25 July 2024

காதல் – அதற்கு நவீன காலங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கங்களை தந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஜே.கே கொடுக்கும் நுண்மையான இலக்கணம் தான் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” என்கிற புதினம். இந்த பெயரிலே ஓர் ஆன்மீக பெருவெளி பொதிந்திருக்கிறது. ரமணரின் “who am I?” வாசித்திருக்கிறீர்களா? நான் யார்? என்கிற அந்த தேடலில் ஒரு படிநிலையில் இந்த “நான்” பற்றி ஒரு தெளிவு பிறந்தால் சூழ்நிலைகளால், லோகாயத நாடகங்களால் பாதிக்கப்படாத “pure consciousness” நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பதை உணர முடியும். அந்த “நான்” நாம் செய்யும் காரியங்கள் யாவற்றையும் வெறும் “சாட்சி”யாக மட்டுமே இருந்து பார்க்கும். இந்த நுட்பமான தத்துவத்தை நாவலின் தலைப்பிலேயே ஒளித்து வைத்திருக்கிறார் ஜே.கே. இது எதேச்சையாக அமைந்த ஒன்றல்ல. அதனை ஜே. கே வின் மற்றொரு நாவலான “பாரீஸுக்கு போ” படித்தால் ஒப்புக்கொள்வீர்கள். இந்த ஆன்மீக பெருவெளியை காதலை கொண்டு மட்டுமே ஆட்சி செய்ய முடியும். எனில் காதல் என்பது என்ன? நீயின்றி நானில்லை என்பதா காதல்? அன்றி ஒருவரை நேசித்துக்கொண்டு உலகில் உள்ள மற்ற யாவரையும் வெறுப்பது காதலாகுமா? காதல் வயப்படுவதென்பது உடல் ரீதியில் ஒருவர்பால் ஈர்க்கப்படுவதா? அந்த ஒருவர் மீது மட்டுமே ஈர்க்கப்படுவதா?ஜே. கே இந்த நாவலில் இந்த கேள்விகளுக்கெல்லாம் நுட்பமாக பதிலிறுத்திருக்கிறார்.

ஒரு தெருவில் நான்கு மளிகை கடைகள் இருந்தால் ஐந்தாவதாய் ஒன்று திறந்தாலும் வியாபாரம் நடக்கும். கடையே இல்லாத தெருவில் போட்டால் பெரிய எதிர்பார்ப்பு கொள்ளாமல் இருத்தல் நலம் . ஓடினால் ஓடும். அன்றி இல்லாமல் போனாலும் போகும். ஆனால் வாங்குகிற வன்மை, வளமை கொண்ட மக்கள் வாழும் பகுதியை அங்கு ஏற்கனவே இருக்கும் வாழ்வியல் வளங்களை பார்த்து எடை போடுவதே சரி! நூறு மரங்கள் அடர்ந்திருக்கும் இடத்தில் நூற்றியோராவது மரத்துக்கும் வாழ்விருக்குமே..! அப்படி!! ஏகாந்தமாக இருந்தாலும் கட்டாந்தரையில் புல் முளைப்பதில்லையே..! அப்படி!!
மனிதர்களில் யாரேனும் இதுவரை நான் வேறு யாரையுமே காதலித்தது இல்லை, காதலுணர்வே தோன்றியதில்லை என்று சொல்வார்களானால் அவர் நிச்சயம் பரிதாபத்துக்குரியவர். காதலுணர்வின் வறண்ட நிலை அது. அப்படியான ஒருவர் மீது, ஒருத்தர் காதல் கொண்டுள்ளேன் என்று சொல்வாரானால், அந்த பிரஸ்தாபத்துக்கு ஏற்ற பிரதிபலிப்பு அவரிடம் உண்டானாலும், அவர்பால் காதல் கொண்டவர்கள் தன்னலமின்றி பிரயத்தனங்கள் பல செய்தால் மட்டுமே “காதல்” அவர்கள் மனதில் அரும்பு விடும். உண்மையில் ஒற்றை நபர் மீது சுருக்கப்படுவதல்ல காதல். அது பிரபஞ்சத்தின்மீது கொள்வது. அது குவிந்து நாம் கொண்ட காதலின் ஒற்றை பிரதிநிதியாக ஒருவரை வரிப்பதே தனிநபர் காதல். நாம் காதல் கொண்டவரை கடவுளாக வணங்க முடியாவிடில் அது எப்படி காதலாகும்? காதல் கொண்ட நபரினினுளும் தன்னையே காண முடியாவிடின் அது காதலே அல்லவே!

காதலை உணர்ந்தவர், காதலை அதுவரை உணராதவர், இந்த எதிர்-எதிர் துருவங்களை நாயகனும் நாயகியும் ஆக்கி அவர்களை காதலிக்க வைத்திருக்கிறார் ஜே.கே. காதலையே உணர்ந்தறியாத நாயகன் ஒரு பெண்ணை கண்டு ஈர்க்கப்படுகிறான். அவன் “ஈகோ”வின் மொத்த உருவகமாக இருக்கிறான். காதலே ஓர் உருவம் எடுத்ததாக வாழும் நாயகி. இந்த நாயகனை தனது ஆதர்ஸமாக, தன் மொத்த காதலின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கிறாள். அவள் பொழியும் காதல் மழையில் நாயகனின் வறண்ட பாலை பூ பூக்கிறதா? இதுதான் கதை.

கதை மாந்தர்கள்:

கதாநாயகி: கல்யாணி
கதாநாயகன்: ரங்கசாமி

மற்ற முக்கிய மாந்தர்கள்:
அண்ணாசாமி
பட்டம்மாள்

நாயகி ஒரு காதல் தேவதை. கல்யாணி அவள் பெயர். அவள் தன்னை நேசிக்கிறாள். தன்னை முழுமையாக ஆகர்ஷிக்கிறாள். அது போலவே தன்னை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரையும் நேசிக்கிறாள். தன்னை உணர்கிற படிநிலையில் சராசரியை விட பல மடங்கு உயரத்தில் இருக்கிறாள் நாயகி. அதனாலேயே humbleness இயல்பாகவே இருக்கிறது அவளிடம். பணிவு ஒருவருக்கு கைவரப்பெறுவதற்குரிய வாய்ப்புகளை வாழ்வு வள்ளன்மையுடன் அவளுக்கு வழங்கியிருக்கிறது. முதலில் அவள் கன்னிப்பெண் அல்ல என்பதை இன்னோரன்ன வார்த்தைகளால் ஜெ.கே தெளிவுபடுத்தி விடுகிறார். அதோடு அவளின் முந்தைய உறவுகள் லாபநோக்கோடு இருந்தது என்பதும் அவரே தெளிவுபடுத்துதான். ஆனால் அபூர்வமாக ஒரு சிலருக்கே வாய்க்கும் தன்னையுணர்தல் அங்கே அவளுக்கு நிகழ்கிறது. அதனால் அவள் உன்னதமடைகிறாள். அவள் பிறந்த குலம் தேவதாசி. (கதை எழுதப்பட்ட காலத்தை கணக்கில் கொள்ள வேண்டும்). ஆயினும் அவளது தாயார் ஒருவருக்கே துணைவியாக வாழ்ந்ததாக குறிப்பிடுகிறார் ஜெ.கே. சாதிய அடையாளங்களின் காரணமாக சமூகம் சிலர் மீது விசித்திர பா’வங்களை எளிதில் பொதுமை படுத்திவிடும். பிற சாதியினர் எளிதில் மக்கள் வெள்ளத்தில் கரைந்துவிட சில சாதிகள் மட்டும் ஏதாவது ஒரு பண்பின் கீழ் மோரில் மிதக்கும் வெண்ணை துணுக்குகள் போல ஒட்டியும் ஒட்டாமல் தனிப்பட கவனக்குவிப்பு பட்டுவிடுவார்கள். தொடர்ந்த சாதி அடிப்படையிலான சமூக கவன குவிப்பால் அவர்களில் பலர் தாழ்வுணர்ச்சியால் ஆக்ரோஷம் கொண்டலைவதும், ஆசீர்வதிக்கப்பட்ட சிலர் அதனை தன்னை உணர்தலுக்கு ஒரு வாய்ப்பாக கொண்டு பண் படுவதும் நடக்கும். கல்யாணி இரண்டாவது வகை. Here i need to underline the say. கதாநாயகிக்கு இருப்பது பணிவுதானே தவிர தாழ்வுணர்ச்சி அல்ல. Humble but not inferior. அதனாலே அவள் இந்த காதல் கதையில் proactive ஆக இருக்கிறாள். தன்னை பற்றிய நேர்மறை சிந்தனை கொண்டவளாக இருக்கிறாள். தனக்குரியவரை நிதானமாக தேர்ந்தெடுக்கிறாள். தன்னை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை கதாநாயகனுக்கு கையெழுத்தில்லாத கடிதம் மூலமாக வழங்குகிறாள். பரஸ்பரம் அன்பை பகிர்ந்துகொண்ட பின்பும் அன்பின் பெயரால் கதாநாயகனை கல்யாணத்துக்கோ அன்றி திருமணத்துக்கு பின்பும் தன் உரிமைகளை நிலைநாட்டவோ நிர்ப்பந்திப்பதில்லை. உதாரணமாக கதாநாயகனின் முதல் தாரத்து மகளை வளர்க்க அவள் மிகவும் பிரியப்படுகிறாள். அவளுக்கு சட்டப்படி அந்த உரிமை இருந்தும் கூட அவளாக அவனிடம் அது குறித்து கேட்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேல், தான் அவன் மீது கொண்டிருப்பது காதல்தான் என்பதை நிரூபிக்கும் முயற்சிகளை கூட அவள் செய்வதில்லை. தனது காதலை வேறு பெயரில் சொல்லிக்கொண்டாலும் அன்பெனும் உணர்வு மாறப்போவதில்லை என்கிற தெளிவு அவளுக்கு இருக்கிறது. அதனாலே மண முறிவுக்கு கூட புன்னகையுடன் உடன்படுகிறாள். காதல் என்பது “ஒன்றை வழங்கி பிரிதொன்றை பெறுகிற வியாபாரமல்ல” என்கிற நுட்பமான உணர்வு அவளுக்கு வாய்த்திருக்கிறது.

கதாநாயகனுக்கு அகங்காரம் வளர்வதற்குரிய காரணங்களையே அதுவரை வாழ்வு வழங்கி வந்திருக்கிறது. அதிலும் பழைய பெருங்காய டப்பா போன்றதான பழம்பெருமை கொண்ட குல வாரிசு அவன். அவன் தந்தையின் பெயரில் ஒரு தெருவே இருக்கிறது. கல்வி கற்பதும், பட்டம் பெறுவதும் அரிதான காலகட்டம் அது. படித்து பட்டம் பெற்ற அவன் மீது அதீத அன்பும், மதிப்பு கொண்ட சொந்த சாதி மக்கள் கூட்டம் கொண்ட பின்னனி அவனுக்கு. அதோடு செய்கிற உத்தியோகத்தை சிறப்புற செய்கிறவன் என்கிற தன்மதிப்பீடு கொண்டவன். ஒரு ஆணின் அகங்காரம் வளர்வதற்கு காரணமாக இருப்பது பிற ஆண்களின் அங்கீகாரமே. அந்த அங்கீகாரத்தை சமூகம் அவன் மீது காட்டும் பொறாமையாலும், மறுக்க முடியாத மரியாதை கொண்டிருப்பதை உணர்த்துவதாலும் அவனுக்கு காட்டிவிடும். பெண்களின் பார்வையை கவர்வதை விடவும் சக ஆண்களின் மதிப்பீட்டில் உயர்வதையே ஓர் ஆண் தன் ஆண்மையின் அடையாளமாக பார்க்கிறான். கதாநாயகனுக்கு அது தேவைக்கு மேலேயே கிடைக்கிறது. மனிதர்களை மதிப்பிடுவதில் அவன் கில்லாடியாக இருக்கிறான்.

கதாநாயகன் அதுவரை காதல் வயப்பட்டிருக்கவில்லை. முதல் மனைவி மீது கூட “கடமை” என்கிற அளவில் “சௌகர்யம், சமூக நிர்ப்பந்தம், உயிரியல் தேவை” என்கிற அடிப்படையில் “சக மனுஷி” என்கிற அன்புடன் பழகியிருக்கிறானே தவிர காதலை அவன் உணரவில்லை. பெற்ற மகள் மீது கூட அதே விட்டேற்றியான மனநிலைதான். மனிதர்கள் பற்றிய, பெண்கள் பற்றிய, அதிலும் நாடக நடிகை என்கிற அளவில் அவனது predetermined facts உடைபடும் இடத்தில் கல்யாணி மீது அவனுக்கு ஆர்வம் பிறக்கிறது. அது அவளுடன் கல்யாணம் என்ற கட்டத்திற்கு நகர்த்துகிறது. ரங்கா பிற மனிதர்களை பற்றிய வலிமையான முன்முடிவுகள் வைத்திருந்த போதும் எந்த பிம்பத்துக்குள்ளும் தன்னை அடக்கிக்கொள்ளாதவனாகவே இருக்கிறான். சமூகம் என்கிற அமைப்பு எப்படி யோசிக்கும், எப்படி செயல்படும் என்பதை தெளிவாக உணர்ந்தவன் என்பதால் தன் செயல்களில் பிறரது கேள்விகளுக்கும் அறிவுரைகளுக்கும் அவன் செவி சாய்ப்பதில்லை. கல்யாணியை கல்யாணம் செய்யும் முடிவாயினும், அவளை பிரிகிற முடிவாயினும். இரண்டிலுமே அவனுக்கும் கல்யாணிக்கும் மட்டுமே சம்பந்தம் இருப்பதை உணர்ந்திருக்கிறான். Familiarity breeds contempt என்கிற விஷயத்தை உணர்கிறபோது காலம் கடந்துவிட்டிருக்கிறது. தான் ஆராதிக்கிற தேவதையாக கல்யாணியை தள்ளி நின்று பார்த்தாலே போதும் என்கிற முடிவுக்கு வருகிறான். அதில் இருக்கும் காந்த சக்தி அருகில் இருக்கும்போது இல்லை என்பதை அவன் உணர்வதே காரணம்.

அவள் தன்னை காதலிக்கவில்லையோ என்கிற சந்தேகம் அவனது தாழ்வுணர்ச்சியிலிருந்து பிறக்கிறது. தன்னுணர்வு இல்லாவிடினும் தன்னை பற்றி தெளிவு கொண்ட அவன் தனது தாழ்வுணர்வு பற்றிய பிரக்ஞையை ஏற்கனவே உணர்ந்திருக்கிறான். அதனாலேயே அது தங்கள் திருமண வாழ்வை பாதித்துவிடலாகாது என்கிற ஜாக்கிரதையுணர்வுடன் சில ஏற்பாடுகளை செய்துகொள்கிறான். ஆனால் பேய் பயம் கொண்டவன் வீட்டுக்குள் தனிமையில் ஒளிந்து கதவை பூட்டிக்கொண்டால் தப்பித்துவிட முயலும்போது உள்ளிருந்து பூதாகரமாக கிளம்பும் பயம் போல தாழ்வுணர்வு அவனை ஆட்டுவிக்கிறது.

கடவுளை நேரில் காண நேர்ந்தவனின் நம்ப இயலாத பிரமிப்பு கல்யாணியின் முழுமையான காதலை உணர்ந்த ரங்காவுக்கு ஏற்படுகிறது. அவளின் பணம், புகழ், அழகு இவை தருகிற தாழ்வுணர்ச்சியை தகுந்த முன்னேற்படுகளால், புறக்காரணிகளால் வென்றுவிடுகிற ரங்கா, அவளின் விஸ்வரூப காதல் தரும் தாழ்வுணர்ச்சியிலிருந்து தப்பிக்க இயலாமல் பரிதாபமாக தோற்றுப்போகிறான். அவளினும் அருமையாக அவளை காதலிக்க தன்னால் ஆகவில்லை என்பதை விட, தன்னால் தன் காதலை அவளுக்கு நிரூபணம் செய்யவே முடியாது என்பதை அவன் அப்பட்டமாக உணர நேர்கிறது. ஏனெனில் கல்யாணி அவனிடம் தன் காதலுக்கு பிரதியாக எதையுமே வேண்டுவதில்லை. அவனுடைய நிரூபணங்கள் அவளுக்கு தேவைப்படுவதில்லை. கல்யாணியின் காதல் பிரம்மாண்டமாக தெரிய தெரிய தன்னை அற்பமாக உணர்ந்து ஓடி ஒளிகிறான்.

கல்யாணி நோயுற்று படுக்கையில் விழுந்தபோது அவன் துடித்துப்போனாலும், அவனுள் தகித்துக்கொண்டிருக்கும் ஈகோவை அவளின் நிலை திருப்தி செய்துவிடுகிறது. ஏனென்றால் இப்போது அவனுக்கு தனது காதலை அவளுக்கு உணர்த்த ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டதல்லவா?? ஆனால் உண்மையில் அவனுக்கு அவன் தனக்கு தானேதான் தன் காதலை உணர்த்திக்கொள்கிறான். உணர்ந்து கொள்கிறான். அவளில் தன்னை காணமுடியாமல் போனாலும், தன்னில் அவளை கண்டு கொள்ளச் செய்து காதல் அவனை வென்றுவிடுகிறது.

 

நூல் விபரம்

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

வகை :  நாவல்

ஆசிரியர் : ஜெயகாந்தன்

பதிப்பகம் :  மீனாட்சி புத்தக நிலையம்

பதிப்பு ஆண்டு : 1970

அமெசானில் நூலைப் பெற: 


 

Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x