17 September 2024

          “கொம்ம மலந்து விரிஞ்சு நடக்காளே, அவளுக்கடுத்து போல தாயேளி… இஞ்ச என்னத்த மணப்பிச்ச எனக்க அடுப்படில வந்த ? ஒனகெட்ட பலதெவசம் சொல்லியாச்சு எனக்க நடைல சவுட்டபிடாதுண்ணு….போல பறட்டைக்கு பெறந்த தாயேளி….” மடமடவென மண்பானையில் பிடித்த மூத்திரத்தை கோபமாக வீசித்தெளித்தும் வசந்தாவுக்கு எரிச்சல் தீர்ந்தபாடில்லை. நாய்க்கு வைத்திருந்த பூப்பிடித்த மீனில் நீர்ஊற்றி வீட்டைச்சுற்றி ஆபத்ரேகை வரைந்தாள் கூடவே சொட்டுச் சொட்டாக வழிந்த சிறுநீருடன். அடுக்களையில் பித்தளைப்பாத்திரங்கள் உருளுகையில் கடிகாரத்தில் டார்ச் அடித்து விழித்தெழுந்த அவளின் குடும்பத்தினரில் ஒருவருக்கும் அறையை விட்டு வெளியேவர தயக்கமாயிருந்தது. 

           “ஆணியடிச்சு கெடத்தினாலும் பயலுக்கு நாலு வீடேறி பிச்ச எடுக்கல்லங்கி ஒறக்கம் வராது… கொக்காளுவ ஒறங்கீருக்க மாட்டினும், போய் மச்சம்பிமாருவளுக்க கணக்கெடுல தள்ளயயோளி…..” மண்வாரி எறிந்த கைகளைக் கழுவியபடி அறைக்கு வந்தவளின் தீற்றல் நின்றபாடில்லை. 

           காரோட்டுகோணம் ஊரில் நித்யதொந்தரவாயிருந்தான் கண்ணன். இரவு எங்கு ஆனீச்சையான அரவம் கேட்டாலும் வசைபாடி எச்சிலூற்றி மூத்திராபிஷேகம் செய்து துரத்தும் அந்த பெயரை மண்ணோடு பூட்டிவைக்க துர்மந்திரவாதம் செய்யாத ஒருவருமில்லை. நாற்பதுக்கும் அதிகமான நெடும்ஆணிகள் ஏற்றப்பட்ட அவனின் கல்லறை இரும்புக் கவசத்திலான மண்மேடு போலாகியிருந்தது. கருங்கோழி குருதி முதல் கடுகு பிரயோகம் வரைக்கும் செய்த தழும்புகள் அவனின் கல்லறையைச் சுற்றி படிமங்களாகவும் நீர்த்தும் தெரிந்திருந்தது. 

          அங்கு இரண்டு ஆண்கள் ஒரு பெண் என அவனேறி துள்ளிய மனிதர்களின் எண்ணிக்கை இனியும் கூடலாம் என்ற பயப்பாடு அனைவரின் முகத்திலும் ஒட்டியிருந்தது. வசந்தாவின் பதினான்கு வயதான மகளின் உடலிலேறி அவன் துள்ளிய அன்றிலிருந்து அந்த சிறுமிக்கு வலது கண்ணில் வலி நிரந்தரமானது. ரப்பர்பாலை உறையவைக்க ஊற்றியபடி அவள் பேசிய வார்த்தைகள், அதனைத்தொடர்ந்து பாத்தூர் காவில் ஒரு வாரம் வைத்திருக்கையில் அவளுடைய உடல்மொழியும் அச்சுஅசலாக கண்ணனைப் போல மாறியிருந்தது, இருபத்திஏழு வயதில் அவன் மரிப்பதற்கு முன்பான காலத்தில் அவனின் குரல்வளையிலிருந்து துயர்ஒப்பி வந்த ஓசை. கல்லறையில் ஆணியடித்து சாத்தடிபூஜை செய்த பிறகே சிறுமி பாடபுத்தகங்களைக் கையிலெடுத்தாள். 

          முதலாவதாக ஆலிவருக்குள் ஏறுகையில் தான் காரோட்டுகோணமே கண்ணன் உறங்கவில்லை நிர்கதியற்று அலைந்துதிரிகிறான் என்றது. அறுபது வயதான ஆலிவர் கண்ணனைப்போல கைலி கட்டியபடி,”எனக்கு பச்சவெள்ளம் தந்து கெடத்துங்க, பயசமும் பன்னீரும் யாரு கேட்டா ?கேட்டதை அந்த ஊரில் ஒருவரும் எளிதாக மறக்கவில்லை. அங்குள்ள பகல்வேஷ கம்யூனிச நாத்திகவாதிகளும் படிப்புப்பித்தர்களுமே அவனின் கல்லறையில் ஆணியடிப்பதையும் குருதிவழிபாடு செய்து அவனைக் பசியாற்றிக் கட்டுவதையும் தேவையான ஒன்று என பேசிவந்தனர். 

        தேன்பந்தல்விளைத் தனித்தீவானது. குடிகாரர்களைத் தவிர ஒருவரும் அவ்வழியாக நடக்க அஞ்சினர். கண்ணன் ஆலிவரையும் தற்கொலைக்கு இழுத்துச்செல்லக்கூடாது என அவரது குடும்பமே கேரளாவுக்கு குடிபெயர்ந்தனர். அவனை அடக்கிய தேன்பந்தல்விளை கிராமமும் அருகிலுள்ள காரோட்டுகோணமும் பகலிலும் அவனின் பிரமைப் பிடித்திருந்தது. சிரிப்புகளிலும் கவலைமுகங்களிலும் பகடிகளிலும் கண்ணனின் உருவ பந்தனத்தைத் தேடிய மனிதர்கள் நான்காவதாக அவன் ஏறி களிக்கும் உடல் நீயா நானா என குற்றக்கண்களுடன் சுற்றியலைந்தனர். ஆலிவரோடு அவன் எந்த வயதுக்குள்ளும் ஏறி ஆவர்த்தனமெடுப்பான் என்பதும் தையல் டீச்சர் நளினியின் தேகத்தில் இருநாள் கூடிகொண்டமையால் பெண்களின் உடலில் ஏறுவதே அவனுக்கு வசதியென்ற பேச்சும் ஓங்கியது. 

       தெறிக்காவடி எடுத்த வசந்தா புறம்போக்கிலிருந்த கண்ணனின் வீட்டைச்சுற்றி அர்ச்சித்து அவனின் தாயையும் சாகோதரிகளையும் தெருவிலிறங்க வம்புக்கிழுத்தாள். சானலின் கரையோர புறம்போக்கில் முப்பது வருடங்ளுக்கு முன்பு குளச்சலிலிருந்து கண்ணனின் தந்தை வந்து சேர்கையில் அவன் பிறந்திருக்கவில்லை. செற்றை குடிசையாகி பின்னர் ஆஸ்பற்றாஸ் கூரையுடன் மின்சாரம் ரேசன் கார்டுடன் அங்கு சகலகாலம் வாழாமல் அவனது தந்தை இறக்கையில் அவனுக்கு வயது நான்கு. கர்ப்பிணி கால்தடுக்கி விழுவதுபோல் சானலைப் பார்த்து குலைத்தள்ளிய வாழைப்போல நிற்கும் அந்த வீட்டை சகலரும் அறிவர். சானல்கரை துளசி மற்றும் அவளது இரு அழகிய மகள்கள் என்ற விலாசமே கண்ணனுக்கும் அவனைவிட பத்துவயது மூத்த அண்ணனாகிய சுதேவனுக்கும் கிட்டியது. சிறுவயதிலே அண்ணனுடன் வீட்டின் வெளியிலும் படுத்துறங்குவதும் அருகாமைய கோவில் திருவிழாக்களிலும் இரவைக் கழிப்பதே இருவருக்கும் விருப்பமாகவும் துளசிக்கு வசதியாகவும் ஆயிருந்தது. யாராரோ வந்து போயினர் வாக்குறுதிகளின் வெண்முரசு கொட்ட தினம்தினம் திருமணங்கள் அந்த சாய்வுகுடிசையில் அரங்கேறினாலும் வாழ்க்கை மேம்படவுமில்லை, பத்து சென்று நிலம் வாங்கி பெறம்போக்கு’ பெயரைத் துடைக்க ஏதுவுமாகவில்லை. பதின்ம வயதைத் தொட்டதும் ஒரு கிளி அங்கிருந்து சிறகடித்து பறந்தது. பத்து வயதான தம்பியைத் தனித்து விட்டு சுதேவன் எங்கோ சென்றான்.

         சிறுவயதிலிருந்தே அம்மாவும் அக்காள்களும் அறிமுகப்படுத்திய மாமாக்களின் எண்ணிக்கை உயர்ந்தது. தெருவில் பார்க்கையில் அவர்கள் வாங்கிக்கொடுத்த தின்பண்டங்கள் அவனுள் செரிக்கவில்லை. அண்ணனின் வயதையொத்தபோது தான் அதுவரை கருப்புவெள்ளையாக பார்த்தவைகள் வண்ணத்திரையாக சிமிட்டி அவனை அருவருக்கவைத்தது. நண்பர்களின் வீடுகளில் ஒதுங்கலாமென்றால் சானல்கரை துளசி மகன் பட்டம் தடையானது. பகல் முழுவதும் அலைந்து திரிந்து இரவில் சிரிப்பொலிகளின் மத்தியில் மாமன்மார்கள் படையல் வைத்துப்போன பண்டங்கள் மத்தியில் தூக்கம் துலைத்துக்கிடந்தான். எதிர்வினையாற்றினால் படிஅரிசிக்கஞ்சிக்கும் பங்கம் வரலாம் என்றவனுக்கு பகலிலும் இரவிலும் வேலைச்செய்து உறங்க ஏதுவாக மார்த்தாண்டம் திரையரங்கில் கழிவறைகளைக் காட்சிகளுக்கிடையே சீர்செய்யும் பணிக்கிட்டினாலும், எப்போதாவது வீட்டுக்கு வரும்போது சானல்கரையின் சிரிப்பொலிகள் அவன் மண்டைக்குள் சண்டைக்காட்சிகளானது. அம்மாவுடன் சண்டையிட்டு துணிகளை எரித்தது தான் அவனுக்கான இறுதிநாளாயிருந்தது அவ்வீட்டில். மூன்று பெண்களும் சேர்ந்து விளக்குமாறால் அடித்தே விரட்டினர். 

          கதியே என ஒதுங்கிய தியேட்டரிலும் படம்பார்க்க வருபவர்களில் காரோட்டுக்கோணத்தை நன்கறிந்தவர்களின் அசட்டுப்பார்வையும் கேலிப்பேச்சும் சுதேவனின் கானான்தேசத் தேர்வை அவனுக்குக் காட்டியது. மும்பைக்குத் தான் போகிறோம் என்றில்லாத பயணம் அவனை மும்பைக்கே கொண்டுசேர்த்தது. ஒரு வருடமாக அந்த மாராத்தியின் ஹோட்டலில் சகலவும் மறந்த வாழ்க்கை அவனுக்கு கிட்டியது. 

            “தொளசி அக்காளுக்க மோன்னில்லடே நீ ?” அந்த பரிச்சயமான குரலோடு கையிலிருந்த சப்பாத்திகளோடு அவர்கள் முன்நின்றான். பலவருடங்களுக்கு முன்பு பார்த்த மாமன்மார்களில் ஒருவர். விவரணங்களுக்கு பிறகு சிக்கன் குழம்பு எடுக்க சமையலறைச் சென்றபிறகு அவர்கள் சானல்கரை வீட்டை இழுத்துவந்து அந்த டேபிளில் வைத்து பேசிய தமிழ் மொழி அந்த ஹோட்டலில் மிதந்திருந்த மாரத்தி இந்தி மொழி ஆதிக்கத்திலும் சுடுநீராக அவன் காதில் விழுந்தது. 

            “மற்ற ஜோதி கராத்தே மாஸ்டர் தெரியாதா !! உள்ள பணத்த எல்லாம் இந்த பயலுக்க தள்ளகிட்டதேன் தொலச்சான்…...”

            “அதிலோடி உள்ளவனுவளுக்க ரெத்தமும் கத்தபணமும் அவளுக்கயும் பெண்ணுவளுக்கயும் மடிகுத்துல போச்சுதே !!” 

         “ரெண்டாத்த பெண்ணு ஒருத்தன வசமா மடக்கி செட்டிலானா…திரோந்திரத்தில தாமசம்ன்னு யாரோ சொல்லிச்சினும்…”

         நொறுங்கிய  மனச்சிதறல்களை சமையலறையில் குவித்துவைத்துவிட்டு கறியுடன் வந்தான். பேச்சை நிறுத்தினாலும் அவர்கள் எடுத்த வாந்தியின் நாற்றம் அங்கு நிலைக்கொண்டிருந்தது.  உலகத்தில் எங்கு சென்றாலும் இதே நிலை தான் என்று குறுகுறுத்து உசுப்பிய அவனின் ஆழ்மனது எப்படி சுதேவன் இதிலிருந்து தப்பித்திருப்பான் என அவனுள்ளே புதிர்கேள்வி எழுப்பியது. பதிலையும் உடனடியாக அதுவே தந்தது. பதினொன்று வருடங்களாக வராத அண்ணன் பரமநிம்மதி தேடி வைகுண்டம் சென்றிருப்பான் என்ற ஏங்கலிப்புடன் டெல்லி நகரத்துக்கான தீவண்டி ஏறினான். ஆக்ராவில் இறங்கி ஆள்அரவமற்ற தண்டவாளம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எதிர்திசையில் நடக்கையில் அவனது உடலில் சிறு நூல் அளவு துணியும் இல்லை. புதரில் வீசியெறிந்த உடைகளைத் துரத்தித் தெறித்தது ரத்தம். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் மொத்தமாக கோர்த்து குவித்த முத்துமாலைப் போல் கிடக்கவைக்கப்பட்டான். முகத்தைத் தவிர அனைத்தும் அடையாளங்களும் உரித்து எறியப்பட்டிருந்தது. ஆனாதைப்பிணமாக வைத்திருந்து அனைத்துமத ஆராதனையுடன் நல்லடக்கம் செய்ய அனைத்து கூறுகளும் கொண்டிருந்தது அந்த இறச்சிக்குவியல். 

            பிணவறையில் டெல்லிவாழ் தமிழர் ஒருவரின் பிணத்தைப் பெற்றுச்செல்ல வந்திருந்த திகார் சிறைச்சாலையில் பணிசெய்யும் குமரி மாவட்டத்தைச் சார்ந்த மில்டனின் பார்வை ஏதேச்சையாக பிரித்த பிளாஸ்டிக் ஷீட்டில் விழுந்தது. அப்போது தான் கண்ணனின் உடலை அங்கு கொண்டுவந்திருந்தனர். பனிரெண்டாவது வகுப்பு வரைக்கும் தன்னுடன் படித்ததும், இரு வருடங்களுக்கு முன்பு ஒரு திருமணவீட்டில் பலமணிநேரம் சேர்ந்தமர்ந்து பேசமுடிந்திருந்த நண்பனின் முகத்தை அவன் குறையின்றி அடையாளம் கண்டான். காரோட்டுகோணம் அழுது துடித்தது. 

         “யாருக்கும் ஒவத்திரவம் இல்லாத பய…”

          “இவளுக்க வயிற்றில பெறந்த தெற்று ஒண்ணும்தேன் அது செஞ்சிது… வேற வீட்டில பெறத்தெங்கி ஆயிசோட இருந்திருக்கும்…”

         “மானு போல நடக்கும் அது… போறதும் வாறதும் அரவம் கூட கேக்காது….”

          திருவனந்தபுரத்திலிருந்து இளையமகள் வந்ததும் துளசி ஞாபகம் இழந்து குழைந்தாள். டெல்லியிலிருந்து உடலை அனுப்பும் பொறுப்பைத் திகாரில் பணிபுரியும் தமிழ்காவலர்கள் தங்களது சொந்தசெலவில் பண்ணத்தாயாரானதைத் தொடர்ந்து டார்ப்பா கூரையையும் செயர்களையும் நிரப்பி மரணவீட்டுத் தோரணையைக் கொடுத்தான் ஜெபராஜ். ஒரு பொட்டு நிலம் இல்லை எங்கே அடக்குவது என்ற நிலையில் குடும்ப வழக்கத்துக்கு மாறாக எரித்து விடுவது என்ற நிராசையும் மூன்றுபெண்களின் ஒப்பாரிகளில் முதன்மையானது . 

        “பூத்தி மண்ணுகூட்டு வைக்க ஆறுஅடி மண்ணு கூட இல்லியே !! எப்பல மக்ளே இந்த பாவிக்க வயற்றில வந்து பெறந்த ?..” துளசியின் ஓலச்சத்தம்  மரணச்செய்தியறிந்து சானல்கரையில் கூடிய கும்பலில் ஒருவரையும் அசைக்கவில்லை. இரண்டாமவளைக் கைவைப்பதற்கு முன்பே அவள் திருவனந்தபுரத்தில் ஒருவனுடன் இரண்டு குழந்தைகளுடன் தாமசிக்கச் சென்றது ஜெபராஜைப் பொருத்தவரையில் பெருத்த ஏமாற்றமாயிருந்தது. அவளை நோட்டமிட்டு துளசியின் வீட்டிலேறியவனுக்கு பலமான வாய்ப்பேதும் அமைந்திருக்கவில்லை. துளசியை வறுப்புறுத்தி காரிலேற்றி ஓணப்படி கொண்டு திருவனந்தபுரம் சென்றபோதும் பெரிதாக அவள் முகம் கொடுக்கவில்லை. பிள்ளைகளையும் தன்னையும் போற்றலாம் என்ற நேமம் எம்எல்ஏ பிஏவுடன் ஒதுங்கிய வாழ்க்கை வாழ நினைத்த அவள் அவனது எண்ணத்தூண்டில்களில் சிக்கவில்லை. சம்பவத்தைக் கேட்டதிலிருந்து சானல்கரைக்கு திருவனந்தபுரம்காரியின் வருகையை எதிர்பார்த்து கருப்புகொடி கட்டுவதிலிருந்து அனைத்தையும் பார்த்து பார்த்து செய்திருந்த அவனுக்கு அவளிடம் கைமாறி பல்லிளித்து சொல்ல ஒன்றிருந்தது. 

           “தொளசி அக்கா பேடிக்கண்டாம்… தேன்பந்தல்விளைல எனக்க கண்டத்தில ரெண்டு சென்ட்ட நான் எழுதிதாரேன்... இனியுள்ள காலத்தில ஒங்களுக்க அவசியத்துக்கு அத பயன்படுத்துங்க….” திருவனந்தபுரம்காரி கேட்க சொல்லி நிமிர்ந்தான். கண்ணீர் வடிய நன்றிகளைத் தழுவல் கரங்களாக்கி அவள் பார்த்த பார்வையில் அடக்கத்திற்கான அனைத்து செலவினங்களின் முதல் பகுதியாக மரணப்பெட்டியை வாங்கி வந்து இறக்கினான். அவள் கண்பட அனைத்தையும் செம்மையாக்கிய அவன் கண்ணனின் உடல் வந்து சேரும் முன்பாக அவளின் கைபேசி எண்ணையும் வாங்கி திருவனந்தபுரம் வருவதற்கான நாளையும் குறித்தான். நான்காவது நாள் உடல் வந்து சேர்வதற்கு முன்பே அவளின் பெயரில் தேன்பந்தல்விளையிலுள்ள அவனது சொத்தில் இரண்டு சென்ட்டைக் கிரயம் செய்து தானக்காரன் பட்டத்துடன் கண்ணனை நல்லடக்கம் செய்தான். ‘துளசிக்க உண்டியல்ல ரெண்டு சென்ட் இட்டான் ஜெபராஜ் காண்டிரேட்டர்…’ என அடக்கத்திற்கு வந்தவர்கள் வாய்பொத்தி சிரித்தாலும், எரிகிற வீட்டில் உத்திரத்தை மட்டுமல்ல ஆணியையும் பிடுங்கும் அவனுக்கு அது கலையாயிருந்தது. 

           “இனி எனக்க நடைல ஒனக்க மோன் வந்தா ஒனக்க வீட சானல்ல இழுத்து தள்ளியிட்டோண்டு நானும் எனக்க பிள்ளியளும் ஜெயிலுக்கு போவோம்….” வசந்தாவிடம் வாய் கொடுக்க மடுத்த துளசி கதவைப்பூட்டி வீட்டிலிருந்தாள். 

         “ஆலிவர போல நாடுவிட்டு போவ எனகிட்ட காய் இல்ல… ஒனக்க சதைய வெட்டிமலத்தி வைச்சு கொடு ஒனக்க பய தின்னோண்டு இஞ்ச வீட்ல கெடக்கட்டு.... ஒனக்க மாப்ளமாருவளுக்க வீடுவளுக்கு போவாம எதுக்கு எனக்க வீட்ல இந்த நசிச்ச எழவு வருது….” வசந்தாவைப் போல் ஒவ்வொரு வீடுகளிலும் காற்றை நோக்கி அழுக்கு ஆயுதங்களை எறிந்து சந்தனத்தெருவில் சாமியாக நடந்தவனைப் பன்றியாக பாவிக்கத் துவங்கினர். 

           கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள பேருகேட்ட துர்மந்திரவாதிகள் அனைவரும் ஞானமடம் போல தேன்பந்தல்விளைக்கு வந்துசென்றனர். செய்த பிரயோகங்களுக்கு மேல் கண்ணனின் விளையாட்டு ஏறியது. இரவுக்கு முன்பாக நடையடைத்த மக்கள் சிறுநீரையும் உளுவநீரையும் வீட்டைச்சுற்றித் தெளித்து அவனைச் சபித்து விடியும்வரை புலம்பிக்கிடந்தனர். பெருந்தொற்று வியாபித்து எல்லாவற்றையும் முடக்கியது. கரும்மேகம் பரப்பிய பகல்வேளைகளிலேயே அவனின் அதாளிச்சத்தம் காரோட்டுகோணத்தின் தார்விலகிய சாலைகளில் கேட்டது. லாக்டவுணில் வீட்டில் முடங்கியவர்களுக்கு கொரானாவை விட அவன் பயமே அதிகமாயிருந்து. ‘அச்சுறுத்தும் ஆவி..அலறித்துடிக்கும் கிராம மக்கள்..’ என குமுதம் ரிப்போர்ட்டர் இருபக்க செய்தியிட்டு தமிழக வீடுகளில் முடங்கிக்கிடந்தவர்களுக்கு நகைச்சுவைச் செய்தியாக்கியது. பானையில் குதிக்கும் அரிசிபருக்கைக்கே சூட்டின் அருமைத்தெரியும் என்பது போல் காரோட்டுகோணமும் தேன்பந்தல்விளையும் ஊமைவிழிகளுடன் நான்காவது நபரின் துள்ளலுக்காக காத்திருந்தது. 

          பெருந்தொற்றால் பெருநகரங்கள் தங்கள் கவாளங்களைச் சாத்தி தொழிலாளர்களை விரட்டியது. தோளும் கால்களும் தாங்கும் சக்திக்கு கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு தலைநகர் டெல்லியிலிருந்து பயணப்பட்ட லட்சங்களில் சுதேவனும் ஒருவன். ரத்தக்குவியலாக தனது தம்பி இருநாட்கள் வசித்த நகரத்தில் அவன் பதினைந்து வருடங்களாக வசித்திருந்தான். பீகார் பெங்கால் என கால்அயற ஒவ்வொருவரும் ஒதுங்குகையில் சுதேவனின் பயணம் நீண்டதும் அஞ்ஞாதவுமாயிருந்தது. இந்த கொரானா தன்னையும் கொல்லும், பிறந்த ஊரில் மரணிக்கலாம் என்ற இறுதிசாசன நடையாயிருந்து அவனுக்கு. நாள்பட்ட மாட்டுச் சாணகம் பறக்கும் என்ற நிலையில் அவனது உடலின் நீர்குறைத்து தசைவலிந்து பதிமூன்று நாட்களுக்கு பிறகு நாகர்கோவில் வந்தடைந்தான். தாயும் சகோதரிகளையும் அவன் மனவட்டத்திலிருந்து விலக்கி ஆண்டுகளாயிருந்தது, ஆரூயிர் தம்பியை ஒரு எட்டு பார்த்துவிட்டு கொரானா தன்னைக் கொன்றொழித்தாலும் பரவாயில்லை என்றிருந்தது. வீட்டின் முற்றத்தில் படுத்திருக்கையில் போர்வை விலக்கி ஓட எத்தனிக்கையில் கண்ணனின் வலதுகரம் அவனைப் பிடித்திருந்தது, அந்த ஈரம் எப்போதும் அவனின் விரல்தும்புகளில் குடிகொண்டிருந்தது. 

          காரோட்டுகோணத்தில் வரத்தனாகவே அவன் தெரிந்தான். போதாக்குறைக்கு மாஸ்க் வேறு முகத்தில். பெரும்பாலும் பூட்டிய வீடுகள். அறுபது வயது முதியவருக்கான உடல்தோற்றத்துடன் அவனைக்கண்ட பாலஸ் சிலைப்போலானான். அவனிடம் நன்மைக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுதேவன் வாசலில் நின்றான். சிறுவயது நட்பை அவன் மறுதலிக்காமல் சுதேவனைக் கட்டிப்பிடித்தான். இனிமேல் எங்கேயும் போகாமல் தனது ஹாலோபிரிக்ஸ் கம்பெனியில் தங்கும்படி உரிமையோடு வறுப்புறுத்தினான். 

          “கண்ணன பாப்பியா ? எப்பிடி இருக்கான்…” நலம்விழம்பலுக்கு பிறகு சுதேவனின் முதல்கேள்வியாயிருந்தது. அமெரிக்காவின் நியுயார்க்கில் கொரானாவுக்கு மனிதர்கள் கொத்துக்கொத்தாக மரணித்ததிலிருந்து முந்தினநாள் ராஜப்பன் இறந்ததுவரைக்கும் சொல்லிய பாலஸ் கண்ணனைத் தவிர்த்தபடி தேன்பந்தல்விளைக்கு கால்நடையாக அழைத்துச்சென்றான். 

         “இது தான் ஒனக்க கண்ணன்… நல்லவேள அவன் கொரானால மரிக்கல… மூணு வருசமாவுது….” பாலஸ் கல்லறையைக் காட்டிச்சொல்லியதும் ஏம்பி அழ ஜீவனற்று அந்த மண்மேட்டிலேயே விழுந்தான். கைகளை விரித்துத் தழுவியவனுக்கு மண்ணில் முளைத்துநின்ற ஆணிகளின் ஸ்பரிசனமே கிட்டியது. முழுமையாக பாலஸ் சொல்லி முடிப்பதற்குள் ஆணிகளைப் பிடுங்கி வீசத்துவங்கினான். இருண்டு அங்குல ஆணியிலிருந்து விரல் அளவிலான நீண்ட கம்பிகளும் கூராக்கி இறக்கப்பட்டிருந்தன. 

          “என்னத்தேடி தான் டெல்லி வந்திருப்பான் !! ….இதையே சொல்லிச் சொல்லி புலம்பியவனைத் தேற்றிக் கைத்தாங்கலாக அழைத்துச்சென்றான் பாலஸ். சுதேவனின் வருகை லாக்டவுனில் முடங்கிக்கிடந்த அந்த ஊருக்கு பெரும்பேச்சு விசயமானது. அவனைப் பார்த்துச் செல்ல சிலர் பாலஸின் கம்பெனிக்கே வந்துசென்றனர். பரிதாபத்தோற்றத்தில் இருந்தவனைப் பார்க்க வந்த தாயையும் தங்கைகளையும் விரட்டியடித்தான். கண்ணனைக் காற்றில் கல்லெறிபவர்களுக்கு அதிகாரபூர்வமான புகார்பெட்டியாக அவன் மாறினான். 

          “விஞ்ஞானம் வளந்தாச்சு… எல்லா வீட்லயும் பீஈ படிச்ச பிள்ளிய இருக்கு..இன்னும் இதயெல்லாம் நம்புதியாளா !!…” என மயமாகப் பேசியவன், “ஒங்களுக்கு நிம்மதி வரல்லன்னா என்னயும் கொந்நு அவனுகிட்ட பூத்துங்க..” என நச்சரிப்பவர்களிடம் பொரிந்து விழுந்தான். 

         இருப்பினும் பாலஸின் வார்த்தைகள் அவனைக் கட்டிப்போட்டது. தேன்பந்தல்விளையில் கண்ணன் உறங்கவில்லை என்பதை பாலஸ் தொடர்ந்து பதமாக அவனுக்கு விளக்கிவந்தான். 

          “ஆலிவர கண்டப்போ நான் சிலுத்துபோயிட்டேன்அந்த நரச்ச தலயில கண்ணன நான் கண்டன்.. கண்ணனுக்க அதே பார்வ.. பேச்சு எல்லாம் அப்பிடியே….. வசந்தக்க மொவா கண்ணனா மாறி நிந்நத ஆளுவ சொல்லுதத கேட்டா நம்பாம இருக்கமுடியல……”

        “பாவம்.. கெதிகிட்டாத அலயுதான்…. நான் என்ன செய்ய ?..” அழுகை வற்றி மார்படைத்து வந்த தொடர் இருமல்களோடு பாலஸிடம் கேட்டான். 

        “ராத்ரி வெளில யறங்கி நடக்காத.. பேப்பட்டிய அடிக்கது போல ஆளுவளுக்க வேளங்க…என்னாலே சகிச்ச பற்றில்ல…..நாலாவதா யாருக்க மேல ஏறி துள்ளபோறான்னு காரோட்டுகோணமும் தேன்பந்தல்விளையும் குலாம்பரிசு களிக்கினும்….” 

           தெருக்களில் கண்ணனின் சிலுவையைச் சுமக்க சுதேவன் இரவுகளில் நடக்கத்துவங்கினான். அவனது வருகைக்குப்பிறகும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவனின் உபாதைப்புராணங்கள் சொல்லப்பட்டன. தன்னிடம் ஒரு முறை பேசமாட்டானா !! இவர்கள் சொல்வது உண்மையா என அறிய பல நள்ளிரவுகளில் அவன் கல்லறையருகில் காவலிருந்தான். ஆனால் அந்த கல்லறை நித்யசுகந்தம் வீசி அமைதியாக கிடந்தது. கண்ணன் வந்தான் என வசைவீசி மீன்தண்ணீர் ஊற்றிய வீடுகள் தேடிச்செற்றி அவன் தன்னுடன் ஏதோ வடிவில் உரியாற்றுவானா எனத் தவித்திருந்தான். 

            “ராஜனுக்க மோளுக்க தேகத்தில தொளசிக்க மோன் ஏறிருக்கான்….” என்ற சத்தத்துடன் அனைவரும் ராஜனின் வீட்டை நோக்கி ஓடினர். அவனின் இருபது வயது மகள் மினிமோள் தலைவிரி கோலமாக அமர்ந்திருந்தாள். நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் மூன்றாமாண்டு விலங்கியல் படிக்கும் அவள் ஆண்வடிவிற்கு மெதுவாக முறுக்கேறுவதை அவளது தாயும் தந்தையும் பார்க்கவியலாது பக்கத்து அறையில் ஒளிந்தனர். பெந்தேகோஸ்தே பாஸ்டருக்கு ஆள் சொல்லியனுப்புவதற்கு முன்பாக சுதேவனை அழைத்துவருவதே அனைவரது விருப்பமாயிருந்தது. அந்த ஓட்டிலான வீடு மனித தலைகளால் பொதியப்பட்டிருந்தது. ஜன்னல்களை மொய்த்தபடி நின்றனர். சுதேவனுக்காய் கூட்டம் விலகி பாதையளித்தது. அறையில் பாஸ்டரும் சுதேவனும் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வளையல்களைக் கழற்றிஎறிந்து விட்டு கலைந்திருந்த முடியை வாரிக்கோதியபடி ஐன்னலில் தலைநுழைத்து நின்றவர்களைப் பார்த்தாள். கண்ணனாக அவள் மாறுவதை அவனால் நம்பமுடியவில்லை. சுவரில் ஒட்டிய பல்லிப் போலானான். அவளின் மூக்கின் கீழ் மெல்லிய மீசைப் படர்ந்து உயிர்பெறுவது தனக்கு மட்டும் தெரிகிறாதா !! என மெய்ப்பிக்க பாஸ்டரின் முகத்தைப் பார்த்தான். 

         “ஆண்டவரே மினிமோளுக்கு விடுதலைக் கொடும்.. அந்தகார சக்தியை வேரோடு பிடுங்கியெறியும்…” என கண்ணை மூடி நின்ற பாஸ்டருக்கு சுதேவன் அருகில் நிற்கும் தைரியம் இருந்தது. 

          “ஒடுக்கம் சுதேவனண்ணனும் வந்தான்….” என்ற மினிமோளுக்கு நான்கு வயதிருக்கும் போது அவன் நாடுவிட்டிருந்திருப்பான். அவனுக்கும் ராஜனைத் தெரியுமேயொழிய அவனது குழந்தைகளைத் தெரியாது. 

         “என்ன ஏன் இஞ்ச கொண்டுவந்திய ? பாயசமும் பந்தலுமா நான் கேட்டேன்…” கண்ணனின் குரல் மலையை மெள்ள விழுங்கும் கருமேகமாக அவளுள் வந்திறங்கியது. 

          “கண்ணா… பிள்ள … டே… சுதேவன் அண்ணன் சொன்ன கேப்பியா ? இந்த படிக்க சின்னபிள்ளைக்க தேகத்திலேந்து போ, எனக்க தேகத்தில எத்தினகாலம் வேணங்கிலும் இரு …” 

           “எனக்கு ஓணக்கோடி வாண்டிதராத போனியே அண்ணா….” என்ற மினிமோள் அவனை நெருங்கியதும் கட்டியணைக்க முடியாமல் சுவரில் தேய்த்து இருக்க அமர்ந்து அழத்துவங்கினான். அந்த சுடிதாருக்குள் ஒடிசல் எலும்புகளைப் போர்த்திய மஞ்சள் தோலும் பெண்பாலுக்குள்ள அறிகூறியும் அவனை விலக்கிநிறுத்தியது. கண்ணா கண்ணா’ என முனகியபடி தரையில் சாய்ந்தான். மினிமோளும் அருகிலேயே விழுந்தாள். 

         ஓணப்பண்டிகைக்கு இருதினங்களுக்கு முன்பு ஊரைவிட்டு ஓடிய சுதேவன் தனது தம்பிக்குக் கொடுத்திருந்த ஒரு சிறு வாக்குறுதியை அப்போதும் அதன்பிறகு எப்போதும் மறந்திருந்தான். ஓணத்திற்கு குழந்தைகள் அணியும் மஞ்சள் நிற டவலை அண்ணனிடம் வாஞ்சையோடு கேட்டிருந்தான் கண்ணன். பக்கத்து ஊரின் கடைந்தெடுத்த பொறுக்கியான கஞ்சா பாண்டி ஏன் நமது வீட்டுக்கு அடிக்கடி வருகிறான் ? தங்கைகளை ஏன் அவனுடன் பேச அனுமதிக்கிறீர்கள் ? சுதேவனின் அஸ்திஉருகிய கேள்வியாயிருந்தது தாயிடம். 

         “எனக்க வீடில யாரு வேணங்கிலும் வருவினும்… ஒனக்கு பொறுக்குதில்லைங்கி காத பொத்தி கண்ண மூடி கெட, கொமரு ஏறின பெண்ணுவ இருக்க வீட்ல நாலு ஆணுங்க வந்து பாத்த தான் கெட்டு பட்டு போவினும்….இருபது வயசாச்சு நீ என்னத்த சம்பாதிச்சு தந்த ? …அவன் கஞ்சா அடிச்சுதானோ கப்பலண்டி மோட்டிச்சானோ, நான் கேக்கும்போ நாலு பைசா தந்து சகாயுச்சுதான்…” அன்றைய இரவே ரயிலேறினான். தம்பிக்கு ஆசையாக வாங்கிக்கொடுக்க வேண்டிய ஓணமஞ்சள்கோடி அவனது நெஞ்சயர்த்தி முன்பாக பஞ்சடையானது. 

          “கட்டுகளை அறுத்தெறியும் ஆண்டவரே…. பொல்லாத சாத்தானை வந்த இடத்திற்கே திரும்பிப் போகச்செய்யும்…” இரு கைகளை உயர்த்தி ஸ்பிரிங் போல குதித்தபடி ஜெபம் செய்தார். இருவரையும் வெளியே தூக்கிவந்தனர். நீர் தெளித்து விட மினிமோள் சகஜமாகி விலங்கியல் புத்தகத்தைத் தேடினாள். முதல்முறையாக ஒரு வினாடியிலே கண்ணன் கலைந்து சென்றது அனைவரையும் வியப்பிலாழ்த்தியது. சுதேவனை வரவழைத்தது தான் இந்த அதிசயத்திற்கு காரணம் என ஆலிவரை மனநல மருத்துவமனையில் வைத்துப் பார்த்தவர்கள் உட்பட அனைவரும் சொல்லினர். 

          ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சுதேவனை அன்றிரவு நடந்த செய்தி மேலும் நொடியச்செய்தது. நள்ளிரவில் நடந்து வந்துகொண்டிருந்த முதியவரின் மரணம் தற்செயலானது அல்ல கண்ணன் சாகடித்தது தான் என பேய்க்கதை எங்கும் பரப்பப்பட்டது. காரோட்டுகோணத்தில் யாருக்கு எது நடந்தாலும் அதுக்கு கண்ணன் லேபில் ஒட்டப்பட்டது. சுதேவன் காதுகேட்க கண்ணனை தூசஷபாஷையால் ஏசத்துவங்கிய மக்கள் ஏதோ புதிய மந்திரவாதியின் யோசனைபடி கண்ணன் உருவத்தை கரிக்கட்டையால் கிறுக்கிப் அவன் பெயர் தாங்கிய பாதாகைகளில் மனிதமலத்தைப் பூசி வீடுகளின் முன்வைத்தனர். 

           “சுதேவா…. நீ இனி இஞ்ச இருந்தா சங்கு பொட்டி சாவ…எங்கேங்கிலும் போய் ஜீவி…” படுக்கையில் குப்பறப்படுத்து அழுதுகொண்டிருந்தவனை எழுப்பி பாலஸ் சொன்னான். கையில் சில ஐநூறுகளின் கட்டுகளைத் திணித்தான்.  

         மழைப்பெய்து ஓய்ந்திருந்தது.  பெளர்ணமி மாய்ந்த மறுநாள் அது. நள்ளிரவில் தேன்பந்தல்விளை நோக்கி நடந்தான் சுதேவன். அவனது கையில் சில ஓண மஞ்சள்கோடிகள் இருந்தன. காலையிலே பிக்காசும் மண்வெட்டியும் வாங்கி தேன்பந்தல்விளையில் வைத்திருந்தான். நட்சத்திரங்கள் நகர்வதைப் பார்த்தபடி கல்லறையைத் தோண்டினான். பெட்டியைத் திறந்து அவனது எலும்புகளையும் அனைத்து எச்சங்களையும் சேகரித்து ஓண மஞ்சள்கோடியில் கொட்டினான். காசிக்கான அந்த ரயில் வண்டியில் மஞ்சள்துணி பொதியைப் பொக்கிஷமாக்கி நெஞ்சோடு சேர்த்தபடி அவன் அமர்ந்திருந்தான்.


       

எழுதியவர்

கு.கு. விக்டர் பிரின்ஸ் 
கு.கு. விக்டர் பிரின்ஸ் 
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். சட்டம் பயின்று வழக்கறிஞராக பணிபுரிந்து, "செற்றை" எனும் சிறுகதைத் தொகுப்பையும், "போக்சோசாமி" எனும் சிறார் நாவலையும் "எட்டு நாய்க்குட்டிகள்" எனும் சிறாருக்கான சிறுகதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
இடலாக்குடி அசன்
இடலாக்குடி அசன்
1 year ago

கதை நன்று.

சுப்பு
சுப்பு
1 year ago

கண்ணனோடு படித்த எங்களுக்கும் உறக்கமில்லை. நெஞ்சை உருக்கிய கதை. மஞ்சள் துணியில் பொதிந்து நெஞ்சில் சுமந்து சென்ற கிளைமாக்ஸ் படித்தவர் நெஞ்சில் பதிந்தது

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x