17 September 2024

ழக்கத்துக்கு மாறாக சுகுமார் அன்று மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டான். அவனால், அலுவலக வேலைகளில் கொஞ்சமும் ஈடுபாடு செலுத்த முடியவில்லை.

மணி 5.30 தான் ஆகிறது. வேலை நேரம் முடிய இன்னும் 30 நிமிடங்கள் இருக்கிறது. ஆறு மாதத்துக்கு ஒருமுறை இது போல மேலதிகாரிகள் அலுவலகம் வருவதுண்டு. அவர்கள் வரும் நாட்களில் அனைவரும் அலுவலக நேரத்திற்கு முன்னரே இருக்கையில் இருக்க வேண்டும். மாலை 6 மணிக்கு முன்னர் எக்காரணம் கொண்டும் நகர முடியாது. 15 நிமிட காப்பி இடைவேளையும் ஒரு மணி நேர மதிய உணவு இடைவேளையும் கூட மிகக் கறாராகக் கடைபிடிக்கப்படும். தியானத்தில் இருக்கும் வாட்ச்மேன், கணினியில் சீட்டு விளையாடும் கணக்கர்கள், மதியம் கையெழுத்துக்கு மட்டும் வந்து செல்லும் அதிகாரிகள், டேபிளிலும் வெளியிலும் அரட்டை அடிக்கும் ஊழியர்கள் போன்ற வழக்கமான காட்சிகள் எவற்றையும் அன்று காண இயலாது.

“இது போலவே ஒவ்வொரு நாளும் இருந்தால் கம்பெனி எங்கயோ போய்விடும்” என்பது போலத்தான் இருக்கும். ஆனால் ஒரு நாளும் இப்படி இருக்காது என்பது வந்திருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் கூட தெரிந்த விஷயம் தான். தாங்கள் வந்திருக்கும் நாட்களில் ஒப்புக்காகவேணும் மரியாதை தருவது போலவும் பொறுப்பாக இருப்பது போலவும் நடந்து கொள்கிறார்கள் என்பதில் ஒரு சிறு திருப்தி அவ்வளவே.

இது போல அதிகாரிகள் வருவது என்பது வேலை பார்க்கும் அனைவருக்குமே மிலிட்டரி ட்ரில் போல கடினமான நேரம் தான். ஆனாலும் இன்றைக்கு சுகுமாரின் நிலை வேறு.

இதுவே எப்போதும் போல ஒருநாள் என்றால், சுகுமாரும் மற்றவர்களைப் போல வெறுமனே அலுத்துக் கொண்டு; நேரத்தை ஓட்டுவது குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பான். ஆனால் இன்று அவனால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இடத்தில் இருந்து எழுந்திரிக்கவே இல்லை.

இரண்டு முறை தேநீருக்கு அழைத்த சகாக்களுக்கும் சரிவர பதில் தராததால் அவர்களாகவே சென்று விட்டனர். மோகனா மட்டும் ஒரு தம்ளரில் அவனுக்கு பிடித்த ஏலக்காய் தேநீர் கொண்டு வந்து அவனிடம் வைத்தாள்.

“ரொம்ப யோசிச்சு குழப்பிக்காதீங்க சுகு. எல்லாம் நிச்சயம் சரியாகும். இந்தாங்க.. இந்த டீயை குடிங்க.”

அலுவலகத்தில் சுகுமாரின் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களை ஓரளவு அறிந்தது மோகனா மட்டும் தான். மோகனா மற்றவர்களைப் போல, பிறர் சொல்லி புலம்பும் கதைகளில் இருந்து அவர்களை எடை போடவோ, நியாயத் தீர்ப்பு சொல்லவோ முயற்சிப்பது இல்லை. அவள் வெறுமனே கேட்டுக்கொண்டிருப்பாள்.

அடுத்தவர்கள் சொல்வதை, காதுகொடுத்துக் கேட்பது எத்தனை ஆதரவான விஷயம்?! பெரும் குழப்பத்தில் வருபவர்கள் கூட மோகனாவிடம் அனைத்தையும் கொட்டி முடிக்கையில் அவர்களாகவே தெளிவாகி விடுவார்கள்.

பெரும்பாலும் அவர்களுக்கான விடை, அவர்களிடமே இருக்கும். சில நேரங்களில் அதிகபட்சமாக “ஒண்ணும் இல்லப்பா ரொம்ப குழப்பிக்காத. சரி ஆகிடும்” என்று மட்டும் சொல்லிச் செல்வாள்.

குழப்பம் அடைந்து எரிச்சல் மனநிலையில் வரும் நபர்களுக்கு மிகப்பெரிய அரவணைப்பாக மோகனாவுடனான உரையாடல் அமையும்.

“என்ன ஒரு மாய சக்தியோ மோகனா? உங்களை எல்லாருக்கும் பிடிக்குது. ஆனா நீங்களும் அதுக்கு நிச்சயம் தகுதியானவர் தான்.” என இரண்டொரு முறை சுகுமார் நேரடியாகவே சொல்லி இருக்கிறான்.

இன்று காலை குழப்பமும் கவலையுமாக இருந்த சுகுமாரை நலம் விசாரித்ததும் மோகனா தான்.

“என்ன ஆச்சு சுகு? முகம் வாட்டமே இருக்கே.. நீங்க பொதுவா இப்படி இருக்குற ஆள் இல்லையே.. எதுவும் பிரச்சனையா ? ”

முதலில் சாதாரணமாக கேட்கத் துவங்கிய மோகனாவுக்கு, அக்குரல் கேட்டு நிமிர்ந்த சுகுமாரின் கலங்கிய கண்களும் முக பாவனையும் விஷயத்தின் தீவிரத்தை உணர்த்தின.

“என்ன ஆச்சு சுகு? எதுவும் பிரச்சனையா ? ”

இந்த முறை மோகனாவின் குரலில் பழைய உற்சாகம் இல்லை.

“கல்யாணி வீட்டுக்கு வந்துருச்சு மோகனா.
…..
வீடே மயானமா கெடக்கு. யாருக்கும் யார்கிட்டயும் என்ன பேசுறதுன்னு தெரியல. கல்யாணியும் வந்ததுல இருந்து யார் கிட்டயும் பேசலை. ஆனா அது வந்திருக்குறத பாத்தா திரும்பி போகுற நினைப்பில் வரலைன்னு மட்டும் தெரியுது.”

“என்ன ஆச்சு சுகு. கடைசியா இதப் பத்தி பேசும் போதும் பிரச்சனை சரியாகிடும்னு தானே நினைச்சோம்? இப்ப ஏன் திடீர்ன்னு இப்படி …? ”

“தெரியல மோகனா. என்ன ஏதுன்னு தெரியல. என்ன நடந்ததுன்னு கேட்குறதுக்கான துணிவோ அருகதையோ கூட எனக்கு இருக்குறதா நான் நினைக்கல.
…..
என்னால கேட்க முடியல மோகனா. பாட்டி தான் கேட்டுச்சு. ஆனா அதுக்கும் எந்த ஒரு வார்த்தையும் சொல்லாம அழுதிட்டு மட்டுமே இருந்துட்டா. பாவம்… அவளால தான் என்ன சொல்லிட முடியும்? இல்ல சொல்லி தான் என்ன ஆகிட போகுது?”

“ஹ்ம்ம்ம்ம்.”

சமீபகாலமாக, சுகுமாரின் பேச்சில் நிறைய மாற்றங்களை மோகனாவால் உணர முடிகிறது. முன்னர் இருந்த இறுக்கமான மனநிலை இப்போது இல்லை. அவர் யோசிக்கிறார். காலமும் அதன் கோலமும் இந்தப் பக்குவத்தை அவருக்குத் தந்திருக்க வேண்டும்.

சுகுமாரின் இந்த மாற்றம் குறித்து மகிழ்ச்சியே என்றாலும், இது இப்படியாக நிகழ்ந்திருக்க வேண்டாம் என்ற வருத்தம் தான்.

“சரியாகிடும் சுகு. தைரியமா இருங்க” என்று சொல்லி சுகுமாரின் தோளில் கைகளை வைத்து இருமுறை மெதுவாகத் தட்டிச் சென்றாள்.

சுகுமாருக்கு அந்தத் தொடுதல் மிகவும் அவசியமான தேவையாக இருந்தது. எதுவும் சரியாகிவிடவில்லை. ஆனால், ஏதோ ஓர் ஆறுதல் கிடைத்ததை அவனால் உணர முடிந்தது.

சகமனிதர்களின் இந்த இருத்தல், சமயத்தில் எத்தனை பெரிய விஷயமாக இருக்கிறது?! அதற்குத்தான் இங்கே எத்தனை மனிதர்கள் ஏங்கிக் கிடக்கிறார்கள்? ஒரு இருத்தல், ஒரு தொடுதல், ஒரு வார்த்தை, எப்படியானதோர் ஆறுதலை அளித்துவிடுகிறது.

சிந்தனையில் இருந்து தெளிந்தவனாய் மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தான். மணி 5.40 ஐ தாண்டவில்லை. முதன்முறையாக மிகப்பெரிய விலங்கு தன் காலில் கட்டப்பட்டதைப் போல உணர்ந்தான். கடிகாரத்தை ஆழ்ந்து பார்க்கலானான். நொடி முள்ளின் ஆர்ப்பாட்டமான பயணத்தின் ஊடாக, மெதுவாக, ஆழ்ந்த தியானத்தில் நகரும் நத்தையைப் போல ஊர்ந்து கொண்டிருந்தது அந்த நிமிட முள்.

சுகுமார் அதையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். அமைதி அவனைத் தொற்றிக் கொண்டது. மீண்டும் சிந்தனையில் மூழ்கினான். நேற்றைய நிகழ்வுகள் யாவும் கண்முன் விரியத்துவங்கின.

சில நாட்களாகவே சென்னையில் விடாது மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று வீட்டிற்குச் செல்லும் போதும் கூட அதே நிலை தான். இப்போதெல்லாம் இந்த சாலைகள் ஒரு மழைக்குக் கூடத் தாங்குவதில்லை. குறிப்பாக வீட்டின் அருகே பாலத்தை ஒட்டி இருக்கும் கண்ணியப்பா சாலை சிறு மழைக்கும் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. 5 வருடம் முன்னர் அந்தப் பாலம் கட்டியதில் இருந்து இதே நிலை தான். ஏற்கனவே பள்ளமான அந்த சாலை, வாய்க்கால்களும் அடைக்கப்பட்டு, நீளமான நீர்த்தேக்கமாக ஆகிப்போனது.

அதற்கு மேல் வண்டியில் போவது சரிவராது என்ற நிலையில் அவனது ஸ்ப்லெண்டர் வண்டியை அருகில் உள்ள நண்பன் வீட்டில் நிறுத்தி விட்டு, நடந்து செல்வது என்று முடிவெடுத்தான். பொதுவாகவே மழைக்காலங்களில் இங்கு நிறுத்திச் செல்வது வழக்கம்தான் என்றாலும், எந்த வருடமும் அவன் இது போல, கோடையில் மழை பெய்து பார்த்தது இல்லை.

வண்டியை நிறுத்தித் தண்ணீரில் இறங்கி, வீட்டிற்கு சென்ற சுகுமாருக்கு வீட்டைக் கண்டதும் எரிச்சல் தான் வந்தது. வெளி லைட்டைக் கூட போடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எரிச்சல்பட்டுக் கொண்டே கதவைத் திறந்தவுடன் அவன் முதலில் கண்டது கல்யாணியைத்தான்.

இறுக்கமான நிலையில் கால்கள் இரண்டையும் பிடித்து மடக்கி அணைத்தவாறு அவள் அமர்ந்திருந்தாள். இதற்கு மேலும் இந்த உலகத்தைப் பார்க்கச் சகியாதவள் போல முகத்தை கவிழ்த்து காலோடு சேர்த்துப் புதைத்துக் கொண்டிருந்தாள். அவள் அழவில்லை. வேறு வார்த்தையில் சொல்வதானால் இனியும் அழுவதற்கு அவளிடம் கண்ணீர் மிஞ்சியிருக்கவில்லை.

முழுவதும் நனைந்து வந்திருந்த சுகுமார் கல்யாணியைக் கண்டு திகைத்து நின்றான். அவனது ‘கோட்’டின் ஈரம் கீழே வடிந்துகொண்டே இருந்தது. அவன் ‘கோட்’டை கழட்டி வெளி ‘ஹேங்கரி’ல் மாட்டி உள்ளே நுழைந்தான். பாரம் தொற்றிக் கொண்டது.

வீட்டிலிருந்த மற்றவர்களைப் போலவே அவனும் எதுவும் பேசவில்லை. அவனிடம் பேசுவதற்கு வார்த்தைகளும் இல்லை. கல்யாணியின் அருகில் அந்த தொழிற்சங்க பொன்விழா ‘பேஃக்’ கும் இருந்தது.

அது சுகுமாருடையது தான். அவனுக்கு சங்கத்தில் கிடைத்தது; மிகவும் ஆசையுடன் சுகுமார் பரணில் வைத்திருந்தது. கல்யாணிக்குச் சீர் கொண்டு போகும் போது அவளுடைய துணிகள், நகைகள் எல்லாம் கொண்டு செல்ல தோதாகப் பை தேடிக்கொண்டிருக்க, அதற்காகவே எடுத்து வைத்தவனாய் ஓடிப்போய் எடுத்து வந்தான். அவற்றில் அவளின் உடைகளையும் நகைகளையும் சேர்த்து வைத்து ஆசையாய் மூடி, தானே தூக்கியும் சென்றிருந்தான். அவனுக்குப் பிடித்து, அவன் அவனுக்காகச் செய்து கொண்டதைக் காட்டிலும் அவனுக்குப் பிடித்ததை கல்யாணிக்குக் கொடுத்து மகிழ்வதில் தான் அவனுக்கு அலாதியான இன்பம். ஆனால், விருப்பங்கள் மற்றவருக்கும் அப்படியே இருக்க வேண்டும் என்பதில்லையே? நமது விருப்பங்களை பிறர் மீது சுமத்தும் போது அதுவும் அவர்களுக்குச் சுமை தான்.

சுகுமார் ஆசை ஆசையாய் தூக்கிச் சென்று குடுத்து வந்த அந்த ‘பேஃக்’ நிறைய பொருட்களுடன் கல்யாணி திரும்பி வந்திருக்கிறாள். மீண்டும் செல்லும் நிலையில் அவள் இல்லை என்பது மட்டும் நிச்சயமாய்த் தெரிகிறது.

அவன் அந்த இடத்தில் எதுவும் பேச விரும்பவில்லை. கனத்த மௌனத்துடன் உள்ளே சென்றான். வெற்றிடத்தை எடை குறைவென அறிவியல் சொல்லும். ஆனால், வெறுமையின் கனம் அதிகம்.

உள்ளே சென்று நடந்தவை அனைத்தையும் மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். வீட்டில் யாரும் சாப்பிடவில்லை. பாட்டி மட்டும் கத்தியிருக்கிறாள். ‘குடிய கெடுக்க வந்தவளே, சீரழிச்சது போதாதா, ஓடுகாலி கழுதை’ என வழமையான வசை. அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிறது. அந்த மனுசன் இருந்திருந்தா நிச்சயம் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். அவர் கொஞ்சமும் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. எதிர்வாதங்களை எதிரியின் வாதமாகவே பார்த்துப் பழகியவர். ஊரார் பிரதிநிதி.

சுகுமாரும் இரவு தூங்கி இருக்கவில்லை. குழப்பம், வருத்தம், குற்றவுணர்வுடன் சேர்ந்த அந்த இருட்டு அவனை மேலும் அச்சுறுத்தியது.

சுகுமாருக்கு அப்பா என்றால் உயிர். சிறு வயதில் இருந்தே அவரைப் பார்த்து வளர்ந்தவன். வெள்ளைச் சட்டையும் வேஷ்டியும் உடுத்தி மீசையை முறுக்கி விட்டுச் சென்றாரானால் மன்னர் வம்சாவழியாக அன்றி, மன்னராகவே தெரிவார். அவரைப் பார்த்து தான் மீசை வளர்த்துக் கொண்டான்.

கல்யாணியின் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் அப்பா தலைமையில் தான் நடைபெற்றன. சுகுமார் தான் அதை முன்னின்று செய்து முடித்தது. அப்போதெல்லாம் அவன் இளவரசனாகவே தன்னை பாவித்துக் கொள்வதுண்டு.

ஆனால் நிதர்சனம் வேறாக இருந்தது. காலம் சில கற்பிதங்களை சுக்கு நூறாக உடைத்துப் போட்டது. அப்பா வேலை இழந்து நின்ற போதும், குடல் இறக்கம், மாரடைப்பு என தொடர்ந்து அவர் அவதிக்குள்ளான போதும், மொத்த குடும்பமும் ஊரை விட்டு சென்னையில் தஞ்சம் புகுந்த போதும், சிகிச்சைகளுக்கு பணம் இன்றிக் கையறு நிலையில் நின்ற போதும், வங்கியில் இருந்து வீடு தேடி வந்து இழிவாக… மிகவும் இழிவாக பேசி விட்டுப் போன போதும் அந்தக் கற்பிதங்கள் அனைத்தும் அணு அணுவாக உடைத்தெறியப்பட்டன.

வாளும் கேடயங்களும் இன்றி, கவசம் இழந்த வெற்றுடலாக வெறுமையில் ஆழ்ந்து போனான். அவ்வப்போது கல்யாணி ‘போனி’ல் அழும் போதும் கல்யாணி குறித்த செய்திகளை கேட்கும் போதும் சுகுமார் மிகுந்த குற்றவுணர்வுக்கு ஆளாவதுண்டு. உடைந்து அழுவதைத் தவிர, வேறெதுவும் புரியாத நிலை.

ஆனால், தற்போது பிரச்சனை அது மட்டுமாக இல்லை. மதியம் மோகனா பேசிச் சென்றதில் இருந்து கொஞ்சம் தெளிவாகவே இருந்தான். ஆனால், அதற்கு பின் வந்த ‘போன் காலு’ம் அதில் அவன் கேட்ட விஷயமும் அவனை இன்னமும் அழுத்தி அமுக்கியது.

“கல்யாணி வீட்டில் இல்லை.”

மனைவியும் பாட்டியும் வேலையாக இருந்த சமயம், அவள் வீட்டை விட்டுச் சென்றிருக்கிறாள். நிச்சயம் அவள் திரும்பவும் அந்த மிருகத்திடம் சென்றிருக்க மாட்டாள். வேறெங்கு சென்றிருப்பாள் என கொஞ்சமும் யூகிக்க முடியவில்லை. வேறெதுவும் தவறான யோசனைக்குள் போகும் அளவுக்கு கல்யாணி பலவீனமான பெண்ணும் அல்ல. ஆனால்… வேறெங்கு சென்றிருப்பாள் ?

“சுகு … வாங்க போகலாம்.”

நினைவில் இருந்து மீண்டு திரும்பினான். மோகனா தான் அவன் தோளைத் தொட்டு அழைத்தது. ரொம்ப நேரமாக கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாள் போலும். மணி 6.10 ஆகிவிட்டது.

கண்களைத் துடைத்துவிட்டுக் கொண்டவனாக எழுந்தான். தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான். எப்போதும் பார்க்கிங் வரை அவர்கள் எல்லோரும் பேசிக்கொண்டு போவதும் சில நேரம் வெளியே தேநீர் கடைக்குச் சென்று ஏதேனும் சாப்பிட்டு விட்டுப் போவதும் கூட வழக்கம்தான். ஆனால், இன்றைக்கு சுகுமாரின் நிலை சரி இல்லை என்பதாலும் அவரை தொல்லை செய்ய வேண்டாம் என்பதாலும் அனைவரும் கிளம்பி இருந்தனர். மோகனா மட்டும் வந்து அழைத்திருந்தாள்.

இருவரும் ஒன்றாக பார்க்கிங் சென்றனர். சுகுமார் தனது ஸ்ப்லெண்டர் அருகில் போவது வரை மோகனா எதுவும் பேசவில்லை.

“சரி… சுகு. பாத்து போயிட்டு வாங்க.”

“ஹ்ம்ம்”

“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு தானே. முடிஞ்சா பக்கத்துல ஏதாவது கோவில் போய் கொஞ்ச நேரம் உக்காந்துட்டு போங்க, இல்லை ஏதாவது பூங்காவில் உக்காந்துட்டு போங்க. இதே மனநிலையில் வண்டி ஓட்ட வேண்டாம். பாத்துக்கங்க. take care”

மோகனா அவ்வளவாக கோவில்களுக்குச் செல்வதில்லை. எப்போதாவது உடன் இருக்கும் நண்பர்கள் செல்லும் போது அவர்களுடன் செல்வதுண்டு. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் கடவுளைவிட மனிதர்களை அதிகமும் நேசிக்கிறார்கள். சுகுமாருக்கு இது நன்றாகவே தெரியும். இந்த இடத்தில் அவன் என்றில்லை, யாராக இருந்தாலும் மோகனா இப்படித்தான் நடந்து கொண்டிருப்பாள். இவர்களால் எப்படித்தான் இப்படி இருந்து விட முடிகிறது?!

மோகனா சென்று தனது ஸ்கூட்டரை எடுத்துக் கிளம்பினாள். சுகுமாரும் தனது ஸ்ப்லெண்டரை உதைத்துக் கிளம்பினான். அவனுக்கும் மோகனா சொல்வது தான் சரி என்று பட்டது. இந்த நிலையில் நாம் வண்டி ஓட்டுவது சரி அல்ல. அது மட்டும் அல்ல.. எங்கே செல்வது என்று எதுவும் தெரியாமல் எந்த பாதையில் செல்வது? அருகில் இருந்த பூங்கா நோக்கி வண்டியைச் செலுத்தினான்.

வண்டி 20 கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டவில்லை. அவன் மீண்டும் சிந்தனையில் மூழ்கினான். அவள் ஒருவேளை அங்கே சென்றிருப்பாளோ?
அவளுக்கான ஆறுதல் அவனிடம் தான் கிடைக்கும் என அவள் நினைத்திருக்கலாம்? ஹ்ம்ம், இத்தனைக்கு பிறகும் மயான இருளில் இருக்கும் இந்த வீட்டில் அவள் என்ன மாதிரியான ஆறுதலை எதிர் பார்த்திட முடியும்? நொந்து போயிருப்பாள்.

நேற்றைக்கு ஏதாவது பேசியிருக்கலாம். பாட்டி வழக்கம் போல வசை மாரி பொழிந்து கொண்டிருந்தாள். தன் மனைவியாலும் எதுவும் பேசி விட முடியாது. இது போன்ற விஷயங்களில் அவள் தனது முடிவின்றி எதுவும் சொல்லிவிட முயற்சிக்க மாட்டாள் என்பதும் தெரியும். அங்கே பேச முடிவதும் தான் மட்டும்தான். பேசியிருக்க வேண்டியதும் தான் தான்.

இது போன்ற எந்த ஒரு நேரத்திலும் தனக்காக நின்றிராத அண்ணன், இப்போதாவது நிற்பான் என்ற நம்பிக்கையில் அவள் தன்னை தேடி வந்திருக்க கூடும். அவள் சரியான தங்கையாக இருக்கிறாள்; இருந்திருக்கிறாள். ஆனால் தான் தான் அவளுக்கு ஒருக்காலும் அவளை புரிந்துகொள்ளும் அண்ணனாக இருந்தது இல்லை.

இப்போது மட்டும் அல்ல. அன்றைக்கு அந்த திலீபனைக் காதலிப்பதாக அவள் சொன்னதும் இதே நம்பிக்கையில் தானே…

வேலை முடித்து வந்தவளை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கூட்டி வந்து கொண்டிருக்கும் போதுதான் சுகுமாரிடம் அந்த விஷயத்தை கல்யாணி சொன்னாள். ‘ஆக்சிலரேட்டரை’ இறுக்கிப் பிடித்த கைகளுடன் திலீபன் குறித்த விசாரணைக்குள் சென்றான். அவனது முதல் கேள்விக்கே முற்றிலும் ஒவ்வாத பதிலாக வந்ததது.

விருட்டென வண்டியை வீட்டிற்கு விட்டான். வந்த வேகத்தில் பிரச்சனை தொடங்கிற்று. சரமாரியாக ஏசத் தொடங்கினான். சத்தம் கேட்டு வந்த அப்பாவும் பாட்டியும் அவனுடன் சேர்ந்து கொண்டனர். பொறுப்பை அவனது அப்பா எடுத்துக் கொண்டார். அவன் அமைதியாக, அவர் களமாடினார். அவரது மீசை துடிக்கத் துடிக்க கத்தி கூச்சல் இட்டு அடிக்கத் துவங்கினார். தனது ஆசைத் தங்கை தன்புறுவதை பார்த்தும் தன்னால் எப்படி இறுக்கமாக இருக்க முடிந்தது? இப்போது நினைக்கும் போதும் அவனால் நம்ப முடியவில்லை. தான் ஒரு போதும் அவளுக்காக ஒன்றுமே செய்ததில்லை என்றும் தனக்கான விருப்ப மூட்டைகளை மட்டுமே அவள் மீது ஏற்றியிருக்கிறோம் என்றும் உணரும் சமயம், அவன் மனதில் ஏதோ மிகக்கூராக குத்தியதாக உணர்ந்தான். அச்சுமைகள் அத்தனையும் ஏற்று, தங்களின் மூர்க்கங்களையும் ஏற்று தனக்கு புன்னகை மட்டுமே அளித்திருந்த கல்யாணி, இன்று மகத்தான பேருருவாகத் தெரிந்தாள்.

ஒரு வகையில் பார்த்தால் தான் தான் இந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம். அவளை அன்றே அந்த திலீபனுடன் சேர்த்து வைத்திருக்கலாம். தானே செய்ய வேண்டியது, இன்று அவளே செய்துகொண்டாள் போலும்.

திலீபன் மிகவும் நல்லவன் தான்; அது சுகுமாருக்கும் தெரியும். கல்யாணியுடன் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தான். இரண்டொரு முறை சுகுமார் அவனை நேரிலும் சந்தித்ததுண்டு. குடி, சிகெரெட், குறிப்பாக ஆதிக்க மனம் போன்ற தன் இயல்புகள் ஒன்றும் பொருந்தாமல் முற்றிலும் தனக்கு மாறான ஒரு மனிதனை பார்ப்பதாகவே பார்த்தான். அன்று கல்யாணி அவள் காதல் குறித்து சொல்லும் போது, கொஞ்சமும் அவன் இயல்புகள் குறித்து சிந்திக்கவில்லை. முதல் கேள்விக்கு வந்த முரணான பதில் அத்தனையையும் மாற்றி விட்டுப் போனது.

இந்த மனப்போராட்டத்தை சுகுமார் தன் சக்திக்கு அப்பாற்பட்டதாக உணர்ந்தான். ஒரு பக்கம் சுக்கு நூறாகிக் கிடக்கும் செத்த கற்பிதம்; மறுபக்கம் தன்னால் துன்பம் மட்டுமே அடைந்து, விருப்பத்திற்கு மாறாகச் செலுத்தப்பட்டு, வாழ்க்கையே குழப்பமாகிக் கிடக்கும் தங்கை; இன்னொரு பக்கம் திலீபன்.

கல்யாணியின் ஆதரவில்லா வறண்ட வாழ்க்கையில் கிடைத்த சுனையாகவே அவன் இருந்திருப்பான். இத்தனைக்கு பிறகும் பிறந்த வீட்டில் ஆறுதல் இல்லாததால், தன்னிடம் பேசவும் யாரும் இல்லாததால் மீண்டும் அவள் சுனைக்கே சென்றிருக்கலாம். பாட்டி இப்பொழுதே திட்ட ஆரம்பித்திருப்பாள், ஊரில் உள்ள சொந்தங்களுக்கு ‘போன்கால்’கள் பறந்திருக்கும்; கல்யாணி ஓடுகாலியாக்கப்பட்டு, அவள் பிம்பம் மீண்டும் கிழித்தெடுக்கப்பட்டிருக்கும்.
வரலாறு, சில சம்பவங்களை மீண்டும் அப்படியே நிகழ்த்துகிறது. ஏற்கனவே நடந்த செயல்கள் அப்படியே திரும்ப அரங்கேறும். இதற்கெனவே காத்திருந்த சொந்தங்கள் மீசையை முறுக்கிக் கொள்ளும்.

வானம் நன்கு இருட்டி இருந்தது. மழைத்துளி தன் மீது பட்டதும்தான் சுதாரித்து எழுந்தான். வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான். இடையில் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது.

“கல்யாணி வீட்டுக்கு வந்துட்டா. பக்கத்தில் இருந்த கோவில்ல தான் உக்காந்து இருந்துருக்கா.” மனைவியிடம் இருந்து தகவல் வந்தது. போனை உள்ளே வைத்து சிறு புன்னகையுடன் பயணத்தைத் துவங்கினான்.

“ஹ்ம்ம்ம்ம்ம்”

சூழலில் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் சுகு தெளிவாக இருந்தான். மழை சோவென பெய்யத் துவங்கியது. முழுவதும் நனைந்து விடுவது என முடிவெடுத்தான்.

மழைத்துளிகள் அவனுடனான உரையாடலைத் துவக்கின.

எழுதியவர்

தேவா
தமிழகத்திலுள்ள செங்கல்பட்டு நகரத்தில் வசிக்கும் தேவா ஒரு இடதுசாரி சிந்தனையாளர். தழல் அமைப்பைச் சேர்நதவர். மக்கள் நலன், அதற்கான வழி எனுமிடத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வியலை மார்க்சியத்தின் வழி நின்று பேசுபவராக திகழ்கிறார்.
Subscribe
Notify of
guest

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Parthasarathy
Parthasarathy
2 years ago

அருமையான கதை. எந்த வாசகனும் தன்னைப்‌ பொருத்திப் பார்க்கும்படியான இயல்பான ‌நடை. வாழ்த்துக்கள் தேவா தம்பி. 💕💐💐

Ganeshkumar
Ganeshkumar
2 years ago

Thambi

You cannot copy content of this page
2
0
Would love your thoughts, please comment.x
()
x