16 April 2024

  •  புனிதக் கால்வாய்கள்

வர்ணமடித்த வாக்குறுதிகளால்
இன்றளவும் மீட்பற்ற
கருக்கும் பள்ளத்தில்
கவிழ்ந்தபடி நாங்கள்
நாற்றம் மூழ்கக் கிடக்கிறோம்
மூழ்கடிக்கப்பட்டும் பிறக்கிறோம்

சமயங்களில்
கான்கிரீட் வளையத்திலோ..
பார்தாயின் கூடுகளிலோ..
பிறவி துளை கடக்கும்
சேரிக்குஞ்சுகளை பார்த்ததுண்டா
வசித்ததுண்டா ?

ஊர் மூத்திரம் வந்து சேரும்
கழிமுகத்தில்
சமூகச் கழிமுகம் அவர்களுடையது

நரகத்தின்
மாயாவிகளாய்
செத்து செத்து மூச்சிட்டு பின்பு
செத்தும் போகின்றோம்.

சேரிக் குஞ்சுகளை எங்கள் கூவத்தில் மேயவிட்டு நீச்சல் பழக்கினோம்
மேலெழும் ஒன்றிரண்டில்
கனவுகளை துவைத்தபடி புத்தகங்கள்
மூத்திர குடிலாக்கித் தந்தவர்களே!
மூடாமல் கேளுங்கள்
எங்கள் பிள்ளைக் கழிவுகளையும்
உங்கள் மூத்திரத்தில் தான் அலசுகிறோம்.

நீரின் புறவழியில்
எங்களை கடந்து தான் ஓடுகிறது.
புனிதக் கால்வாய்கள்
அதில் நிலத்தோடு ஒட்டாத
குடில்களில்
எக்கணமும் அறுத்தெறியப் படலாம் நாங்கள்.


  • பிரதிபிம்பம்

தாழ்வாரத்தில் தலைகவிழ்ந்தபடி
கூடுகட்டி வாழும் தூக்கனாம் குருவிகளை
எந்த விதிமுறையின்றி முற்றம் ஏற்பது போலக்
கணம் கூடிவிடுகிற உன் நாலைந்து
சொற்களில் புரையோடிக் கிடக்கும்
பெருங்காதலை செப்பனிட்டு
ஏற்கத் துவங்குகிறது மனது
அடி நெஞ்சில் பதுக்கிய உன்
நினைவுக் குட்டிகளில்
ஒன்றிரண்டு பிறந்து தவழ்கிறது.
விரியத் துவங்கும் விழிகளில்
காணக் கடவுகிறாயா
பிரதிபிம்பம் கடத்தி
துடி துடிக்க வெளியேறும்
மின்னல் முயலொன்றை?


  • நிறப்பிரிகை

அழகின் குறிப்புகளில் நீ நான் பார்க்காததின் நிறமாக
அடர் காட்டில் தொலைந்த வெள்ளை முயலின்
வெளிச்சமிகு கண்களில் காணாமல்
போயிருந்த வனாந்திரக்காரியின் இருளாக

மேலுமாயும் கீழுமாயும் நிறப்பிரிகையில்
உடல் திரிக்கும் ஐங்கர நட்சத்திர வசிய சுழலாக
ஆதிரைகளின் சொற்பெயர்ப்பில்
பிராந்தியமும் திராவிடமும் சிலேபி மொழியும்
படைத்தருளாத இலக்கிய வாசனை பூசிப்பதாக

சுயஞான ஓடையைக் கடந்து கொண்டிருக்கையில்
என் தாத்தா கொள்ளை மேட்டில் சுடும்
காட்டுப்பன்றியின் எலும்பு மஜ்ஜையை தின்பதாக மாமிச எச்சில் வழிய
வெண் குறிஞ்சியின் தவங்களை மயிர்குழைத்து செருகியதாக
மோன நடையிட்டு அங்குலத்தில்
ஆடித்திரிவதாய் பூகோள வளையங்களைக்
காதினுள் மாட்டியதாக

சகதி குழைத்து எலும்பிச்சை மலரினை
முகர்ந்தபடி
பிடித்தமாய் ஊதும் பெருங்குழாய் புகையில்
பற்கள் மட்டும் தெரியும் வண்ணம்
பழுத்த கறுப்பு இரத்தத்தில்
அலறுகிற
நூற்றாண்டின் கறுப்பின புன்னகையைக்
கர்ஜித்து எப்போதும்
என் கனவில் ஓடிக்கொண்டிருக்கிறாள்
நீக்ரோ பெண்ணொருத்தி!


  • தோழர்
இனக் குறியீடு இன்றி
அடைமொழி பிதற்றல் அகற்றி
வீதி வழியே
நடந்து வந்ததொரு
சிகப்பு துண்டை பார்த்து
ஒருவன்  ‘நீங்க தோழரா?’ என்றான்
மற்றொருவன்  ‘நீங்கள் மார்க்சியமா?’ என்றான்
இன்னொருவன் ‘புரட்சியாளனா’ என்றான்
எதற்கும் சஞ்சலம் கொள்ளாமல்
அக்கைத்தடி கிழவன்
…………….
கட்டிய கோமணத்தின் கால் பகுதி
கிழிந்து விட்டது
மீதியிருந்த மற்றொரு
பாதியென்றான்
கீழே வீழ்ந்தது
அம்மூவரின்
துண்டுக் கோமணங்கள்
அதையும் ஒன்று சேர்த்து
அளவு பார்த்தான்
அக்கிழவனின் அந்தரங்க பகுதிக்கு

– கவி கோ பிரியதர்ஷினி

Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Bose prabhu
Bose prabhu
2 years ago

சிறப்பான கவிதைகள் ❤️❤️❤️

You cannot copy content of this page
1
0
Would love your thoughts, please comment.x
()
x