மாமியார் டிவி ஸ்விட்ச்சை போட்டுவிட்டு என்னிடம் ரிமோட்டை கொடுத்து ”டி.வி பாருங்க மாப்ளை..” என்றுவிட்டு வழக்கமான வெட்கம் கலந்த சிரிப்புடன் அடுக்களைக்குப் பின்னே கொல்லைப்புறம் சென்றார். நானும் சிரித்த மேனிக்கு ரிமோட்டை வாங்கிக் கொண்டு வெறுமனே இலக்கின்றி சானலை மாற்ற ஆரம்பித்திருந்தேன்.
அவ்வப்போது இப்படியும் அப்படியும் திரும்பி உமாவைத் தேடினேன். பிறந்த வீட்டிற்கு வந்தாலே அவளைத் தேட வேண்டியிருக்கும். மூன்று அறை, மாடியில் ஒரு அறை, அதற்கு மேல் மொட்டை மாடி, கொல்லைப் புழக்கம், பின்னாடி வேலி தாண்டியும் கொஞ்சம் புறம்போக்கு நிலத்தில் வாழையும் தென்னையும் நட்டிருந்தார்கள். இவற்றுள் எங்காவது அவள் இருப்பாள்.
பிறந்த வீட்டுக்கு வந்தாலே அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரிபூரணியாக அவள் மாறிவிடுகிறாள். எங்கள் வீட்டில் வந்து என்னுடன் வாழ்கிறவள் வேறு எவளோ என்ற பிரமையைத் தான் அவள் எப்போதும் தன் தாய் வீட்டில் ஏற்படுத்தியிருக்கிறாள்.
எனக்கு அதிகபட்சம் இரண்டு நாளுக்கு மேல் இங்கே இருப்பு கொள்ளாது. பெரும்பாலும் இரண்டு மாதத்துக்கு ஒரு தடவை சனி ஞாயிறுகளில் இங்கே வருவோம். ஞாயிறு இரவு இவள் வந்தாலும் வராவிட்டாலும் நான் கிளம்பியிருப்பேன்.
பிருந்தா, மாமியார், இவள் என்று மூன்று பெண்கள் வாய் வலிக்க, காது சலிக்க ஊர்கதை பேசிக் கொண்டிருக்க நானும் எத்தனை மணி நேரம் தான் டிவியைப் பார்த்துக் கொண்டிருப்பது? ஒரு சினிமா பார்த்து முடித்தால் எனக்குத் தலை வலிக்க ஆரம்பித்துவிடும்.
சாலியமங்கலத்தில் பெரிய மளிகைக் கடை வைத்திருக்கும் மச்சான் ஃபோன் செய்வார். ‘என்ன மச்சான் போரடிக்குதா? எங்கயும் அலையாதீங்க. கடையை வெல்லனே கட்டிட்டு வந்துடறேன். டிவி பாருங்க’ என்பார். அதிகபட்சம் தெரு முக்கில் இருக்கும் பெட்டிக் கடைக்குச் சென்று கடலைமிட்டாய், முறுக்கு வாங்கிக் கொண்டு திரும்புவேன்.
பிருந்தாவின் இரண்டு வயது மகன் ரூமில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்க, மூன்று பெண்களும் கொல்லைப்புறம் தென்னைமரத்தண்டை நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த இடம் சிரிப்பில் நிறைந்திருந்தது. நான் திரும்பிப் பார்ப்பதைப் பார்த்துவிட்டு இவள் ”என்னங்க காப்பி கீப்பி வேணுமா?” என்றாள்.
நான் வேண்டாம் என்று தலையாட்டிவிட்டுத் திரும்பிக் கொண்டேன். அப்போது தான் எதிர்வீட்டில் அந்த அலறல் கேட்டது. காட்டுக் கூச்சலான ஒரு பெண் குரல். அந்தக் கதறலில் இந்த வீடுமே ஒரு கணம் துடித்து நின்றது. யாரோ யாரையோ போட்டு அடிக்கிறார்கள் என்று நினைத்தேன். அலறியடித்து ஓடினேன். வாசலண்டை வந்தேன். உமா கத்திக் கொண்டே ஓடி வந்தாள்.
”இங்க பாருங்க.. எங்க போறீங்க?” – குரல் அதட்டலாயிருந்தது.
”யாரோ கத்தினாங்க பார்த்தியா..?”
”அதுக்கு? நீங்க போய் என்ன செய்யப் போறீங்க.. உள்ள வாங்க சொல்றேன்” என்று என் கையைப் பிடித்து இழுத்து வந்து மறுபடி ஹாலில் விட்டாள்.
”என்னடி சங்கதி?” என்றேன்.
”அந்த வீட்ல வளர்மதினு ஒரு புள்ளை இருக்கும் தெரியுமா?” என்றாள். நான் குழப்பமாக புருவங்களைச் சுருக்கினேன். ”உங்களுக்கு எங்க தெரியப் போவுது. உங்களுக்கு நம்ம சொந்த ஜனங்களே தெரியாது” என்றவள் சோபாவில் உட்கார்ந்தாள். டிவியின் ரகிட ரகிடவை ஊமையாக்கினாள்.
”அந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்காம். யாரோ செய்வினை செஞ்சுட்டாங்களாம். மூணு மாசமா இப்படித்தான் இருக்காம். நேத்து கூட எங்கேயோ கூட்டிட்டுப் போய் மந்திரிச்சு வந்திருக்காங்க.. நாங்க இப்ப அதைப் பத்தி தான் பேசிட்டிருந்தோம்” உமா இப்படிச் சொல்லும் போது அவள் கண்களில் ஒருவித இன்பம் இருந்தது. இதைக் கதைப்பதில் என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது? ஏன் எந்த சோக சாயையும் அவளிடத்தில் இல்லை? உண்மையில் இதைச் சொல்லும் போது அவள் கண்கள் பரிதாபத்தைக் காட்டியிருக்க வேண்டாமா? உதடுகள் உச் கொட்டியிருக்க வேண்டாமா? தாயுடன், அண்ணியுடன் சிரித்துப் பேசுவதற்கான பொருளா இது? உமா திரும்ப கொல்லைப்புறத்திற்கே சென்றாள். அந்த வளர்மதியைப் பற்றி இன்னும் சிரிக்க ஏதோ கதை இருக்கிறது வீட்டின் ஏனைய பெண்களிடம்.
நான் சோபாவிலிருந்து எக்கிக் கொண்டு அந்த வீட்டைப் பார்த்தேன். அந்தப் பெண் எங்காவது தெரிகிறாளா என்று பார்த்தேன். ஒரு மத்திம வயது பெண்மணி என் மாமியார் சாயலில் இரண்டாள் உயர அலக்கை வைத்துக் கொண்டு வீட்டு வாசலில் முருங்கை அடித்துக் கொண்டிருந்தாள். முழங்கையளவு வளர்ந்திருந்த முருங்கைகளை அவள் பொறுக்கிக் கொண்டு நிமிரும் போது, கையில் ஒரு மிஷின் கன்னை வைத்துக் கொண்டிருப்பவள் போல் இருந்தாள். அடிக்கடி எங்கள் வீட்டைப் பார்த்தாள். அங்கிருந்தே என்னைப் பார்க்கிறாளோ என்று எனக்கு தோன்றிக் கொண்டிருந்தது.
அந்த வளர்மதிக்கு என்ன வயசிருக்கும் என்று யோசித்தேன். உமாவிடம் கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. மெதுவாக எழுந்து வீட்டுப் பெண்கள் யாராவது பார்க்கிறார்களா என்று எட்டிப் பார்த்தேன். யாரும் பார்க்கவில்லை. வெளியே வந்தேன். முருங்கை பொறுக்கிய பெண் உள்ளே சென்றிருந்தாள். கல்யாணம் ஆன இந்த இரண்டு வருடங்களில் எத்தனையோ தடவை இங்கு வந்திருக்கிறோம். ஆனால் இப்போது தான் அந்த வீட்டை முழுதாகப் பார்த்தேன். பழைய சீமை ஓட்டு வீடு. வாசலில் இரண்டடி தாண்டி கம்பி வேலி அமைத்திருந்தார்கள். வேலியை ஓட்டினாற்போல் முளைத்திருந்த முருங்கை மரமும் வேப்பமரமும் வீட்டை ஒருவாறு மூடியிருந்தது. ஒரு பைத்தியம் இருக்கிற வீட்டை இதற்கு முன் எங்காவது பார்த்திருக்கிறேனா என்ற யோசனையில் பெட்டிக் கடை நோக்கி நடந்தேன்.
வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தள்ளி இருக்கும் அந்தப் பெட்டிக் கடை அண்ணன் தவிர இந்த ஊரில் எனக்கு வேறு பழக்கமில்லை. ஆங்காங்கே சொந்தக்காரர்கள் தான் எனினும் யாரையும் இன்னார் என்று என்னால் நினைவில் இருத்திக் கொள்ளவே முடிந்ததில்லை. பக்கவாட்டில் இருந்து ஒரு நரைத்த தொங்குமீசை ”என்ன பரிமளம் மாப்ளையா போறது?” என்றது.
”ஆமாங்க.. சவுக்கியமா?” என்றேன். திண்ணையில் உட்கார்ந்திருந்தவர் யாரென்று தெரியவில்லை. நிச்சயம் ஏதாவது சொந்தமாகத் தான் இருக்கும். அவருக்கு என்னை தூரத்திலிருந்தே தெரிந்திருப்பதை வியந்தபடி நடந்தேன்.
”ஒருவா காப்பித் தண்ணி குடிங்களேன்” என்றவரின் அன்புக்குச் சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டு நடந்தேன். பெட்டிக் கடைக் காரரும் ”அடடே.. சென்னை மாப்ளே.. எப்ப வந்தீங்க.. சோடா குடிக்கிறீங்களா?” என்றார். நான் மறுத்துவிட்டு, பாட்டிலைத் திறந்து இரண்டு முறுக்கை எடுத்தேன்.
என் முகத்தில் கேள்விகள் தொங்கிக் கொண்டிருப்பது, அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். வியாபாரம் ஏதுமின்றி உட்கார்ந்திருந்தவர் நான் முறுக்குக் கடிப்பதைப் பார்த்துச் சிரித்தார். ஒரே கடியில் முக்கால் பங்கு முறுக்கு வாய்க்குள் போனதை அவர் பார்த்த தினுசு சென்னையில் முறுக்கே கிடைக்காதோ என்பதாய் இருந்தது.
”எதுத்த வீட்ல என்ன அண்ணே?” என்ற என் கேள்வி அவருக்கு அப்பட்டமாக புரிந்தது என்பது அவர் கண்களில் தெரிந்தது. ஆனாலும் பலகைக் கட்டையில் உட்கார்ந்திருந்தவர், எழுந்திருப்பதற்குத் தொங்கும் கயிறைப் பிடித்துக் கொண்டு, எந்த நேரமும் எழுவார் என்ற முஸ்தீபில் ”என்ன ஆச்சு?” என்றார். அவர் முகத்திலும் உமா முகத்தில் பார்த்த அதே இன்பம்.
உச்சியில் சூரியன் பனிரெண்டிலிருந்து ஒன்றுக்கு நகரும் சூடு இறங்கிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தை விட்டால் அவருக்கும் இதைக் கதைக்க வாய்க்காது போல ஆர்வமாக என்னை அருகில் அழைத்தார். சற்றுத் தள்ளி பெஞ்சில் உட்கார்ந்திருந்தவன் எழுந்து அவர் அருகே சென்றேன்.
வளர்மதி பைத்தியமான கதையைச் சொன்னார். அவளுக்கு வயது இருபது இருக்கும். மூன்று மாதத்துக்கு முன்பு ஒரு நாள் வழக்கமாக காலேஜ் முடித்து மாலை ஐந்து மணியளவில் வருபவள், மதியம் ஒரு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்திருக்கிறாள். அதுவும் அம்மாப்பேட்டையில் இறங்கி மலையபுரத்துக்கு நடந்தே வந்திருக்கிறாள். வரும் போதே ஜுரத்துடன் இருந்தாளாம். அன்று இரவு அவள் அப்பா தூங்கும் போது கழுத்தை நெறித்துக் கொல்லப் பார்த்தாளாம். அன்றைக்குத் தான் அவளைப் பேய் பிடித்திருப்பதாகவும், பைத்தியம் பிடித்திருப்பதாகவும் மாறி மாறி ஊரில் கதைகள் உலவுவதைச் சொன்ன பெட்டிக் கடைக் காரர்,
”கருப்புக் கோயில் பின்னாடி இருக்கிற வேப்ப மரத்துல நாண்டுக்கிட்டு செத்துப் போனான் கேசவன். அவன் தான் இவ மேல் ஏறியிருக்கான். உச்சி உருமுற நேரத்துல அந்தப் பக்கம் வர்றதுக்கு நானே பயப்படுவேன். இவ பொம்பளப் புள்ள ஒண்டியா நடந்து வந்துருக்கா.. பிடிச்சுட்டான். அவளுக்குப் பைத்தியமெல்லாம் இல்ல தம்பி. அவன் போய்ட்டா நல்லாயிடுவா!”
வளர்மதி பைத்தியமும் இல்லை, பேயும் இல்லை. ஏதோ சின்ன மனக் கோளாறு என்று மட்டும் எனக்குப் புரிந்தது. சரியான உளவியல் மருத்துவம் செய்துவிட்டால் சரியாகிவிடுவாள். இவை எதுவும் கடைக்காரர் பார்த்த விஷயங்கள் இல்லை. எல்லாமே கேட்டவை. சர்வ நிச்சயமாக இது அத்தனையும் உண்மை இல்லை. போலவே இவற்றுள் உண்மை எங்கோ ஒளிந்திருக்கிறது. ஏனோ திடீரென்று இன்னும் ஒரு தடவை கூட நேரில் பார்த்தறியாத அவளை சரி செய்துவிட வேண்டும் என்று எனக்கு ஆர்வம் வந்தது. அந்த அலறல் திரும்பத் திரும்ப காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. நகரத்தில் யாரும் பேயைப் பற்றிப் பேசுவதே இல்லை. ஆனால் ஸ்ட்ரெஸ் பற்றிப் பேசுகிறோம். எனக்கென்னவோ இரண்டும் ஒன்றோ என்று தோன்றுகிறது. அல்லது அதீத மன அழுத்தத்தைத் தான் கிராமத்தில் பேய் அல்லது பைத்தியம் என்றுவிடுகின்றனர்.
வீடு அருகில் வந்த போது உமா வாசல் அருகில் வந்திருந்தாள். கையில் முறுக்கு இருப்பதைப் பார்த்துவிட்டு ”சாப்பிடப் போற நேரத்துல என்னத்துக்கு தீனி? எதையாவது தின்னுட்டு பசி இல்லன்ன வேண்டியது..” என்று அலுத்துக் கொண்டே உள்ளே சென்றாள். நான் எதிர் வீட்டைப் பார்த்தேன். நிலைவாசல் ஒரு கதவு மூடி, ஒரு கதவு திறந்திருந்தது. நைட்டி அணிந்த கெச்சலான மாநிற உருவம் ஒன்று சட்டென்று இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் சென்றது. வளர்மதி?
மறுபடி வந்து அதே சோபாவில் உட்கார்ந்தேன். அரைமணி நேரம் டிவி பார்த்தேன். வாசலில் பைக் சத்தம் கேட்டது. மச்சான் துவரம் பருப்பும் உருட்டு உளுந்தும் சேர்த்து அரைத்தால் கிளம்புகிற வாசனையில் உள்ளே வந்தார். கை கால் கழுவிவிட்டு வந்த அவரும் நானும் சாப்பிட உட்காரும் போது
”எதிர்த்த வீட்ல என்ன மச்சான் பிரச்சனை?” என்றேன். லோட்டா தண்ணீரை தொண்டையோடு சேர்த்து கழுத்து நனையக் குடித்தவர், மாமியாரையும் பிருந்தாவையும் ஒரு சேரப் பார்த்தார். அந்தப் பார்வையில் வேறு கதியின்றி மாப்பிள்ளையையும் ஊர்கதை பேச கூட்டாளி ஆக்கிவிட்டீர்களா என்ற கேள்வி இருந்தது.
”என்னாச்சு..?” என்று மச்சான் கேட்கும் போதே பிருந்தா என்னிடம் திரும்பி ”அண்ணே சாப்டுட்டு பேசுங்களேன்” என்றாள். அவளுக்கு ஓடியாடி உழைக்கிற கட்டை, தன் புருஷன் ஒழுங்காகச் சாப்பிட வேண்டும். அவள் அப்படிச் சொன்ன பிறகு நாங்கள் இருவருமே ஒரு வார்த்தை பேசவில்லை. சத்தமில்லாமல் சாப்பிட்டோம். எழுந்து கை கழுவும் போது கொல்லைப் புறத்தில் வேலி தாண்டி ஒரு பெரிய வேப்பமரம் தெரிந்தது. முன்பின் பார்த்திராத தூக்குப் போட்டுச் செத்த கேசவனை நினைத்துக் கொண்டே உள்ளே வந்தேன். உமா பூத்துண்டை நீட்டினாள். வந்து ஹாலில் உட்கார்ந்தேன். மச்சான் வெற்றிலை மடித்துக் கொண்டே என்னிடம் தட்டை நீட்டினார்.
”விடிகாலைல நீங்க வர்றதுக்கு முன்னாடியே கொள்முதலுக்கு தஞ்சாவூர் போயிட்டேன்.. ட்ரையினா பஸ்ஸா?” மச்சானின் பாஷை வெற்றிலை வாயில் இருந்ததால் ஒரு தவில் வித்வானை ஞாபகப்படுத்தியது.
ஐந்து நிமிடம் சும்மா உட்கார்ந்திருந்தோம். அவராகவே ஆரம்பித்தார். ”நல்ல பொண்ணு தான் மாப்ளே.. அப்பன் சரியில்லை. குடி.. கூத்தியானு அலையறவன். வெச்சிருந்த கொஞ்ச நஞ்ச நிலத்தையும் வித்துத் தீர்த்துட்டான். ஊரைச் சுத்திக் கடன். அம்மாப்பேட்டை பெட்ரோல் பங்க் பக்கத்துல ஃபைனான்ஸ் விட்டுட்டுருக்கான் ஒருத்தன். ரவுடிப் பய வேற. நீங்க கூட பாத்திருப்பீங்க.. அம்மாம் பெரிய புல்லட்ல அதைவிட பெருசா குதிர் கணக்கா இருப்பான். உங்களை விட சின்னப் பய தான்.” என்றுவிட்டு மறுபடி இரண்டு வெற்றிலையை எடுத்து தொடையில் தடவினார்.
எனக்கு எங்கே பேச்சு நடுவில் அறுந்து வேறு திசை சென்றுவிடுமோ என்று தவிப்பாக இருந்தது. அறையின் நிலை அருகே பிருந்தாவும் உமாவும் மூலைக்கு ஒருவராக நர்த்தனமாக நின்று கொண்டிருந்தார்கள். பிருந்தாவிடம் தெரிந்தக் கதையை திரும்பக் கேட்கும் ஆர்வமும், உமாவிடம் புதிதாக அண்ணன் என்ன கதை சொல்கிறார் பார்க்கலாம் என்ற பேரார்வமும் இருப்பதை உணர முடிந்தது. மாமியாரைக் காணவில்லை. ஆனால் பின்னால் பாத்திரம் உருள்கிற சத்தம் கேட்டது.
”அவனுக்கு இவ அப்பன், வட்டியோட சேர்த்து நாலரை லட்சத்துக்கும் மேல பணம் தரணும். அம்புட்டு பணத்தை அப்படி என்ன தான் செஞ்சான்னு தெரியலை தாயேலி! பணத்தைக் கொடு இல்ல பொண்ணைக் கொடுனு அவன் சண்டை பிடிச்சிருக்கான். அம்மாக்காரிக்கு வேற வழியில்ல.. ஒரே ஜாதி வேற.. ஒத்துக்கிட்டா.. ஆனா பொண்ணு தான்.. ரொம்பப் பிடிவாதம். வீட்டுக்குப் பொண்ணு கேட்டு வந்தவனை.. ரவுடிப் பயலை கட்டிக்க மாட்டேன்னு சபைலயே வெச்சு அவ சொல்லிட்டா.. விஷேசத்துக்கு வந்த சனமெல்லாம் பார்த்துச்சு. அவனுக்கு அசிங்கமாப் போச்சு. என்னைத் தாண்டி எவன் உன்னைக் கட்றான்னு நானும் பார்க்கிறேன்னு சொல்லிட்டுத் தான் போனான் அந்தப் பய..” என்று மச்சான் நிறுத்தியதும், விறுவிறுப்பு சற்றும் குறையக் கூடாது என்று நினைத்தவள் போல பிருந்தா,
”நல்லாத் தெரியும்ணே.. இந்த சம்பவம் நடந்து அடுத்த வாரத்துலயே அவ பைத்தியமாகிட்டா.. அந்தப் பய தான் செய்வினை வெச்சிருப்பான்” என்றாள். முகத்தை அந்த ஃபைனான்ஸ்காரனை சபிப்பது போன்ற பாவனையில் வைத்திருந்த பிருந்தா, கை விரல்களில் நெட்டி முறித்தாள். அது அந்த வட்டிக் கடைக் காரனை கரித்துக் கொட்டுவது போல் தான் இருந்தது.
”ஊருக்குள்ளே பேய் பிடிச்சிருக்குனு சொல்றாங்களே” என்றேன் நான். ஓர் ஆர்வமிகுதியில் இப்படி நான் சொல்லிவிட்டாலும் ஏன் சொன்னோம் என்று பிறகு தான் யோசித்தேன். மூவரும் என்னைக் குறுகுறுவெனப் பார்த்தார்கள்.
பெட்டிக் கடைக்குப் போனது இதுக்குத் தானா என்றன உமாவின் கண்கள். பொம்பளை ஆளுங்களுக்கு சரிசமமாக உட்கார்ந்து ஊர்கதை பேசுவீங்களா மாப்ளை என்று கேட்காமல் கேட்டன மச்சானின் கண்கள். பிருந்தா மட்டும் இந்த விஷயம் தனக்கே புதிது என்பது போலப் பார்த்தாள்.
”ஆமாமா.. கருப்புக் கோயில் கிட்ட தூக்குப் போட்டு செத்த கேசவன் தான் புகுந்திருக்கானு ஒரு பேச்சு இருக்கு. இதுங்க கிட்ட நானே சொல்லலை. சொன்னா பயந்துடுங்க.. உங்களுக்கு யார் சொன்னா?” மச்சான் கேட்டாரே தவிர என் பதிலுக்குக் காத்திருக்கவில்லை. கொஞ்சம் நேரம் படுத்துவிட்டு கடைக்குக் கிளம்பணும் என்று எழுந்து கொண்டார்.
ரூமில் தூங்கி எழுந்து மாலை ஹாலுக்கு வந்தேன். மறுபடி மாமியார் ”மாப்ளை டிவி பார்க்கறீங்களா?” என்றார். டிவி பார்ப்பதானால் நானே ரிமோட்டை எடுத்துக் கொள்ள மாட்டேனா என்று கேட்க நினைத்து பல்லைக் கடித்துக் கொண்டேன். முகம் அலம்பி வந்த பிறகு உமா காபியை நீட்டினாள்.
டம்ளரை வாங்கிக் கொண்டே வெளியே வந்தபோது எதிர் வீட்டில் இருந்து வெளியே வந்தவர் வளர்மதியின் அப்பாவாக இருக்க வேண்டும். கைலியும், கசங்கிய சட்டையுமாக அதிலும் பாதி பட்டன் போடாமல் இருந்தார். மண்டையில் இருந்த கொஞ்ச முடியும் முற்றாக நரைத்திருந்தது. தாடியும், மீசையும், புருவ முடியும் மண்டியிருப்பதைப் பார்த்தால் சலூனுக்குப் போய் வருடக் கணக்கு ஆகிவிட்டது தெரிந்தது.
ஸ்லிப்பர் அணிந்து கொண்டு சைக்கிளில் ஏறி மிதிக்கும் போது என்னை ஒரு தடவை பார்த்தார். சரியாகச் சொல்வதென்றால் முறைத்தார். நான் பார்வையைத் தழைத்துக் கொண்டேன். அவர் அந்தண்டை நகர்ந்ததும், அவசரமாகக் காபியை குடித்துவிட்டு டம்ளரை நிலைப்படியிலேயே வைத்துவிட்டு எதிர்வீட்டுக்கு விடுவிடுவென்று நடந்தேன். பின்னால் திரும்பி மாமியார் வீடு என்னைப் பார்க்கிறதா பார்த்தேன். இல்லை.
அடைத்திருந்த தட்டியை பொத்தினாற்போல் விலக்கி உள்ளே சென்று, கதவருகே நின்று கொண்டு ”அம்மா..” என்றேன். உள்ளே காயில் போன மின்விசிறி ஒன்று நொண்டிக் கொண்டிருக்கும் சத்தம் மட்டும் கேட்டது. அடுக்களையிலிருந்து பாத்திரச் சத்தமும் சேர்ந்து வரவே யாரோ இயக்கத்தில் இருப்பதை உணர்ந்தேன். குரலை மேலும் உயர்த்தினேன். எதிரில் திரும்பி எங்கள் வீட்டிலிருந்து யாராவது எட்டிப் பார்க்கிறார்களா என்றும் பார்த்துக் கொண்டேன்.
”யாரது?” என்றக் குரலைத் தொடர்ந்து அந்த முருங்கை அடித்த அம்மாள் வந்தார். அசடு போல சிரித்தேன். வியப்பு மேலிட என்னை ஏறிட்டவர் எனக்கு இங்கே என்ன வேலை என்பது போல குழம்பினார்.
”எதிர்வீட்டு மாப்பிள்ளை நானு”
”தெரியும். கல்யாணத்திம்போது வந்தமே.. நல்லா இருக்கீயளா. என்ன சேதி?” என்றவரின் கண்கள் இன்னமும் குழப்பத்தில் இருந்தன. என் மாமியாருக்கும் அவருக்குமே ஏதோ வாங்கல் என்று அறிந்திருந்தேன். எனவே என்னை இங்கு அவர் இப்படி அணுகுவதையே பெரிய அசந்தர்ப்பமாக உணர்ந்தார்.
”உள்ளே போய் பேசலாம்” என்றேன். அவர் பதிலுக்கோ, அனுமதிக்கோ கொஞ்சமும் நான் காத்திருக்கவில்லை. விருட்டென்று உள்ளே சென்றேன். எதிரிலிருந்து யாரும் என்னைப் பார்த்திரா வண்ணம் உள்ளே கூடத்தில் மறைந்து கொண்டேன்.
அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. சற்று முன்பு அவர் வெளியில் சென்றதைச் சொல்லி அவரிடம் ஏதும் சங்கதியா என்று தலையைச் சொறிந்தார்.
”உங்க பொண்ணைப் பத்தி விசாரிக்கலாம்னு” தயக்கம் எதுவும் இன்றி நேரடியாக விஷயத்துக்கு வந்தேன். வெளியூர்வாசி, இரண்டொரு நாள் எப்போதாவது ஊருக்கு வருகிற எதிர்வீட்டு விருந்தாளி, சம்பந்தமில்லாமல் இப்படி வந்து பேசுவதால் அவர் வியர்வையில் நனைந்து கழுத்திலிருந்து ரவிக்கையெல்லாம் ஈரமாகிக் கொண்டிந்தது. எனினும் உட்காரச் சொல்லி ஒரு மர நாற்காலியைக் காட்டினார். தயக்கம் அவருக்கு ஒருவித அசட்டுச் சிரிப்பைக் கொடுத்திருந்தது.
சிரித்துக் கொண்டே ”நீங்க கேட்கறது விளங்கலைங்க” என்றார்.
”அம்மா உங்க பொண்ணைப் பத்தி கேள்விப்பட்டேன். எனக்கு ரொம்ப பரிதாபமாப் போச்சு. இது பேயோ பைத்தியமோ இல்லை.. நாம மனசு வெச்சா சரி பண்ணிடலாம். எனக்குத் தெரிஞ்சு நிறைய சைக்கியாட்ரி டாக்டர்ஸ் அதாவது மனோதத்துவ டாக்டர் இருக்காங்க.. அவங்க கிட்ட அழைச்சிட்டுப் போனா போதும். ஏதாவது மன அழுத்தத்துல அவங்களுக்கு இப்படி ஆகியிருக்கும்”
”சரிங்க.. ஆனா எதுவா இருந்தாலும் அவங்க இருக்கும் போது அவங்க கிட்ட சொல்லுங்க.. என் கிட்ட சொல்லி என்ன ஆகப் போகுதுங்க..” என்றவர் வாசலில் எட்டி தன் புருஷன் வருகிறாரா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார்.
”இல்லம்மா அவரைப் பார்த்து எனக்கு பேசணும்னு தோணலை… பார்த்து எடை போடறது தப்புன்னாலும் அவர் இதைப் புரிஞ்சுசுக்குவார்னு தோணலை.. அதான் பெத்த அம்மா உங்க கிட்ட சொல்லிப் பார்க்கலாம்னு வந்தேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா நான் உங்க பொண்ணு கிட்ட பேசலாங்களா..?” – அந்த நிமிடம் நான் என்ன பெரிய மனோதத்துவ நிபுணரா என்று நினைத்துக் கொண்டேன். சென்னையில் பகல் பனிரெண்டிலிருந்து ராத்திரி பனிரெண்டு வரை பாதி காக்கையாகவும், பாதி ஆந்தையாகவும் வேலை பார்க்க வேண்டிய ஐடி ஆசாமி, எனக்கேன் இந்த வேண்டாத வேலை என்று தோன்றியது.
மன அழுத்தம் என்று வந்துவிட்டால் எனக்கே கூட அது சல்லிசாக எட்டிப் பார்க்கிறது என்று தான் நினைக்கிறேன். ஸ்ட்ரெஸ் இருந்தால் கூட குழந்தை உருவாவதில் பிரச்சனை வரலாம் என்று டாக்டர் சொன்னாரே! பனிரெண்டு மணி நேர வேலை, அந்த வேலையும் ப்ராஜெக்ட் என்று வெள்ளைக்காரன் கொடுக்கும் வரை தான். எல்லாமே ஒப்பந்தம். அதை நம்பி வாங்கிய இ.எம்.ஐ கடன்கள். எல்லாவற்றையும் விட கல்யாணம் ஆகி இரண்டு வருடமாக பிரம்மப் பிரயத்தனம் செய்தும் குழந்தை இல்லாத பிரச்சனை. வேறு எந்த அழுத்தத்தையும் விட சமூகம் கொடுக்கிற இந்த அழுத்தத்தை நானும் உமாவும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டிருக்கிற இந்த வேளையில் வளர்மதி பைத்தியமாக இருந்தால் என்ன பேயாக இருந்தால் எனக்கென்ன? ஆனால் அப்படி இருக்க முடியவில்லை. வந்து நின்று இந்த அப்பிராணி அம்மாவுக்கு புரிய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
”கூப்பிடறேன். வந்தா பாருங்க.. நாம பேசிட்டிருக்கிறதைக் கூட கேட்டுக்கிட்டு தான் இருப்பா. நல்லாத் தான் பேசிட்டிருப்பா.. திடீர்னு தான் மாறிப் பேசறா.. நம்பி தூங்கக் கூட முடியலை.. தலைல கல்லைத் தூக்கிப் போட்டுடுவேங்கறா.. அதிலயும் அவ அப்பாவைத் தான் முதல்ல கொல்லுவேங்கறா..ரெட்டை மஸ்தான் கோயில்ல மந்திரிக்கச் சொன்னாங்க.. மந்திரிச்சு கைல தாயத்து கட்டிவிட்டிருக்கோம்.. சரியா சாப்பாடு செல்லலை.. ஆள் துரும்பா எளைச்சுட்டா.. கம்ப்யூட்டர் படிச்சிட்டிருந்த பொண்ணு..நல்லா படிப்பா தம்பி!” அவர் பேச்சு பாதி, தேம்பல் பாதி என்று அழுது கொண்டே சொன்னார். அழாதீங்க சரியாகிடும் என்ற என் ஆறுதல் வார்த்தைகள் நாக்கின் நுனி வரை வந்து திரும்பிக் கொண்டன. வெற்றாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாட்டியிருந்த புகைப்படத்தில் தம்பதியர் நின்றுகொண்டிருக்க கீழே பட்டுப்பாவாடை சகிதம் இரட்டை ஜடையில் நின்று கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைப் பார்த்து ‘இது உங்கப் பொண்ணா?’ என்றேன்.
ஆமாம் என்பது போல் தலையாட்டியவர் ”இருங்க ரூம்ல இருக்கா கூப்ட்டுப் பார்க்கிறேன்” என்று ரூமிற்குச் சென்றார்.
வாசலில் தட்டுபுட்டென்று சத்தம் கேட்கவே எழுந்து பார்த்தேன். வளர்மதியின் அப்பா. அந்த நிமிடத்தில் நான் எப்படிச் சிரித்தேன் என்பதை நானே கண்ணாடியில் பார்க்க விரும்பினேன். சிரித்துக் கொண்டே வெளியே வர, அவர் என்னை முறைத்துக் கொண்டே ”என்ன தம்பி.. இங்க என்ன ஜோலி?” என்றார்.
”ஒண்ணுமில்லைங்க.. அம்மாப் பேட்டை போகணும் எதும் சைக்கிள் இருக்கானு கேட்கலாம்னு..”
”இங்க இருக்கிறது ஒரே சைக்கிள் தான்.. என்து.. அதிலயும் பிரேக் புடிக்காது. வேணுமா?”
”இல்ல பரவாயில்லை” என்று கழன்று கொண்டு ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்தேன்.
உள்ளே வந்ததும் ”திரும்ப எங்க போனீங்க முறுக்கு வாங்கவா.. இல்லா சொச்ச கதையைக் கேட்கவா?” என்றாள் உமா. எதிர்வீடு வரை சென்று வந்ததை அவர்கள் யாரும் அறியவில்லை.
நள்ளிரவில் இருமுறை வளர்மதி அலறினாள். உமாவும் எழுந்து கொண்டு ”பயமா இருக்குங்க..” என்றாள். அந்த இரவிலும் உமாவிடம் கிசுகிசுவென ”அவளுக்கு ஏதோ பயங்கர ஸ்ட்ரெஸ்.. அது சரியாகிட்டாப் போதும். இதுலருந்து என்னத் தெரியுது.. எதைப் பத்தியும் கவலைப்படக் கூடாது” என்றேன். உமா சிரித்துக் கொண்டே ”உங்களுக்கு நீங்களே சொல்லிக்கறீங்களா.. நமக்கு குழந்தை இல்லைனு என்னைவிட நீங்க தான் அதிகம் கவலைப்படறீங்க” என்றாள்.
மறுநாள் ஞாயிறு என்பதால் மச்சான் கடைக்கு லீவு விட்டிருந்தார். என்னை அழைத்துக் கொண்டு பைக்கில் திருக்கருகாவூர் பெரியகுளக்கரை சென்று உயிர்கெண்டை வாங்கினார். இரண்டு கிலோ துள்ளத் துடிக்க ஓயர் கூடையில் போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். முதல் நாள் காலை பதினோறு மணி சுமாருக்கு அலறிய வளர்மதி அதே போல் அலறுகிறாளா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அப்படி அவள் கத்தவில்லை. குறிப்பிட்ட நேரம் வைத்தெல்லாம் அவள் கத்துவதில்லை. தோன்றிய பொழுது கத்துகிறாள் போல என்று நினைத்துக் கொண்டேன்.
கழுத்து வரை மூச்சு முட்ட கெண்டை மீன் குழம்பை ருசி பார்த்துவிட்டு, எப்படியாவது இந்தப் பக்குவத்தை அம்மாவிடம் இந்த முறையாவது கற்றுக் கொண்டு விடேன் என்று உமாவிடம் கெஞ்சினேன்.
”அண்ணே இன்னிக்கு குழம்பு வெச்சது நானு?” என்று பெருமை பொங்கச் சொன்னாள் பிருந்தா. இரவு ஒன்பது மணிக்கு மலையபுரம் வரும் கடைசி பஸ்ஸில் தஞ்சை வந்து அங்கிருந்து சொகுசுப் பேருந்தில் சென்னை வந்து மேடவாக்கம் ஃப்ளாட்டில் வந்து அக்கடா என்று விழுந்த போது மணி திங்கள் காலை ஏழு. மதியம் பனிரெண்டு மணிக்கு ஷிஃப்ட். வழக்கமான குடுகுடு ரயில் வண்டி வாழ்க்கை.
ஒரு மாதம் சென்றிருக்கும். இடைப்பட்ட நாட்களில் எந்த ஒரு நொடியிலும் வளர்மதி என் நினைவில் வரவே இல்லை.
ஒரு ஞாயிறன்று ”கெண்டை மீன் வாங்கிட்டு வரேன்.. உங்கம்மா கிட்ட ஃபோன்ல கேட்டுக் கேட்டாவது அந்த ருசியைச் செஞ்சிடு” என்றேன். உமா முகத்தில் பல்பு எரிந்தவளாக
”என்னங்க ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். அந்த எதிர்வீட்டுப் பொண்ணு வளர்மதி இருக்காள்ல.. அவ சரியாகிட்டாளாம். பழையபடி காலேஜ் போக ஆரம்பிச்சு பத்து நாள் ஆகுதாம். தஞ்சாவூர்ல ஏதோ சைக்காலஜி டாக்டர்ட காட்டியிருக்காங்க.. நீங்க சொன்னது தான் சரி. பல வீட்டுப் பிரச்சனைல கவலைப்பட்டு ராத்திரி எல்லாம் தூங்காம இருக்குமாம் அந்தப் பொண்ணு.. அதனால.. ஏதோ மூளைக் கோளாறாகித் தான் அப்படிக் கத்தியிருக்கா.. டிப்ரஷனாம்.. மாத்திரை கொடுத்தே சரியாக்கிட்டாங்க..அதைவிட என்ன பெரிய கூத்துனா.. போன மாசம் ஒரு நாள் திடீர்னு என்னை சைக்கியாட்ரிஸ்ட்ட கூட்டிட்டுப் போங்கனு அந்த பொண்ணே சொல்லியிருக்கான்னா பாருங்களேன்..” என்று சொல்லிக் கொண்டே வந்தவள், சட்டென்று வாயைப் பொத்திக் கொண்டாள். பாத்ரூம் நோக்கி ஓடினாள். க்வேக் என்று அடி வயிறு பிரண்டு வாந்தி எடுத்தாள்.
எழுதியவர்
இதுவரை.
- நூல் விமர்சனம்29 July 2024பிரசாந்த்.வே எழுதிய “ஆனைமலை” நாவல் – ஓர் அறிமுகம்.
- சமூகம்1 December 2023சாதியத்திற்கு எதிரான சுயமரியாதை போராட்டம் !
- சிறார் பாடல்கள்8 June 2023பட்டம்
- சிறார் கதைகள்8 June 2023மாய வால் குரங்கு