களவு போனவை
நமது தூண்டில்களுக்கு இப்போது
வேலையில்லை.
இந்த அதிகாலையின் சாம்பல் துக்கம்
நெஞ்சை ஏதோ செய்கின்றன.
நமது உடல்கள் மரத்துப் போய்விட்டன.
அன்பின் தீவிரத் தேடல்கள்
இப்போது அவற்றிற்கு தேவைப் படுவதில்லை.
செயற்கை சுவாசங்கள் போல
சில முத்தங்களால் வாழ்வின் வேட்கையை
மீட்டெடுக்க முயல்கிறோம்.
தூரவானத்தின் அடிமுகட்டில்
செம்பிழம்பாய் சூரியன்,
சாம்பல் பூத்த விடியலை
கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறது.
அன்றாடங்களின் தேவைகளில்
புலன்கள் இயங்கத் தொடங்குகின்றன.
நமது காதல்களின், வலிகளின்
சுவாரங்ஸயங்களை
யார் களவாடியது ?
ஒற்றை சொல்
கூர்வாளின் முனையாக ஒரு
ஒற்றைச் சொல்
அந்தரத்திலிருந்து எய்யப்பட்ட
ஆயுதமாய் சரியான இலக்கை எட்டுகிறது
ஆதிமிருகத்தின் குருதியிச்சையுடன்
உயிர்பறிக்கும் அந்த
ஒற்றைச் சொல்
தாழி ஒன்றில் அதையிட்டு
மண்ணை போட்டு மூடுகிறேன்.
நிலம் அதிர்ந்து வெடிக்கிறது
அக்னி குழம்பாய் பரவுமதன்
வெம்மையில் வெந்து வீழ்கிறது
என் வனத்து அன்பின் பறவைகள்
கருகிச் சாய்கிறது
மகிழ்ச்சியின் விருட்சங்கள்
வற்றித் தீர்கிறது
மனதின் அரூப நதியொன்று
பாலையாக மாறிய நிலத்தில்
இன்னமும்
கனன்றபடியே இருக்கிறது
அவ் ஒற்றைச் சொல்
பரமபிதாவே
பாவத்தின் சம்பளம் மரணம்
என்கிறீர்,
எனினும் புண்ணியத்தின்
செலவைத்தான் சமாளிக்க முடியவில்லை
பள்ளிக் குழந்தையின்
ஸ்க்ராப் புத்தகம் போல்
என் கனவுக் காட்சிகள்
துண்டு துண்டாய்
மாறி மாறி
காலத்தை முன்னும் பின்னுமாகக் குழைத்து
வர்ணங்களை சிதறடிக்கறது
இறந்து போன சித்தி
கணவர் பற்றியக் குற்றச்சாட்டுடன்
மரணப்படுக்கையில் இருந்து
எழுந்து வருகிறாள்.
பெயரறியா ஊரொன்றின்
சாம்பல் புகைத்தெருவில்
அந்த எழுத்தாளரைச்
சந்திக்கிறேன்,
அம்மா எனக்காக வாங்கித்தந்த
பரிசுப் பொருளைத்
தேடி அலுக்கும் போது
பள்ளிக்காலத் தோழி
தெரு வளைவில் காத்திருக்கிறாள்.
தெருவைக் கடந்தால் கடல்.
இத்தனை அருகில் எப்படிக் கடல்
என திகைத்துத் திரும்பினால் …..
கடலின் குளிர்மையில்
சில்லிட்ட கருவிழிகளுக்குள்
உறைந்து உறக்கம்
கலைகிறது கடல்
நேரத்தைக் கொல்வது
நேரத்தைக் கொல்வதற்கு நீங்கள் அதனுடன் நெருங்கிப் பழக வேண்டும்.
உங்களை அது முழுமையாக நம்புவதற்கு உத்திகளை
பிரயோகிக்க வேண்டும்.
அதில் ஒன்று
நேரம் தவறாமை.
பின்பு நேரத்தை வீணாக்காமையை கடைபிடித்தல்.
அடுத்து நேரத்திற்கு விசுவாசமாக இருத்தல்.
இப்போது நேரம் உங்களை நம்ப ஆரம்பித்து விட்டது
தெரிகிறது.
அப்புறம்தான் நேரத்திற்கு
போதையேற்ற வேண்டும்.
நேரம் போதையில்
மிதக்கும் போது
மெல்ல அதைக் கொல்லத்
தொடங்குங்கள்.
நேரத்தைக் கொல்லும் போது
நேரத்தை வீணாக்காமல்
இருப்பது அவசியம்.
Painting – Courtesy : Francesco Mugnai
எழுதியவர்
-
கவிஞர், சிறுகதை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என இயங்கி வரும் நர்மதா குப்புசாமியின் புனைபெயர் ‘இமையாள்’
: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல் “நிரந்தரக் கணவன்” எனும் பெயரிலும், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் “சின்ட்ரெல்லா நடனம்” எனும் பெயரிலும் இவரின் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளன. இமையாள் எனும் பெயரில் “ஆண்கள் இல்லாத வீடு” எனும் கவிதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.
இதுவரை.
- சிறுகதை24 April 2023கால் டாக்ஸி
- கவிதை31 January 2022இமையாள் கவிதைகள்