24 November 2024
sb

புதிதாகப் பக்திக்கு ஆட்பட்டவனும், புதியதொரு கண்டுபிடிப்பைச் செய்துவிட்ட விஞ்ஞானியும் சும்மா இராமல், எவர் காதாவதும் புளிக்கும்படிக்கு, எந்தநேரமும் தொணதொணத்துக் கொண்டேயிருப்பார்கள் என்று செலவாந்தரம் சொல்லுவார்கள் இல்லையா? அப்படித்தான் எனது நண்பன் செந்திலும் சதா தொணத்திக்கொண்டே யிருந்தான், “மீனுன்னாக் கடல்மீன்தா மாப்பள மீனு. நாமளுந் திங்கறமே இந்த ஆத்துமீனு? அதெல்லா மீனாடா?”

வேலைநிமித்தமாக நாகர்கோவிலில் அவன் தங்கியிருந்தது வெறும் ஐந்தே ஐந்து மாதங்கள் தான் என்றாலும், ஆயிரம் வருடங்களாக அங்கேயே வாழ்ந்தவனைப் போல எந்தநேரமும் ‘நாரோல்’, ‘நாரோல்’ என்று அனத்திக் கொண்டேயிருந்தான். “நாம்ப பேசறதல்லா தமிழே இல்லீடா; அவிய‌பேசறதுதான்டா சுத்தமான தமிழு”, என்று தொடங்கும் அவனது நாகர்கோவில் மகாத்மியங்கள், மீன்களைப் பற்றிய விவரணைகளாக விரியும் பொழுதுகளில், காவியத்தன்மையை அடைந்துவிடும். “அடடடடா! இராமன்புதூர் மீன்சந்தைய நீ வாழ்க்கையில ஒருதடவையாச்சும் பாக்கோணும்டா மாப்ள. எத்தெத்தாச்சோட்டு மீனுக விக்கிந் தெரீமா? சும்மா ரண்டாள் சைசுக்கு ரகரகமாக் கெடக்கும்டா! அரைக்கிலாங் கேட்டாலுஞ்செரி, அஞ்சுகெலாங் கேட்டாலுஞ்செரி, சூரிக்கத்தியப் போட்டுச் சும்மா சைசா, முள்ளில்லாத, அல்வாத்‌துண்ட வெட்றாப்பல அறுத்து அறுத்துத் தருவாங்கடா! வாங்கீட்டு வந்து வறுத்தாலுஞ் சேரி, கொழம்பு வெச்சாலுஞ் சேரி… அந்த ருசியையெல்லா அனுபவுச்சுப் பாத்தாத்தான்டா மாப்பள உனக்குப் புரியி!”.

கடல்மீன்களைப் புகழ்வதுடன் நின்றுவிடாது அவன் பேச்சு.‌ “இங்க இத்தனைநாளாத் தின்னூட்ருக்கறமே? கெண்டை, கெழுத்தி, ஆரான், அவுரி, சிலேப்பி, வெலாங்கு, ரோகு, கட்லான்னு… மீனாடா அதெல்லா? சேத்துச் சூறைக!”

“அதுக்குன்னு நெம்பத்தான்டா மட்டந்தட்டிப் பேசற செந்துலு. அணக்கட்டுல சிக்கற அரைஞ்சாங் குஞ்சுக்காவ ராத்திரியெல்லாம் நாக்கத் தொங்கப்போட்டூட்டுப் பரியடீலயே படுத்திருந்தவந்தா நீயிம்ங்கறத மறந்தறாத” எனக்குச் சற்றுக் கோபம் வந்துவிட்டது.

எங்கள் வாணியாற்றில் கிடைக்கும் கெண்டை மீனில் குழம்பு வைத்துச் சாப்பிட்டால், கல்லில் உரைத்துக் கையைக் கழுவினாலும் பத்து நாளைக்கு வாசம் போகாது. அப்படியே மல்லிகைப்பூவாய் மணந்து கிடக்கும்! இவனென்னமோ புதிதாகக் கடல் என்கிறான்; மீனென்கிறான்; நெய்மீனென்கிறான்! வெளை மீன் என்கிறான்!!

“கோவுச்சுக்காதடா சத்தி. ஆறு மாசத்துக்கும்மின்ன நா எப்புடி இருந்தே? ஆனா இப்பொ‌ எப்புடி இருக்கறெ?! வண்ணம் வச்சிருக்கறனா இல்லையா?”

வண்ணமா? “அப்பிடியொன்னுந் தெரீலியேடா மாமா. எப்பூம் போல அதே கருவாயனாத்தான்டா தெரீற”

எனது பதிலைக் கேட்டவன் ‘ஹொஹ்ஹொஹ்ஹோ’ என்று சிரித்தான். “வண்ணம் வெக்கறதுன்னாக் கலராவறதில்லீடா மாப்ள.‌ குண்டாவறது. நரம்பனாட்ட இருந்த நானு இப்பப் பந்தடிச்சாப்பல இருக்கறனல்லொ? பாரு வவுறு கூட உட்ருச்சு” சட்டையைத் தூக்கி வயிற்றைக் காட்டினான். உண்மை தான்.‌ கன்னங்களைப் போலவே வயிறும் உப்பித்தான் இருந்தது. “வவுறு மட்டுமில்ல. பொச்சுலயும் கொழுப்பேறித்தான்டா கெடக்கற நிய்யி”, என்றேன்.

“பொறாமப்படாதடா சூத்லெஸ் பாய். நீயும் கும்முன்னு குண்டிய ஆட்டிட்டு நடக்கணும்ன்னாக் கடல்மீன் சாப்பட்றா கொத்தெலும்பா” என்றான்.

அவன்‌ சொல்லும் மீன்களின் பெயர்களை எல்லாம் நான் கேள்விப்பட்டதேயில்லை. சாளை, பேய்ச்சாளை, மத்தி, அயிலை, பாரை, சூரை, வெளை மீன், கெழைங்கான், நெத்திலி, நெய்மீன் என்று அவன் அடுக்கிக்கொண்டே போகும் பொழுதுகளில், எனக்கு மலைப்பாக இருக்கும். அவற்றை எல்லாம் சாப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்று நாக்கில் எச்சில் ஊறும். ஆனால், எங்கே சென்று இந்த மீன்களை வாங்குவது?

அதையும் ஒருநாள் விசாரித்து அறிந்துகொண்டு வந்து சந்தோஷத்தில் துள்ளினான் செந்தில், “மாப்பளை! இத்தனை நாளா இது தெரியாத போச்சு பாரேன்? அருங்கல் பாளையத்துலயே நாயித்துக்கெழமையானாக் கெடைக்கிதாமாடா!”

எப்போது விடியும்? என்று காத்துக்கிடந்தவர்களைப் போல அந்த ஞாயிறன்று அதிகாலை நான்கரை மணிக்கே எழுந்து கிளம்பிவிட்டோம். போகும் வழியில் இருந்த ஒரு கடையில் டீயைப் போட்டுவிட்டு அருங்கல்பாளையத்தை நாங்கள் அடைந்தபொழுது மணி ஐந்தரை ஆகியிருந்தது. குறிப்பிட்ட இடத்தில் இன்னும் யாரும் வந்து கடை விரித்திருக்கவில்லை. ஆனால், அதுதான் மீன் விற்கும் இடம் என்பதற்கான அடையாளங்கள் நிறையவேயிருந்தன. குறிப்பாக ஒரு பலகை. அதில், ‘இங்கு கடல்மீன்கள் கிடைக்கும்’ என்ற வரியின் ஒவ்வொரு எழுத்தும் நடனமாடிக்கொண்டிருந்தது.

“என்னடா இன்னுங் கடை தொறக்குல?” என்ற அங்கலாய்ப்புடன், அந்தச் சாலையிலேயே அடுத்த ஒருமணிநேரத்திற்கும் மேலாகத் தெற்கேயும் வடக்கேயும் வெட்டியாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தோம். ‘ஒருவேளை இன்றைக்குக் கடை திறக்கமாட்டார்களோ?’ என்கிற பதைபதைப்பும் வேறு உள்ளூர ஓடிக்கொண்டிருந்தது . மணி ஆறேமுக்காலை நெருங்கும் சமயத்தில் எங்களைப் போலவே நான்கைந்து கடல்மீன்பிரியர்கள் அங்கே வந்து, கடைதிறப்பிற்காகக் காத்திருக்கத் தொடங்கியதும் தான் எங்களுக்குத் தெம்பே வந்தது. கடையினருகிலேயே வண்டியை நிறுத்திவிட்டு, சக மீன்பிரியர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். கடல்மீன்களைப் பற்றிய விவரங்களைச் சொல்வதில் செந்திலைவிடவும் அவர்கள் பயங்கரமான கெட்டிக்காரர்களாக இருந்தார்கள். ஊளி, கிளி, நாக்கு, சங்கரா, செந்நவரை, சீலா, காலா, வாவல், கொடுவா, பால்கோவா, முரல், எறால், நண்டு, திருக்கை என்று அவர்கள் சொல்லச் சொல்ல எனக்கு மயக்கமே வந்துவிட்டது. அடேங்கப்பா! எத்தனைவிதமான மீன்கள்! கடல் என்றால் சும்மாவா பின்னே? அத்தனை பெரிதாக இருக்கும் அதிலே ஆயிரக்கணக்கான மீன்வகைகளும் இருக்கத்தானே செய்யும்?

ஏழுமணிக்கு ‘டான்’ என்று வந்துசேர்ந்த கடைக்காரர்கள், ஐஸ்பெட்டிகளைத் திறந்து மீன்களை எடுத்துப் பக்குவமாக அடுக்கினார்கள். விதவிதமான‌ வடிவங்களில், வித்தியாச வித்தியாசமான வண்ணங்களில், ஏதேதேதோ மீன்கள்! இளஞ்சிவப்பில் மீன் இருக்கும் என்றெல்லாம் நான் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. அதன் பெயர் சங்கரா என்றார்கள். எனக்கு வியப்பே தாளவில்லை. அதற்கப்புறம், ‘சிவபெருமானுக்கும் இந்த மீனுக்கும் என்ன சம்பந்தம்?’ என்ற சிந்தனை வேறு பலநாட்களாக எனது மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது.. இளஞ்சிவப்பில் கிளிப்பச்சை விளிம்புகளைக்கொண்ட பெருஞ்செதில்களுடன் மூக்கை வளைத்துக்கொண்டு கிடந்த பெரிய மீனொன்றைக் கிளிமீன் என்றார்கள். எனக்கு அதைத் தின்றுபார்த்தே ஆகவேண்டும் என்ற ஆசை கிளர்ந்துவிட்டது. செந்திலிடம் சொன்னேன். “சும்மா பறக்காதடா. அதைவிடச் சூப்பர் மீனெல்லா இருக்குது”, என்று சொல்லிவிட்டுச் சாளை மீனையும், விளைமீனையும் வாங்கிக் கொடுத்தான். முன்னது குழம்பிற்கு; பின்னது வறுவலுக்கு.

பொதுவாக‌, இந்தக் கொங்கில், அது ஆட்டுக் குழம்பாக இருந்தாலும் சரி, கோழிக்குழம்பாக இருந்தாலும் சரி, மீன் குழம்பு, கருவாட்டுக்குழம்பு, கத்தரிக்காய்க் குழம்புகளாக இருந்தாலும் சரி, அனைத்திற்கும் ஒரே மிளகு தான். ‘மொளவு’ என்போம். அதாவது, பொதுத்தமிழில் ‘மசாலா’. என்ன? மீனுக்கும் கருவாட்டுக்கும் புளியைக் கரைத்து ஊற்றுவோம். ஆடு கோழிக் கறிகளுக்கு ஊற்றமாட்டோம். அவ்வளவுதான் ‌வேறுபாடு. ஆனால், எங்களது இந்த அமத்தாளுக்கு அமத்தாகாலத்து மொளவரைப்பிலும் புரட்சியை உண்டாக்கிக் காட்டினான் செந்தில். “இதெல்லா ஒரு மீன் மசாலாவா? நாரோல்ல கேட்டா வாயால சிரிக்கமாட்டாவ கேட்டியா அரீசீம்பருப்புக்குப் பொறந்த என் அருமை அத்தையாரே?” என்று கிண்டலடித்துவிட்டு,
“அரைமூடித் தேங்காயைத் திருவி, அதோட கொஞ்சம் ஈருள்ளி, ஊறவச்ச தனியா, வத்தல் பொடி, நல்ல மொளகு எல்லாத்தையுஞ் சேத்து வெண்ணைபோல அரைச்சு எடுத்துக்கிடணும். அந்த அரைப்புல, எலுமிச்சம்பழ சைசுப் புளியக்கரைச்சுக் கூட்டி அடுப்புல ஏத்தி ஒரு தக்காளியையும், பச்சையாட்டு உள்ள காந்தாரி மொளகா நாலையும் கட் பண்ணிப் போட்டுக்கிடணும். நல்லாக் கொழம்பு கொதிச்சு வரும்போ மீன் துண்டுகளையும், கறுகப்பிலையையும் பூப்போல தூவி, ஒரு பத்து நிமிசம் கொதிக்கவிட்டு எறக்கிவச்சுச் சுடுசோத்துல ஊத்திப் பெசஞ்சு தின்னாச்சுன்னாப் போதும். அதுதாம் மக்களே உண்மையான சொர்க்கம்!”

இப்படித், தானொரு மதிப்புமிக்க ‘நாகர்கோவில் ரிட்டர்ன்’ என்று‌ அவ்வப்போது அவன் பேசிக் காண்பிப்பதும் கூட‌ உண்டு. “கொழம்பத்தாளிக்கவே இல்லையேடா செந்துலு?”, என்ற எனது அம்மாவின் கேள்விக்கு, “அதெல்லாம் இந்தக் கொழம்புக்குத் தேவையே இல்ல அத்தை. வறுத்தரைச்ச மீங்கறிக்கு வேண்ணாத் தேங்கெண்ணெய்ல வெந்தியம், ஈருள்ளி தாளிச்சுத் தலைமேல கொட்டிக்கிடலாம். அது இன்னொருவகை சொர்க்கம் பாத்துக்க!” என்று பக்குவம் சொன்னான்.

இப்படியாக, செந்தில் சொல்லிக்கொடுத்த விதவிதமான பக்குவங்களில் ஒவ்வொரு ஞாயிறன்றும் எங்கள் வீட்டிலும் கடல்மீன்கள் கொதிக்கும் குழம்பில் நீந்தின. மசாலாவைப் பூசிக்கொண்டு தோசைக்கல்லின் சூட்டில் புரண்டு புரண்டு படுத்தன. அதுநாள் வரையிலும், வடைச்சட்டி நிறைய எண்ணெய்யை ஊற்றி, அதிலே மசாலாத் தடவிய மீன்களைப் போட்டுப்பொரித்து ‘ரோஸ்ட்’ என்ற‌பெயரில், ‘மொறுக் மொறுக்’ என்று தின்றுவந்த நாங்கள், செந்திலின் சொற்படி, தோசைக்கல்லில் இட்டுப், பொரித்துப் பஞ்சுபோல தின்னப் பழகிக் கொண்டோம். அதை ‘மீன் பொரிப்பு’ என்று அழைத்துத் தமிழ்க்கொடியையும் நாட்டினோம்!
‘கறீல இருக்கறாப்பல கடல் மீன்ல கொலஸ்ட்ரால் இல்ல, செந்துலு சொல்றாப்பல கொழம்பு வெச்சா எண்ணையே தேவைப்படாது, பிரசரு வராது, சக்கரை வராது, உப்பு ஏறாது’, என்று போவோர் வருவோரிடமெல்லாம், கடல்மீன்களின் மகத்துவத்தையும், செந்திலின் சமையல் திறமைகளையும் ஓயாமல் பாடிக் கொண்டிருந்தது எனது அம்மா. வஞ்சிரமீன் துண்டுகளைத் தின்றுபார்த்த எனது அப்பாரோ, “சும்மா, கேக்காட்ட இருக்குது பொன்னு”, என்று கண்ணீர்விட்டுவிட்டார். ‘ரோஜாப்பூ நாக்கு’ என்று சொல்லப்படும் மீனுக்குச் சொத்துக்களை எல்லாம் எழுதிவைக்கச் சித்தமாகியிருந்தார் எனது அப்பா.

செந்தில் சொல்லித்தான் மீன் குழம்பில் முருங்கைக்காய், மாங்காயையெல்லாம் கூடப் போடலாம் என்று அறிந்துகொண்டோம். சூரை மீன் என்ற ஒருவகை மீன். அதைக் குழம்பு வைத்த அன்றைக்குக் கையைக் கடித்துக்கொண்டு சாப்பிட்டாள் எனது தங்கை. ஒரு ஞாயிறன்று, “இன்னக்கி றாலு வாங்குவம் மக்கா” என்றவன், “ஆனா இதெல்லாம் என்னடே றாலு? சிலேப்பித் துண்டாட்ட ஆரஞ்சுக் கலர்ல இருக்கும்டா நாகர்கோயிலு றாலு!! அதன்ற‌ அடிவவுத்துல வேற பச்சப்பசேல்ன்னு பாசத்த உருட்டி வச்சாப்ல புடிச்சிருக்கும்டா. வாங்கீட்டு வந்து கொழம்பு வச்சம்ன்னா…”

“செரிவுட்றா மச்சி. இன்னக்கி றாலு மூலமாச் சொர்க்கத்தப் பாத்துருவோம்” என்று வண்டியை முறுக்கினேன் நான்.

காலாகாலமாக, ‘றாட்டு’ என்றே சொல்லிப்பழகிய ஒன்றை ஒரேநாளில் ‘றாலு’ என்று சொல்லப்பழகிக் கொண்டோம். அப்புறம், நண்டுக்குத் தாவினோம். திருக்கை மீனில் கறுத்தக்கறி வைத்தோம். நெத்திலி மீனுடன் மாங்காயைக் கீரிப்போட்டு அவியல் செய்தோம். பிள்ளைச்சுறா, துப்புவாளையெல்லாம் வாங்கியவித்துப் புட்டு வைத்தோம். ஒருமுறை, ஓமம் தாளித்துக்கூட மீன்குழம்பு வைத்தோம். ஒருநாள், கிளிமீனின் சினைப்பை கிடைத்தது. முட்டைகள் ஒவ்வொன்றும், ‘காட்லிவர் ஆயில்’ கேப்ஸ்யூல் சைசில் இருந்தன. வழக்கம்போல, சிறுவெங்காயம், பச்சைமிளகாய், கடுகு, கறிவேப்பிலை எல்லாம் போட்டுத் தாளித்துக் கொட்டி, ஒருபிடி பிடித்துவிட்டோம்.

இப்படியாகச், செந்திலின் சீரிய வழிகாட்டுதலில் எங்கள் வீடும், கடல்மீன்பிரியர்களின் பாசறையாக மாறிப்போனது. அதனால், பல ஆடு கோழிகளும், வாணியாற்றின் மீன்களும், சற்றே நிம்மதிப் பெருமூச்சுவிட்டன. அதேநேரத்தில், மேலும் சில படகுகள் இந்திய தீபகற்பத்தைச் சுற்றியிருக்கும் கடல்களின் ஆழத்தில் எங்களுக்காக வலைவீசி மீன்களை அரிக்கத் தொடங்கின.

ன்னதான் பெருமையாகச் சொல்லிக்கொண்டாலும், ஆற்றுமீன்களைவிடவும் கடல்மீன்களின் விலை எப்போதுமே அதிகமாகத்தானே இருக்கிறது? ஏற்கெனவே, சொந்தபந்தங்கள் அருளிய ‘தின்னுகெட்ட குடும்பம்’ என்ற‌ விருதைவேறு நாங்கள் சம்பாதித்து வைத்திருந்ததால், ‘இத்தனை வெலை குடுத்து இந்தக் கருமத்தத் தின்னேதா ஆகோணுமா?’, என்று அவ்வப்போது எனக்கு நானே சத்தமாகக் கேட்டுக்கொள்ளவும் செய்தேன். “காசுக்குத் தவுந்த பனியாரந்தா, வெரலுக்குத் தவுந்த வீக்கந்தா’ என்று எனக்கு ஆறுதல் மொழிந்து, தலையைக்கோதிவிட்டுக் கையிலே பையைத் திணித்து மீன்மார்க்கெட்டிற்கு வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தார் எனது அம்மா. “ஆரோக்ய வாழ்வினையே தந்தது கடல்மீன், கடல்மீன் இருக்குமிடம் லைஃபாயே தேவையில்லை…”, என்று பாடிக்கொண்டு சோப்பு நுரையில் ‘மொட்லி’ விட்டார் என்னைப் பெற்ற அன்புத்தகப்பன். “ஒமேகா த்ரீ ஃபேட்டி ஆசிட்லாம் சும்மா கெடைச்சிருமாடா பொறந்தவனே?”, என்று கண்ணாடியில் தெரியும் தனது முகப்பொலிவை இரசித்துக்கொண்டே எனது கன்னத்தில் செல்லமாக இடித்தாள் பாசமான தங்கை.

சிலவாரங்களிலேயே எங்களது ஊனக்கண்களை அகலத் திறந்து வைத்தார் ஓரு சக கடல்மீன்பிரியர், “பாசு, அருங்கல்பளையத்தவட இரயில்வே டேசன்கிட்ட நெறயக்கடல்மீன் கெடைக்கிது. வெலையி ரொம்பச் சகாயம்!”. அவ்வளவுதான்! அடுத்த ஞாயிறன்று அதிகாலை அங்கே வண்டியை விட்டோம். சும்மா சொல்லக்கூடாது, அந்த மனிதர் சத்தியசந்தன்! அரிச்சந்திரனுக்குத் தம்பி!! இராமன்புதூர் மீன் சந்தையைப்பற்றிச் செந்தில் சொல்லியிருந்தானல்லவா? அங்கே விற்பதைப்போன்ற முரட்டுசைஸ் மீன்களை இங்கேதான் நான் பார்த்தேன். பதினைந்து கிலோ எடையுள்ள வஞ்சிரமீனைப் பதினாறு பேர் பங்குபோட்டு வெட்டிக்கொண்டு போனார்கள்! ஊளிமீனின் ஒற்றைத் துண்டுக்கு இடம்கொடுக்கத் திணறியது எங்கள்வீட்டுத் தோசைக்கல்லின் அகலம்! முன்பு சொன்னேனே கிளிமீன் முட்டை பற்றி? அதையெல்லாம் கூட இங்கேதான் வாங்கினோம். மீன்வகைகளின் எண்ணிக்கையைப் போலவே, கடைகளின் எண்ணிக்கையும் கூடுதலாகவே இருந்தது. என்ன? ஒரேயொரு முக்கியமான வேறுபாடுதான். அருங்கல்பாளையம் மீன் கடைகளில் ஆண்கள் மட்டுமே மீன் விற்பவர்களாக இருந்தார்கள். இங்கேயோ முக்கால்வாசி பெண்கள். மற்றபடி, ஒரு மீன்சந்தைக்கு என்னென்ன அங்கலட்சணங்களெல்லாம் இருக்கவேண்டுமோ அது அத்தனையும் இதற்கு இருந்தது. முக்கியமாக அந்தப் பேரிரைச்சல். அப்போதும் கூட, செந்திலானவன், “ப்ச், இதெல்லா இராமம்புதூர் மீன்சந்தைன்ற வாசப்படிக்கு ஆவுமாடா?” என்று கேட்டபடிதான் வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினான்.

நாங்கள் வண்டியைவிட்டு முழுதாகக்கூட இறங்கவில்லை., “வாங்க சாமீ…‌ வாங்க வாங்க வாங்கொ. என்ன மீனு கண்ணு வேணு? பாரையிருக்குது, கொடுவா இருக்குது, வெளைமீனுருக்குது, வஞ்சரமிருக்குது, வவ்வா, கெழங்காஞ், சூரை, அயில, மத்தி, நெத்துலி, சங்கரா என்ன வேணு உங்குளுக்கு? தா, ஊளீ வெட்டி வெச்சுருக்குது பாருங்கொ. ரோஸ்ட் போட்டா அப்புடியே கேக்குன்னாக் கேக்காட்டவே இருக்கும்! ஒரேயொரு முள்ளுக்கோட இருக்காது தங்கொ. சொல்லுங்கொ, எத்தன‌கெலாம் போடட்டு?”, என்று எனது கையிலிருந்த வயர் கூடையை வாங்கிக் கொண்டார் அந்த மீனாட்சி. ஆமாம். அவருக்கு மீனாட்சி என்று தான் நாங்களாகப் பெயர்சூட்டிக் கொண்டோம்.‌

“டேய் மாப்பளை, கண்டசுடீல அப்புடியே அந்தக்கா கால்ல நீட்டியுழுந்து கும்பட்றலாம்ன்னு இருந்துச்சுடா எனக்கு”, என்று வீடுவந்தும் புலம்பிக்கொண்டேயிருந்தான் அவன். உண்மையில் எனக்குமேகூட அப்படித்தான் தோன்றியது.

சுமார் ஐந்தடி உயரம். கறுத்தநிறம். வட்டமுகம். மஞ்சள்பூசி, நெற்றியில் ஒருரூபாய்க் காசளவு குங்குமம் வைத்திருந்த அந்த வடிவான முகத்திற்கு ஏற்ற அளவான‌ கிளிமூக்கு. அதன் இரண்டுபுறமும் கல்வைத்த அழகான‌ மூக்குத்திகள் டாலடித்தன. இதழ்களில் வெற்றிலைச் சிவப்பு. சிரித்தாரென்றால், தெற்றுச் சிங்கப்பற்களுடன் கண்களும் சேர்ந்து சிரித்தன. எண்ணெய் வைத்து நடுவகிடெடுத்துப் படியவாறி இட்டிருந்த கரிய கொண்டையில் ஒருகண்ணி மல்லிகைப்பூ. நல்ல நறுவிசாய் மடிப்பெடுத்துப் புறங்கொசுவம் வைத்துக் கட்டியிருந்த பச்சைநிற நெகமம் சேலைக்குப் பொருத்தமான சிவப்புநிற ஜாக்கெட். கழுத்தில், கல்வைத்த ஒரு பதக்கஞ்சங்கிலி, தாலிக்கொடி, உட்கழுத்துநூல். கைநிறைய மினுமினுக்கும் கண்ணாடி வளையல்கள். கால்களில் ஒருஜோடி வெள்ளித்தண்டைகளும், பாதசரமும். மலர்ந்த புன்னகையுடன், தாய்மையே வடிவான அந்த மகராசியின் பின்னாக, மந்திரித்த செம்மறியாடுகளைப் போல இருவரும் சென்றோம். அவர் பட்டியலிட்ட அத்தனை மீன்களும் அங்கேயிருந்தன. பட்டியலில் தவறிய மீன்களும் கூட நிறையக் கிடந்தன. காரை, சுதும்பு, கீச்சான், பொருவா, பன்னி, பண்ணா, வெள்ளைக்கெழங்கான், நாக்கு, நவரை என்ற அந்தப் பட்டியலும் கூட, சற்று நீளமானது தான்.

ஒவ்வொரு வகை மீனின் அருமை பெருமைகளையும் சொல்லிக்கொண்டே, அவற்றின் செவுள்களை விரித்துக்காட்டினார், வயிறுகளை அழுத்திக்காட்டினார், கருவிழிகளின் கருமையைச் சிலாகித்தார், “அத்தனையீ இப்ப வெட்டுன சீம்பாட்டொ அத்தனை ப்ரெஸ்ஸூ சாமீ! வாங்கீட்டுப்போயித் தின்னுபாத்துட்டு அப்பறமந்து காசக்குடுங்கொ, அக்கா வாங்கிக்கறெ”.‌ சிலருக்கு மட்டும் தான் உருவத்திற்கேற்றாற்போன்ற குரலும் வாய்க்கும். அவருக்கு வாய்த்திருந்தது. அவரது வாயையே இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

“சொல்லுங்க சாமீ? வஞ்சரத்தப் போட்றலாமா?”

அதற்குள் யாரோ ஒரு கடல்மீன்பிரியர், “அஞ்சுகெலாங் கொடுவாவூம், ரண்டுகெலாம் மத்தியிம் போடுங் பாக்குலா”, என்றார். அவரது அந்த அதட்டலான குரலால்தான் நாங்கள் இயல்புநிலைக்கே திரும்பினோம்.

“சட்டுன்னு அண்ணங்கேட்டத எடையப் போட்டுக்குடுங்கடா பசவளா”, என்று தனது கடையின் ஊழியர்களை அதட்டியவர், “சொல்லுங்சாமீ, ஊளி அருமையா இருக்குது. போட்றலாமா?”, என்றார் எங்களிடம்.

உண்மையைச் சொன்னால், அந்த வாரத்திற்கான மீன் தேர்வு எங்களுடையதாகவே இருக்கவில்லை. மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்களைப் போல, அவர் பரிந்துரைத்த ஊளியையும், வஞ்சிரத்தையும், நெத்திலியையும் வாங்கிக் கொண்டோம். அதுவும், நெத்திலியைப் பற்றி விவரிக்கும்போது, “பயராட்டக்கண்ணூ… இன்னக்கியுட்டா என்னக்கீங் கெடைக்காது. அடுத்த சீசனுக்குத்தா. அதுக்குக் காத்துருக்கோணும் இன்னும் பன்னண்டுமாசம்”, என்றார். வெட்டி வாங்கிப், பையில் போட்டுக்கொள்ளும் பொழுதுதான், விலையைக்கூடக் கேட்காமலே மீன் வாங்கியிருக்கிறோம் என்பதே எங்களுக்கு உறைத்தது.

“அக்கா, எவ்வளவுங்க்கா ஆச்சு?”

“கண்ணூ… ஊளி கெலா ஆர்நூறு, ஆளுக்கு ஒன்னரைக்கெலாம் போட்ருக்குது. வஞ்சரொங் கெலா எட்நூறு, ஆளுக்கு ஒருகெலாப் போட்ருக்குது. நெத்திலி, கெலாம் முன்னூறு, ஆளுக்கு ஒரு கெலாம் போட்ருக்குது. மொத்தொ, நாலாயரம். ஆளுக்கு ரண்டாயரமாச்சு தங்கொ”

“அக்கா, தென்னங்க்கா இது? வெலையெல்லா இத்தனை சாஸ்த்தியாச் சொல்றீங்க?” என்று பூனைக்குரலில் முனகினான் செந்தில்.

“ஏ சாமீ? உங்குகிட்டப் போயி அக்கா எச்சு வெலைச் சொல்லுவனா? சொல்லுங்கொ? இந்த வாரொங் கொஞ்சொ வெலை ஏறிப்போச்சு தங்கொ. நாளைவாரொ வாங்கொ, கொறச்சு வாங்கிக்கிலா” என்றார்.

“அக்கா, நீங்க சொன்னவெலைக்கே வாங்கிக்க முடீங்ளாங்க்கா?” என்று சற்றே குரலை உயர்த்தினான் செந்தில். இப்போதுதான் தன்னிலைக்கு முழுதாக வந்திருந்தான் போல!

“ம்க்கூம், இப்பக் கேளுங்கொ ‘வெலையென்னொ? மொலையென்னொ?’ன்னு அந்த வேவரசிகிட்ட? எத்தனை விசுக்கா ‘வஞ்சரொ ஆறுநூறுதா ஆறுநூறுதா’ன்னு ஏலம்போட்டே நானு? அவகிட்டத்தா அதீசீமா என்னமோ ஆடுதுன்னு என்னய ஏறெடுத்துக்கோடப் பாக்காத போனீங்கள்லொ? வேணும். உங்குளுக்கல்லா நல்லா வேணும்”

ஒருநொடி திகைத்துவிட்டோம். யார் இவர்? இத்தனை நேரமாக இவரும் இங்கே தான் மீன் விற்றுக் கொண்டிருக்கிறாரா? எங்களை வியாபாரத்திற்கு வேறு அழைத்தாரா? ஐயோ தெய்வங்களே!

அந்த அம்மையார் சற்று நெடுநெடுவென உயரமாக இருந்தார். நீல நிறத்தில் சிறிய பூப்போட்ட வெள்ளைச்சேலையை முன்கொசுவம் வைத்துக் கட்டியிருந்தார். கை, கால்கள் மூளியாக இருந்தன. கழுத்தில் மெருகுபோன ஒரு பித்தளைச் சங்கிலி. குங்குமத்திற்குப் பதிலாக என்றைக்கோ குத்தப்பட்ட வட்டவடிவமான பொட்டுப் பச்சை.

“ஏளே, மூக்கறுந்த கழதை? மூடீட்டு இருக்கமுடீமாண்டீங்குதாளே வப்பனோளி? இருக்கற மாப்பளைக பத்துலியாளே உனக்கு?”

எங்கள் மீனாட்சி, எதிர்ப்பாட்டுப்பாட, சற்று நேரத்திற்குப் புழுத்தநாய் குறுக்கே வர அஞ்சும்படிக்கு ஆனது சூழ்நிலை. கடைசியில்,

“அக்கா, உங்கு சண்டைய அப்பற வெச்சுக்குங்க்கா. வெலையச் சொல்லுங்க்கா மொதல்ல”, என்று நாங்கள் மன்றாடித்தான் சாந்தியையும், சமாதானத்தையும் கொண்டுவர முடிந்தது.

“செரி தங்கொ, உங்குகிட்ட என்னொ கணக்கு? கையில இருக்கறதக் குடுங்கொ. எத்தனை சொன்னெ? நாலாயரம்? செரி. உங்குளுக்கும் வேண்டா. எனக்கும்மேண்டா. மூவாயரத்தைந்நூறு குடுங்க போதும்”

ஐந்நூறு ரூபாயை அவர் சட்டென்று குறைத்ததில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகிவிட்டது. தொகையைக் கொடுத்துவிட்டு, “வர்றங்க்கா”, என்று வாயெல்லாம் பல்லாக விடைபெற்றுக்கொண்டோம்.

“மகராசராப் போய்ட்டுவாங்க சாமி. நாளவாரொ இன்னும் பெரிய பெரிய மீனெல்லா வரும். அனுசருச்சுத் தாறெ, அக்கா கடையை மறந்தறாதீங்கொ”

“செரீங்க்கா” “செரீங்க்கா”

“ஆமா. ஆமா. ஆரு வந்தாலூ அனுசரிக்கற அளவுக்கு அவதாம் பெருசா வச்சுருக்கறா. அல்லாரு அவகிட்டயே போங்கொ”

சண்டைக்கார அம்மையார் பேசிய சாடைக்கு அஞ்சி வெடுக்கென்று வண்டியைக் கிளப்பிவிட்டோம்.

காலையில் ஐந்நூறு ரூபாய் மிச்சமானது இல்லையா? அதில் பாதி, இரண்டு கால் குப்பிகளாகமாறி, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறங்கிக்கொண்டிருந்தது.

“டேய் மாப்பளை, மீனு விக்கற பொம்பளையா இருந்தாலூ என்னவொரு தேஜஸ்லொ? அப்புடியே கோயல்ல நிக்கற சாமியாட்ட!”

“ஆமாஞ் செந்துலு. இன்னமு அப்டியே என்ற கண்ணுக்குள்ற நிக்கறாப்லயே இருக்குதுடா”

“ஒரு கோணைக்கொண்டை போட்டுட்டுக், கையில கிளியை மட்டும் புடுச்சுக்குச்சுன்னு வெச்சுக்கொ? அப்புடியே மதரை மீனாச்சிதான்டா!”

“ஆமான்டா செந்துலு. அதும் அந்தப் பொறங்கொசுவம்? அதுதான்டா மாப்பளை நம்பு கல்ச்சர். பண்பாடு. கலாச்சாரம். உம்மையச் சொன்னா, எங்கம்மா மின்னுக்கு வெச்சுக்கட்றது எனக்குப் புடிக்கவே புடிக்காதுடா. எம்பட பொறந்தவ இந்தச் சுடிதாரு, பிராக்கெல்லாம் போடறாள்லொ? எனக்கு அப்புடியே எருச்சமயராத்தான்டா வரும். என்ன பண்றது? எந்தநாயி சொன்னாக் கேக்குது சொல்லு? பாவாடை தாவுணியெல்லா இனிமேலுச் சினிமாவுலதான்டா பாக்க முடியி”

“நெம்பக் கரைக்ட்றா மாப்பளை. அந்தக் காலத்துல அரசாளும் போது, மதரை மீனாச்சியென்னொ பேன்ட்டு சரட்டா போட்டுட்டு நடத்துருப்பா? இப்பிடித்தா, இந்தக்காளாட்டத்தா, நம்பு தமிழ்க் கலாச்சாரம், பம்பாடு மாறாத, பிங்கொசுவம் வெச்சுக் கட்டீட்டுத்தாம் போருக்கெல்லாங்கோடப் போயிருப்பா”

“ஆமான்டா செந்துலு. ஐ லைக் தட் அக்கா. ஐ லைக் தட் மீனாச்சி. இனிமே அதுக்குப் பேரு மீனாச்சிதான்டா. அதுகிட்டத்தா மீனு வாங்கறோம். நாம்ப ஆதரிக்கிலீன்னாப் பின்ன ஆருதான்டா இப்பிடிப்பட்ட மகராசிகள ஆதரிக்கறது?”

ன்றைய தீர்மானத்தை நிறைவேற்றும் விதமாக அடுத்தடுத்த வாரங்களில், அந்த அங்கயற்கண்ணி மீனாட்சியிடம் தான் மீன் வாங்கினோம். வாரம் தவறாமல் அந்தப், பக்கத்துக்கடை அக்கா எங்கள் மீனாட்சியுடன் எங்களைத்தொட்டும், மற்ற‌ வாடிக்கையாளர்களைத் தொட்டும் சண்டையிட்டது. காதுகொள்ளாத புழுத்தவார்த்தைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்தக் களேபரங்களுக்கு நடுவே தான், மீன்களை விலைபேசினோம். விலையைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம். சிலவேளைகளில் மன்றாடினோம். மீனாட்சியாரும், ஒவ்வொரு முறையும் மனமிரங்கி, மிகுந்த அன்புடன் ஐந்நூறு, ஆயிரம் என்று குறைத்துத் தந்துகொண்டேயிருந்தார்.

அந்த மீன்சந்தையின் வழக்கப்படி, இந்தவாரம் முதலாம் எண்ணில் இருக்கும் கடை, எப்போதும் அதே முதலாம் எண் கடையாகவே இருந்துகொண்டிருக்காது. சுழற்சியில் மாறிக்கொண்டேயிருக்கும். சில நேரங்களில் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாதபடிக்குப் பதினேழாம் எண் கடையாகவோ, இருபத்து மூன்றாம் எண் கடையாகவோ ‌கூட ஒளிந்துகொண்டிருக்கும். அதற்காக விட்டுவிடுவோமா நாங்கள்? தேடிக்கண்டுபிடித்து எங்கள் அங்கயற்கண்ணி மீனாட்சியிடம் மட்டும்தான் மீன் வாங்கினோம். தமிழ்ப் பண்பாட்டைக் கட்டிக் காப்பாற்றும் எங்கள் மீனாட்சியை நாங்கள் தானே ஆதரிக்கவேண்டும்? காப்பாற்றவேண்டும்? கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடியின் பண்பாட்டை அழியவிடலாகுமா?

னால், காலம் செல்லச் செல்லத்தான் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தோம். நாங்கள் வாங்கிவரும் மீன்களின் தரம் மட்டுமல்ல, எடையும் கூடச் சரியாக இருப்பதில்லை என்பதே அந்த‌ அரிய கண்டுபிடிப்பு. எங்கள் மீனாட்சியால் நாங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபொழுது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஓடிப் போயிருந்தன. எப்பேர்ப்பட்ட துரோகம் இது? இத்தனை நம்பகமான வாடிக்கையாளர்கள் யாருக்காவதும் வாய்ப்பார்களா? அப்படி வாய்த்தால், அவர்களை ஏமாற்றுவதற்கு எந்த விற்பனையாளருக்காவதும் மனது வருமா? ஆனால், இந்த மீனாட்சி தயங்காமல் ஏமாற்றியிருக்கிறாரே! உச்சந்தலையில் மிளகாயையும், குறுமிளகையும், மஞ்சள்பொடியையும், பூண்டையும் வைத்து, இழுத்து இழுத்து அரைத்திருக்கிறாரே! இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது.

“மாப்ளை, நாம்ப ஏன்டா இப்புடி இருக்கறொ? மாரியாத்தா தானடா நம்பு சாமி? ஊருக்கு ஊரு மாரியாயிதானடா இருக்குது? ஆனா, அதைய மதிக்காத, எங்கயோ இருக்கற‌ மீனாச்சி பொறவுக்குப் போனது நம்பு கொழுப்புத் தானடா?”

“கொஞ்சம் புரீறாப்பலதாஞ் சொல்லேன்டா செந்துலு”

“அட மண்டத்தலையா… இனிமே நாம்ப அந்த வெள்ளைச்சீலைக்கார‌ அக்காட்டத்தான்டா மீனு வாங்கறொம்”

“டேய், அப்ப நம்பு தமிழ்ப் பண்பாடு?”

“அதைக் காப்பாத்தவுந்தான்டா இந்த முடிவு மாப்பளை. யோசனை பண்டிப்பாரு? பிரசஞ் செத்ததீம் புதுப்பொண்ணுப்புள்ளையாவிக்கற காலத்துல, ஒருத்தி, மூளியா, அதூங் காவிப்பொடவைகூடக் கட்டிக்காத வெள்ளச்சீலையோட சுத்தீட்ருக்கறான்னா அவ ஆரு? அவ ஆருங்கறெ? அவதான்டா நம்பு கொலதெய்வம். அவதான்டா நம்பு மாரியாயி. அவதான்டா நம்பு பண்பாட்டக் கட்டிக்காப்பாத்தற பட்டிக்காட்டுக் கருத்தம்மா”

கண்ணீர்மல்கச் சொல்லிவிட்டுக் கடைசி ரௌண்ட்டை அண்ணாத்திக் கொண்டான் செந்தில்.
தன்னை மறந்து கைதட்டி விசிலடித்தேன் நான்.

கிளம்பும்போதே திட்டமிட்டபடி, அந்த மீனாட்சியின் எந்தக் கொஞ்சல்களுக்கும் செவிசாய்க்காமல், அதன் கடையைக் கடந்து இரண்டு கடைகள் தள்ளியிருந்த மாரியம்மையின் கடைக்கு முன்பாக நின்றோம். அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. எந்தவித ஒப்பனையுமற்ற‌ அவரது முகத்தில் விரிந்திருந்த புன்சிரிப்பில் எந்த ஊர் மாரியாத்தாள் தெரிகிறாள்? என்று நினைவுகளைச் சிடுக்கெடுத்துக் கொண்டிருந்தோம்.

“சொல்லுங்க சாமி? எந்த மீனுப் போட்டுக்கறீங்கொ? வாவலுருக்குது, பாரையிருக்குது….” மீன்களின் நெடிய பட்டியலையும், பண்புநலன்களையும், பவிசுகளையும் வாசிக்கத் தொடங்கினார் மாரியம்மை. நாங்களும் ஆவலுடன், அவரது கடையில் பள்ளிகொண்டிருந்த மீன்களைக் காதலிக்கத் தொடங்கியிருந்தோம். அப்போது தான் மீனாட்சியாரானவர் புருசிலியைப் போல பாய்ந்து வந்து தமது இரண்டு கைகளாலும் எங்கள் இருவரது சட்டைகளையும் கழுத்தோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு கர்ச்சித்தார், “நீங்க எவகிட்ட வேணும்னாலும் ஏத்தறதுக்குப் போங்கடா கேணப்புண்டைகளா! ஆரு வேண்டாங்கறா? ஆனா, எனக்குக் குடுக்கவேண்டிய பாக்கிய எண்ணி வெச்சுப்போட்டு அப்பறொ அடிங்கடா சவ்வாரி”

நாங்கள் நிலைகுலைந்து போனோம். எங்கள் மீனாட்சியா இப்படி? அதுவும் எங்களிடம்???? நாங்கள் அவருக்கு இதுவரை பாக்கியெதுவும் வைத்ததேயில்லையே ஐயோ?!

“சும்மா வித்தாடுபோகத் தொச்சாடு முழிக்கறாப்பல பிதுக்குப் பிதுக்குன்னு முழிச்சா முட்டும் உட்ருவனாடா சழக்கனுகளா? மொதவாரம் ஐந்நூறு, ரண்டாவுது வாரம் ஏழ்நூத்தம்பது, மூனாவுது வாரொ நானூறு, நாலாவுது வாரொ ஆயரம்…” என்று 108 வாரங்களின் கணக்குகளையும் மூச்சுவிடாமல் ஒப்பித்து முடித்துவிட்டு, “மொத்தமா ருவா இரவதாயரத்த எண்ணி வெச்சுப்போட்டு வேலை பாருங்கடா தாயோலிகளா” என்று உலுக்கினார். அந்த உலுக்கலில் நிலைதடுமாறி இருவருமே குப்புற‌விழுந்தோம். விழுந்த வேகத்தில் தரையில் மோதியிருந்தால், மூக்கு கண்டிப்பாக வெற்றிலை பாக்குப் போட்டிருக்கும். ஆனால், பலத்த அடியெதுவும் பட்டுவிடாமல் எதுவோவொரு நற்பொருள் எங்களுக்கும் தரைக்கும் இடையே ‘மெத்’தென்று கிடந்து காப்பாற்றிவிட்டது. ‘ஆபத்திலிருந்து உயிரைக் காப்பாற்றிய அந்த அரிய பொருள்தான் என்ன?’ என்ற நன்றியுணர்ச்சியுடன் சற்று எழுந்தமர்ந்து கண்களைக் கசக்கிக்கொண்டு உற்று நோக்கினோம். தமது செத்தகண்களால் எங்களைப் பார்த்துக் கெக்கலிகாட்டிக் கொண்டிருந்தன ரோகுகளும், கட்லாக்களும்!


 

எழுதியவர்

சத்தியப்பெருமாள் பாலுசாமி
சத்தியப்பெருமாள் பாலுசாமி
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த இவர், திராவிடக் கொள்கையில் மிகுந்த பற்றுள்ளவர். சென்ற ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் போது நடுகல் பதிப்பகம் மூலமாக வெளியிடப்பட்ட இவரது சிறுகதைத் தொகுப்பான 'கிளிக்கன்னி' யும், கட்டுரைத் தொகுப்பான 'பஞ்சுர்ளியும்' மிகுந்த வரவேற்பைப் பெற்றன. சென்னைப் புத்தகத் திருவிழாவை ஒட்டி, நடுகல் பதிப்பகம்‌ மூலமாக வெளியிடப்பட்ட 'கொடுங்கோளூர் கண்ணகி ஏன் தெறி பாடுகின்றாள்?' ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்றது.
Subscribe
Notify of
guest

4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
PROF. VEERAMANI
PROF. VEERAMANI
1 year ago

A very hilarious and satirical fish curry story. That meenatchi is a typical fisherwoman, find in Tamil movies. Very nice to read Nagerkovil slang. In my research days I asked Jeyamohan about the slang which is difficult to understand he said ” you can find it in Malayalam dictionary” at Tamil University seminar. You are truly picturised the happenings. Congrats keep it up friend.👍

PROF. VEERAMANI
PROF. VEERAMANI
1 year ago

Dear friend, I have read your short story. What a hilarious one, and very satirical also. the slang you used in the story is very nice to read. You pictured very well the fisher woman , one can find in the Tamil films. when in my research days at Tamil University i met Mr. Jeyamohan in a seminar when i asked him about the slang he used in the novel ‘Kaadu’ he told me to search in the Tamil dictionary compiled by I hope it was A C Chettiyar . but you very mildly used the slang in the Nagarkovil area and also in Erode etc., it is not a barrier to the readability. Keep it up and congrats comrade.

ஜெ. அறிவுச்செல்வன்
ஜெ. அறிவுச்செல்வன்
1 year ago

தலைப்பை பார்த்துவிட்டு படிக்கத்துவங்கினேன்.

துவக்கத்திலேயே ஓரளவு கதையின் போக்கும் முடிவும் என்னவாக இருக்கும் எனவும் யூகிக்க முடிந்தது.

ஒரே விடயத்தை குறிக்கும் நீண்ட உரையாடல்கள் கதையின் விறுவிறுப்பைக் குறைக்கிறது.

ஆசிரியர் தனக்கே உரிய நடையைக் கையாண்டிருக்கிறார்.

வாழ்த்துக்கள்!

You cannot copy content of this page
4
0
Would love your thoughts, please comment.x
()
x