1.
ப்ரியத்துக்குப் பரிசாக
வெறுப்பை யளிக்கிறீர்கள்..
நட்புக்குப் பரிசாகத்
துரோகத்தை யளிக்கிறீர்கள்
உதவிக்குப் பரிசாக
உபத்திரவத்தை யளிக்கிறீர்கள்
இனிமைக்குப் பரிசாகக் கசப்பை..
இன்னும்…இன்னும்
நல்லவைக்குப் பரிசாக அல்லவைகளை யள்ளித் தருகிறீர்கள்.
ஏதுமற்று மௌனித்திருந்தாலும்
தேன் தடவிய சொற்களோடு
தூண்டிலை வீசுகிறீர்கள்.
இனி நான் செய்ய வேண்டியதெல்லாம்
அன்பான மனசை அப்புறப்படுத்துவதின்றி
வேறொன்றுமில்லை..
2.
கடைவழிக்கும் வாராத
காதறுந்த ஊசியைக்
கையளித்த போதும்
இதயப் பாத்திரத்தை
வெற்றுச் சொற்களால்
நிரப்பிய போதும்
தலைக்குள் ஏறி
பித்தாக்கிய ஒன்று..
தரைதொட்டு மீளும்
அலையொன்றைப் பார்த்தபடி
தங்கையின் திருமணத்தை
முன்னிறுத்தி முறித்துக்கொள்வதாய்
நீ
மொழிந்த கணம்..
மெல்ல இறங்கி
கடலுக்குள் அலையாடப்
போய்விட்டது.
அப்புறம்…?
நான் தலையசைத்துப்
புன்சிரிப்போடு
கேட்ட நேரம்
உனைப் பின்தொடருகிறது.
திரு திருவென
விழித்தபடி
நீ திரும்பித் திரும்பிப் பார்க்கிறாய்.
விண்ணதிர
உற்சாகம் பீறிட
நான் வாய்விட்டு சிரிக்கிறேன்.
கூடவே
ஊர்வசி.. ரம்பை.. மேனகைகளும்.
3.
கொத்தாய் வீசியெறிந்த
சொற்குவைகளில்
மலரெனச் சிலவும்
முள்ளென பலவும்…
யாமத்தின் மௌனத்தில்
அகக்குறிப்புகளில் அளவளாவி
நெருடும் போதெல்லாம்
கொன்று புதைக்கிறேன்.
இருப்பினும்
கோடையின் வெம்மையில்
முதுகுறுத்தும் வியர்குருவென
வதைக்கையில்
தீச்சொல் வீசியுனைத்
தீண்டித் தீக்காய்கிறேன்.
கொடுத்தலும் பெறுதலுமாய்க்
கனஜோராய்க்
களித்துக் கொள்கிறது
நம் காதல்.
4.
தொடு வான ரேகைகளை
தோள் சுமந்து
துயரழிக்கும்
அணிலாடும் முன்றில்களை
அரவணைக்க மறுக்கும்
ஆணவத் தலைகள்.
பிடரிக்கண் கொண்டு
பிழைநீக்கிப்
பழுது பார்க்கும்
படைப்புலகப் பிரம்மாக்கள்
சுடருக்குள்
சுயமிழக்கும் இருண்மையை
இகழ்ந்து பேசி
இறும்பூதெய்தும்
இதயங்கள்.
மண்பொழியும்
மாமழையில்
விண்ணில் விளையும்
விசித்திர விதைகள்..
இம்முறை
பூமி தலைகீழாய்ச்
சுழன்று கொண்டிருக்கிறது..
5.
பதவி உயர்வு என
பெருமிதமாய் சொன்ன அன்றே
அதை மறுதலிக்க வைத்தார்
அப்பா.
அன்று தான்
முதன் முதலாக
அம்மா வார்த்த தோசை
கருகிப் போனது.
அதை தனக்கென எடுத்து
வைத்துக் கொண்டாள் அம்மா.
அதன் பின்
அடிக்கடி
கருகிய தோசைகள்..
மெல்ல மெல்ல
அக்காவுக்கும் எனக்குமாய்
அவை ஒதுக்கப்பட்டன.
ஒரு மழைநாளில்
புயலென உள்ளே வந்த
அண்ணி
அவற்றை அண்ணனுக்கென
இடம் மாற்றியபோது
தகிக்கும் தழலிலிருந்த
தோசைக்கல்லும் அம்மாவும்
அகங்குளிர்ந்து போனார்கள்.
இப்போதெல்லாம் தோசைகள்
கருகுவதேயில்லை.
மதுரா
எழுதியவர்
-
புனைப்பெயர் மதுரா. இயற்பெயர் தேன்மொழி ராஜகோபால்.
சொல் எனும் வெண்புறா, பெண் பறவைகளின் மரம் என்ற இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. பிராயசித்தம் என்ற சிறுகதை தொகுப்பும் வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறார். இவரது படைப்புகள் வெகுஜன பத்திரிகைகள், மின்னிதழ்கள், இணைய இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன.
இதுவரை.
- நேர்காணல்26 November 2022மாயா ஏஞ்சலோவின் நேர்காணல்.
- கதைகள் சிறப்பிதழ் - 20221 August 2022பூக்குழி
- கவிதை-மொழிபெயர்ப்பு31 January 2022மாயா ஏஞ்சலோ- கவிதைகள்
- மரபுக்கவிதை19 October 2021போற்று பெண்ணை