22 November 2024
kaviji article copy

மீபத்தில் பொதிகை டிவியில் “என்னை விட்டு போகாதே” என்றொரு படம் ஓடி கொண்டிருந்தது.

ராமராஜன்தான் கதை நாயகன். கொஞ்ச நேரம்தான் பார்த்தேன். மனதுக்கு அத்தனை நெருக்கத்தை அந்த படம் கொடுத்தது.

(நாலு சுவற்றுக்குள் ஓடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை வெட்ட வெளிக்கு, கிராமத்துக்கு கொண்டு வந்து சேர்த்த பாரதிராஜாவை மெச்சாமல் இருக்க முடியவில்லை)

கூட செந்தில்…. ஓமக்குச்சி நரசிம்மன்… இன்னும் பலர் இருந்தார்கள். ஹீரோயின் சவீதா ஆனந்த். இவரை அதற்கு பின் துணை கதா பாத்திரங்களில் நிறைய படங்களில் பார்த்திருக்கிறேன். ராமராஜன் என்றவுடனே “ட்ரவுசர்… மஞ்சள் சட்டை… மாட்டுக்காரன்” என்றே நமக்கு பின் வந்த தலைமுறை ஞாபகம் வைத்திருக்கிறது. கண்டிப்பாக நான் அப்படி நினைவு வைக்கவில்லை. வெள்ளி விழா படங்கள்.. இசை ராஜாவின் கூட்டில் அத்தனை பாடல்களும் சூப் டூப்பர் ஹிட். ராமராஜனின் சினிமா வாழ்வில்.. தோல்விகள் மிக குறைவு என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய திறவு.

அதே போல.. நாம் சில கதாபாத்திரங்களை அப்படியே ஜஸ்ட் லைக் தட் கடந்து விட்டிருக்கிறோம்.

சவீதா ஆனந்த், “சத்யா” படத்தில் கமலுக்கு தங்கையாக வரும் கதா பாத்திரம் சௌகார் ஜானகி அவர்களின் பேத்திவைஷ்ணவி… “பூந்தோட்டக் காவல்காரன்” ஆனந்த், கங்கா, திலீப், கவி, ஹீரோவாக நடித்திருந்தாலும் பாண்டியன் என்று ஒரு பட்டாளமே இருக்கிறது.

எல்லாருக்கும் ஒரு கனவு இருந்திருக்கும். அதுதான் தன் பாதையை காலத்துக்கு தகுந்தாற் போல மாற்றிக் கொண்டிருக்கிறது. நான் ஸ்தம்பித்து பார்த்துக் கொண்டே இருந்தேன். நீண்ட நாட்களுக்கு பின் ரிமோட் என் கையில் கிடைத்தது. மாற்றி மாற்றி மாற்றிக் கொண்டே இருந்தேன். படம் மாறி மாறி வந்துகொண்டேயிருந்தது. இரண்டு முறை கவுண்டமணி செந்தில் காம்போ காட்சிகளை கண்ட பின் யோசனை தானாகவே வந்தது.

என்ன ஓர் அற்புதமான ஜோடி இவர்கள். என்ன ஒரு டைமிங்….! இவர்கள் இருவரையும் கண்டவுடன் மனதுக்குள் ஒரு வித நிறைவு வந்து விடுவதை நாம் மறுக்கவோ மறக்கவோ முடியாது. செந்திலின் அப்பாவித்தனத்தின் சொரூபம் மிகப் பெரிய ஆச்சரியம். நக்கலோ நையாண்டியோ…. உண்மையின் சித்திரத்தின் உள் பக்கம் காணும் கரடு முரடு காட்சியை இலகுவாக எல்லாரும் புரியும்படி அன்றே, கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் வெளுத்து வாங்கிய கவுண்டமணி அவர்களை இன்று கொண்டாடாமல் இருக்க முடியாது. இன்று நடக்கும் அரசியல் கூத்து….. ஆணவ நடத்தை…… அரங்கேறும் அத்துமீறல் என்று அத்தனையும் அவர் கூற்றுப்படியே இன்று மீம்ஸ் ஆகிறது. தீர்க்க தரிசிகள் அவ்வப்போது வந்து கொண்டேதான் இருப்பார்கள்…. அந்த வகையில் கவுண்டமணி அவர்களை மெய் சிலிர்த்து பார்க்கிறேன்.

“முதல்ல நான் என்னை திருத்திக்கறேன்டா…….” என்று கத்தி கூறும் அவரின் மொழி இன்றும் காதில் மத்தளம் அடிக்கிறது. “என்னடா விளம்பரம்…..” என்று கேட்பதாகட்டும்….” ஆனாலும் உனக்கு ரெம்பத்தான் தகிரியமப்பா….”- வாகட்டும். “பேப்பர் ரோஸ்ட் லிவருக்கு நல்லதாமா”- ஆகட்டும். “ஏழைங்களா….”. ஆகட்டும்…. இன்றைய அரசியல் கட்டமைப்பை அன்றே புட்டு புட்டு வைத்த அவரை வியப்பின் மீது நின்று பார்க்கிறேன். இன்றைய காமெடியன்களுக்கு அவரின் பாதிப்பில்லாமல் தங்களை மெருகூட்டுவது மிக சவாலான விஷயமாக இருக்கிறது. அவரும் செந்திலும் அற்புதமான ஜோடி இவர்கள். செந்திலின் முக பாவனைகளும்…. கவுண்டமணியின் உடல் மொழியும்…. நம்மை 90 களில் மீண்டும் மீண்டும் வாழ வைக்கும் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கின்றது என்றால் அது தான் நிஜம்.

“இதுல எப்டின்னே எரியும்” என்று பெட்ரமாஸ் லைட் காமெடியை இன்னும் நூறு வருடங்களுக்காவது இன்றைய தலைமுறை நினைவு வைத்திருக்கும்…

“சின்னஞ்சிறு பூவே…. உன்னைத் தொடும் போதே.. மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே….” என்று ஒரு பாடல். படம் ஆத்தா உன் கோயிலிலே. இசை தேவா. அவருக்கு ஏன் “தேனிசை தென்றல்” என்று பட்டம் என்று புரியும் தருணத்தில் பத்தாவது முறையும் அதே பாடலைக் கேட்கிறேன். அந்த பாட்டில் கதை நாயகன் அன்றைய கால கட்டத்துக்கு புது முகம்.. ஹீரோயின் வினோதினி.

வினோதினி…! வித்தியாசமான முகம் கொண்ட அழகி. அவரையும் இப்போதெல்லாம் காண முடிவதில்லை. வினோதினி… என்ற பெயரில் இப்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் ஒரு நடிகை கலக்கிக் கொண்டிருக்கிறார். “பிசாசி”ல்… சிறப்பு சிறுவனின் அம்மாவாக நடித்திருப்பவர்.

ஏனோ மெல்ல மெல்ல வரும் வந்து பரவி அப்பி கொள்ளும் ஒரு வித மயக்கத்தில் மௌனிகாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

“என்னய்யா…” என்று கதை நாயகர்களை ஒரு வித ஒருமையில் அந்தரங்கமாக அழைக்கும் பாத்திரம் எப்போதைக்குமான இவருடையது. உபயம்.. பாலுமகேந்திரா அவர்கள். தலை விரிந்த கூந்தலில்…..உருட்டும் விழிகளில்….கொஞ்சம் கிறக்கம் வரத்தான் செய்யும்… எவருக்கும்.

“வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா” என்று ‘கண்ணன் வருவான்” படத்தில்… கார்த்திக்… பாடும் போது… நவரச நாயகன் என்று சும்மாவா கூறினார்கள் என்று ஆச்சரியப்பட்டேன். ஒரு பாடல்…. குடும்பமே சுற்றி இருக்கிறது. அவருக்கு காதல் திவ்யா மீது. அவரை நினைத்து பாடுகிறார். அதே வீட்டில் மந்த்ராவும் இருக்கிறார். தன்னைப் பற்றித்தான் பாடுகிறார் என்று அவரும் நினைத்துக் கொள்கிறார். ஒரே பாடல்.. ஒரே ஆள்.. ஒரே அர்த்தம்.. ஒரே ஃபிரேம். ஆனால் கார்த்திக்.. நொடிக்கு நொடி மாற்றும் முக உடல் பாவனைகளில்…… திவ்யாவுக்கு காதலையும் மந்த்ராவுக்கு சும்மா நான் பிரெண்டுதாம்பா என்பதையும் காட்டி விட்டு கடந்து விடுகிறார்.

ஸ்தம்பித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

படம் பார்ப்பதற்காகவே தியேட்டரில் முறுக்கு விற்க சேர்ந்த அண்ணனை நான் அறிவேன். இன்று அதே தியேட்டரில் படம் ஓட்டும் ஆப்ரேட்டராக பணி புரிந்து கொண்டிருக்கிறார். இப்போதும்… ஊருக்கு சென்றால்.. படம் ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில்… நிறைய பேசுவோம். ரிக்சா மாமா…. நாடோடி பாட்டுக்காரன், ஜமீன் கோட்டை, உள்ளத்தை அள்ளித்தா, செந்தூரப்பாண்டி, இணைந்த கைகள், கேங் லீடர், போலிஸ் பாப்பா, இது தாண்டா போலீஸ், சின்னத்தம்பி, சத்ரியன், முத்து, பெரிய வீட்டுப் பண்ணைக்காரன், உருவம், பாண்டி நாட்டு தங்கம், நான் பேச நினைப்பதெல்லாம், புது வசந்தம் என்று பேசி பேசி பின் மெல்ல கண் கலங்கி முகம் திருப்பிக் கொள்வோம்.

“நாலு தியேட்டர்ல இப்போ ஒன்னுதான் இருக்குடா….. நம்ம ஊரு எப்படி இருந்துச்சு… இல்ல… இப்ப பாரு.. பாக்க நலலவே இல்லடா” என்றபடியே டீ குடிப்பார். நான் சிரிப்பது போல ஒரு முகத்தைக் கொண்டு வந்து விடுவேன். வெறும் இரண்டு ரூபாயில் நான் பார்த்த ‘செந்தூரப்பூவே..” இன்றும் மிகப் பெரிய பிரம்மாண்டம். ரயில் ஓசை மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது.


ஒரு ரசிகனின் படம் பார்க்கும் ஆர்வத்தை என்னிலிருந்தே நான் நெருங்கி பார்க்கிறேன்.

வெறும் 1.50 பைசாவை வைத்துக் கொண்டு அந்த கவுண்ட்டர் முன்னால் நிற்கிறேன். அது ஒரு மதிய வேளை. மேட்னி ஷோவுக்கு நிற்கிறேன். என்னை சுற்றி மனித ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்க…, கேட் திறப்பவன் வந்து விட்டான். திடும்மென உள் அறையில் இருந்து வேகமாய் வரும் கதாநாயகனைப் போல அவன் வருகையில் கூட்டம் தானாக கூச்சலிடத் துவங்குகிறது. நானும் கத்திக் கொண்டே பரபரக்கத் துவங்குகிறேன். உள்ளிருந்து வந்து அந்த இரும்பு கூண்டை படக்கென திறந்து விட்டு பட படவென ஓடி விடுகிறான். ஒரு ஆள் மட்டுமே நுழைய கூடிய அளவு உள்ள கவுண்டரில் குறைந்தது நான்கு பேராவது முட்டி மோதி உள்ளே சென்று கொண்டிருப்பார்கள். நானோ அரை டிக்கட். எந்த காலுக்குள் புகுந்தோ…..எந்த கைகளின் இடியை தலையில் கொண்டோ…… வேர்த்து விறுவிறுத்து… படபடத்து அடித்து பிடித்து உள்ளே சென்று மூச்சு விடவும் முடியாமல்… உடல் நச நசத்து டிக்கெட் வாங்க கையை நீட்டினால்… 1.50 ரூபாய் டிக்கெட் முடிந்து விட்டது 2 ரூபாய் டிக்கெட்தான் இருக்கிறது என்கிறார்கள். அழுகை முட்டிக் கொண்டு வருகிறது. முன்னும் போக முடியாமல் பின்னும் போக முடியாமல்… 50 பைசா இல்லாமல் திரு திருவென விழித்து தடுமாறுகையில் பின்னால் இருந்த ஒரு அண்ணன் என்னிடம் 1.50 ரூபாயை வாங்கி கொண்டு 2 ரூபாய் டிக்கெட் இரண்டு எடுக்கிறார்.

“மருது பாண்டி” மலருகிறது. அந்த அண்ணன் யார் என்று தெரியாது. ஆனால் இன்னமும் மனதுக்குள் நன்றி கூறுகிறேன். நெகிழ்கிறேன். சினிமா எனக்கு அத்தனை உருக்கமானது. நெருக்கமானது.

எத்தனை நெருக்கம் என்றால் ஒரு நாள் இரவு… கோவில் விஷேசத்துக்காக டெக் எடுத்து படம் போடுகிறார்கள். முதல் படம் “வெற்றி விழா”

“சிந்தா”வை மறக்க முடியுமா….!

“சி……. ன்….. ந்….. தா…” என்று வில்லன் கூறி சிரிக்கையில் இன்னும் கொஞ்சம் எட்டி முட்டி போட்டு என்னை உயர்த்தி தலையை முன்னோக்கி பார்த்த ஞாபகம்… ஓர் இரவின் சதுரத்தை இன்னமும் எனக்குள் கொட்டுகிறது.

அடுத்த படம் “குடியிருந்த கோயில்”.

எம் ஜி ஆர் வந்தாலே.. கத்தும் கூட்டத்தில்… ஆங்காங்கே சலசலப்பும்.. கொண்டாட்டமும்…. கொண்ட கூட்டம் விரிந்து கொண்டே போகிறது. எங்கள் ஊர் பெருசுங்கள் எல்லாம் விசில் அடித்தது இன்னமும் கேட்கிறது. அடுத்து “அதிசய பிறவி”. ரஜினி இறந்து மேல் உலகம் சென்று எமனிடம் வாதிடும் காட்சிகள் எனக்குள் மிக ஆழமாக புதைந்தன. இது மாதிரி எந்த படத்தையும் அதுவரை பார்த்ததில்லை என்பதால் இந்த படம் மனதுக்கு நெருக்கமாக இருந்தது. பிடித்தது. என் கண்கள் டிவி பெட்டியை போலவே ஆனதை போல நம்பினேன். பார்க்க பார்க்க சுவாரஸ்யம் கூடியது. எனக்குள் கதைகள் விரிய துவங்கிய கால கட்டம் அது என்று நம்புகிறேன். அடுத்து “மக்கள் என் பக்கம்”. முதலில் நிழல்கள் ரவி போய் விட்டு வந்து சாக, அடுத்து ரகுவரன் முடிந்த அளவு போராடி விட்டு வந்து சாக, அடுத்து சத்யராஜ் வில்லன்களை பழி வாங்க புறப்படும் போது… மெல்ல சொக்கிய தூக்கம் படக்கென்று காணாமல் போனது. கை தானாக மெஷின் கன்னைப் போல ஆடியது.

“நாவுக்கு அடிமை அட ஆறு வயசுல
பூவுக்கு அடிமை பதினாறு வயசுல
நோவுக்கு அடிமை அட பாதி வயசுல
சாவுக்கு அடிமை அட நூறு வயசுல
ஆண்டவனை பாக்கணும்”- பாடல் இப்போதும் அடிக்கடி கேட்கிறேன்.

படம் முடியும் போது கூட்டத்தில் பாதி பேரை காணவில்லை. பாதியில் மீதி பேர் ஆங்காங்கே சுருண்டு தூங்கிக் கிடக்க.. கிழக்கு வெளுக்க துவங்கியிருந்தது. என்னைப் போல சிலரே விழித்திருந்தோம். அப்படியே எழுந்து வீட்டுக்கு சென்று பள்ளிக்கு கிளம்பி போகிறேன்.

அது ஒரு கானா காலம் தான் போல….!

சத்யராஜும் பிரபுவும் இணைந்து நடித்த படம் “சிவசக்தி” இரவுக் காட்சி பார்த்து விட்டு வீட்டுக்கு சைக்கிளில் வரும்போது நானும் நண்பனும் சத்யராஜும் பிரபுவும் இணைந்து நடித்த இன்னொரு படமான “சின்னத்தம்பி பெரிய தம்பி” பற்றி பேசிக் கொண்டே வந்தோம். இன்று யோசிக்கிறேன். பிரபு மட்டுமே கிட்டத்தட்ட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் கூட இணைந்து நடித்திருக்கிறார்.

விஜயகாந்துடன் “காலையும் நீயே மாலையும் நீயே”, ராம்கியோடு “சின்னப்பூவே மெல்ல பேசு”, “பூவிழி ராஜா “, கார்த்திக்குடன் “அக்னி நட்சத்திரத்திலும் இரும்புத் திரையிலும்…, ரஜினியுடன் “குரு சிஷ்யன்”…, கமலுடன் “வெற்றி விழா, வசூல் ராஜா.., சத்யராஜ் உடன் “சின்னத்தம்பி பெரியதம்பி”, “பாலை வன ரோஜாக்கள்”, சிவக்குமாருடன் “ஆயுள் கைதி”, சிவாஜியோடு “சாதனை”, “மிருதங்க சக்கரவர்த்தி”, ரமேஷ் அரவிந்த் உடன் “டூயட்”, மோகன்லாலுடன் “சிறைச்சாலை”

விட்டுப் போயிருக்கலாம். தெரிந்தவரை எழுதி இருக்கிறேன். எப்போதும் புனைவுகளால் மிதக்கும் என் வரிகளில் எப்போதாவது நிஜங்கள் தெரியாதவைகளாக ஆகும் என்றால் அப்போது அது உங்கள் யோசனையை கிளரட்டும்.

“தாலாட்டு பாடவா” என்றொரு படத்தில்

“வராது வந்த நாயகன்….. ஒரே சிறந்த ஓர் வரன்…
தராதரம் புரிந்தவன்…. நிரந்தரம் நிறைந்தவன்…
வரம் தரும் உயர்ந்தவன்…கரம் கரம் இணைந்தவன்….
இவன் தலைவி நாயகன் “-பாடல் இந்த இரவை அள்ளிக் கொண்டது. கேளுங்கள்… கொடுக்கப் படும்.

________________________________________
கண்ணதாசனின் கடைசி பாடல் “கண்ணே கலைமானே”- “மூன்றாம் பிறை”க்கு.

“நெத்தியதடி” என்றொரு படம்.. பாண்டியராஜனின் படம். அதில் ஒரு காட்சியில் S.J சூர்யா நடித்திருக்கிறார்.

சினிமா இல்லாத ஊரில் என்ன செய்து கொண்டிருப்பேன்… சினிமா எடுத்துக் கொண்டு இருப்பேன்.

கமல் கௌதமி பிரிந்து விட்டார்கள் செய்தி., சட்டென ஏதோ செய்தது. முன்பொரு முறை பார்த்திபன் சீதாவுக்கு அப்படி தோன்றி இருக்கிறது. சேர ஒரு காலம். பிரிய ஒரு காலம். காலத்தின் கட்டாயத்தில் யாராய் இருந்தால் என்ன. மனதில் விரிசல்கள் வந்து விட்ட பின் பிரிந்து விடுவது தான் சரியான கிளைமாக்ஸ் .

காதலோ… நட்போ…. எந்த ஓர் உறவும் ஏதாவது ஒரு கட்டத்தில் உடைந்து விட்டால் அதை அப்படியே விட்டு விட்டு கடந்து விடுதல் நலம்.

பார்த்திபன் சீதா நடித்த “புதிய பாதை”யையும் கமல் கௌதமி நடித்த “அபூர்வ சகோதரர்கள்” படத்தையும் பார்க்க வேண்டும் போல தோன்றுகிறது. இந்த மனம் அப்படித்தான். அது அதுபாட்டுக்கு தேடிக் கொண்டே இருக்கும். லாரியில் கொல்லப் பட்ட பிணம் கிடப்பது அறியாமல் கமலும் கௌதமியும் ஆடிப் பாடிக் கொண்டு வரும் “வாழ வைக்கும் காதலுக்கும் ஜே.. வாலிபத்தின் காதலுக்கும் ஜே….” பாடலில் ஒரு மனம் லயித்துக் கிடக்குமே அது போல. ‘இப்படிக்கு இப்படிக்கு எதிர் வீட்டு ஜன்னல்” என்று வந்த கடிதத்தை படித்து காட்டி விட்டு ஓடி விடும் சீதாவை பார்த்து…..” இன்னாடி.. எதிர் ஊட்டுக்கு ஜன்னல் மட்டும்தான் இருக்கா?” என்று நக்கலோடு பார்த்திபன் கேட்பது இன்னும் கேட்கிறது. சினிமாவின் தூரம் அப்படி.

பிரிந்திருக்க வேண்டாதவர்கள் ரகுவரன்- ரோகிணி. சில படங்களுக்கு முடிவை பார்வையாளன் தீர்மானித்து விடுவான். அப்படித்தான்.

காதல். இந்த வார்த்தை இல்லாமல் நம்மால் ஒரு படம் கூட பார்க்க முடிவதில்லை. அத்தனை இயல்பாக சுலபமாக நம்மோடு மானுட சுடரை எரிய வைத்துக் கொண்டே இருப்பது இந்த காதல். அது வரும் போது கடவுளாய் வருகிறது. போகும் போது சாத்தானாய் போய் விடுகிறது.
எங்கிருந்து வருகிறது அதிருப்தி. ஏன் காதலிக்கும் போது இருக்கும் மனதை கல்யாணத்துக்கு (கல்யாணம் மற்றும் சேர்ந்து வாழ்தல்) பின் தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லை. மனம் அப்படித்தான். ஜானி படத்தில் முடி வெட்டும் ரஜினி ஒரு வசனம் பேசுவார். “இந்த உலகத்துல ஒன்ன விட ஒன்னு பெட்டரா தான் இருக்கும் நாமதான் ஏதாவது ஒரு இடத்துல நிறுத்திக்கணும்….”- அவர் நிறுத்திக் கொண்டார்.

எனக்கு தெரிந்து ஒரு ஜோடி இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன் பழக்கம். அப்போது அவருக்கு வயது 48 இருக்கும். அந்த மேடத்துக்கு 45 ப்ளஸ் இருக்கும். அவர்கள் சனி மாலை மற்றும் ஞாயிறு காலை என்று ஒவ்வொரு வாரமும் கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டூ வீலரில் பாலக்காடு… பொள்ளாச்சி… மேட்டுப்பாளையம் என்று சினிமா பார்க்க மட்டுமே செல்கிறார்கள். சினிமா அவர்களை இணைத்ததாம். இணைந்தே இருக்கிறார்கள்.

அந்த வகையில் இணைந்ததும் தெரியவில்லை. இன்று வரை இணைந்தே இருப்பதும் தெரியவில்லை. சமீப காலமாகத்தான் மீடியா வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்கள். இணைந்தே இருக்கட்டும். வாழ்த்துவோம்… ராம்கி , நிரோஷா.

மாயக் கண்ணாடிகளால் நிரம்பி இருப்பது தான் சினிமா. அது சினிமாவாக மாறுவது கூட ஒரு சினிமா தான். வாழ்வின் திருப்பங்கள் சினிமாவில் அத்தனை சீக்கிரம் கட்டமைக்கப் படுவதில்லை.
________________________________________

வெண்ணிலவே வெண்ணிலாவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா …

வெண்ணிலாவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா….

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா…..

வெண்ணிலவுக்கு வானத்த பிடிக்கலயா…

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே……
வந்ததே முதல் காதல்…

வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா…

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே….

என் வெண்ணிலவே எரிக்காதே……..

வெண்ணிலவே தரையில் உதித்தாய்…

வெண்ணிலவே வெண்ணிலவே வெண்மேகம் இன்று உன்னை தேடிடுதே…

இப்படி வெண்ணிலாக்கள் கொண்டு முளைத்த பாடல்கள் கிட்டத்தட்ட எல்லாமே மனதுக்குள் நின்ற பாடல்கள்தான்.

நிலா பற்றி உலகெங்குமே கவிஞர்கள்…..பாடலாசிரியர்கள்….. கலைஞர்கள்…. படைப்பாளிகள் என்று எல்லாருமே எழுதுகிறார்கள். பாடுகிறார்கள். படைக்கிறார்கள். நிலா ஒரு வசீகரம். அது சினிமா ஆர்மபித்த காலத்தில் இருந்தே ஒரு குறியீடாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அதில் ஒரு மயக்கம் இருப்பதை நாம் மறுக்க முடியாது. காதல் எனும் போதே தலைக்கு மேல் வட்டமென வந்து விடுகிறது நிலா. பெண்ணை நிலவுக்கு ஒப்பு கொடுத்து தலை மேல் வைத்து ஆடுவதில் ஆணின் மிக சிறந்த குழந்தை மனம் வெளிப்படுகிறது. வீடு வரை நிலா துரத்த ஓடி வந்த கிராமத்து இரவுகள் இன்னும் நெஞ்சில் நிலாக்கள் செய்கின்றன.

பாலைவன சினிமாக்களில் நிலா இல்லாமல் இல்லை. கடற்கரை சினிமாக்களில்… கப்பல் சினிமாக்களில்…..காட்டு வழி சினிமாக்களில்… நிலா இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு பாத்திரமாகவே வழிந்து நிரம்புகிறது.

“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது” என்று காதலியைப் பார்த்து ஜாடையாக கேட்கும் காதலன் நம் சினிமாவில் இருக்கிறார். நிலா அது வானத்து மேலே… என கடல் நடுவே ஆட செய்யும் நிலவில்…. எல்லாருடைய பாட்டியும் அரிசி குத்திக் கொண்டு தான் இருக்கிறாள். “பொட்டு வைத்த வட்ட நிலா குளிர் புன்னகையில் எனைத் தொட்ட நிலா” என்று காதலின் கற்பனை நவம்பர் மாத குளிராய் நம்மை போர்த்துகிறது. நிலவுக்குள் ஒளிந்து கொண்ட சூரியனை இரவு முழுக்க காதலிக்க விட்டு விடுகிறோம். நிறைய நிலாக்களை உங்களுக்கு நினைவூட்டும் சினிமாக்கள் உங்கள் மனதில் இப்போது ஓடலாம். மனத்திரையில் ஓடும் சினிமாவில் நம் சதுரங்கள் பொக்கிஷங்கள்.

பாரதியை இலக்கியம் தாண்டி வெகு ஜனங்களிடம் கொண்டு சேர்த்தவர்களில் கமல் அவர்களையும் பாலச்சந்தர் அவர்களையும் இங்கே நினைத்து பார்க்கிறேன்.

“தேடித் சோறு நிதம் தின்று பல சின்னச்சிறு கதைகள் பேசி” என்ற பாரதி கவிதையை “மகாநதி” படத்தில் பார்த்த பின்னரே தேடி படித்ததாக என் நண்பன் ஒருவன் கூறினான். சினிமாவின் வலிமை புரிந்தது. “சாம்பல் நிறத்தில் ஒரு குட்டி…. கறுஞ்சாந்து நிறத்தில் ஒரு குட்டி……. நிறங்கள் பலவென்றாலும் அவை யாரும் ஒரு பூனையின் வயிற்று குட்டிகள் அல்லவா”- பாரதி கவிதையை வைத்து நகர்த்தும் படியான பல காட்சிகள் “வறுமையின் நிறம் சிவப்பு” என்ற படத்தில் பாலச்சந்தர் வைத்திருப்பார். சினிமாவையும் தாண்டி சமூக கண்களை திறக்க யோசிக்க தூண்டியது.

“சுஜாதா”வை காதலுக்கு தூது விட்டிருப்பார் நாகராஜ் என்றொரு இயக்குனர். படம் “தினந்தோறும்”. முரளி நாயகனாக நடித்த இந்த படம்… காதலையும் கம்யூனிஸத்தையும் கலந்து அள்ளித் தந்த சினிமா. அற்புதமான வசனங்களால்….. கொண்டாடப் பட்டிருக்க வேண்டிய படம். ஏனோ எங்கோ சறுக்கி விட்டது.

“என்ன வெட்ட போறயா… இவங்கெல்லாம் வெட்ட வெட்ட முளைச்சிக்கிட்டே தான் இருப்பாங்க” என்று ஜெண்டில் மேன் படத்தில் வரும் “பாலகுமாரன்” வசனம் ஏனோ நினைவுக்கு வருகிறது. பசுமரத்தாணி போல பதிந்து போன வசனங்கள் சினிமாவில் ஏராளம். சினிமா வெறும் பொழுது போக்கு மட்டும் அல்ல. அது சமூகத்தின் பிரதிபலிப்பு.

“சில நேரங்களில் சில மனிதர்கள்” சினிமா பார்த்த பின் அந்த நாவலைப் படித்தவர்கள் அதிகம்.


சில்க் ஸ்மிதாவின் கடைசி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பார். அதில் அந்த பாடலின் முடிவில் அவர் நெருப்புக்குள் அமிழ்ந்து விடுவதாக முடித்திருப்பார்கள். அது நிஜமாக ஆகும் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் அவருக்கு தெரிந்திருக்கும்.

படைப்பாளிகள் முன்கூட்டியே பிறந்தும் விடுகிறார்கள். இறந்தும் விடுகிறார்கள்.

படத்தில் முதல் சண்டை. சண்டை ஆரம்பித்து முடியும் வரை கையை உபயோகிக்காமல் கால்களைக் கொண்டே நடக்கிறது. அடிக்க வரும் அடியாட்கள் அத்தனை பேரையும் கால்களாலே துவம்சம் செய்கிறார். சுவர்… மரம்.. வாகனம் என்று எதிரே எது இருந்தாலும் ஓடி சென்று அதில் ஏறி ஒரு சுழற்று சுழன்று இடி மாதிரி அடியை இறக்குகிறார். இப்படி ஒரு சண்டைக் காட்சி. படம் “சிறையில் பூத்த சின்ன மலர்”. விஜயகாந்த் அவர்கள்தான் கதை நாயகன். நான் பிரமிப்புடன் பார்த்து பரவசப்பட்டு இன்று வரை ரசிக்கும் சண்டைக் காட்சிகள் அவருடையது.

எத்தனை வேகம். பலம் கொண்ட சண்டைகள் அவருடையது. எனக்கு தெரிந்து ஒரு முழு சண்டை கால்கள் கொண்டு செய்திருப்பது அவர் தான் என்றே நம்புகிறேன். வசனம் என்றாலும் அட்டகாசமாக பேசி கடந்து விடும் மிகச் சிறந்த நடிகன் என்பதில் இம்மியளவும் சந்தேகமில்லை. எத்தனை புதுமுகங்களுக்கு வாழ்வு கொடுத்த மனிதர். பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து வெளி வருபவர்களுக்கு ஒரு காலத்தில் இளைப்பாறல் இந்த கேப்டன் தான் என்பது காலத்தால் அச்சடிக்கப் பட்ட வரலாறு.

“செந்தூர பூவே படத்தில் இறுதிக் காட்சியை இன்றும் மெய் சிலிர்த்து பார்க்கிறோமே.

“கேப்ட்ட்ட்ட்ட்ட்ன்…….” என்று ராம்கி கத்தும் போது காட்டுக்குள் இருந்து ஓடி வரும் கேப்டனை அத்தனை சீக்கிரத்தில் மறக்க முடியுமா…?. அதே படத்தில் இடைவேளைக் காட்சியில் ராம்கியை தண்ணீர் அடித்துக் கொண்டு போக அவரைக் காப்பற்ற பின்னாலேயே நீந்தி போகும் விஜயகாந்த் போடும் சண்டை கண்டிப்பாக நீர்குமிழிகள் அல்ல. நீருக்குள் இருந்து எழும்பி இரு கால்கள் கொண்டு எதிரியின் நெஞ்சில் உதைத்து விட்டு பின்னால் அப்படியே நெடுஞ்சாண்டையாக நீருக்குள் சாயும் விஜயகாந்தை தான் இன்று மீம்ஸ்களில் ஓட்டிக் கொண்டிருக்கிறது இன்றைய தலைமுறை. சத்யராஜ்க்கு மிக நெருக்கமான நண்பர். ரஜினி “விஜி” என்று அன்போடு அழைக்கப்படுபவர்.

தளபதி விஜய்யை கூட்டிக் கொண்டு சென்று பட்டி தொட்டியெல்லாம் சேர்த்த பெருமை அவரையே சாரும். “செந்தூர பாண்டி தம்பிடா…”

ரயிலின் மேல் ( ரயில் சினிமாவுக்காக மெதுவாக சென்றாலும்) ஓடிக் கொண்டும் படுத்து புரண்டு கொண்டும் சண்டையிடுவது அத்தனை சுலபமான விஷயம் அல்ல. அந்த கோப கண்களை தவிர்த்து விட்டு தமிழ் சினிமாவை நாம் காண முடியாது.

தூரத்து இடிமுழக்கம்,சட்டம் ஒரு இருட்டறை, ஊமை விழிகள், சிவப்பு மல்லி, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செந்தூர பூவே, சத்ரியன், மாநகர காவல், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, செந்தூர பாண்டி, தாய்மொழி, ரமணா இன்னும் எத்தனையோ படங்கள். பேர் சொல்ல. சொல்லட்டும்.

ரயில் என்றதுமே எனக்கு அடுத்து நினைவுக்கு வருவது ஆபாவாணன். அவருடைய படங்களில் ரயிலுக்கு ஒரு கதாபாத்திரமே கொடுத்திருப்பார். அந்த ரயில் நம்மோடு சண்டையிடும். குதூகலிக்கும். சோக கீதம் பாடும். சில நேரத்தில் நம்மை விட்டு விட்டு கூட செல்லும். தாலாட்டி கூட்டியும் செல்லும்.

“அந்தி நேர தென்றல் காற்றே அள்ளித் தந்த தாலாட்டே”

இரண்டு ஹீரோக்கள் சண்டையிடும் படங்கள் மீது எப்போதுமே ஒருவித ஈர்ப்பு இருக்கும். அது ‘ஷோலே” வாக இருந்தாலும் சரி. “சிவா” வாக இருந்தாலும் சரி. வில்லன்களை அடித்து நொறுக்கும் இறுதிக் காட்சிகளில் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து கொள்வது படம் பார்க்கும் சுவாரஷ்யத்தை இன்னும் கூடுதலாக்கும் என்பது திண்ணம்.

இரண்டு ஹீரோ படங்கள் இன்னும் இன்னும் வர வேண்டும். அது திரை அரங்கிற்குள் வில்லன்களை ஓட ஓட விரட்டும் மாயாஜாலத்தை செய்து விடும் சிறுபிள்ளை ஞாபகம்.

“மாப்பிள்ளை” படத்தில் ரஜினி கல்யாண மேடையில் இருக்க சிரஞ்சீவி வந்து பொளந்து தள்ளுவது இன்றும் கை தட்டி விசில் அடிக்கும் காட்சி தானே.


இரண்டு பாடல்கள் என்னை ஒரு வார காலமாக தொடர்கின்றன. மனம் முணுமுணுக்கிறது. உதடு மௌனிக்கிறது. உள்ளுக்குள் உருளுகிறது. உலகம் நிற்கிறது. கணத்தில் பெண்ணாக மாறி விடும் அற்புத சங்கீதத்தை ஆணாகவே உணர்கிறேன். பெண்களின் ஆசை தான் எத்தனை அழகானது. அற்புதமானது. அந்தரங்கமானது. ஆக சிறந்த ஞாபகங்களை அவர்களால் காலத்துக்கும் உருவாக்கிக் கொண்டே இருக்க முடிகிறது.

ஆசை நாயகனே சௌக்கியமா…… உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்…..
உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன்….. தினமும் கனவில் உன் ஆசை முகம்……..தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்….
எந்தன் வளையல் குலுங்கியதே…….  கொலுசும் நழுவியதே……. வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே மனம் கா……………லடி(இந்த இடத்தில் சின்னகுயிலின் குரல் ஒரு வித தவிப்போடு நீண்டு ஓர் உயரம் சென்று இறங்குகையில்… கண்கள் விரிய காது குளிர்ந்தேன்.) ஓ……………………………….சையை எதிர்பார்த்து துடிக்கின்றதே…………. அன்பே .. துடிக்கின்றது என்று மூச்சு வாங்க பாடி முடித்து ஒரு சிறு இளைப்பாறலின் நிரவலில்.. ………………”அன்பே” என்று மீண்டு சொல்லும் போது மனதுக்குள் ஊடுருவும் பெண் பற்றிய கைகள் தானாக பூவாகிறது. காட்சியில் சட்டென வந்து தேவயானியின் கம்மலை காதலோடு தட்டும் விஜய் மறுகணமே காணாமல் போவதில் அதிசயிக்கிறது மீண்டும் மீண்டும் அதே காதல்.

உன் மார்பில் விழி
மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம்
தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்

கல்யாண ஆசை பொதுவானது. பெண்ணுக்கு அது நாணமாகிறது. கவிதையாகிறது. தேவயானியின் அசட்டுத்தனமான முக பாவனைகள் ரசிக்க வைக்கிறது. அழகி என்று ரகசியிக்க வைக்கிறது.

சின்னக் குயில்கள் உன்னை உன்னை நலம் கேட்குதா
நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா
மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா
மூச்சே விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா
நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்
கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனது
ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா
அன்பே !

ஏன் இந்த நிலைமை தெரியவில்லை என்று ஓர் ஏகாந்த நிலையை நதி கொண்ட வளைவாய் மதி முழுக்க நனைந்தபடி காதலை கேள்வியாக்கி புரிய முயலும் நொடியில்… அதன் நீட்சி இப்படி முடிகிறது. இந்த பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா என்று கேட்பதில்…அற்புதமான பரவச நிலையை இசையும் இடையே விழும் வெளியும் நமக்குள் கடத்துவதில்… உதடு தானாக முந்திக் கொண்டு ……”அன்பே” என்று ஆழ் மனதுக்குள் இருந்து எழும் அதிர்வை இங்கே இன்னும் சொல்ல வார்த்தை இல்லை. வாக்கியமாகி மிதக்கிறேன்.

கடிதம் மிதக்கும் தோப்பில்… அவளே வரிகளாகி ஓடி ஆடும் மிதந்து தவழும் நிலையை வெறுமனே ரசிக்க முடியாத இந்த மனம் பாடாய் படுகிறது. பரவசத்தில் சுடுகிறது.
ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு…… அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே……. எனும் போது கேமராவை பார்த்து சிரித்துக் கொண்டே நாணம் கொள்ளும் தேவயானியை காலம் கடந்து சென்று ரசிக்கிறேன். காதல் கொண்ட பெண் மனதின் வெளிப்பாடு…. பூஜிக்கும் மனதுக்குள் நிகழும் ரசாயன மாற்றம்… தேக நடுக்கம்…. மிதப்பு சிந்தனை என்று ஒரு வட்டத்தில் உடைந்து சிதறும் பெரு வெடிப்பின் அடுத்த நகர்வு என்றே நம்புகிறேன்.

மீண்டும் இடைவெளி தாண்டி அன்பே என்கையில்.. தானாக சிரித்துக் கொள்கிறேன். அதே போல அடுத்த பாடல் ஒன்று. இங்கே ரம்பா.!

அதே காதல். அத கல்யாணம். ஆசை மட்டும் மாறுபடுகிறது. அத்தனைக்கும் ஆசைப் படுதலே வாழ்வின் சூட்சுமம். அது அழகு நிறைந்த ஆனந்த சிறகும் கூட.
“காஷ்மீர் ரோஜா தோட்டம் அது தேடுது காதலைத்தான்… அழகனைத் தேடி அணைத்திட வேண்டி தூண்டுது ஆவலைத்தான். கல்யாண சேலை கட்டி கழுத்தினில் வேர்வை வழிந்திட வருவாளோ” என்று குரூப் பாட வெட்கம் சுமந்து வியர்வை பூக்க வைக்கும் ரம்பா வின் மனம் காட்சியில்… மாயாஜாலம் நிகழ்த்துகிறது. அடர்த்தியான நீளம் கொண்ட ஆசைகளின் அசைவை பாடல் வரிகளும் காட்சிபடுத்திய நெறிகளும் நம்மை ஒருவித உற்சாக துள்ளலுக்கு கொண்டு செல்வதை கண்டிப்பாக மறுக்க இயலாது. மெய்ம் மறக்க இயலும் சதுர பொக்கிஷத்தில், காற்றினில்… படக்கென்று எட்டிக் குதித்து ஒரு கட்டத்தில் நாயகன் விஜய் வருகையில்… ஹே…… என்று சொல்லாத சொல் ஒன்று பாடல் நீட்டுகிறது.

“காலை மாலை தேவியின் கோவிலில் பூஜைகள் செய்வானோ….” என்று கேட்டு நாணம் பூசி நகர்கையில்… எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொள்கிறது பூத்து விட்ட மஞ்சள் நிறம் ஒன்று.

“வெள்ளிக் கொலுசின் சங்கீதம் என் காதில் கேட்கிறதே… என் கைகளின் மருதாணியில் உன் வாசல் வீசுதே…”ஒரு திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் எத்தனை பெரிய திருப்பத்தை கொண்டிருக்கிறது. அது ஆசைகளாலும்… கனவுகளாலும்.. அற்புதங்களாலும் கட்டப்பட்ட ஆகாயம். அதற்கு இரவு பகல் இல்லை. உணர்வும் உணர்ச்சியும் மட்டும் தான். அங்கே காதலும் காமமும் கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த பாடல் ஆரம்பிக்கும் போதே ரகுவரனைக் காட்டுவார்கள். இந்த ஆள் சிரித்தாலும் அழகு. சிந்தனை செய்யும் நேரத்திலும் அப்படியே.

இந்த பாடல் ரம்பாவுக்கு விஜய்க்கும் என்றாலுமே அதனூடாக ரகுவரனுக்கும் பானுப்பிரியாவுக்கும் இடையே ஒரு மெல்லிய கதை நகர்ந்து கொண்டிருக்கும். ஏதோ ஊடல். சந்தித்துக் கொள்ளும் நேர் எதிர் திசையில் இருவரும் கணம் ஒன்றில் பார்த்துக் கொள்வதும் ஏதோ நினைவுக்குள் தங்களை மீட்டெடுத்துக் கொள்வதும்….அத்தனை அழுத்தமாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது. அத்தனை கூட்டத்திலும் ஒரு தனிமையை சுமக்க இந்த மனிதனின் நடிப்புக்கு தெரிந்திருக்கிறது. குளோஸ் வைக்காத காட்சியில் கூட பிரேமில் தனித்து தெரிந்து ஆகச்சிறந்த கலைஞன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்.

மலர்ந்த முகம். சடுதியில் தனித்து விடப்படும் அகம் என பானுப்பிரியாவும் சளைக்கவில்லை. எனக்கு தெரிந்து விஜய்யின் நடிப்பில் ரகுவரனின் பாதிப்பு எப்போதுமே இருந்திருக்கிறது. அவரை தன் படங்களில் தொடர்ந்து பயன் படுத்திக்க கொண்டார் என்பது கூடுதல் அழகு.

ஓர் இடத்தில், ரகு அமர்ந்திருப்பார். பானு ரம்பாவை அழைத்து கொண்டு வந்து அனுப்பி விட்டு இயல்பாக அங்கும் இங்கும் பார்த்து விட்டு இடப்பக்கம் அமர்ந்திருக்கும் ரகுவை பார்ப்பார். பானு வந்தது முதலே அவரை ஒப்புக்கொடுத்தலின் பாவத்தோடு பார்த்துக் கொண்டிருப்பார் ரகு. இருவரும் ஒரு கணத்தில் நேருக்கு நேர் பார்த்து விட்டு பின் அவர் குனிந்து கொள்வதும் பானு நகர்ந்து விடுவதும்…. புதுக்கவிதைக்குள் மரபின் முடிச்சு இன்னும் தீர்க்கமாகவே போடப்படுகிறது. ஏதோ தடுக்கும் ஊடலின் தேடலோடு இருவரும் கடந்து போவதில்… ஆழம் இந்த காதல் என்று நம்பிய தருணத்தில் மீண்டும் மீண்டும் இதே காட்சியை காண்கிறேன்.

காலத்தின் மீது கல் எறிகிறேன். திருப்பித் தா எங்கள் கலைஞனை…..!


இளையராஜாவின் பாடல்களுக்காகவே திரைக்கதை அமைக்கப்பட்டு R. சுந்தராஜன் அவர்களால் எடுக்கப்பட்ட படம் “வைதேகி காத்திருந்தாள்”.

அது கோவை- நரசிபுரத்தில் இருக்கும் வைதேகி நீர்வீழ்ச்சியில் எடுக்கப்பட்ட படம். இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த படம் எடுத்த பிறகு தான் அந்த நீர்வீழ்ச்சிக்கு “வைதேகி பால்ஸ்” என்று பெயர் வந்தது. அதன் இயற்பெயர் “தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி” என்பதுதான். நரசிபுரத்தின் ஆதிப்பெயர் வெள்ளிமலைப்பட்டணம்.

இங்கே இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. “விவசாயி” படத்தில் MGR அவர்கள் ட்ராக்டர் ஓட்டிக் கொண்டு பாடும் விவசாயி பாடல்…. கோவை அக்ரி யுனிவர்சிட்டியில் எடுக்கப்பட்டது.

“இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு செல்லுதம்மா” -பாடலை இதோ மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். அப்படி ஒரு துள்ளல், இசையில்…வரியில்…காட்சி அமைப்பில். கருப்பு வெள்ளை காட்சியில்… கண்களுக்குள் நிறம் ஊரும் செம்மையென சித்திரம் தோன்றியது. அதைத் தொடர்ந்து “நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்… நீ வர வேண்டும்…..” அதைத் தொடர்ந்து….”பளிங்கினால் ஒரு மாளிகை…. பருவத்தால் மணி மண்டபம்…..” அதைத் தொடர்ந்து…..”மாலை பொழுதின் மயக்கத்திலே…..”- நான் ஸ்தம்பித்து…. தவம் கலைந்த நிகழ்வென மீண்டும் மீண்டும் பார்க்கிறேன். எத்தனை ஈர்ப்பான இசை…. திசை மறக்க செய்யும் வழிப்போக்கனின் இளைப்பாறலைப் போல தியானிக்கிறேன்.


ஊரே கொண்டாடிய படம். காட்சிக்கு காட்சி… கவுண்டமணியும் செந்திலும் அடிக்கும் லூட்டியில்…. இன்று வரை தானாக சிரிக்கும் ஞாபகத்தை வாய்க்க செய்த படம் கரகாட்டக்காரன்.

பெரிதாக ஏதும் திட்டமிடல் இல்லாமல் எடுத்த படமென்று ஒரு முறை கங்கை அமரன் அவர்கள் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ஆனாலும் இன்று வரை மிக பெரிய நினைவு குறிப்பில் அது தன்னை அழகாக பொருத்திக் கொண்டு காணும் கிராமத்து திருவிழாவாகவே உணரப்படுகிறது. வாழைப் பழ காமெடியை யாராலும் மறக்க முடியாது. ஆனால் அதன் தொடர்ச்சியாக ஒரு செய்தியையும் இங்கே பகிர வேண்டி இருக்கிறது. இந்தக் காமெடி NSK அவர்களின் ஒரு படத்தில் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் வந்து போனதாக எங்கோ பார்த்திருக்கிறேன் அல்லது படித்திருக்கிறேன்.

25 வருடங்கள் ஓடி விட்டன. இன்று வரை கரகாட்டக்காரன் நம் மனங்களில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றது.

சத்யராஜ் அமலா நிழல்கள் ரவி நடித்த ஜீவா.

திரை கட்டி ஊருக்குள் போட்ட படம். அதற்கும் காசு வசூலித்து தான் உள்ளே அனுப்புவார்கள். கிட்டத்தட்ட சினிமா தியேட்டர் மாதிரி தான்.

மூன்று பேரை பழி வாங்கும் படம் அது. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக கொல்வார் சத்யராஜ். இப்போது பார்த்தாலும்.. மனதுக்கு பிடித்தமான படமாக இருக்கிறது.

பிரதாப் போத்தன் இயக்கி கங்கை அமரன் இசை அமைத்த படம். துப்பாக்கி சண்டையோடு ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே நம்மை ஓர் அற்புதமான என்டய்ன்மெண்ட்க்கு தயார் படுத்தி விடுகிறார் இயக்குனர்.

“சங்கீதம் கேளு.. நீ கை தாளம் போடு…. அப்போதுதான் நீ என்னோட ஆளு…” பாடிக் கொண்டே சத்யராஜ் அறிமுகம் ஆகும் காட்சியில்… கண்களுக்குள் மலரும் பால்ய மொட்டுக்களை நான் பூக்க விடாமல் பாதுகாக்கிறேன். பிரதாப் போத்தன் சினிமாக்களில் ஒரு வித தேடல்… சேசிங் ….. புதையல் தொடர்பான… புதிர்… மர்மங்கள் நிறைந்த முடிச்சுக்கள் என்று தொடர்ந்து இருந்ததை நான் உணர்கிறேன். ஏனோ அவருக்கான இடத்தை அவர் தொடவில்லை என்றே நம்புகிறேன்.

அதே 25 வருடங்கள் ஓடி விட்டன.

“தகுடு தகுடு தகர தகுடு……..தங்கமாச்சுடா….நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சு போச்சுடா……”

ஆட தோன்றுகிறது.


மாலை 5 மணி ஆகும் போதே ஊரெல்லாம் கட்டிய மைக் சீர்காழியின் குரலில் அதிர தொடங்கும். மனதுக்குள் கடலை மிட்டாய்களும்… தேன் மிட்டாய்களும் குதியாட்டம் போட துவங்கும்.

அம்மாவுக்கு தண்ணீர் பிடிக்க, .காலை இட்லிக்கு மாவாட்ட, இரவு சாப்பாடு வேகும் அடுப்பெரிக்க, வீடு பெருக்க என்று அதகளம் செய்வேன். நான் மட்டுமல்ல என் பக்கத்து வீட்டு சுமதி, சங்கீதா, குமார், செல்வராணி, சிவக்குமார் என்று அவர்களும் அப்படித்தான். அந்த மாலை நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சு மிட்டாயைப் போல பிய்த்து வாய்க்குள் போட்டபடியே இருப்போம்.

அவ்வப்போது வாசல் வந்து நண்பர்கள் கூடி பேசிக் கொண்டு….” இன்னும் கொஞ்சம் நேரம்தான.. சீக்கிரம்… போய்டலாம்….” என்று பேச பேசவே…. இருப்பதிலேயே சின்ன வாண்டுகள் பிரேம்குமாரையும் பிரியாவையும் இடம் பிடிக்க அனுப்பி இருப்போம். எங்க அம்மாக்களும் தோழிகளே. வாசல் தாண்டி எட்டி பார்த்து முணு முணுத்தபடியும் தூரத்தில் இருந்தபடியே…” என்ன பூபதிக்கா இன்னும் சமையல் முடியலையா” என்று கேட்டுக் கொண்டும்… தண்ணீர் பிடித்தபடியே…”விஜி மாவாட்டிட்டு இருக்கான்…. எனக்கு வேலை முடிஞ்சுது…. முருங்கைக்காய் குழம்புக்கா… தாளிச்சு விட்டா முடிஞ்சுது… கிளம்ப வேண்டியதுதான்…..”என்று சொல்லும் என் அம்மாவுக்கு முன் ஓடி வந்து…” மம்மி…. மாவாட்டிட்டேன்…..வந்து பாருங்க போதுமான்னு” கேட்கும் போது.. முதல் அறிவிப்பு வந்திருக்கும்.

“பெரியோர்களே தாய்மார்களே…நண்பர்களே… நீங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த புரட்சி தலைவர் நடிக்கும் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்க இருக்கிறது. ஆங்காங்கே நின்று கொண்டிருப்பவர்கள்……. இன்னும் வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் சீக்கிரம் கோவில் திடலுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது”

தேன் வந்து பாயும் சொற்களை சுமந்த அந்த குரலுக்குள் ஒரு சினிமாவின் தூரங்கள் அடை பட்டிருக்கும். அது ஆசுவாச வார இறுதி நாளின் அற்புத கொண்டாட்டம்.

அந்த மாலை இரவின் வாசத்தில் மிதந்து கொண்டே எங்கேயோ நின்று விட்ட பால்யத்தின் தலையெங்கும்… “ஆயிரத்தில் ஒருவன்” விரிந்து வழிவதை இன்னும் என்னால் உணர முடிகிறது.

“அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்” என்று பாடும் போது அன்றைய இளந்தாரிகள்…. பின்னால் நின்று கொண்டு கூச்சலும் கும்மாளமுமாக அள்ளி வீசிய இசை நுட்பங்கள் இன்னும் என்னுள் நிரவிக் கிடக்கிறது.

படம் முடியும் வரை அநேகமாக கொட்ட கொட்ட முழித்துக் கிடந்த சில சிறுபிள்ளைகளில் நான் முதன்மையானவன். படம் ஓட ஓடவே திரைக்கு பின்னால் சென்று இந்த திரைக்குள் எப்படி “எம்ஜிஆர் வந்தார்…? கடல் எப்படி வருகிறது…!” என்று யோசித்த தருணங்களை இன்னமும்… பிலிம் சுருளாக என்னுள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அடுத்த ஒரு வாரத்துக்கு அந்த படத்தைப் பற்றியேதான் பேசி திரிவோம். சண்டைக் காட்சிகளை ஒருவருக்கொருவர் விவரித்துக் கொள்வதில் சண்டையே வந்திருக்கிறது. ஆளுக்கொரு குச்சி கொண்டு கத்தி சண்டை போட்டு காயம் கொண்ட தழும்பை ஈஸ்ட்மேன் வண்ணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

அது ஒரு கனா காலம். ஆயிரத்தில் ஒரு நாள் அது. அகம் நிறைந்து வாழ்ந்த அற்புத சினிமாவின் சனிக்கிழமை சாகா வரம் பெற்றிருக்கிறது. பெறுக இவ்வையகம் என் சினிமா சூட்டின் துளிர்த்த பெரும் பனிக்கு என் நினைவுகள் திரை புகும் சிறு பறவையென….”அதோ அந்த பறவை போல தான்…..”

ஒரு நீண்ட மௌனத்துக்கு பின் இந்த வரியை எழுதுகிறேன். சினிமா… தோண்ட தோண்ட புதையல் கொண்ட பாத்திரம்.


-கவிஜி

எழுதியவர்

கவிஜி
கவிஜி
கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x