25 July 2024

கார்த்திக். முரளி, சத்யராஜ், விஜயகாந்த், ராம்கி, பிரபு, அர்ஜுன், சரத்குமார், பாண்டியராஜ், ஆனந்த் பாபு, பாண்டியன், ராமராஜன், பார்த்திபன், மோகன், கௌதமி, ரூபினி, சீதா, மாதுரி, ராதா, அம்பிகா, ஜெயஸ்ரீ, ரஞ்சனி, ரகுவரன், நதியா, வுண்டமணி, செந்தில், சார்லி, சின்னி ஜெயந்த், ரேகா, ரேவதி,ராதிகா,ஷோபனா இன்னும் எத்தனையோ நட்சத்திரங்கள், இவர்களோடு நம்ம இளையராஜா, கங்கை அமரன்., தேவா, கமல், ரஜினி இது ஓர் அற்புதமான.. ஆகாயத்து கற்பனைகளின் கலை நுட்பத்தைக் கொண்டதைப் போலவே நான் காண்கிறேன். அப்படித்தான் இருந்தது. ஒரு வித தனித்தன்மையில் மனதுக்கு இதமான… பிடித்தமான சுவாரஷ்யங்களால் அவர்களின் கதாபாத்திரங்கள் இருந்ததாகத்தான் நான் நம்புகிறேன். இன்னும் சொல்ல போனால் கதாநாயகர்களைக் கொண்டாடிய கால கட்டம் அது. அதில் ஒரு சிறுபிள்ளைத்தனம் இருந்தாலும்.. முழுக்க முழுக்க ரசனை மனம் நிரம்பி வழிந்தது. அவர்களை உயரத்தில் வைத்துக் கண்ட உணர்வுகள் சினிமாவின் அடிப்படையாகவே இருந்ததில் ஆனந்தமே.

அந்த வகையில் எனக்கு பிடித்த நாயகர்களை பற்றி இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இதோ இந்த எபிசோட்- லும்..

  • டிஸ்கோ டேன்சர்

“நானொரு டிஸ்கொ டேன்சர்” என்று ஜிகு ஜிகு உடையில் கண்கள் மினுங்க ஆடிய போது கண்கள் விரிய திரை அருகே சென்று பார்த்ததெல்லாம் இன்னமும் மனதுக்குள் கால் பின்னும் நினைவுகள். மக்களை பார்த்து கையை நீட்டி உடலை சற்று சாய்த்து நெஞ்சை மட்டும் பட படவென அளவெடுத்து போல ஆட்டி ஆடுவதெல்லாம் இங்கே ஆட்டங்களின் யுகம் ஆரம்பித்த காலம்.

ஆடுவதற்கு மேடை கிடைக்காமல் ஆட தெரிந்தவனுக்கு ரோடு கூட மேடை தான் சொல்லி ஆடி முடிக்கையில்  மேடைக்கு முன்னிருந்த கூட்டமெல்லாம் ஆனந்த்பாபுவை சுற்றி நிற்கும் அதிரடி நிகழும், ” நான் பேச நினைப்பதெல்லாம்” பட பாடலை ஒரு போதும் மறந்து விட முடியாது.

“நாட்டுக்கு ராஜா ஆனவர் எல்லாம் போனது எங்கே தெரியவில்லை
பாட்டுக்கு ராஜா ஆனவர் மட்டும் பூமியில் இன்றும் மறையவில்லை
காலங்களால் நான் அழிவதில்லை
நானும் வாழுவேன்.. நானும் பாடுவேன்.. இன்னும் கோடான கோடியுகம்…..”
“சேரன் பாண்டிய”னில், “கா… தல் கடிதம்…… வரைந்தேன்… உனக்கு….. வந்ததா…… வந்ந்ந்ததா…….வசந்…தம் வந்ததா…. ”

இன்றும் காதலிக்கும் யாவருக்கும் வசந்த காலமாகவே அந்த பாடல் இருக்கிறது. காதல் டூயட்களில் கூட இடுப்பை வளைத்து காலை மடக்கி ஒரு விதமாக நெளிந்து அவர் ஆடும் போது மனம் தானாக குதூகலிக்க ஆரம்பித்து விடும்.

80 களில் பிறந்தவர்களுக்கு பிரபு தேவா ஆனந்த் பாபு தான்.

“புத்தம் புது பயணம்” “புது வசந்தம்” என்று ஸ்க்ரீன் ஷேரிங் உள்ள படங்களில் ஆனந்த்பாபு என்ற கலைஞன் தன்னை நிரூபித்துக் கொண்டே தான் இருந்தார்.

ஆட்டத்தில் மட்டுமல்ல…  தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தின் நுட்பம் புரிந்து மீட்டர் மீறாமல் நடிப்பதிலும் வல்லவர்தான்.

“இந்த பொண்ணுங்களே இப்படித்தான்டா… வேணுங்கும்போது யூஸ் பண்ணிட்டு, வேண்டாத போது தூக்கி போட்டுட்டு போய்டுவாங்க…” என்று கண் கலங்கி சொல்லிக் கொண்டே சாலையில் ஓர் ஓரமாய் அழுக்கு உடையில் கலைந்த தலையோடு நடந்து வரும் “நான் பேச நினைப்பதெல்லாம்” படத்தில் ஒரு காட்சி.

“வானமே எல்லை” படத்தில் நீதிபதியின் மகனாக விரக்தியின் உச்சியில் இருக்கும் ஒரு கோபம் நிறைந்த இளைஞனா, அநீதி கண்டு பொறுக்க முடியாத குடிமகனாக, இடையே மதுபாலா மீது கொண்ட சிறு காதலின் புன்னகையை கொண்ட கீற்றாக இறுதிக்காட்சியில்… ராஜேஷிடம் பேசும் வசனங்களில் தீ பறக்கும் ஆன்ம உறுதியின் தேடலாக தன்னை அந்ததந்த பாத்திரத்துக்கு வார்த்து விட்ட ஆனந்த் பாபுவை “புரியாத புதிர்” போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் கண்டதெல்லாம் தவித்திருக்க வேண்டியவை.

“சிகரம்” படத்தில் காதலில் தோல்வியுற்றவனாக குடித்து கிடக்கும் பாத்திரத்தில் வழிய வழிய மதுவும் காதலும்… கண்கள் சிவந்து கிடந்ததை அச்சத்தோடு காணலாம். “சங்கீதமே நிம்மதி… சந்தோசம் சொல்லும் பைங்கிளி” என்று உச்சஸ்தாயில் பாடுகையில்.. ஷேக்ஸபோனோடு வளைந்து நெளியும் மனதுக்குள் ஒரு மெல்லிய சிறகு இசையாகி அசைவதை உணர முடியும்.

அத்தனை நளினமான கடினமான ஸ்டெப்ஸ்களை அனாயசமாக செய்து விட்டு போகும் இந்த மனிதன் வாழ்வில் பெரும் சோகங்கள் எல்லாம் உண்டு. தீராத பிடியில் சிக்குண்ட காலங்களும் உண்டு. இந்த நடனக்காரனின் மறுபக்கம் அதிர்ச்சி அளிக்க கூடியவை.

நினைவுச் சிறகில் கிடைத்த இவரின் சினிமாக்கள் பால்யத்தை பொழியும் வானவில்லை… வளைக்காமல் நீளச் செய்யும் கவிதையாகிறது. படித்தாலும் புரிந்தாலும்.. மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்… என் ஆழ் மன காகிதத்தில்… இன்னும் இன்னும் இவரின் “வாழும் வரை போராடு… வழியுண்டு என்றே நீ பாடு…. இன்று ரோட்டிலே… நாளை வீட்டிலே… இனி மழை எங்கும் நம் காட்டிலே….” எழுதிக் கொண்டே இருக்கிறது.

வாழ்வைக் கொண்டாட்டமாய் கண்ட பால்யம் சுற்றிய தெருக்களில், ஊர்களில், காடுகளில் அணு அணுவாய் பிரிந்து வெற்றிடமாய் கூடு கட்டியிருக்கிறது.

இவரின், ” தினம் தினம் உன் முகம் மலரினில் மலருது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம். உன்னை நானும் அறிவேன்.. என்னை நீயும் அறிவாய்…… யாரென்று நாம் அறியும் முதல் கட்டம்…”மலர் உன்னை நினைத்து… பபபாப…பா……”

“தேவன் கோயில் மணி ஓசை கேட்குது….புது பாட்டு பாடுது… என் மனமோ வானில் ஊஞ்சல் ஆடுது” என்று படம் முழுக்க போராடி….படம் முடியும் போது வாழ்வில் வெற்றி பெற்ற ஒரு பாட்டுக்காரனின் ஆட்டம்….தான் ஆனந்த் பாபு பற்றி “நான் பேச நினைப்பதெல்லாம்”

சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும்… தன்னை தானே பார்த்து வியந்து….சிரித்து….அழுது… உணர்ந்து…. தன்னை வானமாக்கிக் கொள்ளவே தவிக்கிறது நினைவுகள்.

சிறு பாத்திரமே என்றாலும் பெருங்காற்று அது. “எதிர்காற்று” படத்தில் மட்டும் அல்ல.. இவரின் வாழ்விலும் தான்.

அவர் வரி தான் மீண்டும். “வாழும் வரை போராடு…. வழி உண்டு என்றே நீ பாடு…”


  • மண் வாசனன்

“மாலையில காத்து அள்ளியிருக்கு….. தாலி செய்ய நேத்து சொல்லியிருக்கு….. இது சாயங்காலமா மடி சாயும் காலமா ”

இந்தப் பாடலில் தோன்றும் பாண்டியன் முகத்தில் ஒரு இன்னொசென்ஸ் இருக்கும். எங்கோ மதுரையில் ஒரு மூலையில் வளையல் கடையில் வேலை செய்து கொண்டிருந்த பையனை கூட்டி வந்து ஹீரோவாக்கி விட்டிருந்தார் பாரதிராஜா. “மண் வாசனை”யில் கிடைத்த மண்ணின் வாசனன் பாண்டியன் என்றால்… அது மிகை இல்லை. மிகையாக இருந்தாலும்  அது தகும்.

பாண்டியன் என்ற நடிகர் வெள்ளை வெளேர் என்று இருந்தாலும்… பேச்சில்… கடைசி வரை அவரால் மதுரை தமிழை மாற்றிக் கொள்ளவே முடியவில்லை. மாற்றி இருந்தாலும்… நன்றாக இருந்திருக்காது என்று தான் தோன்றுகிறது. பாண்டியராஜன் அவர்களுடன் “ஆண்பாவ” த்தில் செய்த கூத்தெல்லாம்…. காலத்துக்கும் கிளாஸிக் வகையறா. கிராமத்து புழுதிக்குள் இருந்து வெளி வந்த பாரதிராஜாவின் ஹீரோ பார்க்க பார்க்க நம்பிக்கையூட்டும் கண்களுக்கு சொந்தம். ஒரு ஹீரோவாக எப்போதும் தனியே துருத்திக் கொண்டு தெரியாத கதைகளின் கதாநாயகன்.

சசிகுமாரின் முந்தைய வெர்சன் போன்ற லுக் பாண்டியனுக்கு.

“ஆண்களை நம்பாதே” படத்தில்… இயக்குனர் அலெக்ஸ் பாண்டியனுடன் சேர்ந்து காதல் தோல்வி உற்ற கதாபாத்திரத்தில்…..அதுவும் “காதல் காயங்களே… நீங்கள் ஆறுங்களே ” பாடலில்…. தோன்றும் போதெல்லாம்… நிஜ காதலின் வலியோடு.. மதுபாட்டில்களை தள்ளி விட்டு காதலுக்கே உண்டாண சிறுபிள்ளை வாதங்களை கண் முன்னே நிறுத்தியிருப்பார்.

“முதல் வசந்தம்” படத்தில்… வீ ட்டு முதலாளி பெண்ணுக்கு வேலைக்காரனாக இருக்கும் பாங்கு… காதல் பற்றி ஒன்றும் தெரியாத அப்பாவி…. பின் காதலால் கசிந்துருகி… அதன் நீட்சியாக ஜெயிலுக்கு போகும் கதாபாத்திரம்… என்று அந்தப் படத்தில்….ஒரு வேலைக்கார ஏழையின் காதலோடு வாழ்ந்திருப்பார். இந்த படத்தில் தான்… சத்யராஜ் பேசும் அந்த பேமஸ் வசனம்.

“சந்தோஷமாவும் இருந்துக்கோ… சாக்ரதையாவும் இருந்துக்கோ.. நானா ஒளர மாட்டேன்.. தண்ணி அடிச்சா ஒளர்னாலும் ஒளறிடுவேன்”

“ஆறும் அது ஆழம் இல்ல… அது சேரும் கடலும் ஆழம் இல்ல… ஆழம் எது அய்யா…….அது பொம்பள மனசு தாய்யா…” – இந்தப்பாடல் பாண்டியனுக்கு இல்லை என்றாலும்…. பாண்டியனை ஏமாற்றியதாக ஹீரோயினை பார்த்து சந்திரசேகர் பாடுவது போல காட்சி அமையப்பட்டிருக்கும். பாட்டின் வரிகளும்.. பாட்டின் காட்சிகளும்… ஒரு திக் திக் காதல் கதையை ஆற்றோரம் விளக்கேற்றி காட்டி இருக்கும்.

பாண்டியன் எந்த கதாபாத்திரமாகயிருந்தாலும்.. அதற்கு பொருந்தி மிக இயல்பாக செய்து விடும் நடிகர் என்பதற்கு இன்னும் நிறைய சான்றுகள்… இருக்கின்றன.

“புதுமைப்பெண்” படத்தில்…”கஸ்தூரி மானே… கல்யாணத்தேனே…… கச்சேரி பாடு… வந்து கை தாளம் போடு..” காதல் சொட்டும்….பாடல் காட்சியில்… வட்டக் கண்ணாடியில் வாலிபம் பொங்க… வெரைட்டி காட்டி இருப்பார். “புள்ள” என்று வரும் வசனங்களை அவர் பேசுகையில் எல்லாம் கிராமத்து சொல்லின் வாசத்தை உணர முடியும்.

‘ஆயுசு நூறு’ படத்தில்… “சின்ன பொண்ணு பக்கத்துல…அன்னம் நீயும் வெக்கத்துல வா… நீ வா…” பாடலுக்கு ரஞ்சனியுடன் ஆடும் ஆட்டம்.. அத்தனை குதூகலமாக இருக்கும். அவருக்கு ஆடவெல்லாம வராது என்பது நமக்கும் தெரியும். ஆனாலும்… வேட்டியை தொடை தெரிய மடிச்சு கட்டிக் கொண்டு ஆடுகையில்….நம் வீதியில் இருக்கும் ஒரு கரடுமுரடான விடலைப்பையன் நினைவுக்கு வருவான்.

“ஆண் பாவம்” படத்தில் சீதாவோடு இறுதிக் காட்சியில் செத்தது போல படுத்திருக்கையில்…. ஈ கன்னத்தில் பட….அதனால் மெல்ல கன்னம் அசைத்து விட்டு அசடு வழியும் உடல் மொழி இன்றும் சுவாரஷ்யம் குறையாதவை. சில காம்போவெல்லாம்… நம்மையும் அறியாமல் ரசிப்போமே.. அப்படி ஒரு காம்போ பாண்டியன் பாண்டிய ராஜன் காம்போ. நான் ரெம்ப நாட்களாக இருவரும் நிஜமாலுமே அண்ணன் தம்பி என்று நினைத்திருக்கிறேன். அப்படி இல்லை என்று தெரிய வந்த காலத்தில் அய்யய்யயோ அப்படி இல்லையா என்று வருந்தி இருக்கிறேன். ஸ்ரீதேவியும் கமலும் கல்யாணம் செய்து கொள்ளாமல் போய் விட்டார்களே என்பது போல.

ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோவாக படம் இல்லாத போது சினிமாவின் கட்டாயத்தில்…..துணை பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரு ஹீரோவால் இந்த மாதிரி நிலைமைகளை எல்லாம் தாங்கிக் கொள்ளவே முடியாது. பதிலி மது ஆக்கிரமித்தது. பிறகு மது தான் இருந்தது. அவர் இல்லை. 50 வயதைக் கூட தொட முடியாத தூரத்தில் மரித்துப் போனார். கரணம் தப்பினால் மரணம் இல்லை. கரணமே மரணம் போல தான் சினிமா. கவனமற்றோர் காணாமல் போய் விடுவார்கள்.

ஒரு கலைஞனின் வலியை ஒரு கலைஞன் அறிவான். சினிமாவை நேசித்த வலி நிறைந்த அந்த ஆன்மாவுக்கு என் வரிகளை சமர்பிக்கிறேன்.


  • ஏழாவது மனிதன்

ஒடிசலான தேகம். நீண்டு கோதி விட்ட கேசம். நீண்ட செவ்வக முகம். கரகரத்த குரல். கதை நாயகனாக “ஏழாவது மனித”னில் அறிமுகம். “ஒரு ஓடை நதியாகிறது” அடுத்த படம். படங்கள் சரியாக போகவில்லை. நடிப்பும் பெரிதாக இல்லை. ஆடவும் வரவில்லை. “தென்றல் என்னை முத்தமிட்டது….” பாடல் இசைத்தாலும்… நடனம் பார்க்க பாவமாகவே இருந்தது. சினிமாவின் கைப்பிடி நீட்சி பல போது அதுவாகவே செயல்படும். நீங்கள் யாரென்று சினிமாவின் கதைகளே முடிவு செய்யும். இந்த முறை செய்த முடிவில் அப்படி இப்படி என்று மெல்ல வில்லனாகி இருந்தார். சினிமா ஆக்கி இருந்தது. சிகரெட் புகையின் நடுவே, வாயில் சிகரெட்டோடு திரையில் பார்க்கவே பயம் கொள்ளும் கொடூர பாவனைகளோடு…….அந்த நீள் சதுர முகத்தில் வட்டக் கண்ணாடியோடு கையில் துப்பாக்கியைக் கொண்டிருந்த நடிகனை கண்டு மிரண்டாலும் சினிமா ரசிகர்கள் ரசிக்கவே ஆரம்பித்திருந்தார்கள்.

அது தான் ரகுவரனின் முரண்.

பேசுவதற்கு முன் ஒரு முறை எதிரே இருப்பவரை பார்த்து முகத்தை மேலும் கீழும் சன்னமாக ஆட்டி விட்டு….உதட்டை கடிப்பது போல இல்லாமல் மடக்கி பிடித்துக் கொள்வது போல செய்து…..கண்கள் உருட்டி பார்க்கும் போதே கிளாப்… திரையைக் கிழிக்கத் துவங்கும். உடல் மொழியில் வில்லத்தனத்தைக் கொண்டு வந்து அதையும் ரசிக்க வைத்த நடிகன்.

“புரியாத புதிர்” படத்தில் மனைவி மீது சந்தேகம் கொண்டு இரவெல்லாம் நகம் கடித்தபடி… “கூல் ட்ரிங்க்ஸ்… ஒண்ணா…. ரெண்டு பேரும்… ஹா…….ய்.. அவன் ஹாய்.. இவளும் ஹாய்…” என்று தனக்குத்தானே பாதி பாதியாக பேசிக் கொண்டு நிற்கும் ரகுவரனைக் கண்டு மிரளாமல் இருக்க முடியாது.

“ஐ நோ….. ஐ நோ.. ஐ நோ… ஐ நோ…. ஐ நோ…… என்று, ஒரு பக்கம் பேச வேண்டிய வசனத்தை ஒரு வார்த்தையை திருப்பி திருப்பி சொல்லி வில்லத்தனத்தில் புதுமையை புகுத்திய ரகுவரனை தமிழ் சினிமா ஒரு போதும் மறக்க இயலாது. தனது துறையில் இன்னமும் தான் உச்சம் அடையவில்லை என்ற வருத்தம் ரகுவரனுக்கு நிறையவே இருந்திருக்கிறது. அதன் தாக்கம் அவருள் ஒரு வகை மென்சோகத்தை எப்போதும் தக்க வைத்துக் கொண்டே இருந்திருக்கிறது.

“மக்கள் என் பக்கம்” படத்தில்..மாபியா கேங்… சத்யராஜ்க்கு ரைட் ஹேண்டாக கச்சிதம் காட்டியிருப்பார். நிழல் உலக மனிதர்களின் தோற்றத்துக்கு பொருத்தமான உடல் மொழியை கொண்டிருக்கும் ரகுவரன்… நிஜத்தில்.. மிகவும் சாதுவான மனிதன் என்பது தான் யோசித்து சிரிக்கும் அவரின் பனி விழும் சொற்களின் கரகரத்த சோகமும்…

“என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு” படத்திலும்….”அஞ்சலி” படத்திலும் ஓர் அப்பாவின் மனதை பிரதிபலிக்கும் பாத்திரங்கள். மிளிரும் அன்பும் பாசமும்… ஊமை வெயிலென அவரின் கண்களில்…. அலைபாய்ந்ததை நாம் அறிவோம். மனநலம் குன்றிய அஞ்சலி பாப்பாவின் தகப்பனாக…. கழுத்து வரைக்கும் மட்டுமே பேச முயலும் வார்த்தைகளையோடு ரேவதி முன் அவர் அழாமல் தீர்த்தது எல்லாம்.. அட்டகாச மெலோ ட்ராமா.

ஆரம்ப காலத்தில் இருந்தே வெரைட்டியில் வெளுத்துக் கொண்டிருந்த ரகுவரனுக்கு தனிப்பட்ட வாழ்வில் அத்தனை ஏற்றம் இல்லை. சினிமாவின் சாபம் நல்ல கலைஞனை பிடித்தாட்டும் என்பது ரகுவரனுக்கும் பொருந்தும். தனக்குள் ஒரு இசைக் கலைஞனை சுமந்து கொண்டு திரிந்த ரகுவரன்… தனக்குள் மட்டுமே பெருவெடிப்பை நிகழ்த்திக் கொண்டிருந்தார். தன்னை மீறி எழ இந்த காலம் அனுமதிக்கவே இல்லை என்பது தான் வருத்தத்தின் மெல்லிசை.

ரஜினிக்கு பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும்…..” மார்க் ஆன்டனி”யாக மாஸ் காட்டிய படம் “பாட்சா”. ரஜினிக்கு மட்டுமல்ல… ரகுவரனுக்கும் மைல்கல் இந்தப்படம். ரகுவரனின் வாழ்வை பாட்சாவுக்கு முன்.. பாட்சாவுக்கு பின் என்று பிரிக்கலாம். அதன் பிறகு பெரும் ஹீரோக்களுக்கு வில்லன் என்றால் இவர் தான் முதல் சாய்ஸ்.

“என் தம்பிய ஏன் சுட்ட…..” என்று ஒரு சின்னப்பெண் “சூர்ய பார்வை” படத்தில் கேட்பாள். நிறுத்தி நிதானமாக தோளில் இருக்கும் AK47 ஐ கீழே இறக்கி விட்டு….” நான் பயர் பண்ணும் போது உன் தம்பி ஏன் குறுக்க வந்தான்…” என்று அவருக்கே உரித்தான அந்த கரகர குரலில் கேட்டு விட்டு கில்டியாக ஒரு பார்வை பார்த்து பீல் பண்ணும் இடமெல்லாம்… கரணம் தப்பிய மரண இடைவெளி பாவனைகள்.

ரஜினியின் சிறுவயது நண்பனாக “சிவா” படத்தில்… ஒரு கட்டம் வரை தாங்கள் யாரென்று தெரியாமல் மோதிக் கொண்டு….. அதன் பிறகு தாங்கள் யாரென்று தெரிந்து, வில்லன்களோடு நிகழ்த்தும் இறுதி சண்டைக்காட்சி காலத்துக்கும் கேட்கும் வெடிச்சத்தம் நிறைந்தவை. அத்தனை பெரிய கிளைமேக்ஸ் சண்டை தமிழ் சினிமாவில் அரிது.

விசுவோடு அவரின் மூத்த பிள்ளையாக “சம்சாரம் அது மின்சாரம்” படத்தில் வாழ்ந்திருப்பார். எல்லாவற்றுக்கும் கணக்கு பார்க்கும் மிடில் கிளாஸ் சராசரியாக அவரின் நடிப்பு எதார்த்தத்தை பளிச்சிடும். “ஜானகிதேவி ராமனைத் தேடி இரு விழி வாசல் திறந்திருந்தாள். ராமன் வந்தான்..மயங்கி விட்டாள்…..தன் பெயரைக் கூட மறந்து விட்டாள்” என்று மெய்ம் மறந்து குடும்பத்தின் முன்னே ஒரு ஓரத்தில் லக்ஷிமி நெஞ்சில் சாய்ந்திருக்க ஒரு மிடில்கிளாஸ் மூத்த மகனின் உடல் மொழியோடு நிற்கும் ரகுவரன் என்ற நடிகனுக்கு எந்தக் கோடும் எல்லைக்கோடு இல்லை.

“முகவரி”யில் அஜீத்துக்கு அறிவுரை சொல்லும் இடமாகட்டும்…..” லவ் டு டே”யில்.. விஜய்க்கு அறிவுரை சொல்லும் இடமாகட்டும்… அனுபவங்களில் அன்பை கண்ணாடி தாண்டி தெரியும் கண்களில்….ஓர் அண்ணனாக அற்புதம் செய்திருப்பார். பெருவாரியாக வில்லனை ரசிக்கத் துவங்கிய கூட்டம் ரகுவரனுக்கு பின் தான் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். ரகுவரன் தோன்றும் முதல் காட்சிக்கு கைதட்டி ஆரவாரிக்கும் ரசிகர்கள் இன்றும் உண்டு. ரகுவரன் அதை நம்பி ஒரு போதும் அகல கால் வைத்ததில்லை. அவருக்கு அவர் உயரம் தெரியும். ஆனால் இன்னமும் இந்த மகா நடிகனுக்கு தீனி போட்டிருக்க வேண்டும்.

“தொட்டாச்சிணுங்கி” படத்தில் மனைவி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட, போய் கூட்டிட்டு வான்னு சொல்ற பெரியவங்க கிட்ட “உங்களுக்கு தெரியுது என் பொண்டாட்டி நல்லவன்னு … எனக்குத் தெரியல … எனக்குத் தெரியட்டும் .. நான் போய் கூட்டிட்டு வரேன்…..” என்று பேசுகையில்… அந்த பாத்திரத்தின் மீதான கோபம் போய் அதிலிருக்கும் நியாயம் கூட மெல்ல வெளிப்படும்.

தாய் பாசம் தனக்கு கிடைக்கவில்லை என்று தம்பியையே மலை மீதிருந்து தள்ளி விட்டு விட்டு… இறுதிக் காட்சியில்… எல்லா உண்மையும் வெளிவர, தாய்ப்பாசத்துக்கு ஏங்கிய மகனாய் அப்பாவியாய் ஒரு கொலைகாரனின் இருத்தலை இரு தலை கொல்லி வாழ்வு உருண்டோட தனக்கு தானே சாட்சியாய் நிற்கும் ரகுவரனை “உயிரிலே கலந்தது” படம் நினைவூட்டிக் கொண்டே இருக்கும். “எங்கடா போன….” என்று தாமதமாக வீட்டுக்கு வரும் மகன் ‘கரண்” – இடம் கேட்கையில்….ஒரு தந்தையின் நடுக்கம் பரிதவிப்போடு வெளிப்படும். தான் ஓட்டும் ட்ரைனிலேயே தன் மகன் தற்கொலை செய்து கொண்டதை தாங்க முடியாத அப்பாவாக கூனி குறுகி காலத்தின் முன் தன்னையே பிச்சையிட்டுக் கொண்டிருக்கும் ரகுவரனை “துள்ளித் திரிந்த காலம்” படத்தில் சத்தமின்றி ஓடும் ரயிலோடு காணலாம்.

எனக்குத் தெரிந்து கதை நாயகனாக அறிமுகமாகி வில்லனாக உச்சம் தொட்ட நடிகன் இவர் தான் என்று நினைக்கிறேன். வில்லனுக்கு வில்லன். எந்த பாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை புகுத்தி.. மெருகேற்றி… அற்புதம் அல்லது அதகளம் செய்து விடும் ரகுவரனைத்தான் 49 வயதில் இந்த மரணம் தழுவிக் கொண்டது.

மரணத்துக்கு தெரியவில்லை ரகுவரன் என்ற மகா நடிகனுக்கு எல்லாம் தெரியும் என்று. அவருக்கு தெரியாத ஏதோ ஒன்றில்….. இந்த மரணம் ஜெய்த்திருக்க வேண்டும். அந்த ஏதோ ஒன்று நிம்மதியின்மை என்று கூட சொல்லலாம். நல்ல கலைஞனுக்கு எப்போதும் இந்த வாழ்வு தரும் சாபம் அது.


  • ராஜ ராஜ சோழன்

பாலுமகேந்திரா கண்டுபிடிப்பு.

ஜய்ஜாண்டிக் தோற்றம் இல்லை. இருப்பதியிலேயே மிருதுவான உடல் நிலை. முகம் கூட.. க்ளோஸ் ஷாட் எல்லாம் வைக்க முடியாது. பருக்களால் விளைந்த சிறு சிறு பள்ளங்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி இந்த மனிதனை விரும்பிய பெண்கள் ஏராளம். எல்லாருக்கும் பிடித்த முகம் அது. மைக்கை கையில் பிடித்து கழுத்தை இருபக்கமும் சரியான ரிதத்தில் ஆட்டும் மோகனை படம் ஆரம்பித்த முதல் நொடியிலேயே பிடித்து விடும்.

“ராஜ ராஜ சோழன் நான்….” ஆகட்டும்…. “யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ….” ஆகட்டும்…. அந்தந்த கதாபாத்திரத்தில் தன்னை மிக சரியாக பொருத்திக் கொண்டு விளையாடும் மோகனுக்கு கடைசிவரை சொந்தக் குரல் இல்லை….என்பது சற்று வருத்தத்துக்குரிய விஷயம். அவருக்கு விஜய்- யின் மாமா சுரேந்தரின் குரல் தான் எப்போதும். எப்போது அவர்கள் இருவருக்கும் ஒத்து வராமல் போனதோ அப்போது முதல் மோகனை மோகனாக பார்க்க முடியவில்லை. அந்த குரல் இல்லாத மோகனை பார்த்து இது மோகன் இல்லையே என்றார்கள். அப்படி ஒரு குரல் பொருத்தம். எனக்கு தெரிந்து உலக அளவில்.. ஒருவரின் குரல் இன்னொருவருக்கு பொருந்தி அதுதான் அவரின் குரல் என்று ஆனதெல்லாம் சினிமா வரலாற்று மயக்கம். இப்போது கூட சுரேந்தரின் குரல் சுரேந்தர்- க்கு பொருத்தம் இல்லை என்று தான் கூற முடியும். அத்தனை நெருக்கம் அவரின் குரல் மோகனுக்கு.

நிறைய புது புது முயற்சிகளில் ஈடுபட்ட நடிகர். கதாநாயகனாக இருக்கும் போதே அந்தக்கால கட்டத்தில் எவரும் “நூறாவது நாள்” படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முன் வர மாட்டார்கள். எத்தனை துணிச்சல். அதுவும் படம் முழுக்க ஹீரோவாக வரும் மோகன்.. படம் முடிகையில் வில்லனாகவே ஆகி விடுவார். அந்த படம் மாபெரும் வெற்றி என்றால் அதற்கு மோகனின் தனித்துவமும் ஒரு காரணம். எத்தனை பாடல்கள். ஒரு கால கட்டத்தில் இளையராஜாவின் அத்தனை பாடல்களுக்கும் விலாசமாக இருந்தவர் மோகன். கமல் படங்களுக்கு போட்டியாக காலத்தை பதிந்த படங்கள் மோகனுடையது.

அன்றைய கால கட்டத்தில் எல்லா பெண்களுக்கும் பிடித்த இடத்தில் மோகன் இருந்தார் என்றால் அது சிங்கப்பல் சிரிக்கும் அழகு தான். அத்தனை உயரம் இல்லை. அத்தனை பில்ட் பாடி இல்லை. குரல் கூட சொந்தம் இல்லை. முகம் எல்லாம் அம்மை தழும்புகள். ஆனாலும் வசீகரம் இருந்தது. காலத்தின் கட்டளையைப் போல மோகனின் படங்கள் பெரும்பாலும் உச்சம் தொட்டன. மோகன் படங்களில் பாடல்கள் ஹிட்டோ ஹிட்.

“மெல்லத் திறந்தது கதவு, உதய கீதம், பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சங்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, பாடுநிலாவே…..” என்று அது தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் எந்த முன்னணி ஹீரோவும் செய்யத் துணியாத ஒரு வேலையைக் கூட செய்தார். “உருவம்” என்றொரு படத்தில் பேயாக நடித்தார். சவால் விடலாம். இப்போதும் தனியாக நள்ளிரவில் உக்கார்ந்து ஈவில் டெட்- ஐ கூட பார்த்து விடலாம். “உருவம்” படத்தை பார்க்க முடியாது. அப்போதே மேக் அப்- க்கு அத்தனை மெனக்கெடல். புதுமை,.தேடல். பேய் என்றால் அது தான் பேய். மோகனுக்குள் பேய் வந்த பிறகு படம் உலுக்கி எடுத்ததெல்லாம் இரவுக்கு பல் நீண்ட கதை. ஒரு காட்சியை கூட இயல்பாக பார்க்க முடியாது.

எத்தனையோ விதவிதமான கதாபாத்திரங்களில் தனக்குள் இருக்கும் நடிகனை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தவர். “விதி” என்ற படத்தின் மூலமாக தமிழ் சமூகத்தின் கோபங்களை சம்பாதித்து கொண்டவர். அதுவும் ஒரு கதாபாத்திரம். அவ்வளவு தான். அந்த புரிதலை விட்டு விட்ட மக்களிடம் முறையிடவும் ஒன்றுமில்லை. புதுப் புது முயற்சிகளில் ஒன்று தான் “விதி”யும். ஆனால் எம்ஜியாரை நல்லவர் என்றும் நம்பியாரை கெட்டவர் என்றும் இன்றும் நம்பிக் கொண்டிருக்கும் மக்களிடம் விதியின் நாயகனைப் பற்றி என்ன சொல்வது…!

அது பற்றியெல்லாம் கவலை இல்லை. தன்னை முன்னிறுத்தி எதையுமே செய்யாத ஒரு நடிகன். கதாபாத்திரங்களில் வெரைட்டி காட்டிய மோகனை “மைக் மோகன்” என்று அழைப்பதையெல்லாம் நான் அடியோடு வெறுக்கிறேன். நிஜமாக அப்படி என்றாலும் கூட எத்தனை எத்தனை பாவனைகள். அப்படி ஒரு முக உடல் பாவனையில் வெளுத்து வாங்கும் மோகன்… டவுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் கவலையே படாமல் நடித்தவர்.

யோசித்து பாருங்கள். “மௌன ராகம்” படத்தில் அந்தப்பக்கம் கார்த்திக் வெளுத்துக் கொண்டிருக்கும் போது இந்தப் பக்கம் நிகராக நிற்க மோகன் எத்தனை வலிமையாக இருந்திருக்க வேண்டும். ரஜினிக்கே டப் கொடுத்த நடிகர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

“நிலவு தூங்கும் நேரம்” என்று அவர் வாயசைத்ததால் தான் இன்றும் நில்வு தூங்குகிறது என்று கற்பனையில் திளைக்கும் அக்காக்களை நான் அறிவேன். “வா வெண்ணிலா உன்னை தானே… வானம் தேடுது…” – வேறு யார் தேடி இருந்தாலும்…. சரியா இருக்குமா என்று தெரியவில்லை. “மலையோரம் வீசும் காற்று” பாட்டுக்கு எதிர் பாட்டு என்ன பாடுவீர்கள். “கோபுரங்கள் சாய்வதில்லை” போன்ற படத்திலும் தன்னை நிரூபிக்க முடியும். “ஓசை” போன்ற படத்திலும் தன்னை நிறுத்திக் கொள்ள முடியும்.

“24 மணி நேரம்” “ருசி” “பாசப் பறவைகள்” “இளமைக்காலங்கள்” “தென்றலே என்னைத் தொடு” “டிசம்பர் பூக்கள்” என்று அத்தனையும் நூறு நாட்கள் படங்கள்.

முன்னணி கதாநாயகர்கள் தயங்கும் பாத்திரங்களை ஜஸ்ட் லைக் தட் நடித்து விட்டு போக கூடியவர் மோகன். சவாலான பாத்திரங்களில் தன்னை புகுத்தி கொண்டே இருந்த மனிதனை தமிழ் சினிமா உலகமும் சரி, ரசிக உலகமும் சரி, ஒரு கட்டத்தில் தூக்கி வீசியது. என்னென்னவோ கதை விட்டது. சினிமாத் துறையில் இருக்கும் மனிதனுக்கு காண்டம் போட்டுக் கொள்ள கூடவா தெரியாது. சோ.. வதந்திகளுக்கு ஸ்டாப் இட்.

நிறைய நூறு நாட்கள் படம், நிறைய வெற்றி படங்கள்.! யோசிக்கவே முடியாது…. சாத்தியம் பற்றி.!

74 படங்களுக்கு சுரேந்தர் தான் மோகனுக்கு குரல் கொடுத்திருக்கிறார். ஆனால்…இருவரும் ஒரு நாள் கூட பேசிக் கொண்டது இல்லை என்பது தான் சினிமா முரண்.

தனக்கு இருக்கும் குறைகளை அப்படியே பாசிட்டிவாக மாற்றி ஒரு வெற்றி விழா நாயகனாக தன்னை மாற்றிக் கொண்ட மோகன் இனி நடிக்க தேவை இல்லை. அது தான் அழகும் கூட. உச்சம் தொட்ட பிறகு அங்கே தொட்டவன் இருக்க கூடாது என்பது தான் விதி. அது தான் மோகனுக்கும் நடந்தது. மிக அற்புதமாக அவரே சினிமாவை விட்டு வெளியேறி விட்டார். அந்த வெற்றிடத்தை மீண்டும் மீண்டும் மோகன் படங்களே நிரப்பிக் கொண்டே இருக்கும். அவர் குடும்பம் பற்றியோ அவரின் தனிப்பட்ட வாழ்வு பற்றியோ எதுவுமே தெரிவதில்லை. அப்படித்தான் இருக்க வேண்டும். மோகன் என்றொரு நடிகனை தனியாக அடையாளமே காண முடியாது. அந்தந்த பாத்திரங்களாகத்தான் காண முடியும். அதுதான் அவரின் சிறப்பு.

இதயம் ஒரு கோயில்… அதில் உதயம் ஒரு பாடல்… அதில் வாழும் தேவி நீ.. என்று அவர் பாடினால் தான்….அர்த்தமாகிறது….


  • எங்க ஊரு பாட்டுக்காரன்

இயக்குனர் ஆவதற்கு வந்தவர் ஒரு கட்டத்தில் கதாநாயகனான ஆகிறார்.

வசீகரிக்கற முகமெல்லாம் இல்லை. ஆனால்… ஒரு கட்டத்தில் மக்கள் நாயகனாக ஆகிறார்.

இளையராஜா காம்போவில் எக்கச்சக்க படங்கள்…. கவுண்டமணி செந்தில் காம்போவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு ஓடிய படங்கள் எத்தனையோ.

‘கரகாட்டகார’னில் இருந்தே ஆரம்பிக்கலாம். சமீபத்திய ஒரு பேட்டியில் கூட சொல்லி இருந்தார். அந்த படத்தில் நடிப்பதற்கு ஒரு கரகாட்டகாரனுக்கான ரெபரென்ஸ் உள்ள முந்தைய படங்கள் எதுவுமே இல்லை. தானாகவே ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து தான் அந்த பாத்திரத்தை செய்ய முடிந்தது என்று. அதுமட்டுமல்லாமல் கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம் எடுக்க அந்த டீமே முயன்று கொண்டிருக்கையில்…”இல்லை.. அந்த முத்தையாவாக இப்போது தன்னால் மாற இயலாது. வயது ஒத்து வராது..கிளாஸிக்கை தொட்டு கெடுத்து விடக் கூடாது” என்று டீசெண்டாக விலகிக் கொண்ட சினிமா அறிவுள்ள ஒரு நடிகர் தான் ராமராஜன்.

லிப்ஸ்டிக் யார் தான் போடவில்லை. “அயோக்கியா”வில் விஷால் கூட போட்டிருந்தார். எம் ஜி ஆர் போடாத லிப்ஸ்டிக்கா.. கிட்டத்தட்ட எம் ஜி ஆரின் பாணியில் பாதி தூரம் வந்து விட்டவர் ராமராஜன். அந்த பாணியில் சத்யராஜ் பாக்யராஜ் எல்லாம் தோற்று விட்ட போது ராமராஜனுக்கு அது பாதியளவு சாத்தியப்பட்டது. அரசியலில் காணாமல் போன முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவர் என்பது கசக்கும் உண்மை.

மதுர மரிக் கொழுந்து வாசம்….
வாசலிலே பூசணிப்பூ வெச்சுபுட்டா… வெச்சுபுட்டா…
ஆத்து மேட்டு தோப்புக்குள்ள…
செண்பகமே… செண்பகமே…..
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா…
ராசாவின் மனசில….
தாலாட்டு கேட்காத……

வாயசைத்த பாடல்கள் எல்லாம் நமக்கு தாலாட்டு தான்.

வயலும் வயல் சார்ந்த கிராமத்து கதைகளில் ராமராஜனின் இயல்பு அத்தனை நெருக்கத்துக்குரியவை. எந்த ஊர் படத்திலும் அவரின் மதுரை பாஷை அவரை ராமராஜனாகவே தான் காட்டியது. அதையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது யாருக்கும் கிடைக்காத சினிமா வரம் என்று தான் சொல்ல வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு பெரிதாக நஷ்டத்தை கொடுக்காத நடிகர்..ஒரு கதாபாத்திரத்தில் ட்ரவுசர் போட்டுக் கொண்டு நடித்தார் என்பதற்காக இன்றும் அவரை “ட்ரவுசர்” என்று சொல்வதையெல்லாம் வன்மையாக வழக்கம் போல கண்டிக்கிறேன்.

கலர் கலராக சட்டை போட்டுக் கொண்டு நடித்த ராமராஜன், இன்று வரை வண்ண வண்ண சட்டைகளுக்கு ராமராஜன் பிராண்ட் என்று ஒன்றை உணர்கிறோம் என்றால் அது அவரின் குறியீடு….முத்திரை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தனக்கான இடத்தை இன்னும் யாரும் நிரப்பவில்லை என்பதை அவரின் வெற்றியாகத்தான் பார்க்கிறேன். ராமராஜன் ஒரு வெற்றி விழா நாயகன் என்றால் அது தகும் தான். எப்போதும் நம்பிக்கையின் வழி நின்று பேசுவதுதான் ராமராஜனின் வழக்கம். நடனம் சண்டை எதுவுமே தெரியாமல்.. தனக்கு என்ன வருமோ அந்த உடல் மொழி கொண்டு தனக்கான சினிமாவை கண்டெடுத்த சினிமாக்காரன் என்றால் அது சாலப் பொருத்தம்.

ஊரு விட்டு ஊரு வந்து படத்தையெல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. கரகாட்டக்காரனில் அடித்த கூத்தெல்லாம்  சூப்பர் டூப்பர் மட்டையடி. எங்க ஊர் பாட்டுக்காரன்., வில்லுப்பாட்டுக்காரன், தங்கமான ராசா., பாட்டுக்கு நான் அடிமை, தெம்மாங்கு பாட்டுக்காரன் இன்னும் சொல்லக் கொண்டே போகலாம். தமிழ் மனம் பாடல் சார்ந்த வாழ்வியல் முறையில் பரிணாமம் அடைந்தவை. அந்த இடத்தில் தான் ராமராஜனும் அவரின் படங்களும் மக்களிடம் ஒரு வகை நெருக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதில் ரசனையும் இருந்தது.

தனித்த உடல் மொழியில் சினிமாவை குடிசை வீட்டுக்கார அம்மாவுக்கும் கொண்டு சேர்த்த மக்கள் நாயகன்.

கிராமத்து மாமாவாக, மச்சானாக, எதிர் வீட்டு படித்த பையனாக, கனகாவுக்கும் கவுதமிக்கும் முறை மாமனாக என்று கிராமம் சார்ந்த ஒரு முகம் என்றால் அது கனக் கச்சிதமாக பொருந்துவது ராமராஜனுக்கு. அம்மா பாசத்தை ராமராஜன் காட்டினால் சுலபமாக ஆடியன்ஸ் கன்வின்ஸ் ஆவார்கள். மனோவின் குரலுக்கு சரியான இசைவாக ராமராஜனின் பாவனை இருப்பதை ரசிக்காமல் இருக்க முடியாது. வாய்க்கா வரப்பில் ராமராஜன் நடந்து வந்தாலே.. இளையராஜா இசையில் தனித்த தென்றல் சேர்ந்து விடுவதை உணர முடியும். தனிப்பட்ட வாழ்வுக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. சினிமாவில் ஒரு ஜெம் என்று தான் சொல்ல முடியும்.

அவர் எதற்கு வந்தாரோ அதில் வெற்றியும் பெற்று விட்டார் என்பதன் சாட்சி…அவர் 5 படங்கள் இயக்கியும் இருக்கிறார் என்பது.


தொடரும்

எழுதியவர்

கவிஜி
கவிஜி
கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
David
David
2 years ago

Good one

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x