மனதுக்கு நெருக்கமான எத்தனை படங்கள், எத்தனை பாடல்கள், எத்தனை நாயகர்கள், நாயகிகள், காமெடியன்கள், ஆட்டக்காரர்கள்.
மெல்ல பின்னோக்கிய சிந்தனையில் அது ஒரு கனவு காட்சியைப் போல விரிந்து கொண்டே செல்கிறது. கனவுகளில் வண்ணம் இருக்காது என்பது அறிவியல். ஆனால் இந்த வண்ணக் கனவுகளின் நிழல் காணும் காட்சிகள் அத்தனையுமே நிறங்களாலும் வரங்களாலும் சூழப் பட்ட பிலிம் ரோல்கள்.
ஒரு நிதானத்தோடு வெளிவந்த சினிமாக்கள் தங்களின் சாயங்களை சேர்க்கவோ பூக்கவோ கண்டைந்திருந்தன. மூன்றாம் கண்ணில் ஓடிக் கொண்டே இருக்கும் திரைப்படங்களை மறக்க முடியாத தருணத்தில்தான் சினிமாவின் சந்து பொந்துகளைத் தேடத் தோன்றியது.
“இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்…. நம்ம எம் ஜி ஆர் வந்ததும் என் டி ஆர் வந்ததும் இந்த சினிமாதான்…” ஆனால் அதே நேரம்…வந்து வந்து போனவர்கள்…. வந்தவுடன் போனவர்கள்… வரும் போதே போனவர்கள் எத்தனையோ பேர். சினிமா ஒரு பக்கம் மலை உச்சியினாலும்… மறுபக்கம்…பள்ளத்தாக்காலும் உருவானவை.
ஜாம்பவான்கள் சரிந்த கதையும் உண்டு. சல்லிகள் ஜெயித்த கதையும் உண்டு.
இருட்டு தேசத்தில் மெல்ல கீறிடும் வெளிச்ச கவிதைகளை மழையாகவோ, வெயிலாகவோ, பனியாகவோ, வெளியாகவோ உதிர விடுவதில் நிஜம் மறந்த மரணம் தாண்டிய ஒரு புல் வெளி சறுக்கலில் எந்த மனமும் சறுக்கத்தான் செய்தது. ஒரு நிதானத்தோடு வெளிவந்த அந்த சினிமாக்கள் தங்களின் சாயங்களை சேர்க்கவோ பூக்கவோ கண்டைந்திருந்தன. மூன்றாம் கண்ணில் ஓடிக் கொண்டே இருந்த திரைப்படங்களை மறக்க முடியாத தருணத்தில்தான் ஒரு பனிச் சறுக்கில் உருளும் விழிகளின் துடிப்பை தேட தோன்றியது. மனதுக்குள் ஒரு வகை சாந்தத்தை ஒரு கால கட்டம் சினிமாக்கள் தந்தன. அப்படித்தான் என்னால் பார்க்க முடிகிறது. அது எனக்கான பால்யத்தின் காலங்களாகவும் இளமையின் காலங்களாகவும் இருந்த 80களும் 90களும்தான்.
நேராக ஓடிச்சென்று திரைக்குள் நுழைந்து விடும் அற்புத கணங்களை கொண்ட கால கட்டம் அது.
இன்று எத்தனை டேக், எந்த இடத்தில் சி.ஜி, எந்த இடத்தில எடிட்ங் ஜம்ப் என்று எல்லாம் தெரிந்த நாளில் கட் ஆகி கட் ஆகி தான் பார்க்க முடிகிறது. ஒரு ரசிகன் காணாமல் போய் ஒரு விமர்சகன் மேல் எழுந்து வந்து விட்டான்.
துருப்பிடிக்காத துயர நெடிகளாக இதயத்தின் மூளைக்குள் இன்னும் இரண்டு கண்களோடு திறந்தே கிடக்கிறது…. என் பால்ய சினிமா. அது இடைவேளை முறுக்குகளாலும்… இடைவேளைக்குப் பிறகு கையோடு டாக்கீஸ்க்குள் கொண்டு வரும் ரோஸ் மில்க்குகளாலும் நிறைந்து இருக்கின்றன. காடுகளற்ற பயணத்தில் கிரீச்சிடும் மரங்களின் நினைவுக்குள் படங்களின் கூடு கலையப்படாத ஓவியம். கதாநாயகன் எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்று வேண்டடப்பட்ட சினிமா நாட்கள் அவை.
சினிமா துரத்தும் கனவுக்குள் நான் ஓடி ஓடி ஓடி காணாமலே போய் விடும் புள்ளியை உற்றுப் பாருங்கள். அங்கே சூரிய வெளிச்சத்தில் கண்ணாடி கொண்டு பத்து பைசாவுக்கு வாங்கிய வெட்டப் பட்ட பிலிமைக் காட்டி எதிர் வீட்டு சுவற்றில் ஓட்டிக் கொண்டிருக்கும் படத்தில், உங்களுக்கு பிடித்த நாயகன் ஒருவர் இருக்கலாம். ஆம்.. அது துண்டாடப்பட்ட தீவுப்படம். தோணிகளற்று அது தீவுக்குள் ஒரு தீவாகவே நின்று விட்டது. யாரும் பார்க்காத சினிமாவைப் போல .பால்யத்தின் பிலிம்களை தோற்கடிக்க முயற்சிக்கும் டிஜிட்டல் சக்கரத்தின் அடியில்… நசுங்கிக் கொண்டே பிழைத்தும் கொள்ளும் கற்பனைகளின் கூற்றில் நான் காட்சியாகவே ஆசை கொள்கிறேன். எந்த நுனிக்குள் இல்லாமல் போகிறதோ.. நீட்சி… அல்லது எந்த நுனிக்குள்ளும் இல்லாமல்தான் போகிறதோ நீட்சி. திரும்பவும் அடுத்த காட்சி காண வரிசையில் நிற்கும் அற்புத அடுக்கில் அளாவித்தான் திரியும் என் சிறு வயது அலட்டல்…. அன்று பார்த்த படத்தின் சாயலில்.
கார்த்திக், முரளி, சத்யராஜ், விஜயகாந்த், ராம்கி, பிரபு, அர்ஜுன், சரத்குமார், பாண்டியராஜ், ஆனந்த் பாபு, பாண்டியன், ராமராஜன், பார்த்திபன், மோகன், கௌதமி, ரூபினி, சீதா, மாதுரி,. ராதா, அம்பிகா, ஜெயஸ்ரீ, ரஞ்சனி, ரகுவரன், .நதியா, கவுண்டமணி, செந்தில், சார்லி, சின்னி ஜெயந்த்,ரேகா, ரேவதி, ராதிகா,ஷோபனா, பாக்யராஜ், இளவரசி இன்னும் இன்னும் எத்தனையோ நட்சத்திரங்கள்! இவர்களோடு நம்ம இளையராஜா, கங்கை அமரன், தேவா, கமல், .ரஜினி இது ஓர் அற்புதமான.. ஆகாயத்து கற்பனைகளின் கலை நுட்பத்தைக் கொண்டதைப் போலவே நான் காண்கிறேன். அப்படித்தான் இருந்தது. ஒரு வித தனித்தன்மையில்…… மனதுக்கு இதமான… பிடித்தமான சுவாரஷ்யங்களால் அவர்களின் கதாபாத்திரங்கள் இருந்ததாகத்தான் நான் நம்புகிறேன். இன்னும் சொல்ல போனால் கதாநாயகர்களைக் கொண்டாடிய கால கட்டம் அது. அதில் ஒரு சிறுபிள்ளைத்தனம் இருந்தாலும்.. முழுக்க முழுக்க ரசனை மனம் நிரம்பி வழிந்தது. அவர்களை உயரத்தில் வைத்துக் கண்ட உணர்வுகள் சினிமாவின் அடிப்படையாகவே இருந்ததில் ஆனந்தமே.
அந்த வகையில் எனக்கு பிடித்த நாயகர்களை பற்றி இங்கே சில பகிர்தல்கள்.
நவரச நாயகன்
முரளி கார்த்திகேயன், கார்த்திக் என்ற பெயரில் “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் பாரதிராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறார். படம் முடிகையில் அப்பா “முத்துராமன்” அவர்களின் அகால மரணம்.
இரண்டாவது படம் தோல்வி. அடுத்தடுத்து ஏதேதோ ஓட்டம். தொடர் முயற்சி. தனது சினிமா குருவான பாரதிராஜாவின் “வாலிபமே வா” படம் கூட கை கொடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் “நவரச நாயகன்” என்ற பட்டதோடு கார்த்திக் தன்னை நிரூபிக்க ஆரம்பிக்கிறார். தனக்கென்று ஒரு ஸ்டைல்! தனக்கென்று ஒரு சார்மிங்! தனக்கென்று ஒரு பாவனை, நடை, ஓட்டம், சிரிப்பு, அழுகை, கண் சிமிட்டல், சோகம், கோபம் என்று நவரசங்கள் அவர் உடல் மொழியில் நாட்டியமாட துவங்குகிறது. எந்த மாதிரியும் இல்லாமல் புது மாதிரி ஒரு உடல்மொழி. அது தான் நவரச நாயகன்.
“கோகுலத்தில் சீதை” படத்தில் அந்த கதாபாத்திரமே சிக்கலான கதாபாத்திரம். கொஞ்சம் நழுவினாலும் தலை குப்புற விழுந்து விடும் பாத்திரப்படைப்பு.
ஆனாலும் அனாயசமாக நடித்து தன்னை நிலை நிறுத்தியிருப்பார். அதுவும் இறுதிக் காட்சியில் பேருந்தில் காசு இல்லாமல் நடத்துனரிடம் டிக்கட்டுக்கு கார்டை நீட்டும் போதெல்லாம் அது அப்படியே ஒரு கிளாசிக் தன்மையோடு மாறி விடும்.
“நீ என் குழந்தைய கொன்னுருக்க கூடாது ஆண்டவப்பெருமாள்…..” என்று உதட்டில் பட்டும் படாமல் வரும் வார்த்தைகளோடு “அமரன்” பழி எடுக்கும் போது நமக்குள்ளும் ஒரு அமரன் வந்து அமர்ந்து கொண்டு ஐசாலக்கடி பாட்டு பாடுகிறான். மாமா இறந்த பிறகு புத்தி ஸ்வாதீனமில்லாத மாமா பெண்ணை வைத்துக் கொண்டு “பொன்னுமணி” அழுது தீர்த்ததெல்லாம் சாகாவரம் பெற்ற திரை வெடிப்பு. நடிப்பு ராட்சசன் என்றே சொல்லலாம்….”கிழக்கு வாசல்” படத்தில் அம்மா சாவுக்கு நியாயம் கேட்க சென்று……. என்னதான் தப்பு செய்திருந்தாலும், செய்தவர் ஊர் பெரியவர் எனும்போது சட்டையைப் பிடிக்க வேண்டும். ஆனாலும் அதில் ஒரு தடுமாற்றமும் வேண்டும் என்பதை அத்தனை அழகாக சட்டையைப் பட்டும் படாமல் பிடித்து கேள்வி கேட்டு அழுது கொண்டே ஆத்திரத்தை காட்டும் அந்த காட்சிக்கு கலங்காத கண்களில் ஒருபோதும் கண்ணீர் இல்லை.
“பல்லாக்கு குதிரையில் பவனி வரும் மீனாட்சி” என்று கனகாவை மீட்டெடுக்க நம்பியாரோடு சேர்ந்து கட்டும் கூத்தில் மீனாட்சியை மீட்டெடுக்க வந்த சுந்தர பாண்டியனாகவே ஜொலிப்பார்….’பெரிய வீட்டு பண்ணைக்கார’னில். ஒரு கட்டத்தில் சீரியசான தன் தோற்றத்தில் இருந்து சற்று விலகி நடித்த படம் “உள்ளத்தை அள்ளித்தா”. அதில் தனக்கு காமெடியும் வரும் என்று கவுண்டமணியோடு சேர்ந்து அடித்த கூத்தில் தமிழகம் கண்களில் நீர் வர சிரித்தது.
இளையராஜாவின் பாடல்களில் அதுவும் இளையராஜா பாடிய பாடல்கள் சரியாக பொருந்த கூடியவர் இவர்.
“தெய்வ வாக்கு” படத்தில் வரும் ” வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்…” பாடலாகட்டும்…”தர்மபத்தினி” படத்தில் வரும், ” நான் தேடும் செவ்வந்தி பூவிது” பாடலாகட்டும்…. “பகவதிபுரம் ரயில்வே கேட்” படத்தில் வரும்…” செவ்வரளி தோட்டத்துல உன்ன நினைச்சேன்….” பாடலாகட்டும்….இன்னும் இன்னும் நிறைய பாடல்கள் அப்படி கனக்கச்சிதமாக பொருந்தும். அதில் ஒரு கனத்த சோகம் அப்பிக் கிடப்பதை ஆரவாரமின்றி அசை போடுவது தனித்த மனக்கிளர்ச்சி.
“என் ஜீவன் பாடுது” படத்தில் முதல் காட்சியிலேயே இறந்து……படம் முழுக்க ஒரு ஆவியாக வலம் வருவார். அபத்தம்….சாத்தியம் எல்லாவற்றையும் தாண்டி அந்த படத்தில் ஒரு ஜீவன் இருப்பதை உள் வாங்க முடியும். காதலுக்கு உருகும் கண்களில் எப்போது வேண்டுமானாலும் வந்து ஒட்டிக் கொள்ளும் பட்டாம்பூச்சியை சிமிட்டிக் கொண்டே இருப்பதெல்லாம் தனித்து பெற்ற வரம். எத்தனையோ ஜோடிகளோடு அவர் நடித்திருந்தாலும் ‘கனகா’வோடு நடிக்கையில் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகும்.
“ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்கிறது நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே” பாட்டில் நடந்திருக்கும் மேஜிக்கை பார்த்தால் உணர முடியும்.
மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காது என்பார்களே… அது தான், ” தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் அவரின் நடிப்பு. கார்த்திக் போன்ற நவரச நாயகர்களுக்கு வயதாவதைத்தான் பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை.
பள்ளி விட்டு வீடு வருகையில்……தூரத்திலேயே கேட்டு விடும் “பச்சை மலை பூவு நீ உச்சி மலைத்தேனு” பாட்டு…….முடிவதற்குள் ஓடி வரும் ஒரு வித தேடலின்பால் கார்த்திக் என்றொரு நடிகன்… அந்த சின்ன வயதிலேயே மனதுக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். இன்னமும் அவர் அதே சிம்மாசனத்தில் தான்… இருக்கிறார். எல்லா வகையான படங்களையும் செய்த கார்த்திக் 80களின் சினிமா நாயகர்களின் தனித்த நட்சத்திரம் என்றால் அது சரி தானே. எல்லாவற்றையும் தாண்டி இந்த நடிகனுக்குள் எப்போதும் தீராத ஒரு மென்சோகம் இருப்பதாய் நம்பும் நம்பிக்கையில் ஒரு வித தன்னிலை……ரசிகனுக்கு கிடைப்பதாய் நம்புகிறேன்.
“வசந்த பூங்காற்றே” பாடல் வரும் “சோலைக்குயில்” படத்தில் நாயகியாக வரும் அந்த குயிலை படம் முடிவதற்குள் நிஜ வாழ்விலும் கரம் பற்றிய கார்த்திக் நிஜ வாழ்விலும் காதலால் ஆனவர் தான். தனிமை விரும்பியான அவர் நிறைய பயணங்கள் காடுகளுக்குள் செய்வார் என்பது கூடுதல். வாழ்வென்ற நாடக மேடையில் காதலிக்கப்படுவதற்கே பிறந்த கதாபாத்திரம் அவர்.
கேள்விப்பட்ட வரை… எந்த ஹோம் ஒர்க்கும் செய்யாமல் ஸ்பாட்டில் வந்து வெளுத்து வாங்கும் இவரின் நடிப்புக்கு பெருந்தீனி இன்னும் இந்த சினிமா உலகம் போட்டிருக்க வேண்டும் என்ற ஆதங்கம் எப்போதும் போல இப்போதும் உண்டு. எப்போதும் ரசிக்கும் ஒரு முகத்தில், ஒரு குறும்பு உடல்மொழியில் நவரச நாயகன் ” அசோக் விஷ்வநாத்” என்று கண்களில் தீ பறக்க சொல்லும் “அக்கினி நட்சத்திரம்” படமெல்லாம் பார்க்க பார்க்க பரவசம்.
“பூங்காவனம்” பாட்டு முடிகையில் நிரோஷாவிடம் சொல்லும் ‘ஐ லவ் யூ’ வெல்லாம் காலத்துக்கும் காதோரம் கிசுகிசுக்கும் மெல்லிசை.
சினிமாவில் இது அவருக்கு 40வது வருடம். எடுத்துக் கொண்ட நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்லலாம். அற்புதங்கள் அதுவாய் நிகழ்வதை விட, அதை நிகழ்த்தி காட்டுவதில் தான் கூடுதல் ஜொலிப்பு. அது நவரச நாயகனின் “மனோகர்” பாத்திரம் காலத்துக்கும் செய்து கொண்டே இருக்கும். “மௌன ராகம்” படத்தில் வரும் அந்த பைக் பஸ் காட்சி ஓர் ஆங்கில படத்தில் ஜீவனே இல்லாமல் கடந்து போகும். அதை தமிழுக்கு எழுதியது வேண்டுமானால் மணி ரத்னமாக இருக்கலாம். அதை நிகழ்த்தியது நவரச நாயகன். வாழ்த்துவோம்.
“தெய்வ வாக்கு” படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரு சூழலில் 25 நாட்களுக்கு மேல் அவரே இயக்கினார் என்பதும் அந்த காட்சிகள் எல்லாம் தனித்துவமானவையாக இருக்கும் என்பதும் அவர் ரசிகர்களுக்கே புது செய்தி. ஆகச் சிறந்த இயக்குனரை சுமந்து கொன்டு அலையும் இந்த கலைஞனை நாம் விட்டு விட்டு நகர முடியாது.
அஷ்டாவதானிகள் கலககாரர்கள் தான். அதெல்லாம் தான் கலையின் உச்சத்தில் நடக்கும் நாடகம்.
இரவு சூரியன்
இத்தனை சீக்கிரம் அது நிகழ்ந்திருக்க கூடாது.
சினிமா இலக்கணத்தை தன் நிறத்தால் மாற்றி அமைத்த கலைஞன். கோபமோ.. குணச்சித்திரமோ, காதலோ, கள்வனோ, இராவணனோ, இரணியனோ, படத்துக்கு படம் தன்னை வெகு இயல்பாக மாற்றிக் கொண்ட நடிகன். “இதயம்” படத்தில் படம் முழுவதும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நடித்ததில் படம் முடியும் வரை நாமும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தான் பத பதைத்து அமர்ந்திருந்தோம். காதலின் வலியை இத்தனை தத்ரூபமாக பார்வையாளனுக்கு கடத்திய வெகு சிலரில் இவர் முக்கியமானவர்.
“புது வசந்தம்” படத்தில் புது முயற்சி என்று ஒரு இயக்குனர் முன்னேறி வந்தாரென்றால் அதற்கு அந்த வாய்ப்பு கொடுத்த இந்த மனிதன்தான் காரணம். “பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா… பால் நிலவ கேட்டு…” – இன்னும் கேட்கிறது.
“இரவு சூரியன்” என்றொரு படத்தில் கண்கள் இழந்து பழி வாங்கும் ஒரு கதாபாத்திரம். படம் ஆரம்பித்ததில் இருந்து அப்படி மிரட்டி இருக்கும். “பாலம்” என்றொரு படத்தையும் அப்படி சொல்லலாம். 80களின் இறுதியில் நிறைய புது முயற்சிகளில் இறங்கினார் என்பதற்கு சாட்சி நிறைய படங்கள் உண்டு. “இரணியன்” படத்தை காலத்துக்கும் கொண்டாடலாம். அத்தனை போராட்டத்தனமான நடிப்பு. நடிப்பென்பதைத் தாண்டி அதில் இருக்கும் வீரமும்…. கோபமும்.. ஒரு சக போராளியை நினைவூட்டும். ஆண்டான் அடிமை அவமானத்துக்கு “இரணியன்” எடுத்தது அசுரவதம். ‘என்னை கொல்ல சேர்ந்த என் மக்கள் கூட்டம் உன்னையும் கொல்ல கூடுண்டா” ன்னு கத்தும் போது அதிரும் அரங்கம்.
“என்ன மானமுள்ள பொண்ணு இன்னு மதுரையில கேட்டாக.. அந்த மன்னார்குடில கேட்டாக” ன்னு ரேவதி பாடும்போது.. அந்த பாட்டும் படமும் நமக்கு மனதுக்கு நெருக்கத்தை உண்டு பண்ணும். மனதின் நெருக்கத்தில் தான்…. “ஆத்தாடி பாவாடை கூத்தாட” என்று கிணற்றை சுற்றும் காமம் உள்ளூர சுரக்கும். “மணிக்குயில் இசைக்குதடி.. மனமதில் மயங்குதடி..” பாட்டு இப்போது கேட்டாலும், மனதுக்குள் மைக் பிடித்துக் கொண்டு அந்த நாயகன் வாயசைப்பதை உணர முடியும். “துள்ளி திரிந்ததொரு காலம், பள்ளி பயின்றதொரு காலம், காலங்கள் போகுது பூங்குயிலே பூங்குயிலே….” என்று “என்றும் அன்புடன்” படத்தில் பாடும் அந்த தேடல் கொண்ட மனிதனை நாம் நம் பால்யங்களில் நம் வீதிகளில் கண்டிருக்கிறோம்.
“இந்த கண்ணு என்னைக்காவது நல்லத பார்த்துருக்கா… இந்த கை என்னைக்காவது நல்லது செஞ்சிருக்கா… இந்தக் காது என்னைக்காவது நல்லதை கேட்ருக்கா….” ன்னு சேரனின் வசனத்தை கணக் கச்சிதமாக பேசிய கதாபாத்திரத்தை தமிழ் சினிமாவில் அத்தனை எளிதாக நாம் கடந்து விடவே முடியாது. ஊனத்தின் கதவுகளைத் திறந்து விட்டு உள்ளே பூங்காற்றை நுழைய விட்ட பெருமை இந்த “என் ஆசை மட்சான்” தம்பிக்கும் உண்டு. “அதர்ம”த்தையும் “பகல் நில”வையும் இப்போதும் போர் அடிக்காமல் காண முடியும்.
ஸ்க்ரீன் ஷேரிங் உள்ள நடிகர். நல்ல சிற்பியிடம் சிக்கிய போதெல்லாம் சிறந்த சித்திரமாக மாறியவர்.
“தினந்தோறும்” படத்தில்… காதலிக்காக புத்தகம் வாங்க செல்லும்.. வேகம்.. வேலை இல்லை என்று ஏற்படும் சுய கழிவிரக்கம் எல்லாம் சேர்ந்து கோபமாய் மாறி… காதலின் நுனியில் சண்டையிடும் காட்சியில்… சுவலட்சிமியைப் பார்க்கும்.. அந்த காதலின் ஓரப்பார்வை போதும். இந்த நடிகனின் பாவனைகள் கருப்பு வெள்ளைக்கு…. சற்று முன் பின் இருக்கும் என்பதற்கு.
“மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது… மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது….” பாடலில் விஜியோடு சேர்ந்து போடும் ஆட்டத்தின் ஆழ் மனதில் சினிமாவில் வாய்ப்பில்லாத நடிகனின் தேடல் எப்போதும் அரித்துக் கொண்டே இருந்திருக்கிறது.
இத்தனை சீக்கிரம் அது நிகழ்ந்திருக்க வேண்டாம்… “முரளி” என்ற அற்புதமான நடிகனை இந்த காலம் இத்தனை சீக்கிரம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டாம்.
“ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்.. டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்,….”
பாடல் இசைக்கிறது… என்னையும்… இதோ இனி உங்களையும்….!
கருப்பு நிலா
இந்த வாழ்வு எல்லா முடிச்சுகளையும் திரும்ப அவிழ்ப்பதில்லை. முடிச்சுகள் இல்லாத வாழ்வில் திருப்பங்கள் இல்லை.
ஒரு கோபக்கார இளைஞன்… குற்றம் காணும் போதெல்லாம் கொதித்தெழ ஒரு நோக்கம் இருந்தது. அந்த நோக்கத்தில் ஒரு தீர்க்கம் இருந்தது. அந்த தீர்க்கம் சென்னையை நோக்கி நகர செய்தது. ஆசை, வெறி, லட்சியம் எல்லாமே ஹீரோ. அதை நோக்கிய தொடர் முயற்சியில்.. ஹீரோவாகவும் ஆனார். ஒரு பக்கம் ரஜினி என்கிற சிங்கம்…. ஒரு பக்கம் கமல் என்கிற யானை… இடையில் என்ன செய்து விட முடியும். ஆனால் செய்தார். தனக்கென ஒரு பாணி.. தனக்கென ஒரு வழி.. தனக்கென ஒரு ஸ்டைல். விஜயராஜா…….விஜயகாந்த் ஆனார்.
SA சந்திரசேகர் உடன்…..” நீதியின் மறுபக்கம்……சட்டம் ஒரு விளையாட்டு…..சட்டம் ஒரு இருட்டறை…போன்ற படங்கள் அவருக்குள் இருக்கும் சிவப்பு மனிதனை வெளிக்கொண்டு வந்தது. தப்பு நடந்தா தட்டி கேட்பேன்டா என்ற துணிச்சல் இயல்பாகவே இருந்த மனிதர்க்கு அதே போல் அமைந்த கதாபாத்திரங்கள் ஒரு காத்திர தன்மையை அவருள் விதைத்தது. நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அது தான் நாம். அவர் ஹீரோவாக இருந்தார். ஒரு ஹீரோவாகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
ஒரு கட்டத்தில்… ஹீரோவாக வாய்ப்பில்லை. ‘முரட்டுக்காளை’ படத்துக்கு ரஜினிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வருகிறது. சினிமாவில் இப்படி நேருக்கு மாறாக என்னவெல்லாமோ நடந்து விடும். மனம் இங்கே எதற்கு வந்தோம் என்ற லட்சியத்தை பற்றி மீண்டும் சுழல்கிறது. வாழ்வில் இரண்டு வகை. ஒன்று.. கிடைத்ததை வைத்துக் கொண்டு வாழ்வது. இன்னொன்று.. இதுதான் வேண்டும் என்ற தீர்மானத்தோடு அதற்காகவே வாழ்வது. இவர் இரண்டாம் வகையை தேர்ந்தெடுத்தார்.
“நான் ஹீரோ மெட்டீரியல். வில்லன் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.
அந்த நேரத்தில் தான்.. பிலிம் இன்ஸ்டிட்டியூட்-ல் இருந்து புதிய சிந்தனை கொண்ட மாணவர்கள் வெளியே வந்தார்கள். புது வகை சினிமாவை எடுக்க போகும் லட்சியத்தோடு அவர்கள் வேலை பார்த்தார்கள். “ஊமை விழிகள்” என்றொரு நவீன பாணி திரில்லர் படம். அதில் ஒரு போலீஸ் கதாபாத்திரம். என்ன மாதிரி சினிமாவாக வரும் என்ற எந்த மாதிரியும் இல்லை. புது பசங்களை நம்பலாமா வேண்டாமா என்ற அனுபவம் சார்ந்த தயக்கம் வேறு. ஆனாலும்.. நண்பர் சந்திரசேகர் சொல்லி கதையை கேட்கிறார். நடிக்கிறார். படம் ஹிட். வழக்கமான ரூட் இல்லைதான். ஆனாலும்… இனி வழக்கத்துக்கு வர போகிற ரூட்…என்று புரிகிறது.
அதன் பிறகு “உழவன் மகன்…. செந்தூர பூவே” என்று அவர் அடித்தாடியது எல்லாம் அதகளம். எனக்கு தெரிந்து தரையில் ஓடுவது போல சுவற்றில் ஏறி, அப்படியே திரும்பி காலால் உதைத்து சண்டையிடத் தெரிந்த, முடிந்த பலம் வாய்ந்த ஹீரோ அவராகத்தான் இருக்க முடியும். சண்டைக் காட்சியில் எத்தனை ரிஸ்க் எடுக்க முடியுமா அத்தனை ரிஸ்க் எடுத்தார். உதவி என்று யார் கேட்டாலும் அவர் கதவு திறந்து இருந்தது. வெள்ளந்தி மனிதன். கோபமோ அன்போ அப்போதே வெளிப்படும்.
“ராஜநடை”யில்… மனைவி சாக போகிறாள் என்று தெரிந்து அழும் விஜயகாந்தை அத்தனை சீக்கிரத்தில் மறக்க முடியாது. அவர் அழுதால் படம் பார்க்கும் தாய்மார்கள் அழுவார்கள். அழுதார்கள். “செந்தூரப்பாண்டி”யில் நம்ம தளபதியை என் தம்பிடா என்று பட்டி தொட்டியெல்லாம் கூட்டி சென்று அறிமுகப் படுத்திய மேன்மை குணம் கொண்ட சினிமா மைந்தன். “கேப்டன் பிரபாகர”னை விடுத்து அவரை முழுமையாக பேசவே முடியாது. அது மைல்கல். இளம் ரத்தம் செல்வமணியுடன் சேர்ந்து ஆடிய ஆட்டம்… வீரபத்திரனையும்… அவன் பின்னால் இருந்த அரசியல் குள்ளநரிகளையும் சாலைக்கு இழுத்து வந்து கேள்வி கேட்டது. அதுவும் இறுதிக் காட்சியில் பேசும் வசனங்கள் எல்லாம்.. நான் ஏழாவது படிக்கையில் பார்த்தது. ஆனாலும் இன்னமும் ஆழமாய் மனதுக்குள் பதிந்திருக்கிறது. படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட இடைவேளை நெருங்குகையில் ஹீரோ அறிமுகம் என்பதே ஒரு வித்தியாசமான முயற்சி. மிரள விட்ட அதிரி புதிரி சினிமா. நண்பர் சரத்குமாருக்கு வாழ்வு கொடுத்த படம்.
பெரிய மருது, கோயில் காளை, திருமூர்த்தி, ஏழைஜாதி, பூந்தோட்ட காவல்காரன்… என்று எங்களூரில் இருந்த நான்கு தியேட்டர்களிலும் மாறி மாறி பார்த்திருக்கிறேன். கண்கள் சிவக்க விஜயகாந்த் திரையில் சண்டையிட ஆரம்பித்தால்… உள்ளிருந்து ஒரு புரட்சிக்காரன் எங்களுக்குள் எழுவான். “தப்பு பண்ணினா தட்டி கேளு” என்ற பாடத்தை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்றால் சினிமா தாண்டிய திரைக்கதை நிஜத்தில் இருக்கிறது என்று நம்புவோம்.
வைதேகி காத்திருந்தாள்……அம்மன் கோயில் கிழக்காலே…..என் ஆசை மச்சான் என்று R.சுந்தர்ராஜனோடு சேர்ந்து நடிப்பில் தனக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது என்றும் நிரூபித்தார். “என் ஆசை மச்சான்”படத்தில்…ஒரு காட்சியில் ரேவதியை மூச்சு விட கூடாது என்று சொல்ல அவர் நிஜமாகவே மூச்சு விடாமல் இறந்து போக இறந்து போன ரேவதிக்கு அழுகையை அடக்கிக் கொண்டே தாலி கட்டும் காட்சிக்கெல்லாம்…..அப்போது எங்கள் வீதி பெண்கள் கண்ணீரை சமர்பித்தார்கள். வாரம் முழுக்க வீதிகளில் அது பற்றிய பேச்சு இருந்தது. விக்ரமனின் “வானத்தை போல” மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சண்டைக்காட்சி மட்டுமல்ல.. அன்புக் காட்சிக்கும் விஜயகாந்த கச்சிதமாக பொருந்துவார் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தார்.
தளபதியை எப்படி ஊருக்கெல்லாம் கூட்டி சென்று அறிமுகப் படுத்தினாரோ…அப்படி சூர்யாவையும் ஊரெல்லாம் கூட்டி சென்று “இவன் நல்லா நடிப்பான்… கொஞ்சம் கவனிங்க” என்று சொல்லாமல் சொல்லிய “பெரியண்ணா” வுக்கு காலத்துக்கும் சூர்யா நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும். “புலன் விசாரணை” இன்னும் நம்மை அதிர செய்யும். “திரும்ப வரணும்….பழைய பன்னீர் செல்வமா திரும்ப வரணும்…” என்று திலகன் சொல்லும் “சத்ரியன்” விஜயகாந்த் என்று முழு நடிகனை உலகுக்கு காட்டியது. எ கம்ப்ளீட் ஆக்டர்.
“சிறையில் பூத்த சின்ன மலர்” என்ற படத்தில் முதல் சண்டையில் கைகளை உபயோகிக்காமல் கால்களாலேயே சண்டை செய்திருப்பார். கால்களில் மட்டும் அல்ல மனதிலும் பலம் உள்ள மனிதன். “ரமணா” வாய்ப்பையெல்லாம் மிக அற்புதமாக பயன் படுத்திக் கொண்டார். அந்த ப்ரஃபஸர் கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தியது ஒரு பக்கம் என்றால்.. மனைவி மகளை எரித்த பிறகு… சம்பந்தப்பட்ட அலுலகத்துக்குள் புகுந்து கதவை சாத்திவிட்டு பழைய ஹேர் ஸ்டையிலில் இருக்கும் விஜயகாந்த் சுளுக்கெடுக்கும் காட்சி… காலத்துக்கும் தேவையான சண்டை.
ராம்கியும் நிரோஷாவும் சந்திரசேகரும்.. ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் அடித்து பிடித்து ஏறி இருப்பார்கள். வர வேண்டிய “கேப்டன்” இன்னும் வரவில்லை. ரயிலில் இருந்து பார்க்கையில்…. தூரத்தில்…காட்டுக்குள்… கேப்டன் ஓடி வந்து கொண்டிருப்பார்.
“கேப்……ட்ட்டன்…….. கேப்……ட்ட்டன் ” என்று இவர்கள் கத்துகிறார்கள். மனோஜ் கியானின் இசையில்….காட்டுக்குள் இருந்து ஒரு சிங்கத்தை போல ஓடி வரும் விஜயகாந்தை திரை அதிர நாம் ரசித்தோம். இன்றும் அந்த காட்சி மனதை விட்டு அகலவில்லை. இந்தப்பக்கம் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப்பக்கம் அடியாட்களின் கொடூரமான துரத்தல். அவர்களோடு சண்டையிட்டுக் கொண்டே ரயிலை பிடிக்க ஓடி வந்து கொண்டிருப்பார். மயிர் கூச்செரியும் காட்சி. என்னாகுமோ ஏதாகுமோ என்ற பரிதவிப்பு ரயில் சத்தத்தோடு மனதின் சத்தம் நமக்கு பரபரக்கும். காடு…..மேடு…… ரயில் செல்லும் பாலத்தின் மேற்பரப்பு…ரயிலின் மேற்கூரை என்று ரயிலோடு தொடர்ந்து ஓடிக் கொண்டே சண்டையிட்டு வரும் கேப்டனை ஒரு சாகச மனிதனாகத்தான் அந்த வயதில் பார்த்தேன். அந்த கதாபாத்திரத்தில் வாழ்வை சம நிலைப்படுத்தும் ஓர் அர்த்தம் இருப்பதை இப்போது உணர்கிறேன்.
எடுத்த காரியத்துக்காக இறுதி வரை போராடும் சாகச திரைக்கதைகள்…. காலத்தால் அழிக்கவே முடியாத காட்சி அமைப்புகள் விஜயகாந்த் சினிமாக்களில் மிக அழகாக அரிதாரம் பூசின. செந்தூர பூ என்று ஒரு பூ இல்லை என்று கங்கை அமரன் ஒரு முறை சொல்லி இருக்கிறார். ஆனால் எப்போதும் நம் மனதில் வேர் விட்டு பூத்து குலுங்கும் செந்தூர பூ மரம் விஜயகாந்த். அற்புதங்களை அழகாக்கி அவரின் புன்னகையாக்கி விட்ட அவரின் சினிமாக்களை மீண்டும் மீண்டும் நாம் ரசித்துக் கொண்டுதானிருக்கிறோம். நல்ல கலைஞனை சினிமா ரசிகன் ஒரு போதும் கை விடுவதில்லை.
“சின்ன மணி குயிலே…. மெல்ல வரும் மயிலே…”என்று நெற்றி மறைக்க அரை வட்ட கற்றை முடியோடு சிரிக்கும் விஜயகாந்த் என்ற மாபெரும் நடிகனை “பாட்டுக்கொரு தலைவன்” என்று ஆராதிக்கிறேன்.
2001 ம் ஆண்டு கலைமாமணி விருது வாங்கினார். இன்னும் வந்திருக்க வேண்டிய விருதுகள் ஏராளம். பழைய பன்னீர் செல்வமாக திரும்பி வரணும் என்பது தான்… அவரை அணு அணுவாக ரசித்த ஒரு ரசிகனின் ஆசை. திரும்ப பழைய பன்னீர் செல்வமா வரணும். வருவார். நம்புவோம்.
கலைநிலா
பழக்கப்பட்ட வீட்டு முகம். ஆனால் பேரழகு. பக்கத்து வீட்டு குரல். ஆனால் வசீகரம். ஹேர் ஸ்டைலுக்கே தனித்த குறியீடு என்று அத்தனை உயரத்தில் ஆணழகன்.
திடும்மென ஒரு இளைஞர் கூட்டம் சினிமா கல்லூரியில் இருந்து வெளி வருகிறது. அதுவரை இருந்த சினிமா லுக்கை மாற்றுகிறது. அதில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் ராம்கி.
முதல் படமே “சின்ன பூவே மெல்ல பேசு” பிரபுவோடு இணைந்து நடிக்கிறார். ஆட்டம் பாட்டம்….சண்டை காதல் என்று ஒரு ஹீரோவின் கணக்கச்சிதமான வேலையை அத்தனை இயல்பாக அழகியலோடு செய்கிறார்.
“யார் இந்த பையன்…!” என்று புருவம் உயர….மூன்றாவது படம் விஜயகாந்த் அவர்களோடு சேர்ந்து “செந்தூரப்பூவே….”
நிரோஷாவும் ராம்கியும் இறுதி காட்சியில்… வில்லன்களிடம் இருந்து தப்பித்து ரயில் ஏறும் முன் ஓடி வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம்.. சீட்டின் நுனிக்கே இழுத்துப் போனது. எப்படியாவது இவர்கள் சேர்ந்து விட மாட்டார்களா சென்று ஏக்கம்…. படம் முடியும் வரையும் ஏன் படம் முடிந்த பிறகும்…… கூட இருந்தது. அந்த ஜோடி நிஜத்திலும் இன்று வரை இணைந்திருப்பது பேரழகு. சில ஜோடிகள் தான் காதலுக்காக படைப்பட்டிருப்பார்கள். அப்படி ஒரு ஜோடி இவர்கள்.
சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடிக்கும் ராம்கி… காதல் காட்சிகளில்… பளீர் புன்னகையால்…. போகிற போக்கில் இயல்பாக கொள்ளை அடித்து விடுவார். காமெடியும் பொருந்தி வரும். “இணைந்த கைக”ளைத் தொடாமல் இவரை பற்றி சொல்வது முழுமை பெறாது. தன் நண்பனான அருண்பாண்டியனோடு சேர்ந்து அடித்தாடிய ஆட்டமெல்லாம் இணைந்த கைகளின் உச்சம். இன்றைய கால கட்டமாக இருந்தால்… இன்னும் இன்னும் மிகப்பெரிய உலக சினிமாவாக அது மாறி இருக்கும். அப்போதே அத்தனை பிரம்மாண்டம். இடைவேளை காட்சியில் இரண்டு மலைகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கையில்… ராம்கியின் பாவனைகள்… பிரமிப்பு. அநேகமாக அது டூப் போடாமல் அவரே செய்த காட்சி என்று நினைக்கிறேன். சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட பெரும்பாலைய சண்டைக்காட்சிகளில் தான் டூப் போடுவதில்லை என்று கூறி இருந்தார். ஸ்டண்டும் தெரிந்த நடிகர். நன்றாக கம்பு சுற்றுவார் என்பது கூடுதல் செய்தி.
நிறைய ஸ்க்ரீன் ஷேரிங் உள்ள நடிகர் என்று இவரை சொல்லலாம். 80களின் முடிவில் தமிழ் சினிமாவுக்கு வந்த இந்த ஹீரோ எந்த ஈகோவும் இல்லாமல் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் திரையை பகிர்ந்து கொண்டது எல்லா காலத்துக்கும் முன் மாதிரி.
தங்கச்சிக்காக வதம் எடுக்கும் “மருதுபாண்டி” படமெல்லாம்… ரத்தம் தெறிக்க சதம் அடித்தவை. நிரோஷா ஒரு பக்கம் செத்துக் கொண்டிருக்க ஒரு பக்கம் அடியாட்களிடம் அடிபட்டு “பாடி பாடி அழைத்தேன்…. ஒரு பாச ராகம் இசைத்தேன்” என்று பாடுவதெல்லாம்… உள்ளே அதிரும் காதலின் சுவடுகள். சிறு வயதில் அக்காக்கள் மத்தியில் ராம்கியின் ரசிகன் என்பதே மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்ததை…. காதலின் பிராம்மாண்டத்தோடு நினைத்துக் கொள்கிறேன்.
படம் ஆரம்பித்து… கிட்டத்தட்ட இடைவேளை சமயத்தில் ஹீரோ அறிமுகம் ஆகும் “கருப்பு ரோஜா ” அட்டகாசமான மேக்கிங் உள்ள பிக்சர். அப்படி ஹீரோ என்ட்ரியே புது முயற்சி தான். பில்லி சூனியம் பற்றிய தமிழில் அரிதாக எடுக்கப்பட்ட சில படங்களுள் ஒன்று. சினிமாவில் எடுக்கப்பட்ட நிறைய புது முயற்சிகளில் ராம்கியின் பங்கு இருப்பதை சற்று உற்று நோக்கினால் கண்டுணர முடியும்.
“மாயா பஜார் 1995… ஆத்மா” என்று அப்போதே முகம் மாற்று சிகிச்சை… ஆவி உலகம்… முன் ஜென்மம் என்று வேறு கதைக்களத்தைக் கொண்டிருந்தது.
“என் கணவர்” என்றொரு படத்தில்….கன்னத்தில் விழும் ஒரே அறையில் மனைவி இறந்து விட… அந்த உடலை மறைத்து விட்டு படும் பாடுகள் தான் திரைக்கதை. சட்டுல் ஆக்டிங்- ல் பிரமாதப்படுத்தி இருப்பார். தமிழில் மிக சிறந்த திரில்லர் என்று சொல்லலாம். ஆனால் அந்த படத்தின் காப்பி எங்குமே கிடைக்காதது தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டம்.
ராம்கியின் படங்களில் பாடல்கள் எப்போதுமே அற்புதமாய் அமைந்து விடும்.
“கண்ணாலே காதல் கவிதற்கு தை சொன்னாலே எனக்காக…” -ஆத்மா
“நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்” -இரண்டில் ஒன்று
“மலையோரம் குயில் கூவ கேட்டேன்…” – இணைந்த கைகள்
“இனிய தென்றலே இரு கைகள் வீசி வா ” -அம்மா பிள்ளை
“சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக ஒரு தேவதை வந்ததது நீராட”-செந்தூரப்பூவே
“உன்னை விட மாட்டேன்… காதல் வரம் கேட்டேன் ” -இரட்டை ரோஜா
நடனம்… சண்டை… நடிப்பு… டைமிங் என்று ஒரு நடிகருக்கு என்னெல்லாம் தேவையோ அதுவெல்லாம் உள்ள நடிகர். இயக்குனர் ஆவதற்கு தகுதி அதிகம். இருந்தும்… ஒரு கட்டத்தில் அவர் தமிழ் சினிமாவில் மெல்ல காணாமல் போனார்…என்பது தமிழ் சினிமாவின் சோகம். இன்னும் நிறைய நல்ல படங்களைத் தேடி தேடி நடித்திருக்க வேண்டும்.
இன்னமும் வெள்ளை பேண்ட் வெள்ளை சட்டையில் சிவப்பு துணியை கழுத்தில் சுற்றியபடி கையில் பறையை வைத்துக் கொண்டு “செந்தூரப்பூவே தேன் சிந்த வா…” என்று மலை உச்சியில் நின்று பாடும் ஒரு காதலனின் குரலின் வழியே… காதலின் வரமென வரும் அந்த பாவனை வழியே… எல்லாருக்கும் பிடிக்கும் கம்பீரமான உடல் மொழி வழியே… ஹேர் ஸ்டைலுக்கென்றே தனித்த குறியீடென இருக்கும் அந்த தலையாட்டல் வழியே ராம்கி என்ற நடிகனின் முகம் தமிழ் சினிமா உள்ளவரை கலா ரசனையோடு நினைவு கூறப்படும் என்பதை மிக பெருமையோடு கூறுகிறேன்.
சிறுவயதில் இருந்தே ரசித்த… தகுதியுள்ள ஒரு நடிகனை என்னால் கொண்டாடாமல் இருக்க முடியவில்லை. தீரா காதலோடு தான் இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். ராம்கியைப் பற்றி எழுதுவது கொண்டாட்டங்களின் வழியே கண்டடையும் சினிமா திரையின் வண்ணங்களைப் பற்றியது. அது எப்போதும் புது புது வண்ணங்களால் ஆனது…..!
ஆக்சன் கிங்
நான் ஒன்றாவது படிக்கையில் பார்த்த படம் “தாயம் ஒன்னு”. அதிலேயே பிடித்து விட்டது. என்னவோ ஒரு ஈர்ப்பு. அன்றிலிருந்து இன்று வரை நான் அர்ஜுன் விசிறியாக இருக்கிறேன். உடல் மொழியில் எப்போதும் திமிறிக் கொண்டிருக்கும் ஆண்மை ஒரு வகை நம்பிக்கையின் குறியீடு.
ஒரு குழந்தையை காப்பாற்ற ஐந்து பெண் (ஒவ்வொருவரும் ஒரு துறையில் நிபுணர்கள்) களை சேர்த்துக் கொண்டு எதிரிகளோடு போராடும் கதை. விறுவிறு திரைக்கதை. கமலுக்கு அடுத்தபடியாக நடிப்பு , நடனம், சண்டை, இயக்கம், திரைக்கதை, வசனம், தயாரிப்பு என்று எல்லா துறையிலும் திறமையான சினிமா அறிவு கொண்ட ஒரு சீனியர் படைப்பாளியாகத்தான் நான் காண்கிறேன்.
“தம்பி ஏண்டா அழுகறன்னு கேட்டதுக்கு இது எனக்கு தேவையா…..?” என்று படம் முழுக்க டைமிங்கில், கவுண்டமணி பேச பேச, பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு நடித்திருக்கும் “வேஷம்” படத்தில் இருந்து… பல படங்களில் இவர்களின் கூட்டணி சக்கை போடு போட்டிருக்கிறது.
“கிரி”யில் வடிவேலுடன் அடித்த கூத்தெல்லாம் தனி.
ஒரு கட்டத்தில் படமே இல்லை என்ற நிலையில் தானாகவே எழுதி இயக்கி ஹிட் அடித்த படம் தான் “சேவகன்”.
“ஒரு நாட்டோட ஏர்முனை போர் முனை பேனா முனை மூணும் சரியா இருந்தா தான் அந்த நாடு நல்லா இருக்கும்”னு ஒரு வசனம் வரும். எல்லா காலத்துக்கும் பொருந்தும் வசனம் அது.
அதே படத்தில் இறுதி சண்டை காட்சியில் தரையில் இருந்து எம்பி குறுக்கு வெட்டாக காற்றில் படுத்து இரண்டு கால்களையும் மடக்கி பின்னால் இருப்பவரை உதைக்கும் அதே நிறத்தில் முன்னால் இருப்பவரை கையால் குத்த வேண்டும். நின்று எம்பி காற்றில் படுத்து கால்களையும் கைகளையும் ஒரே நேரத்தில் இயக்கி ஒருவரை உதைத்தும் ஒருவரை குத்தியும் பின் கீழே விழ வேண்டும். அற்புதமாக செய்திருப்பார். ஆனால் அந்த காட்சி எடுப்பதற்கு முன் உடலில் வலுவே இல்லை. அந்த படத்துக்காக இருக்கும் வீட்டை கூட விற்று விட்ட நிலைமை …….. உள்ளே வெறி ஏற்ற…. சட்டென உள்ளத்தின் பலம் கூடி அந்த காட்சியை எடுத்து முடித்ததாக ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறார்.
நிஜமாகவே சண்டை தெரிந்த நடிகர். அவரே ஒரு முறை தன்னைப் பற்றி இன்னொரு பேட்டியில் சொன்னது…
“இந்த பையன் அழகா இருக்கான்னு யாரும் வாய்ப்பு தரல… இவன் நல்லா சண்டை போடறான்னு தான். ஆக அது தான் என் பலம். அதை தக்க வெச்சுக்க நான் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டி இருக்கு.”
உடற்பயிற்சியை விடாமல் செய்யும் பழக்கமே இந்த வயதிலும் அவர் இளமையாக வைத்திருக்கிறது. நீங்க குடி இருக்கும் உங்க உடம்பை நீங்க தான் பத்திரமா பாத்துக்கணும்னு சொல்வார். உடலுக்காக நாம் ஒதுக்கும் நேரம் தான் நமக்காக நாம் வாழும் நேரம் என்று ஒரு பேட்டியில் சொன்னது அர்த்தம் பொதிந்தது.
சும்மா “ஆக்சன் கிங்” ஆக முடியுமா…!..
இவர் படங்களில் எப்போதுமே பாடல்கள் ஹிட் அடித்து விடும். கொஞ்சம் ரசனையான மனிதனாகவே காதல் காட்சிகளில் தெரிவார்.
“நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா…..” ” ஹே மீனலோட்சணி…. மீனலோட்சணி…” “அர்ஜுனரே அர்ஜுனரே ஆசை உள்ள அர்ஜுனரே….” ” கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுத்திடுச்சு…..” இந்த மாதிரி நிறைய பாடல்களின் வழியே எதார்த்தத்தின் கதவுகள் மூடி கனவுகளின் ஜன்னல்களை திறக்கும் திரைக்கு சொந்தக்காரர்.
சில்க் ஸ்மிதாவின் கடைசி படம் இவரோடு தான். (ஷலோமா சலோம்… ஹே ஷலோமா சலோம் பாடல்)
அதன் பிறகு “ஜெண்டில்மேன்”. ஷங்கர் என்ற ஒரு இயக்குனருக்கு கொடுத்த வாய்ப்பு. படம் முழுக்க பகலில் வெள்ளை வேட்டி சட்டையில் நல்லவனாகவும் இரவில் காரணத்தோடு கூடிய கொள்ளைக்காரனாகவும் அசத்தியிருக்கும் அர்ஜுனுக்கு அளவெடுத்து தைத்த கதாபாத்திரம் அது. இந்த படத்திலும் கவுண்டமணியோடு தான் கதை நகரும். இறுதிக் காட்சியில் பேசும் வசனமெல்லாம் இன்றும் இந்த சமூகத்துக்கு தேவையான ஒன்றாகவே இருக்கிறது. கன்னடம் கலந்த தமிழாக இருப்பினும்… அது ஒரு புது வடிவத்தில் அழகாகவே ஒலிக்கும். சுய சிந்தனை அறிவு கொண்ட ஒரு மனிதன்.
அதன் பிறகு மீண்டும் சொந்த இயக்கத்தில் ஜெய்ஹிந். எப்போதுமே நாட்டுப் பற்றுக் கொண்ட படம்…..போலீஸ் அதிகாரி வேஷம்….என்றாலே இவர் தான் நினைவுக்கு வருவார் என்பதை பாஸிட்டிவாகவே கருதுகிறேன்.
மீண்டும், ஷங்கரோடு முதல்வன். அதன் தாக்கத்தை நாடறியும். ரகுவரனோடு கேட்ட கேள்விகள் எல்லாம் இந்த சமூகத்தின் ஒப்பனையற்ற முழக்கங்கள்.
ஆரம்ப காலத்தில் இருந்தே சினிமாவின் புது புது முயற்சிகளில் எப்படியாவது தன்னை இணைத்துக் கொண்டு தான் இருந்திருக்கிறார். “மங்காத்தா”வில் வில்லனாக வந்து அஜித்தோடு செய்ததெல்லாம் அதகளம். மணிரத்னத்தின் “கடல்” படத்தில் வில்லனாக வந்து பெஸ்ட் வில்லன் அவார்டு வாங்கி சென்றதெல்லாம்… எங்க தூக்கி போட்டாலும் விஷயம் உள்ள விதை முளைத்தே தீரும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது. அதன் பிறகு “இரும்புத்திரை”யில் ஒயிட் டெவிலாக வந்து மிரட்டியதெல்லாம்….சினிமா வாழ்வின் உச்சம் பெற்ற நிலை.
திருடனுக்கு தேள் கொட்டினா பொத்திகிட்டு இருக்கனுங்கிறதுக்கு குறியீடே அந்த பாத்திரம் தான். முடிந்தளவு எல்லா பாத்திர படைப்புகளிலும் இந்த சமூகத்துக்கு எதையாவது செய்யும் நோக்கில் பார்த்துக் கொள்கிறார். ‘குருதிப்புன’லில் கமலோடு சேர்ந்து இருட்டு உலகில்…. தன்னை கொடுத்து ரகசியத்தை காப்பாற்றும் போலீஸ் அதிகாரியாய் வாழ்ந்ததை அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. அடிபட்டு உதைபட்டு முகம் வீங்கி…. இயலாமையில்……..சாவின் விளிம்பில் அமர்ந்திருக்கும் போது கூட சாவது தான் வீரனின் செயல்…..என்பதாக செத்து போகும் அந்த பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கும் அர்ஜுனை கொண்டாடலாம்.
“படிக்கறதுக்கு எதுக்கு காசு குடுக்கணும்னு மாணவர்கள் கேள்வி கேக்கணும்”னு ‘ஜெண்டில்மேன்’ படத்தில் பேசிய வசனம் இப்போதும் கேட்கிறது.
“காக்கி சட்டை போட்ட மச்சான்……” என்று யூனிஃபார்மோடு போட்ட ஆட்டங்களை எல்லாம்… நட்சத்திரங்களில் ஜொலிக்க விட்டிருக்கிறது… இவரின் சினிமா வாழ்வு.
எழுதியவர்
- கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இதுவரை.
- சிறுகதை29 July 2024புதியவன்
- சிறுகதை20 February 2024மீண்டும் கோகிலா
- சிறுகதை18 January 2024கணுவாய் டு ஆனைக்கட்டி
- சிறுகதை1 December 2023சபரி பேக்கரி