22 November 2024
anbathavan

04

அறுவகைப்படை:


மூலப் படை/கூலிப்படை/

நாட்டுப் படை/காட்டுப்படை/துணைப் படை/பகைப்படை

காவிரியின் கரைகளில் செருக்களம்.

செருக்களத்தில் செருக்கோடு  வெல்லெஸ்லி…கொலோனல் ஆர்தர்வெல்லெஸ்லி  என்னும் சிவப்பனோடு இன்னும் இருவர்.லெப்டினெண்ட் ஜெனரல் ஜார்ஜ் ஹாரிஸ்  மற்றும் மேஜர் ஜெனரல் டேவிட் பெயர்ட்..! சம்பளத்துக்காக சண்டையிட வந்தவன்கள்!

–   ம்….?ஏதும் தகவல்…. புதியதாக …?-வெல்லெஸ்லி சின்ன கண்களால் –கேப்டன் ஸ்டூவர்ட்டைப் பார்த்தான்.

-ப்ரிட்டிஷ் மன்னர் வாழ்க! லார்ட்… பொங்கிப் பாயும் காவேரி ஆறு ஸ்ரீரங்கபட்டணத்து கோட்டையின் வடமேற்கில் இரண்டாகப் பிரிந்து ஸ்ரீரங்கபட்டணத்து கோட்டையைச் சுற்றி வளைத்துக் கொண்டு தென்கிழக்கில் ஒன்று சேரும் வரை  ஆற்றங்கரையில் சுமார் ஏழு அடி அகலமுள்ள சுவர்கஆல் கட்டப்பல்ல்ச் மிகப் பாதுகாப்பான கோட்டை.

ஆனாலும் என்ன காவிரியின் இரு கரைகளிலும் நமது ஆர்மி… வேண்டிய அளவுக்கு ஆயுதங்கள். இனி அந்த புலி.. நம்முன் எலி! திப்புவின் தளபதி கமரேதினுக்கு நாம கொடுத்த தொகை வீண்போகவில்லை…

-புலிகள் பதுங்கிப் பாய்பவை ஸ்டூவர்ட்! எப்போதும் சிறுத்தை களையும், புலிகளையும் லேசில் எடை போட்டு விடாதீர்கள் சமயங்களில் நமது கணக்கைக் குழப்பிவிடும்!புதியக் கணக்கைத் துவக்கி விடும்…!மேஜர் பெயர்ட்.. உன் கருத்து ஏதுமுண்டா…!”

 

-பிரிட்டிஷ் தேசப் புகழ் வாழ்க! பிரபு  வெல்லெஸ்லி அவர்களுக்கு தாழ்மையான வணக்கம்! யுத்த அனுபவத்தில்  மிக மூத்தவரான தாங்கள் இந்த எளியவனின் கருத்தையும் கவனத்தில் கொள்வதற்கு நன்றி!

நமது முதல் இலக்கும் இரையும் கோட்டை…! திப்புவின் பெருமிதமாய் நிற்கும் இந்த கோட்டை.. ஸ்ரீரங்கப்பட்டணத்து கோட்டைச் சுவர்களை உடைக்க முடிந்தால் நல்லது… இல்லாவிடில், நம் வீரர்களுக்கு கடும் பணிதான்!ஆனால் பிரபு  ஸ்ரீரங்கப்பட்டணக் கோட்டையின் சுவர் திப்புவின் மனத்திட்பம் போலவே வலிமை மிகுந்ததாக இருக்கிறது!

– மேஜர் ஜெனரல் டேவிட் பெயர்ட்…. அறிவாயா நீ…பகுதிகளை நேரடியாக போரிட்டு வெல்வதை காட்டிலும் அதனை சுற்றிவளைத்து எதிரியை நிலைகுலைய வைப்பது ஒரு போர் தந்திரம் … பெயர்ட்டின் கண்களை மிக நேரடியாக நோக்கினான் வெல்லஸ்லி

-‘சொல்லுங்கள் பிரபு…

-நமது லண்டன் பத்திரிக்கைகள் என்னவெல்லாம் புகழ்ந்து எழுதின தெரியுமா?இந்த மாவீரன் திப்புவைப் பற்றி கிழக்கிந்தியக் கம்பெனியில் குலை நடுக்கம் என வர்ணித்தன.

-அப்படியா பிரபு அவர்களே…

-கேள் பெயர்ட்..மற்றும் ஸ்டூவர்ட் நான் அஞ்சுகிறேன்! ஆம். அவனைக் கண்டு அஞ்சுகிறேன்.. .லெப்டினெண்ட் ஜெனரல் ஜார்ஜ் ஹாரிஸ்  அறீயக்கூடும் இந்த மகா உண்மைகளை

-ஏன்..அப்படி பிரபு..?

-திப்பு நாமறிந்த மற்ற இந்திய ராஜாக்களைப் போன்றவன் அல்ல. ஸ்டூவர்ட். ! பிற மன்னர்கள் மத்தியில் திப்பு ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன்! ஆனால் பார்.. திப்புவைப் பின்பற்றும் தகுதி இல்லாக்      கோழைகளாக ஏனைய ராஜாக்கள் இருப்பதே நம் அதிர்ஷ்டம்.

-யூனியன் ஜாக் புகழ் ஓங்கட்டும்.திப்புவைப் போரிட்டு வெல்லவே முடியாதா பிரபு..

-வாய்ப்பே இல்லை. வேறு வழிகளில் தான் இந்தப் புலிக்கு வலை வீச வேண்டும்

-வேறு வழியெனில் ..போராதிக்க ராணுவப்போர்த்தந்திரம் என்னும் ..மின்னல் வேகயுத்தம் தானே.…?..

-..மின்னல் வேகயுத்தம் என்பதெல்லாம் வேறொன்றுமில்லை..நண்பா..இந்த தந்திரப்படி.எதிரி தனது இராணுவத்தையும்..இராணுவப் பொருளாதார உள்ளாற்றலையும் முழுமையாக வெளிப்படுத்துவதற்கு முன்னதாகவே நாம் அவர்கள் மீது ஆக்கிரமிப்பை ஆரம்பித்துவிட வேண்டும்..இல்லையெனில் இருக்கவே இருக்கிறது நம் பாரம்பரிய போர்தந்திர முறை…நாம் செய்ய வேண்டியதெல்லாம் விரிந்த இந்தியா..அதாவது அகண்ட பாரதம்..அதுதான்..நம் பிரிட்டிஷ் தேசத்துக்கு நாம் செய்யும் பெரும் சேவை

-அது உள்ளது பிரபு..! மிகச் சரியாக..விளக்கினீர்கள் இந்த எளியவர்களுக்கும் விளங்கும்படியாக

-ஆனால், நமக்குத் தான்  ஒரு குயுக்தி இருக்கிறதே ‘பிளாசிப் போரி’ல் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினோம் அறிவாயா?

-அறிவோம் பிரபு.. இலஞ்சம்…! கூடுதலாக ஐந்தாம் படை…!

அதேதான் இப்பொழுது… முக்கியமானவர்கள் நம் பணத்திற்கு விலைபோய் விட்டார்கள்.ஆனால், பிரபு இதுவெல்லாம் சரியான யுத்த முறைதானா…

-குழந்தாய்  ஹாரிஸ் குழப்பிக் கொள்ளாதே ….அதிகமாய்  மனதை அலட்டிக்கொள்ளாதே… யுத்தத்தில் எதுவும் சரிதான் என்பதே உலக நியதி… யுத்த நீதி!

திப்புவின் அருகிலிருந்து அனைத்தும் அறிந்த மீர்-சதக் ,வெல்லஸ்லியிடம் கிசுகிசுத்தான்.நிதி சேர்க்க துணிந்தவன்

தலையாட்டிய வெல்லஸ்லி கட்டளையிட, ஒரே சமயத்தில் பீரங்கியும் ராக்கெட்டும் செயல்படத் தொடங்கின.

பெருங்கதவுகள் தகர்க்கப்பட… சிதைந்து விழுந்தன… காலி கருங்கல்கள் பாறைகள்…குண்டுத் துகள்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நீர் புக வைத்ததால் அவை பயனற்றுப்போயின…!

லெப்டினெண்ட் ஜெனரல் ஜார்ஜ் ஹாரிஸ்  முகத்தில் புன்னகை!

எந்தப்பக்கம் ஆழம் குறைவெனக் காட்டிக்கொடுத்தவன் காட்டியவழியில்  பெருமழை வெள்ளமென பரங்கிப்படை கோட்டைக்குள் நுழைந்தது.

மீர்-சதக் இதழ்களில் சதி சிரிப்பு!

திப்புவின் படைகள் திகைத்தன!

கண்ணெதிரிலேயே சுல்தானின் வெடிமருந்து கிடங்கு வெடித்துச் சிதறியது. பரங்கியர் நால்வரும் புன்முறுவல்  பூக்கத்தொடங்கினர்.

-இனி வெற்றி எமதே!  பிரிட்டிஷ் மாமன்னர் வாழ்க!

இறுதிப் போருக்கு தயாராகின இருபுறமும்! வெல்லஸ்லி அழைத்தான்:

– ஸ்டூவர்ட்,பெயர்ட் கவனியுங்கள் நன்றாய்… இதுவே நம் இறுதித் தாக்குதல்!

கோட்டையை நோக்கி ஒரு படை நகர்ந்து கொண்டிருக்க..சுல்தான்பேட்டையில் முகாமிட்டிருந்த பரங்கிப் படைகளும் இணைந்துகொள்ள வெள்ளையரின் பெரும்படை ஸ்ரீரங்கப்பட்டணம் நோக்கி முன்னேறி நடந்தது.

படையின் முதல் அணி மெல்ல மெல்ல ஊர்ந்து நகர்ந்தது. தற்கொலை படை வீரர்கள் தம் உயிரைத் தர சித்தமாயிருந்தனர். இவர்களில் பலர் இறந்து வீழ்ந்தால்தான் அடுத்த அணி கோட்டைக்குள் நுழைய இயலும். அளவுக்கு அதிகமாகவே ஆங்கிலப் படை வீரர் பட்டாளம்.

உயர்ந்த குரல் எழுப்பினான் பெயர்ட்:

– ம்ம்… தொடர்ந்து முன்னேறுங்கள்!  சுல்தான் திப்புவின் பிரியமான இக்கோட்டை உச்சியில்  எம் யூனியன் ஜாக் கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும். முதலில் எம் கொடியைப் பறக்கவிடும் வீரனுக்கு காத்திருக்கிறது பெரும் பரிசு!

எதிர்கொள்ளக் காத்திருந்தது இளம்புலி திப்புவின் வீரம் செறிந்த படை.

 ‘எடுமெடு மெடுமென வெடுத்ததோர் 

இகலொலி கடலொலி யிகக்கவே

விடுவிடு விடுபரி கரிக்குழாம்

 விடும்விடு மெனுமொலி மிகைக்கவே. 1

வெருவர வரிசிலை தெறித்தநாண் 

விசைபடு திசைமுகம் வெடிக்கவே

செருவிடை யவரவர் தெழித்ததோர்

 தெழியுல குகள்செவி டெடுக்கவே

கரிகள் கருவிக ளோடு சிந்தின

 கழுகு நரியொடு காக முண்டன

திரைகள் திசைமலை யோட டர்ந்தன

 திமில குமிலமெ லாம்வி ளைந்தவே

குருதியின் நதிவெளி பரக்கவே

 குடையின நுரையென மிதக்கவே

கரிதுணி படுமுட லடுக்கியே

 கரையென விருபுடை கிடக்கவே -ஆக்ரோஷத்துடன் நுழைந்த ஆங்கிலப் படைகள் மீது வெறிகொண்ட வேங்கையாய் பாய்ந்தனர் சுல்தானின் படை வீரர்கள்.

நீண்டதொரு வாளை உருவியவாறு நுழைய முயன்ற பெயர்ட்-டின் நெற்றியைத் துளைத்ததொரு குண்டு. ..!கைத்துப்பாக்கியில் கரும்புகை..கண்களில் பெரும்பகையோடு திப்பு…!

அதிர்ச்சியில் வெல்லெஸ்லியும்  ஸ்டூவர்ட்,ஹாரிஸும்!


அடுத்த பகுதி -05

 

எழுதியவர்

அன்பாதவன்
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x