27 November 2024
kaviji story

எங்களுக்கு எல்லாம் மறந்திருந்தது. எங்களுக்கு எல்லாமே நினைவிலிருந்தது.

வாடை காற்றின் மிச்சம் பூக்களாய் உதிர்ந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே நண்பர்கள், தோழிகள், காதலர்கள் என்று கல்லூரி மைதான முகப்பு மரங்களிடையே மௌனம் பூத்து கொண்டிருந்தது. நானும் சுரேவும் பேச்சற்று அருகருகே அமர்ந்திருந்தது.., இப்போது நினைத்தாலும்.. அது அந்த ஒரு நாளின் சாட்சி தான்.

அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று ஒன்றும் தோன்றவில்லை. நண்பர்கள் சேது, கமல், பாலா என்று ஆளுக்கொரு ஸ்லேபில் அமர்ந்து எக்ஸாம் முடிந்த கதை… நாளையில் இருந்து இந்த கல்லூரிக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இருக்க போவதில்லை என்று… பேசியும் பேசாமலும்… மௌனித்தும் முணங்கியும் என்று… ஒரு சிதறி விட்ட வண்ண கோலம் போல தான் இருந்தது சுரேவிடம் இருந்து பார்வையை எடுத்து சுழன்ற எனக்கு.

இந்த கதையை எங்கிருந்து ஆரம்பிப்பது.

உள்ளங்காலிலும் இதயம் துடிப்பதை உணர்ந்தேன். உள்ளத்தின் கதறல் என் காதுகளில் ‘ம்ம்ம்ம்’ என்ற மதிய நேர இரைச்சலாய் மிதந்து கொண்டிருந்தது. மதிய வெயிலில் மஞ்சள் நிலவென என் அருகே சுரே. குட்டி முகத்தில் மொட்டு கண்கள் விரிய… கண் மையில் என் பிம்பம் மின்ன பார்த்துக்கொண்டே இருந்தாள். சொல்லி விட ஆயிரம் இருக்க… சொல்லாமல் இருக்க ஒரே ஒரு காதல் எங்களிடம் இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை உள்ளே நடக்க ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் தொண்டர்கள் போல என் நண்பர்கள் எங்களை சுற்றி பரபரத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாங்களோ ஓர் அர்த்த ராத்திரியை சுமந்து கொண்டு அழ முற்படும் முன் எச்சரிக்கையோடு அமர்ந்திருக்கிறோம்.

நீல நரம்புகள்… பச்சை வண்ணம் பூசிக் கொண்டு ஸ்லேபில் ஊன்றியிருக்கும் அவள் கையில் கோட்டோவியம் வரைந்து கொண்டிருந்தன.

மெல்ல தொட்டு பார்த்தேன்.

“என்ன கிள்ளனும் போல இருக்கா…” என்று வழக்கமாக கேட்கும் வசனத்தை சொல்லி… ஆரஞ்சு சுளை விரிந்தது போல இதழ் விரித்தாள். றோஸ் நிறத்தில் ஒரு அது ஒரு ஃபிரீஸ் டைம்.

நான் சுரேவை பார்த்ததே சுவாரஷ்யமான கதை தான்.

5த் செமஸ்டர் கடைசி எக்ஸாம். நண்பன் கமலுக்காக எக்ஸாம் ஹால் வாசலில் காத்திருக்கிறேன். நான் சீக்கிரமே எழுதி முடித்து விட்டேன். அவன் பக்கத்து வகுப்பில் எழுதிக் கொண்டிருக்கிறான். அதனால் அந்த வாசலில் தடுப்பு கம்பியில் சாய்ந்து நின்றபடி… உள்ளே அவ்வப்போது எட்டி பார்த்து கொண்டிருக்கிறேன். கமலுக்கு பின்னால் ஒரு புள்ள என்னை ஏதேச்சையாக பார்த்தது. பச்சை உடையில்… குட்டி முகத்தில்… அழுந்த திருத்திய இமைகளில்… கண்களில்…கண்மை படற… நொடியில் அந்த அறையில் அமர்ந்திருந்த யாவரும் ப்ளர் ஆகிவிட… அவள் மட்டும் நடுவினில் ஓர் ஓவியம் சமைத்தாள். நளினமாய் ஒரு சாமி சிலை போல இமைத்தாள்.

எனக்கு யோசனை. “யார்ரா இது…? ஜுனியர் புள்ளயா…! இதுவரை பாத்ததில்லையே…?!”

நான் நன்றாகவே கூர்ந்து பார்த்தேன். நான் பார்ப்பதை ஒரு நொடியில் உணர்ந்து விட்டவள்… சட்டென பேப்பரை கட்டிக் கொண்டே குனிந்து விட்டாள். ஆனாலும் அவள் கண்கள் மெல்ல மேலெழுந்து என்னை ஒரு கணம் சிமிட்டின. பட்டென அந்த இடைவெளியில் நாக்கை கடித்து… ன்ன… ன்ன.. என்பது போல பொய்யாக மிரட்டினேன். ஐயோ என்று தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளும் ஆமையைப் போல நன்றாக குனிந்து கண்களை இன்னும் குறுக்கி கொண்டாள்.

நான் சிறு புன்னகையை என்னையும் அறியாமல் உதிர்த்து… மீண்டும் எட்டி பார்த்தேன். புருவம் தூக்கி நமட்டை கடித்தபடியே ஒரு குறு குறு பரு இதயத்தில் முளை விட … விடவே…சடசடவென கனவை கலைத்தது போல கமலின் குரல். பிறகு கிளம்பி விட்டோம். இந்த மாதிரி இந்த மாதிரி என்று சொன்னேன்.

“அப்பிடி யார்ரா அது…. எனக்கு பின்னாலயா.. நான் கவனிக்கலயே…” என்றான்.

இப்போ என்னன்னா… இன்னையோட செமஸ்டர் முடிந்து விட்டது. இனி 20 நாட்களுக்கு லீவு. 21ம் நாளில் தான் அவளை காண முடியும். யார் என்று கண்டு பிடிக்க முடியும். அயர்ச்சி வெயிலிலும். என்னை தான் வியர்வையாக சொட்டியது.

வழக்கம் போல பிரகாசம் பஸ் ஸ்டாப்பில் 11ம் நம்பர் பேருந்துக்காக காத்திருந்தோம்.

நெடு நெடுவென வேக வேகமாக நடந்து எங்களை கடந்து கொண்டிருந்தாள் எங்கள் கிளாஸ் தோழி சுபா.

அட நம்ம சுபா என்று நாங்கள் உற்சாகத்தில்…” ஏய் சுபா… என்ன இவ்ளோ வேகம்.. அதுவும் இந்த பக்கம் எங்க….? என்று கேட்க கேட்கவே அவளுக்கு வலது பக்கத்தில் குட்டியாக ஒருத்தி சுபாவின் உயரத்தில் மறைந்து சென்று கொண்டிருந்ததையும் காண முடிந்தது. கும்பிட போன சாமி கிளி பச்சை கலர்ல சுடி போட்டுக்கிட்டு குறுக்க வந்தா… அது எத்தனை ஆனந்தமாக இருக்கும். அடிவயிற்றில் இருந்து அத்தனை சிலிர்ப்பு.

“மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே…” பாடலில் சாலையில் ஃப்ரீஸ் ஆகி பிறகு ஸ்லோ மோஷனில் ஆடிக்கொண்டே பிரபுதேவா போவாரே… அப்படி ஆடிக்கொண்டே போக வேண்டும் போல தோன்றியது.

“ஏய் சுபா… இது யாரு…?” என்று கண்களாலே கேட்டேன். ஆர்வம் என் முகத்தில் புன்னகையை கொட்டியது. தேடாமல் கிடைத்த தேடியது திக்கு முக்காட செய்தது. அவளைப் பார்த்துக் கொண்டே….”   ஏய்ய்… இங்க இங்க இங்க பாரு…” என்பது போல செய்து கொண்டிருந்த ஜாடை அந்த காட்சியை இன்னும் அழகாக்கியது.

அவள் சுபாவின் கையை சுரண்டினாள். குழந்தை தன் அன்னையின் கையை சுரண்டி சொல்லாமல் சொல்லுவதற்கு இணையாகவே இருந்தது அது.

“ஓஹ்… நீதானா அது… நாக்கை கடிச்சு மிரட்டுனது…” சுபா திடும்மென விழித்தவள் போல பேசினாள். சொல்லி இருப்பாள் போல.

“அட விளையாட்டுக்கு பண்ணேன்ப்பா…..” பேசும் போதும் என் கண்கள் அவளை சுற்றி தான் இருந்தது. அதே பேச்சு வாக்கில்…” ஆமா இது யாரு…?” என்றேன்.

சில நொடிகள் என்னை உற்றுப் பார்த்த சுபா… போடா என்பது போல ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு… “டேய் சும்மா விளையாடாத.. சுரையாவ நிஜமா உனக்கு தெரியாது….!?” என்று கேட்டாள். அதே நேரம்…கமலையும் பாலாவையும் அதே கேள்வியோடே பார்த்தாள். நிஜமாகவே எனக்கு அவள் யாரென்று தெரியவில்லை.

என் தடுமாற்றத்தை உணர்ந்தாளோ… சினிமாவுக்கு நேரமாச்சு என்று அவளாகவே முடிவுக்கு வந்தாளோ…  “நம்ம பி கிளாஸ் டா…” என்று சொல்லி அவளை பார்த்து…” ஏய்… ஒளியாத… முன்னால வா…” என்று இழுத்து…. “இவுங்களை பார்த்தது இல்லையா….” என்றாள்…மூவரையும் பொதுவாக காட்டி.

 

சுபாவுக்கு ஆச்சரியம். என்னடா நடக்குது என்பது போல கமலும் பாலாவும் பார்த்தார்கள்.

 

தெரியும் என்பது போல தலையை ஆட்டினாளா… தெரிஞ்சுக்கறேன் என்பது போல தலையை ஆட்டினாளா… தெரியவில்லை. ஆனால் அவள் காதோரம் அசைந்த சுருள் முடி நன்றாக இருந்தது.

“நான் பாத்திருக்கேன்.. ஆனா பேர் தெரியல” என்று கட்டை மீசையை தடவியபடியே பாலா சொன்னது… எங்கோ தூரத்தில் பாலைவனத்தில் கேட்பது போல இருந்தது எனக்கு. போங்கடா என்பது போல் எல்லாரையும் பார்த்து விட்டு.. பிறகு பரஸ்பர அறிமுகம் நடத்தினாள் சுபா. ஆனால் எனக்கு இன்னுமே பயங்கர ஷாக் தான். எப்படி இப்படி ஒருத்தியை ரெண்டரை வருஷம் பாக்காம மிஸ் பண்ணினேன்.

“சரி எங்க…?” என்றோம்.

“அர்ச்சனா தர்ச்சனால ‘அஞ்சாதே’ படத்துக்கு..” என்றாள் சுபா. கள்ள பார்வை சுரையாவிடம். ஆனாலும் நல்ல கண்கள் அவைகள். விடுறா ஜூட் என்று நாங்களும் அஞ்சாமல் சேர்ந்து கொண்டோம்.

திரை வெளிச்சத்தில் வண்ணங்கள் சூழ றோஸ் நிற பெரிஸ் என ஒரு வளர்ந்த குழந்தையை போல தெரிந்தாள். சுபா துரோகி. அவளுக்கு அந்த பக்கம் உட்கார வைத்துக் கொண்டாள். பிறகு இடைவெளி பப்ஸ். பிறகு… படம் முடிய டாட்டா பை பாய். சரியாக பேச முடியவில்லையே தவிர நன்றாக பார்த்துக் கொள்ள முடிந்தது. பார்க்கும் போதெல்லாம்.. ஒரு நளின புன்னகை மட்டுமே. வெட்கம் சூழ் வெள்ளரி பிஞ்சு அவள்.

அடுத்த 20 நாட்களும் சிறையிலிருந்தன. ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு சுமையை இறக்கி வைத்துக் கொண்டிருந்தேன்.

21 ம் நாள் காலையில் சீக்கிரமாகவே கல்லூரிக்கு சென்றிருந்தேன். எண்ண ஓட்டம் வேலை செய்து விட்டதோ என்னவோ… அவள் ஏற்கனவே வந்திருந்தாள். அவள் வகுப்பில் ஜன்னல் கம்பிகளை பற்றிக் கொண்டு வெளியே நின்றபடியே…” ஹே  சுரே..எப்டி இருக்க… லீவெல்லாம் எப்டி போச்சு…?” என்று கேட்க… காத்திருந்த கண்களை வெற்றிடத்தில் இருந்து வேகமாய் ஜன்னல் பக்கம் திருப்பியவளுக்கு முகம் முழுக்க புன்னகை. சிறு வெட்கம் கிளி கழுத்தில் நெளிந்தது.

ம்ம்ம் எழவே இல்லை. இருந்தும் தொண்டையில் இருந்து கொப்பளிக்கும் தேன் துளி போல… ஒரு கரகரவை சரி செய்தபடியே…”ம்ம்ம் நல்லா இருந்துச்சுங்க” என்றாள். ‘உங்களுக்கு’ என்று அதன் தொடர்ச்சியை மிக மெல்லிய உதட்டசைவில் கேட்டாள். தொடர்பற்று பேசி… தொடர தொடர பேசி… தொடர்போடும் பேசி…20 நாளையும் மொத்தமாக இறக்கி வைக்க அந்த கொஞ்சம் நேரம் போதவில்லை. நாக்கு கடித்தது… பொய் மிரட்டல்… திக் திக்கென்று கண்களை மட்டும் சுழற்றி சுழற்றி பதிலுக்கு பார்த்தது… என்று எல்லாம் எல்லாம் நினைவாடிய பொழுதானது.

புன்னகையும் சிரிப்புமாக… பேச்சும் மௌனமுமாக…  பிறகு தினம் தினம் தினம் அப்படித்தான். வாகாக அது ஒரு வழக்கத்துக்கு வந்திருந்தது.

“ம்ம் வந்துட்டான்டா வாட்ச்மேன்” என்று பார்க்கும் போதெல்லாம் வஞ்சம் நிறைந்த பார்வையோடு அஸ்ரத் அலி கிண்டல் அடிப்பான். பூனை கண்களில் நெக்குருகும் பொறாமை மின்னும்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சைடில் முனங்கி கொண்டே ஓரக்கண்ணில் பார்த்து விட்டு நகரும் அவனை சுட்டிக்காட்டி…”உங்களை அப்பிடி திட்டுவா இவன்… அவங்கூட ஏதும் பிரச்சனையா…” என்று கேட்டு புருவம் வியக்க பார்ப்பாள்.

“இவ்ளோ அழகான ஒருத்தி கூட நான் பேசறது அவனுக்கு பொறாமை..” என்பேன். என்னவோ அவன் மீது எனக்கு கோபம் வந்ததே இல்லை. அவன் என்னை திட்டும் போதெல்லாம் நாங்கள் அவனை கிண்டல் பண்ணி ரகசியமாய் சிரித்துக் கொள்வோம்.

முந்தின நாள் எழுதிய கவிதையை படிக்க கொடுப்பேன். அடுத்த நாளுக்கும் எழுதேன்  கவிதை என்பது போல படித்து ரசிப்பாள். அல்லது ரசித்து படிப்பாள். வரிக்கு வரி பாராட்டு தான். படியேறி மனம் குளிர மலை உச்சி போவது போல இருக்கும். நாளொரு நிலவு கூடும் எங்கள் ஜன்னல் வெளியில். காலை மதியம் இடைவேளை மாலை என்று முப்பொழுதும் எங்களுக்கிடையே ஜன்னல் கம்பிகள் பட்டாம் பூச்சி பிரசவித்துக் கொண்டே இருந்தன. இடையே காலேஜில் ஒரு ஸ்ட்ரைக் வேறு. எல்லாரும் போராட்டம் பண்ணிக் கொண்டிருக்க… நாங்கள்… பூக்காடு பண்ணிக் கொண்டிருந்தோம்.

“நீ என்னை விட ரெம்ப ஷார்ட்ல்ல” என்று கேட்ட மறுநாள் அவள் ஹீல்ஸ் போட்டிருந்தாள். இப்போ பாரு… உன் கண்கள் இன்னும் பக்கமா தெரியுது என்று ஒரு பார்வை. ஒரு கவன ஈர்ப்பு. நான் நீண்ட நேரத்துக்கு பின் தான் உணர்ந்தேன். உண்மையில் அந்த உணர்தல் தேன்.

” ரைட் சைட் வகிடு எடுத்து தலை வாருவது பிடிக்கும்…” என்றேன். மறுநாள் நெற்றியை நீட்டி நீட்டி பேசினாள்.

சற்று நேரத்தில் உருது வெளியில் வரைந்த சித்திரம் போல கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.

“வலது வகிடெடுத்திருக்கிறாய்

உருது பூக்களுக்கு

எங்கு போவேன் .”

முனங்கினேன். அது முட்டி கொண்டு வந்து விட்டது. வெட்கம் தாங்காமல் தேங்க்ஸ் என்றாள். பழைய வசனம் என்றாலும்… பழ ரச வசனம்.

 

ப நெற்றியில் பவளம் வளைந்தது போல சுருள் முடி. கன்னத்தில் மினுங்கும் பூனை முடிகளை காற்றசைக்கும் முன்னே என் கண்ணசைக்கும்.

நீலவான வண்ணம் பிடிக்கும் என்றேன். நிற்கும் வானம் பார்த்ததாக சொன்னாள்.

“அது என்னவோ தெரியல… உங்கள வாங்க போங்கன்னு தான் பேச வருது” என்றாள். ஒவ்வொரு சொல் முடிவிலும் ஒரு சிரிப்பிருக்கும். ஆரவாரமற்ற அமைதியான ஒரு நதியை அவள் நடையில் காணலாம். நாட்கள் ஒவ்வொன்றும் ஆசீர்வதிக்கப்பட்டன.

அவன் ஜன்னலில் தென்றல் செய்து கொண்டிருப்பான் என்று நண்பர்களும்… என்னை கண்டும் காணாமல் விட்டார்கள். அடுத்த ஆறு மாதம் ஆறு நாட்களென ஓடி விட்டது. இதோ இப்போது எல்லா எக்ஸாமும் முடிந்து பிரியும் தருணம்.

எதை எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பது…

“எத்தனை காதலை கடந்திருப்பேன்… இப்படி என் மனம் துடித்ததில்லை… இமயமலை என்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை….நீ வருவாயோ.. தன்னை தருவாயா…” உள்ளே ஒரு காதல் மன்னன் எறும்பு கால்களால் ஊர்ந்து கொண்டிருந்தான். தலைகீழ் மலையில் தனியாய் இறங்கி கொண்டிருந்தான்.

என்ன பேசினோம் என்று தெரியவில்லை. ஏதாவது பேசினோமா என்றும் தெரியவில்லை.

“சரி போன் பண்ணுங்க… யார் எடுத்தாலும்… தைரியமா சுரே இருக்கான்னு கேளுங்க.. யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க… டைம் ஆச்சு.. கிளம்பறேன்..” என்று எழுந்தாள். உள்ளே மடை திறந்து ஒரு பாவப்பட்ட சிறு பிள்ளையின் பசித்த நடுக்கம்.. பிரவாகமெடுத்தது. என்னவோ இந்த உலகமே இன்றோடு முடிவது போல ஒரு பதற்றம். அவள் எங்கோ பார்த்து கொண்டே…. “தொடர்ந்து கவிதை எழுதுங்க… உங்களுக்கு நல்லா வருது… சீக்கிரம் பெரிய ஆளா ஆகுங்க.. . நான் பிரார்த்திப்பேன்…” என்றாள். அவள் காது சிவந்திருந்தது.

எந்த நொடியில் கிளை விட்டதோ பறவையின் கால்கள். அவள் கிளம்பி விட்டாள். நான் நொறுங்கி விட்டேன். அவள் போகும் சாலையை பார்த்துக் கொண்டே நின்றேன். மதிய வெயில் அனல் அடிக்க ஒரு மினுமினுக்கும் நீல வண்ணத்தில் ஒரு சிறு பூச்செடி அசைந்து அசைந்து நகர்வது போல இருந்தது அவளின் தனித்த நடை. ததும்பும் மீன் தொட்டியில் சிறு கடலென ஒரு கற்பனை வறட்சி எனக்கு.

“போடா லூசு.. லவ்வ சொல்வானா… தாடியை தடவிட்டு இருக்கான்…” பாலா கத்தினான்.

“கண்டிப்பா அவ உன்ன லவ் பண்றாடா….” கமலும் இடையே அவன் கருத்தை வைத்தான்.

சேது… பதறினான். “போடா… போய் சொல்லு… அவ வேண்டான்னு சொன்னா கூட பரவால்ல.. லவ் சொன்ன திருப்தியாவது இருக்கும்… அப்புறம் என்ன மாதிரி எதுவுமே சொல்லாம எல்லாம் போயி…புலம்பிட்டு இருக்கனும்… சொன்னா கேளு….”

ஒவ்வொருத்தரும் என் காதலை ஊதி ஊதி பெரிதாக்கிக் கொண்டே போனார்கள். மனதுக்குள் இனம் புரியாத விம்மல். சொல்லி… இல்லன்னு சொல்லிட்டானா… இத்தனை நாள் பழகினதெல்லாம் வலி கூடிய இறுக்கமா மாறிடுமே… மனதுக்குள் போராட்டம். அவளுக்கும் காதல் இருந்திருந்தா சொல்லி இருப்பா தான….

“நீ பையன்… நீயே இப்படி தயங்குற.. அவ ரொம்ப பயந்த புள்ளடா…” சுபா தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள். “இதுக்கு தான் அப்பவே சொன்னேன்.. அளவா  இருங்க அளவா இருங்கன்னு…” அவளாகவே புலம்பினாள்.

திடும்மென எல்லாரையும் விலக்கிக் கொண்டு முன்னே வந்த அஸ்ரத் அலி… எப்பவும் ஜாடை மாடையாக திட்டுகிறவன்… வந்து தோள் தொட்டு…என்னை முறைத்து பார்த்தான். பாறை அசைவது போன்ற அவன் முகத்தில் கண்கள் மட்டும் ஈரத்தில் மினுங்கின.

“ஒவ்வொரு நாளும் மதியம் நீ எப்படா வருவன்னு ஜன்னலயே பாத்துட்டுருப்பா… எத்தனையோ நாள் நீ வர்றது தெரிஞ்சதும்… சாப்ட்டுருக்கறத பாதிலேயே மூடி வெச்சுகிட்டு ஜன்னல்கிட்ட ஓடி வந்துருக்கா… தெரியுமா.. கண்டிப்பா அவ உன்ன லவ் பண்றா… போ போய் தைரியமா லவ் சொல்லு.. தினமும் ஜன்னல் பக்கம் வந்து நின்னு நின்னு எங்க கிளாஸ் அழகு புள்ளய ஆட்டைய போட தெரிஞ்சுதுல… போய் லவ் சொல்லி அவ கூட சேர்ந்து வாழு ” என்றான்.

கண்கள் கசிய… கட்டிக் கொண்டேன்.

சரி… இன்னதென தெரியாத இறுதி காட்சியை அதன்படியே நகர விடுவோம் என்று அவள் சென்ற சாலையில் ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஓட ஆரம்பித்தேன்.

“ஐயோ இந்த எம் சி இந்த நேரம்னு பார்த்து வண்டிய எடுத்துட்டு சரக்கு வாங்க போய்ட்டானே….” பாலா கத்திக் கொண்டிருந்தான்.

“மாப்ள நீ போயிட்டே இரு… நாங்க பின்னாலயே வந்தர்றோம்” என்றான் சேது. எல்லாருமே சாலையில் நின்று தூரம் வரை எட்டி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

“அவ வீட்டுக்கு போறதுக்குள்ள போய் புடிச்சிரு” என்று கத்தினாள் சுபா.

வெயிலும் நானும் வேர்க்க வேர்க்க பூமி நகர்த்தினோம். கால்களில் பதட்டம். கண்களில் இறுக்கம். இதயத்தில் வலி. மூச்சு வாங்குகிறேனா… முட்கள் தாங்குகிறேனா தெரியவில்லை. பூமி நகர்ந்து நகர்ந்து சூரியனுக்கு சென்று விட்டது போல. ஆவென திறந்து கிடக்கும் சாலையின் இரு பக்கமும்… முள் செடிகளும்… வாடை காற்றும். அனல் எழுப்பும் காற்றில் மனதில் மனம் மேடுகள் புதைய… ஓடிய போது… இன்னதென உணர முடியாத துக்கத்தை கழுத்து பகுதி நிரப்பிக் கொண்டே இருந்தது. எக்ஸாம் முடிந்த களிப்பில் காலேஜ் பசங்க பைக்கில் போவதும் வருவதும்… கத்துவதும் கொண்டாடுவதும்… அது அவ்வப்போது அந்த சாலையில்… விட்டு விட்டு நிகழ்ந்து கொண்டே இருந்தது. நடப்போர் நடக்க இருவர் மூவர் என சாலை ஓர கல்லூரி பூக்கள்தான் நெடுகிலும்.

கடந்து கடந்து நடந்தேனா.. நடந்து நடந்து என்னை நானே கடந்தேனா… நெற்றியில் தூரம் குறைக்க கால்களில் சிறக்க முளைத்திருந்தது.

தெரிகிறாள். சூரியனுக்கு அருகே தெரிவது போன்ற பளபளப்பு மதிய திரை ஆசுவாசம்.

புள்ளியென தெரிந்தவள்… இப்போது தெய்வ கோலம் என அசைகிறாள். கூட்டம் விலக்கி சீறிய… கண் பார்வை அவள் தோள் தொட்டு மூச்சிரைக்க இதோ இன்னும் சில நொடிகளில் பார்வை பின் தொடரும் ஒளிக்கீற்றின் வழியே தூசு படலம் தாண்டி நெருங்கி விடுவேன்.

நான் ஓட்டமும் நடையுமாக பின்னால் அவளுக்கும் எனக்குமான தூரத்தை குறைத்துக் கொண்டே இருந்தேன். கூப்பிட்டு விடலாமா.. என்றால் குரல் எழும்பவில்லை. வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லா ஒரு உருண்டை மட்டுமில்லை… ஓராயிரம் உருண்டைகள் உருண்டன. முதுகில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்… கழுத்தில் கவலை கூடிய தவம் களைப்பு. வாழ்க்கையின் எல்லை வரைக்கும் ஓடலாம் போல என்றொரு உத்வேகம் உள்ளே இருந்தும் அவள்  மறுதலிக்க முயன்று விட்டால் மறுகணம் என்னாகும் எனக்கு. உள்ளே பதட்டம் சிதறினாலும்… உண்மைக்கு அருகே வீழ்ச்சி இல்லை என்ற சிறு நம்பிக்கையோடு… மூச்சிரைக்க வெயில் களைத்து ஓடினேன். விழுந்து கிடக்கும் பூக்கள் எல்லாம் வியந்து எழுந்து பார்க்க முற்பட்டன.

அப்பாடா வந்து சேர்ந்து விட்டேன் என்பது போல அவளுக்கு முன்னால் உடல் இறைக்க நின்றேன். வியர்த்து கொட்டும் முகத்தில் மூச்சு மட்டும் தான் இருந்தது. அனல் காற்றிலும் ஒரு சிறு குளிர்ச்சி கழுத்து முகம் கைகள் என்று தொட்டு தழுவி சென்றது. இல்லாத இசை எங்களை சுற்றி. என்ன என்பது போல பார்ப்பாள் என்று தான் நினைத்திருந்தேன். அவளையே நிறைந்து பார்த்தேன். அதிர்ச்சியோடு அசையாது நின்றாள்.

அழுது சிவந்த கன்னத்தில் கண்ணீர் கொப்பளிப்பு… இன்னும் நிகழ்ந்து கொண்டிருந்தது. வழி எல்லாம் அழுதிருக்க வேண்டும். உதடு நடுங்கிக்கொண்டிருந்தது. இதோ இப்போது வெடித்து சிதறி விடும் போல அப்படி ஒரு கனங்கனப்பு முகத்தில். என்னை பார்த்துக் கொண்டே தன்னை காண்பது போல என்னவோ உணரல். அவளும் நானும் மட்டும் தான் இந்த காதடைத்த உலகத்தில் இருப்பதாக இருந்தது. கண்களில் நீர் வழிய.. இதழில் இமை பிரிய…அவள் என்னையே பார்த்தாள். என்னை மட்டுமே பார்த்தாள். லட்சம் அர்த்தம் பார்வையில். ஒற்றை முத்தம் தேவை என்றது. இவ்ளோ நேரமா வர்றதுக்கு என்பது போலவே அந்த கண்களின் சிமிட்டல். திடும்மென அங்கே நிலவிய நிசப்தத்தை எழுதி விட வார்த்தைகள் இல்லை. வாய் அகன்ற வாடை காற்றில் அனல் துப்பும் அரூபம் தான். சட்டென ஒரு குழந்தையை போல குலுங்கி அழுதவளை, அதற்கு மேல் என்னால் அணைக்காமல் இருக்க முடியவில்லை.

ஏனோ எனக்கும் அழுது விட தோன்றும் ஆசை அங்கே அவள் காதோரம் கிசுகிசுத்தது. பதிலுக்கு என் காதோரும் எக்கி அழுத குரல் அன்பில் கரைய… “உங்க ஆசைப்படியே மூக்குத்தி குத்திக்கலாம்…” என்றாள்.

பைக்கில் வந்து விட்டிருந்த பாலாவும் எம்-சி யும் எங்கள் காதல் சேர்ந்த உற்சாகத்தை சாலையில் கத்தி குதியாட்டம் போட்டு கொண்டாடினார்கள்.

நான்கு கண்களில்… இரண்டிதயங்களில்… ஒற்றை யானை இந்த காதல். இருவருமே சுபாவுக்கு நன்றி சொன்னோம்.

“அட காதலர் தினத்துக்கான சிறப்பு சிறுகதையை எழுதிட்டு இருக்கேன்… நீ சாப்டு… நான் அப்புறம் சாப்ட்க்கறேன்…”  என்று சொல்லிக் கொண்டே இதோ… கதையை… நினைவாடிய பொழுதுகளை… முடிக்க போகிறேன்.

“சரி இந்த டீயை-யாவது குடிங்க” என்று இதய கோப்பையில் தேநீரை டேபிளில் வைத்து விட்டு போன மனைவி சுரேவுக்கு இந்த கதையை இந்த காதலர் தினத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


 

எழுதியவர்

கவிஜி
கவிஜி
கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார். 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார். | ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x