1
நீருக்கு பதிலாக பாதரசத்தை கரும்பச்சைஇலைகளின் மேல் பரவலாகத் தெளித்து விட்டாற்போல் வளர்பிறை பௌணர்மி நிலவின் ஒளியை வாங்கி பிரதிபலித்துக் கொண்டிருந்தது பூவுலகு.
அடர்ந்த பின்மாலை அமைதியை மீறி ஆங்காங்கே தனக்கான மரக்கிளையை தேர்ந்தெடுத்து அமர்ந்து இணையைத்தேடி அகவிக்கொண்டிருந்தன மயில்கள். நீரோடையில் கால்களை நனைத்த வண்ணம், தலைநீட்டித் தள்ளாடும் தாமரையென வெளியே குளிர்ந்து உள்ளுக்குள் கொதித்துக்கொண்டிருந்தாள் மிருதுளை. ’எவ்வளவு திமிர்! ஆணாதிக்கம்! சொல்வது ஒன்று செய்வது ஒன்று. இந்த ஆண்களே இப்படிதான். நம் எதிரே இருக்கும் பொழுது இனிக்க இனிக்க பேசுவார்கள். சிறிது நகர்ந்தவுடன் ஆண் என்ற திமிர் தலைக்கு ஏறிவிடும் .. வரட்டும் இன்று.. இனி முகத்தில் முழிக்காதே எனக்கூறிவிடுகிறேன்.. நான் என்ன சாதாரண பெண்களைப் போலவா? சேனாதிபதியின் மகள்.. எனக்காக எத்தனைப்பேர் தவமிருக்கிறார்கள். நான் இவனிடம் மதிமயங்குகிறேனே! இத்தனையும் பேசுகிறேன். எதிரில் அவனைக்கண்டுவிட்டால் ‘ஈ’என இளித்துக்கொண்டு அவன் பின்னே சென்றுவிடுகிறேனே !’ என நொந்துக்கொண்டு,, தலையில் மெல்லியதாக அடித்துக்கொண்டு தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பவளை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டான் நெடுமாறன்.
கைகளை காற்றில் அளாவி முகத்தில் வந்தறையும் முள்கிளைகளை தவிர்த்து வந்துக்கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்தே மிருதுளையைப் பார்த்து ஒருகணம் அவளின் அழகில் மெய்மறந்து இலயித்து நின்றான் நெடுமாறன்.
அரவம் கேட்டு சடாரென திரும்பிய மிருதுளை.. மாறனைக்கண்டு உள்ளுக்குள் நெகிழ்ந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்வதில் அவளுக்கு சிறிதும் விருப்பமில்லை. ஆடை நனையாமலிருக்க முழங்கால்வரை ஏற்றிவிடப்பட்ட வெற்றுக்கால்களின் வாழைத்தண்டுப் பளபளப்பும், வழவழப்பும் அதை உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் மாறனின் பார்வையும் அவளுக்கு நாணத்தை உண்டாக்கி சங்கோஜத்தை ஏற்படுத்தியது.
விருட்டென எழுந்தவள் “நீங்கள் ஒன்றும் என்னை சமாதானப்படுத்த வேண்டாம்.. காலையிலிருந்து உங்களுக்கு பிடித்த உணவுகளாக , பார்த்துப்பார்த்து சமைத்து எடுத்துவந்து பத்துமணிநேரமாக இந்தமலைக்காட்டில் காத்திருக்கிறேன். நீங்கள் எப்பொழுது வந்திருக்கிறீர்கள்? எந்த நம்பிக்கையில் நான் காத்திருப்பேன் என நினைத்தீர்கள்.? ஒரு வேளை புலி என்னை அடித்து தின்றிருந்தால் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் இன்னொரு பெண்ணை மணந்துக்கொள்ளலாம் அல்லவா! எனக்குதான் யாருமே இல்லை” என முகத்தை மூடிக்கொண்டு தேம்பியவளைக் கண்ட மாறன் அவளது காந்தள் மலரொத்த விரல்களை அகற்றி, “அங்கே பார் மிருதுளா , அங்கு தெரிவது ஒருநிலவு தானே! உன்னிடமிருக்கும் பத்துநிலவுகளின் எண்ணிக்கை சொல்லவா! உன் முகமொருநிலவு. இருவட்டவிழிகள் இருநிலவு. அதன் கருங்கண்மணிகள் இருநிலவு.. மோகங்கொண்டு கிறங்குவதெற்கென்றே முன்னிருநிலவு. பித்தமேற்றவிளைந்ததென பின்னிருநிலவு..!”
“போதும்! போதும்!ஆரம்பித்துவிட்டீர்களா? உங்கள் வேலையை, இக்காடுகளுக்குக்கூட காதுகள் உண்டாம் உங்கள் மன்னரிடம் சென்று உங்கள் படைத்தளபதியின் வீரத்தை பாருங்கள் என வத்தி வைத்துவிடப்போகின்றன. காலையிலிருந்து உங்களுக்காக காத்திருத்து சாப்பிடவே இல்லை.. பசிக்கிறது.வாருங்கள் இருவரும் உண்ணலாம்.. இதுதான் நாம் யாருக்கும் தெரியாமல் சந்திக்கும் கடைசிமுறை. அடுத்தவாரம் ஊரறிய நமக்கு திருமணம் ஆகியிருக்கும். திருட்டுத்தனங்களுக்கு இனி தேவையிருக்காது.. தோழியை கண்டுவருவதாக அன்னையிடம் சொல்லிவந்திருக்கிறேன்.. விரைவில் வீடு செல்லவேண்டும்.விரைந்து வாருங்கள் அத்தான் “ என்றாள் மிருதுளை.
அடுக்குப் பாத்திரங்களை திறந்து வைத்தவள் மீது ஏதோ மேலிருந்து விழ, அண்ணாந்துப் பார்த்தவள் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டாள் “அத்தான் இங்கேப் பாருங்கள் தேனீ கூடுகட்டியிருக்கிறது.. எனக்கு தேனென்றால் உயிர். நீங்கள்தான் பெரிய வீரராயிற்றே ! எனக்கு தேனெடுத்துத்தாருங்கள் அத்தான்”
“இந்த தேனடையை அப்புறப்படுத்தாதீர்கள். பாவம் தேனீக்கள் அதன் உணவு நமக்கேன்? .இந்த மூங்கில் குழாயை அதில் சொருவிவிட்டு வந்துவிடுங்கள்.. நான் சிறிது சுவைக்காக தேன் சேகரித்துக்கொள்கிறேன் மலைத்தேன் மிகஅருமையாக இருக்கும் அத்தான்” என்று சிறுமி மாதிரி குதித்துக் கொண்டிருப்பவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, துளையுள்ள மூங்கில் குச்சியொன்றை இலாவகமாக செதுக்கி, இடுப்புப்பட்டியில் சொருக்கிக்கொண்டு மரம் ஏறத்தொடங்கினான் நெடுமாறன் .
வயதாகிய, நீண்ட மரத்தில் காலைவைத்து ஏறியதும், உறிந்த மரப் பட்டையிலிருந்து பச்சைவாசனை அந்தப்பகுதியையே கிறங்கடித்தது. தேனீக்களின் கொட்டுதலுக்கு பயந்து, அமைதியாக வந்தவன்.. மூங்கில் குச்சியை சிறிய கிணறளவு இருந்த தேனடையில் ஒரு முனையை சொருவியவன்.. மறுமுனையில் ஏதோ இடிபட திரும்பிப்பார்க்க எத்தனிக்கையில்,கண்களில் ஏதோ பீச்சியடிக்கப்பட, அப்படீயே ‘ஆவென ‘அலறியவாறே அவ்வளவு பெரிய மரத்திலிருந்து கீழே விழுந்தான்…
என்ன நடக்கிறதென்றே புரியாத மிருதுளை முன்பு துடிதுடித்து, கண்களை மூடியவாறே! “மிருதுளை எனக்கு கண்கள் தெரியவில்லை. தொண்டை அடைக்கிறது”.என்றவாறே ! நீலம்பாரித்து, நுரைத்தள்ளி இறந்துபோனான் நெடுமாறன்.
சடாரென மரத்திலிருந்து பொத்தென விழுந்து. ஐந்துதலை நாகமொன்று பேசத்தொடங்கியது..
“என் பெயர் ஆதிசேஷன். நானே பெருமாளின் சகலமும், ஓய்வுநேரத்தில் இந்த வன்னிமரத்தில் தவமிருந்த என்தியானத்தை கெடுத்தது யார்? ”
“நீ யாராக வேண்டுமானாலும் இரு. எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. என் கணவனாக போகிறவனை இழந்து இனி நான் உயிரோடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இதுபோல் உனது கையால் உனக்கு முக்கியமான ஒரு உயிர் பறிக்கப்பட்டு, உனது மகள் எனது துயரை அனுபவிப்பாள்.. அப்பொழுது உனக்கு புரியும் என் வலி” எனக்கூறிக்கொண்டே ஓடி மலையிலிருந்து கீழேக்குதித்தாள் மிருதுளை.
2
புயல் நேரத்து சமுத்திர அலைகளின் பெரும் பேரிச்சலாக பயங்கர சத்தத்தோடும், கொடுமைகளோடும் போர்களம் படுமோசமான வன்முறை கூடமாக மாறியிருந்தது. கையிழந்தும், காலிழந்தும், கண்ணிழந்தும் உடல் உறுப்புகள் சிதைந்தும், உயிரோடுப் பிடுங்கி எறியப்பட்ட பெரும்பசும் மரத்தின் இலைகளென, வலியினால் துடித்துச்சோர்ந்து தலைதொங்கி போர்வீரர்கள் துடித்துக்கொண்டிருந்தனர்.
இருப்பக்கமும் மிகப்பெரிய சேதம் நிகழ்ந்துக்கொண்டிருந்தது.
இறந்துப்போன உடல்களை இழுத்து தூரப்போடவோ, அடையாளம் காணக்கூட நேரமில்லாத தொடர் சண்டை அது. வாளெடுத்து சுழற்றும் வேகத்தில் துண்டிக்கப்பட்ட தலைகள் பம்பரமாக சுழன்றுக்கொண்டேயிருக்க, உயிரற்ற உடல்கள் இறகைப்போல் மெதுமெதுவாக வீழ்ந்துக்கொண்டிருந்தன.
”இளவரசே! இளவரசே!! அபத்தம் நடந்துவிட்டது”. என்ற குதிரை வீரனின் குரலுக்கு செவிசாய்த்து விழியுயர்த்தினான் இந்திரஜித்.
ஆறடி உயரம்.. கருநாவல் பழத்தின் மினுமினுக்கும் கருப்பு. முழங்கால்வரை நீளும் உருண்டு திரண்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கைகள். விரிந்த மார்பில் தரித்த பொன் கவசம்… விரிவிழிகள்.. நெரிபுருவம். கழுகென சிறகுவிரி மீசை. ரணகளத்திலும் அத்தனை அழகனாய் வாள் சுழற்றிக்கொண்டிருந்தான் இந்திரஜித் எனப்படும் மேகநாதன்.. பிறக்கும் பொழுது இடியை விட இவனது குரல் அத்தனை அலறியதால் இராவணனால் மேகநாதன் என பிரியமாக பெயர்ச்சூட்டப்பட்ட இராவணின் மூத்த செல்லமகன்..செல்வ மகன்.. வீர மகன்..!
எதிரிகளை வீழ்த்தும் நேரத்தில் நொடி நேரம் குறைகிறதே என அலுப்பாக மனதில் நினைத்துக்கொண்டே , எரிச்சலாக “என்ன அபத்தம்?” என வினவினான் இலங்கை இளவரசன்.
“இளவரசே நீங்கள் ஏவிய பிரமாஸ்திரத்தினால் உயிரிழந்திருந்த, இராமனின் தம்பி லெட்சுமணன், அனுமார் என்னும் வானரவீரன் எடுத்துவந்த சஞ்சீவினி மூலிகை மருந்துகள் மூலம் உயிர்பெற்றுவிட்டார்.”
“என்ன சொல்கிறாய் !நீ எனக்கு மிகப்பிடித்தமானவன் இல்லையெனில் நீ சொன்ன சொல்லுக்கு தலையை சீவி சமுத்திரத்தில் தூக்கி எறிந்திருப்பேன்” என்று இந்திரஜித் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே! தூரத்திலிருந்து போர் உடைத்தரித்து, அணையை மீறி வழியும் நீரென, சீரற்ற வேகத்தில், மிகுந்து குதிரையை விரட்டி வெகுவேகமாக பெண்ணொருத்தி இவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள்.
முரட்டுப்போர் உடைகள் மறைத்த பாகங்கள் மீறி, தென்படும் அழகைவைத்தே தெரிந்துவிட்டது இந்திரஜித்துக்கு. அந்த வட்ட முகம். அலை அலையாக, இடுப்புக்கு கீழேப்புரளும் விரித்தக்கூந்தல். மதர்த்த மார்புகள். தன் நெஞ்சில் கிடந்து விரியும் கூம்பிய தாமரைப் பாதங்கள், பிடிவாதத்தோடு குதிரையை விரட்டும் அவளுக்கு பொருத்தமில்லாத, ஆனால் பிடிவாத வேகம் அவள் சுலக்சனா.. அவன் காதல் மனைவி. ஆச்சரியமும், அதிர்ச்சியும், திகைப்புமாய் குதிரையின் கடிவாளத்தை அதன் வேகத்தில் போய் இழுத்து நிறுத்தியதில் செம்மண் புகைமண்டலமாய் மேலேக் கிளம்பியது.
“ நீ எதற்கு இங்கே வந்தாய் சுலக்சனா? இங்கே எல்லாம் நீ வரக்கூடாதெனத் தெரியாதா உனக்கு?..இங்கு வந்து என் வேலையைக் கெடுத்துக்கொண்டிருக்கிறாய் நீ” எனக் கோபமாக பேசியவனை இடைமறித்து, “சுவாமி! இதுவரை எனக்குத் தெரிந்து இப்படி நிகழ்ந்ததே இல்லையே! ஆற்றுமணலைக்கூட எண்ணிவிடலாம். உங்களிடம் அடிமையாகக்கிடக்கும் தேவர்கள், மன்னர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம். எத்தனைப் போர்கள் ஒன்றில் கூட நீங்கள் இதுவரை தோற்றதில்லை. தேவர்களுக்கும், அரக்கர்களுக்கும் மூண்ட சண்டையில், இந்திரனைச் சிறைப்பிடித்து, விடுவிக்க மறுத்து, பிரம்மன் உங்களிடம் கெஞ்சி, தயவு செய்து, உங்களுக்கு வேண்டும் வரத்தினைக் கொடுத்து, இந்திரஜித் என்னும் பட்டத்தை வழங்கினார்.
இதில் நீங்கள் ஐந்து இந்திரியங்களையும் இருள், அசுப, காமக், குரோத, ஆசை அடக்கி உங்கள் உடல் குறிப்பாக, மனதினை உங்கள் எண்ணப்படி , இந்த உலகத்திலேயே செலுத்தத் தெரிந்த ஒரே பெரும் மனிதர் நீங்கள் தான் எனும் அர்த்தத்தில் ரிஷிகளால் இந்திரஜித் என்னும் பேருக்கு நீங்கள் பொருத்தமானவர் என்னும் புகழப்படுவதும் உண்டு..”
“சுலக்சனா இது என்ன? என்னைப் பாராட்டும் நேரமா இது! உன்னை சுற்றிப்பார் என்ன நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது எனப் புரிகிறதா?
நீ பேரழகி என்பதற்காக மட்டுமே உன்னை நான் மணந்துக்கொள்ளவில்லை. நான் சிறைப்பிடித்த இந்திர மண்டபத்தில் உன்னைத் தவிர நிறைய பேரழகிளும் இருந்தார்கள்..
அந்த நேரத்தில் இடையவிழ்ந்த எனது ஆடையை, கைப்பற்ற முடியாது , கைவிடாமல் போரிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அதைக் கவனித்த நீ .. இந்திரனை தந்திரமாக மடைமாற்றி எனக்கான நேரத்தை உருவாக்கிக் கொடுத்தாய். உனது பேரறிவும், வீரமும் தான் உன்னை எனது மகாராணியாக்க முடிவு செய்தது. பகைவனுக்கே! அருளும் உனது நெஞ்சம் அளப்பரியது…எதற்காக இப்படி புத்தியில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறாய் என்னவாயிற்று உனக்கு?” எனச்சீறினான்!
இலங்கை இளவரசன். ஆனாலும் அவனுக்கு சுலக்சனாவை நினைந்து மிகப்பாவமாக, பரிதாபமாக இருந்தது. அவனுக்காக நிறைய தருணங்களில் உயிரையும் கொடுக்கத்துணிந்தவள் அவள்.
ஏன் இப்படி செய்கிறாள் எனக் குழப்பமாக, ஒரு பெருமரத்தின் ஓரமாக அவளை அழைத்துச் சென்றான் இந்திரஜித்..
அவன் கரங்களை எடுத்து தன் ‘மெத்தென்ற’கன்னத்தில் வைத்து அவனது ‘திண்ணெண்ற மார்பில் சாயப்போனவளை “சூழ்நிலை மறக்காதே சுலக்சனா, தன்நினைவுக்கு வா! நீ அரண்மனை செல் ! நான் இதோ எதிரிகளை முழுமையாக அழித்துவிட்டு வந்துவிடுகிறேன். போ சுலக்சனா” என்றான்.
“சுவாமி! நான் ஒரு ஓரமாக நின்று உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. உங்களது எதிரிகளான இராமனையும், அவரது தம்பி லெட்சுமணனையும் பார்த்தால் சாதாரண மனிதர்களைப்போல் தெரியவில்லை.. உங்கள் பிரம்மாஸ்திரம் மீறி யாருமே உயிர் பிழைத்ததில்லை. எனக்கு பயமாக இருக்கிறது.. எதுவாக இருந்தாலும் உங்கள் தந்தையின் மேல் தவறிருக்கிறது.. இன்னொருவர் மனைவியை அவள் சம்மதமில்லாமல் கவர்ந்து வருவது பெரும் தவறு. இது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்திருந்தும் வீணாக, வழக்கத்திற்கு மாறாக தர்மத்திற்கு எதிராக போராடுகிறீர்கள். சீதையை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்.
நாமிருவரும் மனம்விட்டுப்பேசும் அத்தாணி மண்டபம் திடீரென சரிந்து வீழ்ந்து விட்டது. எனக்கு எதுவோ சரியாகப்படவில்லை. சொல்லுங்கள். எது நியாயம் என உங்களுக்கே புரியவில்லையா சுவாமி!” என்ற சுலக்சனாவை இயலாமையோடு ஏறிட்டான் இலங்கை இளவரசன்.
”இங்கு எது நியாயம்? நியாயமில்லை என்பது முக்கியமில்லை.. எனது தந்தை இராவணனின் ஆணை இது. அவரது ஆணை எதுவாக இருப்பினும் அதை ஏற்பேன். உன்னை கொல்வதாக இருந்தால் கூட, ஆனால் எனது தந்தை , சீதையை ஒருதடவை நீ காப்பாற்றி அழைத்துச் சென்று எல்லையில் விட முயன்ற பொழுது. தந்தையிடம் மாட்டிக்கொண்டாய்! அவர் எனக்காக, அவரது பிரியமானவற்றை, நீ !அவரிடமிருந்து பறிக்க முயன்றாலும், உன்னை மன்னித்து ,விடுதலை செய்தார்.. எனது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவருக்கு, நான் முக்கியத்துவம் கொடுப்பதுதான் நியாயம். மன்னருக்குக் கட்டுப்படுவதே எனது தர்மம்.. கடமை . நியாயம் அதைத்தாண்டி தனியாக யோசிக்க எதுவுமே இல்லை சுலக்சனா புரிந்துகொள்!
வேண்டுமானால் உனக்காக நிகும்பலை யாகம் செய்கிறேன்.. நமது குலதெய்வம் நிகும்பலா தேவியை வணங்கி அவளது காலடியில் இந்த யாகத்தினை நடத்தி முடித்துவிட்டால் என்னை எவராலும் கொல்ல முடியாது..
நான் சிவனிடமிருந்து தவத்தினால் ‘ஸமாதி’ எனும் அஸ்திரத்தை வரமாக பெற்றுள்ளேன். அதன் மூலம் சடாரென யார் கண்ணுக்கும் படாமல் என்னால் எவ்விடத்திலிருந்தும் சடாரென மறைய முடியும்.. அதன் மூலம் மறைந்து , என்னை வீழ்ந்த வந்துக்கொண்டிருக்கும் இராமனின் கண்களிலிருந்து மறைந்து விடுகிறேன். நீ பத்திரமாக செல்! நான் அனைவரையும் அழித்துவிட்டு என் கண்மணி உன்னைக்காண ஓடோடி வந்துடுகிறேன்.” எனப் புன்னகைத்தான் இந்திரஜித்.
”சரி சுவாமி! என்னைத் தவிர நீங்கள் வேறொரு பெண்ணை கனவில்கூட நினைத்ததில்லை என்பதை நானறிவேன்.. உங்களின் ஆட்சியால் ஒருப்பெண்ணுக்குக்கு கூட துரோகம் நிகழ்ந்ததில்லை.. உங்கள் தந்தையின் பெண்கவரும் குணத்திற்கு நீங்கள் எதிரானவர்.. இந்த யாகத்தில் குறை ஒன்று உள்ளது . அதை உங்களுக்கு நினைவுப்படுத்துவது எனது கடமை. இந்த யாகத்தை நடக்கும் போது தடுத்துவிட்டால் , அவனால் உங்களை வெல்ல முடியும். லெட்சுமணன் பதினான்கு வருடங்கள் கண்விழித்து, கொஞ்சம் கூட உறங்காமல் தமையனைக் காத்து வந்ததால் அவனுக்கு சிலவரங்கள் இயற்கையாகவே இருக்கிறதாம்.. கவனமாக இருங்கள்.. நான் அரண்மனை செல்லமாட்டேன்.. போர்களத்திற்கு வெளியே காத்திருக்கிறேன். நீங்கள் என்னோடு வரும்பொழுது , உங்களோடு தான் வீடு செல்வேன்.. சரி நான் காத்திருக்கிறேன் வந்துவிடுங்கள்..” எனச்சொல்லி குதிரையிலேறி புறப்பட்டாள் சுலக்சனா..
இந்திரஜித் ஸமாதி அஸ்திரத்தின் மூலம், மறைந்து நிகுபலாதேவிக்கு யாகத்தை தொடங்கினான்.
தீடிரென போர்க்களத்திலிருந்து, காணாமல் போய்விட்டதாக, வானரவீரர்கள் மூலம் செய்தியறிந்த இராமனும், லெட்சுமணனும், இந்திரஜித்தைத் தேடி புறப்பட்டனர்..
தேடிவரும்பொழுது இராவணனால் சீதையைக்கவர்ந்து வரும்பொழுது சிறகொடித்துக் கொல்லப்பட்ட , ஜடாயுவின் மகனாக உள்ள கழுகின் மூலம் ஒருக்குகைக்குள் யாகம் வளர்த்துக் கொண்டிருந்த ,இந்திரஜித்தை சுற்றி வளைத்து யாகத்தை நிறுத்தி,நிராயுதபாணியாக நின்ற இந்திரஜித்தை , மிகப்பலத்தோடும், ஆற்றலோடும், பதினான்கு வருடங்கள் கண்விழித்து கிடைத்த வரத்தோடும், ஆக்ரோசமாகப் போரிட்டு, கொடூரமாக கொன்றதை கேள்விப்பட்ட சுலக்சனை, லெட்சுமணை தேடி குகைக்கு விரைந்தாள்..
குதிரையிலிருந்து இறங்கி லெட்சுமணனுக்கு சாபம் கொடுக்க கைகளை உயர்த்தும்பொழுது! வேண்டாம் சற்றுப்பொறு பெண்ணே! என அங்கு விசுவாமித்திரர் தோன்றினார்..
தலையைக் குனிந்து வணங்கும் லெட்சுமணனையும், தலைவிரிக்கோலமாக , நின்றிருந்த சுலக்சனையும் பார்த்து “சுலக்சனா லெட்சுமணன் உனக்கு தந்தை.. அவன் ஆதிசேஷனின் அவதாரம். அவனுக்கு, அவனால் வாழ்க்கைப் பறிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சாபத்தால், அவன் கைகளாலையே அவனது மருமகன் கொல்லபட்டு, மகள் கதிகலக்கி நிற்கிறாள்”.என்றுக் கண் கலங்கக் கூறினார்.
செய்வதறியாது சுலக்சனையை பார்த்துக் கதறிய லெட்சுமணன் “என் கைகளால் நானே என் மகளுக்கு கேடிழைத்தேனா !” என அப்படீயே சரிந்து மடித்தடங்கி,கண்களை, கைகளால் பொத்திக்கொண்டு கதறும் லெட்சுமணனை ஒன்றும் செய்வதறியாது நோக்கிய சுலக்சனா..
“எந்த ஜென்மமாக இருந்தாலும், சாதாரண பெண்ணோ, மகாராணியோ, பாதிக்கப்படுவது பெண்கள் தான். ஆண்களுக்கான நியாயங்களும், தர்மங்களும் மட்டுமே உலாவும் உலகிது. பலிக்கு கூட்டிச்செல்லும் ஆடுகள் போல பெண்கள் புகழப்படுவது பலி கொடுக்கப்படத்தான், இங்கே எல்லாவிதமான சண்டைகளும் ஆண்களாலேயே ஏற்படுத்தப்படுகிறது.
சமாதானங்களும் அவர்களாலேயே ஏற்படுத்தப்படுகிறது..பெண்கள் வெறும் உடமை. அவர்களுக்கான கண்ணாடியாக மட்டுமே நாங்கள் செயல்பட வேண்டும். சிரித்தால் சிரிக்க வேண்டும்.. அழுதால் அழவேண்டும்.. வாழு என்றால் வாழவேண்டும்.. சாவு என்றால் சாகவேண்டும்.. எங்களுக்கான குறைந்தபட்ச உரிமைகள் கூட ஆண்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டே தான் வருகின்றன.
எனது மாமனார் இராவணன் , மாமியார் மண்டோதரியின் மனநிலைப்பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் சிறுபெண்ணை அவளது கணவனை பழிதீர்க்க கடத்திவருவார்.. அந்த சிறுபெண்ணின் உணர்வுகளோ , மண்டோதரியின் உணர்வோ அவருக்கு அவசியம் இல்லை.
அதற்காக இவ்வளவு பெரிய போர்,அத்தனை உயிர்கள், அத்தனை பலி , அத்தனைப் பெண்களின் வாழ்வு பலி கொடுக்கப்படும்.. அதைப்பற்றி யாருக்கும் கவலை.. ஆண்களுக்கான ஆணவப்போரில், பெண்கள் பலிகடா. எனக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். அத்தனை செல்லமாக வளர்க்கப்பட்டவர்கள். நான் இங்கு திருமணம் செய்து வந்தபொழுது , நான் வணங்கும் தெய்வத்தைக்கூட இங்கு வணங்க அனுமதி இல்லை. இருப்பினும் இந்த வாழ்க்கைக்கு நான் என்னை பழக்கப்படுத்திக்கொண்டேன். என் கணவருக்காக, அவர் மீது உள்ள அன்பிற்காக அனைத்தையும் சகித்துக்கொண்டேன்.. இந்தப் போரைக்கைவிடுங்களென தர்மத்தை அறிவுறுத்திக் கொண்டேயிருந்தேன். அனைத்தும் பிரயோசனமில்லாமல் போய்விட்டது.. இப்பொழுது வேறு வழியில்லை எனக்கு விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ நான் என் கணவனோடு உடன்கட்டை ஏறவேண்டும்.. இல்லையெனில் எனது கணவனின் மேல் உள்ள அன்பு அனைவராலும் சந்தேகத்திற்குள்ளாக்கப்படும். எனது குழந்தைகளை நான் பிரிந்தே ஆகவேண்டும்.. பெண்களுக்கு ஏன் இத்தனை தண்டனை.. உணவிலிருந்து , உடல் முதற்கொண்டு பிறருக்காக பகிர்ந்தளித்துக்கொண்டே இருப்பவளுக்கு காலம் தரும் தண்டனைகள் மிகப்பெரிது.
எனக்கு தெரிந்து எனது மாமனார் வெல்லப்போவதில்லை.. எனது சின்ன மாமனார் விபீஷணனிடம் நான் ஒப்படைக்க சொன்னதாக எனது குழந்தைகளை ஒப்படைத்துவிடுங்கள்” என்றுக் கூறிக்கொண்டே இடையில் சொருகியிருந்த குறுவாளால் கழுத்தை அறுத்துக்கொண்டு கீழே சரிந்தாள் சுலக்சனா.
காலம் வழக்கம் போல வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தது.
எழுதியவர்
-
வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர்.
பல்வேறு அச்சு / இணைய இதழ்களிலும் கவிதைகளை எழுதி வருபவர். ‘நெய்தல்நறுவீ’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இதுவரை.
- சிறுகதை11 November 2024விளம்பரம் எழுதிய வீடு
- கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023நெடுந்துணை
- சிறுகதை24 April 2023கைப்புண்
- சிறுகதை28 February 2023வாதை