18 July 2024

காலை ஐந்தரை மணி. அலமு எழுந்து இரு உள்ளங்கைகளையும் தேய்த்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார். தெருவை எட்டிப் பார்த்தார். சில வாசல்களில் வெள்ளிக் கம்பிகள் ஏறியிருந்தன. சில வாசல்கள் தண்ணீரை வாங்கிக் கொண்டிருந்தன. சில வாசல்கள் விளக்குமாறால் இழுபட்டுக் கொண்டிருந்தன. பின்பக்கம் போய் ஒரு வாளி தண்ணீரை எடுத்து வந்து வாசலில் ஊற்றி, கூட்டிவிட்டு  எடுத்து ரெண்டு இழை இழுத்து விட்டு எழுந்தார். ஓரக்கம்பி போடாதது நினைவுக்கு வந்தது. திரும்பக் குனிந்து இரு ஓரங்களிலும் ரெண்டுரண்டுக் கம்பியாக இழுத்து டப்பாவை உட்பக்கச் சுவற்றை ஒட்டியுள்ள பெஞ்சின் கீழ் வைத்து விட்டு, ரேஷன் அரிசியும் கம்பும் கலந்து வைத்திருந்தப் பச்சைக் கலர் பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கொண்டு பின்பக்கம் சென்றார். ஒரு பிடியள்ளி சுவற்றையொட்டி மூன்றுப பக்கமும் அடித்து வைத்திருந்த பிளாஸ்டிக் பச்சை வலைக்குள் சுற்றியக் கோழிகளுக்குப் போட்டார். கண்கள் வழக்கத்தை விடக் கூடுதலாகப் பளபளத்தன. சிவநேசு இன்னைக்குப் பெரிய ஆர்டராகப் பிடித்திருந்தான். அதுதான் கண்களின் கூடுதல் பளபளப்பிற்குக் காரணம்.

எப்படியாவது இந்த முறை பால்பாண்டியின் கடனை அடைத்து விட வேண்டும். அவ்வப்போது கல்யாணம் காதுகுத்து என்று  ஆர்டர் பிடித்துக் கொடுக்கும் சிவனேசுதான் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த முறை பெரிய ஆர்டர் பிடித்து வந்தான். கட்சி மீட்டிங்காம். அதுவும் கொரானா காலத்துக்குப் பிறகு கூடும் முதல் கூடுகை… நிறையப்பேர் வருவார்கள். முதலில் இருநூறு பேருக்கு சமைத்து வைக்கவேண்டும். அப்புறம் வருகிறக் கூட்டம் பார்த்துவிட்டுப் பேசிக்கொள்ளலாம். சிவனேசு சமையல் பொருட்களை எக்ஸ்ட்ராவாக வாங்கி வைக்கக் கூறியிருந்தான்.

சமையல் வேலைதான், அவருக்குப் பிடித்த சமையல் வேலை. பார்த்துப் பார்த்து ருசிக்கசச் சமைத்து வைப்பதில் ஒரு ஆனந்தமிருக்கத்தான் செய்கிறது. ஆனந்தம் மட்டுமே வயிற்றுப் பாட்டுக்குப் போதாதே…

அலமுவிற்கு நெருங்கியச் சொந்தம் என்று யாருமில்லை. எப்போதோ இறந்து போன கணவரின் நினைவு கூட தூர்ந்து போயிருந்தது. சிறு வயதிலேயே  கல்யாணம் செய்து சிறு வயதிலேயே தனியாளாகி விட்டார். பிள்ளைக் குட்டிகள் கிடையாது. இருந்தும் என்ன நம் வயிற்றுக்கு, நாளையப் பொழுதுக்கென்று சேர்த்து வைக்கத்தானே வேண்டியிருக்கிறது. ஆனால் சுற்றியுள்ளவர்கள் கஞ்சப்பிசினாரி என்றுதான் சொல்வார்கள். அவர்களுக்கென்ன.. கடைசி காலத்தில் கஞ்சி காய்ச்சி குடிக்கவாது காசு வேண்டாமா? ஊரில் அலமு செட்டுப் பெண்கள் எல்லாம் பேரப்பிள்ளைகள் எடுக்கத் துவங்கி விட்டார்கள். அதிலும் சிவகாமி பேத்தி பெரிய மனுஷியே ஆகி விட்டாளாம். போனத்  திருவிழாவிற்கு ஊருக்குப் போகும்போது பார்த்து விட்டு வந்தார். இந்தத் தடவையும் போன் போட்டு திருவிழாவென்று சேதி சொன்னார்கள். இனிமேல் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தார். போய்தான் என்னவாகப் போகிறது. பிழைக்க வந்த ஊரே போதும் என்று முடிவு செய்து விட்டார்.

கொரானாவின் பலனாக வேலை இல்லாமல் தடுமாறியப் போது கையிருப்புப் போக அவசியத் தேவைக்கு என்று பால் பாண்டியிடம் கடன் வாங்கியிருந்தார். முதல் இரண்டு மாதங்கள் ரேஷனில் கொடுத்த ஆயிரமும் பேங்கில் அவசர ஆத்திரத்திற்கு என்று சேர்த்து வைத்திருந்த சிறு தொகையும் உதவியது. இழுத்துப் பிடித்து ஓட்டி விட்டார். மூன்றாவது மாதமும் தொடர்ந்த ஊரடங்கு பால்பாண்டியிடம் போய் நிற்க வைத்தது. கூட்டு வட்டிதான், வேறு வழியில்லை. போனமுறை வந்த ஆரர்டருக்கு வாங்கியக் கடனே இன்னும் கொஞ்சம் பாக்கியிருந்தது. அதோடு இதையும் சேர்த்து எழுதிக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு வாங்கி வந்து விட்டார். இப்படி ஒரு கிருமித் தொற்று வருமென்று கனவிலும்தான் நினைத்திருப்பார்களா யாரும்! திடுமென்று ஊரடங்கு வந்திருக்காவிட்டால் இந்நேரத்திற்கு பால்பாண்டியின் கடனை அடைத்திருப்போம், இப்போதானால் மேற்கொண்டும் வாங்கும்படியாகி விட்டது எனக் காலையில் கூட நினைத்துக் கொண்டுதான் எழுந்தார்.

இவருக்கு உதவியாக இரண்டு பெண்கள் வேலை செய்கிறார்கள். கூட மாட ஓடி உதவ ஏழாவதுப் படிக்கும் பரமேஸ்வரியின் இளைய மகன் மாது விடுமுறை நாட்களில் ஓடிவந்து விடுவான். நல்ல சூட்டிகையானப் பயல். நேற்றே அண்ணாச்சி கடைக்குப் போய் மளிகை லிஸ்ட் கொடுத்துவிட்டு வந்து விட்டான். மீதி இரண்டு பேரும் வந்தால் எடுத்துக்கொண்டு வந்து விடலாம்.  அண்ணாச்சிக் கடையில்தான் எப்போதும் வாங்குவது வாடிக்கை. அண்ணாச்சி தண்மையான மனிதர். நேக்கு போக்கு அறிந்தவர். சடாரென்று கடன் தொகையைக் கேட்டுவிட மாட்டார்.. அலமுவிற்குதான் ஒரு திங்கள் தாண்டினால் அவர் கடையைக் கடக்கையில் தலை தாழ்ந்து விடும். அவசரத்திற்கு வெறும் வாய்வார்த்தை நம்பிக்கையிலேயே பொருள் கொடுத்து உதவுகிற மனுஷன். ஒருநாளும் வாய்த்திறந்து கடிந்து கேட்டதில்லை. சமையல் கூலி வாங்கின முதல் காரியமாக மளிகைக் கடனைத்தான் அடைப்பார்.

உதவியாளப் பெண்கள் இருவருக்கும் போன் செய்து அண்ணாச்சிக் கடைக்குப் போய்விட்டு வருமாறுக் கூறினார். அவசரமாய்க் காலை வேலைகளைச் செய்து விட்டுத் தயாராகி பழையதை கரைத்துக் குடித்துவிட்டு “உஷ்ண உடம்புக்கு இப்படிக் குடிச்சாதான் நல்லாருக்கு’’ எனப் பேசிக்கொண்டே கதவைப் பூட்டி நடந்தார். மாதுப்பயலும் சேர்ந்து கொண்டான். சமைக்கும் இடம் கோவிலுக்கு வடக்குப் பக்கம் இருக்கும் திடலில்தான் இருந்தது.. டவுனுக்கும் பக்கம்தான் இங்கிருந்து. அண்ணாச்சி கடையிலிருந்து பொருட்கள் வந்து விட்டன. கோவிலுக்குப் போய் அம்மனை வணங்கி விட்டு அமர்க்களமாக வேலையை ஆரம்பித்து விட்டார்கள். எல்லோரும் குதூகலமாய் இருந்தனர். அதிலும் அந்தக் குட்டிப் பயல் குதித்துக் கொண்டு இருந்தான். அலமு இன்று கூடுதலாக காசு தருவதாகச் சொல்லியிருந்தார். கூட்டாளிகளுடன் இணைந்து முக்குக் கடையில் பரோட்டா தின்னலாம். மீதிக்காசை மட்டும் அம்மாவிடம் கொடுத்தால் போதும்.

சமையல் அற்புதமாக வந்தது. பார்த்துப் பார்த்து சமைத்திருந்தார் அலமு. நீண்ட நாட்களுக்குப் பிறகு உழைப்பும் உழைப்புக் கொடுக்கப் போகும் ஊதியமும் தேவையாயிருந்தது. எல்லோருக்குமே கூடுதல் சந்தோஷம் ஒட்டிக் கொண்டது. கொரானா காலம் சுழற்றிப் போட்டிருந்த வறட்சியில் இருந்து மீளுவதற்கான படியில்லையா.. அதுவும் பெரிய ஆர்டர். சிவநேசனிடம் சொல்ல வேண்டும். சமையலின் ருசி ஊரைத் தூக்குது போ என்று, சிவனேசு குடும்பத்திற்கும் ஒரு பார்சல் கட்டிக் கொடுத்துவிட வேண்டும். நினைத்துக் கொண்டது போல சிவநேசனிடம் இருந்து அழைப்பு வந்தது.

நூறாயுசு என எடுத்துப் பேசியவரின் காலின் கீழ் பூமி நழுவியது. தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். கட்சிக் கூட்டம் ரத்தாகி விட்டதாம். சிவனேசனும் இவரின் நிலைமைப் புரியாதவனில்லை. திடுதிப்பென்று ஆர்டருக்கு எங்கே போவான், ஆனாலும் ஆறுதலாக வேறு ஏதாவது ஆர்டர் தேடிப் பார்க்கிறேன், இருந்தால் கையோடு கூட்டி வருகிறேன் என்றான். அப்படியே நடந்து கோவில் வாசலில் தூணில் சாய்ந்து விட்டார். காதில் பால்பாண்டியின் குரல் கடுமையாய் அதிர்ந்து கொண்டிருந்தது.

அம்மனுக்கு அலமுவின் வருத்தம் புரிந்ததா என்று தெரியவில்லை. கருவறையைப் பார்த்தார் எண்ணெய்ப் பிசுக்குடன் இருந்த பெரிய விளக்கில் தீப்பொட்டு மினுங்கிக் கொண்டிருந்தது. கண்களை மூடிக்கொண்டார். மதிய உணவு வேளை நெருங்கியிருந்தது. இருநூறு பேருக்கு உணவிருந்தும் சாப்பிடாமல் இடிந்து போயிருந்தார். கண்கள் வறண்டு போயிருந்தன. பழசெல்லாம் கண் முன் வந்தது.

பல வருடங்களுக்கு முன் ஒருநாள் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த  கணவரின் தம்பி மனைவி தனியாக இருந்து கஷ்டப்பட வேண்டுமா எங்களுடன் வந்து இருந்து விடுங்கள் என்று அழைத்தாள். கொழுந்தனும் கூட நின்று கொண்டு ஆமாம் போட்டான். இவர்களின் கரிசனம் எந்த அளவிற்கு என்று அலமுவிற்குத் தெரியும். சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்வதற்கான ஆட்களுக்குச் சம்பளம் அதிகம் அதுவும் நேரப்படிதான் வந்து போவார்கள். அலமு என்றால் சம்பளம் தரத்தேவையில்லை. பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வார். முழு நேரமும் வீட்டோடு இருந்து கொண்டு வேலைகளையும் செய்வார். கேட்பதற்கு ஆள் கிடையாது. சமையலும் வீட்டு வேலையும் நறுவிசாக செய்து முடித்து விடுவார். ஒரு திருட்டு புரட்டு, வம்பு பேச்சு, பழி சொல் இல்லை. அதுதான் கரிசனத்தின் காரணம். அவள் கையில் நூறு ரூபாய் கொடுத்து, பிள்ளைகளுக்கு எதுவும் தின்பண்டம் வாங்கிக்கொடுங்க எனக்கு வேலையிருக்கு என்று அனுப்பி விட்டார்.

ஆரம்பத்தில் கல்யாண வீட்டிற்கு உதவிக்குச் சென்று கொண்டிருந்தவரின் கைமணம் தனித்து ஆர்டர் பெறச் செய்திருந்தது. எத்தனையோ வருடங்களாகி விட்டது சமையல் தொழிலுக்குள் வந்து. அடுப்பைப் பற்ற வைக்கையிலேயே அலமுவின் மனமும் முகமும் மலர்ந்து விடும். அது எத்தனை கவலைக் கஷ்டம் இருந்தாலும் சமையல் நல்லபடியாக வரவேண்டுமென்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். அவரது கைக்கு அப்படித்தான் மணக்க, மணக்க சமையல் ருசி வந்து அமர்ந்து கொண்டது. அவருக்குக் கீழ் இரண்டு பேரைப் போட்டு வேலை செய்யும் நிலைக்கு வந்து விட்டார். போதும் இதுவே தொடர்ந்து ஆர்டர் கிடைத்தால் யதேச்சை. ஏதேதோ எண்ணங்கள் அவரைக் கட்டி இழுத்துக்கொண்டு போனது. கண்ணோரத்தில் உப்பு நீர் வந்து பாரித்துக் கிடந்தது. அதைத் துடைத்து விடும் மனநிலை கூட அற்றவராக இருந்தார்.

யாரோ அருகில் வரும் சத்தம் கேட்டது. .

‘‘இங்க ஒன்னும் சனத்தைக் காணோமே.. கட்சி கூட்டம்னாங்க’’

கண்கள் திறந்து பார்த்தார். நடுத்தர வயது ஆண் ஒருவர் மங்கிப்போன வெள்ளையில் வேட்டிக் கட்டி அதே மங்கிய வெள்ளையில் சட்டையும் உடுத்தியிருந்தார்.

‘’என்னய்யா சொன்னீங்க?’’

‘’கட்சிக் கூட்டம்னாங்க, இத நம்பி உலை வைக்கமா விட்டுட்டோம். கூடமாட ஒத்தாச பண்ணினா ஒரு பொழுத இங்க ஓட்டிரலாம்னு நினைச்சாக்க இங்க சந்தடி இல்லாம இருக்குது. எல்லாருக்கும் என்ன சொல்றது அம்மா மெஸ்ஸூம் இங்க இருந்து போறதுக்குள்ள முடிஞ்சுருக்கும்.’’

‘’கூட்டம் ரத்தாயிருச்சாம்’’

‘’ப்ச்’’

‘’நீங்க எங்கேருந்து வரீங்க’’

‘’சங்குப்பேட்ட பக்கத்துல சமுதாயக்கூடம் இருக்குல்ல அங்கேர்ந்து’’

அலமுவுக்கு எதுவும் பேசத்தோன்றவில்லை. வந்தவரின் சட்டைப் பையில் இருந்த போன் அழைத்தது. எண்கள் தேய்ந்து போன போனை எடுத்து ‘’இரும்மா விசாரிச்சுட்டு வாரேன்’’ என்று வைத்தார். ரத்தான கூட்டத்தை என்ன விசாரிக்கப் போகிறார் என்றிருந்தது அலமுவிற்கு.. அந்த மனிதர் கோவிலை ஒரு சுற்றுச் சுற்றி வந்தார். தூணில் சாய்ந்திருந்த அலமுவிடம் கட்சிக் கூட்டத்தைப் பற்றி இன்னும் இரண்டுமுறைகள் கேட்டார். அலமு இயந்திரமாய் பதில் சொல்லிவிட்டுக் கண்களை மூடிக்கொண்டார். அவர் பேச ஆரம்பித்து விட்டார்.

‘’நான் மட்டும் தனியாளாத்தான் இருந்தேன். துறையூர் அகத்தியர் குடில்ல சாப்பிட்டுட்டு இருந்தேன். அப்பறம் ஒருநாள் அப்படியே அங்க வந்த கூட்டத்தோட ராமேஸ்வரம் போயிட்டேன்.. சொல்ற வேலைய செய்யறது, கிடைக்கறத ஆளுக்குக் கொஞ்சம் சாப்பிட்டுக்குவோம் வசந்தி புள்ளதான் அப்பா அப்பானு கூப்பிட்டு இருந்துச்சா.. அதான் அத விட்டுட்டு இருக்க முடியாம அவங்களோடயே கிளம்பி இங்க வந்துட்டேன். பசித்தாங்காது வாடிப்போயிரும். போய் பாக்கறேன். வரேம்மா” என்று கிளம்பிச் சென்றார். அவரது காலுக்குச் சிறியதாக, குதிகால் பக்கம் தேய்ந்து இருந்த ரப்பர் செருப்பை அணிந்து, “இன்னைக்குதானே சொன்னாங்க..’’ பேசிக்கொண்டே அவர் நடப்பதையே பார்த்தார் அலமு. தலைத் திருப்ப கருவறைக் கண்களில் விழுகிறது. வந்த போது இருந்ததை விட, தீப்பொட்டு அதிகமாய் சுடர்ந்தது. கண்கள் மூடித் திறந்தார். தீப்பொட்டு உள்ளே அசைகிறது. அலமுவின் கண்கள், காலையில் எழுந்து கொள்ளும்போது இருந்ததைவிட கூடுதலாய் பளபளக்கின்றன.

“மாது மாதுக்குட்டி இப்ப போனாரே ஒரு மாமா அவர கூட்டிட்டு வா’’

“அழுக்கு வேட்டி மாமாவா?’’ என்று சிட்டாகப் பறந்தான் மாது.

“என்னம்மா, எதுக்கு வரச் சொன்னீங்க? நான் ஒன்னும் இங்கருந்து எடுத்துட்டுப் போகலியே” குரலில் பதட்டம்.

‘’அப்படின்னா இப்போ எடுத்துட்டுப் போங்க! அம்மனே அனுப்பிருக்கா வாங்க’’

“என்ன???’’

“எத்தனப் பேர் தங்கியிருக்கீங்க எங்கத் தங்கியிருக்கீங்க?’’

“நாங்க முப்பது நாப்பது பேர் இருப்போம் ரெண்டு கூட்டமா இருக்கோம். ஏன்??”

அவருடன் தங்கியிருப்பவர்களை அழைத்து வரச்சொல்லி விட்டு சாப்பாட்டுப் பாத்திரங்களைப் பரிமாற எடுத்து வைக்கப்போனார். சிறியவரும் பெரியவருமாய் நாற்பது பேருக்கு மேல் வந்தனர். இரண்டு உதவியாளப் பெண்களும் அலமுவும் பரிமாறினர். உணவின் ருசியும் அவர்களின் தேவையும் இணைந்து, சாப்பிட்டவர்களின் முகத்தில் திருப்தி வழிந்தது. அதற்குள் சிவனேசு டூரிஸ்டு வேன் இரண்டும் ஒரு யாத்திரை பஸ்ஸும் பிடித்து வந்திருந்தான். கூட்டம் கைகளைக் கழுவி, உடைகளைத் திருத்திக் கொண்டு ஆர்வமாய் வந்தவர்களுக்குப் பரிமாறியது. ஒரு தனிச்சாப்பாட்டுக் கணக்கு வைத்து வந்தவர்கள் பணத்தை சிவனேசுவிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர். பாதகமில்லை. மீதியிருக்கும் சாப்பாட்டையும் எடுத்துச் சென்று இரவு உணவிற்கு வைத்துக் கொள்ளுமாறு அலமு கூற, கூட்டம் ஆரவாரித்தது. எடுத்துச்சென்ற சிறிது நேரத்தில் தட்டு ரிக்க்ஷாவில் பாத்திரங்கள் அனைத்தும் பளிச்சென்று சுத்தம் செய்யப்பட்டு வந்திறங்கின. அலமுவின் முகம் கூட கண்களுக்குப் போட்டியாகப் பளிச்சென்று இருந்தது. அம்மன் விளக்கு இன்னுமதிகமாய் சுடர் விட்டுக் கொண்டிருந்தது.

 


அகராதி

எழுதியவர்

அகராதி
அகராதி
இயற்பெயர்- கவிதா, தமிழ் இலக்கியம் படித்த இவரின் ஊர் திருச்சிராப்பள்ளி. எழுதவும் வாசிக்கவும் விரும்பும் இவரின் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்இணைய, அச்சிதழ்களில் வெளிவந்துள்ளன. வெட்கச்சலனம் எனும் கவிதை நூலும் வெளியாகி உள்ளது.
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
You cannot copy content of this page
0
Would love your thoughts, please comment.x
()
x