23 November 2024
moorthi story

அள்ளிமுடித்திருந்த தலை மயிற்றினை கலைத்துப்போட மனமில்லாமல்தான் மண்டபத்தில் நின்றுகொண்டிருந்தாள் திரௌபதி.  அரளிப்பூக்கள் நான்கு வர்ணங்களில் கொத்துக்கொத்தாய் பூத்திருந்த சேலையினைதான் அன்று உடுத்தியிருந்தாள்.  அஸ்தினாபுரத்தின் கானகம் அனைத்திலும் திரௌபதியின் சேலையில் மண்டிகிடந்த அரளிப்பூக்களின் உதிர்ந்த இதழ்கள் பேரடுக்குகளாக ஒன்றன்மீது ஒன்றாக மண்டிகிடந்தன.  கொய்து வரப்பட்ட சமைந்த பழமாக இருந்த திரௌபதிக்கு கொடும் துயரம்தான்.  “நானும் வருகிறேன்” எல்லோரும் சேர்ந்தே கனியினை சுவைக்கலாம் என்று திரௌபதியினைப் பார்த்து குந்தி சொல்லியிருந்தால், திரௌபதி பெண்களால் ஒருபாலின வல்லுணர்விற்கும் உள்ளாக்கப்பட்டிருப்பாள்.  மண்டபத்தில் கனிகளாக உடைந்து கொண்டிருந்த துகில் உரிப்பு,  திரௌபதிக்கு விடுதலைக்  கிடைப்பதாகத்தான் இருந்தது.  அவள் இடுப்பில் அரளிப்பூக்களால் சுற்றப்பட்டிருந்த சேலைதான் அவளது பாலுணர்ச் சங்கிலி.

உடம்பில் சுற்றப்பட்டசேலை அசுகையாக இருக்க, சேலையினை தானே கழற்றி எரிந்துவிடவேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தாள்.  இரவின் வாசற்படிகளில் கழற்றப்பட்டுக் கிடக்கும் செருப்புகளுக்கு நாய்களை காவலுக்கு வைத்துக்கொண்டு அரளிப்பூத்த ஐந்து சேலைகளை ஒவ்வொரு இரவும் மாற்றிக்கொண்டே இருப்பது அவளுக்கு வேதனையாகத்தான் இருந்தது.  அபலைகளுக்கு நிர்வாணம் பெரும் விடுதலைதான்.  இரவு வந்தவுடன் திரௌபதியின் சேலையில் அரளிப்பூக்கள் பூக்கத் தொடங்கிவிடுகின்றன.  திரௌபதிக்கு இடுப்பெலும்பு முறிந்து உடைவதாக இருக்கும்.  கழற்றி எறியப்பட்ட ஆணுரைகளாக பூத்துக்கிடக்கும் அஸ்தினாபுரத்தின் தெருக்கள்  மண்டபத்தின் முன்பாக தகிக்கும் பூக்குழியில் உதிர்ந்து கிடந்தன.

அஸ்தினாபுரத்தில் இருந்து அபலைகளின் குரல் கண்ணனில் குரும்பி அடைத்த காதுகளைத் தட்டியது.  இரண்டு கண்ணிமைகளின் வரிசையிலும் பூழை செறிந்து ஒட்டிக்கிடந்த கண்களை திறந்துப் பார்த்தான்.  கையில் இருந்த சேலைத் துணிமணிகளை மூட்டைக்கட்டிக்கொண்டு அஸ்தினாபுரம் நோக்கி ஓடினான்.

முடிந்துவிட்டிருந்த மாதவிடாயின் கவிச்சியோடு எச்சமாய் கமழ்ந்துகொண்டிருந்த பெண்குறியின் வாசனையினை கண்ணனுக்கு நுகர வேண்டும்போல் இருந்தது.  கோபியர்களிடம் இருந்து கவர்ந்து வந்த ஆடைகள் சிலவற்றில் கஸ்தூரி மஞ்சளின் வாசனை கமழ்ந்து வந்ததும், நாக்கும்  நீண்டு உமுலு கொட்டத் தொங்கியது.  மூங்கில் புதற்களில் புகுந்து விசும்பிய அசக்காற்று மையல் கொண்டிருந்த மேகத்தினை கலைத்து போட்டதும்,  பெருமழையின் குறியினைக் காட்டியது.  தூரத்தில் கோபியர்கள் தன்னை தேடியலைவதை நினைத்துப் பார்த்த கண்ணன் பெருங்குரலெடுத்து சிரித்தான்.  ஆழமான மட்டைக்கிணற்றின் சுத்துப்பாறில் தண்ணீர் மோதுவதாக கெக்கெக் என அவனின் சிரிப்பொலி மலைச்சரிவில் சரிந்து விழுந்தது.  பிருந்தாவனத்தில் அரளிப்பூக்கள் கொத்துக்கொத்தாய் மொட்டுவிடத்தொடங்கியதும்,  கண்ணனோடு மேய்ச்சலுக்கு வந்திருந்த பசுக்களின் வயிற்றில,  நீல நிறத்தில் செறிந்திருந்த பால்நரம்புகள் புடைத்துக்கொண்டு வந்தன.

கோபியர்கள் தங்களின் மார்பகங்களை கைகளால் மறைத்துக்கொண்டு ஓடியதைபோலவே மண்டபத்தின் முன்னால் வெட்டப்பட்டிருந்த பூக்குழிகளில் மரக்கட்டைகள் குறுக்கும் நெடுக்குமாக போடப்பட்டிருந்தன.  கோபியர்களின் முழு நிர்வாணம்தான் அஸ்தினாபுரத்தின் தெருக்களின்  பூக்குழிகளிலும் கனன்றுகொண்டிருந்தது.  திரௌபதியின் நெருப்பு உடல் தண்ணீர் மூட்டமாய் பொசுங்கிகொண்டு வந்தது.  அஸ்தினாபுரத்தின் தெருக்களில் உதிர்ந்து விழுந்த அரளிப்பூக்களின் இதழ்கள் நீர்ப்பற்றி எரியத்தொடங்கின.

மண்டபத்தின் பின்புறமாக மேய்ச்சலுக்கு காலாட விடப்பட்டிருந்த பசுக்களின் மீதும் கண் வைத்துக்கொண்டே, கோபியர்களின் சேலைகளை மூட்டைக்கட்டி வந்ததை எடுத்து பிரித்துப் பார்த்தான் கண்ணன்.  சேலைகள் அனைத்தையும் நான்கு வர்ணத்தில் பிரித்து,  நான்காயிரம் நீலப்பூக்களைக்கொண்டு அடுக்கடுக்காக அடுக்கி வைத்தான்.  கோபியர்களின் சேலைகளோடு உல்லாடைகளையும் சேர்த்து நுகர்ந்துவிட்டிருந்த கண்ணனை, மண்பானையில் புதைத்து வைத்திருந்த புளித்த கள்ளுண்ட மயக்கம் ஆட்கொண்டது.  மயிற்பீலிகள் வைத்திருந்த மண்டைஓட்டின் தலைமயிருக்கு அடியில் முழுவதும் தண்ணீரால் நிரம்பி தழுதழுத்துக்கொண்டிருந்த கொத்துச் கூழ்ச்சதையினை தேள் கொடுக்கால் தீண்டியதைப்போல அவனுக்கு கிரக்கம்.  ஆண்குறியினை நண்டுகள் பற்றி ஊறுவதாக இருந்தது.  கிச்சிக்கிச்சில் உடல் நெளிந்து போனான் கண்ணன்.  அடக்கமுடியாமல் கெக்கெக் என சிரிப்பும் மூண்டுகொண்டே இருந்தது.

தொரப்பாட்டு மூட்டைகளாக கொஞ்சத்தினை தோளில் மாட்டிக்கொண்டும்,  மிச்சப்பொதியினை பசுக்களின் முதுகில் போட்டுக்கொண்டு வந்திருந்த கண்ணனுக்கு அஸ்தினாபுரத்து மண்டபம், சுதைவேலையினையும் அவற்றிற்கு வர்ணம் பூசுவதற்கும் உகந்த இடமாக இருந்தது.  பிருந்தாவனத்தில் ஆடைகளை முழுமையாக கவர்ந்து வந்திருப்பது கண்ணனின் கைவேலைக்கு இலகுவாக இருந்தது.  திரௌபதியின் இடுப்பில் கொடிகளைப்போல ஆடைகளை முழுவதுமாக பிணைத்து சுற்றிவிட்டு,  அவற்றில் இருந்து கமழ்ந்து வரும் அரைநிர்வாண தூண்டலில் கண்ணன்  உதட்டோரம் அரைசிரிப்பு பூத்து உதிர,  புல்லாங்குழலை வாசிக்கத் தொடங்கினான்.

மண்டபத்திற்கு முன்னால் திண்டுத்திண்டாக பூக்குழிகள்.  இரவுக்கு ஒருவராக வீதம்போட்டு திரௌபதியின் உடலை தின்று கொழுத்தவர்கள், தகிக்கும் நெருப்பினை தங்களின் கால்களால் மிதித்து நொறுக்கி சாம்பலாக்கினர்.  தெருவெங்கும் நெருப்பு துண்டங்கள் பிதுங்கி வழிந்தது.  திரௌபதி தகிக்கும் தன் உடலுக்கு தண்ணீரையே மலர்களாக சூடிக்கொண்டாள்.  திரௌபதியின் தொப்புள்குழிக்குள் வளையங்களாக சுருங்கிகிடந்த தண்ணீர் திவளைகளில் விழுந்து கிடந்த சமைந்திராத அரளிப்பூ மொட்டுக்கள்,  அவளின் கன்னித்திரையினை அகழ்ந்துகொண்டிருந்தது.  தனக்குள்ளே விழுந்த விதைகள் முளைத்துதான்  பூக்குழியாக பூமியில் கிடந்ததைப் திரௌபதி பார்த்தாள்.  கழுத்தில் தொங்கிகொண்டிருந்த நெருப்புமாலை இரவெல்லாம் அவளின் கழுத்தினை கோடாறிப்பற்களால் எப்பொழுதும்போல் கடித்துத் தின்றது.  இரவில் வந்துபோகும் ஒவ்வொருவருக்காகவும் அவள் சூடியிருந்த மாலை அனைத்தும் பூக்குழிகளில் களவியின் வீச்சத்தோடு வண்புரணர்வின் பேரிரைச்சலாய் எரிந்துகொண்டிருந்தது.

திரௌபதியின் நிர்வாண உடலுக்கு அரளிப்பூக்கள் மொட்டு விட்டு சமைந்திருந்த சேலையின் முந்தி தலைப்பினை கண்ணன் முடிந்துவிட்டுருந்தான்.  மத்துக்கயிற்றோடு சுற்றப்பட்டிருந்த பூமி, அவளை ராட்டினம் போல சுற்றிக்கொண்டே இருந்தது.  இடுப்பில் அரளிப்பூக்களின் கொடிகளைப்போல பின்னலம் போட்டு சுற்றிக்கொண்டிருக்கும் சேலைகளால் திரௌபதி மூச்சிறைத்து அசந்து போனாள்.

சேலைகள் பனிக்குடங்களைப்போல உடைந்தும்,  அரளிப்பூக்கள் பெரும்வெட்டாய் வெளியேறிக்கொண்டே இருந்தது.  ஒவ்வொரு சேலையின் தலைப்பும் முடிந்த பின்னர் காட்டுக்கொடிகளைப்போல பின்னலம் போட்டு அடுத்தடுத்த தலைப்பு தொடங்;கும்போது அவளின் கண்களுக்கு நிமிலம் பூத்துக்கொண்டு வந்தது.  பறந்து வந்த அஸ்தினாபுரத்து கானகத்தின் அத்தனை மின்மினிப்பூச்சிகளும் பகலினை மலர்த்திப்போட்டு அதில் இருந்த இருளை குவளையில் வைத்து பருகிக்கொண்டிருந்தன.

திரௌபதியின் நிர்வாணத்தினை தரிசிக்கும்படி மண்டபத்தில் கூடியிருக்கும்  எல்லோரும் பூமியினை அகழ்ந்து பார்க்கும் பரவசத்தில் இருந்தார்கள்.  திரௌபதிக்கு கோபியர்களைப் பற்றிய கவலைதான் அதிகமாக இருந்தது.  தனக்குகூட மார்பகங்களுக்கும் புட்டங்களுக்கும் முழுவதுமாக சுற்றப்பட்ட ஆடைகள்,  மொட்டுக்களும் சமைந்த பூக்களுமாய் இருக்கின்றபொழுது,  முழு நிர்வாணமாக பிருந்தாவனத் தோட்டத்தின் திறந்தவெளியில் ஓடிவந்த கோபியர்களின் துயரம் கொடியதுதான்.  இன்னும் எத்தனை சேலைகளுக்கு சுற்றவேண்டிருக்கும்.  தொண்டைக்குழிவரை சேலை சுற்றிக்கொண்டே வந்தது.  எத்தனை கோபியர்களின் சேலைகளை கண்ணன் கவர்ந்து வந்திருப்பான்.

அடைகாலத்தில் இரைப்பொறுக்கல்கள்  இல்லாத சர்ப்பத்தினைப் போன்று திரௌபதியின் கண்களை செவ்வரிக்கோடுகள் பற்றிக்கொண்டன.  பூமியில் விரிந்து கிடக்கும் பூக்குழிகளை கடந்து வருவதற்குதான் ஐந்து பேருக்கும் பசுவின் தோல்களான காலணிகள் தேவைபட்டன. நெருப்பில் மிதக்கும் தெருக்கள் திரொபதியின் சேலையில் சமைந்து உதிர்ந்து கிடந்த அரளிப்பூக்களின் நிறத்தில்தான் இருந்தது.  கசாப்பு கடைகளில் இடுப்பு எலும்புகளை வெட்டி துண்டாடுவதைப்போல,  திரௌபதியின் நாக்கோடு முடங்கிபோன வார்த்தைகள் அஸ்தினாபுரத்தின் தெருவோரமெங்கும் தேங்கி நின்று கனன்று கொண்டிருந்தன.  திரௌபதிக்கு விறைத்த ஆண்குறிகளைப் இடுப்பில் பொருத்திக்கொண்டு வால்சுற்றிவிடவேண்டுபோல இருந்தது.

திரௌபதிக்கு துரியோதனைதான் மிகவும் பிடித்திருந்தது.  நெருப்புக்குள் தகித்துக்கொண்டிருக்கும் திரௌபதியின் உடலுக்கு ஆடை எப்படி பொருந்தி போகும் என்பதை துரியோதனன்தான் புரிந்து வைத்திருப்தாக நினைத்தாள்.  துகிலுரிப்பது அரவம் தனது சட்டையினை கழற்றிப் போடுவதைப்போல எத்தனை மென்மையானது.  திரௌபதியை கானகத்தில் கண்ணேந்தி நிற்கும் புற்றின் பெருத்த உடம்பினைப்போல யாராளும் புரிந்து கொள்ளமுடியவில்லை.  சேலைப்பொதியினை சுமந்து வந்திருந்த கண்ணனை நினைத்துதான் அவளுக்கு கிலி.  தனக்குள் கனன்றுகொண்டிருந்த நெருப்பினை அணைப்பதற்குதான் அவள் இத்தனை நாளும் நெருப்பு பற்றாத சேலையினை உடலில் சுற்றிக்கொண்டிருந்தாள்.  அவற்றில்  கண்ணனில் உடலாக நீலநிறத்தில் அரளிப்பூ பூத்துகொண்டதுதான் அவளுக்கு அசுகை.  முனைத் தீட்டப்பட்ட அஸ்தினாபுரத்துக் காட்டு முசுடுகள்.  அதனை உருவி எடுப்பதற்கு துரியோதனனுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது.

“வண்ணங்களால் ஆன சேலை.  நான்தான் கட்டிவிட்டிருக்கிறேன்.  நான்கு வர்ணத்தில் நான்காயிரம் சேலைகள்.  திரௌபதி என்ற பெண் உடல் ஐந்து கலப்பைகள் கொண்டு உழும்  விதைகள் முளைக்கும் பரந்துபட்ட பூமி.  அவள் உடம்பில் இருந்துதான் அனைத்து பெண்ணுடம்பிலும்  சேலைகள் சுற்றப்பட்டிருக்கின்றன”  என கண்ணன் துகில் உரிந்து விழும் மாளிகையில் அமுதம் நிறைந்த குவளையினை கையில் பற்றிக்கொண்டு கெக்காலி கொட்டிச் சிரித்தான்.  ஐந்து துளைகள் போடப்பட்டிருந்த புல்லாங்குழலின் ஓசையும் கூடவே சேர்ந்துகொண்டது.  கண்ணனின் சிரிப்பு திரௌபதியின் கருப்பையில் ஒட்டியிருக்கும் கருமுட்டையில் நீலத்தினை கொதக்கொதக்கென பீய்ச்சியடித்தன.  முட்டைகள் பச்சையம் நுகர்ந்த கூட்டுப்புழுக்களாய் அவளின்  கருப்பையினை கவ்வி கடித்து சுவைத்தன.  அவளுக்கு வயிறு ரணம் கொண்டு வந்தது.  கண்ணனோடு பொதிமூட்டையினை சுமந்து வந்திருந்த பசுக்களின் பால்மடி காம்புகள், திரௌபதியின் ஈரல்களிலும்,  பாய்ந்துகொண்டிருந்த குருதியினை மண்டபத்தின் பின்புறமாக சொரிந்தன.

கோவர்த்தனமலையின் தொடர்ச்சியான சுனை.  கண்ணனுக்கு கௌபீனம் நழுவியோடியதும் பிணத்தினை கொறித்து தின்ற மீண்கள் அவனின் ஆண்குறியினை கூட்டமாய் மொய்த்து கடித்தன.  அலறி துடித்த அவனுக்கு தன் சேலைத்தலைப்பின் ஒருத்துண்டினை முன்னம்பற்களால் கிழித்துப் போட்டது திரௌபதிக்கு நினைவுக்கு வந்தது.  அன்றிலிருந்துதான் நதியும் தீப்பற்றி எரியத்தொடங்கியது.  அஸ்தினாபுரம் கண்ணனால் சுற்றப்பட்ட சேலைகளால் ஆனதுதான்.  பூமி திரௌபதியினால் ஆனது.  அவளின் இரண்டு புட்டங்கள்தான் கையலாயமலையும் கோவர்த்தனமலையும்.  திரௌபதி அஸ்தினாபுரத்தின் ஆதித்தாய்.  பூமியின் கருவிழியில் ஒட்டி அறுத்துக்கொண்டிருந்த மரத்தோல் செதாம்புகளுக்கு அவள் முலைகளில் சுரந்த கன்னிப்பாலைதான் விட்டு ஊறவைத்தார்கள்.  கண்களில் குறைபாடோடு மண்டபத்தில் கூடுபவர்களுக்கு திரௌபதியின் முலைகளில் சுரந்து வந்த கன்னிப்பால் நதியாய் வழிந்தோடினாலும், அவர்களுக்கு மீண்டும் பார்வை திரும்பியதாக தெரியவில்லை.  மஞ்சள் பூத்துக்கிடந்தது.

அவளிடமிருந்து தொடங்கியதே பூமியின் தொடக்கம்.  பூமியின் உடம்பு துகில் உரித்துக்கொண்டே இருப்பதைப்போல சுற்றிக்கொண்டே இருக்கிறது.  தலைகவிழ்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் சூரியனை தனக்கு துணைக்கு இருப்பதாக நினைத்திருந்தாள்.  சர்ப்பத்தின் மலத்துவாரத்தில் இருந்து வெளியே வந்ததாக சூரியன்,  அவளுக்குள்ளே சுற்றிக்கொண்டது.  சூரியனின் மேற்புறமாக மூடப்பட்டிருந்த தோல்,  அவள் உடலில் இருந்து துகில் உரிக்கப்பட்டு சருகாகி உதிர்ந்து கிடக்கும் சேலையில் இருந்த அரளிப்பூக்களின் நிறத்தில்தான் இருந்தது.

கோவர்த்தனமலையில் சொரிந்துகொண்டிருந்த நாங்கிலியின் அறுபட்ட முலையில் இருந்து   கொப்பளித்து வெளியேறும் குருதி,  மலையினையும் முகடுகளையும் கெத்கெத்தென அகோரமாய் மோதிக்கொண்டிருந்தது.  நீலம் பூத்த சர்ப்பத்தின் ஒற்றை நாக்கின் இருந்து வழிந்த அமுதத்தின் நினத்தினை வழித்து மண்டபத்தில் இருந்த அனைவரும் அயர்வான நேரத்தில் அருந்தி  சொட்டாம் போட்டு சுவைத்தார்கள்.  திரௌபதியின் துகில் உரியும் அதே நேரத்தில்தான் கைலாயமலையில் நீலகண்டனின் கழுத்தில் இருந்து இறங்கிவந்த சர்ப்பம்,  தனது பரிவாரங்களுடன் உடலை முறுக்கி தனது சட்டையினை உருவிப்போட்டது.  அதன் நிர்வாண உடம்பினை மோகித்ததும்தான் பிணங்கள் சுமந்துகொண்டிருக்கும் கங்கை நீலகண்டனின் கழுத்தை கவ்வி பிடித்தது.

நீலகண்டனின் தலைமீது மிதந்து ஓடிக்கொண்டிருக்கும் அத்தனை பிணங்களின் முகங்களும் துகில் உரிக்கப்பட்ட திரௌபதியின் முகச்சாயல்கள் இருப்பதலாயே அவற்றின் முகங்களை இருக்கமாக மூடி கட்டிமறைத்து வைத்திருந்தார்கள்.  தலைவலி கண்டுபோனான் நீலகண்டன்.  அவன் உடம்பும்  நீலம் கண்டுபோனது.  குழந்தைகளுக்காக தானிய குதிர்களாக சேகரித்து வைத்திருந்த திரொபதியின் இரண்டு முலைகளில் இருந்து பெருக்கெடுத்த ஊற்றுதான் கங்கை நதியாக சூடேறி கொப்பளித்து கொதித்து ஓடத்தொடங்கியது.

தனது நஞ்சுக்கொடியில் குழந்தைகளுக்காக பசுவின் ஈரலைத் தின்று போசாக்குகாக நிறைத்து வைத்திருந்த சொற்களை பொத்திக்காப்பதுதான் திரௌபதிக்கு ரணங்கொண்டு வந்தது.  பூமிக்கான பால்கொடியினை திரௌபதி தன்னுடனே சுற்றி வைத்திருந்தாள்.  சேலைத் தலைப்போடு வக்கிரமாய் இழுத்துப்போடுவதற்கு கட்டளை பிறப்பிக்கும் கண்ணன் எப்பொழுதும் போலவே மீண்டும் கெக்காளிக் கொட்டி சிரித்தான்.  நாட்டுச்சேவலின் புட்டத்தில் மலத்துவாரத்திற்கு அருகே வளைந்து தொங்கும் இறகுகளால்,  சர்பத்தின் உதட்டுச்சாயத்தினால் வரையப்பட்டதினைப்போலவே வாயைப் பிளந்து சிரிக்கும் கண்ணனின் நாக்கும் உதடும் சிவந்து அழகாக இருந்தது.

கண்ணனுக்கு தனது நஞ்சுக்கொடியில் திண்ணைப் போட்டு துரோணாச்சாரியாரை மரப்பலகையில் அமர்த்திவிடவேண்டும்போல திரௌபதி நினைத்துக்கொண்டிருந்தாள்.  தண்ணீரோடு மிதந்து போகும் திரௌபதியின் சேலைத் தலைப்பினை பற்றிக்கொண்டே கண்ணனும் வடக்கு பக்கமாய் நகர்ந்துகொண்டிருந்தான்.  பால்சுரக்கும் மடியில் கோமியத்தினை சுரந்தபடி பசுக்களும் அவனோடு தென்பட்டன.  பசுக்களுக்கான மேய்ச்சல் நிலங்களில் கோமியம் ஆறாய் ஓடிக்கொண்டிருந்தது.

திரௌபதியின் சேலையில் பூத்திருந்த அரளிப்பூக்கள் மண்டபத்தில் உதிர்ந்து விழுந்து மணம் வீசித் தொடங்கியதும்,  திரௌபதிக்கு வயிரெல்லாம் பிழிந்துகொண்டு வந்தது.  இடுப்பில் சுற்றப்பட்ட சேலைகளில் இருந்து வழியும் நீலம்பூத்த விதைகள் மண்ணில் விளைந்து விடக்கூடாது என்பதற்காக தனது உடலைப் பொத்திப் பொத்தி அடைத்தாள்.  அவை கண்ணனோடு சேர்த்து ஐந்து பேருமாக அவள் உடம்பினை அகழ்ந்து விதைத்த விதைகள்.  திரௌபதிக்கு அயர்ந்து வந்தது.  ஆடைகளில் மீதேரி வழியும் நிர்வாணத்தினை கண்களில் முளைத்து துருத்திக்கொண்டிருக்கும் நாக்கினால் சுவைக்கும் ஆண்குறி கொண்டவர்களில் இருந்து கிடைக்கும் விடுதலைக்குதான் அவள் பூமியாய் சுற்றிக்கொண்டே இருந்தாள்.  உடலோடு மலர்ந்த பூக்களில் இருந்து உதிர்ந்த விதைகள் திரௌபதியின் கால்களில் மிதிபட்டு வதங்கியதும்,  ஐந்து பேருக்குமான விதைப்பைகளை மதயானைகள் பெரும்பசிக்கொண்டு நிலத்தினை உதைத்து பிளப்பதுவாக மண்டபம் பெரும் செங்காட்டு புழுதி  மூட்டமாக இருந்தது.  தேர்வலம் வரும் அஸ்தினாபுரத்தின் வீதியெங்கும் செங்காட்டுப்புழுதி அல்லல்பட்டுப் பறந்தது.  உயிர் போகும்படியாக தங்களின் ஆண்குறிகளைப் இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு கெரா கெரா வென கத்தினார்கள் பாண்டவர்கள்.

திரௌபதிக்கு நிர்வாணம் ஆதூரமாக இருந்தது.  அவளின் நிர்வாணம் வெறும் ஆடைகளோடு தொடர்புகொண்டதாக இல்லை.  பாண்டவர்கள் எழுப்பும் கூக்குரல் சேத்துமடையாய் அள்ளிக் கட்டப்பட்டிருந்த அவளின் கருப்பை முட்டைகளை காட்டெலிகள் முன்னம்பற்காளால் குடைந்து பொந்து வைப்பதைபோல் இருந்தன.

திரௌபதி அரைபொழுதுக்குமேல் சுற்றி இருப்பாள்.  அவளது கண்களுக்கு முன்னதாக பூமியின் கண்கள் நிமிலம் பூத்து தள்ளாடிக்கொண்டு நாவறண்டு போனது.  திரௌபதியின் சேலையிலிருந்து பூத்து குலுங்கி உதிர்ந்த அரளிப்பூக்களின் வாசம் காற்றில் கமழ்ந்து வீசியது.  பசுக்களை தேடிச்செல்வதாக காட்டுப்பக்கம் போன கண்ணனின் கழுத்தைச் இறுக்கமாகச் சுற்றி நாகப்பாம்பு மண்டலம் போட்டுக்கொண்டதாக மண்டபத்தில் பேசிக்கொண்டது திரௌபதியின் காதுகளில் விழுந்தது.  பசுக்களோடு நீலம் பாவித்து கிடக்கும் கண்ணன் துவாரகையில் மூங்கில் காடுகளை துளையிட்டு மரணஓலமிட்டு ஊதுவதாகவும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.  அதை சிவப்புச் சொரியும் காட்டுப்பூக்களின்  சேலைகளாக மிச்சமாக இருந்த திரௌபதிகள் துவாரகையில் உடுத்திக்கொண்டார்கள்.

தலைசுற்றி மண்டபத்தில் அயந்து விழுந்தாள் திரௌபதி.  அஸ்தினாபுரத்து மண்டபத்தின் ஆண்குறிகளில் உடைந்த கண்ணாடி போத்தல்களின் முனைகள் முளைக்கத் தொடங்கின.  கண்ணாடித்துகள்கள் தடவப்பட்ட ஆணுறைகளை கைகளில் வைத்துக்கொண்டு  பூமியின் இடுப்பில் குந்திமாதேவியும் சுயம்வரத்திற்காய் அமர்ந்திருந்தாள்.  அஸ்தினாபுரத்துக் கருங்காட்டில் மலையினைப் பிளப்பதாகப்பதாக  பெருமழைக்குறி தெரிந்தது.


– க. மூர்த்தி

எழுதியவர்

க.மூர்த்தி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கல்லூரியல் ஆங்கிலத்துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.

கவிதைகள், நாவல்கள் எழுது இவர் மொழிப்பெயர்ப்புகளிலும் ஈடுபடுகிறார். கனலி, வாசகசாலை, கதவு, புதிய மனிதன் , போன்ற இதழ்களில் இவரின் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன.

இவரது நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள் :
கள்ளிமடையான் ( 2019, புலம் வெளியீடு), மோணோலாக் கதைகள் (2022, வெற்றிமொழி வெளியீட்டகம்)

நாவல்கள்:
பங்குடி (2022, வெற்றிமொழி வெளியீட்டகம்), மண்புணர்க்காலம் (2019)

மொழிப்பெயர்ப்பு நூல்கள் :
.ஆரண்ய தாண்டவம் ( பொன்னுலகம் புத்தக நிலையம் 2022) Feet in the Valley by Aswini Kumar Mishra ஆங்கில நாவலை தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார்.

RUGGED ROAD AHEAD (சமகால தழிழ் கவிதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு) ஒதிசா மாநிலம் Ministry of Culture ல் புவனேஸ்வரில் வெளியிடப்பட்டது)

கள்ளிமடையான் சிறுகதை தொகுப்பிற்காக அருப்புக்கோட்டை, மானுட பண்பாட்டு விடுதலைக் கழகம் விருது, பங்குடி நாவலுக்காக தமுஎகச வின் சு. சமுத்திரம் விருது, ஆரண்ய தாண்டவம் நூலுக்காக இராஜபாளையம், மணிமேகலை மன்றத்தின் சிறந்த மொழிப்பெயர்ப்பிற்கான விருது, RUGGED ROAD AHEAD நூலுக்காக திசையெட்டும் மொழிப்பெயர்ப்பு விருது ஆகியவை பெற்றிருக்கிறார். பல்வேறு சிறுகதைப் போட்டியிலும் பரிசுகளை பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
கௌதமன் நீல்ராஜ்
கௌதமன் நீல்ராஜ்
3 years ago

துன்பங்களைக் கூட இயல்பாய் உணர்த்தும் வகையில் சொற்களின் கட்டமைப்பு, அதனை நேர்த்தியாக ஆசிரியர் கையாளும் தேரணை இப்படி அருந்தமிழ்ச் சொற்களின் கோட்டைதனில் ஓர் குட்டிக் குரங்கு பசிக்கு இரைதேடி அலைமோதுவதைப் போன்ற தாகம், இந்த வாசிப்பில் விழிகள் படர வியக்க வைக்குமளவு காம ஓடை கரைபுளாது கலங்காது விரைந்தோட வரைந்திட்ட வல்லவருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்…

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x