“இப்பல்லாம் நல்ல காமெடிப் படமே வர்றதில்லப்பா. முன்னல்லாம் எப்படி இருக்கும்? காமெடிக்காக மட்டுமே ஓடுன படங்கள் எத்தனை இருக்குது. அந்த படங்கள்ல எல்லாம் காமெடிய மட்டும் தூக்கிட்டா வேற எதுவும் மிஞ்சாது.” யதார்த்தமான பேச்சினூடாக நண்பர் ஒருவர் இப்படியாக பகிர்ந்து கொண்டார்.
அவர் சொல்லிய பிறகே நானும் அது குறித்து சிந்தனைகளை ஓட விட்டேன்.
அவரே தொடர்ந்தார், “இப்பவும் காமடிப்படங்க வருதுதான். ஆனா எதுவும் சொல்லிக்கிறது மாதிரியே இல்ல. அப்படியே தப்பித் தவறி வந்தாலும் பெரும்பாலும் ஒரே மாதிரி காமெடியா இருக்கு. மனசுல ஒண்ணுகூட ஒட்டுதில்ல. இன்னைக்கும் எனக்கு பத்து பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி வந்த, அதுக்கும் முன்னாடி வந்த இன்னும் பழைய காமெடி சீன்ஸ பாத்தா மட்டும்தான் மனசு விட்டு சிரிக்கிற மாதிரி இருக்கு. யூடியூப் எல்லாம் வந்த பெறகும் கூட நான் தேடித் தேடி பழைய காமெடிகளத் தான் பாக்குறேன்” என்றும் சொன்னார்.
ஆம். இப்படிக் கருதுவது நண்பர் மட்டுமெல்ல நம்மில் பலரும் தான் என்று தோன்றுகிறது. ஒரு உதாரணத்திற்கு விவேக் மற்றும் வடிவேலு இருவரும் தங்களது நகைச்சுவை நடிப்பு வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவர்கள் நடித்து நாம் பார்த்துப் பிடித்த அதே காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சலிப்புத் தட்டுவதில்லை. ஆனால் சமீபத்தில் பார்த்து நம்மை மறந்து ரசித்துச் சிரித்துப் பார்த்த நகைச்சுவைப் படம் எது என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் பேந்த பேந்த முழிக்கும் நிலையில் தான் நம்மில் பலரும் இருக்கலாம். படம் என்பதைக் கூட விட்டுவிடுவோம். நகைச்சுவைக் காட்சி எது என்ற கேள்விக்குக் கூட நம்மால் வெகு சொற்பமான சமீபத்திய உதாரணங்களையே சொல்ல முடியும். நகைச்சுவையில் மட்டும் சட்டென ஏன் இந்த மாற்றம்?
கொஞ்சம் நிதானித்து யோசித்துப் பார்க்கையில் இது குறித்த ஒரு கோணம் பிடிபட்டது. ஒரு காலத்தில் நகைச்சுவைக் காட்சி என்பதை நாம் பார்க்க வாய்த்ததே திரையரங்கில் நாம் கண்டு களிக்கிற ஒரு திரைப்படத்தில் மட்டும்தான். பின்னர் ஒரு காலகட்டத்தில் தொலைக்காட்சி சேனல்களில் விதவிதமான பெயர்களில் நகைச்சுவைக் காட்சிகளை மட்டும் ஒளிபரப்பினார்கள். பிரத்தியேக நகைச்சுவை சேனல்கள் கூட வந்தன.
இப்படியான சூழலில் நாம் ரசித்த காட்சிகளையே திரும்பத் திரும்ப சலிக்காமல் பார்த்து மீண்டும் மீண்டும் ரசித்து சிலாகித்தோம். மிகப் பிற்பாடு, குறிப்பாக Jio Internet Boomக்கு பிந்தைய காலகட்டத்தில், தான் நம்மிடையே சமூக ஊடகப் புழக்கம் ஒரே பாய்ச்சலில் உச்சிக்குத் தாவியது. சதா சர்வ காலமும் நமது போக்கிடமும், புழங்கிடமும் சமூக வலைதளங்களே என்ற நிலைமை அதன் பிறகே வந்து சேர்ந்த விசயம். இன்றைக்கு இதுவே நிகழ் யதார்த்தம்.
பலரும் திரும்பிப் போக வழியில்லாமல் சிக்கிக் கொண்டு உழலுகிற இடமாகவே சமூக ஊடகங்கள் மாறியிருக்கின்றன. ரீல்கள் மற்றும் ஷாட்ஸ்களின் காலத்தில் நாம் வாழ்கிறோம். நமக்குப் பிடித்ததை மட்டுமே பார்த்துக் கொண்டே இருக்கின்ற ஒரு முடிவற்ற தொடர் ஓட்டமாக மாறிப் போயிருக்கிற இந்த துண்டுக் காட்சிகளின் உலகிற்குள் நாம் தேடுகிற, கண்டடைகிற பெரும்பாலான விடயங்களின் அடிநாதமாக இருப்பதுநேரப்போக்கு மட்டுமே. இன்ஸ்டாகிராமில் எல்லாம் அறிவுப்பசி கொண்டு தேடுகிற ஜந்துக்கள் மிக சொற்பமானவை. சமூக ஊடகப் பிரபஞ்சத்தில் அப்படியானதொரு கூட்டம் நிரந்தர சிறுபான்மையே.
இந்த ஊடகப் மீப்பெருக்கத்தால் பொழுதுப்போக்குக் கலைஞர்களின் (entertainers) எண்ணிக்கையும் பல்கியுள்ளது. தனியாகவும், தம்பதியினராகவும், நண்பர்கள் சேர்ந்த சிறு குழுக்களாகவும் பெரும் எண்ணிக்கையில், விதவிதமாக அன்றாட வாழ்க்கையின் சுவாரசியங்களை எடுத்துக் கொண்டு, சின்னச் சின்ன காணொளிகளை உருவாக்குகிறவர்கள் பலர். பொழுதுபோக்கு என்பதில் மிகப் பிரதானமான இடத்தைப் பிடிப்பவையாக எப்போதும் இருப்பவை நகைச்சுவை கண்டெண்டுகள் தான்.
நாமறிய வெறுமனே நகைச்சுவையை மட்டுமே பிரதான அம்சமாகக் கொண்டு கண்டெண்ட்களை தொடர்ச்சியாகத் தருகிற, பல லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட யூடியூப் அலைவரிசைகள் குறைந்தது இரண்டு மூன்று டஜன்களாவது இருக்காது?! பயணங்களுக்கு நடுவிலும் பணிகளுக்கு நடுவிலும் காதுகளைக் கவ்விக் கொண்டிருக்கும் ஹெட்ஃப்பொன் குண்டலங்கள் வழியாக நாம் இவைகளைத்தானே தினசரி ஒன்று விடாமல் கேட்டும் பார்த்தும் ரசித்துக் கொண்டிருக்கிறோம்!
இதையெல்லாம் தாண்டித்தான் அவ்வப்போது திரையரங்கிலோ அல்லது ஓடிடி தளங்களிலோ பார்க்கிற படங்களில் வருகிற நகைச்சுவைக் காட்சிகளை நாம் பார்க்க முற்படுகிறோம். அதுவும் அவை நம்மை கவர வேண்டுமென எதிர்பார்ப்புடனேயே ரசிக்க முற்படுகிறோம்.
மனித உணர்வுகளில் பசியைத் தவிர்த்து, அடிப்படையாக யோசித்துப் பார்த்தால் என்றைக்கும் நீர்த்துப் போகாத, நிரந்தரமான நிறைவுணர்வை எட்டவே முடியாத விடயங்கள் இரண்டே இரண்டு தான். முதலாவது காமம்; இரண்டாவது (வேட்டை சமூகத்தின் எச்சம் போல) வன்முறையின் மீதான ஈர்ப்பு. இது போக மீதமுள்ள உணர்வுகள் எல்லாம் காலப்போக்கில் நிறைவுற்ற நிலைக்கு (saturated state) நகர்ந்துவிடுகின்றன. நகைச்சுவை உணர்வும் இதில் அடக்கம். மனித மனது புதிது புதிதாய் தேடவும், மேன்மேலும் அப்புதுமையையே எதிர்பார்க்கவும் பழகிப்போனது. சிறிதும் பெரிதுமான நகைச்சுவைக் ‘காட்சிகளை’, சதா சர்வ காலமும் சாத்தியமான வழிகளில் எல்லாம் பார்த்துப் பழகிப் போயிருக்கிற மனம், அவற்றிலிருந்து மேம்பட்ட அல்லது ஏதாவதொரு விதத்தில் வித்தியாசப்படுகிற நகைச்சுவைகளையே திரைப்படங்களுக்குள் எதிர்பார்க்கத் துவங்குகிறது.
உன் வாதம் கொஞ்சம் நெருடலாக இருக்கிறதே. அப்படிப் பார்த்தால் நீயே சொல்வது போல டஜன் கணக்கிலான யூடியூப் அலைவரிசைகளில் வாராவாரம் என்கிற ரீதியில் கூட புதிது புதிதாக நகைச்சுவை கண்டென்டுகளை உருவாக்கிக் கொண்டே தானே இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அவை யாவும் ஒரு நுகர்வோராக நமக்கு விலையில்லாமல் கிடைப்பவை. தன்னியல்பிலேயே ஒரு பார்வையாளராக நம் மனம் அவை கொஞ்சம் ‘முன்னப்பின்னே’ இருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாது. ஆனால் திரையரங்கில் பார்க்கிற படமாகட்டும், அதுவே கொஞ்ச நாளில் ஓடிடி தளங்களில் வருகிற போது பார்ப்பதாகட்டும், இரண்டுமே இலவசமாகக் கிடைப்பதில்லை. மேற்சொன்ன இரண்டையுமே நாம் நேரப்போக்கிற்காகவே பெரும்பான்மையாய் பார்க்கிறோம் என்றாலும், விலையுடைய பிந்தைய வடிவில் அவற்றின் தர மதிப்பீட்டிற்கான நமது அளவுகோள்கள் இயல்பாகவே மாற்றம் கொள்கின்றன. கடந்த காலங்களில் வெளியாகி நாம் இன்றளவும் பார்த்து ரசிக்கிற முழுநீள காமெடி கிளாசிக்குகளை (மைக்கேல் மதன காமராஜன் போல, தில்லு முல்லு போல… சமீபத்திய உதாரணங்களாக சூது கவ்வும் போல, மூடர் கூடம் போல…) இப்போதைய காலகட்டத்தில் உருவாக்க முடியுமா என்பது சந்தேகமே. உண்மையில் இன்றைய தேதியில் தரமான நகைச்சுவைப் படங்கள் எடுப்பது மிக மிக சிரமமான, சவாலான காரியம்.
எழுதியவர்
-
இயற்பெயர் லா.மா.ஜோ அந்தோணி. தூத்துக்குடியில் வசிக்கிறார். இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் இவர்; சினிமா மற்றும் இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சினிமா சார்ந்த கட்டுரைகள் படச்சுருள், வாசகசாலை இணைய இதழ், புரவி, பேசாமொழி இணைய இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதைகளும் அவ்வப்போது இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன.
இவரது ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ என்ற சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதி வாசகசாலை பதிப்பக வெளியீடாக 2020இல் வெளிவந்துள்ளது.
இதுவரை.
- கலை11 November 2024நகைச்சுவைக்கு என்னதான் ஆயிற்று?
- குறுநாவல்29 July 2024அனந்திப்பூ
- கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023புறப்பாடு