கயிறு


“சீக்கிரம் கிளம்பு. இன்னும் அஞ்சு நிமிஷங்கள் தான் இருக்கு”, வண்டியின் ஹாரன் ஒலியைக் கொண்டு தனது மகளை சீண்டினார் வேதாசலம். அவருடைய வண்டியை வீட்டில் இருந்து வெளியே எடுத்து விட்டால், அதன் மீது ஏறி அமர்ந்து ‘கிக்’ அடித்து விடுவது அவருக்கு வழக்கம். அதன் பின்னால்,

“எத்தனை நேரமாக காத்திருப்பது? பெட்ரோல் வேஸ்ட் ஆகுதில்ல?” என்று குடைந்து கொண்டே இருப்பார்.

“அய்யயய்ய! நான் எட்டு அம்பது வண்டிக்குப் போனால் போதும். தினமும் எதுக்காக தான் எட்டரை மணிக்கெல்லாம் என் உயிரை வாங்குறீங்களோ!” அவருடைய மகள் ஷோபனா தனது தலையின் பின்னலை கைக் கொண்டு முடிந்து விட்டு, அவர் பின்னால் தன் கைப்பையுடன் ஏறினாள்.

ஏறியது தான் தாமதம் என்றது வண்டி. உடனே அடுத்த தெருவில் உள்ள வேகத் தடையை நோக்கி விரைவாக ஓடியது. அங்கு ஒரு சடன் பிரேக் போடப் பட்டதில் ஷோபானா சற்று அவர் முதுகோடு ஒட்டியபடிக்கு முன்னே வந்தாள். மீண்டும் சரியாக உட்கார்ந்து கொள்வதற்குள், ஒரு குறுக்குத் தெருவில் நுழைந்தது வாகனம். அங்கே மேடு பள்ளங்களைத் தாண்டி, ஷார்ட் ரூட்டில் ரயில்நிலைய ரோட்டை அடைந்தது விரசாக.

“புறம்போக்கு! எப்படி ஆட்டோ ஒட்டிக் கொண்டு போறான் பார்” என்று தன்னை முந்த விடாமல் இடையில் நின்ற ஆட்டோக்களை திட்டினார் வேதாசலம். அதே திருப்தியில் ஹாரன் அடித்துக் கொண்டே ரயில் நிலையத்திற்குள் சென்றால் தான் அன்றைய ‘டிராப்’ படலம் முழுமை அடைவதாக பொருள்.

எத்தகைய காலை சண்டையாக இருந்தாலும், வாகனத்தில் இருந்து இறங்கி ஓடும் பெண்ணிடம்,

“பாத்து போயிட்டு வா! இரவு கால் பண்ணு” என்பார் கனிவாக. அவள் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருக்கும் 8:50 வண்டியை விட்டு விட்டு, கிளம்பி நகர்ந்து கொண்டிருக்கும் 8:30 வண்டியை பிடிக்க ஓடுவாள்.

அன்று வர வேண்டிய எட்டரை பாஸ்ட் வண்டி கால தாமதமாக வருவதாக ஒலிப் பெருக்கியில் உடைந்த தமிழில் சொல்லிக் கொண்டிருந்தது ஓர் வடக்கத்திய குரல். மஞ்சள் கோட்டிற்கு வெளியே பிளாட்பாரத்தை ஒட்டி நின்றாள். வெயிலுக்கு தன் கையை நெற்றியில் வைத்து மறைத்து, வண்டி வருகிறதா என எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷோபனா.

“பாத்து…. வண்டி வரப் போகுது! இங்கே வா….ஓடாதே” அருகில் ஒரு குழந்தை, அதன் பெயர் கோதை. புறாக் கூண்டு போன்ற ஓர் வீட்டில் வசிக்கும் கோதைக்கு விஸ்தாரமான அந்த சிமெண்ட் திடல் ஒடுவதற்கான வேட்கையை கொடுத்தது. அவளது தம்பி, நெடியோன் ஓர் சிமெண்ட் இருக்கையின் பின்னால் ஒளிந்து கொண்டான். அவனை கண்டு பிடிப்பதாக நினைத்துக் கொண்டு அவன் பின்னால் ஓடினாள் கோதை. அவர்கள் இருவருக்கும் வீட்டில் இருந்து கொண்டு வந்த இட்லியை சட்னியில் ஊற வைத்து ஊட்டுவதற்கு டிபன் பாக்ஸ்-ஐ திறந்து காத்துக் கொண்டிருந்தாள் அம்மா கமலி.

“ஏங்க! கொஞ்சம் அதுங்களை அடங்கி ஒடுங்கி உட்காரச் சொல்லுங்க” என்று தனது கணவனை அதட்டினாள். தமிழ் குடிமகன், அவர் தன் பிள்ளைகளின் கைப் பிடித்து இழுந்து வந்து அம்மாவின் அருகில் அமரச் செய்தார்.

“இன்னைக்கும் மல்லிச் சட்டினி தானா? எனக்கு ரெட் சட்னி வேண்டும்” என்றாள் கோதை.

“ஆமாம்! எனக்கும் வேணும்” என்றான் நெடியோன்.

“இன்னைக்கு வெளியூர் போறோம் இல்லை தங்கம்! நாளைக்கு அப்பா கிட்ட சொல்லி வாங்கித் தர்றேன் சரியா.. ஆ காட்டுங்க! ஆ!” என்று இட்லியை எடுத்துக் கொண்டு கமலி பின்னாலே சென்றாள். வாயை கைக்கு அருகில் கொண்டு செல்லாமல் தலையை அசைத்துக் கொண்டே இருந்தன குழந்தைகள்.

சிறிது நேரம், ‘ஆ.. ஆ..’ என்று சொல்லி நொந்த கமலி, ‘வாயத் திற! இல்லை கொன்னு வீசிடுவேன்’ என்று அக்கம் பக்கத்திற்கு கேட்கும் படி கத்தி விட்டாள்.

“உனக்கு சோறு ஊட்ட எவனும் வர மாட்டான். அதனால தானே என்னை ஏமாத்துறீங்க ரெண்டு பேரும்?” என்று இருவரின் தொடையிலும் ஐந்து விரல் பதிய ஒரு அடி போட்டாள். குழந்தைகள் இருவரும் அழுது கொண்டே அப்பாவை நோக்கி ஓடின.

“எப்படி அடிக்கிறா பாரு…”, வண்டியை எதிர்பார்த்து காத்திருந்த ஷோபனாவின் கவனம் குழந்தைகள் பக்கம் திரும்ப, கமலியை பார்த்து முறைத்தாள். அவளுக்குத் தெரியவில்லை; இன்னும் சில வருடங்களில் தனக்கும் இதே நிலமை தான் என்று.

“ரொம்ப நேரமாக வண்டி வரவில்லை. ஒருவேளை இந்த பக்கத்தில் இருந்து வருதா?” என ஷோபனா மற்றொரு திசையை நோக்கி எட்டிப் பார்த்தாள். வெயில் பின்னந்தலையில் பட்டு கண்கள் கூசுவது நின்று விட்டது. அதனால் அந்த திசையிலேயே அவள் கவனத்தை செலுத்தினாள். தூரத்தில் இருந்து ஒரு வயதான பெண், தனது மகளுடன் நடந்து வந்து கொண்டிருந்ததை அவள் கவனச் சிதறல் பதிவு செய்தது.

“இந்தா இதைப் பிடி..இன்னும் எத்தனை கிலோ மீட்டர் நடக்கணும்?” ஹேன்ட் பேகை தனது மகள் மாலதியிடம் கொடுத்து விட்டு மூச்சு வாங்க அமர்ந்தார் பரிமளம்.

“எத்தனை கிலோ மீட்டரா? ஐயோ அம்மா! பிளாட் பாரம்-ஏ ஒரு டிரைன் சைசு தான்” என்றாள் மாலதி கைத்தாங்கலாக அம்மாவை பிடித்து அமர வைத்து.

“என்னால முடியல. உள்ளே ஆட்டோ வருமா பாரு”

“இங்கே எப்படி? ஃபுல்-ஆ க்ளோஸ் பண்ணி இருக்காங்க. வெளியே போனா தான் கிடைக்கும்”, அம்மா கேட்கும் கேள்விகள் மாலதியை கொதிப்படையச் செய்தன.

“இரு..கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிறேன். உங்க அப்பா எதுக்கு தான் முன்னாடி பெட்டியில புக் பண்ணிக் கொடுத்தாரோ தெரியலை”

“அவருக்கு என்ன தெரியும்? முன்னாடி வருமா பின்னாடி வருமான்னு? இன்னும் கொஞ்ச தூரம் தான். நாம வந்த வண்டி போயி அதுக்கு அப்புறம் ரெண்டு லோக்கலும் போயிடுச்சு. நீ இன்னும் பாதி தூரம் தாண்டலை”

பரிமளத்தின் கால்கள் இரண்டும் வில் போல வளைந்து விட்டன. ஒல்லிப் பிச்சான் கால்களுடன் பருத்த மேலுடம்பை கொண்டுள்ள ஒரு பெண் கொரில்லா போல அவளது தேகம் மாறிக் கொண்டே வருவதாக அவள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள். ஒவ்வொரு முறையும், அந்த முட்டியின் மீது கனத்த தனது மேலுடம்பை சுமந்து ஊணுவது, ‘இது அடுத்த கணம் உடைந்து விழும்!’ என்று அச்சப் படும் அளவிற்கு ஆபத்தான காரியமாக உள்ளது.

இந்த நிலையில், எஞ்சினுக்கு அடுத்த மூன்றாவது பெட்டியில் இருந்து இறங்கி நடந்து வரும் பரிமளம், பாதியில் மூச்சு இரைக்க ஆடி அசைந்து நடந்து வந்து அமர்வதற்குள் அக்குள், முதுகு என ஜாக்கெட் நனைந்து விட்டது. கை முட்டியை தாண்டி பின்னால் தொங்கிக் கொண்டிருக்கும் நீர் சதை பிடிப்பான அம்மாவின் கையை பிடித்து தூக்கும் போதே வியர்வை கையை நனைக்க,

“வெளியே வந்தாலே இதே பிரச்சனை! சே!” என்று சலிப்பாக இருந்தது மாலதிக்கு.

“ஆலப்புழாவில் இருந்து தன்பாத் வரை செல்லும் தன்பாத் ஆலப்புழா விரைவு வண்டி, இன்னும் சற்று நேரத்தில் ஒன்றாவது நடை மேடையில் வந்து சேரும்” என்று அறிவிப்பு வந்தது.

“எட்டரை மணி பாஸ்ட் போயிடுச்சா?” என்று விசாரித்தாள் ஷோபனா.

“இல்லை. அதுக்குத் தான் நானும் வெயிட் பண்றேன்” என்றான் ஒரு பையன். அவளைப் போன்ற ஒரு இளம் வயதுப் பெண் தன்னிடம் இந்தக் கேள்வியை கேட்டதே இன்று அவனுக்கு ஒரு சாதனை தான்.

“ஏங்க! தண்ணி பாட்டிலை எடுங்க. கையை கழுவனும். வண்டி வந்திடப் போகுது” என்றாள் கமலி. அதற்குள் குழந்தைகள் இருவரும் பிளாட் பார முனையை நோக்கி ஓடினர்.

“புடி.. புடி.. புடி” என்றாள் கமலி. வேறு பக்கமாக திரும்பிக் கொண்டிருந்த ஷோபனா, கமலியின் அலறல் கேட்டு குழந்தைகள் இருவரையும் தடுத்தாள்.  பின், பெற்றோருக்கு ஆலோசனை சொல்லும் தொனியில்,

“குழந்தைகளை கையில் பிடியுங்க” என்றாள்.

ஒரு ஓரத்திற்கு சென்று கையை கழுவி விட்டு, டிபன் பாக்ஸ்-ஐ குழப்பி விடத் திறந்தாள் கமலி.

“அதை தொடர் வண்டி ஏறிய பிறகு சுத்தம் செய்ய முடியாதா? மூடி உள்ளே வை” என்றார் தமிழ் குடிமகன்.

“அம்மா! இன்னொரு எக்ஸ்பிரஸ் வருது. பிளாட் பாரத்தில் கூட்டம் சேர்ந்திடும். வா போகலாம்” என்று இழுத்தாள் மாலதி. வேறு வழியில்லாமல் எழுந்து அசைந்தாட தொடங்கினார் பரிமளம்.

ஒலிப் பெருக்கியில் தொடர்ச்சியாக அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது பரிமளத்தை சற்றே பதட்டப் பட வைத்தது. அசைவு வேகமெடுத்தது. முட்டிக் கால் உடைந்தாலும் பரவாயில்லை என்று வேகமெடுக்கும் அம்மாவின் முயற்சியை மனதார பாராட்டிக் கொண்டே அவளிடம் இருந்து பையை திரும்பப் பெற்று உடன் நடந்தாள் மாலதி.

அவர்கள் இருவரும் ஷோபனாவை நெருங்குவதற்குள் பிளாட் பாரத்திற்குள் வண்டி நுழைந்து விட்டது. மூத்திர துர்நாற்றம் அடித்த வண்டியில் ஏறுவதற்காக நாசிகளைப் பொத்திக் கொண்டு, தமிழ் குடிமகன், தன்னுடைய இரு குழந்தைகளை கையில் ஏந்தியபடி ஒரு பெட்டியின் முன்னால் நின்றிருந்தார். அவ்வாறே, கூட்டத்திற்கு இடையில் தன்னைச் சொருக இடம் தேடினார். அவருடன் தொத்திக் கொள்ள கமலி மிகவும் பிரயர்தனப் பட்டுக் கொண்டிருந்தாள்.

“இந்த வண்டி எல்லா ஸ்டேஷன்-லயும் நின்னு போகுமா?” என்று மறுபடியும் அந்தப் பையனிடம் விசாரித்தாள் ஷோபனா. துர்நாற்றம் தாளாமல், அவளும் தனது கர்சீப்பை எடுத்து மூக்கை பொத்திக் கொண்டாள்.

“இல்லை இது எக்ஸ்பிரஸ். சாதா டிக்கெட் வைத்துக் கொண்டு ஏறினால் புடிப்பான்” என்றான் அந்த பையன் அக்கறையுடன். பின் வேறு பக்கமாக திரும்பி,

“மை வைத்த கண்..அய்யோ! இப்படி இருக்கியே டி!” என்று பெருமூச்சு விட்டான்.

“நேரம் ஆகுது” என்று வாட்ச்-ஐ பார்த்தாள் ஷோபனா.

அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறுவதா, இறங்குவதா எனத் தெரியாமல் முட்டி மோதிக் கொண்டிருந்த கூட்டத்தை தனது பெட்டியில இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் ரயில் வண்டியின் கார்ட். அவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் கூட்ட நெரிசலை பற்றிப் ஏதோ கிண்டல் அடித்துக் கொண்டிருந்தனர். மாலதி, அம்மாவை ரயில்நிலைய நுழைவாயிலுக்கு அருகில் மறுபடியும் அமரச் செய்து விட்டு கூட்டம் கலையட்டும் என காத்திருந்தாள். ஷோபனா தனது செல் பேசியை எடுத்து காதில் வைத்துக் கொண்டு 8:50  வண்டியையே பிடித்து விடலாம் என விரைவாக அடுத்த நடைமேடைக்கு ஓடினாள்.

இந்த நேரத்தில் தான், வண்டியின் உள்ளிருந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான் ஷியாமலன்! யாரும் இறங்குவதாகவும், ஏறுவதாகவும் தெரியவில்லை. இது வேலைக்கு ஆகாது என மனதில் சொல்லிக் கொண்டே உடம்பை வளைத்து ‘emergency exit’ என்று எழுதப் பட்டிருந்த ஜன்னல் வழியாக குதித்தான். ஒரு கணம், தமிழ்க் குடிமகன், கமலி மற்றும் பிள்ளைகள் அவனது செய்கையை கவனித்து பின் ஏறுவதில் தங்களது மும்முரத்தை செலுத்தினர்.

தனது தலையை கை விரல்களால் வாரிக் கொண்டு வெளியே வந்த ஷியாமலன், அந்த ஊருக்கு வந்த பார்த்த முதல் முகங்கள், தமிழ் குடிமகனது குடும்பத்தினருடையது. அவர் கைக் குழந்தைகளுடன், மனைவியை ஏறச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்ததை கவனித்த அவன், நெடியோனை தூக்கினான். தான் வெளியே வந்த அதே ஜன்னலுக்குள் நெடியோனின் குட்டை கால்களை சொருகி, தலை அடிபடாமல் உள்ளே தள்ளினான்.

“அப்பாவுக்கு இடம் போட்டு வை” என்று சொல்லி விட்டு அவன் நன்றியை கூட எதிர்பார்க்காமல் முன்னேறி ராஜ நடை நடந்தான்.

எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் தைத்த சட்டை என்று பார்த்தவுடன் தெரியும் உருவம். அதற்குள், அவனது தசைகள் உருகி, உருகி, பல இடங்களில் கைத் துணி தொங்கி விடும் அளவிற்கு அவன் உடல் மெலிந்திருந்தது. காலர் துணி கிழிந்து உள்ளிருந்த அட்டை வெளியே தெரிந்தது. முழுக்கையை சுருட்டி விட்டால் முன்பெல்லாம் உருட்டையான கையில் கைத் துணி நின்று பேசும். ஆனால், தற்போது அவனுடைய கை முட்டி ரேகையின் அழுக்குப் படிந்து அந்தக் கைத் துணி முட்டிக்கு மேலும் சுருண்டு கொள்கிறது. இடுப்புத் துணியை நான்கு மடிப்புகளுடன் இழுத்துக் கட்ட, நாளை அவனை கைவிடப் போகும் பெல்ட்-ஐ, கால் சட்டையின் மேல் இருக்கி விட்டிருந்தான். ஒரு பக்கமாக தேய்ந்து அவனது தீராத நடையையும், கால் பாதத்தையும் அச்சு பிரதி எடுத்திருந்த செருப்பை தன்னோடு இழுத்துக் கொண்டே நடந்தான் நடைமேடையில்.

ஷியாமலனை தாண்டிச் சென்ற ஷோபனா, தனது கைப் பையின் ஒரு பகுதியை அவன் தோளில் உரசி விட்டு முன்னே ஓடினாள். அவள் பின்னாலேயே பின் அசைவை ரசித்துக் கொண்டு மற்றொரு பையனும் ஓடிக் கொண்டிருந்தான். அவர்களைப் பார்த்து, ‘நாய் காதல்!’ என பழைய படத்தின் வசனத்தை சிந்தி ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து விட்டு, ஊருக்குள் நுழைய திரும்பினான். அந்த இடத்தில் திடீர் என்று,

“சாரி..” என்றாள் மாலதி. திருப்பத்தில் தனது உடமைகளை வைத்து விட்டு அவள் அப்பாவிடம் போன் பேசிக் கொண்டிருந்தாள். கூட்டத்தை தாண்டி வெளியே பலர் நுழையும் இடத்தில் அவள் உடமைகளை வைத்திருந்ததை கவனியாமல், ஷியாமலன் திரும்பினான். அவனது கால் தடுக்கி சூட் கேஸ் கீழே விழுந்தது. பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், விழுந்த சூட் கேசை எடுத்து தானே சற்று தொலைவில் வைத்து விட்டு மூச்சு விட்டுக் கொண்டே அமர்ந்திருந்த பரிமளத்தை பார்த்தான் ஷியாமலன்.

அவன் தன்னையே உற்று பார்த்துக் கொண்டிருந்ததை அறிந்து,“தேங்க்ஸ் தம்பி”, என்றார் பரிமளம். அவருக்கு பதில் ஏதும் சொல்லாமல், தன் கால் சட்டைக்குள் ஓர் காகிதத்தை ஒளித்து வைத்துக் கொண்டு, நடையை தொடர்ந்தான்.

ஊர் விட்டு ஊர் வந்துள்ள அவன் கையில் எதையும் கொண்டு வரவில்லை. டிக்கெட் எடுத்தானா இல்லையா என்பது கூட அவனுக்கு மட்டுமே தெரியும். அவனது பேண்ட் பாக்கெட் மட்டும் வீங்கி இருந்தது. அதற்குள் ஒரு அரை லிட்டர் காலி தண்ணீர் பாட்டீல் வைத்திருப்பான். மற்றபடி செல்போன், பர்ஸ், தலை சீவி, கர்சீப் என எதுவும் இருக்காது. அந்த தண்ணீர் பாட்டீல் மட்டும் எதற்காக?

ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி நடந்த ஷியாமலன் தொடர்ச்சியாக கால் நகம் மண் கிளற நடந்தான். பொதுவாக கடக்கும் தூரத்தை எண்ணி அஞ்சும் பொது ஜனத்தின் சந்தேகங்கள் அவனை என்றும் பாதித்ததில்லை. மற்றவர் அஞ்சும் தூரங்களை அவன் எளிதில் கடந்தான். முன்பு காடு மேடுகளை கடந்ததை பெருமையாக சொல்லிக் கொள்ளும் பாதசாரிகள் இன்று மேம்பாலங்களின் மீது நடக்கின்றனர். அவர்கள் அதன் உச்சியில் இருந்து கொண்டு கீழே எட்டிப் பார்த்தால், குடித்து விட்டு தூக்கி எரியப் பட்ட பிராந்தி பாட்டில்களும், குடிசை வீடுகளும், நகரத்தின் உச்சி நுகரும் மாடி அடுக்குகளும், புகழ்பெற்ற வணிகத் தளங்களின் பெயர் பலகைகளும் சுலபமாக தெரிந்து விடுகின்றன. அதோடு, அங்கு சுத்தமாக படுத்து உறங்க கொசுத் தொல்லை இல்லாத ஓர் இடமும் கிடைத்து விடுகின்றது. ஷியாமலன் எந்த ஊருக்கு சென்றாலும், அங்கே இத்தகைய ஓர் மேம்பாலத்தை தேர்வு செய்து தங்கி விடுவான். அவன் அனுபவத்தில், பல ஊர்களில், மேம்பாலங்களின் அடியில் அவனுக்கு அதிகமான போட்டி இருந்திருக்கிறது. அதனால் மற்ற சோம்பேறிகளை காட்டிலும் சற்று அதிகம் முயற்சி செய்தால் மேல் தளத்தில் ஓர் சௌகரியமான இடம் கிடைத்து விடுகின்றது.

ஷியாமலன் சுற்றி முற்றிப் பார்த்தான். அவன் எதையோ எதிர்பார்த்துத் தேடிக் கொண்டிருந்தான். அவன் தேடிக் கொண்டிருந்தது ஒரு சில நொடிகளில் மேம்பாலத்தின் எதிரில் கிடைத்தது. அங்கே தனக்கு வேறு போட்டி இருக்கிறதா என கவனித்தான். காலை வெயில் நிழலாகப் படும் திசை அவனுக்கு தோதாக எதிரில் இருக்கிறது. அதனால் சற்று தாமதமாக விழித்தாலும் அங்கே பிரச்சனை இல்லை.

இரு புறமும் வண்டி வருகிறதா என பார்த்து விட்டு அவன் எதிர் பிளாட்பாரத்தை நோக்கிப் பயணப் பட்டான். அங்கே தனக்கான இடத்தை தேர்வு செய்து கொண்டு அமர்ந்தான். அது வரை எதிர்பார்த்த அவன், மற்றொரு எதிர்பாராத புதிய வருகையை எதிர்கொண்டான். அவனுக்காக காத்திருந்து வரவேற்கும் விதத்தில் தனது இடுப்பையும் வாலையும் ஆட்டிக் கொண்டே ஒரு நாய் முன்னேறி வந்தது. சிறிது நேரம் அதன் கண்களை பார்த்த அவன், கழுத்தை பிடித்து முகத்தை தூக்கிப் பார்த்தான். காதுகளை பின்னால் இழுத்துக் கொண்டு பாசத்தை ஊளை கோத்திருந்த கண்களின் மூலம் வெளிப் படுத்தியது அந்த நாய். அந்த ஊளையை முதலில் தனது கைகளால் சுத்தம் செய்தான். இருக்க இடம் மட்டும் வேண்டும் என்றான்! பழக ஓர் நட்பும் கிடைத்தது! இதை விடப் பெரிதாக அவன் அன்றைய நாளுக்கு அதிகம் எதிர்பார்க்க முடியாது.

இனி இரண்டு வயிறுகளுக்கு பசி ஆற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

“எனக்காக இங்கே இடத்தை பிடித்து வைத்துக் கொள். நான் இதோ வருகிறேன்” என்று அந்த நாயிடம் சொன்னான். அது மூன்று சுற்று நடைக்கு பின், ஓரிடத்தை பிடித்து அமர்ந்து கொண்டது. தன்னுடைய பாக்கெட்டில் இருந்து அந்த காலி அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை வெளியே எடுத்தான். அதை கையில் வைத்துக் கொண்டு பின்னாலேயே பார்த்துக் கொண்டு நடந்தான். மேம்பாலத்தை ஏற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த ஓர் பேட்டரி வண்டி பின்னால் ஆள் இல்லாமல் அவன் இருக்கும் இடம் வரை வந்தது. அதை தடுத்து நிறுத்த, தன் கையில் இருந்த பாட்டிலை நீட்டினான்.

“என்ன தம்பி?” என்றார் அந்த பேட்டரி வண்டியை ஒட்டி வந்தவர்.

“பெட்ரோல் பங்க் வரை விடுங்க. வண்டி பாதியில் நின்று விட்டது” என்றான். அவர் பின்னால் திரும்பிப் பார்த்தார். அங்கே எந்த வண்டியும் அவன் அருகில் இருப்பதாக தெரியவில்லை. ஷியாமலன், ஆள் பார்க்க இடுங்கிப் போன கண்களுடன் போதை ஆசாமி போலவே இருந்தான். அவர் யோசிப்பது ஏன் என்று அறிந்த அவன்,

“வண்டி மேம்பாலத்திற்கு கீழே நிற்கிறது. நான் அங்கே ஆள் நடமாட்டம் இல்லை என்று மேலே ஏறி வந்தேன்” என்றான் நம்பும் படியாக.

“சரி ஏறு” என்றார். அவன் பின்னால் ஏறிக் கொண்ட பின்,

“சத்தமே இல்லை. எவ்வளவு சார் மைலேஜ் கொடுக்குது?” என்று அவர் கூடவே பேசிக் கொண்டு போனான். அவன் போகும் திசை நோக்கி அந்த நாய் உற்று பார்த்துக் கொண்டிருந்தது. அவன் திரும்பி வர அரை மணி நேரம் பிடித்தது. அது வரை அது அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தது. தூரத்தில் அவன் நடந்து வருவது தெரிந்து அந்த நாயின் காதுகள் மீண்டும் பின்னால் இழுத்துக் கொண்டன. அவன் இந்த முறை கையில் ஓர் பிஸ்கட் பாக்கெட்டுடன் வந்தான்.

அவன் கால்களுக்கு அடியில் அது தனது நகங்களை வைத்து பிராண்டி கொண்டே படுத்து உருண்டு கெஞ்சியது.

“இரு.. இரு.. உனக்குத் தான்” அந்த பாக்கெட்டை முழுமையாக பிய்த்து விடாமல் சற்று மேல் வாக்கில் கிழித்து நான்கு பிஸ்கெட்களை அள்ளி அதன் வாய்க்கு அருகில் வைத்தான். தரையில் அந்த பிஸ்கெட்களை தேய்த்து உள் வாங்கி உமிழ் நீர் சுரக்க அந்த நாய் உண்டு முடித்தது. அதுவும் அவனும் அன்று இரவு வரை அங்கேயே அருகருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கன ரக வாகனங்கள் அந்த வழியாகச் செல்லும் போதெல்லாம் அந்த மேம்பாலம் ரப்பர் போல மேலும் கீழுமாக அசைந்தது. அந்த அசைவுகளின் போது ஷியாமலன் திரும்பிப் பார்க்க, அந்த நாய் அவனைப் பார்த்து சிரித்தது. ஒவ்வொரு முறையும் இது நடந்தது. மேம்பாலத்தின் அந்த தாலாட்டு, தூக்கத்தை வரவழைத்தது. அந்த நாளுக்கு அவர்கள் இருவருக்கும் அந்த விளையாட்டும், ஒரு பிஸ்கெட் பாக்கெட்டும், போதுமானதாக இருந்தது.

அடுத்த நாள் காலை, ஷியாமலன் எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான். பலர் ரயில் வண்டியை பிடிக்க ஓடிக் கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் காலுக்கு அருகில் இரவு குளிருக்கு கட்டிப் பிடித்து தூங்கிக் கொண்டிருந்த நாய் சோம்பல் முறித்தது. அதன் உதட்டருகில் சிறிய புன்னகை. தன் கால் கட்டை விரலை அதன் வாய்க்குள் விட்டு பல் தெரியும் படி அதனை சிரிக்க வைத்தான்.

“இன்று உனக்கு நான் விருந்து வைப்பேன்” என்றான் ஷியாமலன். நேற்று அவன் மேம்பாலத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த போது தூரத்தில் ஓர் துணிக் கடையும், ஓட்டலும் பிரகாசமான வண்ண விளக்குகளுடன் அவன் கண்களில் மிளிர்ந்தன. அதனை தன் அன்றைய இலக்காக வைத்துக் கொண்டு மேம்பாலத்திற்கு கீழே இறங்கிச் சென்றான்.

அங்கே ஓர் ரேஷன் கடை வாசலில் ஒரு தண்ணீர் தொட்டி இருந்தது. அதன் பாசி படிந்த இரும்புக் குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து வாய் கழுவிக் கொண்டான். இன்னும் கொஞ்சம் அதிகமாக தண்ணீர் திறந்து விட்டு தன் சட்டை, பேண்ட்-ஐ கழற்றி அதன் அடியில் ஒரு குளியல் போட்டான். அதே சட்டை பேண்டை மறுபடியும் அணிந்து கொண்டு, தலையை தண்ணீர் தொட்டு மடித்து வாரிக் கொண்டு தன் கையில் இருந்த அரை லிட்டர் பாட்டிலை எடுத்து மீண்டும் நீட்டினான்.

“வண்டியில் பெட்ரோல் தீந்து போச்சு. வீட்ல அப்பா அம்மா இல்லை. கொஞ்சம் அந்த ஓட்டல் வரை கொண்டு போய் விட்டீங்க-ன்னா பக்கத்துலயே பெட்ரோல் வாங்கிக் கொண்டு சாப்பிட்டு வருவேன்” என்றான்.

அன்று முழுவதும், ஓட்டல், துணி கடை, இரும்புக் கடை, மெக்கானிக் ஷாப் என எல்லா இடங்களுக்கும் சென்று வேலை தேடினான். அவர்கள் எல்லோரிடத்திலும், ஒரே வசனம் தான்.

“நான் பக்கத்து ஊரில் இருந்து வர்றேன். பி. எஸ். சி வரை படிச்சிருக்கேன். வீட்டில் வறுமை. வேலை கிடைக்கல. கொஞ்சம் உங்க கம்பெனியில் வேலை போட்டுத் தந்தீங்க-ன்னா புண்ணியமா போகும்”

வந்த பதில்கள் சற்று வித்யாசமானவை,

“இங்கே ஆள் இருக்கு…இருப்பவனுக்கே சம்பளம் கொடுத்து மாளவில்லை… பக்கத்தில் போய் கேளு.. எங்க ஹெட் ஆபீஸ்-ல் தான் ரெக்ரூட்மெண்ட்..” என இப்படியாக அவன் முயற்சியை நோகடிக்கும் நோக்கில் பல வித்யாசமான பதில்கள்.

ஆயினும், ஷியாமலனுக்கு இது ஒன்று புதிதல்ல. அவன் இது போல வேலை தேடி வந்த ஊர்களின் இது ஐம்பதாவது! அரை சதம் அடித்து விட்டான். ஆயினும் மனிதர்கள் ஒன்று போலவே!

அன்று மாலை வரை இதே பணி. முடிவில் கடைசியாக ஒருவர் மட்டும்,

“இன்னைக்கு செய்திட்டு காசு வாங்கிட்டு போ! நாளை வேலை இருந்தா உண்டு. இல்லை என்றால் அடுத்த நாள் வரணும். என்ன சம்மதமா?” எனக் கேட்டார்.

“சரி” என்றான். அவனுக்காக ஒரு நாய் காத்துக் கொண்டிருக்கிறது. ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.

பிரியாணி அண்டா காலி ஆகும் வரை வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு வைக்கும் தட்டுகளை கழுவினான். அவன் கைகள் நீரில் பூத்தன. அது குறித்துக் கவலை ஏதும் இல்லை. முடிவாக ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து அவன் முன்னால் நீட்டினார் முதலாளி. அதை வாங்கிக் கொண்டு,

“அண்ணா! மீதம் இருந்தால் குஸ்கா கொடுங்கள்” என்றான். அவனையே சிறிது நேரம் உற்று பார்த்த அவர், ஒரு பேப்பரின் மீது மந்தாரை இலையை வைத்து குஸ்காவை நிரப்பி மடித்துக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு, அங்கே சிதறிக் கிடந்த எலும்புத் துண்டுகளை எடுத்து பாக்கெட்டில் திணித்து விட்டு விரைவாக தன் கையில் பாட்டிலை ஏந்தினான்.

“அண்ணா.. இந்த நாய் தான்! இந்த நாய் தான்! ஐயோ செல்லம். எங்கெல்லாம் தேடுவது உன்னை! நீங்க போங்க அண்ணா.. நான் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போயிடுவேன். இந்த நீ தாகமா இருப்பே-ன்னு தண்ணீர் பாட்டிலுடன் வந்தேன்”, பாட்டிலுக்கு லிப்ட் கொடுத்தவர் அவனை தாண்டி நகரும் வரை நடித்து விட்டு, அந்த நாயின் அருகில் அமர்ந்தான்.

“இதப் பாத்தியா?” குஸ்காவை பிரித்து அதன் அருகில் வைத்து,

“இந்த பாதி உனக்கு.. இது எனக்கு” என்று தனது பாக்கெட்டில் இருந்த எலும்புத் துண்டுகளை தொட்டுக் கொள்ள அதன் அருகில் வைத்தான். அது அரிசிச் சோற்றினை தொடாமல் முதலில் அந்த எலும்புத் துண்டுகளை கால்களில் பிடித்து நறுக்கு நறுக்கென்று கடிக்கத் தொடங்கியது.

அடுத்த நாள் வேலை இல்லை என அந்த முதலாளி சொன்னாலும் இன்று அவனுக்கு நிம்மதியான தூக்கம் உண்டு. கையில் கொஞ்சம் காசு இருக்கிறது. வரும் வழியில் பழைய செருப்புகளுக்கு வண்ணம் அடித்து 20 ரூபாய் என்று விற்றுக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அதில் தனக்குப் பிடித்ததை வாங்கிக் கொண்டான். தன் இடுப்பில் இருந்து அறுந்து விழ இருக்கும் பெல்ட் வாங்க காசை வீணடிக்க வேண்டாம் என்று யோசித்தான். ஒரு சணல் கயிற்றை வாங்கி இறுகக் கட்டிக் கொண்டான். ஏற்கனவே பார்த்து வைத்திருந்த ஓர் வீட்டின் முகப்பில், கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த பேனரை வீட்டார் கவனிக்காத போது மடித்து எடுத்துக் கொண்டான். அன்று இரவு தூக்கத்திற்கு படுக்கையாக அதனை விரித்தான். குளிருக்கு கம்பளி கிடைத்த சந்தோஷத்தில் அந்த நாய் குஷியாகி விட்டது. அவன் படுத்த இடத்திற்கு அருகில் அதுவும் இடம் தேடி, முதுகை அவன் மீது உரசி சுருண்டு படுத்துக் கொண்டது.

தூங்கி ஒரு சில மணி நேரங்கள் கடந்திருக்கும். ‘வீல்’ என்ற சத்தத்துடன் நாய் ஷியாமலன் படுத்திருந்த இடத்தில் இருந்து எழுந்து ஓடியது. அதன் முதுகெலும்பில் ஒரு பலமான அடி விழுந்ததே காரணம். அவனும் தூக்கம் கலைந்து தலை தூக்கினான். அங்கே சிலர் அவன் விழிப்பதற்காக காத்திருந்தனர்.

“ஏய்! யார் நீ? இங்கே எல்லாம் படுக்கக் கூடாது”, என்று அதட்டினார் ஒரு காவலர்.

“இதோ போகிறேன்”, தனது படுக்கையையும், தலைக்கு வைத்திருந்த அரை லிட்டர் பாட்டிலையும் கையில் எடுத்துக் கொண்டான்.

அவன் நடந்து செல்லும் போது அவர்கள் ஓவியம் வரையத் தேவையான பொருட்களை அங்கே விரிக்கத் தொடங்கினார். அப்போது தான் அவனுக்கு அங்கே நடப்பது புரியத் தொடங்கியது. மாநகராட்சி தூய்மை படுத்துதல் பணிக்காக சுவர் ஓவியங்களை வரையத் தொடங்கி இருந்தது. மாணவர்களை, அமைப்புகளை அழைத்து சுவர் ஓவியங்கள் வரைய ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அவன் படுக்கும் இடத்திற்கு எதிரில் ஏற்கனவே ஓவியம் வரையப் பட்டிருந்தது. அதனை இடம் மதிப்பீடு செய்யும் போது ஷியாமலன் பெரிதாக கவனிக்கவில்லை. அன்று இரவு மற்றொரு புறம், ஓவியர்கள் சங்கத்தில் இருந்து ஆட்களை நியமித்து ஓவியம் வரைவதற்காக உடன் ஒரு காவலரையும் அனுப்பி வைத்திருந்தார்கள்.

ஓரிரு நாட்கள் தங்கிய இடத்தை மாற்றுவது ஒன்றும் ஷியாமலனுக்கு புதிதில்லை. ஏற்கனவே பல முறை இது போன்ற அதட்டல்களை அவன் சந்தித்த அனுபவம் இருக்கிறது. காவலர்கள் அதட்டும் போது அமைதியாக சென்று விடுவதே நல்லது என்று பணிந்துப் போய் விடுபவன் அவன்.

இப்போது இடப் பிரச்சனையைக் காட்டிலும் முக்கியமாக நாயை காணவில்லை. அது அடி பட்ட வலியில் வேகமாக ஓடி விட்டது. அதை தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். ஷியாமலன் மேம்பாலத்தில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கினான். குஸ்கா செரிமானம் ஆக வில்லை. பல நாட்களாக அரிசிச் சோறு தின்னாமால் வயிறு சிறுத்து விட்டிருந்தது. ஏப்பம் விட்டுக் கொண்டே அவன் ரேஷன் கடை பக்கமாக இருட்டில் பயணப் பட்டான்.

அவன் வருவதைக் கண்டதும் மேம்பாலத்திற்கு அடியில் படுத்திருந்தவர்கள் தலை தூக்கி பார்த்து விட்டு மீண்டும் தங்கள் தூக்கத்தை தொடர்ந்தார்கள். பாதையின் ஒரு சில அடிகளுக்கு கிடைத்த வெளிச்சத்தையும், அதன் பிறகான இருட்டையும் சமாளித்துக் கொண்டு நடந்தான். ‘உச்..உஃப்’ என்று வாயில் சத்தம் எழுப்பிக் கொண்டே அந்த நாயை தேடிக் கொண்டிருந்தான். அதற்கு இன்னும் ஒரு பெயர் கூட சூட்டவில்லை. அங்கும் இங்கும் தேடி கிடைக்காததால் ரயில் தண்டவாளம் தாண்டி இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவனும் அந்தப் பக்கம் சென்று பார்த்தான்.

தூரத்தில் முனகல் ஒலி கேட்டது. அவனை அந்த முனகல் சத்தம் ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கே பச்சை கண்கள் மின்ன அந்த நாய் வாலை கால்களுக்கு உள்ளே சுருட்டிக் கொண்டு ஒளிந்திருந்தது.

“இங்கே ஏன் வந்தே? வா என் கிட்ட” என்றான் ஷியாமலன். அது அவனைப் பார்த்து ‘உர்..’ என்று முறைத்தது.

“காட்டு.. முதுகை காட்டு” என வெளிச்சத்தில் அவன் அதனை கொண்டு சென்றான். முதுகெலும்பில் அடித்த இடத்தில் ஆணி குத்தியது போன்ற ஒரு ஓட்டை இருந்தது. அதில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

“ஸ்ஸ்….”, அருகில் இருந்த செடியில் இருந்து இலையை பிய்த்து கையில் உருட்டினான். அதில் இருந்து கசிந்து வெளி வந்த திரவத்துடன் அந்த இலையின் விழுதையும் அப்பி அந்த ரத்தத்தை நிறுத்தினான்.

“மேலே உனக்கு பாதுகாப்பு இல்லை. நாம இங்கேயே ஒரு இடம் தேடிக்கலாம்”

அவன் சொன்னதை புரிந்து கொண்டதை போல அந்த நாய் உடனே நடக்கத் தொடங்கியது. அது அவனை எங்கோ ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வது போல திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தது.

“வா என்னுடன்” என அது அவனை கூப்பிடுவதாக உணர்ந்தான். அதன் பின்னாலேயே சென்றான்.

சற்று தூரம் சென்றதும் ஓரிடத்தில் அது நின்றது. வலது பக்கத்தில் பார்த்து மீண்டும் முனகியது. அங்கே ஆல மரங்களின் விழுதுகள் போர்த்திய ஓர் பாழடைந்த கட்டிடம் இருந்தது. அங்கு இருப்பதிலேயே அந்த கட்டிடம் தான் பழங்காலத்து கட்டிடம் போல இருந்தது. உடைபாடுகளை கண்டால் அது ஏதோ ஒர் கை விடப் பட்ட பழங்கால அரண்மனை போலிருந்தது.

“இங்கேயா தங்கணும் உனக்கு?” ஷியாமலன் சற்று பீதி அடைந்தான். அது போன்ற ஒரு வெளிச்சமில்லாத இடத்தில் அவன் இதற்கு முன்னால் தங்கியதில்லை. அவனைக் காட்டிலும் அந்த நாய் அதிகம் தனியே வாழ்ந்து பழக்கப் பட்டிருந்தது. அது அவனது பயங்களை போக்க, அவனுக்கு முன்னால் புது வீட்டிற்குள் பிரவேசித்தது. வாழ்ந்து பழகிய வீடு போல அது மேலும் நடந்து ஒரு அறைக்குள் சென்றது. அங்கே அதன் உடல் புழங்கிய மணல் குழிக்குள் அமர்ந்து அவனை பார்த்தது.

“இங்கு தான் நான் படுப்பேன்” என்று அது அவனிடம் சொல்வதாக உணர்ந்தான். சுற்றிலும் பிராந்தி பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், நிரோத் பாக்கெட்டுகள் சிதறிக் கிடந்தன. அரை முழுவதும் சிறுநீர் துர்நாற்றம்.

அப்போது தான் ஷியாமலன், தான் ஒரு மனிதன் என்பதையே உணர்ந்தான். அவனால் அங்கு தங்க முடியுமா என்று தெரியவில்லை. ஆயினும், அவனுடைய புதிய நட்புக்காக அங்கே தங்க வேண்டும் என்று முடிவெடுத்தான். அதற்கான ஏற்பாடுகளை அவன் காலை செய்யலாம் என்று இருந்தான். அந்த வீட்டிற்குள் இருப்பதிலேயே சற்று சுத்தமான ஓர் அறையை தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கே கொசு வத்தியை ஏற்றி வைத்துக் கொண்டு படுத்தான். அவன் இல்லாத வெறுமையை உணர்ந்த நாய், அது பொதுவாக படுத் துறங்கும் இடத்தை விட்டு ஷியாமலன் அறையில் அவனுக்கு அருகில் எப்போதும் போல அவனை உரசிக் கொண்டு படுத்து உறங்கியது.

காலை பல் துலக்கிக் கொள்ள அந்த வீட்டில் வெப்பங்குச்சி இருந்தது. அருகில் ஓர் தண்ணீர் குழாயும் இருந்தது. யாரோ, எப்போதோ பயன்படுத்தி விட்டு, பேப்பரில் மடித்து வைத்துச் சென்ற ஹமாம் சோப்பும் இருந்தது. பல் துலக்கி, குளித்து விட்டு பள்ளிச்சென்று வீட்டிற்குள் நுழைகையில், சற்று ஆடம்பரமாக உணர்ந்தான். அவனது நாய் படுக்கையில் இருந்து எழாமல் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தது. அவன் வருகையை அங்கீகரிக்க மட்டும் சற்று வாலாட்டி வைத்தது.

“ஏய்! நேரம் ஆச்சு.. எழுந்திரி” என்றான். அது எழவில்லை.

“சரி.. நீ இங்கேயே இரு. நான் வேலைக்குப் போய் வருகிறேன். வரும் போது குஸ்கா, எலும்பு கொண்டு வருகிறேன்”, என்றான். அதற்கு மட்டும் தலையை தூக்கி அவன் முகமறிய சிரித்து வைத்தது.

இன்று அவன் கடை முதலாளியிடம், காலை மற்றும் மதிய நேரப் பணிக்காக மட்டும் தன்னை பயன்படுத்திக் கொள்ள கேட்கப் போகிறான். மாலை நேரமே வந்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அதோடு, இரவு வெளிச்சத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

“நீ சொல்வது போல எல்லாம் செய்ய முடியாது. மாலை வா பார்க்கலாம்”, என்று முதலாளி அதட்டி வெளியே அனுப்புவது போல கற்பனை செய்து கொண்டே நடந்தான் ஷியாமலன். இது போல அவனுக்கு நடக்க இருக்கும் மோசமான அனுபவங்களை முன்னதாக கற்பனை செய்து கொள்வான். அதன் மூலம் எதிர்காலத்தை சுலபமாக ஒரு புன்னகையுடன் ‘எதிர்பார்த்தது தானே!’ என ஏற்றுக் கொள்ள முடிகிறது அவனால்.

அவன் எண்ணியது போல எதுவும் நடக்கவில்லை. அவனைப் பார்த்ததும்,

“வா டா! உள்ளே போய் வேலையை ஆரம்பி”, என்று மும்முரமாக பணியில் ஈடுபடுத்தினார் முதலாளி. அவன் குளித்து தலை சீவி வந்திருப்பதை கண்ட அவர்,

“உள்ளே போய் என்ன வேண்டும் என கேள்”, என இரண்டாம் நாளே அவனுக்கு பதவி உயர்வு வழங்கினார். 3 மணி வரை அயராது உழைத்தான். இரண்டு பேர் செய்ய வேண்டிய பணியை ஒரே ஆளாக செய்தான். முதலாளி அவனது ஈடுபாட்டை கவனித்து அன்றைய தேதிக்கு 100 ரூபாயுடன் சேர்த்து கறி பிரியாணி வழங்கினார். அதனை மனமுவந்து ஏற்றுக் கொண்டு,

“நாளை முதல் காலையில் வருகிறேன். இரவு தேவைப் பட்டால் சொல்லுங்கள்” என்றான். அவரும் சரி என்று அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு சென்றான். அங்கே இருந்த இடத்தில் இருந்து எழாமல் நாய் படுத்துக் கொண்டிருந்தது. அதன் அருகில் சேகரித்து வந்த எலும்பையும், சிறிது சோற்றையும் வைத்தான். எழுந்து வரவில்லை.

“ஏய்! என்ன உடம்பு சரியில்லையா?”, என்று அதன் முதுகை மெதுவாக தடவினான். காயம் சற்று காய்ந்து ஆறத் தொடங்கி இருந்தது. அவன் வருடலை ரசித்தபடி அது பொறுமையாக எழுந்து வெளியே நடந்து சென்றது. அது போகும் வழியெங்கும் பின்னால் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.

ஷியாமலன் பதறினான்!

“உடம்பில் காயம் ஆறிவிட்டது. பிறகு, ரத்தம் எங்கிருந்து வருகிறது?” என்று உற்று கவனித்தான். அது அந்த நாயின் பிறப்புறுப்பில் இருந்து வந்ததை அறிந்தான். அன்று தான் அந்த நாய், ‘அவன்’ இல்லை; அவள் என்று புரிந்தது அவனுக்கு.

“உன்னை பார்த்தால் ‘டேய்!’ போல இருக்கிறாய்! நீ டியா? மாத விடாயா உனக்கு? அதனால தான் சோர்வா இருக்கியா?” முதல் முறையாக அது கடித்து விடுமோ என்கிற பயத்தை மீறி, அதனை கட்டிப் பிடித்து ஒரு முத்தம் கொடுத்தான். முகத்தில் அவன் வழங்கிய முத்தம் அந்த நாயை வெறி கொள்ளச் செய்யவில்லை. மாறாக அவனது பாசத்தை அதற்கு உணர்த்தியது. அவனது முகத்தில் தன் நாக்கை கொண்டு நக்கியது.

“சரி! இன்று வீட்டை சுத்தம் செய்து பயனில்லை. இரண்டு நாள் போகட்டும்” என அவன் வாங்கி வந்த விறகு கட்டைகளை மட்டும் ஏறிய விட்டு அதற்கு அருகிலேயே படுத்து உறங்கினான்.

நாயின் வாழ்க்கை ஷியாமலன் என்கிற மனிதனுடன் இணைந்ததில் இருந்து புதிய பரிமாணம் எடுத்தது. நாய், தன் வாழ்நாளில் முதல் முறையாக குளித்தது. தனக்காக ஒருவர் சமைத்த உணவை உண்டது. தினமும் சுத்தம் செய்யப் படும் அறையில் வசித்தது. படுத்து உறங்க அவர்கள் இருவரும் ஓர் படுக்கையை தயார் செய்து கொண்டார்கள். இடையிடையில் பழக்கம் கருதி வரும் குடிகாரர்கள், காமுகர்கள் அனைவரும் இவர்கள் அந்த இடத்தை பயன்படுத்தத் தொடங்கியதில் இருந்து வேறு இடத்திற்கு மாறிச் சென்றார்கள். கை விடப் பட்ட நிலத்தை சொந்தம் கொண்டாட எவரும் இல்லாத காரணத்தால், பல காலம் அந்த வீட்டில் வசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஷியாமலன், முதன் முதலாக ஓர் ஊருக்கு வந்து அங்கேயே தங்கி விடலாமா என்று யோசிக்கத் தொடங்கினான்.

தினமும் அவனை ரயில்நிலையம் வரை கொண்டு வந்து விட்டு விட்டு, வாலால் தன் வாஞ்சையை வெளிப்படுத்தி திரும்பிச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது அந்த நாய். அங்கிருந்து அவன் ஓட்டலுக்கு நடக்கும் நேரத்தில் அந்த நாயின் நினைவுகள் ஆக்கிரமித்துக் கொள்ளும் அளவிற்கு அவர்களுக்குள் தினமும் புதிதாக பல உறவாடல்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.

வெயிற் காலம் முடிய, மழைக் காலம் நெருங்கியது. இவர்கள் இருவரும் தங்கிய இடம் தேடி மற்றொரு ஆண் நாய் வரத் தொடங்கியது. அதற்கு ஷியாமலனின் நாய் மீது ஈடுபாடு இருந்ததை அறிந்தான் அவன். அவளுக்கும் அவனை விரட்ட வேண்டும் என்ற எந்த நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. அதனால் அவர்கள் இருவரும் பழகும் நேரம், ஷியாமலன் தன் சொந்த வேலையாக வெளியே சென்று விடுவான்.

கொஞ்சம் கொஞ்சமாக இருவராக இருந்த அவர்களின் வீட்டில், மூவர் தங்கத் தொடங்கினர். ஷியாமலனும் அவனது நாயும் கட்டிப் பிடித்து புரண்டு விளையாடுவார்கள். அந்த நேரத்தில், அவளது ஆண் துணை, ஓர் இடத்தில் தள்ளி அமர்ந்திருக்கும்.

“அவனையும் கூட்டிக்கிட்டு வா.. விளையாடுவோம்” என்பான். அவள், அவனது காதுகளை கடித்து விளையாட அழைத்தாலும், அவன் தள்ளியே இருப்பான். அவனுக்கு மனிதர்களின் மீது அவ்வளவாக ஈடுபாடு இல்லை. அவன் வாழ்ந்த வாழ்க்கை அப்படி. சிறு வயதில் இருந்து மனிதர்கள் அவனை நடத்திய விதம், உடம்பில் இருந்த எண்ணற்ற காயங்களில் தெரிந்தது. ஷியாமலனுக்கும் அது புரிந்தது.

“ஒரே வீட்டில் உள்ள இருவர் பேசிக் கொள்ளாமலும், கட்டிப் பிடித்துக் கொள்ளாமலும் வாழ்வதில்லையா என்ன? அது போல அவனுடன் இருந்து விட்டுப் போவோம்” என்று ஷியாமலனும் ஒதுங்கியே இருப்பான்.

இருவருக்கு மட்டும் உணவு எடுத்துக் கொண்டு வரும் அவன், மூன்றாவது ஆளுக்கும் சேர்த்து உழைத்தான்.

“என்ன டா! ரெண்டு பொட்டலம் எடுத்துட்டு போறே? சொல்லாம கொள்ளாம கல்யாணம் ஏதாவது??” என்று கிண்டல் செய்தார் முதலாளி. அதற்கு அவன் சிரித்து விட்டு நழுவினான்.

எப்போதும் தள்ளியே இருக்கும் ஷியாமலன் வீட்டு புதியவன், உணவு அருந்தும் போது மட்டும் தயக்கத்துடன் அவன் அருகில் வந்தான். ஷியாமலன் தன்னுடைய நாய்க்கு ஊட்டி விடும் போது, அவனுக்கும் ஒரு வாய் கையில் வைத்து நீட்டுவதுண்டு. அவன் அதனை பிடுங்கும் தொனியில் கவ்வி இழுத்துக் கொள்வதோடு சரி. அவர்கள் இருவருக்குமான நெருக்கம் மீண்டும் இடைவெளியாக மாறி விடுகிறது.

இவ்வாறென கடந்த காலத்தின் ஓர் கணத்தில், ஷியாமலன் கண்டு கொண்டான்! அவனது நாயின் வயிறு வீங்கி இருந்தது. அது அடிக்கடி சோர்ந்து படுத்துக் கொண்டிருந்தது. அது எப்போதும் உண்பதற்கு அதிகமாக உணவு வேண்டும் என்றது.

“நீ பண்ண வேலையா?” என்று புதிதாக வந்தவனை நோக்கி வினவினான். அவன், எந்த பதிலும் சொல்லாமல் அமுக்குனி போல அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தான். அடுத்த இரண்டு மாதங்கள், பிரசவ வேலையில் ஷியாமலன் அதிக நேரம் செலவிட்டான். செய்த காரியம் என்னவோ அவனுடையது. ஆனாலும், தின்பதையும் தூங்குவதையும் மட்டுமே வாடிக்கையாக கொண்டிருந்தான் அந்த மூன்றாமவன். குழந்தைகள் பிறந்த பிறகும் கூட அவர்களை பாதுகாப்பதில் அவன் பெரிதாக எந்த ஈடுபாட்டையும் காட்டியதாக தெரியவில்லை.

ஆயினும், அவளுக்கு எந்த குறையும் இல்லை. ஷியாமலன் இருக்கிறான். முன்பு அவள் பெற்ற குழந்தைகள் பல மேம்பாலத்தின் தார் சாலையோடு ஒட்டிக் கொண்டு விட்டன. சில அழகான குட்டிகளை பார்ப்பவர்கள் தூக்கிச் சென்று விடுவார்கள். சிலவற்றை அவள் வளர்த்து விட்டிருக்கிறாள். அவை வளர்ந்ததும் வேறு இடம் பார்த்து சென்று விடுகின்றன. இந்த குட்டிகளில் இரண்டு அல்லது மூன்றாவது பிழைத்துக் கொள்ளும். அவை அவளை விட்டு செல்லும் நாளும் வரும். இந்தக் குழந்தைகளுக்கு காரணமான அந்த சோம்பேறியும், நாளை வேறு ஒரு நாயை பார்த்ததும் பின்னாலேயே சென்று விடுவான். ஆனால், ஷியாமலன் மட்டும் அவளுடனேயே இருக்கிறான். இருப்பான்!

குட்டிகள் பால் குடிப்பதை நிறுத்திய பிறகு இரண்டு பொட்டலம், நான்காக மாறியது. முதலாளிக்கு அவன் தினமும் நான்கு பொட்டலங்கள் எடுத்துச் செல்வதில் துளியும் உடன்பாடில்லை. ஆயினும், அவர் எதுவும் பேசாமல், சம்பளத்தை உயரத்தாமல், அதே 100 ரூபாய் கொடுத்து வந்தார். ஷியாமலனுக்கு உயர்த்திக் கேட்க எண்ணம் இல்லை. அவனை அவ்வாறு கேட்கச் சொல்லி வற்புறுத்த ஆளும் இல்லை.

தினமும், குட்டிகளையும், அவளையும் குளிப்பாட்டுவது, சோறு ஊட்டி விடுவது, வீட்டை சுத்தம் செய்வது. படுக்கைகளை துவைப்பது என ஒரு குடும்பஸ்தனின் இடத்தில் இருந்து ஷியாமலன் தன் கடமையை சிறப்பாக செய்தான். வண்டிகள் வரும் பகுதிக்கு குட்டிகள் ஓடி விடாமல் தடுக்க வீட்டை விட்டு வெளியேறும் முன் அவற்றை தாயின் அருகில் கட்டி விட்டு செல்வான். பின் வந்த பிறகு அவற்றை விடுவித்து தானும் விளையாடுவான்.

‘நான் இருக்கும் இந்த உலகமே எனக்கு சொர்க்கம்!’ என்பதைப் போல தனது இறந்த காலத்தை குறித்த எந்த யோசனையும் இல்லாமல் ஓய்வு இல்லாமல் உழைத்தான்.

குட்டிகள் வளர்ந்தன. இரண்டு குட்டிகளை தவிர மற்றவை வீட்டு வாசல் தாண்டி நாடு புகுந்தன.  தந்தையானவன் அவள் எண்ணியதைப் போல வேறு துணை தேடி வெளியேறி விட்டான். ஷியாமலன், தன் உற்சாகத் துடிப்பும், இளமையும் கொஞ்சமும் குறையாமல் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தான். ஆனால், அவளுக்கு வயதாகிக் கொண்டே வந்தது.

கண்ணில் புரை விழுந்தது. வீட்டில் எந்த பொருளை மாற்றி வைத்தாலும் அவள் தடுக்கி விழுந்தாள். கண் பார்வை மங்கத் தொடங்கியதும் இயக்கம் நின்று போனது. உண்பதும், தூங்குவதுமாக அவள் உடல் பருத்தது. உடலின் எடை கூடக் கூட அவளது கால்கள் வளையத் தொடங்கின. ஒரு கட்டத்தில், உடலுக்கு அடியில் கால்கள் இருப்பதையே உற்று கவனித்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் போலிருந்தது.

ஷியாமலன் தனது அபாயத்தை உணர்ந்தான். வாழ்க்கை குறித்த எந்த பயத்தையும் கொண்டிருக்காத அவனது இறந்த காலம் கண் முன் வந்து போனது. இன்று அவனால் நிம்மதியாக தூங்காக் கூட முடியாத அளவிற்கு சோகமும், பயமும் பீடித்துக் கொண்டிருந்தது. ஒரு வேளை இந்த வீட்டிற்குள் நுழைந்தது தான் தவறோ! என்று யோசிக்கத் தோன்றியது.

“தெருவில் இருந்தால் மட்டும் அவள் சாகாமலா இருப்பாள்?” என்று தன்னையே ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.

இருந்தாலும், அவள் உடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஷியாமலன் அவளை முதலில் பார்த்த நாள் அவனது நினைவுக்கு வந்தது. இளம் பதுமையாக அவள் வாலாட்டிக் கொண்டே தன்னை நோக்கி வந்த நாளை நினைவு கூர்ந்தான். சட்டென அவனுக்கு மற்றொன்றும் நினைவுக்கு வந்தது!

ஷியாமலன் அந்த ஊருக்கு வந்து இறங்கிய நாளில், கண்ட மூவரின் முகமும் அவனுக்கு அச்சு பிசகாமல் கண் முன்னே வந்தது. அதில் அவன் கால் இடறி விழுந்த கிழவியின் உருவம் இன்னும் பசுமையாக மனதில் உள்ளது.

அவளது பெட்டியை எடுத்து தள்ளி வைத்த கணத்தில், ஏனோ அவன் அந்த பெட்டியின் மீது ஒட்டியிருந்த விலாசத்தை கிழித்து தன் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டான். அந்தக் கிழவி உயிரோடு தான் இருக்கிறாளா என்று பார்க்க அவனுக்கு ஆசை!

அந்த விலாசத்தை தேடி எடுத்தான். அவனிடம் இருந்தது மொத்தமே பத்துக்கும் குறைவான பொருட்கள் தான். அவற்றில் அந்த பழைய காகிதத்தை பாதுகாப்பாக வைக்க அவனுக்கு ஒன்றும் அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை.

என்றோ வைத்த இடத்தில் அப்படியே இடம் மாறாமல் இருந்த அந்த விலாசத்தை எடுத்துக் கொண்டு அவள் வீடு தேடிச் சென்றான் ஷியாமலன்!

பரிமளம் என்பது அவளது பெயர். அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். அன்று அவளது மகள்/மருமகள் உடன் இருந்தாள். அவளது பெயர் தெரியவில்லை. நிச்சயம் கதவை திறந்தால் பரிமளத்திற்கு தன்னை நினைவிருக்காது. அதனால் செல்லலாம் தவறில்லை! தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்றான்.

அங்கே சிறிது நேரம் வாசலில் காத்திருந்தான். பரிமளத்துடன் வந்த அப்பெண் சிறிது நேரத்திற்குள் வெளியே வந்தாள்.

“யாரு?” என்றாள்.

“பரிமளம்”, என்றான் ஷியாமலன்.

“ஆமா! எங்க அம்மா தான். நீங்க?”

“அவங்களை பார்க்கணும்”, என்று ஷியாமலனுக்கு சொல்லத் தோன்றியது. ஆனால்,

“அவர்கள் உயிரோடு இல்லை” என்று மகள் சொல்லி விட்டால், அவன் நிலை என்ன?

அங்கே வரும் ஒரு சில மணித் தூளிகளில், ஷியாமலன் பரிமளமாக தன் நாயாக உருவகப் படுத்திக் கொண்டு விட்டான். இனி பரிமளத்தின் இழப்பு, அவனது நாயின் முடிவுக்கு முன்னறிவிப்பு!

“இந்த விலாசத்தை உங்க அம்மா தவற விட்டுட்டாங்க. அதை கொடுக்கத் தான் வந்தேன்” என்று அவன் கையில் இருந்த காகிதத்தை மகளிடம் கொடுத்து விட்டு, ஷியாமலன் திரும்பி வேகமாக நடக்கத் தொடங்கி விட்டான்.

அவன் போகும் திசையில் ஒன்றும் புரியாமல் கையில் காகிதத்தை வைத்துக் கொண்டு பரிமளத்தின் மகள் அவனையே வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

ஷியாமலன் திரும்பி வரும் வேளையில், அந்த நாய் இறந்து கிடக்க, அருகில் வளர்ந்த குட்டிகள் அதனை எச்சமிட்டுக் கொண்டிருப்பதாக கனவு கண்டான்!

இதற்கு முன்னால் கண்ட கனவுகள் பாதிக்கு பாதி பலித்துள்ளன. பலிக்காத போது மகிழ்ந்திருக்கிறான். பலித்த போது சோகத்தை கடந்திருக்கிறான். ஆனால், அந்த யுக்தியும் தற்போது எடுபடுமா என்று தெரியவில்லை!

“எனது நாய் மீது அவ்வளவு பிரியமா எனக்கு?” மனப் போராட்டம் உச்சத்தை தொட்டது!

அவன் ரயில் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த பாதையில் ஓர் அரை லிட்டர் பாட்டில் மூடியோடு கீழே கிடந்தது. ஒரு கணம் அங்கே நின்று அந்த பாட்டிலை உற்று கவனித்தான்.

“நான் கோழையா?” என்ற உளக் கேள்வி அவனை குடைந்து எடுத்தது.

“அந்த பாட்டிலை கையில் எடுக்காதே!” என்று அவனுக்குள் இருந்த பாசக் காரன் அறிவுரை சொன்னான்.

ஆயினும், விரைவாக அந்த பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டு ரயில் நிலையம் நோக்கி நடந்தான். அடுத்து வந்த ரயிலில் ஏறி தூர தேசம் சென்றான்.

அங்கோ, அவனது வீட்டில், புரை விழுந்த கண்களோடு, தனக்கும் குட்டிகளுக்கும் உணவு எடுத்துக் கொண்டு ஷியாமலன் நிச்சயம் வருவான் என நாய் பசியோடு காத்துக் கிடந்தது!

போகும் வழியில்,“அய்யோ! கட்டிய கயிற்றை அவிழ்க்காமல் வந்தேனே!” என ஷியாமலன் யோசிக்காமல் இல்லை. ஆயினும், அவன் ரயிலில் இருந்து இறங்கவும் இல்லை.


 

Subscribe
Notify of

5 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

பகுப்பியைப் போலவே கயிறு கதையிலும் சாதாரணமாய் மனிதர்கள், மனிதர்களின் கணக்கில் கூட எடுத்துக் கொள்ளப்படாத மனிதர்களின் வாழ்க்கையைப் பேசும் மனிதராகவே எனக்குப் பழக்கமாகிறார். வாழ்த்துகள் கண்ணன்…

Admin

கலகம் இணைய இதழில் நீங்கள் அளித்த கருத்துக்கு நன்றி !

Bhavani Srinivasan
6 months ago

Manasuku kashtama irku. Kadhayoda end la kovamum sogamum vanduduchu. Anda naye kashtapattu avan varalaye nu engi sagum. Anda kutigal pasila azudu sagum. Anda azuga yarukadu ketudu na kapathuvanga. Illana adoda vidi? En kadhayoda nayaganuku budhi ipdi pochu?

Joseph
1 month ago

super

You cannot copy content of this page
5
0
Would love your thoughts, please comment.x
()
x