கணவதியின் விழிகள் மூடிக் கிடந்தன. கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆகியிருந்தது. அவனது ஆன்மா தாகித்திருந்தது. வீட்டின் ஒதுக்குப்புறமாயிருந்த மூலைக்குள் பறை ஒரு சொல்லும் பேசாமல் கிடந்தது. வேலியோரம் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை. அமைதியாய்க் கிடக்கிற வீடு. வீதிகளில் சில விடலைப் பையன்கள் தோரணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். மேலிருந்து ஓரிரண்டு வேப்பம் இலைகள் காற்றில் சுழன்று வீழ்ந்தன. வானத்திலிருந்து உதிர்கின்ற கண்ணீர்த்துளிகள் மாதிரி. யாரோ வானத்திலிருந்து எட்டிப் பார்க்கிறார்களோ? வெளியிலிருந்து கொஞ்சக் கொஞ்சப் பேராக சனங்கள் வந்து குழுமுகிற போது எழுகின்ற ஒப்பாரிச் சத்தத்தைக் கூறு போட்டு எழுந்து, அந்தப் பறையை எடுத்துக் கை வலிக்க அடிக்க வேண்டும் போலக் கணவதிக்குத் தோன்றியது.
எவ்வளவு ஆழமாக ஒவ்வொரு மரணங்களின் வலியையும் உணர்ந்து தவித்து அந்தத் தோற்கருவி மீது இவனது அடி விழும். ஒவ்வொரு செத்த வீடும் விடிகாலையிலேயே இவனுக்கு அறிவிக்கப்பட்டு விடும். முதுகை அழுத்தும் குழந்தையெனப் பறையினைத் தூக்கி எடுத்துக் கொண்டு அதிகாலை கிளம்பினால் பிறகு மதியம் வரை, சில வேளை மாலை கழிந்த பிறகு தான் வீடு திரும்ப முடியும். ஒவ்வொரு மரணத்தினதும் வலியின் அளவுகள் சின்னச் சின்ன வித்தியாசத்திலிருக்கும்.மரணம் ஒரு புகை போல் நெளியும் தருணங்களில் அதனோடு இழையும் இந்தப் பறையொலி இவனது கரங்களில் சன்னமாக ஒலிக்கத் தொடங்கும் போது வலி அப்பிய கண்ணீராடு பாதங்கள் உள்ளே நுழையத் தோள்கள் துயரில் கனக்கும்.
எண்ணி நூற்று இருபத்து மூன்று மரணங்கள். இருநூற்றுப்பத்துக் குடும்பங்கள் இருக்கின்ற அவனது ஊரைத் தாண்டி இன்னும் ஐந்து ஊர்களுக்கு அவனைத்தான் அழைத்தார்கள். எந்த மரண ஊர்வலமும் அவனின்றி நகர்ந்ததில்லை. எந்த வீட்டிலும் வேலியோரத்துப் பூவரசுக்குக் கீழ் அவனுக்கொரு இடம் கிடைக்காமல் போனதில்லை.
எத்தனை சாவுகள்?
அத்தனையும் அவனுக்கு ஒரு கொண்டாட்டம்.
சாவு வீட்டுக்கு வருபவர்கள் அழாமல் போகக் கூடாது.
அவர்களை அழவைக்கும் முகமாக அவனது பறை விட்டு விட்டு உயிர்ச் சலனங்களை உலுப்பும்.
எந்த மரணங்களில் யார் அழுதிருக்கிறார்கள் ?
யார் மனத்தைக் கல்லாக்கியவர்கள்?
யார் கண்ணீரல்லாத ஒப்பாரிகளை ஒப்புக்கு ஒப்பித்தவர்கள்?
அதெல்லாம் வெளியிலிருக்கிற அவனுக்குத் தெரியாது.
அவனது பறையொலிக்குப் பிறகு ஓங்காரமாய் எழுகின்ற கதறல்கள் அவன் செவிகளுக்குப் பழகிப் போனவை
அது ஒரு இசை போல் இருக்கும் அவனுக்கு.
சாவு என்பது அது தான்.
உறவுகளின் கண்ணீர், ஒப்பாரி, இவனது பறையொலி. அதை விட வேறென்ன?
ஒப்பாரிகளோடு மரியாதையாய் ஒவ்வொரு ஆன்மாவையும் அனுப்பி வைக்கிற போது ஏற்படுகிற ஆன்ம ஈடேற்றத்துக்கு நிகராக எதைச் சொல்ல முடியும்?
திண், திண்ணென அவனது பறை அதிரும் போதெல்லாம் ஒரு லயம் இருக்கும். ஆன்மாவைத் துணுக்குறச் செய்கின்ற ஒரு கிலி அதற்குள்ளிருந்து எழுந்து ஊரார் வீட்டுக் கதவுகளைத் தட்டும். அது அநேகமாக சில காலங்களுக்கு முற்பட்டது.
காலங்களை எப்படிப் பிரிப்பது?
யுத்தத்திற்கு முன், யுத்தத்திற்குப் பின் . முதலாம் கட்ட ஈழப்போர், இந்திய அமைதிப்படைக் காலம், இரண்டாம், மூன்றாம் கட்ட ஈழப் போர், என ஊரார் பல்வேறு காலகட்டங்களாக வரலாற்றைச் சுருக்கி வைத்திருந்தார்கள். யுத்தத்திற்கு முன்னர் நிகழ்ந்த மரணங்கள் சாசுவதமானவை. ஆன்மா வாழ்ந்து களைத்து ஓய்ந்து இளைப்பாறலுக்குப் போகிற நேரம். அப்போது கணவதி இளமையின் முறுக்கிலிருந்தான். அப்புவிடம் தொழில் பழகி விட்டுத் தனியே சாவு வீடுகளை நோக்கிப்போய்க் கொண்டிருந்தான்.
ஒரு உற்சாகக் கிறுகிறுப்பு விரல்களில் அலைந்து கொண்டிருக்கும். தாளம் மனசுக்குள் குதியாட்டம் போடும். ஆனால், முதன்முதல் அப்புவோடு கூடப் போனபோது அந்தக் குதியாட்டம் இருந்திருக்கவில்லை. இவர்கள் போய்ச் சேர்ந்தவுடன், அந்த வீட்டில் கேட்ட ஒப்பாரி, அது கண்ணீர் அற்றதாய்த் தானிருந்தாலும் அவன் ஒரு துணுக்குறலுக்கு ஆட்பட்டான். அப்பு பறையை அடிக்கத் தொடங்க, அது சற்றே பழகிப் போய் அந்தத் தாளகதிக்கு மனம் பழகத் தொடங்கிற்று. இறப்பின் அதிர்வுகளிலிருந்து மீள்வதற்கான வழியாக அந்த இசையின் வழிந்தோடலில் அவன் மனம் லயிக்கத் தொடங்கினான்.
திண், திண்ணென்ற ஆத்மலயத்தில் வாழ்வு முழுமைக்குமான களைப்பு செறிந்து இறங்க மனம் ஆறுதலுறும். ஒரு கடைத்தேற்றல் அந்த வாசிப்பில் இருக்கும். சாவு வீட்டில் உலவிக் கொண்டிருக்கின்ற அந்த ஆன்மாவின் இறுதி மூச்சு பறையின் த்வனியைச் சுமப்பதால் மிக இலேசாகி காற்றில் கரைந்து விடுமென அவன் நம்பினான். எந்த ஒரு ஆன்மாவினதும் கடைத்தேற்றலும் அவனின்றி நிகழுமா? அந்தக் கடைத்தேற்றலுக்கு அவர்கள் தருகின்ற வெகுமதி அவன் குடும்பத்தின் வயிற்றை முழுமையாக நிரப்பாவிட்டாலும் அவனது ஆன்மாவை நிறைக்கப் போதுமானதாய்த் தானிருக்கிறது.
அவனளவிற்கு அவன் குலத்தில் யாரும் பறை மீது அத்தனை தீவிர வெறி கொண்டதில்லை. அவனது பிள்ளைகளில் யாரும் பறையைத் தொட் டுக்கூடப் பார்க்கவில்லை.அவர்களுக்குப் படிப்பில் நாட்டம் அதிகமாயிருந்தது.
“உன்னை மாதிரிப் பிள்ளைகளைக் கஷ்டப்படுத்தாமல் படிக்கிற பிள்ளையளைப் படிக்க விடு கணவதி“
சின்னவனை ஒரு செத்த வீட்டுக்குப் பழக்கியெடுக்க இவன் கூட்டிக் கொண்டு போயிருந்த போது, ஏகாம்பரம் மாஸ்டர் சொல்லியிருந்தார்.
அவனுக்கு ஏக்கமான ஏக்கம்.
இந்தப் பறையின் காலம் அவனோடு முடிந்தே போயிற்றா?
பிள்ளைகள் யாரும் விருப்பப்படவுமில்லை.
அவர்கள் படித்தார்கள். கடைசியில் நல்ல வேலைக்குள் சேர்ந்த பிறகு அவனைப் பறை எடுப்பதற்கு அனுமதிக்கவுமில்லை.
“நான் என்ன வயித்துப் பிழைப்புக்குப் பறை அடிக்கிறதா நினைக்கிறியளோ? அது என்ரை உயிர். இந்த ஊரிலை ஒரு உயிர் போறதெண்டா அந்த ஆன்மாவை வழியனுப்பி வைக்கிற புனிதமான தொழில். அதை ஆர் நினைச்சும் நிப்பாட்ட ஏலாது.”
அவன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறினான்.
கடந்த காலங்கள் கண் முன் நின்றன. சில மரணங்கள் பறை இல்லாமல் நிகழ்ந்தன. சுற்றிவளைப்புக் காலங்கள், இடப்பெயர்வுகள், ஊரடங்குகள்
மௌனமாகக் கடந்த மரணங்கள்.
சடசடவென்ற துப்பாக்கிகளின் கதறலோடு ஒரு மரணம்.
வீதியிலே கிடந்தான் ஒருவன்.
இவன் பார்க்கப் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த சிறுவன், மீசை அரும்ப முதல் மண்ணை முத்தமிட்டுக் கிடந்தான்.
ஹோவென்ற கதறலொலி நிறைகின்ற வீடு.
திண்,திண்… அவனது பறையொலியில் வைராக்கியம். ஓயாமல் அடித்துக் கொண்டிருந்தது பறை. அந்தச்சிறுவன் இப்படிப் போயிருக்க வேண்டியதில்லை. நீண்டு கிளைத்திருக்க வேண்டிய அவனது ஆயுளின் எதிர்காலத்தைத் துண்டாக்கி வெட்டி எறிந்த காலத்தைச் சபித்துப் பறை ஆழத்தில் முங்கி, முங்கி எழுந்தது.
அதற்குப் பிறகான முப்பதாண்டுகள் விழுங்கிய பல்லாயிரம் இளைஞர்களின் விதியை ஏங்கி நினைத்துப் பெருகியது பறையின் துயர்.
நெற்றியில் துளிர்த்த வியர்வை நிலத்தில் வழிய, வழிய அடித்துக் களைத்து முதன்முதல் சாராயத்தை நாவில் ஊற்றினான் கணவதி.
அதன்பின் அடுக்கடுக்கான காலங்கள் உருண்டன.
ஊர், ஊரை விட்டுப் பெயர்ந்தது.
போன இடத்தில் சொந்தமில்லாத இடத்தில் சில சாவுகள்.
வெறுமையாய் அடித்தது பறை.
அவன் எங்கிருந்தாலும் அவ்வூரவர்கள் அவனைத் தேடி வருவார்கள்.
அவர்கள் எங்கெங்கோ இருந்தாலும், கணவதி எங்கிருக்கிறானென்பதை எப்படி, எப்படியோ அவர்கள் அறிவர். எந்த இடத்தில் சாவு நிகழ்ந்ததென்பது அவனுக்கும் தெரிய வரும்.யாரும் அழைக்க வேண்டியதில்லை. ஐந்து ஊர்களுக்கும் அவன் சொந்தக்காரன். அந்த ஊர்களுக்குரியவர்களின் இறப்பில் அவன் இறுதிக்கடன் ஆற்றாவிடின் அவன் என்ன மனிதன்?
அவன் அறிய ஊர் திரும்பிய காலத்தே அவனுக்குத் தெரியாமல் போய் விட்ட , அவன் அறிந்த மனிதர்களின் இறப்பு இரண்டு. ஊர் திரும்பிய நாளில் அதை அறிந்து கொண்ட போது அவன் வீட்டுக்குப் போனவுடன் பறையை எடுத்து அடிக்கத் தொடங்கினான். சூரியனைப் பார்த்து அவன் பறை மெதுமெதுவாய் அடிக்கத் தொடங்கி உச்சத்வனியை எட்டியது.
ஊருக்குள் யார் வீட்டில் இறப்போ எனப் பதகளித்த சனங்கள், ‘கணவதி தன்ரை வீட்டிலை பறை அடிக்கிறான்‘ என உணர்ந்து மனம் லேசாகிப் போனார்கள்.
நீண்ட நேரமாக அவன் அடித்துக் கொண்டேயிருந்தான்.
இறந்த உயிர்கள் எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கும். அவற்றை ஒழுங்காக வழியனுப்பி வைக்க முடியாமையின் பொருமல் அவனது ஒவ்வொரு அடியிலும் பிரதிபலித்தது.
யாரிடமும் காசு வாங்காமல் யார் வீட்டுக்கும் போகாமல் அவன் தன்னிஷ்டத்துக்குப் பறையை அடித்துக் கொண்டேயிருந்தான். அந்தப் பறையொலியில் சொந்தங்களின் நாட்பட்ட அழுகை தொக்கிக் கிடந்தது. ஒப்பாரி, விக்கி, விக்கி விட்டு விட்டு எழுந்தது. கை வலிக்க அடித்து விட்டு ஆங்காரமாய் அவன் விழுந்தான். பட்டை சாராயம் அவனை இரண்டு நாள்களுக்கு எழும்ப விடவில்லை.
இரண்டு வாரங்கள் கழிந்த போது ஊர் துப்புரவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
முத்தம்மா ஆச்சியின் வளவுக்கு யாரும் திரும்பி வரவில்லை. அவர்கள் அப்பால், அப்பால், அப்பாலுக்கு அப்பால் ஏகி விட்டிருக்க வேண்டும். பற்றைகள் துப்புரவாக்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் கூக்குரலிட்டபடி வந்தார்கள். குடிசைக்குள் மட்கிய எலும்புக்கூடு ஒன்று கிடந்தது.. நைந்த சேலை ஒன்று இடையில் சுற்றிக் கிடந்தது.
முத்தம்மாக் கிழவி இடம் பெயராமல் அங்கேயே கிடந்து முடிந்து விட்டாள்.
கணவதி அந்த எலும்புக் கூட்டுக்கு முன்னால் நின்று பறையடிக்கத் தொடங்கினான்.
ஊர் கூடி விட்டது.
எவ்வளவு நாள் அங்கு அந்த உடல் நாதியற்றுக் கிடந்திருக்கும்? அந்த உயிர் இப்போது எங்கு அல்லாடிக் கொண்டிருக்கும்?
ஊர் பதைத்தது.
அரச இயந்திரத்தின் விசாரணைகள், விளக்கங்களெல்லாம் தொடர்ந்து கொண்டிருக்கக் கணவதி பறையை அடித்தான். தனிமையும், முதுமையும், பயம் கொடுத்த காலங்களில் முத்தம்மா இரவிலும், பகலிலும் பசியும், பட்டினியுமென உழன்ற காலங்களை நினைத்து நினைத்துப் பறை குமுறியது.. திண், திண்ணெனக் காற்று அந்த எலும்புக் கூட்டில் மோதிக் கொண்டிருந்தது.
கணவதி அன்று முழுக்க முத்தம்மா ஆச்சிக்காகத் தன் விரல்களை வலிக்க, வலிக்க அடித்துக் கொண்டிருந்தான்.
எங்காவது அந்த உயிர் அல்லாடுகிறதா?
வானத்தில் திரிகிற முகில்களுக்குள் உறைகிறதா?
கரு மழையெனப் பொழிந்து மண்ணில் ஊறி இந்த ஊருக்கு நீண்ட சாபத்தைத் தரப் போகிறதா?
வயிற்றுக்குள்ளிருந்த கூர்ந்த பசியின் வாய்க்குள்ளிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறதா முத்தம்மாவின் உயிர்?
அல்லது துப்பாக்கிச் சன்னம் கிழித்த குருதியில் மிதக்கிறதா?
மீன்களே, அந்த உயிர் கடலுக்குள் அலைந்து கொண்டிருந்தால் பிடித்து வந்து தாருங்கள்.
பறவைகளே, அந்த உயிரைக் கொத்திக் கொண்டு வந்து விடுங்கள். அலைய விடாதீர்கள்.
அதன் ஆறாத காயங்களை ஆற்றி அனுப்ப வேண்டும்.
கணவதியின் பறை எங்கெங்கோ அலைந்து யார், யாரிடமோ எல்லாம் மன்றாடியது.
மறக்கப்பட முடியாத இன்னொரு மரணமாயிருந்தது கூச்சல்களாலும், கிளர்ச்சிகளாலும் கொதியுண்டிருந்த ரத்னாவின் மரணம்.
உடலே கிடைக்காமல் போன மரணம். மரணத்தின் பொறி எங்கிருக்கிறதென்று தெரியாமல் அவள் மாட்டிக் கொண்ட தருணம். அவளுக்கான சாந்தியை கணவதியே நினைத்தாலும் அவளுக்கு வழங்கியிருக்க முடியாது. கணவதியின் பறை மௌனித்திருந்தது.
ஆனாலும் ஒரு பௌர்ணமி இரவின் போது வைரவர் கலையாடிய போது ஒலித்த வேகத்தில் அந்தப் பறை ஒலித்தது ரத்னாவுக்காகத்தான். அவளுக்காக மட்டுமல்லாமல் அவளைப் போலக் கொத்துக் கொத்தாக உயிரை விட்ட பல்லாயிரம் பேருக்காக அந்தப் பறை ஆயுள் முழுக்க ஒலித்தாலும் போதாது போல ஒலித்தது.. அவள் அவனது ஊரைச் சேர்ந்தவள் என்பதால் அவனுடைய பறைக்கு அவளுக்கென ஒலிக்கப் பிரத்தியேக உரிமை இருப்பதாகக் கணவதி உறுதியாக நம்பினான்.
“உவன் கணவதி, நேரங் கெட்ட காலத்திலையெல்லாம் பறையடிச்சு மனிசரிண்டை நிம்மதியைப் பாழடிக்கிறான்“
அயலவர்கள் யாரோ பிள்ளைகளுக்குச் சொல்லியதன் விளைவு “வயசான காலத்திலை உதுகளை ஒரு ஓரமா வச்சிட்டு இருங்கோவன் அப்பு” என்பான் மூத்தவன்.
கணவதி எதுவும் பேசுவதில்லை. பறையைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும். அயலவர்களுக்கு அவர்களது இறுதி நாளை நினைவூட்டி விடுகிறதா பறை? அதனால் தான் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாமலிருக்கிறதா…?
அந்தச் சப்தம் அவர்களை நிலைகுலைக்கிறதென்றால் அதில் சில வேளை உண்மை இருக்கக் கூட்டும்.
அந்த ஒலியில் கணவதியால் கேட்க முடிகிற உணர்வுகளின் நுண்ணொலியை அவர்களால் எப்படிக் கேட்க முடியும்? உலகாயத நினைவுகளில் சிக்கித் தவிக்கும் அவர்களுக்குப் பறையொலி என்பது சாவு வீட்டின் ஒரு அடையாளம். ஊரவர்களுக்கு மரணத்தை அறிவிக்கின்ற ஒரு ஒலிச் சாதனம். அதை விட்டால் அவர்கள் அதை எவ்விதம் பொருள் கொள்ளுவார்கள்?
கணவதி கடந்த இரவில் உறங்கவில்லை. நினைவுகள் பொறிந்து கொண்டு வந்தன.
அவன் கண்ட சாவுகள், அவற்றை அவன் வழியனுப்பி வைத்த விதங்கள்.
அந்த ஊரில் அவனுடைய பறை இல்லாமல் எந்த ஒரு சா வீடும் நிகழ்ந்ததில்லை. அப்படி நிகழ்ந்தாலும் அதற்குப் பிறகு அவன் அதற்குப் பரிகாரமாகப் பறை அடித்து அனுப்பி வைத்திருக்கிறான் அவ்வுயிர்களை. இந்த உலகத்தின் உயிர்களைப் பறை அடித்து மறுமைக்கு அனுப்பி வைக்குமுகமாகப் பூமிக்கு அனுப்பி வைக்கப் பட்டவன் அவன்.
பறை இல்லாமல் ஒரு உயிர் சாந்தி பெறுமா என்ன?
அவன் வரைக்கும் அந்த நான்கு பேர் தவிர, மற்றெல்லா மரணங்களிலும் அன்றன்றைக்கு அந்தந்த மரண நிகழ்வுகளின் போதே அவர்களைப் பறை அடித்து அனுப்பி வைத்திருந்தான். அந்த நான்கு பேருக்கும் சற்றுத் தாமதித்தாலும் கூடத் தன் கடமையைச் செய்திருந்தான். இனி, அவன் எதற்கு?
விடிகாலை கணவதி எழுந்திருக்கவில்லை. அவனது மரணத்தை அறிவிக்க எந்தப் பறையொலியும் இல்லை. மூலைக்குள் பறை அவனைப் போலவே மல்லாந்து கிடந்தது. வெளித் தோரணங்களைப் பார்த்து ஓரிருவர் வந்தார்கள்.போனார்கள். ஊர் நாகரீகமாகி விட்டது. யாருடைய ஒப்பாரியும் இல்லை.
“என்ன நடந்தது?”
“வயசு போட்டுது, இனிப் போற வயசு தானை“
உரையாடல்கள் முற்றத்தில் நீள்கின்றன. அதிகம் பேரில்லை.
பறை அடிப்பவனுக்கு அத்தனை பேர் திரள்வார்களா என்ன?
பிள்ளைகளோடு வேலை செய்பவர்கள் கூட்டமாய் வந்து போனார்கள்.
ஊரவர்கள் ஒற்றை,ஒற்றையாய் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போனார்கள்.
வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிய போது பாடை தெருவுக்கு இறங்கியது.
எந்த ஒரு ஒலியுமில்லாத மௌனம். அதைச் சீர் செய்ய வெடிகளைக் கொழுத்திப் போட்டுக் கொண்டு பதினைந்து பேருடனான ஊர்வலம் சுடுகாட்டை நோக்கி நகர்ந்தது.
சற்றுத் தூரத்தில் முத்தம்மாவின் வளவு. அங்கு முத்தம்மாவின் பேரனின் குடும்பம் மீளத் திரும்பியிருந்தது. அவளது பூட்டன் இடுப்பில் கை வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். புருவங்கள் நெரியப் பார்த்துக் கொண்டிருந்தவன் திடுமென உள்ளே ஓடினான். சில நிமிடத்துளிகளின் தேய்வில் பாண்ட் அணிக் கோஷ்டியொன்றின் ட்ரம் வாத்தியத்துடன் தெருவுக்கு வந்தான். கணவதியின் பாடை சுமந்த சிறு ஊர்வலத்தை நோக்கித் தொம், தொம்மென அந்த வாத்தியத்தை ஒலித்தவாறு அவன் நடந்தான். ஊர்வலம் நின்று சற்றுத் திரும்பிப் பார்த்தது. அவன் முன்னால் சென்றபடி தொடர்ந்து அதனை அடித்துக் கொண்டு நடந்தான். காற்று ஒரு தரம் அதிர்ந்து பின் அசைந்தது. வேலியோர மரங்களிலிருந்து சிறு துளிர்கள் உதிர்ந்தன. முகிலிலிருந்து குளிர்த் துளிகள் கீழிறங்கிப் பூமியை முத்தமிட்டபோது நிலத்தில் ஆசுவாசமாக ஒரு புன்னகை மலர்ந்தது. அந்தச் சிறு பையனின் இறுகிய முகத்திலிருந்து பறையின் த்வனி மெல்ல நழுவி கணவதியின் ஆன்மாவைத் தேடிப் பயணப்படத் தொடங்கியது.
எழுதியவர்
-
இலங்கை - யாழ்ப்பாணத்திலுள்ள சாவகச்சேரி பகுதியைச் சார்ந்தவர் தாட்சாயணி. இதுவரை 7 சிறுகதைத் தொகுதிகளும், ஒரு ஆன்மிகக் கட்டுரைத் தொகுதியும்; ஒரு கவிதைத் தொகுப்பும் வெளி வந்துள்ளன.
முதல் சிறுகதைத் தொகுதி 'ஒரு மரணமும் சில மனிதர்களும்' 2005 இல் ஞானம் விருது பெற்று வெளியிடப்பட்டது. 2007 இல் வெளியான 'இளவேனில் மீண்டும் வரும்' வட மாகாண இலக்கிய விருது பெற்றது. 2019 இல் வெளியான 'ஒன்பதாவது குரல்' இலங்கை அரசின் சாஹித்திய விருதைப் பெற்றுக் கொண்டது. 2021 இல் தமிழகத்தின் கடல் பதிப்பகத்தின் மூலம் 'வெண்சுவர்' தொகுதி வெளியாகியுள்ளது. 2022 இல் ஸீரோ டிகிரி பதிப்பகம் நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது குறுநாவல் 'தீநிழல்' பரிசு பெற்றது.
இதுவரை.
- கதைகள் சிறப்பிதழ் 2023 - II3 September 2023வசியம்
- கதைகள் சிறப்பிதழ் - 20221 August 2022த்வனி
அண்மைக்காலங்களில் நான் வாசித்த கதைகளுள் அற்புதமான ஒரு கதை. கவித்துவம் பொற்சரிகையாக கதையின் கரை எல்லாம் ஒளிர்கிறது.
கணகளை மூடினால் காதினுள் ஒலிக்கத் தொடங்குகிறது பறை. வேறென்ன வேண்டும் உயிரை அசைக்க வல்ல எழுத்துக்கு.? 👏மனம் பொங்கும் மகிழ்வும் நல்வாழ்த்துக்களும் தாட்சாயணி, என் இனிய சினேகிதி💕💐
Excellent narration
கண்கள் பனிக்காமல் இக்கதையைக் கடத்தல் அவ்வளவு எளிதானது அல்ல. அந்தத் த்வனி சிறுவனால் உயிர்பெறும் நேரம் உடல் சிலிர்த்து விட்டது. அற்புதமான கதை சொல்லல் முறை. காலமாற்றங்கள் எவ்வளவு இழப்புகளை ஏற்படுத்துகின்றன.