21 November 2024
nk6

நான் ஒரு கால் டாக்ஸி டிரைவர். இந்நகரம் என்னுடைய சொந்தஊர் இல்லை. எனது ஊர் தெற்குதமிழகம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்கள் குடும்பம் மூன்று தலைமுறைகளாகச் செழிப்புடன் வாழ்ந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஷீனித்துப் போய் நிலங்களை விற்று, கடைசியில் விவசாயத்தை விட்டு ஊரையும் விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. என் டிப்ளமா படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை. ஊரில் டிரைவிங் கற்று கொண்டேன். சென்னைக்குப் போய் பிழைக்கலாம் என்று இரயிலேறும் ஆயிரமாயிரம் இளைஞர்களுடன் நானும் இந்நகரத்தை வந்தடைந்தேன். அதற்கு அறிவழகனும் முக்கிய காரணம். ஊரில் என்னோடு கார்ஓட்ட பயிற்சி எடுத்துக்கொண்டவன். எனக்கு முன்னரே இங்கு வந்து இப்போது சொந்தமாகவே கார் வாங்கி ஓட்டிக்கொண்டிருக்கிறான். அவனுடைய் தொடர் வற்புறுத்தலால் மட்டுமல்ல எனக்கும் வேறு வழி இல்லாததால் அம்மாவிடம் இருந்த பணத்தை வாங்கிக் கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன். அறிவுதான் என்னை இந்த கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்துவிட்டான். முதலில் கார் ஒன்றை வாடகைக்குப் பிடித்தோம். பிறகு நல்லதாக ஆன்ட்ராய்டு செல்பேசி ஒன்றை வாங்கினேன். அது என் தொழிலுக்கு அத்தியாவசியம். இப்போது ஒன்றரை வருடங்களாக ஓட்டிக்கொண்டிருக்கிறேன். முடிந்த வரை ஒரு நாளைக்கு பன்னிரென்டு மணிநேரம் கூட ஓட்டுவேன். முடியாதபோது ஜி.பி.எஸ்ஸை அணைத்துவிட்டு அறைக்கு வந்துவிடுவேன். சம்பாத்தியத்திற்கு ஒரு நிர்ணயம் வைத்திருக்கிறேன். அதற்கு மேல் வேலைசெய்வதில்லை. சொந்தமாக வண்டி வாங்கிவிட்டால் காருக்குத் தரும் வாடகை மிச்சமாகும். இப்போதைக்கு அதுதான் எனது மீச்சிறு குறிக்கோள். பல சமயம் சவாரிக்குப்பின் சவாரியாக வரிசையாக அகப்படும். இந்நகரத்தின் சிக்கலான போக்குவரத்து , தாறுமாறான முந்துதல்கள், போலீஸின் தேவையற்ற கெடுபிடி , வசவுச்சொற்கள், மாமூல் பிரச்சனை, இதைத்தவிர ஒருசில கஸ்டமர்கள் கொடுக்கும் மனவுளைச்சல்கள் இத்தனை இருந்தும் ஊர்திரும்ப மனம்வரவில்லை. நேற்று ஷேர் சவாரியில் வந்த ஒரு வயதான அம்மாள் , இன்னொரு கஸ்டமரை ஏற்றுவதற்காகச் சந்துபொந்துக்குள் போகவேண்டியிருந்த போது ஊரையெல்லாம் சுத்திட்டு போறன்னு ஒரே கூப்பாடு. இறங்கும்போது கட்டனத்தைக் சொன்னவுடன் என் பொன்னு புக் பண்ணப்ப இவ்ளோ பணம் வரலையே, நீ ஊரை சுத்துனதாலதான் இவ்ளோ வந்திருக்கு. என்றார். நான் செல்பேசியைக் காட்டி சொன்னாலும் அந்த அம்மாள் பேச்சை நிறுத்தவில்லை. ஷேரில் ஏறியவர் அப்ப நீங்க தனிவண்டி புக் பண்ணியிருக்கனும் என்கவே அவர்கள் இருவருக்கும் வாய்த்தகராறு வந்துவிட்டது. இப்படித்தான் என் அன்றாடங்கள் ஓடுகின்றன. இதுதான் என் பிழைப்பு என்றாகி விட்டது. நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல. சிலசமயம் சுவாரஸ்யமான கதைகளும் எனக்கு மாட்டுவதுண்டு. அப்படிப்பட்ட மூன்று கதைகளைத்தான் நான் உங்களிடம் சொல்ல வந்தேன். யாரிடமாவது சொல்லாவிட்டால் என் தலை வெடித்துவிடும். எனது நண்பன் அறிவழகனிடம் சொல்லலாம் ஆனால் பாதி சொல்வதற்குள் அவன் மட்டையாகிவிடுகிறான். அவன் குடிக்க ஆரம்பித்தால் அளவெல்லாம் கிடையாது. அதன்பிறகு அழ ஆரம்பித்துவிடுவான். ஏதேதோ பிதற்ற ஆரம்பித்துவிடுவான். அதனால்தான் உங்களிடம் சொல்கிறேன்.

கதை : ஒன்று

அது நான் கால் டாக்ஸி ஓட்ட ஆரம்பித்த ஆரம்பக்காலம். ஒரு சவாரி புக்கிங் ஆனவுடன் ஜி.பி.எஸ் மேப் படி அந்த முகவரியை அடைந்தேன். பொதுவாக கால் டாக்ஸி ஓட்டுகிறவர்களில் வெளியூரைச் சேர்ந்த எங்களைப் போன்ற டிரைவர்கள் ஜி.பி.எஸ் சொல்வதை கடவுள் சொன்னதைப் போல் பின்பற்றுவோம். கஸ்டமர் சொல்லும் வழிகளையோ பாதசாரிகள் சொல்வதையோ கேட்க மாட்டோம். அது உள்ளூர் டிரைவர்களுககுத்தான் புரியும், எனவே ஜி.பி.எஸ் மட்டுமே எங்கள் வழித்துணை. அது பலசமயம் சுற்றுவழியைக் காட்டுவதாகச் சில கஸ்டமர்கள் வாய்த்தகராறு செய்வதுண்டு. காதில் வாங்கிக்கொள்ள மாட்டேன். எனவே ஜி.பி.எஸ் படி எண் 198. பதினைந்தாவது தெருவுக்குச் சென்று வண்டியை ஓரங்கட்டிக் காத்திருந்தேன். செல்பேசியில் அழைப்பு அந்த கஸ்டமரிடமிருந்து. அவர் தெருவின் இடது கோடியில் இருப்பதாகக் கூறினார். இப்போது நான் இந்தக் குறுகலான சந்தில் ரிவர்ஸ் எடுத்து பக்கத்துச் சந்தில் திரும்பி பின்புறம் போகவேண்டும். எப்படியோ அவரை ஏற்றிக்கொண்டேன். ஆள் சற்று கட்டையாக இருந்தாலும் வேலை செய்து உரமேறிய காய்ப்படைந்த கைளும், கருத்த நிறமுமாக, சதா எதையோ யோசிப்பது போன்ற கண்களுமாகத் துடியாகக் காணப்பட்டார். ஏறியது முதல் அவர் யாருடனோ செல்பேசியில் கிசுகிசுப்பாக பேசிய படியிருந்தார். திடீரென்று எந்தத் தப்பையும் முதல் தடவை செய்யறப்ப குற்றவாளி மாட்டிக்கிறதுல்ல. இரண்டாவது தடவை அதே தப்ப ரிப்பீட் பண்ணும்போதுதான் மாட்டுவான் என்றார். இதையும் அவர் அந்தச் செல்பேசி ஆசாமியிடம்தான் சொல்கிறார் என்று நான் எண்ணிக்கொண்டேன். என்னப்பா தம்பி, நாஞ்சொல்றது சரிதான என்றார். எது சார் என்றேன். அவர் மறுபடியும் அந்த வாக்கியத்தைச் சொன்னார். எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. சொல்றேன் கேளு என்று அவர் சொன்ன கதைதான் இது.

கதைக்குள் கதை: 1

என் பேரு துரை. ஊரு பேர் வேணாம். தச்சுவேலைதான் என் தொழில் , ஒருவிதத்தில் குடும்பத் தொழிலும் அதான். அது மெயின். என் உபதொழில் ஒண்ணு இருக்கு , அது திருட்டு. ஆமாம், அதுல எனக்கு ஒரு இது கிக்குன்னு வச்சுக்கயேன். ஒலகத்துலேயே ரொம்ப சுவாரஸ்யமான தொழில் திருட்டுதான். சின்னச் சின்ன திருட்டுகளில் எனக்கு மிகுந்த ஆர்வம். ஆனா இதுவரை கேசுகீசுன்னு மாட்டினதுல்ல பாத்துக்க. கைல ஆப்புட்டத ஆட்டையப் போடுறது வழக்கம். போன மாசம்தான் வகையா ஒண்ணு கெடச்சுது. அது தானா அமைஞ்சது. ஒரு சின்ன வழிப்பறிதான். எங்கூருல இருந்து பத்துகிலோமீட்டர் தொலைவுல ஒரு கிராமத்துக்குத் தச்சு வேலையாப்போனன். சோலிய முடிச்சுபுட்டு வழியோடு வந்துகினு இருந்தேன். நகரத்துக்கும் அந்தக் கிராமத்துக்கும் இடையில இருக்கிற அத்துவானக் காடு அது. பகல் நேரத்துலயும் ஜிலோன்னு இருக்கும். வழில சின்ன சின்ன குன்றுக இருக்கும். பாறைகள் வழிமுழுக்க இறைஞ்சாப்ல கெடக்கும். கொஞ்சம் கோக்குமாக்கான இடம்னு கேள்விப் பட்டிருக்கேன். அதான்பா தள்ளிகினு வர ஏரியா. நான் டூ வீலர்ல வந்துகினு இருந்தேன். தூரத்துல ஒரு பைக் ஒத்தையா நிக்கிது . அப்படின்னா எவனோ தண்ணியடிக்கவோ இல்ல ஐட்டத்த தள்ளிகினோ வந்திருக்கான். பாறை இடுக்குல ரெண்டு உருவம் அசையுது. ஆம்பிள்ளையும் பொம்பளையுமா . இந்த அத்துவானக் காட்டுல அவங்க ரெண்டுபேரும் எதுக்காக போவாங்க. எல்லம் அதான். சரி இதுதான் சரியான சந்தர்பம், ரெண்டு பேரையும் ஒரு தட்டுத்தட்டி அவனாண்ட எதாச்சும் ஆப்புட்டத சுருட்டலாம் அவள எதாச்சு பண்ணலான்னு கணக்கு போட்டேன். ஒரே உண்டிக்கோல்ல ரெண்டும் மாட்டும். வண்டியை ஒரமா நிப்பாட்டிட்டு அவங்க போன பாறை மறைவுக்கு மெள்ளப் போனேன். என்னைப் பாத்ததுமே அவுங்க ரெண்டுபேரும் மிரண்டுபோய் வாரிசுருட்டிகினு எளுந்திரிச்சாங்க. நான் தச்சுவேலை செய்யற சாமானுங்கள எப்பவும் கையில வெச்சிருப்பேன். அதுல ஒண்ண எடுத்து அந்த ஆளோட கழுத்துல வெச்சேன். அவன் ரொம்ப நடுங்கிப்போய் விட்று விட்றுன்னு கத்த ஆரம்பிச்சான். பையில இருக்குற பணத்தை எடுறான்னேன். சில நூறு ரூபா நோட்டுங்க தேறிச்சு. மோதிரம் வாட்ச்சு கூட கொடுத்துட்டான். ஓடுறான்னு சொல்லிட்டு அவள ஒரு கைப்பார்க்கலாம்னு கிட்டப் போய் வாடின்னு சொன்னேன். அவ என்னாடான்னா தோ பாரு மேல கை வெக்கிற வேலையெல்லாம் வெச்சுக்காத என்றாள். ஆத்திரத்தில் கையில் இருந்த பொருளால தலையில ஒரு அடி போட்டேன். கழுத்துல மெல்லிசா ஒரு செயின் போட்டிருந்தா. அத அறுத்துக்கினு வண்டிய எடுத்துக்கினு ஓடியாந்துட்டேன். எதிர்பாக்காம கிடைச்ச வருமாணத்த என் கூட்டாளி ஒருத்தனோட சேந்து குடிச்சு காலி செஞ்சோம். ஏன் பொண்டாட்டிக்கு கொடுக்கலையான்னு நீ பார்க்கறது புரியுது. எனக்கு குடும்பம் புள்ளகுட்டில்லாம் எதும் கிடையாதே. அப்படியே ஓடுது பொளப்பு. அவந்தான் மறுபடி அந்தப் பக்கம் போய் பாப்பம் ஏதாச்சு தேறும்னு சொன்னான். அடுத்த வாரமே ஒரு நாள் அந்தப் பொட்டல்காட்டுக்குப் போய் வண்டிய ஓரமா நிப்பாட்டி பூட்டுனோம். இந்த மொற கையில பக்காவா பொருளு வெச்சிகினுருந்தோம். ஒரு பாறைக்கு பின்ன யாரோ இருக்குறாப்ல சலசலப்பு. வகையா மாட்டிகிச்சுன்னு போனா அங்க ஒரு கும்பல். எங்கள விட பெரிய பொருளா கையில வெச்சிகினு நிக்கிறாங்க. சிரிப்பு வருதுல்ல, சிரி சிரி தப்பா எடுத்துக்க மாட்டேன். சர்தான் ஓடிட வேண்டியத்தான்னு திரும்பறத்துக்குள்ள கொத்தா புடிச்சிட்டானுங்க. எங்கட வந்திங்க, யாரு எந்த ஊருன்னு கேட்டு பின்னிட்டானுங்க. அடின்னா செமித்தியான அடி. வுட்றுங்க வுட்றுங்கன்னு கூப்பாடு போட்டோம். அந்த கும்பல்ல ஒருத்தனுக்கு என்ன தோணிச்சோ , சரி ஓடுங்கடான்னான். உட்டா போதும்னு ஓடி ஆரம்பிச்சா ,டேய் அந்த மலை உச்சிவரை நிக்காம ஓடிட்டு வாங்கடான்னு சொல்லுறான். பாவி. என்ன பார்க்குற நானும் ஒரு பாவிதான் ஒத்துக்கறேன். ஐயோ அதெல்லாம் முடியாதுண்ணா வுட்றுங்கன்னு கதறுனோம். கும்பல்ல இருந்த ஒவ்வொருத்தனும் ஓயுற வரை ஒதைச்சுட்டு, அப்புறமா, இந்த ஏரியாவாண்ட இனி உன்னப் பாத்தோன்னா செத்திங்கடா நீங்கன்னு சொல்லி பைக்க புடுங்கினு தொரத்திவுட்டானுங்க. பேஜாரா போச்சுப்பா. எந்தத் தப்பையும் மொதத்தடவ செய்யறப்ப மாட்டுறதில்ல, ரிபீட் பண்றப்பதான் மாட்டிக்கிறோம். அவர் அதை பொதுவாகச் சொன்னது எனக்குக் கோபத்தைக் கொடுத்தது. நான் எந்த எதிர்வினையும் செய்யவில்லை. அவரது தத்துவம் என்னைப் புல்லரிக்கச் செய்தது.

துரையண்ணன் தனது காவாலித்தனத்தை ஏன் அறிமுகமில்லாத என்னிடம் சொல்ல வேண்டும். அவருக்கு அதில் ஒரு திருப்தி , ஆறுதல் , நியாயம் என்று ஏதோ ஒன்று கிடைக்கும் என்று நினைத்திருக்கலாம். குற்றம் இழைப்பவர்களுக்கு அதை முன்பின் அறியாத ஒருவரிடம் சொல்வது ஒரு போதையை, நாயகப் பாவத்தை , சாகச உணர்வைக் கொடுக்கிறது. தாங்கள் செய்த சாகசத்தைப் பறைசாற்றிக் கொள்வதில் ஒரு குரூரத் திருப்தியை அடைகிறார்கள். இந்த உளவியலை நான் என் ஊர் நண்பர்கள் சிலரிடமும் பார்த்திருக்கிறேன்.


 

கதை : 2

அது ஒரு மழை நாள். சென்னையில் மழை பெய்தால் நரகம்தான். ஏற்கனவே இருக்கிற தாறுமாறான போக்குவரத்து இப்போது இன்னும் கிறுக்குப்பிடிக்க வைக்கும். சாலைகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. சவாரி இல்லாத காரணத்தால் நான் காரை ஓரங்கட்டி நிப்பாட்டியிருந்தேன். அப்படியே சற்று கண்ணயர்ந்தும் விட்டேன். திடீரென்று காரின் கதவுகள் படபடவென்று தட்டப்படும் ஓசை என்னை கண்விழிக்க வைத்தது. அலங்கமலங்க விழித்தபடி பார்த்தால் இரண்டு போலீஸ். டேய் நோ பார்க்கிங்ல கார நிறுத்திட்டு மப்புல மட்டையாயி கெடக்கிறியா நாயே. என்று வாய்க்கு வந்தபடி கத்திக்கொண்டிருந்தார் அவர்களில் ஒருவர். சார் சார் அப்படில்லாம் இல்ல சார். இதோ வண்டிய எடுத்துடறேன் என்ற சொன்ன பிறகும் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் , வெளில வாடா, ஆர்.சி புக் எங்க ? லைசன்ஸ எடு. என்று கத்தினார். அந்த நேரம் பார்த்து ஒரு சாவாரி புக்கிங் மெசேஜ் வருது. என்னடா இது எழவு என்று சார் காரை எடுத்துடறேன்னு சொன்னாலும் விடமாட்டேன் என்கிறார். ஒரு வழியா கையில இருந்த நூறு ரூபாயையும் பிடுங்கிக் கொண்ட பின் அந்த கஸ்டமரை பிக் செய்தேன். இரண்டு பேர் ஏறினர். அவர்கள் ஏறக்குறைய சிறுவர்கள். ஏறியதிலிருந்து அவர்கள் இருவரும் போலீஸ், லாக் அப் என்று பேசிக்கொண்டிருந்தனர். இங்கேயுமா என்று நினைத்துக் கொண்டேன். அவர்கள் சொன்ன கதை இதுதான்

கதைக்குள் கதை : 2

            அண்ணா நாங்க ரெண்டு பேரும் சின்னப்பசங்களா இருக்கறப்பலேந்து பிரண்ட்ஸ். என் பேரு மகேஷு இவம்பேரு கார்த்தி. எங்க ஊரு வடஆற்காடு மாவட்டத்துலகீது. கார்த்தி எங்க தெருவுல ஒரு பொன்னுக்கு ரூட் விட்டுனு இருந்தாப்டி. அந்தப் பொன்னு வெளியூரு. இங்க பாட்டி வூட்டுக்கு வந்து படிச்சிகினு இருந்துச்சி. அதுக்கும் கார்த்தி பேர்ல லவ்ஸ் இருந்துச்சி. ரெண்டுபேரும் பைக்குல ஊரு பூரா சுத்துனாங்க மேட்டரு பூரா வூட்டு சனத்துக்கு தெரிஞ்சு, உஷாராயி அந்தப் பொன்ன அவ அப்பங்கார ஊருக்கே அனுப்பி வைச்சிட்டாங்க. அங்கப் போன பிறகும் அது கார்த்தியாவோட போன்ல பேசும். போன மாசம் ஒரே அழுகை. எங்க வீட்ல வேற மாப்ள பாக்கறாங்கடா, நாம கல்யாணம் கட்டிக்கிடலாம். நீ வந்து என்ன எங்கனா கூட்டிகினு போயிடுன்னு .கார்த்தி எங்களாண்ட வந்து மாப்ள அவ அழறாடா எப்டியாச்சும் கூட்டியாந்துடனும் அப்டின்னான். எங்க ஏரியா பையலுங்க பத்து பதினைஞ்சு பேர் ஒரு வண்டிய எடுத்துகினு அவ ஊருக்குப் போனோம். எங்க குரூப்ல குட்டியப்பன் ஒரு நாட்டு துப்பாக்கிய வேற எடுத்துகினு வந்தான். டேய் துப்பாக்கில்லாம் ரிஸ்க்கு. வேணாம்னு கார்த்தி சொன்னான். அதெல்லாம் ஒரு கெத்துக்குடா , சுடமாட்டன் அப்படின்னான் குட்டியப்பன். அந்தப் பொன்னு வீடு கார்த்திக்கு கும்ஸாத்தான் தெரியும். அட்ரஸ அவ போன்ல சொல்லியிருந்தா. எப்டியோ கண்டுபுடிச்சு நொளஞ்சிட்டோம். அந்த நேரத்துல ஒரு கிளவி மட்டும்தான் வூட்ல இருந்தா. எங்கள பாத்து கிளவி கொஞ்சம் பயந்தா போல பாத்தா . நாங்க மூஞ்சிய டெரரா வெச்சிக்கினு எங்க ஒன் பேத்தி ? அப்படின்னு கத்தினோம்.. கிளவி சாவகாசமா எந்தப் பேத்திய சொல்றப்பான்னு கேக்குது. உடனே நானு ஏய் உன் பேத்திக்கு இவனத் தவுர வேற யாருக்காச்சும் கல்யாணம்  பண்ணி வெக்கனும்னு நினைச்ச அவள தூக்கிடுவம்னு சொன்னேன். என் பேத்திங்க மூணு பேருக்குமே மாப்பள பாக்கறோம் , நீ யாரச் சொல்ற? அப்படிங்குது கௌவி. இப்ப கார்த்தி முன்னால வந்து தோ பாரு இந்த வெளாட்டேல்லாம் எங்கிட்ட வேணாம் . அவ எங்க போயிருக்கா? ன்னு கேட்டான் , கிளவி தெரியாதேப்பா ன்னு மழுப்பலாவே பேசுனா. கடுப்பேறிடுச்சி. இது வேலைக்காவாது. அவ வேலை செய்யற கம்பெனிக்கு போலாம்னு கார்த்தி சொன்னான். இவ்ளோ தொலவு வந்துட்டு ஒண்ணும் பண்ணாம போவறதுக்கு எங்க கேங்குல சில பசங்களுக்கு மனசு ஒப்பல. சப்புன்னு ஆயிடுச்சு. வந்ததுக்கு எதாவது சம்பவம் செய்யனும், இல்லாட்டா வேஸ்ட் மச்சான் அப்டின்னான் குட்டியப்பன். கையோட கொண்டாந்த துப்பாக்கியால டியூப் லைட்ட சுட்டான். டமால்னு ஒரே சத்தம். பசங்க வூட்ல இருந்த சாமானுங்கள எல்லாம் ஒடைச்சானுங்க. கௌவி நடுநடுங்கி போயிட்டா. இன்னும் கொஞ்சம் அவள கிலிபுடிக்க வெக்கனும்னு குட்டியப்பன்   அவ மொகத்துக்கு  நேரா துப்பாக்கிய நீட்டி, மலையாம்பட்டுக்கு வந்து குட்டியப்பன்னு கேட்டுபாரு, அப்ப தெரியும் அப்புடின்னு கத்தினான். (அவன் மொத்தமே மூணு அடிதான் இருப்பான் ) கிளவிய மிரள வெச்சதுல அவனுக்கு ஏக சந்தோஷம். சரி கௌம்புங்கடான்னு எல்லாரும் அந்தப் பொண்ணு கம்பெனிக்கு போனோம். நான் மட்டும் கொஞ்சம் ரீசன்ட்டா உள்ளப் போயி அந்தப்   பொன்ன பத்தி விசாரிச்சா அவ அங்க ஒரு வாரமா வேலைக்கே வரல்லன்னு சொன்னாங்க.  கொழப்பமாயிடுச்சு. அவ போனும் சுச் ஆஃப். அடுத்து என்ன பண்றதுன்னு தெரில. ஊருக்கே வந்துட்டோம்.

அடுத்த மூணே நாள்ல போலிசு எங்களத் தேடிட்டு எங்க தெருவுக்கு வந்தாங்க. அந் நேரத்திற்கு நான் பஜார்ல இருந்தேன். விஷயத்த கேட்டுட்டு அப்படியே எங்க பெரிம்மா வூட்டுக்கு எஸ்ஸாயிட்டேன். போலிசு முதல்ல குட்டியப்பன் வூட்டுக்கு போயிருக்குது.  அலக்கா அவன அமுக்கிட்டாங்க. செமித்தியான அடி குட்டியப்பனுக்கு .அவன் சொல்லி கார்த்தியையும் மத்தவங்களையும் போலிசு புடிச்சிருச்சு. நாங்க அந்த ஊருக்கு போனது போலிசுக்கு தெரிய வாய்ப்பே இல்ல. அந்தக் கிளவிக்கும் எங்கள அடையாளம் தெரிய வாய்ப்பில்ல. அப்புறம் எப்பிடி மாட்டினோம் ?.எல்லாம் குட்டியப்பனால வந்த வெனை. போன எடத்துல மூடிட்டு வராம ஊரையும் பேரையும் சொல்லி மாட்டிவுட்டான் குட்டியப்பன். அசிங்கப் பட்டுதுதான் மிச்சம். அந்தப் பொன்னுக்கு அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியாது. அத்தோட சேப்டர் குளோஸ். இப்போ கார்த்தி வேற பொண்ண லவ் பண்றாப்ல. அடடா காவியக் காதல் என்றால் இதுவன்றோ ?

குற்றவாளி ஏதோ ஒரு தடயத்தை விட்டுவிட்டு வருவான்னு சொல்வாங்க. ஆனா பேரையும் ஊரையும் சொல்லிட்டு வந்த அறிவாளி குட்டியப்பனைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.


கதை : 3

அன்று மிக நெருக்கடியான நாளாகப்போகிறது என்ற எந்த அறிகுறியும் தென்படாமல் மிக இயல்பாகத்தான் துவங்கியது. வீட்டைப்பூட்டி சாவியை ஓணரிடம் கொடுத்த போது அவர் லேசாக சிரிக்கக் கூடச் செய்தார். அபூர்வமாகத்தான் அவர் சிரிப்பார். நல்ல பண்டிகை சீசன். எனவே எட்டுமணியிலிருந்து புக்கிங் ஆகியபடியே இருந்தது. பொதுவாக நான் காலை உணவைக் கடந்துவிடுவது இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டிருந்தது. ஊரிலிருக்கும் வரை அம்மா இப்படியெல்லாம் விடவே மாட்டார்கள். இங்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே எல்லாமே மாறி போய் விட்டது. அன்று கூட நேரத்திற்குச் சாப்பிட முடியவில்லை. மதிய உணவைக்கூட நேரம் கடந்துதான் சாப்பிட முடிந்தது. ஏதோ ஒரு சாலையோரக் கடையில் சாப்பிட்டதாக நினைவு. பின் மாலை ஒரு சவாரியை டிராப் செய்ய சென்னையின் புறநகர்ப் பகுதிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போதுதான் அறிவிடமிருந்து அழைப்பு. எடுத்தவுடன், எங்க இருக்க ? என்றான். என்ன விஷயம் ? என்றதற்கு உடனே வீட்டுக்கு வா, என்றான். ஏண்டா என்றேன். டேய் நம்ம ரூம்மேட் அந்த அருண் பையன் செத்துட்டாண்டா, சூயிசய்டுன்னு சொல்லிக்கிறாங்க. என்றான். ஒருவிநாடி தலைக்குள் வெற்றாக உணர்ந்தேன். ஒன்றுமே புரியவில்லை. காரை பக்கவாட்டில் ஓரங்கட்டிக் கொண்டே என்னடா சொல்ற , புரியலை என்றேன். அவன் மறுபடியும் அதையே சொல்லிவிட்டு, நீ முதல்ல வீட்டுக்கு வா, நேர்ல பேசிக்கலாம் . சீக்கிரம் , என்றான். போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கதைக்குள் கதை : 3

நான்கைந்து மாதங்களுக்கு முன் எங்களோடு தங்கியிருந்த நண்பனொருவன் அறையைக் காலி செய்துவிட்டுச் சென்றான். அவனுக்குப் பதிலாக வேறொரு நபரை ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்லியிருந்தான். அப்படி வந்தவன்தான் அருண். அவனோடு தன் கல்லூரி தோழன் ஒருவனையும் அழைத்து வந்தான். நான்கு பேர்களாக வாடகையைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று சம்மதித்தோம். வீட்டு உரிமையாளரிடமும் சம்மதம் பெற்றோம். அருண் சிவந்த ஒடிசலான தேகம். கலைத்துவிட்டதைப் போன்ற சிகையலங்காரம். வசீகரமான முகம். ஒரு மல்டி நேஷனல் ஐ,டி நிறுவனத்தில் வேலை செய்வதாகக் கூறினான். அது நகரின் பிரதானப் பகுதியில் ஒன்பது அடுக்கு கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அவனது நண்பனும் ஒரு ஐ,டி நிறுவனத்தில்தான் வேலை செய்தான். அது நகர எல்லையைவிட்டு சில கிலோமீட்டர்கள் தொலைவில் அத்துவானமான இடத்தில் இருந்தது. அவர்கள் இருவரும் வீட்டின் ஒரு அறையை எடுத்துக்கொண்டனர். நான் எப்போதுமே வரவேற்பறையிலேதான் உறங்குவது வழக்கம். அறிவு கூட பெரும்பாலும் முன்னறையில்தான் புழங்குவான். வந்த நாளிலிருந்து அருண் அதிகம் பேசியதில்லை. அவனும் அவனது நண்பனும் பேசிக்கொண்டிருப்பார்கள். அநேகமாக அவர்களது அறையைவிட்டு விடுமுறை நாட்களில் கூட வெளியே வரமாட்டார்கள். எங்களுடன் அருணின் உரையாடல் அதிகபட்சம் ஆம் , இல்லை என்ற அளவில்தான் இருக்கும். ஆனால் அவர்களிருவரும் மணிக்கணக்காக நேரங்காலமின்றிப் பேசிக்கொண்டிருப்பதுண்டு. டி.வி பார்க்கக் கூட முன்னறைக்கு வந்ததில்லை. அவர்களிருக்கும் போது அறைக்கதவை மூடியே வைத்திருப்பார்கள்.

ஒரு விடுமுறை தினத்தன்று எதையோ தேடி அறைக்கதவைப் பட்டென்று திறந்துவிட்டேன் கட்டில் மீது படுத்திருந்த அருணும் அவனது நண்பனும் சட்டென்று ஒருவரிடமிருந்து ஒருவர் விலகிக்கொண்டனர். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இரண்டு ஆண் நண்பர்கள் இருக்கும் அறைக் கதவை தட்டிவிட்டா நுழைய வேண்டும் ? கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. பொதுவாகவே இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் நானோ அறிவோ வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களது பேச்சு நின்றுவிடும். இதையெல்லாம் என்னவென்று நினைப்பது ?நம்முடைய தலைவலியே நிறைய இருக்கும்போது மற்றவர் விஷயம் நமக்கேன் ? என்று நினைத்து அதையெல்லாம் கடந்து விடுவோம்.

ஒரு வார இறுதியில் அருணைப் பார்க்க அவன் அப்பா வந்திருந்தார். அலுவலக விஷயமாக சென்னை வந்திருந்ததாகவும் அப்படியே மகனைப் பார்க்க வந்ததாகக் கூறினார். அவனுடைய அம்மாவும் வந்திருந்தார். இருவருமே எங்களிடம் சகஜமாகப் பேசினர். மகன் தங்கியிருக்கும் வீடு சௌகர்யமாக இருக்கிறதா ? கூட யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றெல்லாம் கவலைப்படும் அன்பான பெற்றோர்கள். ஆனால் அதற்குள் அருண் இப்படி இறந்து போவான் என்று யார் அறிவார்கள் ? கடவுளே , செய்தி கேட்டவுடன் என் மனதில் அந்தத் தாய்தந்தையின் முகம்தான் நிழல்போல் வந்துபோனது.

நகரின் நெரிசலான போக்குவரத்தை வென்று எங்கள் இருப்பிடத்தை அடைய இரவு எட்டரை மணியாகி விட்டது. அறிவு மிகுந்த பதற்றத்தில் இருந்தான். எங்களது பழைய நண்பன்தான் ( அருணை அறிமுகப்படுத்தியவன் ) செய்தியை முதலில் தெரிவித்தது. அருண் தான் வேலைபார்த்து வந்த அலுவலகக் கட்டிடத்தின் ஆறாவது தளத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னார்கள். என்னால் நம்ப முடியவில்லை. ஏன் ? ஏன் ? எதற்காக ? என்ற கேள்வி பூதாகாரமாக மண்டைக்குள் குடைந்தது. அவன் நல்ல வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவன் அது அவனது தோற்றத்தைப் பார்க்கும்போதே தெரியும், அவனது பெற்றோரைப் பார்த்தபோது உறுதியாகத் தெரிந்தது. நல்ல படிப்பும் அதற்கேற்ற வேலையும். பிறகென்ன ? வேறு ஏதோ நமக்குப் புரியாத சிக்கல் அவனுள் இருந்திருக்க வேண்டும். நானும் அறிவும் அருண் அனுமதிக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்ட இராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சென்றோம். உண்மையில் அவனது உடலைப் பார்ப்பதற்குச் சென்றோம் என்பதை விடவும் , அப்படிச் செய்யாவிட்டால் நாளை போலிஸ் எங்களை சந்தேகிக்கக் கூடும் என்பதாலும் போவது அவசியமாயிற்று. அருண் எங்களது நேரடி நண்பனில்லாவிட்டாலும் கூட நான்கு மாதங்கள் ஒரே வீட்டில் இருந்திருக்கிறோம் என்ற தொடர்பு இருக்கிறதே. அவனது உடல் பெரியாஸ்பத்திரிக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதாக அறிந்தோம். வீட்டிற்குத் திரும்பினோம். அருணின் நண்பன் அன்றிரவு வீட்டிற்கு வரவேயில்லை. எங்களால் வீட்டில் இருக்க முடியவில்லை, வேறொரு நண்பனின் அறையில் இரவைக் கழிப்பதற்காகப் போனோம். படுக்கும்போதுதான் நாங்கள் மாலையிலிருந்தே எதுவும் சாப்பிடவில்லை என்பதை வயிறு நினைவுபடுத்தியது. உறங்காமல் விழித்தே இரவைக் கடந்தோம். மிக விசித்திரமான இரவு. காலை செய்திகளில் அருணின் மரணம் உடைப்புச் செய்திகளில் மின்னிக் கொண்டிருந்தது. அவனை அறியவே அறியாத பலரும் இந்நேரம் அவனுக்காக வருத்தப்பட்டிருப்பார்கள். சிலர் காரணங்களைக் கூடக் கண்டறிந்திருப்பார்கள். இதுபோன்ற செய்திகள் வெறும் செய்தியாக இருக்கையில் மனித மனங்களில் பொங்கும் கருணைக்கும், அன்புக்கும் அளவேயில்லை. எத்தனையோ தற்கொலை செய்திகளைப் படித்து நான் உச்சுக்கொட்டி வருந்தியிருக்கிறேன். அதுவே நேரடியாக ஆட்படுகையில் அந்தக் கருணையும் ஆதுரமும், தர்க்கங்களும் வேறாகப் போய்விடுகிறது என்பதை நானும் அறிவும் அனுபவப் பூர்வமாக உணர்ந்தோம். நிஜத்தைச் சொல்லவேண்டுமென்றால் இந்த நொடியில் எங்களுக்குக் கருணையோ , இரக்கமோ நெஞ்சில் பெருகவில்லை. நெருக்கடியான மனநிலையில்தான் இருந்தோம். நிச்சயம் போலிஸ் எங்களைத் துருவித் துருவி விசாரணை செய்யும். நாங்கள் எந்தவிதத்திலும் சம்பந்தப் பட்டிருக்காவிடினும் சந்தேகத்தின் சாயை எங்கள் மீதும் விழும். அது இயல்பு. எங்களுக்கே இந்த நிலைமை என்றால் அருணின் தோழனின் நிலைமை பற்றிச் சொல்லவேண்டாம். இனி எங்களால் பழைய இடத்தில் தொடர்ந்து குடியிருக்க முடியாது. அன்று ஞாயிற்றுக் கிழமை. பொதுவாக ஞாயிறு விடுமுறை என்பதெல்லாம் கால்டாக்ஸி ஓட்டுநர்களுக்குக் கிடையாதுதான் . ஆனாலும் நாங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை எடுத்துக்கொள்வது வழக்கம். ஏதாவது பாருக்கு சென்று தண்ணியடிப்பது வழக்கம். இன்றோ போலிஸ் விசாரணைக்காகக் காத்திருக்கிறோம்.

காலையிலேயே வீட்டு உரிமையாளரிடமிருந்து அழைப்பு. விஷயத்தைக் கேள்விப் பட்டிருக்கிறார். நண்பனின் அறையிலிருந்து கிளம்பி வீட்டிற்கே வந்தோம். எந்த வேலையும் ஓடவில்லை. துணி துவைக்கும் வேலையிருந்தது. ஆனாலும் எதுவும் செய்யாது வெறுமனே இருந்தோம். அருணின் அறைக்கதவு வழக்கம் போல் மூடியே இருந்தது. உள்ளே போகவில்லை. மதியம் உள்ளூர் போலிஸ் நிலையத்திலிருந்து எஸ்.ஐ பேசினார். உள்ளூர காய்ச்சல் போல உடல் கொதித்தது. போலிஸ் எனக்குப் புதிதில்லை. ஆனால் என்றுமே நண்பனும் இல்லை. குற்றமே செய்யாதபோதும் அபராதம் என்ற பேரில் வசூல் செய்யும் ஜீவன்களாகவே தென்பட்டனர். ஒன்றுமில்லாததிற்கே அத்தனை கெடுபிடி செய்கிறவர்கள், இப்போது ஒரு மரணத்திற்காக விசாரணை செய்ய வருகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும். அரைமணி நேரத்தில் ஒரு எஸ்.ஐ மற்றும் ஒரு கான்ஸ்டபிள் வந்தனர்.

உன் பேர் ? என்ன வேலை செய்யற ? எந்த ஊரு ? போன்ற சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டுவிட்டு தடாலென்று , ஏன் அந்தப் பையனை பிடிச்சு தள்ளிவிட்டிங்க? என்றார்.

இப்படி ஏடாகூடமாகக் கேட்பார்கள் என்று நான் ஊகித்திருந்ததால் தயங்காமல் , ‘சார் அவன் விழுந்த சமயத்துல நான் சென்னை எல்லையை விட்டு பலகிலோமீட்டர் தொலைவில் இருந்தேன் சார்,’ என்றேன்.

‘ அவன் எத்தன மணிக்கு செத்தான்னு உனக்கு எப்படி தெரியும் ? ‘

‘ பழைய ரூம் மேட், அவன் அருணோட ப்ரெண்ட். அவந்தான் அறிவுக்கு சொல்லியிருக்கிறான். அறிவு எனக்குச் சொன்னான்.’ என்றேன்.

அவர் சற்று யோசித்துவிட்டு , ‘ ந்யூஸ் தெரிஞ்சதும் என்ன பண்ணீங்க ?’  என்றார்.

‘ இராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அருணைப் பார்க்கப் போயிருந்தோம். ஆனா அங்கிருந்து போஸ்ட் மார்ட்டம் பண்ண பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போயிட்டதா சொன்னாங்க. திரும்பி வந்துட்டோம்.’ என்றேன்.

‘ அருண் எத்தனை நாளா உங்களுக்கு பழக்கம் ? ’

‘ இப்ப நாலு மாசமாத்தான் சார்’

‘ அவன் நடவடிக்கைங்க எதும் வித்தியாசமா இருந்துச்சா ?’

‘ அவன் ரொம்ப ரிசவர்டு டைப். அதிகம் எங்ககிட்ட பேசினதில்ல.’

‘ வேற ஏதாவது ?’

ஏனோ நான் அவனுடைய நண்பனிடம் அவனுக்கிருந்த நெருக்கத்தையும் அவங்க அன்யோன்யத்தையும் சொல்லிடனும்னு நினைச்சேன். அதனால் அன்றொரு நாள் அவங்க கதவைத் திறந்தவுடன் விலகிக் கொண்ட சம்பவத்தைச் சொன்னேன்.

‘ அவங்க ஹோமோசெக்ஸ்ன்னு சொல்ல வரிங்களா ?’

‘ அதெல்லாம் தெரியாது சார். நீங்க வித்தியாசமா இருந்தானான்னு கேட்டதால சொன்னேன். வேற எனக்குத் தெரியாது.’

மேலும் ஒரு மணிநேரம் தோண்டித்தோண்டி கேள்விகள் கேட்டுவிட்டு அருணின் அறையைச் சோதனை போட வேண்டும் என்றார். அறையைத் திறந்து விட்டேன். துணிமணிகள், புது ஜோடி ஷு ஒன்று. சில புத்தகங்கள் ( சேத்தன் பகத் , ஓஷோ ) ஒரு சிறிய அட்டைப் பெட்டி. அட்டைப் பெட்டியைத் திறந்தார். அதற்குள் உடைந்த பச்சை நிறக் கண்ணாடி வளையல்கள் மற்றும் உலர்ந்த ரோஜா மலர். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இதுதான் அவனது தற்கொலைக்குக் காரணமா? எஸ்.ஐ எங்களைப் பார்த்தார். எங்களுக்கு எதுவும் தெரியாது என்றோம். அவனுடைய அந்தக் கல்லூரி நண்பனுக்குத் தெரிந்திருக்கலாம் என்றேன்.

எஸ்.ஐ கிளம்பிச் சென்றுவிட்டார். எனக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தாலும், படபடப்பு போகவில்லை. அறிவு என்னை வெறுமையாகப் பார்த்தான். போலிஸ் அருணின் அலுவலக நண்பர்கள், சக ஊழியர்கள், டீம் மேனஜர் என்று ஒருவரையும் விடவில்லை. எங்களைவிடவும் அதிகமாக குடைந்ததாகக் கேள்விப்பட்டோம். அருணின் அறை நண்பனை நாங்கள் அதற்கப்புறம் பார்க்கவேயில்லை. அவனையும் போலிஸ் விசாரித்ததாகப் பழைய ரூம் மேட் சொன்னான். ஒரு மாதம் கழிந்தவுடன் நாங்கள் வீட்டைக் காலி செய்தபோது கூட அவனது பொருட்களை அவன் வந்து எடுத்துப் போகவேயில்லை. அவனது செல்போன் எண்ணும் தொடர்பில் இல்லை.

நாங்கள் வீட்டை காலி செய்வதற்கு ஒரு வாரம் முன்பு அருணின் அப்பா அந்த வீட்டிற்கு வந்தார். எனக்கு தர்மசங்கடமாகக் கொஞ்சம் பயமாக, நிறையப் பரிதாபமாக இருந்தது. பயத்திற்குக் காரணம் , அருணின் உடலை வாங்க அவர் ஜி.ஹெச்சுக்கு வந்த போது அருணின் நண்பன் ஒருவனை அறைந்துவிட்டதாகக் கேள்விப் பட்டிருந்தோம். ‘உங்களையெல்லாம் நம்பித்தானடா நாங்க இருந்தோம் ‘ என்று தலையில் அடித்துக் கொண்டு அழுததாகச் சொன்னார்கள். பொருட்களை எடுத்துக் கொண்டே அவர் எங்களிடம் கோபமாக அதே வாசகங்களைச் சொல்லிக் கத்தினார். என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இறந்து போன மகனின் உடைமைகளைத் திரும்ப எடுத்துச் செல்லும் பரிதாபமான சூழல் எந்தத் தகப்பனுக்கும் வரக்கூடாது. அருண் மீது முதன் முறையாகக் கோபமாக வந்தது. காதல் அத்தனை பெரிய விஷயமாகிவிட்டதா ? அந்த பச்சைவளையல்காரி இப்போது எங்கிருப்பாள்? அவளுக்கு விஷயம் எப்போது தெரிந்திருக்கும் ? அன்றிரவு அவளால் நிம்மதியாக உறங்க முடிந்திருக்குமா ? இந்தக் கேள்விகளின் துரத்தலால்தான் ஒரு வேளை நான் அருணின் இறுதிச் சடங்கிற்கு அவனது சொந்த ஊருக்குச் சென்றேனோ ?

அருணின் மரணம் தற்கொலை என்று போலிஸ் தரப்பு வழக்கை முடித்தது. தற்கொலை செய்து கொண்ட அன்றைய தினம் அருண் எப்போதும் போலத்தான் வீட்டில் இருந்தான். காலையில் வழக்கமான நேரத்திற்குப் புறப்பட்டான். எந்தப் பதற்றமும் தெரியவில்லை. நேர்த்தியாக உடையணிந்திருந்தான். அலுவலகத்திலும் மாலை தேநீர் இடைவேளை வரை சகஜமாகத்தான் இருந்ததாகச் சொன்னார்கள். தேநீர் இடைவேளைக்கு கேண்டினுக்குப் போயிருந்திருக்கிறான். இடைவேளை முடிந்து எல்லோரும் கேபினுக்குத் திரும்பியபோது அவன் மட்டும் வரவில்லை. அதன்பின்னர்தான் அவன் ஆறாவது தளத்திலிருந்து விழுந்திருக்க வேண்டும். அந்தத் தளத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்றது அலுவலகம். தற்கொலை என்பது இத்தனை சாவகாசமாக நிதானமாகச் செய்யக் கூடிய வேலைதானா? எத்தனை நாள் திட்டமாக இருந்திருக்கும் ? அந்தக் க்ஷண நேர வைராக்கியமா ? இந்த உளவியல் என் சிற்றறிவுக்குப் பிடிபடவில்லை. அருணின் இறுதிச் சடங்கிற்கு அலுவலக நண்பர்கள் அத்தனைப்பேரும் வந்திருந்தனர். மேல்மட்ட அதிகாரிகள் கூடக் கடைசிவரை இருந்தனர். உள்ளூர் நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். என் கண்கள் அந்தப் பச்சை வளையல்களுக்குரிய பெண்ணைத் தேடியது அனிச்சையாக. ஒருவேளை அதற்காகத்தான் நான் இத்தனை தொலைவு வந்தேனோ?

அருணின் அந்தக் கல்லூரி நண்பன் இறுதிச் சடங்கிற்குக் கூட வரவில்லை. வினோதமாக இருந்தது. அறையில் இருந்த அவனது பொருட்களை அவன் எடுத்துச் சென்றானா இல்லையா என்றும் எனக்குத் தெரியவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பின் அவனது செல்போன் இயக்கத்தில் இருந்தது. வாட்ஸ்ஆப் செயலி ஆக்டிவ் மோடில் இருந்ததை வைத்துத் தெரிந்து கொண்டேன். வாட்ஸ்ஆப்பில் அவனது ஸ்டேட்டஸ் ‘INSANITY LOOMS’ என்றிருந்தது. ஆம் உண்மைதான் எனக்கும் அப்படித்தான் இருந்தது.


 

எழுதியவர்

இமையாள்
இமையாள்
கவிஞர், சிறுகதை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என இயங்கி வரும் நர்மதா குப்புசாமியின் புனைபெயர் ‘இமையாள்’

: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல் “நிரந்தரக் கணவன்” எனும் பெயரிலும், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் “சின்ட்ரெல்லா நடனம்” எனும் பெயரிலும் இவரின் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளன. இமையாள் எனும் பெயரில் “ஆண்கள் இல்லாத வீடு” எனும் கவிதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார்.
Subscribe
Notify of
guest

4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sudha C Suresh
Sudha C Suresh
1 year ago

அருமையான கதைகள்

Sudha C Suresh
Sudha C Suresh
1 year ago

அருமயான kathaigal

வாசுகி தேவராஜ்
வாசுகி தேவராஜ்
1 year ago

சிறப்பான கதை. மாறுபட்ட கோணம். Insanity looms கதையின் முத்தாய்ப்பு. வாழ்த்துகள் மேடம்!!

Ganapathy Shankar
Ganapathy Shankar
1 year ago

நல்ல எழுத்து நடை.. கால் டாக்சி ட்ரைவர் என்பதே ஒரு அடையாளம்.. Good u didn’t mention the name..

நூல் பிடிச்ச மாதிரி சீராக எழுதிருக்கே..

நேரடியா படிப்பவங்க கிட்ட உரையாடுற மாதிரியே இருந்துச்சு.. உரையாடல்களில் ஒரு கதையை நகர்த்திச் செல்வது சவால்.. You done it convincingly..

கதைக்குள் கதைன்னு இருந்தாலும் குழப்பமே இல்ல.. It says your skill and experience..

ஒரு குறும்படத்துக்கான கரு இருக்கு. நல்ல script 🥳

I could visualize the scenes when you narrate, that is one skill crucial for a story writer. Kudos 😍

Keep writing.. Writing simple isn’t simple.. You hold that skill..

வாழ்த்துக்கள்.. ❣️

You cannot copy content of this page
4
0
Would love your thoughts, please comment.x
()
x