்தவள், பிரேயர் முடிந்ததும் ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் ஓடினாள். பள்ளிக்கூடத்திலிருந்து ஐந்து நிமிட ஓட்டத்தில் வீடு சேர்ந்து விடலாம். அவ்வளவு பக்கத்தில் இருந்தது வீடு.

“அம்மா, அப்பா யார் மா… அப்பா பேர் என்ன மா…?”

பள்ளிக்கூட பையைக் கழட்டி ஆணியில் மாட்டியபடியே கேட்டாள். அம்மா எதுவும் பேசவில்லை. முகம் கழுவிட்டு வா… என்றபடி தட்டில் கொஞ்சம் முறுக்கும் பிஸ்கட்டும் எடுத்து வைத்தாள்.

“இங்கயே சாப்பிட்டு விளையாட போ… பாக்கெட்டில் எடுத்துப் போட்டுட்டு போகாத…” என்றபடியே அடுப்பில் புகைந்து கொண்டிருந்த விறகை ஊதாங்கோலால் ஊதினாள்.

தட்டைக் காலி செய்து, ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடித்துவிட்டுச் சிட்டாகப் பறந்து போனாள் தெருவுக்கு.

தெருவிளக்கு போட ஆரம்பித்ததும் வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்பதுதான் அவளுக்குச் சொன்ன கட்டளை. அதை ஒருநாளும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டதேயில்லை. வீட்டு வாசலில் இருந்தபடி பத்து முறை பெயர் சொல்லி அழைத்தபிறகு பதினோறாவது முறை தான் மகாவுக்கு அம்மாவின் குரல் கேட்கும்.

“நாளைக்குப் பாத்துக்கலாம்டி” என்றபடி, ஆட்டத்தை அப்படியே விட்டுவிட்டு வேர்த்து விறுவிறுக்க வீட்டுக்கு ஓடுவாள். வெதுவெதுப்பான நீர் பித்தளை அண்டாவில் தயாராக இருக்கும். அம்மா, திட்டுவாரோ, அடிப்பாரோ என்ற பயமெல்லாம் கொஞ்சமும் இல்லை. ஏனென்றால் அவள் அம்மா ஒருநாளும் அவளை அதிர்ந்து பேசியது இல்லை. அடித்ததும் இல்லை.

வியர்வையில் நனைந்திருக்கும் கவுனை அவிழ்த்துவிட்டு ஜட்டியோடு நிற்பாள். அம்மா வந்து தான் குளிக்க வைக்க வேண்டும். ஈர உடலைத் துவட்டி, இன்னொரு கவுனைப் போட்டுவிட்டு, சாப்பாடு ஊட்டி விடுவாள். பிறகு, தோட்டத்து வாசலில், பக்கத்து வீட்டு அண்ணி, அத்தை, ஆயா இவர்களோடு அம்மாவும் சேர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பார்கள். இவள் அம்மாவின் மடியில் தலை வைத்தபடி அந்தப் பேச்சுகளைக் கேட்டபடியே தூங்கிவிடுவாள். காலையில் எழும்போது அறையில் அம்மாவின் புடவைக்குள் சுருண்டபடி கண்விழிப்பாள்.

தூங்கி எழுந்ததும் முதல் வேலை தோட்டத்து வாசற்படியில் குத்துக் காலிட்டு அமர்ந்தபடி, கண்களை மூடிச் சாமியாடிக் கொண்டிருப்பதுதான். அம்மா, நன்றாக ஆற்றி, இளம் சூட்டுடன் தேநீர் டம்ளரைக் கையில் கொடுத்ததும் தேநீர் வாசனையை உள்ளிழுத்தபடிக் கண்களைத் திறப்பாள்.

அம்மா கொடுத்த டீயை உறிஞ்சிக் குடித்துத் தூக்கத்தைக் கண்களிலிருந்து விரட்டிக் கொண்டிருந்தபோது, அம்மாவின் கை தலையில் படுவதை உணர்ந்து மேலே தலையை உயர்த்தினாள்.

இரண்டு பேர் சேர்ந்து இரண்டு கைகளால் அணைத்துக் கொள்ளும்படி உடல் பருத்திருந்த கருவேல மரம் தோட்டத்து வாசலில் உடலைச் சாய்த்து நீண்டு பின்பு மேலுயர்ந்து வளர்ந்து படர்ந்திருந்தது. அதன் அருகில் கயிற்றுக் கட்டிலில் வெள்ளை வேட்டியும் வெள்ளை சட்டையும் அணிந்தபடி கையில் பீடியுடன் அமர்ந்திருந்த நபரைக் காட்டி அம்மா சொன்னாள்,

“அங்க உட்கார்ந்திருக்காரே அவர் தான் உங்க அப்பா. பேரு நாகராசு. அவரை நீ அப்பானு சொல்லக் கூடாது. அய்யானு தான் கூப்பிடனும்…”

“இவ்ளோ நாள் ஏன் சொல்லல…?”

மகாவின் கேள்வி முடியும் முன்பே அம்மா அங்கிருந்து அடுப்பங்கரைக்குப் போயிருந்தாள்.

’நாகராசு….

அய்யா…’

மனதுக்குள் சொல்லிக் கொண்டே குளிக்கப் போனாள் மகா.

அப்போதிருந்து அம்மா அடையாளம் காட்டிய அப்பா, அவளது பார்வையில் பட ஆரம்பித்தார். இல்லை… அவள் அய்யாவைக் கவனிக்கத் தொடங்கியிருந்தாள்.

ஆனால், அம்மாவைப் போல் ஒட்டுதல் இருக்கவில்லை அய்யாவிடம். மகாவுக்கு அம்மா தான் உலகம்.

மகா, விளையாடி முடித்து வீடு திரும்பியபின், வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருக்கும் போது,

சிவகாமி… என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்ப்பாள். அந்த ‘அய்யா’ தோளில் போட்டிருந்த மடிப்பு கலையாத துண்டை தரையில் தட்டி, இல்லாத தூசியைத் துடைத்துவிட்டு சுவரில் சாய்ந்து வீட்டின் உட்புறத்தைப் பார்த்தபடி அமர்வார்.

இஸ்திரி கலையாத வேட்டி சட்டை. எண்ணெய் தடவி படிய வாரிய கருகரு தலைமயிர். கையில் எப்போதும் கருப்புப் பட்டை போட்ட வாட்ச். சவரம் செய்த மொழுமொழு முகம். நெஞ்சு முழுக்க படர்ந்திருக்கும் ரோமங்கள். இரண்டு பேரப்பிள்ளைகள் வந்துவிட்டபோதும் பார்க்க மைனர் போன்ற மிடுக்கு குறையாமலிருப்பார்.

அய்யாவின் குரல் கேட்ட அடுத்த நிமிடமே, ஒரு தட்டில் சோறு, ஒரு கிண்ணத்தில் குழம்பு, சின்ன கிண்ணத்தில் பொறியல், ஒரு சொம்பில் தண்ணீர் என அடுத்தடுத்துக் கொண்டு வந்து வைத்துவிட்டு போய்விடுவார் அம்மா. ஒரு வார்த்தையும் பேச மாட்டார். முகத்தைக் கூட பார்க்க மாட்டார். அய்யாவும் சாப்பிட்டுவிட்டு, தட்டிலேயே கையைக் கழுவுவார். தெருவாசலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுப் படுத்துவிடுவார். அம்மா கொண்டு வந்து வைத்த சோற்றை மிச்சம் வைத்ததாகவோ, கூடுதலாகச் சோறு கொண்டு வா என்று கேட்டதாகவோ மகாவுக்கு நினைவில்லை.

கட்டிலில் படுத்துக் கொண்டு சத்தமாகப் பாரதக் கதையை ராகம் போட்டுப் பாடுவார். அவர் பாடும் பாரதக் கதைப் பாடல்களைத் தெருக்கூத்துகளில் இவள் கேட்டிருக்கிறாள். மகாவின் அய்யா தெருக்கூத்துகளை ரசிக்கும் பெரும் ரசிகர். எங்கே கூத்து நடந்தாலும் கிளம்பிப் போய்விடுவார். கூத்தின் இடையிடையே மைக்கில் அவர் பெயர் சொல்லி அந்தக் கூத்தில் நடிக்கும் முக்கியக் கதாப்பாத்திரங்களுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்திருக்கிறார், நூறு ரூபாய் கொடுத்திருக்கிறார் என்று அறிவிப்பார்கள். காலையில் கூத்து முடிந்து எல்லோரும் சென்றபிறகும் அப்பா மட்டும் கூத்துக் கலைஞர்களோடுதான் இருப்பார். அவர்களுக்கான சாப்பாடு, சரக்கு, பீடி எல்லாமும் அவர் செலவு தான்.

“என்ன டி மகா, உங்க அய்யா, கூத்துக்காரங்களுக்குத் துணி மணிலாம் எடுத்துக் கொடுக்கிறாராம்.. திரௌபதி வேஷம் கட்டினவங்களும் ஆம்பள தான்.. உங்க அய்யா நெசமான பொம்பளனு உனக்குச் சித்தியாக்கிடப் போறாரு”

வயசுக்கு வந்த பக்கத்து வீட்டு அக்காக்கள் மகாவைக் கிண்டல் செய்வார்கள். அவளுக்கு எதுவும் புரியாது. எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக அங்கிருந்து நகர்ந்து விடுவாள்.

நாளாக நாளாக அய்யா, அவளோடு பேச ஆரம்பித்தார். அது ஒருவகையான கொடுக்கல் வாங்கல் பேச்சு மட்டுமே. ஒருபோதும் மகாவைப் பெயர் சொல்லி அவர் அழைத்ததே இல்லை.

”கழுத.”

இதுதான் மகாவை அவள் அய்யா கூப்பிடும் பெயர். சிலநேரங்களில் தன் பெயர் மகாவா கழுதையா என்று அவளுக்குச் சந்தேகமே வந்துவிடும்.

ஒருநாள் மத்தியான நேரம். சக தோழிகளோடு விளையாடி முடித்துவிட்டு பசியோடு வீட்டுக்கு வந்தாள். மாட்டுக் கொட்டகையில் கயிற்றுக் கட்டிலில் வெள்ளை பனியனும் வெள்ளை வேட்டியும் அணிந்திருந்த அப்பா, பீடி புகையை இழுத்து விட்டபடி,

“கழுத… இங்க வா… கடைக்குப் போய் கணேஷ் பீடி வாங்கிட்டு வா…”

என்று சொல்லிக் கொண்டே வலது பக்கக் கட்டில் கால் முனையில் தொங்கிக் கொண்டிருந்த வெள்ளைச் சட்டைப் பையில் இருந்து பத்து ரூபாய் தாளைத் துழாவி எடுத்தார்.

மறுப்பேதும் சொல்லாமல் காசை வாங்கிக் கொண்டு சற்குணம் கடைக்குப் போய் கணேஷ் பீடி கட்டை வாங்கி வந்து கொடுத்தாள். மீதிச் சில்லறையை அவர் கேட்கவேயில்லை. அதைக் கொண்டு போய் அவள் உண்டியலில் போட்டுக் கொண்டாள்.

அதன்பிறகு, அவளுக்கும் அவள் அய்யாவுக்குமான உறவும் பேச்சும் கணேஷ் பீடி வாங்கி வரும் வேலை சார்ந்து மட்டுமே இருந்தது.

அய்யாவிடம் பேசுவதற்கு அவளுக்கு ஆசை இருந்தது. சொல்வதற்கும் கேட்பதற்கும் நிறைய கதைகள் இருந்தன. அய்யாவோடு கயிற்றுக் கட்டிலில் சேர்ந்து உறங்க வேண்டும், அவர், மாட்டு வண்டி ஓட்டிச் செல்லும்போது உடன் உட்கார்ந்து கொண்டு மாட்டின் வாலைத் திருகி, வண்டியின் வேகத்தைக் கூட்ட வேண்டும், அய்யாவின் கைபிடித்தபடி, திருவிழாக்களுக்குப் போய் கடைத்தெருவில் வளையல், சொப்பு சாமான்கள் வாங்கி வர வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக, இவர் தான் எங்க அய்யா என்று பள்ளிக்கூடத்தில் எல்லாருக்கும் காட்ட வேண்டும்… இப்படி நிறைய நிறைய ஆசைகள் இருந்தன.

ஆனால், அம்மா ஒரு வார்த்தையும் பேசாமல், முகத்தைக் கூட பார்க்காமல் இருப்பதால் அவளுக்கும் அய்யாவிடம் பேச ஒரு வார்த்தையும் இருக்கவில்லை.

அவள் எப்போதுமே அம்மா பொண்ணாகவே இருந்தாள். சிவகாமி பொண்ணு என்று சொல்வதைத்தான் விரும்பினாள்.

அம்மாவும் அய்யாவும் ஏன் பேசுவதேயில்லை. ஏன் அய்யா, திண்ணையைத் தாண்டி வீட்டுக்குள் வருவதேயில்லை. முகம் கொடுத்து பேசாத அம்மா, அவர் குரல் கேட்டதும் ஏன் சாப்பாடு தருகிறார், எப்போதிருந்து அவர்கள் இருவருக்கும் இடையில் இப்படியொரு கனத்த மௌனம் ஒட்டிக் கொண்டது. பெரியப்பாவோ, பெரியம்மாவோ, அண்ணனோ அக்காவோ, பக்கத்து வீட்டு அத்தையோ ஏன் யாருமே இவர்களைச் சமாதானம் செய்யவில்லை.

அய்யா வீட்டில் இல்லாத பகல் நேரத்தில் கயிற்றுக் கட்டிலில் கால் மேல் கால் போட்டு படுத்தபடி மாட்டுக் கொட்டகையின் கீற்றுகளைப் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருப்பாள். அம்மாவிடம் கேட்டால் ஒருவேளை அதற்கான விடை கிடைத்திருக்கலாம்.  இல்லையெனில், ’சின்ன புள்ள நீ.. இதெல்லாம் உனக்கு இப்போ தெரிய வேண்டாம்’ என்று சொல்லியிருப்பாரோ… ஏனோ எதையுமே கேட்கவில்லை.

சில சமயம், மாலையில் பள்ளிக்கூடம் விட்டு வரும் வழியில் அய்யாவை ஒரு தேநீர்க் கடையில் பார்ப்பதுண்டு. பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் ஒரேயொரு டீக்கடை அது மட்டும் தான். டீக்கடையின் உள்ளேயும் வெளியேயும் சில பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். எப்போதும் கடையில் கூட்டம் நிரம்பியிருக்கும். டீ மாஸ்டரின் கைகள் வானத்தில் வட்டமிடும் பறவையைப் போல பறந்து கொண்டிருக்கும். டீ கிளாஸை எடுப்பதுதான் தெரியும். பக்கத்தில் இருக்கும் பாத்திரத்தில் இரண்டு முக்கு முக்கி, க்ளாஸை நிமிர்த்தி வைத்து, சர்க்கரை டப்பாவில் இருந்து அரை டீஸ்பூனா ஒரு டீஸ்பூனா என்று கண்கள் பார்த்து அளக்கும் முன்னரே, சர்க்கரை டீ க்ளாஸுக்குள் ஈரத்தில் கரையத் தொடங்கியிருக்கும். பாலை ஊற்றி, டிக்காஷனை கிளாஸின் உள்ளேயும் வெளியேயுமாக ஊற்றின வேகத்தில், டிக்காஷன் பாலின் நடுப்பகுதியை நோக்கி மெல்ல இறங்கத் தொடங்குவதற்குள் ஆகாயத்தைத் தொட்டுத் திரும்புவது போல டீ கிளாஸில் இருக்கும் டீயை ஆற்றி, அங்கே தேநீருக்காகக் காத்திருப்பவர்களிடம் நீட்டுவார். டீக்கடையில் எல்லா வயது ஆண்களும் டீ குடிப்பார்கள். ஏன் இந்த அம்மாக்கள், பெரியம்மாக்கள், அத்தைகள், அக்காக்கள் டீக்கடையில் நின்று டீ குடிப்பதில்லை. டீக்கடை பெஞ்சில் அமர்ந்து பேப்பர் படிப்பதில்லை.

கேட்கப்படாத கேள்விகளும் விடை சொல்லப்படாத கேள்விகளும் அவளிடம் நிறையவே இருந்தன.

அவளது அய்யா, ஒரு போதும் தனியாக நின்று டீ குடித்து அவள் பார்த்ததே இல்லை. எப்போதும் நான்கைந்து பேர் சுற்றியிருக்க ஒரு கையில் டீயும் மறு கையில் சிகரெட் அல்லது பீடியும் இருக்கும். அப்படி என்னதான் பேசுவார்களோ… ஆனால், அம்மாவிடமும் தன்னிடமும் ஏன் அவர் இப்படிப் பேசுவதேயில்லை என்ற கேள்வி அவளைத் துளைத்தெடுத்தது.

 

காரின் முன்பக்கச் சீட்டிலிருந்து பின்பக்கம் திரும்பிப் பார்த்தாள். நினைவு தப்பிய அம்மாவின் தலை அய்யாவின் தோளின்மீது சாய்ந்திருந்தது. அம்மாவின் கடைக்கண்ணில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அய்யாவின் முகத்தில் சோகமும் மௌனமும் அப்பியிருந்தது. ஆனால் அழவில்லை.

சுமார் 3 மணி நேரக் கார் பயணத்தில் யாருமே எதுவும் பேசவில்லை. மகாவின் மடியில் அமர்ந்திருந்த அக்காவின் ஐந்து வயது மகள் வாயில் ஜொள் வடிய தூங்கிக் கொண்டிருந்தாள். மூன்று வயதேயான தன் மகனை மார்போடு அணைத்தபடி அக்கா அழுது வீங்கிய கண்களோடு அமர்ந்திருந்தாள்.

வீட்டின் முன்பு கார் நின்றதும், அங்கே செய்தி அறிந்து கூடியிருந்த எல்லாரும் கதறியழத் தொடங்கினர். அய்யாவுக்குத் தினமும் இரவில் சாப்பாடு கொண்டு வந்து வைத்த அதே திண்ணையில் அம்மாவைக் கிடத்தினார்கள். அம்மாவின் அருகில் மகாவை அமர வைத்தனர்.  ‘அம்மானு கூப்பிடு.. அம்மானு கூப்பிடு’ என்று சுற்றியிருந்த அண்ணிகள், அத்தைகள் சொல்லச் சொல்ல மகாவுக்கு அழுகை பீறிட்டது.

அம்மாவின் கடைக்கண்ணில் அருவியைப் போல கண்ணீர் வழிந்தது. சற்று நேரத்தில் அந்தக் கண்ணீரின் வழியே அம்மாவின் உயிர் வெளியேறியிருந்தது. தலையிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு எல்லோரும் அழ, மகாவை அங்கிருந்து ஐந்து வீடு தள்ளியிருக்கும் அத்தை வீட்டில் கொண்டு போய் விட்டார் அண்ணி ஒருவர்.

“நாங்க கூப்பிடும் வரை இங்கே தான் இருக்கனும்”

ஏன் என்று கேட்டுப் பழக்கமில்லாத அவள், தனியே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். ஊரே கேட்கும்படி பறையோசை துள்ளாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. அவள் வீட்டிலிருந்து பறையடிக்கும் ஓசைக்கு இடையிடையே ஆயாக்களின் ஒப்பாரிக் குரல்கள் கேட்டபடி இருந்தன. நீண்ட நேரம் அழுது கொண்டிருந்ததால் கண்கள் வலித்தது. இரவும் தூக்கம் இல்லாததால் அப்படியே தூங்கிவிட்டிருந்தாள்.

மாலையில் அவளை எழுப்பி, இறுதிச் சடங்கிற்கு அழைத்துச் சென்றனர். எல்லா கடமைகளையும் முடித்து அம்மா தனது இறுதிப் பயணத்தைத் தொடங்கிவிட்டார். ஆண்கள் எல்லோருமே சுடுகாட்டை நோக்கிச் செல்ல, பெண்கள் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு அழுதனர்.

அம்மாவைப் பற்றிய பசுமையான நினைவுகளைச் சொல்லிக் கொண்டும் அழுது கொண்டும், சுடுகாட்டிலிருந்து திரும்புவதற்குள் படைப்பதற்காக, வீட்டைச் சுத்தம் செய்தார்கள். தோட்டத்து வாசலில் அடுப்பு வெட்டி, பெரிய பெரிய பாத்திரத்தில் சாப்பாடு தயாரானது. சென்னையில் இருந்து வந்திருந்த அவளது பெரிய அத்தை எல்லோருக்கும் டீ போட்டு கொடுத்தார். டீயைக் குடித்துவிட்டு ஒவ்வொருவராக குளித்து உடை மாற்றிக் கொண்டு ஈரத்தலையுடன் சாமி அறைக்கும் வாசலுக்குமாக வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தார்கள்.

சுடுகாட்டில் எல்லா காரியங்களையும் முடித்துவிட்டுத் திரும்பிய அய்யா, குளித்துவிட்டு, ஈர உடையை அங்கேயே கழற்றிவிட்டு, புது வேட்டி அணிந்து துண்டை தோளில் போட்டுக் கொண்டு நெற்றியிலும், கைகளிலும் கருகருவென முடி வளர்ந்திருந்த நெஞ்சிலும் திருநீற்றுப் பட்டையைப் பூசிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்.

திண்ணையைத் தாண்டி, தன் அப்பா வீட்டுக்குள் வருவதை, சாமி அறைக்குள் நிற்பதை, காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றிக் கற்பூரம் காட்டுவதை முதன் முறையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் மகா.


 

எழுதியவர்

மனுஷி
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரைச் சார்ந்த மனுஷி-யின் இயற்பெயர் ஜெயபாரதி. தற்போது இவர் புதுச்சேரி பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். யுவ புரஸ்கார் (இளம் சாகித்ய அகாடமி) என்னும் தேசிய அளவிலான விருதினை 2017-ஆம் ஆண்டில் பெற்றவர். இவரது படைப்பான ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள் என்னும் நூலே இவருக்கு இந்த விருதினைப் பெற்றுக் கொடுத்தது. முத்தங்களின் கடவுள் நூலுக்காக சென்னை இலக்கியக் கழகத்தின் இளம் படைப்பாளி விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.


இதுவரை எழுதியுள்ள நூல்கள்:
குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்-மித்ரா பதிப்பகம் (2013),
முத்தங்களின் கடவுள்-உயிர்மை பதிப்பகம் (2014),
ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்-உயிர்மை பதிப்பகம், (2015),
பின்பற்றவிரும்பும் கவிஞர்---கவிஞர் இளம்பிறை,
கருநீல முக்காடிட்ட புகைப்படம் - வாசகசாலை பதிப்பகம் (2019),
யட்சியின் வனப்பாடல்கள் - வாசகசாலை பதிப்பகம் (2019)
Subscribe
Notify of
guest

4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
M.ARJUNAN
M.ARJUNAN
1 year ago

மிகச் சிறப்பான கதை.

ராஜேஷ் ராதாகிருஷ்ணன்

கதை நெடுக நிறைந்திருந்த கனம், முடிந்தும் சில கணம் இலகாமல், மகாவின் கேள்விகளை நெஞ்சோடு மறுஆய்வு செய்தபடியே…

Bharath
1 year ago

சிறப்பான கதை.

Anand
Anand
1 year ago

களத்திற்குள் ஈர்த்துக்கொண்ட கதை

You cannot copy content of this page
4
0
Would love your thoughts, please comment.x
()
x