17 September 2024

“இந்த நேரத்துக்கு ஏன்…!” யோசனையோடு அலைபேசியை ஆன் பண்ணி பேசினேன்…

அப்பா… அப்பா என்கிறானே தவிர அடுத்து சொல்ல மாட்டேங்கறான்.

“சே… என்னாச்சு…” என்று வழக்கம் போல ஒரு கத்து கத்தினேன்.

“ப்ப்பா…உங்க ரூம்ல தானாவே டைப் பண்ற சத்தம் கேக்குதுப்பா…” என்றான். பதட்டம் கூடிய மூச்சு வாங்கலில்… அலைபேசி வழியாகவே வந்து விடுவான் போல.

நிலை குத்திய சூனிய பார்வையில் ஒரு கணம் அதே சத்தம் எனக்குள் கேட்டது போல உணர்ந்தேன். அது எப்படி…திக்கென்று காதுக்குள் தீ பிடித்தது போல யோசிக்க யோசிக்கவே…

கவிக்குயிலும் சேர்ந்து கத்துவது கேட்டது.

“ஏங்க சீக்கிரம் வாங்க… இங்க என்னென்னவோ நடக்குது… கதவும் ஜன்னலும் கரக் கரக்ன்னு சத்தம் போட்டுட்டே இருக்கு. உங்க ரூமுக்குள்ள இருந்து ஃபேன் வேகமா ஓடற சத்தம்… கேக்குது. உள்ள போய் பார்த்தா ஃபேன் ஆப் ஆகி தான் இருக்கு… ஒன்னும் புரியல…” குரலில் தீ பற்றி எரியும் அதே வேளையில்.. கடும் குளிரும் கப்பிக் கொண்டு அலைந்தது.

எனக்கு புரிந்து விட்டது. இது வழக்கம் இல்லையே.. என்னாச்சு…யோசித்துக் கொண்டே “பதற வேண்டாம்” என்றேன்.

“என்னவோ சரி இல்லைங்க…!” என்றவளிடம் என்ன சொல்லி சரி செய்வது என்று தெரியவில்லை.

மொட்டைமாடியில் இருக்கும் பூந்தொட்டி எல்லாம் உடைந்து விட்டதாக சொன்ன சே வுக்கு குரலில் பேரதிர்ச்சியும் நடுக்கமும்.. திக்கி திகிலடித்தது.

“அப்ப்பா ஹால்ல ஹீட் ஆகுது… டக்குனு சில் ஆகுது… மாறி மாறி ரூமே ரவுண்ட் அடிக்கற மாதிரி இருக்குதுப்பா… சீக்கிரம் வாங்க..!” என்றான்..

சீன பூச்சியின் சித்து வேலை… லாக்டவுனில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். சட்டென கோவைக்கு செல்ல முடியாத தூரம்… கன்னியாகுமரியாக இருக்கிறது. என்ன செய்வது… தலைக்குள் ஓடும் காலற்ற தலைகளின் தலைகீழ் உருவத்தை எப்படி கட்டுப்படுத்துவது.

மாடியில் டங் டங்கென யாரோ நடப்பதும்… ஜன்னலில் எதுவோ நிழல் போல ஊர்வதும்…. சமையலறையில் ஒளிந்து கொண்டு யாரோ எட்டி பார்ப்பதும் என்று வீடு வீடாக இல்லை. வீடு முழுக்க கெட்ட வாடை வீசுவதாக சொல்லி கிட்டத்தட்ட அழும் தோரணைக்கு வந்திருந்தாள் கவிக்குயில்.

“பயப்படாத…. பயப்படாத…” என்று சொல்லிக் கொண்டே யோசித்தேன். வீதியில் நாய்களின் தொடர்பற்ற குரைப்பு வினோதமாக இருந்தது. இருட்டு பூனைகளின் தொண்டையில் மீன் உயிரோடு மாட்டிக் கொண்டது போன்ற பாவனையில்… குரலில் குரூரம்.

அப்பா… டைப் பண்ற சத்தம் அதிகமா கேக்குது.. காதே கிழிஞ்சிரும் போல… அவ்ளோ வேகமாக சத்தம் கேக்குது” என்று மொபைலை என் அறை பார்த்து காட்டினான்.

வாட்சப் வீடியோ காலில் டைப் பண்ணும் சத்தத்தின் அதிர்வு என் அறையின் கதவில் கிர் கிர்ரென துடிப்பதை துல்லியமாக காண முடிந்தது. தெறித்து விழுந்த இதயத்தின் தனித்த துடிப்பு போல டைப் செய்யும் சத்தம் திக் திக் திக் திக் திக் என்று தனித்தனியாக குதித்தது.

எனக்கு புரிந்து விட்டது. யூதரா கட்டவிழ்ந்து விட்டாள். எப்போதும் அமைதியாக இருப்பவள்… இப்போது ஏன் இப்படி செய்கிறாள்.

சொன்னால் நம்புவார்களா… நம்பும்படி தான் சொல்ல முடியுமா…. கடந்த 5 வருடங்களாக என் அறைக்குள் நான் வளர்க்கும் யூதரா ஒரு அமானுஷ்யம் என்றால்…. கதவுக்கு பின்னால் நிலவுயரத்துக்கு நெடு நெடுவென வளைந்து குனிந்து நின்று கொண்டிருந்தவளை கண்டு மிரண்டு.. என்னவோ ஒரு புள்ளியில் நட்பாகி… பேசி… எத்தனையோ கதைகளுக்கு கிளைமாக்ஸ் கிடைக்காத போது… யோசித்து யோசித்து அயர்ந்து தூங்கி விட… காலையில் அட்டகாசமான கிளைமாக்ஸுடன் கதை தயாராக இருப்பது கண்டு பிரமித்திருக்கிறேன். அவளே டைப் பண்ணி சுட சுட கதையின் திருப்பத்தை சரி செய்து கொடுத்து குட் கேர்ள் பட்டம் வாங்குவாள்.

இந்த வீடே சுடுகாட்டுக்கு மேலே கட்டப்பட்ட வீடு தான் என்று சொல்லி குண்டைத் தூக்கி போட்டாள். குளம் இருந்த இடம்… அதை ஒட்டி இருந்த சுடுகாடு எல்லாமே இப்ப வீடாகி போச்சு… இந்த வீட்டுக்கு நேரா கீழதான் தன்னை புதைத்ததாக சொன்னாள். கோபத்தோடு தான் வெளியேறினேன். ஆனால் என்னவோ உன்னைப் பார்த்ததுமே சொல்லமுடியாத பரவசம். உக்கிரமெல்லாம் உணர்ச்சி பிளம்பாய் மாறி விட்டதை எப்படி சொல்ல. உன் சொற்களில் கொஞ்சம் கடன் குடேன்…. என்று ரொமான்ஸாக பேசுகையில்… வித்தியாசமான அனுபவமாக இருந்தது. உலகின் ஓரங்களில் எங்களின் வாழ்வு இப்படி அந்தரத்தில் மிதப்பதை நினைக்க நினைக்க அது பெருந்துயரம் யுத்தா என்று தன் நிலையை பகிர்ந்து கொள்ளும் போது பாவமாக தான் இருக்கும். “யூதரா என் காதலி” கதை எழுதி தான் அவளை எழுப்பி விட்டிருக்கிறேன். அவளுக்கும் எனக்குமான அறிமுகத்தை அந்த கதை தான் நிகழ்த்தி இருக்கிறது.

சரி… மோஹினிப்பேய் என்றதும்… மல்லிகைப்பூ வைத்துக் கொண்டு… தழைய தழைய புடவை கட்டிக் கொண்டு… மணக்க மணக்க மயக்கும் அழகு என்று நினைத்து விட வேண்டாம். இது பேய். அக்மார்க் பிசாசு. முகம் பிய்ந்து தொங்கும். நாக்கு ரெண்டடிக்கு சுருண்டிருக்கும். கண்கள் அற்ற மூக்கில் ஓட்டை மட்டுமே இருக்கும். கழுத்து குதறப்பட்ட… கொப்புளம் கொந்தளிக்க…சாக போகும் ஒரு மீன் வாசத்தோடு வாசம் செய்யும் பிசாசு. என் அறையில் நான் தனித்திருக்கையில்… மிதந்து கொண்டே இருக்கும். மிச்சம் இது தான் என்பது போல தான் மிதப்பு இருக்கும். தோளைக் கட்டிக்கொண்டு இந்த இடத்தில்… இந்த வரியை சேர் என்று அது சொல்லும் வரியெல்லாம் தேன் சொட்டும். எப்படி இதெல்லாம் என்றால்.. சீத்தலை சாத்தனாருக்கு சொந்தம் என்று சொல்லி இல்லாத பற்களை ஈ என காட்டும். அயோ குமட்டது… கொஞ்சம் சென்ட் பூசிக்கோ என்று என் பெர்ஃபியூமை எடுத்து அடித்து விடுவேன். சிறு பிள்ளை போல அயோ அயோ என்று உடல் கூசி கூனி விளையாடுவதை பார்க்க படபடப்பாய் இருக்கும்.

எனக்கு என்னவோ அதன் மீது பயமோ.. வெறுப்போ இல்லை. அதனாலேயே என்னை பிடித்து விட்டதாக காதில் ரகசியம் பேசும். இரவுகளில் நாங்கள் பேசாத கதைகள் இல்லை. பீர் குடிக்கையில்…. என் அத்தனை உளரல்களையும் பொறுமையாய் கேட்டு… தாலாட்டு பாடி தூங்க வைக்கும் அளவுக்கு எங்களுக்குள் ஒரு கிடார் இசை உருவாகி இருந்தது.

கவிக்குயிலுக்கும் சே வுக்கும் தெரியாமல் வீட்டுக்குள் சத்தம் காட்டாமல் இருந்தவள்… இப்போது என்ன வந்திருக்கிறது…. ஏன் இப்படி அராஜகம் செய்கிறாள்…?

இது ஒரு மாதிரி ரிலேஷன்ஷிப் என்றால்… அதுவும் சரி தான். பிசாசு என்று நானும் பார்க்கவில்லை. மனிதன் என்றும் அதுவும் என்னை நினைக்கவில்லை. எனது எல்லா எழுத்துலக துக்கங்களுக்கும் யூதரா சுலபமாக தீர்வு தந்து விடுகிறவள். என்னாச்சு இன்று.. ஏன் நான் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் இப்படி ஜம்பம் செய்கிறாள்.

இதை எப்படி சொல்வது… என்னவென்று சொல்லி புரிய வைப்பது. கன்னியாகுமரி சென்று புத்தி பேதலித்து விட்டது என்றல்லவா நினைப்பார்கள்…

என்ன சொல்லி சரி செய்வது என்று புரியவில்லை.

டைப் பண்ணும் சத்தம் அதிகமாக கேட்பதாக சொன்ன சே கண்களில்… பச்சையாய் பயம் மின்னியது. கவிக்குயில் கையில் டார்ச்சோடு வந்து வந்து போய்க் கொண்டிருக்கும் அல்லது போய் போய் வந்து கொண்டிருக்கும் லைட் வெளிச்சத்தை மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்ன செய்வதென்று தெரியவில்லை. வழக்கத்துக்கு மாறாக யூதராவின் நடவடிக்கை இருக்கிறது. இத்தனை தூரத்தில் இருந்து கொண்டு என்ன செய்வது…

சே விடம் மொபைலை வீடியோ காலிலேயே என் அறையில் கம்பியூட்டர் டேபிள் மீது வை என்றேன்.

ஐயோ பயமா இருக்குbபா என்றான். சத்தம் அதிகமாக இருப்பதாக சொன்னான். வீடே ஒரு வித குலுங்கலில் இருப்பதாக தடுமாறினான்.

வேறு வழி இல்லை. யூதராவிடம் இப்போது நான் பேச வேண்டும். இவர்கள் இருவருக்கும் தெரிந்தால் இன்னும் பயம் அதிகமாகும். ஜன்னல் வழியே வீட்டுக்குள் ஒரு வித சூடு பரவுவதாக கவிக்குயில் கத்தினாள். எனக்கு புரிந்து விட்டது. யூதரா தன் பிசாசுத்தனத்தை காட்டமாகவே காட்ட ஆரம்பித்திருக்கிறாள்.

அலைபேசி வழியாக ஊடுருவி வந்துவிட டெக்னாலஜி வளர்ந்திருந்தால் எவ்ளோ நன்றாக இருக்கும். சே விடம் மொபைலை உள்ளே கொண்டு போய் வை என்றேன். மறுபடியும் கிட்டத்தட்ட கத்தினேன்.

நெற்றி நடுங்க ரூமுக்குள் சென்றவன்.. சுற்றும் முற்றும் தனி தனி கண்களோடு கண்டது போல மிரண்டான். அறையில் பாதி இருட்டும் மீதி வெளிச்சமுமாக சட்டென புவியீர்ப்பற்று மிதக்க ஆரம்பித்தான். அலைபேசி வீடியோ காலில் கோணல்மாணலாக தெரிந்த காட்சி பயத்தை ஏற்றியது. அசையும் காட்சியில் அவன் கைகள் நடுங்குவதை உணர முடிந்தது. ஐயோ.. அப்bபா….என கத்தி மறு கையால் கதவை பிடித்துக் கொண்டு கால்களை கீழே நிறுத்த எவ்வளவோ முயன்றும் கால்கள் ஒரு சாயலாக தரையை விட்டு மேலே எழும்பிக் கொண்டுதான் இருந்தன. உடல் வேர்த்து உதடு படபடக்க… கண்களில் அசுர பயம்.

அbப்பா அbப்பா என்று கத்திக் கொண்டே…. தம் கட்டி மொபைலை டேபிள் மீது வைத்து விட்டு மூச்சடிக்கி முத்தெடுப்பவன் போல… கதவைத் தாண்டி வேகமாய் ஓடி மிதந்து வெளியேறுகையில் அப்பாடா என்று எனக்கும் மூச்சு வந்தது. அதிர்ச்சியின் வலையில் அவன் ஒரு யாரோவாய் அந்த அறையில் இருந்து தப்பித்து ஓடியது போல இருந்தது. அனிச்சையாய் கத்திக் கொண்டிருந்த நான் ஒரு மாதிரி அமைதியானேன். அதே கணம் கதவு படீரென்று அடைத்துக் கொண்டது.

அறைக்குள் அசுர பலத்தோடு யூதரா சட்டென மொபைலில் தோன்றினாள். முகம் இன்னும் நீண்டிருந்தது. கண்களில் தொங்கும் கொப்புளத்தை அழுத்திப் பிடித்து உள்ளே திணித்திப்படியே ஆழமாய் பார்த்தாள்.

“லூசாடி நீ.. என்ன பண்ணிட்டு இருக்க.. அவுங்கள மிரட்டிகிட்டு.. நீயே காட்டி குடுத்துருவ போல…!” என்றேன். பாறைக்குள் சிக்கிக்கொண்ட சிறு செடியின் பெருமூச்சு என் தலையில்.

ஈ என்று பற்களை காட்டி கடிப்பது போல பவித்தாள். “துரோகி…. துரோகி..” என்று உதட்டில் குருதி கொப்பளிக்க முனங்கினாள்.

“என்ன துரோகி…. என்ன சொல்ற… விவரமா சொல்லி தொலை…” என்றேன். என் முகத்தில் இறுக்கம் கூடியது.

“ரெண்டு நாள் பிரிஞ்சிருக்க முடியாதோ.. பேயை எல்லாம் ரூம்குள்ள வெச்சு வளத்தா இப்டி தான். நாய் சகவாசம் சேலையை கிழிக்கும். பேய் சகவாசம் மூளையை கிழிக்கும்…” சொன்னதை தொடர்ந்து முனங்கினேன்.

நான் பேசுவதை கண்டு கொண்டதாக தெரியவில்லை. கட்டில் மீதிருந்த எனது லேப்டாப்பை திறந்து காட்டி…..” என்ன இது…?!!!!!!” என்று கத்தினாள்.

அலைபேசி வழியாக கூர்ந்து பார்த்துக் கொண்டே நானும்…” என்ன எது..?” என்றேன்… “ஆமா,… யாரை கேட்டு நீ டைப் பண்ணிட்டு இருக்க..?” என்றேன் கூடுதலாக.

“ம்ம் மயிரு… எத்தன புள்ளைங்க கூட சாட் பண்ணிருக்க… உன்ன நம்பி நீயே கதின்னு கிடக்கறேன்ல…. அதான் திமிர் ஏறிக் கிடக்குது…” என்றாள். ஒரு கண்ணை பிழிந்து விட்டுக் கொண்டாள்.

ஒரு கணம் உற்று பார்த்து விட்டு எனக்கு ஒரு மாதிரி புரிந்து விட்டது.

“சரியான லூசு பேய்டி நீ.. அதெல்லாம் என் பிரெண்ட்ஸ்… என் ஃபேன்ஸ்…” சமாதானத்துக்கு இடையே சட்டென்று தோன்றியது…” சரி லவ்வர்சாவே இருக்கட்டுமே…. என்ன இப்ப.. என்னவோ பொண்டாட்டி மாதிரி கேள்வி கேக்குற…” என்றேன். நடுமுதுகில் தீயாய் பரவி இருந்தது கோபம்.

லேப்டாப்பை நொடியில் சுவற்றில் அடித்து உடைத்து விட்டு….” ஆமா.. பொண்டாட்டி தான்… நான் அப்படித்தான் நினைக்கறேன்…” என்று கத்தினாள்.

ஒரு கணம் மூச்சே நின்றது போல இருந்தது. என்ன கருமம் இது. விளையாட்டாய் ஆரம்பித்து… ஒரு பேய ரூம்ல இருக்க விட்டு… பேய் சகவாசம்… இப்படி காதலில் வந்து நின்றிருப்பதை என்னவென்று சொல்வது. எல்லாமே தப்பாக தோன்றியது. எதுவோ சரி இல்லை என்றும் தோன்றியது. இதை இப்போதைக்கு சரி செய்வது தான் சரி. மனதுக்குள் கால்குலேஷன் ஓட…

“சரி நம்ம சண்டைய நாம வெச்சுக்கலாம்.. அவுங்கள எதும் பண்ணின… அப்புறம் எனக்குள்ள இருக்கற பிசாசை நீ பார்ப்ப” என்று வழக்கம் போல விளையாட்டாய் மிரட்டுவது போல மிரட்டினேன். அதே நேரம் அதில் ஒரு எச்சரிக்கையையும் விடுத்தேன்.

“ஆமா உன் அழகு பொண்டாட்டி கழுத்தை கடிச்சு ரத்தம் குடிக்க போறாங்க…. போடா ” என்று அவளும் விளையாட்டாய் வழக்கமாக பேசுவது போல பேசுவாள் என்று எதிர்பார்த்தால்… கழுத்தை பிடித்துக் கொண்டு கத்துகிறாள்.

“இந்த உலகமே நீ தான்னு உன் காலுக்கடில ஒரு நாய் மாதிரி கிடந்தா.. ஊர்ல இருக்கறவ கூடல்லாம் கொஞ்சி குலாவிட்டு திரியறயா…?” என்றாள்.

உச்சிக்கு ஏறின கோபத்தை பற்களைக் கடித்துக் கொண்டு சம தளத்துக்கு கொண்டு வந்தேன்.

“கிறுக்கு பிசாசு” முனங்கி கொண்டே….” ஐயோ யூதரா… புரிஞ்சுக்கோ… நீ மனுஷி இல்ல… மனுஷி மாதிரி பேசலாம்.. வாழ முடியாது… அதுமில்லாம என்ன கண்ட்ரோல் பண்ற உரிமையை உனக்கு நான் குடுக்கல… உனக்கு மட்டுமில்ல.. யாருக்குமே நான் குடுக்கல…. புரிஞ்சுதா…” நிதானமாக கத்தினேன்.

“கத்தாத… கோபம் வருது….!” என்று இல்லாத பற்களை கடித்து கருப்பு குருதியை துப்பினாள். அறைக்குள் புகை மண்டலம் பாம்பு புற்றில் இருந்து கிளம்புவது போல கிளம்பியது.

சில நொடிகள் என்னையே வீடியோ காலில் பார்த்தவள்… மணிக்கட்டை தானே உடைத்துக் கொண்டு நெஞ்சு நெஞ்சாய் அடித்துக்கொண்டு கதறினாள்.

என்ன கருமம் இது… செய்வதறியாது திகைத்தேன். அதே நேரம் கவிக்குயில் லைனில் வந்து விட்டாள்.

“என்ன நடக்குது.. ரூம்குள்ள யார் இருக்கா.. யார் கூட பேசிட்டு இருக்கீங்க. சே யார் கூடவோ பேசிட்டு இருக்கீங்கன்னு சொல்றான்” என்று பதறினாள். “ரூமுக்குள்ள எல்லாமே மிதக்குதாமா.. இங்க என்ன நடக்குது.. பயமா இருக்கு… பைத்தியமே பிடிச்சிடும் போல” என்று கண்களை டபக் டபக் என்று சிமிட்டிக் கொண்டே நடுங்கினாள்.

“ஒன்னும் பயந்துக்க வேண்டாம். என் ரூம்குள்ள மட்டும் போகாதீங்க. அமைதியா ஹால்ல இருங்க.. கொஞ்ச நேரத்துல எல்லாம் சரி ஆகும்.. பயந்துக்க வேண்டாம்… நான் பாத்துக்கறேன்…” என்று கிட்டத்தட்ட கட்டளையிட்டேன்.

ஒன்றும் புரியாமல் குழப்ப மனநிலையில் கவிக்குயிலின் முகம் அரண்டு கிடந்தது.

அதற்குள் மீண்டும் வீடியோ காலில் வந்து விட்ட யூதரா.. “அதுக்குள்ள யார்கிட்ட பேச போய்ட்ட….என் புது சக்களத்திகிட்டயா…” என்று சொல்லி அவள் கழுத்தை அவளே சுழற்றிக் கொண்டு கர்ஜித்தாள்.

“கிறுக்கி மாதிரி பேசறாளே… ஒரு எழவும் புரிய மாட்டேங்குது… மடச்சி… மடச்சி ” முனங்கி கொண்டே ” ஆமாண்டி அப்படிதாண்டி பேசுவேன்… நீ கிளம்பு… இனி உனக்கு என் ரூம்லயும் இடமில்லை.. என் மனசிலயும் இடமில்லை…” நானும் கர்ஜித்தேன். பொறுமை ஒவ்வொரு புள்ளியிலும் தகர்ந்து கொண்டே இருந்தது.

“என்ன கிளம்பறதா… ஹெலோ…. இதுக்கு பேர் தான் நம்ப வெச்சு கழுத்தை அறுக்கறது… நீ இருன்னா இருக்கறதுக்கும்…. போன்னா போறதுக்கும்…. நான் ஒன்னும் காசுக்கு வந்தவ இல்ல. காதலுக்கு வந்தவ….”

“ஆமாமா இல்லேன்னாலும் அந்த கழுத்து சும்மா பளபளன்னு இருந்திரும்.. போடி… புழு புடிச்ச பிசாசே…” என் டயலாகை என்கிட்டயே அவுத்து விட்றா… ”

பட்டென்று தலையை தரையோடு வைத்து சுழற்றிக் கொண்டு அழ ஆரம்பித்தது விட்டாள். முதுகில் இருந்து தன்னை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து வீசிக் கொண்டே “துரோகி..துரோகி… எத்தனை கதைங்க எழுதி கொடுத்திருப்பேன்… எவ்ளோ கிளைமேக்ஸ் என்னோடது… பேர் மட்டும் யுத்தன்னு பெரிய மயிரு மாதிரி போட்டுக்குவான்… உன்ன சும்மா விட மாட்டேண்டா…..”

“என்ன பண்ணுவ… என்னடி பண்ணுவ… சாத்தானே…மந்திரிச்சு… பாட்டிலுக்குள்ள அடைச்சு மாங்காட்டுக்குள்ள புதைச்சு வெச்சேன்னு வை.. ஜென்மத்துக்கும் மண்ணுக்குள்ள தான்… ஒரு ராத்திரி பொறுத்துக்கோடி… காலைல நீ என்ன ஆகறன்னு பாரு…இந்தா கிளம்பிட்டேன் …” என்று கிட்டத்தட்ட கொலை மிரட்டல்…. மிரட்டினேன்.

சுவற்றில் மோதி மோதி அவள் அச்சுக்கு ஓட்டை செய்து விட்டவள் சட்டென நிறுத்தினாள்.

கேமராவை நன்றாக உற்றுப் பார்த்துக்கொண்டே… “காலைலதான நீ வருவா.. இன்னைக்கு ஒரு ராத்திரி முழுசா இருக்கு… துரோகி…” என்று நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

மின்விசிறியின் சத்தம் எலிகளின் தொண்டை அறுபடுவது போல கேட்டது.

எனக்கு புரிந்து விட்டது. அவள் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறாள் என்று…எனக்கு விளங்கி விட்டது.

ஜிவு ஜிவென ஏறிய கோபத்தை அடக்கவே முடியவில்லை.

“யூதரா முண்டை…. ஏய் கொள்ளிவாய் பிசாசே… கவிக்குயிலயோ… சே வையோ தொட்ட….. உன் எலும்பை நொறுக்கி… சில்லு சில்லா…. பீஸ் பீஸ்ஸா…. உடைச்சு…அம்மில போட்டு அரைச்சு… அகால மரணம் அடைஞ்ச கர்ப்பிணி பொம்பள குழிமேட்டுல தூவிடுவேன். தினமும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் எரிஞ்சு எரிஞ்சு எந்திருப்ப…. ஏழேழு நரகத்தை விட மோசமா இருக்கும்… பார்த்துக்கோ…” நானும் மிரட்டினேன்.

இருவருக்குமிடையே இருந்த அலைபேசி அக்கினி அதிகமானது. உக்கிரம் தாங்காமல் நாக்கை தலையோடு சுழற்றிக் கொண்டு சுவற்றில் சரிந்து மூச்சு விட்டவளை பார்க்க… கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

“எத்தனை பாசக்காரி… பேரன்புக்காரி.. ஏன் இப்படி நடந்து கொள்கிறாள். கட்டிலுக்கடியே இடம் குடுத்ததுக்கு கழுத்தை புடிச்சி பதம் பாக்கறா. நான் யார் கூட பேசறேன்… பழகறேன்ங்கறது எல்லாம் இவளுக்கு எதுக்கு… செத்தவ கூட சகவாசம் வெச்சுக்கிட்டதுக்கு தேவை தான்…”

இதயத்துக்கும் மூளைக்கும் இடையே சுடுகாட்டு நிறம் குருதியில் சேர்ந்து கொண்டே இருப்பது போல இருந்தது. மண்டைக்குள் நிமிர்ந்து நிமிர்ந்து உடையும் உணர் கொம்புகளின் வழியே மாய கதவுகள் உடைந்து கொண்டே இருந்தன.

வீடு… வீடாக இல்லை. ஒவ்வொரு அறையின் கதவும் நரம்பு வெடித்து நடுங்குவது போல நடுங்குவதாக கவிக்குயில் சொல்லி நடுங்கினாள். என்ன செய்து இதில் இருந்து தப்புவது. யூதரவாவிடம் கெஞ்சி விடலாம் என்றால்… தலையும் இல்லாத காலும் இல்லாத ஒரு பிசாசிடம் கெஞ்சுவது மாதிரி ஒரு கேவலம் வேறுண்டா… அப்டியே நசுக்கி.. சுவத்துல வெச்சு பூசிட வேண்டாம்… மண்டைக்குள் பரபரவென மனுஷ பேய் ஏறி கிறுகிறுவென சுழன்றது.

காதல் மாதிரி மானங்கெட்ட பிசாசை பார்க்கவே முடியாது. அது எப்போ எப்பிடி உருமாறும்னே தெரியாது. அது தான் இப்போ யூதராகிட்ட நடக்குது. பொஸஸிவ்னஸ்… பிசாசுகளுக்கே உண்டான பொஸசிவ்னஸ். காதல்… இல்லாத அந்த ஓட்டை கண்ணை மறைச்சிருக்கு. காமம் முலைக்கேறி முதுகு வழியா மூக்கு சிந்துது. என்னால் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை. மொட்டை மாடியில் கவிக்குயில் அமைத்த தோட்டத்து காய்கறிகள் எல்லாம் புழுக்கள் நெண்டுகின்றவனாம். பூத்துக் கொண்டிருக்கும் மொட்டுக்கள் எல்லாம் கருகி சாகின்றனவாம். தோட்டக்கலையே தோற்றுப் போனது போல அது ஒரு சுடுகாட்டு முகைப்பை போல தெரிகிறதாம். என் மேல் இருக்கும் கோபத்தை வீட்டை சுற்றி சுற்றி காட்டிக் கொண்டிருக்கிறாள். இதில் தானாகவே டைப் செய்வது வேற…

யூதராவிடம் மானத்தை விட்டு கெஞ்சினேன்.

“உன்ன நம்பறதுக்கு இல்ல யுத்தா. நியாயமா நீ யுத்தன் இல்ல யூதன்னு தான் உன்னை சொல்லணும். அவ்ளோ க்ளவரா இருக்கு உன் மூவ். யாரும் கண்டு பிடிக்கவே முடியாத தில்லாலங்கடி வேலையெல்லாம் பண்ணிட்டு இருக்க. உன் லேட் டாப் உன் அந்தரங்க ரகசியங்களை எல்லாம் போட்டு வாங்கிடுச்சு யூதா…” கன்னமற்ற எலும்பு கூட்டில் அவள் பேசும் சொற்கள் புசுபுசுவென கன்னியாகுமரி காற்றில் கேட்டது.

“எல்லாத்தையும் தப்பு தப்பாவே புரிஞ்சுக்கிட்டா நான் என்ன பண்றது யூதரா… நான் பப்லிக் ஃபிகர். எங்கிட்ட நாலு பேர் வந்து பேசத்தான் செய்வாங்க. அதையெல்லாம் ஓவரா கற்பனை பண்ணிக்கிட்டு… கதை அடிச்சா அது இப்பிடி தெருநாய் சண்டை தான். அதுவுமில்லாம அதெல்லாம் கேட்டா… கவிக்குயில் தான் கேக்கணும். அவளுக்கு என்னை புரியும்.. நீ யாருடி… என்னை கண்ட்ரோல் பண்றதுக்கு….” காற்றாலை வழியே என் கோபம் சொற்களாக மடைமாற்றம் ஆகின.

“நான் யாரா….? விடிய விடிய உன் கதைக்கு காவல் காத்தவ.. உனக்கு புதுசு புதுசா கதைக்கான கரு குடுத்தவ….நீ சோர்ந்து போனப்பல்லாம் உன்ன மடில போட்டுக்கிட்டு உன்னை தேத்துனுவ… என்னைய பார்த்து யாருன்னு கேக்கற…!!!?” ரத்தம் சொட்ட அவளாகவே அவள் காதை பிடித்து பிய்த்து நசுக்கிக் கொண்டு கத்தினாள்.

“இப்டி சொல்லி காட்டற புத்தி தான் ஒரிஜினல் நீ. இந்தா… உன் பிசாசுதனத்தை காட்டீடீல்ல…. இதெல்லாம் எனக்கு ஒத்து வராது.. சனியனை தள்ளி வைக்கறது தான் வார நாட்களுக்கு அழகு. நீ ஒதுங்கிக்கோ…” – நானும் கத்தினேன்.

“அது முடியாது மகனே.. நீ வானா வறதுக்கும் போனா போறதுக்கு நான் என்ன உன் வீட்டு வேலைக்காரியா… நான் யூதராடா… உன்ன விட்டு போற ஐடியாவே இல்ல…” கெத்து காட்டினாள்.

“மரமண்டை உனக்கே இவ்ளோ திமிர்ன்னா… இல்லாததையே கூட உருவாக்குறவன்…..எனக்கு எவ்ளோ இருக்கும்… உன்னை நைய புடைச்சு… நசுக்காம விடமாட்டேண்டி…” கத்திக் கொண்டே…..” சே….” என்று கத்தினேன்.

கதவுக்கு வெளியே நின்றிருந்த சே… ‘அப்b…பா…’ என்றான். பயத்தில் அவன் குரலில் குதிரை சத்தம் கலந்திருந்தது.

“சேக்குட்டி எதுக்கும் பயந்துக்காத… என் ரூம்குள்ள போய்… புக்ஸ் ஸெல்ப்ல பைபிள் இருக்கும்.. அதை எடு…” என்றேன்.

” அப்bபா பயமா இருக்குப்பா… பூனை செத்த வாசம் வருதுப்bபா…” என்றான். ஐயோ என்றிருந்தது.

“ப்பா தரையெல்லாம் கரப்பான் பூச்சி ஓடுதுப்பா” என்று சொல்லி கால் மீது குதித்து காற்றில் களேபரம் செய்தான். அவனை நிதானப்படுத்த நேரம் பிடித்தது.

வீடியோ கால் எனும் தொழில்நுட்பம் எத்தனை பயன்படுகிறது என்று அந்த நேரத்திலும் ஒரு சிறு இலையென எங்கோ எதிலோ பறப்பதாக கற்பனை செய்தது மனம். ஐயோ இந்த கற்பனையை என்ன தான் செய்றது… தலையை கழற்றி வீசி விட்டதாக வந்த கற்பனையில் பெருமூச்சை நிதானமாக்க பழகுகிறேன். மூச்சற்று இருப்பதாக தொடந்த கற்பனையில் வாய் விட்டே ஐயோ என்றேன். நீர் அருந்தும் மன மோகம் நித்திரைக்கு முன் வருவது போல… தூரத்தில்… வெகு தூரத்தில் சாத்தானை சபிக்க மட்டுமே முடிந்த என்னால்.. பிறகென்ன என்று யோசிக்க நேரம் தேவைப்பட்டது.

நிறுத்தி நிதானமாக சேவிடம் அழுத்தமாய் சொன்னேன்.

“அது கரப்பான் பூச்சி இல்லை. அது ஒரு மாயம். நீ முன்னேறி போக போக… அது மறைந்து விடும்…” என்றேன்.

அவனும் நெற்றி தொடும் முடியை ஒதுக்கிக் கொண்டு… உத்வேகம் சுழல… வியர்வை துளிகள் ஸ்லோமோஸனில் சொட்ட… மெல்ல மெல்ல என் அறையை நோக்கி நடந்தான். நடக்க நடக்க காலடி சத்தங்கள் கூட துல்லியமாக எனக்கு கேட்டது.

கவிக்குயிலுக்கு வீட்டுக்குள் ஏதோ இருக்குன்று புரிந்து விட்டது. பிரார்த்தனையில் கந்த சஷ்டி கவசம் துணைக்கு நிற்க…

காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

சுழலும் அறையிலும் சூலாயுதம் வேண்டி பிராத்தனை சும்மா சுத்து போட்டுக் கொண்டிருக்க… யூதரா சாமானிய பிசாசு இல்லை என்று முன்பே நான் அறிவேன். அவள் அன்புக்கு ஏங்கியே செத்தவள். அந்த அன்பின் தீவிரத்திலேயே என்னோடு வந்து சேர்ந்து கொண்டவள். அவளின் ஆன்ம அலைச்சல் நிம்மதி பெருமூச்சு விட்டது என் அறையில் தான். அத்தனை சீக்கிரம் அவளை விரட்ட முடியாது என்று அறிவேன்.

“அப்bபா…… அம்மா சாமி கும்படறாங்க…” என்று வீடியோவை கவிக்குயில் பக்கம் காட்டி விட்டு என் அறைக்குள் நுழைந்த சே சட்டென்று காற்றினில் கால்கள் பறக்க.. மிதக்க ஆரம்பித்து விட்டான். அவனால் பேச முடியவில்லை. அவன் பிரிட்டிஷ் ஹிப்பி தலைக்குள் நுழைந்து வாக்யூம் கிளீனரை போல கதகளி செய்தது காற்று.

“நம்பாத சே. சே ன்னு பேரை வெச்சுகிட்டு பிசாசு கட்ற கட்டெல்லாம் நம்பலாமா.. முன்னேறி போ…. எப்படியாவது பைபிளையும்… குர்ரானையும் எடுத்துக்கிட்டு வா…” நிதானமாக ஆனால் இறுக்கமாக கத்தினேன்.

‘அப்பா முடியல…. கழுத்தை பிடிச்சு என்னவோ அழுத்துதுபா…” அவனால் பேச முடியவில்லை. பேச்சில் முன்னும் பின்னுமாக பூமி சுழற்சியின் கிர்ர் சத்தம்.

சுவரெல்லாம் கண்ணாடியாக மின்ன ஆரம்பித்தது. வீடியோ காலில் விநோதங்கள் காண்கிறேன். இருத்தல் எனக்கு நெருப்பு. காற்றின் வழியே காலம் உருளுகிறதோ…

“விடாத சே.. போ போ… உன்னால முடியும்….”

யூதரா சுவரோரம் மூலையில் காதை பொத்திக் கொண்டு பொக்கை வாய் நடுங்க… வெறித்துக் கொண்டிருப்பதை சே மொபைலை ஒரு சுற்று சுற்றும் போது காண முடிந்தது. கவிக்குயில் சொல்லிக் கொண்டிருக்கும் கவசம் அவளை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும்.. மீறி எழும் பலம் வாய்ந்தவள் என்று அறிவேன்.

ஒரு வகை ஈகோ எனக்கும் யூதராவுக்கும் இடையே பெரும் பகையை சடசடவென கொஞ்ச நேரத்திலேயே வளர்ந்து விட்டிருந்தது. கூடயே இருப்பவனின் ஈகோ நூறு கொள்ளி வாய் பிசாசுகளுக்கு சமம். அதுவும் யூதரா மாதிரி பிசாசுகளுக்கு சொல்லவே வேண்டாம். அது ஒரு ஜென்ம விரோதம். சந்தேகம் எனும் பிசாசு பிசாசுக்கு பிசாசு பிடிக்கும் வேலையை செய்து விடும். ஒரு புள்ளியில் தொடங்கிய சண்டை… ஒருவரை ஒருவர் ஆக்கிரமிக்கும் அளவுக்கு நெடு நெடுவென வளர்ந்திருந்தது.

தடுமாறி ஸெல்ப்கிட்ட சென்ற சே… மூச்சடக்கி முத்தெடுப்பவன் போல.. தட்டு தடுமாறி ஒவ்வொரு புத்தகமாக தேடினான்.

“இதுக்கு தான் அப்பப்போ புத்தக அலமாரிகிட்ட வரணும்னு சொல்றது…!” முனங்கி கொண்டே கத்தினேன். தேடு தேடு… பைபில் குர்ரான் ரெண்டும் அடுத்தடுத்து இருக்கும்… எடுத்துக்கோ… ஒவ்வொரு கைலயும் ஒவ்வொன்ன புடி… ஜன்னல் பக்கம் இருக்கற மூலைய பார்த்து காட்டு…”

காட்டு கத்து கத்தினேன். அவள் அங்கு அமர்ந்து கொண்டு விளையாட்டு காட்டிக் கொண்டிருப்பது அவர்கள் கண்களுக்கு தெரியாது.

நொடியில் அவன் ஒரு கையில் பைபிளையும் ஓவர் கையில் குர்ரானையும் எடுத்து விட்டான். நான் சொன்னது போலவே காட்டினான். அவன் கால்கள் தரையில் நிற்காமல் நீருக்குள் ஓயாமல் அலசும் வாத்து கால்களை போல.. வேக வேகமாய் துடுப்பசைத்துக் கொண்டே நின்றன. அந்தரத்தில் மிதப்பது போலவே அவன் இல்லாத வெற்றிடத்தைப் பார்த்து காட்டினான். இந்தா பார் இந்தா…பார் என்பது போலவே அசைத்து அசைத்து கைகளில் இருக்கும் புனிதங்களை காட்டினான். கண்களை இறுக மூடிக் கொண்டு காதில் விழும் கவிக்குயிலின் மந்திர குரலை… அழுந்த தடுத்த யூதரா தன்னை தக்க வைத்துக் கொள்ள போராட ஆரம்பித்து விட்டாள்.

பிசாசு கலங்க ஆரம்பித்து விட்டது. “விடாதே அடி….அடி…..அடிச்சோட்டு… அடி.. அடி..” நான் கத்திக்கொண்டே இருந்தேன்.

அவன் கால்கள் இப்போது தரையில் நின்றிருக்க….என் அறையில் எல்லாம் சமநிலைக்கு திரும்பி இருந்தது.

“bப்பா பாருங்க….!” என்று வீடியோவை அறையை சுற்றி காட்டினான். பேரமைதி. புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது. பிசாசு கிளம்பி விட்டது… என்று யோசித்தேன். அதற்குள் பழைய சாமான்கள் போட்டு வைத்திருக்கும் அறைக்குள்… இருந்து வீறிட்டு கத்தும் குரல் கேட்பதாக சொன்ன சே வின் முகத்தில் மீண்டும் தீவிரமாக படபடப்பு. அவன் உடல் நடுங்கி ஒடுங்கியது.

இந்த வீட்டின் சூனியம் அந்த அறையில் தான் இருப்பதாக நம்புகிறேன். வீட்டுக்கு தேவை இல்லாத அனைத்து பொருள்களையும் போட்டு குவித்து வைத்திருக்கிறோம். அது ஒரு ஹாபி மாதிரி. தேவை இல்லாத ஆன்மாக்கள் வந்து ஒளிந்து கொள்ளும் இருட்டறை.

என்ன பண்ணுவது… சூனிய அறைக்குள் விரட்டி விட்ட யூதராவை வீட்டை விட்டே விரட்ட வேண்டும். இந்த உலகை விட்டே விரட்ட வேண்டும். பிசாசோடு கொண்ட பழக்கம் என்னைக்கிருந்தாலும் போட்டு தாக்கும் என்பது கண்கூடு. அழித்து விடுதல் தான் உத்தமம். என்ன செய்வது. எப்படி அழிப்பது. நான் அங்கும் இங்கும் நடந்து கொண்டே யோசித்தேன். என் கட்டளைக்கு காத்திருந்தான் சே. கவிக்குயில் நெற்றி முழுக்க பட்டை போட்டு மஞ்சள் ஆடையில் ஒரு அம்மனை காவலுக்கு வைத்துக்கொண்டே அந்த அறையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேகமாய் அந்த அறை கதவை தள்ளிக் கொண்டு உள்ளே ஓடிய சே வை விரட்டிக் கொண்டே கவிக்குயிலும் ஓடினாள். உள்ளே ஓடிய சே… பயங்கரமாக கத்தினான். உருண்டான். அவன் உடல் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. அங்கும் இங்கும் பிசாசோடு பிசாசாக கலந்தவன் போல கொக்கரித்தான். தலையை வேகமாய் சுழற்றினான். அவன் கண்கள் வெளியே வந்து விழுந்து விடுவது போல முட்டியது. அங்கும் இங்கும் நாக்கை நீட்டிக்கொண்டு அலைந்தான். ஆஹ் ஆஹ் என்று காற்றை கடித்துக் கொண்டு கதறினான். புத்தக அலமாரியை சரித்து விட்டான். ஒவ்வொரு புத்தகமாக எடுத்தெடுத்து வீசினான். அறைக்குள் பறக்கும் நூல்களின் பரவசம் பார்க்கவே பயமாக இருந்தது. அறை ததும்பும் கிறுக்குத்தனங்களில் சே ஒரு குட்டிச்சாத்தான் போல மாறி இருந்தான். கட்டுப்பாடற்ற கடைவாய் பல் உடைந்து நொறுங்குவது போல அவன் சிரிப்பு இருந்தது.

மூலையில் பத்தடிக்கு வளர்ந்து வளைந்து குனிந்து முதுகெலும்பற்று சுருண்டு நின்றிருந்த யூதரா… நெற்றியில் திறந்திருந்த வாயடைத்து நின்றாள். என்ன நடக்கிறது என்று அவளுக்கு புரியவில்லை. சே அந்த அறையில் சுவற்றில் ஓடி ஓடி முட்டினான். பின்னால் அவனையும் வீடியோ காலில் காட்டிக் கொண்டே

“கட்டு கட்டு கதறிக் கட்டு
முட்டுமுட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்பனகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடிவ வேலால் …”

கவசத்தை கத்தி சொன்னபடியே கவிக்குயில் யூதராவை நேருக்கு நேர் பார்த்து கர்ஜித்தாள்.

தன்னை தானே சுழற்றிக் கொண்டு கத்தியபடியே அந்த அறையில் அங்கும் இங்கும் சூதானமாக தேடிய சே வின் கையில் அந்த “யூதரா என் காதலி” குறுநாவல் சிக்கி விட்டது. அதை எடுத்து “bப்பா கிடைச்சிருச்சு…” என்று கத்தியபடியே கதவு பக்கம் நின்ற கவிக்குயிலிடம் வீசினான். நொடியில் காலம் நிறுத்தி யோசித்து…. சற்றுமுன் சே செய்ததெல்லாம் நாடகம் என புரிந்து கொண்ட யூதரா… நடக்க போகும் சம்பவத்தை யூகித்துக் கொண்டாள். தன்னை உருவாக்கிய நாவல் அது. அது எழுதப்பட்டதில் இருந்து தான் யூதரா உருவானாள். மற்றபடி வீட்டுக்குள் இருந்த சுடுகாட்டில் இருந்து வந்ததாக சொன்னாலும்… சரியான பாத்திரத்தில் தன்னை ஊற்றி வடிவமைத்துக் கொள்ள அந்த நாவலே படிநிலையாய் இருந்தது. தன்னை உருவம் செய்ய கிடைத்த பிடிப்பு அது.

யோசிக்க யோசிக்க எனக்கு எல்லாமே புரிந்தது. உடனே உடனே….. நான் எழுதிய “யூதரா என் காதலி” குறுநாவலை என் மெயிலில் இருந்து அழித்தேன். எங்கெல்லாம் யூதரா பேர் இருக்கிறதோ அங்கெல்லாம் அதை அழித்தேன். கடைசியாக அந்த நாவலின் ஒரு காப்பி அந்த அறையில் விடுபட்டது நினைவுக்கு வந்தது. அதன் பொருட்டே இந்த சாத்தான் உயிர் வாழ்கிறது என்று புரிந்த நொடி அதை அழித்தால் தான் அவளை இல்லாமல் செய்ய முடியும் என்று புரிந்தேன். அதைத்தான் சே வுக்கு குறுஞ்செய்தி தட்டினேன். சத்தம் இல்லாமல் புரிந்து கொண்டான். தனக்கு பேய் பிடித்தது போல நாடகத்தை ஆரம்பித்தான். என்ன நடக்கிறது என்று தடுமாறிய யூதராவின் அந்த தடுமாற்ற நேரம் தான் அவன் அந்த நாவலை கண்டு பிடிக்க எடுத்துக் கொண்ட பொன்னான நேரம்.

சே-விடம் இருந்து பறந்து வந்து அந்த குறுநாவலின் காப்பியை நொடியில் கிச்சனுக்குள் புகுந்த கவிக்குயில் ஏற்கனவே தயாராக பற்ற வைத்திருந்த ஸ்டவ்வின் நெருப்பில் வீசினாள். அவளுக்கும் செய்தி அனுப்பி இருந்தேன். எல்லாமே நொடிகளில் புரிந்து கொள்ளப்பட்ட செய்தி பரிமாற்றம். இத்தனை நாள் தன் உயிரை புதைத்து வைத்து போக்கு காட்டிக் கொண்டிருந்த யூதராவுக்கு விஷயம் புலப்பட்டு விட்டது. பெருக்கோபம் ஆங்காரமாய் வெடித்து கழுத்தின் வழியே கொப்பளிக்கும் சத்தத்தோடு அங்கும் இங்கும் அலைந்து சே-வை நோக்கி படுபயங்கரமாக முன்னேறினாள். ஒற்றை விரலில் குதித்து குதித்து பறந்து வர வர…… அதற்குள் நெருப்புக்குள் அந்த நாவல்… நிர்கதியாக… படபடவென நொடிக்கும் குறைவாக பற்றிக் கொண்ட நெருப்போடு சடுதியில் இல்லாமல் போன யூதரா சரசரவென சாம்பலானாள்.

இருந்த இடம் தெரியாமல் போய் விட்டாள். எல்லாமே படபடவென பற்றிக் கொண்டு நடந்தேறி விட்டது. நொடிகளில் பஸ்பமாகி விட்டாள். என்ன ஆட்டம். எல்லாம் காலி.

சே பெரிய காரியம் செய்து விட்ட திருப்தியில் ஹாலில் மூச்சு நடுங்க என்னிடம் வீடியோ காலில் சிரித்தான். கவிக்குயில் ஓடோடி வந்து பேயைக் கொன்னுட்டோம் என்றாள். யூதரா எனும் பெரும்பேயை அழித்த திருப்தி இருவரிடமும். எனக்கும் நிம்மதி பெருமூச்சு தான்.

“இனியாவது பேய் கதை எழுதறேன்னு சொல்லி பேயை வளர்த்து விடாதீங்க…” என்ற கவிக்குயில் குரலில் ஆசுவாசம். வீடு சுடுகாட்டில் இருந்து வெகு தூரம் நகர்ந்து விட்டதாக தோன்றியது. நிதானமாக நிம்மதி பெருமூச்சு வீடெங்கும் கேட்டது. வியர்த்திருந்த நெற்றியை துடைத்துக் கொண்டே வீடியோ காலை அமர்த்தினேன். சில நேரங்கள்ல டெக்னாலஜியும் கெல்ப் பண்ணுது. சிரித்துக் கொண்டேன்.

அன்றிரவே கோவைக்கு பஸ் ஏறினேன்.

பேருந்துக்குள் ஒரு பேரழகி எனக்கு முன்னால் வலது பக்க சீட்டில் அமர்ந்திருந்தாள். ஒரு கட்டத்தில் சொல்லி வைத்தாற் போல சட்டென திரும்பி என் கண்களையே உற்று பார்த்தாள்.

என்ன இது என்பது போல தடுமாறினேன். அனிச்சையாய் என் கண்கள் அவள் கைகளை மேய்ந்தன. அவள் கையில் கடந்த மாதம் நான் தொலைத்திருந்த “யூதரா என் காதலி” குறு நாவலின் கையெழுத்து பிரதி… ஜன்னல் புகும் காற்றுக்கு படபடத்துக் கொண்டிருந்தது.

எழுதியவர்

கவிஜி
கவிஜி
கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x