1. மறதி
யுவனும் புவனும் ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்கள். அவர்கள் இருவரையும் விண்வெளிக்கு அனுப்பலாம் என்று முடிவானது. அவர்கள் இருவரும் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் பல கோள்களுக்கும் சென்று வருவது போல் பயணம் வடிவமைக்கப்பட்டது. இதில் ஏதாவது விபரீதம் நேர்ந்தால் யாராவது ஒருவர் அந்தப் பயணத்தைத் தொடரவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. யுவனுக்கும் புவனுக்கும் இடையில் எப்போதும் நல்லுறவு நீடித்ததில்லை. இந்த விண்வெளிப் பயணத்தின் போதாவது ஒற்றுமை ஏற்படுமா என்று இருவரும் ஆவலுடன் காத்திருந்தனர். பயண நாள் வந்தது. இருவரும் ஒரே மாதிரியான உடை அணிந்து விண்கலனில் அமர்ந்திருந்தனர். விண்கலம் புறப்பட்டது. முதலில் சூரியக் குடும்பத்திற்கு அருகில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தின் கிரகத்திற்குச் செல்லலாம் என யுவன் சொன்னதை புவன் காதில் வாங்கவே இல்லை. முதலில் சூரியக் குடும்பத்திற்கு வெகு தொலைவில் இருக்கும் நட்சத்திரத்தின் கிரகத்திற்குச் செல்லலாம் என்றான் புவன். யுவன் அமைதியாக இருந்துவிட்டான். விண்கலத்தின் பாதையை புவன் மாற்றினான். யுவனுக்கு இது ஏதோ அபாயத்தைக் கொடுக்கும் என்பது போல் தோன்றியது. புவனிடம் அதைச் சொன்னான். அதை அவன் ஏற்கவும் இல்லை. உதாசினப்படுத்திவிட்டு தொடர்ந்து விண்கலத்தைச் செலுத்தினான். விண்கலன் புவன் சொன்ன கிரகத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது விண்கலம் லேசாக ஆடத் தொடங்கியது. இருவருக்கும் அச்சம் ஏற்பட்டது. அந்தக் கிரகத்தின் காந்த அலை மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் விண்கலம் ஆடியது என கண்டுபிடித்தார்கள். அந்தக் கிரகத்தில் எப்படியோ போய் இறங்கிவிட்டார்கள். அது இருள் நிறைந்த கிரகமாக இருந்தது. கையில் இருந்த ஒளி உமிழும் விளக்குகளை ஏந்தியபடி அந்தக் கிரகத்தை அவர்கள் சுற்றி வந்தனர். இருளாக இருந்தாலும் அந்தக் கிரகத்தில் அவர்களுக்கு ஏதோ ஒன்று பிடித்தது. வேறு ஒரு கிரகத்தின் அமைதிதான் பிடித்திருக்கிறது என்பது போல் அவர்கள் நினைத்துக் கொண்டனர். இருந்தாலும் யுவனுக்குள் ஒரு திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. அந்தக் கிரகத்தில் புவனை விட்டுச் சென்று வேறு கிரகத்தில் தான் மட்டும் தனியாக ஆய்வு செய்யவேண்டும் என்று நினைத்தான். புவனுக்கும் அதே போல்தான் ஓர் எண்ணம் ஓடியது. இருவரும் அதைப் புரிந்துகொண்டு அந்தக் கிரகத்தில் புவன் இருப்பதாக முடிவு ஏற்பட்டது. விண்கலத்தைக் கிளப்பிக் கொண்டு யுவன் பறந்தான். புவனைத் தனியாக விட்டுச் செல்வது குறித்து எந்த வருத்தமும் அவன் அடையவில்லை. அவன் இன்னும் தொலைவில் இருக்கும் மற்றொரு கிரகத்திற்குச் சென்றான். இந்தக் கிரகத்தில் அதீத ஒளி இருந்தது. இருளே வரவில்லை. எப்போதும் ஒளி இருந்ததால் வெப்பமாக இருந்தது. ஆனாலும் அது யுவனுக்குப் பிடித்தது. தான் மட்டும் தனியாக இந்தக் கிரகத்தில் இருப்பது போல் எண்ணிப் பார்த்து மகிழ்ந்து போனான். அவன் உருவாக்கிக் கொண்டிருந்த அந்தப் புதிய கருவியை எடுத்தான். அதில் அவன் எப்படி இயக்குகிறானோ அதில் பதிவாகியிருக்கும் நபர் அப்படி இயங்குவார். புவனை அதில் பதிவு செய்து வைத்திருந்தான். அதில் புவன் என்ன செய்கிறான் எனப் பார்த்தான். அவன் அமைதியாக ஒரு பாறையின் மீது அமர்ந்திருந்தான். அவனை இயக்கத் தொடங்கினான் யுவன். அவனைப் பாறையிலிருந்து கீழே குதிக்கவைத்தான். அந்தப் புதிய கிரகத்தில் ஓடவைத்தான். புவனால் தன் கட்டுபாடில்லாமல் எப்படித் தான் இயங்குகிறோம் என்பது புரியாமல் குழம்பினான். இது யுவனின் வேலையாகத் தானிருக்கும் எனப் புரிந்துகொண்டான். யுவனிடமிருந்து தப்பவேண்டும் என்றால் தன் உடலில் இருக்கும் பேட்டரியைக் கழற்றவேண்டியிருக்கும் என்பதைப் புரிந்துகொண்டான். ஓடிக்கொண்டே பேட்டரியைக் கழற்றி கீழே போட்டான். திரையில் ஓடிக்கொண்டிருந்த புவன் அப்படியே நின்றுவிட்டது போல் படம் தெரிந்தது. அவன் பேட்டரியைக் கழற்றிவிட்டதைப் புரிந்துகொண்ட யுவன் அங்கு விட்டுவந்திருந்த சென்சாரை இயக்கினான். அதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு புவனைத் தாக்கும் என்று அவனுக்குத் தெரியும். உடனே கதிர் வீச்சைத் தான் தன் மேல் யுவன் ஏவுவான் எனப் புரிந்துகொண்டு அதனைத் திருப்பி புவனைத் தன் கிரகத்தை நோக்கி ஈர்த்துவிட்டான் யுவன். மீண்டும் புவனைச் சந்திக்கக்கூடாது என நினைத்திருந்த யுவனுக்கு இது பெரிய சதியாகத் தெரிந்தது. அதனால் புவனைக் கொன்றுவிடவேண்டும் என முடிவு செய்தான். இதைப் புரிந்துகொண்ட புவன் தான் வைத்திருந்த ஒரு புதிய கருவியை இயக்கி அவனைத் தன்னுடன் கலந்துவிடச் செய்துவிட்டான். மீண்டும் விண்கலத்தை இயக்கி பூமியில் வந்து இறங்கினான். விண்கலத்திலிருந்து இறங்குவதற்கு முன் யுவனைத் தன்னிலிருந்து பிரித்துவிட்டு தன்னிடமிருந்த கருவியைக் கொண்டு இருவரிடமும் பதிந்திருந்த நினைவுகளை நீக்கிவிட்டான். விண்வெளிக்குச் சென்ற இருவரும் மறதி நோய் பீடித்துவந்துவிட்டார்கள் என பூமியில் ஆய்வு தொடங்கியது.
2. வாள்
தன் பரம்பரை வாளைத் தினமும் துடைத்து சுவரில் மாட்டுவது அவன் வழக்கம். தன் ராஜ பரம்பரையின் நினைவுச் சின்னமாக இருக்கும் அந்த வாளை தினமும் பெருமையும் பூரிப்பும் கலந்து தொட்டுப் பார்ப்பான் அவன். அந்த வாள் எத்தனைப் போரைப் பார்த்திருக்கும் என எண்ணிச் சிலிர்த்துப் போவான். அந்த வாளைக் குறித்த வரலாற்றைத் தான் இதுவரை சரியாகத் தேடவில்லையே என நினைத்தபடி ஒரு நாள் இரவு உறங்கிப் போனான். அந்த வாளை இடுப்பில் வைத்துக் கொண்டு ஒரு காட்டில் குதிரையில் அவன் பயணித்துக் கொண்டிருந்தான். எதிரில் ஒருவன் மிகவேகமாக ஈட்டியை வைத்துக் கொண்டு குதிரையில் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன் குதிரையை நிறுத்திவிட்டு மரத்தடியில் இவன் நின்றான். அவன் இவனை நோக்கி ஈட்டியை வீசி எறிந்தான். இவன் வாளால் அதைத் தடுத்து அப்புறப்படுத்தினான். அவன் இவன் முன்பு வந்து நின்றான். இருவருக்கும் வாள் சண்டைத் தொடங்கியது. இவன் கற்ற வாள் சண்டையில் யாரையும் கொல்லக் கூடாது; ஆனால் அவர்களை நிராயுதபாணிகளாக்கி அந்த வெட்கத்தில் அவர்களாகவே இனி எந்தச் சண்டைக்கும் போக முடியாத உறுதி பூண வைக்கவேண்டும் என்பதுதான் இவன் கற்ற பாடம். அதே போல் எதிரில் இருந்தவனை வீழ்த்தி அவனுடைய வாளை உடைத்து அவனை மண்டியிட வைத்தான். இனி எப்போதும் அவன் எந்தச் சண்டைக்கும் போகக்கூடாது என்று உறுதி மொழி பெற்றுக் கொண்டு அனுப்பிவைத்தான். குதிரையை ஓட்டிக் கொண்டு நாட்டுக்கு வந்தான். அப்போது அங்கு வாள் சண்டை நடக்கவிருப்பதாகவும் அதில் கலந்துகொள்பவர்களுக்குப் பெரும் பரிசு தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இவன் உடனடியாக அதில் கலந்துகொண்டான். அதிலும் இதே போல் யாரையும் கொல்லாமல் நிராயுதபாணிகளாக்கி அனுப்பிவைத்துக் கொண்டிருந்தான். இதைக் கண்ட அந்த வாள் சண்டை நடத்திய அரசனுக்கு ஆச்சரியமும் கவலையும் ஏற்பட்டது. இவனை அழைத்து வாள் சண்டை மூலம் அமைதியைப் போதிப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்றான். இவன் கற்ற பாடம் அமைதிக்காக மட்டுமே ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதுதான் என்று கூறினான். அப்போது இவன் எதிர்பார்க்காத வகையில் இவன் மீது அரசன் வாளை எடுத்துப் பாய்ச்சப் போனான். இவன் தன் வாளை எடுத்து அதைத் தடுத்து அரசனை நிராயுதபாணியாக்கினான். வெட்கத்தால் முகம் சிவந்த அரசன் தன் அரசப் பதவியை இவனுக்கு விட்டுக் கொடுத்தான். அரியணை ஏறிய இவன் எல்லாப் போர்வீரர்களுக்கும் தன் வாள் சண்டையின் பாடத்தைக் கற்றுக் கொடுத்து உயிரைக் கொல்வதிலிருந்து தடுத்துவிட்டான். ஒரு வீரன் இவனிடம் வந்து ஓர் உயிரைக் கூடக் கொல்லாமல் இவனால் தொடர்ந்து இருக்க முடியுமா என்று கேட்டான். அப்படி ஓர் உயிரைக் கொல்லும் நிலை ஏற்பட்டால் தான் அரச பதவியைத் துறந்து அந்த வாளை இனித் தொடப் போவதில்லை என்று கூறினான். அப்போது அவன் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த வீரன் வாளை எடுத்து இவன் மீது பாய்ச்ச வந்த போது இவன் தடுக்கப் போய் அது அவனுடைய தலையைக் கொய்துவிட்டது. இவன் திடுக்கிட்டு விழித்து ஓடிப் போய் தன் அறையில் இருந்த வாளைப் பார்த்தான். அதில் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.
எழுதியவர்
-
தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்திருக்கிறார்.
'அன்பின் ஆறாமொழி,' மற்றும் 'உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. '
உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் இவரது நேர்காணல் நூலாக வந்திருக்கிறது.
இவருடைய படைப்புலகம் பற்றிய நூலும் வெளிவந்திருக்கிறது. 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து இவர் தொகுத்த நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த இவரது கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப் பெற்று நூலாக வெளிவந்திருகிறது. சமீபத்தில் ‘நூறு புராணங்களின் வாசல்” என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
இவர் ஆங்கிலத்திலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பல தேசிய சர்வதேச இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. உலக பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பில் இவருடைய ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலத் தொகுப்பு ஒன்றில் இவரது கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.
பல்வேறு தேசிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பெண்ணியம் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் கட்டுரை வாசித்திருக்கிறார். தமிழகத்திலும் நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக போபால், டெல்லி போன்ற இடங்களில் சாகித்ய அகாடமி நடத்திய பல்வேறு கட்டுரை வாசிப்புகளிலும் கவிதை வாசிப்புகளிலும் பங்கேற்றிருக்கிறார்.
மலேஷிய கவிஞர்களுடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக் கழகத்திலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் பங்கேற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் சாகித்ய அகாடமிக்காவும் பிற பதிப்பகங்களுக்காகவும் மொழிபெயர்க்கிறார்.
தொலைக்காட்சி சேனல்களில் தயாரிப்பாளராகவும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். செய்தி வாசிப்புக்கான பயிற்சிப் பள்ளி நடத்துகிறார்.ஓவியங்களை வரைவதில் ஆர்வம் உள்ளது. நூல் அட்டைப் படங்களுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
குறியியல் குறித்து இவர் மொழிபெயர்த்த நூல் விரைவில் வெளி வருகிறது. இலக்கிய வீதியின் அன்னம் விருதைப் பெற்றிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான ’மேலும்’ விமர்சன விருதைப் பெற்றிருக்கிறார்.
இதுவரை.
- கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023பிரதிபா முன்னொளியார் சரித்திரம்
- சிறுகதை24 April 2023முகம்
- குறுங்கதை26 November 2022முபீன் சாதிகாவின் நான்கு குறுங்கதைகள்
- கதைகள் சிறப்பிதழ் - 20221 August 2022முபீன் சாதிகாவின் இரண்டு குறுங்கதைகள்
முபீன் சாதிகாவின் இரண்டு குறுங்கதைகள் – 1. மறதி – 2. வாள் – அற்புதமான கற்பனை. எதிர்காலத்தில் இப்படியும் நடக்கலாம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Mubeen Sadhika
மிக்க நன்றி அப்பா
இரண்டுமே மிக அருமையான கதைகள் சில ஆண்டுகளாய் கதைகளே பிடிக்காது இருந்த நான் முகநூலில் முபின் சாதிகா அவர்கள் எழுதி வந்த குறுகதைகளை வாசிக்க தொடங்கிய பிறகு அவர்கள் எழுத்துக்களால் உந்தப்பட்டு மீண்டும் கதைகள் வாசிக்க தொடங்கினேன்..
மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் வாசிப்பு எனக்கு ஊக்கம் தருகிறது.
ஒற்றுமையை வலியுறுத்தும் கதை அருமை.மறதி சூப்பர்.
வாள் வீரம் அழிவை நோக்கி அல்ல அன்பை நோக்கியது. மனம் மிக்க மகிழ்ச்சி.
மிக்க நன்றி