21 November 2024
naseriya oru vesakari

“அத்தா, நா ஆபீஸுக்கு போயிட்டு வரேன்.”

ஒரு அங்குல கால் பாதங்களைத் தவிர மீதமிருக்கும் ஐந்தடி இரண்டு அங்குல மாநிற உடலை மேலிருந்து நீண்டு தொங்கிய கருத்த புர்காவால் மறைத்துக்கொண்டு கிளம்பினாள் நஸ்ரியா.

உடை விசயத்தில் தன் மகள்கள் கொமர்களானதிலிருந்து மார்க்கத்தை கடைபிடிப்பதும் வாஜிப்பாக இருப்பதும் கமால் பாவாவிற்கு பெரும் நிம்மதி. அதனாலேயே நஸ்ரியா  கல்லூரியில் சேர்ந்து படிக்கவும் வேலைக்குப் போகவும் சம்மதித்தார்.

“இன்ஷா அல்லா !. ஆபீஸ் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்துடுத்தா.”

“சரி அத்தா.”

“அடியே நஸ்ரியா. என்ன கண்ணுக்கு மை எழுதலையா?” கறி ஆணத்திற்கு மொளகாய் அரைத்துக்கொண்டிருந்த ஜஹாங்கிர் வாசலைப் பார்த்துக் குரல் கொடுத்தாள். உம்மாவிடமிருந்து இந்தக் கேள்வியை அவள் பல நாட்களாகவே எதிர்நோக்கியிருந்தாள். கண் மை மட்டுமல்ல, வளையல், பூ, பொட்டு, நெயில் பாலீஷ் இத்யாதிகளை விட்டு வருடங்களாகிவிட்டது.

“மை எழுத எனக்குப் பிடிக்கலம்மா”

“யா அல்லாஹ் ! பொண்ணா பொறந்திட்டு கண்ணுக்கு மை எழுத மாட்டீங்கறாளே இந்தக் கொமர் புள்ள, கொஞ்ச நாளா இவ நடவடிக்கையே சரியில்ல” புலம்பிக்கொண்டே அடுக்களைக்குச் சென்றாள் ஜஹாங்கிர்.

“பொண்ணா இருந்தாத்தானே மை எழுதுவாங்க” மனதுக்குள் பேசியபடியே ஸ்கூட்டியைக் கிளப்பினாள் நஸ்ரியா.

மகள் வேலைக்குப் போகும் முதல் நாள். அவள் வண்டியை நளினமாக ஓட்டிச்செல்வதைப்  பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் மொஹமத் கமாலுதின். ஒரு கசாப்புக்கடைக்காரன் மகள் கம்ப்யூட்டர் என்ஜினியராவது  பெருமையாக இருக்காதா என்ன? இதற்காகத்தானே இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தார். சரி, யார் இந்த கமாலுதின். சொந்த பந்தங்கள் கமால் பாவா என்பார்கள். வெளியாட்கள் கமால் பாய் என்பார்கள்.  கறிக்கடை கமால் என்றால் சுற்று வட்டாரத்தில் தெரியாத அசைவ நாக்குகளே இருக்க முடியாது.  கமாலின் பரம்பரைத் தொழில் கசாப்புக் கடைதான். காலையில் ஆறு மணிக்கெல்லாம் அறுப்புக் கத்தியை எடுத்து சானை பிடிக்கத் தொடங்கிவிடுவார். தினமும் ரெண்டு ஆட்டுக்காவது அறுப்பு நிச்சயம். சனி, ஞாயிறு என்றால் ஐந்தாறு ஆடுகள் “கமால் பாவா, என்னை வெட்டுங்க, என்னை அறுங்க பாவா” என்று அவரிடம் மன்றாடும். பக்ரீத்துக்கு இருபது முப்பது ஆடுகள் கமால் பாவா கடையை நோக்கி பேரணி செல்லும். விடிய விடிய   அறுத்துத் தள்ளுவார்.  எப்போது ஆடு அறுத்தாலும் எத்தனை ஆடு அறுத்தாலும் ‘பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” சொல்லி ஹலால் முறைப்படி ஒவ்வொரு விசயத்தையும் பார்த்துப் பார்த்துதான்  செய்வார். எதை முதலில் அறுக்க வேண்டும்,  எதற்குப் பிறகு எதை அறுக்க வேண்டும், எதை அறுக்கக் கூடாது. எது ஹலால்,  எது மக்ரூஹ் என புதிதாகத்  தொழிலுக்கு வந்த இளசுகளுக்கு வகுப்பெடுப்பார். ‘கொல்லறது ஒரு உயிரை, அதை எப்படிக் கொன்னா என்ன, எப்படி அறுத்தா என்ன?” என்று ஒருத்தன் எதிர் கேள்வி கேட்டான். அவனை கொத்துக்கறி போட்டுவிட்டார்.  தன் வாப்பாவுடன் பதினைந்து வயதில் தொழிலுக்கு வந்தவர் கடந்த 40 வருட அறுப்பில் தப்பித் தவறிக்கூட மக்ரூஹ் செய்ததில்லை. அதனாலேயே ஜாமாத்தார்கள் முஸ்லீம்கள் அனைவரும் நம்பிக்கையாக அவரிடம் கறி வாங்குவார்கள்.

நிக்காஹ் முடித்த பிறகு இரண்டு வருடத்திற்கு ஒன்று என சீரான இடைவெளியில் மூன்று பெண் குழந்தைகளைப்  பெற்றெடுத்தாள் ஜஹாங்கீர். அதிலிருந்து சாயங்காலம் ஆட்டுக்கால் சூப் கடையும் நடத்தத் தொடங்கினார். வாப்பாவின் கவிச்சி வாசத்தையே முகர்ந்து வளர்ந்தன குழந்தைகளின் நுரையீரல்கள். ஆட்டுத்  தொட்டிலில் ஆட்டின் வீச்சம் படிந்து கிடந்தது. முதலிரண்டு குட்டிகளும் வாப்பும்மாவின் கிமாரைப் பிடித்துக்கொண்டே “நண்ணிமா…  நண்ணிமா..” என பட்டியிலடைத்த ஆட்டுக்குட்டிகளைப் போல வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள். ஆனால் மூன்றாவது குட்டி நஸ்ரியா வீட்டிற்குள்ளேயே இருந்ததில்லை. நேர்ந்துவிட்ட கிடாவைப் போல் தெருத்தெருவாக மேய்ந்து கொண்டிருந்தாள். கோலி குண்டு, சைக்கிள் டயர் என எப்போதும் பசங்களோடத்தான் விளையாட்டு. அவள் அட்டகாசம் தாங்க முடியாது. சண்டைன்ணு வந்துட்டா சரிக்கு சமமா ஒரு கை பார்த்துவிடுவாள். பசங்களின் நல்லி எலும்புகள் வலியால் கதறும். தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி நெஞ்சில் உட்கார்ந்து குத்துவிட்டான்னா தப்பிச்சோம் பொழைச்சோம்ன்னு பசங்க தெறித்து  ஓடிவிடுவார்கள். அப்புறமென்ன அவுங்க உம்மாங்கெல்லாம் வரிசைகட்டி வருவார்கள்.

“அடியே நீ என்ன பொட்டப்புள்ளையப்  பெத்து வச்சிருக்கியா?  இல்ல சைத்தானப்  பெத்து வச்சிருக்கியா? ”

“பொட்டப்புள்ளைய அடக்க ஒடுக்கமா வளத்தத் தெரியாதா?”

ஆளாளுக்கு ஜஹாங்கீரை பிடி பிடியெனப் பிடித்துக்கொள்வார்கள்.

கமால் பாவா கறிக்கடைக்குக்  கிளம்பும் போது,  அந்த அதிகாலையிலே எழுந்திருச்சு அவர் கையைப் பிடித்துக்கொண்டு “அத்தா நானும் கறிக்கடைக்கு வர்றேன்” என்று அடம் பிடிப்பாள் நஸ்ரியா. “பொட்டப்புள்ளைங்கெல்லாம் கசாப்புக் கடைக்கு வரக்கூடாது”  என்றாலும் கேட்க மாட்டாள். வேறு வழியில்லாமல் அழைத்துப் போவார். வாப்பா ஆடு அறுப்பதையே பார்த்துக்கொண்டிருப்பாள். கையில் அலுமினியப் பாத்திரத்தைப்  பிடித்துக்கொண்டு தயாராக நிற்பாள்.  கமால் பாவா ஆட்டின் உணவுக் குழாய், மூச்சுக் குழாய், கழுத்து நரம்புகளை அறுத்தவுடன் பீரிடும் இரத்தத்தை அலுமினியப் பாத்திரத்தில் பிடிப்பாள். சின்னத்துண்டு ஈரலைத்  தனியாக எடுத்து வந்து வெட்டி வெட்டி கூறு போடுவாள்.

“என்ன பாய் இப்பவே பொண்ணை கசாப்புத் தொழிலுக்கு பழக்கறீங்க போல”

“என்ன மாமு, ஆம்பளப்புள்ள இல்லைங்கிறதுக்காக பொட்டப்புள்ளைய அறுப்புக்கு கூட்டி வரலாமா?”  பலவிதமாக வாய்கள் அவல் மென்றன. உம்மாவின் கைகள் குட்டி நஸ்ரியாவின் இளம் முதுகைப் பதம் பார்க்க அன்றுடன் அவளுடைய கறிக்கடை தர்பார் நின்று போனது. அதன் பிறகும் அடங்கவில்லை. பெரியத்தா மகன் ஹம்மது அக்பர் மெக்கானிக் கடைக்குப் போய் விடுவாள். உடையெல்லாம் ஆயிலும் கீரீசுமாக வீடு திரும்புவதும் உம்மாவிடம் அடிவாங்குவதும் தொடர்கதையானது. பெரிய பெண்ணானதிற்குப் பிறகும் கூட நிறுத்தவில்லை. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் போது உம்மாவிற்குத் தெரியாமல் மெக்கானிக் கடைக்குச் சென்று ஹம்மது வண்டிகளைக் கழற்றி வேலை செய்வதை,  சிறிது நேரம் பார்த்துவிட்டுத்தான் வருவாள்.

சிறுமிகளெல்லாம் பாவடை சட்டையும் தலையில் ஹிஜாப்புமாக  மதரஸாக்கு சென்ற போது கைலி கட்டி தொப்பி வைத்து கையில் கித்தாப்புடன் கிளம்பினாள் நஸ்ரியா.

“ஆம்பளப் பசங்க உடுப்பெல்லாம் பொட்டப்புள்ளைங்க போடக்கூடாது, அது ஹராம். நம்ம மார்க்கத்துக்கு ஆகாது” உம்மா அதட்டாத நாளில்லை.

“சின்னப் புள்ளதானே, ஆசையா போடுது அதட்டாதே” என்று செல்லம் கொஞ்சினார் கமால் பாவா. பெரிய பிள்ளை ஆன பிறகும் அதே உடுப்பில் அவள் வந்து நிற்பாள் என கமால் பாவா கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

பாவாடை, சேலை, ஜாக்கெட், சுடிதார், பூ, பொட்டு, கண் மை,  மஸ்காரா, மருதாணி  எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருந்தது. வாப்பாவைப் போல் முகம் நிறைய தடித்த மீசை வைக்க வேண்டும், ஹம்மதைப் போல் நீண்ட தாடி வைக்க வேண்டும், கைலி கட்ட வேண்டும், குல்லா போட வேண்டும், சட்டைக் காலருக்குள் கர்ச்சீப்பை மடித்து வைத்துக்கொள்ள வேண்டும், அக்தர் செண்ட் அடித்துக்கொள்ள வேண்டுமென அவள் உடல் துடித்தது. வெள்ளிக்கிழமைகளில் நாமும் தலைப்பாகை அணிந்து ஜூம்ஆ தொழுகைக்குப்  போக மாட்டோமா என ஏங்கினாள். கைலி கட்டி நஜீஸான சட்டை போட்டுத்  தலைப்பாகை வைத்து அதில் தொங்கல் விட்டு, மேலே போர்வை அணிந்து, தலைவழியப் பச்சைப் போர்வையிட்டு, முழங்காலிட்டு ஒரு முஃமின் ஆம்பளையைப் போல் பள்ளிவாசலில் தொழ வேண்டும் என மனசு கிடந்து தவித்தது.  தனக்கு ஏன் இப்படியெல்லாம் ஆசைகள் வருது என  பல மாதங்களாகப்  பெரும் குழப்பத்தில் உழன்று கிடந்தாள். போகப்போக தான் பெண்ணல்ல, தன்னுடம்புக்குள் இருப்பது ஒரு ஆண் என்பதை உணர்ந்து கொண்டாள்.

பேண்ட் சர்ட் யூனிபார்ம் அணிந்து பள்ளிக்கூடத்தில் மாணவர்களுடன் உட்கார வேண்டும். பசங்களுடன் புட்பால், கபடி விளையாட வேண்டுமென விரும்பினாள். அது நடப்பதற்கான சாத்தியங்கள் இருக்கவில்லை. பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் அரசு பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படிப்பதற்கு இடம் கிடைத்தது. கல்லூரி வாழ்க்கை சிறிது வடிகாலாக இருந்தது. மாணவர்களுடனே சுற்றித் திரிந்தாள். டிராக் பேண்ட்,  டி சர்ட் அணிவதற்காகவே பசங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினாள். ஓட்டப் பந்தயத்தில் மாணவர்களுடன் சேர்ந்து ஓடுகிறேன் என சார்ட்ஸ் டவுசர் போட்டுக்கொண்டு நின்றாள். அதுவரை அவளை பசங்களுடன் சுற்றுகிற பேர்வழி என்றுதான் சக மாணவ மாணவிகளும் பேராசியர்களும் நினைத்திருந்தார்கள். அன்றுதான் அவளுக்கு வேறு ஏதோ பிரச்சனை இருக்கிறதெனப் பலருக்கும் புரிந்தது. ஆனால் என்னவென்று புரியவில்லை. பெற்றோரை அழைத்து வரச்சொன்னார்கள். இனிமேல் இதுபோல் நடந்தால் கல்லூரியிலிருந்து வெளியே அனுப்பிவிடுவோம் என்று எச்சரித்தார் முதல்வர். வெட்டுக்குத் தலை கொடுத்த ஆட்டைப் போல் கமால் பாவா தலை குனிந்து நின்றார்.

“பெண்களுடன் விளையாடும் போதும்கூட தலையிலிருந்து ஹிஜாபை கழற்றக்கூடாது. ஹிஜாப் இல்லாமல் அந்நிய ஆண்களுடன் அதுவும் டவுசர் போட்டுக்கொண்டு நம்முடைய பொண்ணு விளையாடுவதா? யா அல்லாஹ்” அதிர்ந்து போனார் கமால் பாவா. அன்று வீட்டிற்குள் பூகம்பம் வெடித்தது. இதுவரை எந்தப் பெண் பிள்ளைகள் மீதும் கை நீட்டாத கமால் பாவாவின் அரிவாள் பிடித்துக் கரடு தட்டிய கைகள் முதல் முதலாக நஸ்ரியாவின் கண்ணங்களில் பதிந்தது. ஜஹாங்கிரின் வெளக்குமாறு நஸ்ரியாவின் தோலை உரித்தெடுத்தது. படிப்பை நிறுத்திவிட்டால் வீட்டிலிருந்து வெளியே வரமுடியாதென பயந்துகொண்டு “இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்” என அல்லாவின் மீது சத்தியம் செய்து கொடுத்தாள் நஸ்ரியா. அதன் பிறகு பிரச்சனைகள் வராமல் சாமர்த்தியமாக நடந்துகொண்டாள்.  இரண்டு அக்காவினருக்கும் நிக்காஹ் முடிந்துவிட்டதால் வீட்டில் அவளுக்குத்  தனியறை கிடைத்தது. அந்த அறைக்குள்ளேயே ஆணாக வாழ்ந்தாள்.  பேண்ட் சர்ட்டிலோ கைலியிலோதான் தூங்கினாள். மார்புகள்தான் அவளுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்தது. “இதை எப்ப அறுத்து எறிஞ்சுட்டு ஆம்பள மாதிரி நெஞ்சை நிமிர்த்தி நடப்போமென”  மனதைப் பிசைந்துகொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை  மாதவிடாய் ஏற்படும் போதும் வேதனை அவளை உச்சத்திற்கு உந்தித் தள்ளியது. மாதவிடாய் இரத்தத்தைப் பார்க்கும் போதெல்லாம் “நான் ஆம்பள எனக்கு எதுக்கு பீரியட் வருது” என அடிவயிறு பரிதவித்தது.

“படைச்சவனே ! என்னை எதுக்கு இப்படிப் படைச்ச?, என்னோட மார்பையும் கர்பப்பையையும் எடுத்துட்டு என்னை ஆம்பளையா மாத்திடு” அல்லாவிடம் அவள் இறைஞ்சாத நாளில்லை.

கல்லூரியின் இறுதியாண்டு படிக்கும் போதே கேம்பஸ் இண்டர்வ்யூ மூலம் அவளுக்கு ஒரு தனியார் பெருநிறுவனத்தில் கணினிப் பொறியாளர் வேலை உறுதியானது.  கம்ப்யூட்டர் என்ஜினியர் வேலை எடுத்தவுடனே இருபதாயிரம் சம்பளம் என்றவுடனே கமால் பாயும் ஜஹாங்கீரும் சம்மதித்தார்கள். இன்றுதான் முதல் நாளாக வேலைக்குப் போகிறாள்.  வாப்பாவிடம் உம்மாவிடமும் சொல்லிவிட்டு ஸ்கூட்டியைக் கிளப்பினாள்.

ஒரு தனியார் நிறுவனத்தின் பிரமாண்டமான கட்டிடத்தின் முன்பு அந்த வண்டி நிறுத்தப்படுவதை கமால் பாவா தன் மனக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அது ஒரு முட்டு சந்திற்குள் நுழைந்து பழைய வீட்டின் முன்பாக நின்றது. வேக வேகமாக மாடிப்படிகள் ஏறி மாடி வீட்டிற்குள் நுழைந்தாள் நஸ்ரியா.

“வாடா டேய் ! என் ஆம்பள சிங்கம்”  என வரவேற்றது பெண் உருவத்திலிருந்த கரகரத்த ஆண் குரல்.

“ரூம்ல உனக்கு வேண்டிய டிரஸ் வச்சிருக்கேன் எடுத்துப் போட்டுக்கோ”

அறைக்குள் சென்றவுடன் அவசர அவசரமாகப்  பர்தாவைக் கழற்றி  கயிற்றில் போட்டாள் நஸ்ரியா. தலைமுடியைக் கலைத்தாள். முடி பிடிப்பான்களை விடிவித்தாள். நீண்டு தொங்கிய கூந்தல் கையோடு வந்தது, அதை ஹேங்கரில் மாட்டினாள். அவள் தலை தற்போது ஹிப்பித் தலையாக இதழ் விரித்தது. சுடிதார் நாடாவின் முடிச்சை விடுவித்தாள். கால்களில் நழுவி தரையில் விழுந்தது. கால்களாலேயே தள்ளிவிட்டாள். பிராவைக் கழற்றி சுருட்டி மூலையில் தூக்கி விசினாள். அலமாரியிலிருந்த பிரஸ்ட் பேண்ட் மார்புப் பட்டையை அணிந்தாள். அது அவள் மார்புகளை இறுக்கிப் பிடித்து அமுக்கி தட்டையாக்கியது. ரோடு ரோலர் உருளைக்கடியில் சிக்கிய ஜல்லிக் கற்களைப் போல் மார்புச் சதைகள் நசுங்கின. நெஞ்சுக்கூடு நொருங்குவது போல் வலி நெருக்கியது. பிரஸ்ட் பேண்ட் அணிந்திருப்பது வெளியே தெரியக்கூடாது. அதன் மீது ஒரு பனியன்  அணிந்தாள். திருப்தியில்லை.  மேலும் ஒரு  பனியன் அணிந்தாள். நெஞ்சைப் பார்த்தாள். அது ஓரளவு மட்டமாக இருந்தது. மெலிதாக நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். போட்டிருந்த மென்மையான ஜட்டியைக் கழற்றிவிட்டு ஆண்களின் தடிமனான ஜட்டியை போட்டுக்கொண்டாள்.  ஜீன்ஸ் பேண்டும் முழுக்கை சட்டையுமாக இறுதி வடிவம் கொடுத்தாள். சட்டையை உள்ளே சொருகவில்லை. அப்படிச் செய்தால் இடுப்புக்குக் கீழே யாராவது உற்றுப் பார்த்தால் சந்தேகம் வரும்.  கண்ணாடி பார்த்தாள். ஆண் உருவத்தை ஒத்த உருவம் தெரிந்தது. முன்னும் பின்னுமாக உடலைத் திருப்பிப்பார்த்தாள். கைப்பையிலிருந்த பணத்தாள்கள், அடையாள அட்டைகளை சட்டைப்பையில் திணித்தாள். அதிலொரு ஹீரோ பேனாவைச் சொருகி அழகு பார்த்தாள். ஆண்களைப் போல் சட்டைப் பாக்கெட்டில் பேனாவை வைத்துக்கொண்டு வெளியில் நடமாட வேண்டும் என்பது எத்தனை நாள் ஏக்கம். அது இன்றுதான் சாத்தியமானது. சந்தோஷமாக வெளியே வந்தாள்.

“டேய், அச்சு அசல் ஆம்பள மாதிரியே இருக்கடா” என்றது அந்தக் கரகரத்த குரல்.

“தாங்க்ஸ் கைரதி ! நா வேலைக்குப் போயிட்டு சாயங்காலம் வர்றேன்.”

“டேய், நீ அந்த வேலைக்குத்தான் போகணுமா? கம்யூட்டர் என்ஜினியர் வேலைக்கே போகலாமில்ல.”

“அக்கா நா ஆம்பள, ஆம்பளைங்க பார்க்கிற வேலைக்குத்தான் போவேன்.”

“கம்ப்யூட்டர் என்ஜினியர் வேலையும் ஆம்பளைங்க பார்க்கிற வேலைதானே?”

“பெண்களும் அந்த வேலை பார்ப்பாங்க. எனக்கு ஆண்கள் மட்டுமே பார்க்கிற வேலைதான் வேணும். அதனாலதான் நா அந்த வேலைக்கு போகாம வேற வேலைக்குப் போறேன்.”

“நல்ல படிப்பு படிச்சிட்டு, கஷ்டமான வேலைக்கு போகணுமா?”

“ஆம்பளைன்னா கஷ்டமான வேலை செய்யணும். கஷ்டமான வேலை செய்யறதுதான் எனக்கு சந்தோஷம்.”

“சரி சரி, வேலை முடிஞ்சதும் அப்படியே வீட்டுக்குப் போயிடாதே. மறக்காம இங்க வந்து உன்னோட வேஷத்த மாத்திக்கிட்டு போ.”

“இந்த ஆம்பள உடுப்புதான் உண்மை. பொம்பள உடுப்பு வேஷம். ” பேசிக்கொண்டே மாடிப்படி இறங்கினாள் நஸ்ரியா. இல்லை. இறங்கினான் நஸ்ருதீன். யமாஹா பைக்கை கிளப்பினான் மொஹமது நஸ்ருதீன். வேகத்தை முறுக்கினான். விர்ரென்று சாலையில் பறந்தது அந்த வண்டி. அதிலொரு ஆண் மிதந்துகொண்டிருந்தான்.

 

  • மு.ஆனந்தன்

எழுதியவர்

கலகம் - பதிப்புக் குழு
கலகம் - பதிப்புக் குழு
அரசியல், கலை இலக்கிய இணைய இதழ்
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x