படுத்திருந்தபடியே ஓடுகளுக்கிடையே வெளிச்சத்திற்காகப் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியில் கிழக்கு வெளுத்து வெளிச்சம் தெரிகிறதா எனக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெயம். மிகக்குறைவாக வர ஆரம்பித்திருந்த வெளிச்சத்தில் வீட்டிலுள்ள பாத்திரங்களின் விளிம்புகள் கடலோரச் சிப்பிகளாய் மெலிதாக ஒளிர்ந்துகொண்டிருந்தன.
அப்படியே கைகளைத் தலைக்கு மேலே தடவி, மூடியிருந்த லோட்டாவை எடுத்தாள். இரவு குடித்துவிட்டு மீதமிருந்த தண்ணீர் வெளியே சன்னமாக பொழிந்துகொண்டிருந்த பனியில் சில்லிட்டிருந்தது. முகத்தைச் சுழித்துக்கொண்டே அந்தத் தண்ணீரை அண்ணாந்து சிறிது வாயிற்குள் ஊற்றிக்கொண்டு, படுத்திருந்துவிட்டு சடாரென நிமிர முடியாத முதுகுடன் சற்று குனிந்துகொண்டே தாழ்ப்பாளை விலகிக்கொண்டு, வாசலுக்கு விரைந்து; வாயிலிருந்த நீரைக் கொப்புளித்துத் துப்பியவள்.
“ஏய் புள்ளை சுமதி எந்திரி எந்திரி ! கிழக்கு நல்லா வெளுத்துட்டு. அடுப்பை பத்த வச்சு ஒருவாய் சூடா வரக்காப்பி போடுபுள்ள. குளிருக்கு உடம்பு விரைச்சி போயிரும் போல. நான் அப்படியே விஜயாக்கா வூட்டு தோட்டத்தில முல்லைப்பூ பறிக்க கூப்டாங்க, போயிட்டு வந்தா ஒரு மணி நேரத்து வேலைக்கு இருநூறு ரூபாய் தருவாங்க. காசு என்ன தெருவுலையா கிடக்கு. அதுக்கு தான் நாய்படாத பாடு படவேண்டிக்கிடக்கே ! அப்படீயே அந்த அக்காட்ட கடனுக்கு கொஞ்சம் கொத்தவரங்கா, சுரைக்காய் , கத்தரிக்காய் வாங்கிட்டு வந்து, டவுனுல்ல வித்துட்டு வந்தா; மணிகண்டனுக்கு அதென்ன அட்டெம்டோ.. டொட்டம்டோ மறுபரிட்சைக்கு காசு கட்டிரலாம். எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வச்சாலும், அவனோட அப்பன மாதிரியோ பொறந்துருக்கு தறுதலை. நேத்திக்கு ஐம்பது ரூபாய் செலவு பண்ணி ஆட்டோல கூட்டிட்டு போய், அந்த டியூசன் சென்டர்ல்ல அந்த ஐயா காலுல என் பேரன எப்படியாவது சேர்த்துக்கிட்டு பாஸாக்கி விட்டுருங்கய்யா உங்க புள்ளை குட்டிங்க நல்லாருக்கும்ன்னு சொல்லி விட்டுட்டு வர்றேன்.. பின்னாடியே வந்துட்டு சனியன். பொம்பளை புள்ளைங்களா சுத்திலும் இருக்காம். காரணம் சொல்றான். அப்படீயே இங்கிலாந்து இளவரசரு . தனியா வாத்தியாரு வச்சி சொல்லிக்கொடுக்கறதுக்கு.” என சத்தமாக பேசிக்கொண்டிருந்தவளைப் இடைமறித்து “அம்மா எத்தனை தடவைமா உன்ட சொல்றது ? வாசல்ல நின்னு இப்படி கத்துறீயே! நம்மூட்டு கதைய எல்லாரும் கேக்கணுமா ? முதல்ல உள்ள வாம்மா என சலித்துக்கொண்டே படுத்திருந்த பாயை தலையணையோடு சுற்றி அங்கிருந்த மரப்பெட்டியின் மேலே வைத்த சுமதி; பல்பொடி டப்பாவை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் சென்றாள்.
கோடியக்கரை உப்பு பேக்டரிக்கு வாட்மேன் வேலைக்குச் சென்று டியூட்டி மாத்திவிட்டு அதிகாலை மூன்று மணிக்கு வந்து சுவரோரமாகப் படித்திருந்த தங்கராசு; அம்மாவும் பொண்ணும் பேசிக்கொள்ளும் சத்தத்தில் புரண்டு படுத்தவன். “ஏய் ஜெயா ! காலங்காத்தால என்னடி சத்தம் மெதுவா பேசுங்கடி” என சொல்லிவிட்டு மறுபடி உறங்க ஆரம்பித்தான். அவன் உறக்கம் கலைய எப்படியும் பதினொருமணி ஆகிவிடும்.
“ஆமாம் பெருசா சத்தம்! அப்பாருக்கும் பொண்ணுக்கும் இதான் வேலை. பேக்டரிக்கு வேலைக்கு போறாருன்னு தான் பேரு. கொண்டு வர்றது வாயிக்கும் பத்தல. வயித்துக்கும் பத்தல. நான் குடும்பத்த கரைசேர்க்கப் பேயா கிடந்து அல்லாடுறேன்” என வாய் ஓயாமல் பேசிக்கொண்டே போனவளின் பார்வை சன்னலின் வழியாகபக்கவாட்டில் அடைத்திருந்த வேலிக்குச் சென்றது. அப்படியே சுற்றிக்கொண்டு வேலிக்கு வந்தவள்.
“அடியேய் பரமேஸ்வரி வெளங்குவியாடி நீ! உன் குடும்பம் விளங்குமா ? தேவிடியா முண்டை நேத்து நான் வியாபாரத்துக்குப் போன பிறகு வேலியடைச்சீங்களே ! அப்பவே தெரியும்டி நீங்க இந்த வேலைதான் பண்ணுவீங்கன்னு ! இந்த முருங்கை மரத்துக்கு ஒரு அடி தள்ளி தாண்டி உங்கூட்டு வேலி இருக்கும். இப்ப என்னாத்துக்கு இப்படி மரத்தை ஒட்டி அடைச்சி வச்சிருக்கீங்க. அடுத்தவன் சொத்துக்கு ஆலாய் பறக்க வேண்டியது . ஏய் அங்க என்ன பண்ற? இங்க வந்து பதில சொல்லுடி” என்றவளின் குரலைக் கேட்டு நெகிழ்ந்து பிசிறிக்கொண்டிருந்த கூந்தலை, நன்கு உதறி கொண்டையைப் போட்டுக்கொண்டே அலட்சியமாக ஜெயாவைப் பார்த்தாள் பரமேஸ்வரி.
“எதுக்கு இப்படி கத்துற? என் குடும்பம் உருப்படாம போயிருமா ? உன் வாய்க்குதான், வாழவேண்டிய வயசுல புருசன கொரனோவுக்கு காவு கொடுத்துட்டு, உன் பொண்ணு ஒத்த புள்ளையோட நிக்கிறா. போ அந்தாண்ட ! காலையிலையே வந்துட்டா தூக்கிகிட்டு. இன்னைக்கு வெளில போற சோலி வேற இருக்கு. நகரு ! நான் வேலைய பார்த்துட்டு வெரசா கிளம்பணும்.” என்றபடியே ஜெயாவை சட்டைக்கூட பண்ணாது ஓரத்தில் கிடந்த விளக்குமாற்றையும், தண்ணீர் வாளியையும் தூக்கி கொண்டு கொல்லைக்கதவை படாரென சாத்தி வெறுப்பை காமித்துவிட்டு வாசலுக்கு சென்றுவிட்டாள் பரமு.
அவள் கூறிய சொற்களைக் கேட்டதும் வாயடைத்து, நிலைக்குத்திய பார்வையோடு உறைந்து சிறிது நேரம் நின்றாள். அடைகாக்கும் கோழிபோல பரமேஸ்வரி சொல்லிச்சென்ற சொற்களின் மேலேயே மனசு குவிந்துக்கிடந்தது. ‘ஜெயா. உண்மை தானே ! வாழ வேண்டிய வயசுல., வாழாம வீட்டில ஒரு பொண்ணு இருக்கறத விட கொடுமை ஏதாவது இருக்கா? சில நாட்கள்ல வேலை முடிஞ்சி குடிச்சிட்டு வந்து தனியா படுக்க தங்கராசு கூப்பிடும்போது, சத்தம் வராம பூனை மாதிரி நடந்துபோனாலும், வயிறு குழைஞ்சி, தண்ணி ஊத்தாம விட்ட முதல் நாள் சாதம் மாதிரி நொதிச்சி போயிடுது. புள்ளை முழிச்சிருந்தா என்ன நினைக்குமோன்னு செத்து சுண்ணாம்பு போயிடுது மனசு.’ என நினைத்துக்கொண்டே நின்றவள்; சேவல் கூவிக்கொண்டே இருக்கும் சத்தம் கேட்டதும், கோழிக்கூண்டைத் திறக்கச் சென்றாள்.
“ அம்மா! இந்தாம்மா குடி! ” என்று சொல்லிக்கொண்டே வரக்காப்பியை நீட்டியவளைப் பார்த்து, “ஏண்டி பக்கத்து வீட்டுக்காரி அந்தப்பேச்சு பேசுறா. நீ வூட்டுக்குள்ள என்ன பண்ணுன? ஒருக்கைக்கு ஒத்தாசையா வந்து நிற்க வேண்டியது தான!” என்பவளை பார்த்து
“அம்மா சிலிண்டர் நேத்தியே கொண்டு வந்தாங்க. காசு இல்லாம திருப்பி விட்டுட்டேன். ஈர விறகோட நானே அல்லல்படுறேன். நீ ஏம்மா அங்கப்போய் வாயக்கொடுக்கிற?” என எங்கேயோ பார்த்தப்படி தன்னை அதட்டுகிறவளின் கண்களைச் சற்று இறக்கி கீழ்ப்பார்வையாக கூர்ந்துப்பார்த்தாள் ஜெயம். யாராவது ஜெயத்திடம் வம்புக்கு வந்தாள் கோழிக்குஞ்சை திருடும் கழுகைக் கொத்திக் கொத்தி பறந்து விரட்டும் தாய்க் கோழியாய் சீறுபவள், ஏன் இப்படிப் பம்முகிறாள். என்னாச்சு? என யோசித்தபடி வரக்காப்பியை வாங்கி குடித்தவளுக்கு இதமாக இருந்தது.
‘எத்தனை பெரிய துக்கமும் ஒருநாள் அதிகபட்சம் இரண்டு நாள் பசித்தாங்கும். அப்பறம் வெக்கங்கெட்ட ஈரக்குலை தொண்டைய நனைச்சிக்க, எதையாவது தின்னத்தான் பாக்கும். எப்ப பசியும் தூக்கமும் மரத்துப்போகுதோ; அப்ப மனுசன் மனுசனா இருக்க மாட்டான்.சித்த பிரமை பிடிச்சி திரிய ஆரம்பிச்சிடுவான். இது இரண்டு தான் உணர்வோட இருக்கோங்கறதுக்கு பிரதானம்’- ன்னு நினைத்துக்கொண்டே அடியில தூளோட தங்கியிருந்த கொஞ்சூண்டு வரக்காப்பியை சுவரோரமா குவித்து வைத்திருந்த மணலில் ஊற்றியவள்; கொட்டகையில் மடித்து சொருவியிருந்த சிமெண்ட் சாக்கையும், நீல சௌதால் பையில சுருட்டி வச்சிருந்த வெத்தலைப்பாக்கையும் எடுத்துக்கிட்டு, மேற்கு பக்கமாக.. இன்னும் பனி விலகாமல் தூரத்திலேர்ந்து பார்ப்பதற்கு மேகம் பரவிய மலைமாதிரி தெரிந்த சவுக்கு தோப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
“கண்டக்டர் தம்பி! கோச்சுக்காம வடக்கு வீதிக்கு முன்னாடியே நிப்பாட்டிடுங்க. தலைச்சுமை அதிகமாக இருக்கு. பஸ்டாண்டுலேர்ந்து நடந்து, வீதியில வந்து; காய்கறி விக்கணும்பா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விசிலை ஊதி வடக்குவீதி முனையில் பேருத்தை நிப்பாட்டி இறக்கிவிட்டார்கள். காய்கறி மூட்டையை தலையில் வைத்தவள்; வேகமாக நடக்க ஆரம்பித்தாள். எதிர் வெயில் அடிக்க ஆரம்பிக்கும் முன்பே தெரு வீதிகளில் காய்கறியை விற்றுவிட்டு கிளம்பிவிடவேண்டும். இல்லையெனில் முகத்தில் வெயில்பட்டுக் களைப்பாகி தலைச்சுமையோடு வெறும் வயிற்றில் இருப்பது மயக்கம் வருவது போலாகிவிடும்.
தெரு முனையில் நின்றுகொண்டு கோயில் வாசலை எட்டிப்பார்த்தாள் ஜெயா. கோவிலின் இருபுறங்களிலும் பெண்கள் காய்கறிகளை அடுக்கி விற்பனையைத் தொடங்கியிருந்தனர். அவர்கள் நாள் பூராவும் கோவில் வாசலில் அமர்ந்து விற்பனை பார்ப்பவர்கள். சொந்தமாக வீட்டில் காய்கறிகளைப் பயிர்செய்து கொண்டு வந்து விற்பவர்கள். இவளே கடனுக்குக் காய்கறி வாங்கிவந்து விற்கிறாள். ஐந்நூறு ரூபாய்க்குக் காய் விற்றுத் தந்தாள் எனில், ஐம்பது ரூபாய் கிடைக்கும்.வீட்டுக்குள்ளே இருப்பவர்கள் எளிதில் வெளியே வந்துவிடமாட்டார்கள் வாசலில் நின்று ’அம்மா காய்கறி ! காய்கறி’ எனக்கூவிக்கொண்டே நிற்க வேண்டும். சில வீடுகளில் என்னமோ பிச்சைக்காரர்களை விரட்டுவது போல விரட்டுவார்கள்.
இது போதாதென, வயதான குண்டுக்கிழவன் போல் இருபுறமும் கன்னங்கள் தளர்ந்து தொங்கிக்கொண்டிருக்கும் ஆளுயர நாய் வேறு நாக்கை ஒரு முழத்திற்கு நீட்டிக்கொண்டு கேட்டுக்குள்ளே படுத்திருக்கும். ‘டாமி ஒன்றும் செய்யாது உள்ளே வா! ’ என்பார்கள். ஐந்து ரூபாய் வருகிறதேயென உள்ளே சென்றால், நாய் பக்கத்தில் போனதுமே , அது சற்று எழுந்து ‘உர்’ரென்று உறுமியபடி இவளைப் பார்க்கும். ஒவ்வொரு தடவை அதைக் கடக்கும் பொழுதெல்லாம் வேர்த்து தொடையெல்லாம் நனைந்துவிடுகிறது.
“அக்கா! செல்வி அக்கா! நல்ல அளவா எலுமிச்சைப் பழம் இருக்கு. நேத்து கேட்டீங்களே ! வாங்கிக்க உங்க கையால எதையாவது வாங்கி போணி பண்ணிவிடுங்கக்கா.” என்று அந்த தெருவின் பெரிய வீட்டின் முன்பு நின்றுகொண்டு வியாபாரத்தை ஆரம்பித்தாள் ஜெயா.
இன்று சிறிது காய்கள் மீந்து போய்விட்டது. ஆறுகாட்டுதுறைக்கு சென்றால் விற்றுவிடலாம். ஆனால் தாயம்மா வீடு தாண்டித்தான் போக முடியும். போனவாரம் தாயம்மா வீட்டு வாசலில், காய்ந்துகொண்டிருந்த கருவாட்டைப் பார்த்துவிட்டு நாக்கு ஊறியது ஜெயாவுக்கு. வெள்ளிக்காசுகள் போல வெயிலில் பிளால்கள் மின்னிக்கொண்டிருக்க வெள்ளாம் பொடிக்கருவாடு காய்ந்துகொண்டிருந்தது. வெக்கத்தை விட்டு கடன் கேட்டு நூறு ரூபாய்க்கு கருவாடு வாங்கிவிட்டாள். இன்னும் அதைத் திருப்பித்தரவில்லை. அதனாலேயே ஒருவாரமா ஆறுக்காட்டுத்துறைப்பக்கம் காய்கறி விற்கச் செல்லாமல் இருக்கிறாள் ஜெயா.
அப்படியே எஞ்சியிருந்த காய்கறிகளைச் சுருட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு, அதிகச் சுமை தூக்கியதால் மரத்துப்போயிருந்த கைகளை உதறி விட்டுக்கொண்டே மளிகைக்கடையில் வீட்டுக்குத் தேவையான பருப்பு, எண்ணெய், சிறிது புளி சொல்லிவிட்டு வாசலின் ஓரமாக குத்துக்காலிட்டு அமர்ந்தவளுக்கு கால்கள் வலித்தன. மெதுவாக முட்டியை அமுக்கிக் கொண்டிருந்தவளுக்கு எதிரே டீக்கடை கண்ணில் பட்டது. சூடாக பால் டீயும்,.வெளியே சற்று சிவந்து மொறுமொறுப்பான வடையும் சாப்பிடவேண்டும் போலத் தோன்றியது.
இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப்பையை எடுத்து பணம் எண்ணியவளுக்கு, மனம் சடாரென மாறியது. வேணாம் நாளை குடித்துக்கொள்வோம் எனச் சுருக்குப்பையின் கயிற்றை இழுத்தாள். அது அழகாகக் குவிந்த தாமரை மொட்டாய் குவிந்துகொண்டது. ஏன் மனங்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. அரை மணி நேரத்திற்குக் கூட எண்ணங்களும் ,மனிதர்கள் மேல் வைத்திருக்கும் அபிப்ராயங்களும் நிலையாகவே இருப்பதில்லை.
வெயில் ஒரு வேட்டைப்புலியின் ஆக்ரோசத்தோடு, கூரிய நகங்களால் தென்படுவோரை கிழித்துவிடும் ஆவேசத்தோடு பொழியத் தொடங்கியிருந்தது. செம்மண் பாதையில் கால்களை வைத்ததும், மெல்லிசான மணல் புழுதிப்படலமாக எழுந்து, பின் வீழ்வதுமாக ஜெயா வேகமாக நடந்துக்கொண்டிருந்தாள். இன்று சீக்கிரம் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். பசி வயிற்றை எலி போல் சுரண்ட ஆரம்பித்திருந்தது. ‘இந்நேரத்தில் வீட்டில் சுமதி மட்டும் தான் இருப்பாள். அவளும் இருக்கிறாளா? குளக்கரைக்குக் குளிக்கப் போயிருப்பாளா எனத் தெரியவில்லை. தங்கராசு வேலைக்குப் போயிருப்பான். மணிகண்டன் கம்மாகரை மதில் சுவரில் அமர்ந்து, உருப்படாத தறுதலையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து செல்போனில் எதாவது செய்துகொண்டிருப்பார்கள். அரை கிராமாவது தங்கம் வாங்கலாம் எனச் சேர்த்து வைத்திருந்த காசில் செல்போன் வேண்டுமென அழுது சாப்பிடாமல் கிடந்து வாங்கியது. அந்தப்போனில் அப்படி என்னதான் இருக்கோ, இப்ப உள்ள பிள்ளைகளுக்கு ஒரு நிதானமே இல்லாமல் இருக்கிறது. எல்லாம் இந்த போனாலதாம். சரி இன்னைக்கு குளிக்கெல்லாம் முடியாது போல, போனதுமே சாப்பிட்டு சித்த நேரம் படுக்கணும்.ரொம்ப களைப்பாக வருகிறது’ என்று எண்ணியபடியே கட்டை விரலும், குதிக்காலும் அழுத்தி அழுத்தி ஜெராக்ஸ் காகிதத்தின் நீல நிற அச்சுப்போலத் தேய்ந்துப் போயிருந்த செருப்பை உதறிவிட்டு கதவில் கைவைத்தவளுக்கு; ஆணும் பெண்ணும் முயங்குதலின் ஒலிக்கேட்டது.
‘அடிபாவி முண்டை! ’ என ஆங்காரமாகக் கத்த வாய் எடுத்தவள் அப்படியே விரல்களால் வாயைப் பொத்திக்கொண்டு வராந்தாவை விட்டு வெளியே வந்தாள். ‘ஊர் உலகத்துல இல்லாததையா என் பொண்ணு பண்ணிட்டா. இதுல என்ன தப்பு வேண்டிக்கிடக்கு. வாழவேண்டிய வயசுல தரிசு நிலமாகிடக்கிறவ, எப்படியாவது ஒரு மழை பெய்துடாதான்னு ஏங்குவா தான!’ என எண்ணிக்கொண்டே வந்தவளின் கண்களில் ஓரமாக உருண்டுக்கிடந்த சப்போட்டா பழம் பட்டது. அதை எடுக்கக் கூடத்தோணாமல், ஏது இது ? நமது பகுதியில் இதுக் கிடைக்காதே என குழம்பிய மனநிலையோடு நடந்து வந்தவள். அப்படியே பக்கத்து வீட்டுத்திண்ணையில் அமர்ந்தாள் “ஏ பரமு ஒருவாய் தண்ணித்தா !காலையில எதோ ஆத்திரத்தில பேசிட்டேன் மனசுல வச்சிக்காத, சுமதி குளக்கரைக்குக் குளிக்க போயிட்டு போல வீடு பூட்டிருக்கு. மயக்கமா வருது.”
லோட்டாவில் தண்ணீரைத் எடுத்துக்கொண்டு வந்து “இந்தா அக்கா குடி .உன் மனசு தெரியாதா? எதாவது ஒண்ணுனா நீ தான் முன்னாடி வந்து நிப்ப” இன்னைக்கு சமைக்கல. மருமக ரேணுவோட அக்காவுக்கு வளைகாப்பு. அதான் நானும் சுரேஷ்சும் பைக்குலையே போயிட்டு வந்துட்டோம். அங்க வரிசைத் தட்டுல நிறைய சப்போட்டா பழம் வச்சிருந்தாங்க. ரேணு எங்களுக்கு கொடுத்துவிட்டா, அவ இரண்டு நாள் தங்கிட்டு வர்றேன்னு சொன்னா, இந்தா இந்த சப்போட்டா பழத்தை தின்னு. பசி அடங்கும். இந்த சுரேஷ் பய என்னை அவசரமா இறக்கி விட்டுட்டு போயிட்டான். எங்கன்னே தெரியல. கரண்ட்பில் கட்டணும் இன்னைக்கு தான் கடைசி தேதி.” என்று சொல்லிக்கொண்டே போனவளைப் பார்த்துக்கொண்டே, ஏதோ புரிந்தவாறு தலையாட்டிக்கொண்டு பழத்தைத் தின்ன ஆரம்பித்திருந்தாள் ஜெயா. பழம் சற்று அடிபட்டு நசுங்கியிருந்தது. அதனாலென்ன? பசிக்கிறதே !
எழுதியவர்
-
வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர்.
பல்வேறு அச்சு / இணைய இதழ்களிலும் கவிதைகளை எழுதி வருபவர். ‘நெய்தல்நறுவீ’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இதுவரை.
- சிறுகதை11 November 2024விளம்பரம் எழுதிய வீடு
- கதைகள் சிறப்பிதழ் 202326 August 2023நெடுந்துணை
- சிறுகதை24 April 2023கைப்புண்
- சிறுகதை28 February 2023வாதை
சிறந்த கதை. வார்த்தை தேர்வுகளில் மேலும் கவனம் செலுத்தினால் இவர் சிறந்த கதாசியராக வலம் வருவார்
சிறுகதையை முடித்த விதத்தில் இந்த கதை அற்புதமாகிறது. வாழ்த்துகள் தேவி