23 November 2024
aayan

ட்சத்திரங்கள் நாலாபக்கமும் சரம் சரமாக தொங்கிக் கொண்டிருக்க கண்ணைக் கூசும் அந்த ஒளிவட்டம் மெல்ல மெல்ல விரிந்து நிலவாகி அதன் மூடி திறந்தது உள்ளிருந்து ஒரு உருவம் மங்கலாய் கையை நீட்டியது வா வா என்று அழைத்தது மெல்ல அதன் கையை பற்ற நினைக்கையில்  ‘ போகாதே போகாதே’  என்ற குரல்..

அம்மாதான் நின்று கொண்டிருக்கிறாள் முன்னை விட மெலிந்து கருத்து எலும்பும் தோலுமாய் போகாதே போகாதே திரும்பத் திரும்ப சொல்லுகிறாள்.

அதைத் தொடர்ந்து வேகமாகக் கதவு தட்டப்பட்டும் ஓசை.

“ஆயான்..எழுந்தாச்சா என்ன பண்றீங்க..?”

“சே..கண்டது கனவா? ” எரிச்சலானார் பரசு.

‘உடம்பெல்லாம் விண்ணென்று வலித்தது.இனி எழுந்து அடுப்பு பத்தவச்சு காப்பி போடணும். இதுக்குத்தான் ஒரு பொம்பிளை கூட இருக்கணும்’ கசங்கிய மனசை அதட்டி அடக்கிவிட்டு எழுந்தார்.

பாக்கியம் கையில் பால் குவளையோடு வாசலில் நின்றிருந்தாள்.

“பெரியாச்சி வீட்டுல தெவசம்.நாச்சி காய்கறி வாங்கியாந்துட்டானாம். ஆச்சி ஞாபகப்படுத்த சொன்னாக.”

” ஆமாம். மணி ஆறைத் தாண்டிவிட்டது. நான் வர்றேன். நீ போ.”  பாக்கியம் இன்னும் தயங்கியபடி அங்கேயே நிற்க.

“நேத்து மவளோட கொலுசு தொலைஞ்சு போச்சு.வேப்ப மரத்தடியில தான் விளையாடினாளாம். நானும் சல்லடை போட்டு சலிச்சு பார்த்திட்டேன். கிடைக்கல. ஆயான் ஒரு எட்டு வந்தா கிடைச்சிடும்”

ஆயான்  பூமியைப் பார்க்கப் பிறந்தாராம். அதனால் அவருக்குப் புதையல் யோகம் இருப்பதாக அம்மா சொல்வாள். அது உண்மையோ என்னவோ தினம் தெருவில் நடக்கும்போது எதையாவது கண்டெடுத்து விடுவார். இப்போதெல்லாம் யார் எதைத் தொலைத்தாலும் அவரிடம் தான் வருகிறார்கள்.

“தெவச வேலை நிறைய கிடக்கு.பார்ப்போம்”

முத்தம்மா வீட்டுக்காரர் தெவசம். பரசு போய் தான் தானத்துக்கு காய் எடுத்து வச்சு கூடமாட நிக்கணும். இன்னைக்கு சமையல் தடபுடலா இருக்கும். பருப்பு நெய்,இஞ்சி பச்சடி, பூவன் வறுவல் காராகருணை பொரியல் புடலை கூட்டு கொத்தவரை உசிலி அவரைக்காயும் தூதுருண்டையும் போட்ட பொரிச்ச குழம்பு வாழைத்தண்டும் ஆமவடையும் போட்ட மோர்க்குழம்பு அரிசிப்பாயாசம் அப்பளம் வடை னு பெரிய மெனு.நேத்தே லிஸ்ட் போட்டாச்சு.

முத்தம்மாவின் சின்ன பொண்ணு பக்கத்து தெருவிலிருந்து வந்து பக்குவமா சமைச்சிடும்.

நல்ல சாப்பாடு சாப்பிட்டே பல நாளாச்சு. நாக்கு ஊறியது பரசுக்கு.

பாலையும் தூளையும் கொதிக்க வச்சு வடிகட்டற சமயம். மறுபடியும் கதவு தட்டற சத்தம்.

முத்தம்மா பேத்தி கௌசி எட்டிப் பார்த்தாள்.

“ஆயான்.. மாவிலை இரண்டு கொத்து வேணுமாம்.”

“கொண்டுவரேன் போ.”  சொல்லி முடிப்பதற்குள் உள்ளே வந்துவிட்டாள்.

“ஆயான்.. சேப்புப்பழம் பறிச்சுக்குறேன்.” என்றபடி கொல்லைக்கு ஓடினாள்.

பரசுவுக்கு எரிச்சலாய் வந்தது. அவருக்கு குழந்தைகளையே ஆகாது. ஏதாவது குரங்குத்தனம் பண்ணுவார்கள். பத்து வயசு ஆகப்போகுது. அவங்க பாட்டிக்கெல்லாம் இந்த வயசில கல்யாணமே ஆயிடுச்சு.

“ஏ.பாப்பா.வீட்டுக்குப் போறியா. அப்பாகிட்ட சொல்லி அடிவாங்கி வைக்கவா..”

அவர் அதட்டலில் பழிப்புகாட்டி ஓடிப் போனாள்.

வீட்டில் போய் ஆயான் திட்டறார்ன்னு மோலாசு பண்ணும். மூங்கில் ப்ளாச்சு போட்ட தட்டியை இழுத்து பூட்டிவிட்டு சாவியை இடுப்பில் செருகிக் கொண்டார்.

வாங்க ஆயான். இன்னைக்கு சமைக்கிற வேலையில்லை. நாச்சி நக்கலடித்தான்.

“பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. இத்தனை வருஷமா காய் வாங்கற. தானத்துக்கு கீரைத்தண்டு வைக்கணும்னு புத்தியில்லை.”

சரியான இடத்தில் பத்த வச்ச திரி.. முத்தம்மா வெடித்தாள்.

“தீவட்டி.கொஞ்சங் கூடப் பொறுப்பில்லே..”

நாச்சி முகஞ்சுருங்கி நகர..

“கோவில் வாசலில் இருக்கும்.போய் வாங்கிட்டு வா.”

நாச்சி சட்டென தலையைத் தூக்கி முத்தம்மா பெண் வள்ளியிடம் சாடை காட்டினான்.

பரசுவுக்குத் தெரியாமலில்லை. கோவில் வாசலில் புதிதாய்க் கடை போட்டிருக்கும் அஞ்சலையை அவர் அடிக்கடிப் பார்ப்பது இவர்களுக்கு அவலாயிருக்கிறது.

நேற்று ராத்திரி அஞ்சலைக்கு சாப்பாடு கொடுக்கப் போனபோது நாச்சி முக்காடு போட்டுகிட்டு பின்னாடியே வந்து வேவு பார்த்தான்.

அஞ்சலைக்கு மிஞ்சிப் போனா நாப்பது வயசுக்குள்ள இருக்கும். கறுப்புன்னாலும் களையா இருந்தா. புருஷன் செத்துப் போனதும் வழி தெரியாம கோவில் மண்டபத்தில் ஒண்டியிருந்தவள்

காய்கடை போட்டு பொழைக்கிறாள்.

பத்துநாளைக்கு முன் பரசு கிணற்றடியில் வழுக்கி விழுந்தார். காலில் சுளுக்கு வந்து வலி பின்னியெடுத்தது.அப்போதும் நாச்சியோ வேறு யாரோ கண்டுக்கல. ஆனால் அவர் விந்தி விந்தி நடப்பதைப் பார்த்து அஞ்சலை பதறினாள். எண்ணெய் தடவி சுளுக்கெடுத்து விட்டாள்.

ஏனோ அவருக்கு தேவானை ஞாபகம் வந்தது. அவளும் அப்படித்தான். சின்ன விஷயத்துக்கெல்லாம் பதறுவாள். ஆனால் அம்மா அவளிடம் பரசு இணக்கமா இருக்கிறதை என்றுமே விரும்பியதில்லை.

மதியம் சாப்பாடு முடிஞ்சதும்  “அடுத்து ஆயான் கல்யாண சாப்பாடு தான்..”

நாச்சி மறுபடியும் வம்பிழுத்தான்.

ஆயானுக்கு எழுபது வயதிலும் கிண்ணென்று இருப்பார். காது கடுக்கனும் நெற்றியில் விபூதி பட்டையும் பார்க்க கெடுபிடியா இருக்கும்.கடுகடுவென்ற அவர் தோற்றம் பார்ப்பவரை பயமுறுத்தி தள்ளியே வைக்கும்.

பதினெட்டு வயது இளைஞனான நாச்சியை அவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. பொதுவாக அவருக்கு இளைஞர்களைப் பிடிப்பதில்லை.

” பெரியவங்க சின்னவங்கனு மட்டு மரியாதையில்லாம என்ன பேச்சு? போய் ஒழிச்சு போடு.”

முத்தம்மா கடிந்தாள்.

ஆயான் போனதும் வள்ளி முணுமுணுத்தாள். ” ஆயான் சரியில்லை மா.இந்த வயசில ஏன் புத்தி இப்படி போகுது?”

“உனக்கு ஒண்ணும் தெரியாது. பத்து வயசில கோதாவேரி  பரசுவை பிடிச்சிட்டு எங்க வீட்டு வாசலில் நின்னுச்சு. புள்ளைக்காகவே வாழ்ந்த பொம்பளை ..  எங்க அண்ணன் புடிவாதத்தில தேவானையை பரசுவுக்கு கட்டிவச்சது. இரண்டுபேரும் ஆசைபாசையாத்தான் இருந்தாங்க.ஆனா கோதாவேரி மருமகளை பாடா படுத்தி வச்சது.ஒருநாள் கொடுமை தாங்காம தேவானை குளத்தில இறங்கிடுச்சு. அன்னையிலிருந்து பரசு தனியாத் தான் இருக்கார். யாரும் ஒரு குறை சொல்ல முடியாது. சும்மா புரளியைக் கிளப்பாம வேற வேலையிருந்தா பாருங்க”

“ஒண்டியாளு தான் சமைக்கிறதை மட்டுமில்ல மாங்காய் தேங்காயெல்லாம் அவளுக்கு கொண்டு கொடுக்கிறாரு. உன் மாப்பிள்ளையே ரெண்டு தடவ கோயிலடியில பார்த்தாங்களாம். ” வள்ளி போகிறபோக்கில் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

அரசல்புரசலாகத் தெருவெல்லாம் இதே பேச்சாத்தான் கிடந்தது.

பரசு காலையிலும் மாலையிலும் கங்கம்மா வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்து ஊர்கதை பேசுவார்.வள்ளியோ முத்தம்மாவோ குழம்பு ரசம் இட்லி தோசை னு ஏதாவது கொடுப்பார்கள்.

கொஞ்ச நாட்களாக அதிகம் வருவதில்லை.

அன்று மாலை அவர் வந்ததும் நாச்சி தான் கத்தினான். “ஆயானோட கடுக்கனைக் காணோம்.”

ஆயான் கடுங்கோபத்தோடு அவன் முதுகில் பட்டென்று அடித்தார். பிறகு எழுந்து வீட்டுக்குப் போய்விட்டார்.

மறுநாள் பாக்கியமும் சொன்னாள். அஞ்சலை ஊரைவிட்டு போயிட்டாளாம்.

ஆயான் கதவைத் திறக்கவேயில்லை. அன்ன ஆகாரமில்லாம உள்ளே கிடந்தா என்னாகும்?

நாச்சியோடு போய் வள்ளி தான் கதவைத் தட்டித் திறந்தாள்.

உடம்பு அனலாய் சுட ஆயான் சுருண்டு படுத்திருந்தார். தலைமாட்டில் இற்றுப்போன மஞ்சள் நிற பட்டுப்புடவை நிறம் மங்கிக் கிடந்தது.


மதுரா

எழுதியவர்

மதுரா
புனைப்பெயர் மதுரா. இயற்பெயர் தேன்மொழி ராஜகோபால்.
சொல் எனும் வெண்புறா, பெண் பறவைகளின் மரம் என்ற இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. பிராயசித்தம் என்ற சிறுகதை தொகுப்பும் வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார். இவரது படைப்புகள் வெகுஜன பத்திரிகைகள், மின்னிதழ்கள், இணைய இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x